Showing posts with label அனுபவ முத்துக்கள். Show all posts
Showing posts with label அனுபவ முத்துக்கள். Show all posts

Sunday, 17 September 2023

எங்கே போகின்றன மருத்துவமனைகள்?

 என் நெருங்கிய உறவினரின் 20 வயது மகனுக்கு அடிக்கடி தலை சுற்றல், மயக்கம் வந்து கொண்டிருந்தது. பலவிதமான பரிசோதனைகளுக்குப்பின் அந்தப்பையனுக்கு மூளையில் ஒரு கட்டி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 7 மி.மீட்டருக்கு குறைவாக அதன் அளவு இருந்தால் மருந்தினாலேயே அந்தக்கட்டியைக்கரைத்து விடலாமென்றும் அதன் அளவு அதிகமாக இருப்பதால் அறுவை சிகிச்சை செய்து தான் அந்தக்கட்டியை நீக்க வேண்டுமென்றும் தலைமை மருத்துவர் கூறி அறுவை சிகிச்சை செய்வதற்கான தேதியும் குறிக்கப்பட்டு விட்டதென்றாலும் அந்தப்பையனின் பாட்டி என்னிடம் பேசும்போது பயந்து கொண்டே இருந்தார். ஆறுதல் பலமுறை சொன்ன போதும் அவர் என்னிடம் சொன்னதெல்லாம்  ‘சிகிச்சையின் போது எதுவும் தப்பாக செய்து விடக்கூடாதே’ என்பது தான். அவர் சொன்னதிலும் உண்மை இல்லாமல் இல்லை. இப்போதெல்லாம் நோயாளிக்கான சிகிச்சையைப்பற்றி கவலைப்படுவதை விட அமைந்திருக்கும் மருத்துவர் நல்ல விதமாக இருக்க வேண்டுமே, செய்ய வேண்டுமே என்பது தான் மிகப்பெரிய கவலையாக இருக்கிறது. 

சென்ற மாதம் என் உறவினர் சென்னையில் மிகப்பெரிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இரு முறை பைபாஸ் சர்ஜரி இதயத்தில் செய்து கொண்டவர். 78 வயதான அவருக்கு இலேசாக நெஞ்சு வலி என்று மருத்துவமனை சென்றவருக்கு ஆஞ்சியோ தொடையில் செய்தபோது தவறான சிகிச்சை அளிக்கப்பட்டு தொடைக்குள் CLOT உண்டாகி ரண வேதனையை அனுபவித்தார், அதனால் ஏற்பட்ட வீக்கத்தை சரி செய்ய, கெட்ட இரத்தத்தை வெளியேற்றுவதற்காக பிரஷர் கொடுத்து அமுக்கி அமுக்கி அதை வெளியேற்றுவதற்குள் உயிர் போய் உயிர் வந்தது அவருக்கு. இப்படி தவறுதலாக நடந்து விட்டதற்கு ஒரு SORRY சொல்லி, ஒரு மாதத்துக்கு நடக்கக்கூடாது என்றும் சொல்லி நிறைய மருந்து வகைகளுடன் அனுப்பி விட்டார்கள். இன்னும் அவரால் சரியாக நடக்க முடியவில்லை. 

பத்து வருடங்கள் முன்னால், என் கணவருக்கு அதே மருத்துவ மனையில் பித்தப்பையையும் பித்தக்குழாயிலிருந்த கற்களையும் நீக்கி, பித்தக்குழாயிலிருந்த அசுத்தங்கள் அனைத்தும் வடிய ஸ்டெண்ட் போட்டு, அந்த ஸ்டெண்ட்டை நீக்க 20 நாட்கள் கழித்து வரச்சொன்னார்கள், அதே போல 20 நாட்கள் கழித்து அந்த ஸ்டெண்ட் நீக்கப்பட்டு, நாங்களும் விமானமேறி துபாய் வந்ததோம். சரியாக மூன்று மாதங்கள் கழித்து என் கணவருக்கு ஒரு இரவில் உடலில் குளிர் ஜுரம் போல பலமாக நடுக்கம் ஏற்பட்டதும் உடனேயே எமெர்ஜென்ஸியில் துபாய் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டபோது என் கணவருக்கு இரத்த அழுத்தம், ஆக்ஸிஜன், எல்லாம் குறைந்து தொற்று கல்லீரலில் பரவி மிக சீரியஸான நிலைக்கு சென்று விட்டார்கள். 2 நாட்களில் ஆக்ஸிஜன் சற்று ஏறியிருந்த சமயம் உடனடியாக அவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் காப்பாற்றி விட்டார்கள். அதைத்தொடர்ந்த பல மோசமான பாதிப்புகளிலிருந்தும் என் கணவர் மீண்டு எழுந்து வந்த பின்பு, நான் தலைமை மருத்துவரிடம் , “ ஏற்கனவே இரு அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக நடந்த பின்பும் எதனால் இவர்களுக்கு இப்படி உயிருக்கு ஆபத்தான நிலைமை ஏற்பட்டது “ என்று காரணம் கேட்டபோது, அவர்         ‘ உங்கள் கணவருக்கு உங்கள் ஊரில் வைத்த ஸ்டென்டை மிகவும் குறுகிய காலத்துக்குள் எடுத்து விட்டார்கள். நாங்கள் இந்த காரணத்துக்காக ஸ்டென்ட் வைக்கும்போது 3 மாதம் வரை அதை நீக்க மாட்டோம். அப்போது தான் அசுத்த நீரெல்லாம் முழுமையாக வடியும்” என்றார். அவர் சொன்னது போலவே ஜுன் மாதம் என் கணவருக்கு வைத்த ஸ்டென்ட்டை செப்டம்பரில் தான் நீக்கினார்கள். எத்தனை எத்தனை தவறுகள் நம் மருத்துவமனைகளில் நடக்கின்றன!

என் தங்கையைப்பற்றி முன்னமேயே எழுதியிருந்தேன். நுரையீரலில் பயாப்ஸி எடுக்க நல்ல உடல்நலத்துடன் மருத்துவமனையினுள் சென்றவர் தவறான சிகிச்சையால் அங்கேயே உயிரிழந்து வெளியே வந்தார். எத்தனை பெரிய கொடுமை இது! அவர் இறந்து ஏழு மாதங்களாயும் இன்னும் அந்த அதிர்ச்சியிலிருந்து வெளியே வரமுடியவில்லை. 

ஒரு முறை கெண்டைக்காலில் ஏற்பட்டிருந்த வலிக்காக மருத்துவமனைக்கு ஸ்கான் எடுக்கச்சென்றிருந்தேன். பின்னங்கால்களில் ஸ்கான் எடுத்தார்கள். அந்த ஸ்பெஷலிஸ்ட் தன் உதவியாளரிடம் சொல்கிறார் ‘ இவர்களுக்கு வெரிகோஸ் வெயின் பிரச்சினையும் உள்ளது. இதோ, இங்கு செல்லும் நரம்பைப்பாருங்கள்’ என்று! அதற்கு அவரின் உதவியாளர் ‘ இல்லையில்லை. இது வெரிகோஸ் நரம்பு கிடையாது. இவர்களுக்கு அந்த பிரச்சினை இல்லை’ என்கிறார். இந்த விவாதம் என் கண் மூன்னாலேயே நடந்தது. இவர்களின் ஸ்கான் ரிப்போர்ட் எப்படியிருக்கும்? அதை வைத்து மருத்துவர் என்ன விதமான முடிவு எடுப்பார்? அவர் கொடுக்கும் சிகிச்சை எப்படி இருக்கும்?  

மருத்துவமனைகள் நம்மை காக்கும் என்று நம்பித்தான் நாம் மருத்துவர்களிடம் செல்கிறோம். அவர்களே தவறுகள், அதுவும் சரி செய்யவே முடியாத தவறுகள் செய்தால் நாம் எங்கே போவது? எங்கே போய் நியாயம் கேட்பது?


Thursday, 16 February 2023

மருத்துவ சிகிச்சையின் இரண்டு பக்கங்கள்!

 ஒரு மருத்துவ சிகிச்சை அதுவும் ஒரு அறுவை சிகிச்சை கருணையுடனும் பொறுப்புணர்ச்சியுடனும் மனிதாபிமானத்துடனும் செய்யப்படும்போது அது வெற்றிகரமாக மாறி நோயாளியும் காப்பாற்றப்பட்டு மருத்துவர் கடவுளாக போற்றப்படுகிறார். அதேசமயம் மிகவும் சாதாரண சிகிச்சை ஒருவரை திடீர் மரணத்துக்குள் தள்ளி விடுகிறது. அந்த இரண்டு பக்கங்களையும் இங்கே எழுதியிருக்கிறேன். 

மரணத்தின் விளிம்பிலிருந்து மீட்டு உயிரைத்திருப்பிக்கொடுத்த சிகிச்சை:

மணப்பாறையை சேர்ந்த கூலி தொழிலாளி திரு.அழகேசனின் மகன் 13 வயதான மணிகண்டன்  கடந்த 11 ஆண்டுகளாக சென்னையில் உள்ள எக்மோர்-குழந்தைகள் நல  சிறப்பு மருத்துவமனையில் ஹெமாட்டாலஜி துறையில் பரம்பரை இரத்தக் கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார்.

 (ஹீமோகுளோபினோபதி) அவரது இரத்தத்தில்  பரம்பரையாய் வருகிற ஜீன் மரபணு கோளாறு காரணமாக ஹீமோகுளோபின் உற்பத்தியில்  குறைபாடு காரணமாக அசாதாரண ஹீமோகுளோபின் உற்பத்தி அதிகமாகி இருதயம், நுரையீரல் பாதிக்கப்பட்டு சிரமப்பட்டு வந்தார்.

 திருச்சி மருத்துவக் கல்லூரி மற்றும் தஞ்சை மருத்துவக் கல்லூரியில் இந்த அரிய வகை நோய்க்கு சிகிச்சை அளிக்கும் சிறப்பு பிரிவு இல்லாததினால் ஒவ்வொரு மாதமும்  சிறுவனை சென்னை குழந்தைகள் சிறப்பு மருத்துவமனைக்கு  ஒவ்வொரு முறையும் பரிந்துரை செய்யப்படும் போது  ஏழை பெற்றோரால்  சிறுவனை சென்னைக்கு அழைத்து செல்ல முடியாமல் தவித்து வந்தனர்.

மனப்பாறை சட்டமன்ற உறுப்பினர்  திரு. ப அப்துல் சமது சிறுவனை பற்றி  துவரங்குறிச்சி அரசு மருத்துவ மனையை சமீப காலமாக சிறப்பாக வழிநடத்தி வரும் மருத்துவர். ஜான் விஸ்வநாத்திடம் சிறுவனுக்கு உதவும் படி பரிந்துரைத்தார்.  

மருத்துவர் ஜான் விஸ்வநாத் துவரங்குறிச்சி அரசு மருத்துவமனையில்  பணியில் இணைந்த கடந்த 8 மாதங்களில் பல அற்புதமான மருத்துத்துவ சேவைகளை  செய்து  பல்வேறு  சிறப்பு மருத்துவ  சிகிச்சைகளையும் அப்பகுதி ஏழை மக்களுக்கு வழங்கி  மருத்துவ மனை சிறப்பாகசெயல்பட்டு வருகிறது.

பாதிக்கபட்ட சிறுவனை வரவழைத்து  பரிசோதித்து, அவனுக்கு HbFc என்கிற அரிய வகை பரம்பரை இரத்த குறைபாடு நோய் இருப்பதை கண்டறிந்தார். தொடர்ந்து சி.எம்.சி வேலூரின் ஹெமாட்டாலஜி துறையில் உள்ள தனது நண்பர்களுடன் ஆன்லைன் வீடியோ மருத்துத்  ஆலோசனைக்கு  ஏற்பாடு செய்து அவர்களின் ஆலோசனையைப் பெற்ற பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு சிகிச்சை அளிக்க தொடங்கினார்.

அதற்கப்புறம் மருத்துவர் சொன்னது:

" சிறுவனை என்னிடம் கொண்டுவரப்பட்டபோது அவன்  உடல்நிலை மிகவும் மோசமாக  இருந்தது .மிகவும் கடுமையான இரத்த சோகை மற்றும் இதய செயலிழப்புடன் (கார்டியாக் ஃபெயிலியர்) இருந்தார். இந்த அரிய பரம்பரை  இரத்த  கோளாறின் விளைவாக சிறுவனின்  மண்ணீரல் 10 மடங்கு பெரிதாக வீங்கியிருந்தது. கொண்டுவரப்பட்டபோது சிறுவனுக்கு மூச்சுத்திணறல் மற்றும் குறைந்த  இருதய துடிப்பு இருந்தது.

 சிறுவனை  108 ஆம்புலன்சில் ஐ.சி.எச் சென்னைக்கு அனுப்பப்பட்டாலும் அவன் உடல் நிலை  நீண்ட பிரயாணத்தை தாக்கு பிடிக்காது என்பதை உணர்ந்து துவரங்குறிச்சி அரசு மருத்துவ மனையிலேயே சிகிச்சை அளிக்க முடிவு செய்தோம். 

சிறுவனின் அரிய வகை இரத்த குறைபாடு நோய் மற்றும் அவனின் தற்போதைய மோசமான உடல் நிலைமை கண்டு சிகிச்சையளிக்க வேறு எந்த மருத்துவமனையும் ஏற்றுக்கொள்ளாது என்பது எங்களுக்குத் தெரியும்.

 எனவே கடவுளிடம் மிகுந்த  பிரார்த்தனையுடன் நாங்கள் அதை சவாலாக எடுத்து சிகிச்சை அளிக்க தொடங்கினோம்., சி.எம்.சி வேலூரில் உள்ள ஹீமாட்டாலஜி துறையில் உள்ள எனது நண்பர்கள் சிலரிடமிருந்து அவசர வீடியோ ஆலோசனைக்கு ஏற்பாடு செய்து அவர்களின் ஆலோசனையின் படி  சிறுவனின் இதய செயலிழப்பைக் கட்டுப்படுத்தினோம். அவர்களின் ஆலோசனையுடன்_ மற்றும் கடவுளின் தூய கிருபையால் கடுமையான இருதய செயலிழப்பிலிருந்து நாங்கள் சிறுவனை வெற்றிகரமாக  மீட்டெடுக்க முடிந்தது. பின்பு அவனது அரிய இரத்த  கோளாறுக்கான சிறப்பு சிகிச்சையைத் தொடங்கியுள்ளோம்..அந்த சிறுவனைக் காப்பாற்ற ஏற்ற வேளையில் உதவியதற்காக கடவுளுக்கு நன்றி கூறுகிறோம் " என்று கூறி  டாக்டர் விஸ்வநாத் மனம் நெகிழ்ந்தார்.

மகன் நடந்து செல்வதையும் வழக்கமான செயல்களைச் செய்வதையும் பார்த்து பெற்றோர் மிகவும் நிம்மதியும் மகிழ்ச்சியும் அடைந்துள்ளார்கள்..

நோயாளியை சினிமா பார்க்கச் சொல்லி விட்டு அறுவை சிகிச்சையையும் செய்திருக்கிறார் இவர். 

அந்த நோயாளிக்கு ஒரு விபத்தில் வலது கை மோதிர விரல் நசுங்கிப்போய் விட்டது. அருகிலுள்ள மருத்துவ மனையில் சிதந்து போன தசைகளையெல்லாம் வெட்டி விட்டு தையல் போட்டிருக்கிறார்கள். அப்போது தசை நாண் வெட்டுப்பட்டது தெரியாமல் தோலை மட்டும் தைத்து விட்டிருக்கிறார்கள். அதனால் வீடு திரும்பியதும் வலியால் துடித்த அவர் தனியார் மருத்துவ மனைகளை நாடியிருக்கிறார். அங்கே 5 லட்சம் வரை செலவாகும் என்பதாலும் பிளாஸ்டிக் சர்ஜரிகளை செய்யும் அரசு மருத்துவமனைகளான சென்னை ஸ்டான்லி, மதுரை ராஜீவ் காந்தி, வேலூர் சி.எம்.சி செல்லுவதும் சிரமமான நிலையில் பத்திரிகைகளில் துவரங்குறிச்சி அரசு மருத்துமனையில் வெற்றிகரமாக சிக்கலான அறுவை சிகிச்ச்சைகள் கூட செய்து வருவதாக கேள்விப்பட்டு இந்த மருத்துவ மனைக்கு அவர் வந்து சேர்ந்தார். 

இவருடைய மோதிர விரல் நுனியிலிருந்து மணிக்கட்டு வரை 16 செ.மீ நீளத்திற்கு தசை நாண் நரம்பு துண்டிக்கப்பட்டிருந்தது. இதற்கு முன்புறமுள்ள நரம்பில் அதே அளவு நீளத்துக்கு வெட்டியெடுத்து சிதைந்து போன மோதிர விரலில் பொருத்தி, அதே நேரம் முன்பக்கமுள்ள நரம்புக்கு பாதிப்பு வராத வகையில் செயற்கை நரம்புகளால் பலப்படுத்தியும் இந்த அறுவை சிகிச்சையை செய்து முடித்திருகிறார் மருத்துவர் ஜான் விஸ்வநாத். நோயாளிக்கு தோள் பட்டையிலிருந்து சம்பந்தப்பட்ட கைகள் வரை மட்டும் மரத்துப்போகிற மாதிரி மயக்க மருந்து கொடுக்கப்பட்டதால் நோயாளி இயல்பாக பேசிக்கொண்டிருக்க முடியும். பிடித்த சினிமாவைப் பார்க்க முடியும். ப்ளூடூத் மூலம் உறவினர்களிடம் பேசிக்கொண்டிருக்க முடியும். அதனால் மருத்துவர் ஜான் விஸ்வனாத் நோயாளிடம் விருப்பத்தைக்கேட்டு, அவர் விருப்பப்படி விஜய் ப்டத்தைப்போட்டு அறுவை சிகிச்சை செய்திருக்கிறார். முதல் அமைச்சர் காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் முற்றிலும் இலவசமாக இந்த சிகிச்சை செய்யப்பட்டிருக்கிறது. 

ஒரு மிகச் சாதாரண, சிறிய மருத்துமனையில் ஒரு சிக்கலான அறுவை சிகிச்சை ஒரு சாமான்யனுக்கு ஒரு திறமையான மருத்துவரால் முற்றிலும் இலவசமாக செய்யப்பட்டிருக்கிறது! எவ்வளவு பெரிய விஷயம் இது!

ஒரு சாதாரண சிகிச்சை எப்படி ஒருவரை மரணத்துக்குள் தள்ளியது என்பதற்கு உதாரணம் இது:

என் இளைய சகோதரி [ வயது 69 ] பத்து நாட்களாக விட்டு விட்டு வந்த ஜுரத்தால் அவதியுற்றுக்கொண்டிருந்தார். ஓரளவிற்கு இருமலும் ஜலதோஷமும் இருந்தது. ஜுரம் 103 வரை போவதும் பின் இறங்குவதுமாய் இருந்தது. வரிசையாக எல்லா பரிசோதனைகளும் செய்ததில் exrayல் மட்டும் வலது நுரையீரலில் சிறிதளவு மாஸ் போல [ கட்டி போல ] தென்பட்டதால் அது எதுவும் அபாயகரமான கட்டியா என்று பரிசோதிக்க, வலது நுரையீரலில் பயாப்ஸி எடுக்க மருத்துமனையில் வரச்சொல்ல கடந்த 9ந்தேதி என் சகோதரி தன் கணவருடனும் தன் மாப்பிள்ளையுடனும் [ மாப்பிள்ளை அங்கேயே எலும்பு மருத்துவ சிக்கிச்சையில் உயர்தர அறுவை சிகிச்ச்சை நிபுணர்] சென்றார். அனஸ்திஷியா கொடுத்த பின் அவரது வலது நுரையீரலிலிருந்து ஒரு முறை டிஷ்யூ எடுக்கப்பட்டது. மாப்பிள்ளையின் நேரடி கண்காப்பிலேயே இரண்டாவது முறை டிஷ்யூ எடுக்க அந்த ஊசியை [ தலைமுடியையும் விட மெல்லியதாம் ] மறுபடியும் அழுத்தியபோது உடனேயே இருமி மாப்பிள்ளை மேலேயே இரத்த வாந்தி எடுத்து அடுத்த வினாடியில் என் சகோதரியின் உயிர் பிரிந்து விட்டது ‘ கார்டியாக் அர்ரெஸ்ட்’ என்ற பெயரில்! ஏன் இப்படி நடந்தது, இது யாருடைய தவறு என்று எதுவுமே புரியாமல் இங்கே நாங்கள் கண்ணீர் சிந்திக்கொண்டிருக்கிறோம். எதையுமே கேட்க முடியாமல் என் சகோதரியின் கணவர், பெண், மாப்பிள்ளை எல்லோரும் துக்கத்தில் வீழ்ந்திருக்கிறார்கள். நன்றாக நடந்து சென்று சென்றவர், ‘ நான் திரும்பி வரும்போது எனக்கு அசதியாக இருக்கும். பிஸ்கட்டும் தண்ணீரும் வாங்கி வையுங்கள் ‘ என்று கணவரிடம் சொல்லி உள்ளே சென்றவர் ஒரு மணி நேரத்திற்குள் வெறும் சடலமாக திரும்பி வந்தார். இந்த அதிர்ச்சியை இன்னுமே முழுங்க முடியாமல் தவிக்கும்போது, 104 வயதான் என் தாயார் அழுவதற்கு ஆறுதலும் சொல்ல முடியவில்லை.  


Saturday, 2 April 2022

போரின் மறு பக்கம்!!!

இன்றைக்கு பல கோடி மக்கள் வெளியேற்றமும் ஆயிரக்கணக்கான உயிரிழப்புகளும் நிகழ்ந்த நிலையில் இன்னும் உக்ரைன் ரஷ்யா போர் முடிவுக்கு வரவில்லை. எனக்கு 1990 ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஈராக் குவைத் நாட்டை ஆக்ரமிப்பு செய்ததும் அதைத்தொடர்ந்த நிகழ்வுகளும் அமெரிக்கத்தலையீடும் சதாம் ஹுஸைன் மறைவும் அடுக்கடுக்காக நினைவில் எழுந்தன. 


குவைத் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்த போது ஏராளமான மக்கள் செளதி அரேபியாவிற்கு புலம் பெயர்ந்து கொண்டேயிருந்தார்கள். நாஸ்டர்டாம்ஸ் கணிப்புகள் நிறைய வெளியே வந்தன. அதுவரை நாஸ்டர்டாம்ஸ் கணிப்புகள் பற்றிய ஆடியோ, வீடியோ எல்லாம் அரேபிய நாடுகளில் தடை செய்யப்பட்டிருந்தன! அதையும் மீறி அந்த வீடியோக்கள் எங்கள் கைகளில் கிடைத்தன. அவற்றைப்பார்த்த போது மூன்றாம் உலகப்போரின் கணிப்புகள், அதைத்தொடர்ந்த போர்கள் என்று பார்த்தபோது மிக பயங்கரமாக இருந்தது. 



சிறிது நாட்களில் அனைத்து அரபு நாடுகளும் தாக்கப்படலாம் என்ற வதந்தியும் அதன் பின்னாலேயே . ஆந்த்ரா பவுடர் தூவப்படலாம் என்ற ஹேஷ்யங்களும் எழுந்தன. மாஸ்க் விற்பனை அதிகரித்தது. துபாய் விமான நிலையங்கள் எல்லாமே மூடப்படப்போகின்றன என்ற தகவல்கள் வந்ததும் எங்கள் குடும்பமும் உறவுகளும் நட்பும் பெண்கள் குழந்தைகள் மட்டும் வெளியேறி இந்தியா வந்து சேர ஆண்கள் மட்டும் பின்னாலேயே வருவதாக சொன்னார்கள். அமெரிக்க போர்க்கப்பல்கள் அமீரக பாதுகாப்பிற்கு வந்து கடலில் நின்றன. கடைசியில் அரபு நாடுகளுக்கு எந்த வித ஆபத்தும் ஏற்படவில்லை. ஆனாலும் குவைத் ஈராக் போரில் கடுமையாக பாதிக்கப்பட்ட ஒரு தமிழரை அதற்கப்புறம் நான்கு ஆண்டுகள் கழித்து தாய்லாந்தில் சந்தித்தோம்.

நாங்கள் தாய்லாந்து நாட்டின் தலைநகரம் பாங்காக் நகருக்கு 1994ல் சுற்றுப்பயணம் சென்றிருதோம். அங்கிருந்த சில தமிழக உணவங்களால் நம் சாப்பாட்டிற்கு எந்தக் குறையுமில்லாமல் பயணம் தொடர்ந்து கொண்டிருந்தது.. அப்போது தெரிந்த நண்பர் ஒருவர் அவருக்குத்தெரிந்த ஒரு தமிழ் உணவகத்தில் சாப்பிட அழைத்தார். அழைப்பை ஏற்று அவருடன் அந்த உணவகம் சென்றோம். அதன் நிறுவனரும் அவரின் நண்பரும் உள்ளே அழைத்துச்சென்று உணவகத்தை சுற்றிக்காண்பித்தனர் நாங்களும் உணவகத்தொழில் செய்கிறோமென்பதால். அதற்கப்புறம் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த போது அந்த நண்பருக்கு சில நாட்களில் திருமணம் என்பதை அறிந்தோம். வாழ்த்து சொல்லி விட்டு பெண் பற்றி விசாரித்த போது மணப்பெண் தாய்லாந்து நாட்டுப் பெண் என்று அறிந்து அதிர்ச்சி அடைந்தோம். காதல் திருமணமில்லை என்று மறுத்த அவர் ' இந்த நாட்டு பெண்ணைத்திருமணம் செய்து கொண்டால் நமக்கு வரதட்சிணை, சொத்து எல்லாம் தந்து பெண்ணும் தருவது வழக்கம். அதனால் தான் இந்த முடிவு' என்றார்.

தமிழ்ப்பெண்ணை மணக்க விரும்பவில்லையா என்று கேட்டோம்.

அவர் கசப்புடன் சிரித்தார். அப்புறம் அவர் சொன்ன கதை.....

1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒரு இரவு திடீரென்று இராக் குவைத்தை ஆக்ரமித்த போது, இந்த நண்பர் குவைத்தில் வேலை செய்து கொண்டிருந்த ஆயிரமாயிரம் தமிழர்களில் ஒருவர்! நகரமே தீப்பிடித்து எரிகிறது. நிறைய பேர் பிணைக்கைதிகளாய் பிடித்து இழுத்துச்செல்லப்படுகிறார்கள். 


பல அரேபியர்கள் அவசரமாக தப்பித்துச் செல்வதில் முனைப்புடன் இருக்கிறார்கள்! இந்தியர்களும் மற்ற வெளிநாட்டினரும் தங்கள் உடைமைகளையும் குருவி போல சிறுகச் சிறுக சேர்த்த பணத்தையும் பொருள்களையும் நகைகளையும் பாஸ் புக்குகளையும் அப்படியே விட்டு விட்டு தப்பித்து ஓடுகிறார்கள். பாதி பேர் செளதி அரேபியா எல்லயைக்கடந்து அந்த நாட்டுக்குள் நுழைகிறார்கள். மீதி பேர் இராக்கின் பஸ்ரா வழியாகவோ அல்லது பாலைவனம் தாண்டி வேறு வழியாகவோ அம்மான் செல்ல



முனைகிறார்கள்.  அவரவர் கார்களை எடுத்துக்கொண்டு வீடுகளில் எல்லாவற்றையும் அப்படியே போட்டு விட்டு பறந்து செல்கிறார்கள்! இந்திய அரசாங்கம் ஏர் இந்தியா விமானங்களை அம்மானின் நிறுத்தி வைத்திருக்கிறது. அதற்கு அம்மானில் உள்ள இந்தியத்தூதரகம் சென்று ஒவ்வொருத்தரும் தன் பாஸ்போர்ட்டையோ அல்லது ஆதாரங்களையோ காண்பித்து அதன் பின்னர் தான் விமானத்தில் ஏற வேண்டும். தூதரகம் முன்னால் துணிகளிலும் கிழிந்த பாய்களிலும் துணியாலான கொட்டகைகளிலும் ஏராளமானவர்கள் நாட்கணக்கில் தங்கள் பெயர் எப்போது அழைக்கப்படும் என்று காத்துக்கிடந்தார்கள். 



நம் நண்பரும் தன் முதலாளியை சந்திக்க ஓடுகிறார். அப்போது தான் அவரும் வீட்டை அப்படியே போட்டு விட்டு வெளியேறி விட்டது தெரிகிறது. பாஸ்போர்ட்டுக்கும் முதலாளியிடம் தான் சேமித்து வைத்திருக்கும் பணத்துக்கும்  என்ன செய்வது? தலையில் அடித்துக்கொண்டு அழுதவாறே குவைத்திலுள்ள இந்திய தூதரகத்துக்கு சென்றாராம். அங்கே ‘ நீ இந்தியன் என்று எப்படி நம்புவது?’ என்று கேட்டதும் ‘ நான் இந்தியனென்று எப்படி நிரூபிப்பேன்? ‘ஜன கண மன’ பாடினால் நம்புவீர்களா’ என்று அழுதிருக்கிறார். இந்திய தூதரகம் உதவி செய்ய கடுமையாக மறுத்து விட்டது. அங்கிருந்து வெளியேறி எல்லைக்கு கார்களில் பறந்து சென்று கொண்டிருக்கும் முகமறியாத நபர்களிடம் கெஞ்சிக்கூத்தாடி ஒரு காரில் இடம் பிடித்து இரவில் குளிரில் பாலைவனத்தில் படுத்து எப்படியோ சமாளித்து அம்மானில் அவரும் விமானம் ஏறி விட்டார். டில்லி வந்ததும் அங்கிருந்த அதிகாரிளால் தமிழ்நாட்டுக்குச் செல்லும் ரயிலில் ஏற்றி விடப்பட்டாராம். ஒவ்வொரு மாநிலத்தை புகைவண்டி கடக்கும்போது அங்கங்கே மக்கள் பழங்கள், ரொட்டிகள், சாப்பாட்டு பொட்டலங்கள் என்று வழி நெடுக கொடுத்திருக்கிறார்கள்.

“ கிளைமாக்ஸே அப்புறம் தாங்க! நம் தாய்த்திருநாடு கண்ணில் பட்டதும் அப்படியே கண்களில் கண்ணீர் வந்து விட்டது. ரயில் நின்றதும் பார்த்தால் ஒருத்தர் கூட கண்ணில் படலைங்க. எங்களுக்காக தமிழக அரசு எந்த ஏற்பாடும் செய்யலைங்க. அநாதை போல வெளியில் வந்தோம். காசில்லாமல் ஆட்டோ ஏறி ஒரு நண்பன் வீட்டுக்கு சென்று அவனிடம் காசு வாங்கிக்கொண்டு என் ஊருக்கு சென்றேன். திரும்பவும் பாஸ்போர்ட் எடுத்தேன். அதற்காக 1500 ரூபாய் லஞ்சம் கொடுத்தேன். திரும்பவும் லஞ்சம் வாங்கியவரை தகுந்த ஆதாரங்களுடன் கோர்ட்டுக்கு இழுத்து கொடுத்த 1500ஐ திரும்பப்பெற்றேன். மனசில் அத்தனை ரணமும் வெறியும் ஆத்திரமும் இருந்தன. தாய்லாந்து வந்தேன். வேலையில் சேர்ந்தேன். இதோ ஒரு தாய்லாந்து பெண்ணை மணக்கப்போகிறேன்! என் நாடு எனக்கு வாழ்க்கை கொடுக்கவில்லை. ஆதரவளிக்கவில்லை. எனக்கு பிழைப்பும் கொடுத்து சந்தோஷத்தையும் கொடுக்கும் இந்த நாடு எந்த வகையில் தாழ்ந்தது?”

அவர் பேச்சிலிருந்த வேதனையும் கனமும் எங்கள் மனதையும் கனமாக்கியது. எந்த பதில் சொன்னாலும் அவர் மனசின் ரணம் குறையாது என்பதை உணர்ந்தோம்! போரின் இன்னொரு பக்கம் இது தான்! இப்படி எத்தனை பேரின் வாழ்க்கை தடம் புரள்கிறது! வன்முறையும் ஆக்கிரமிப்புமாக போர் புரியும் நாடுகள் இதற்கு பதில் சொல்லுமா?


Sunday, 25 July 2021

காற்றுக்குமிழ்கள்!!!

 


இது ஒரு மீள் பதிவு.

பதிவெழுத ஆரம்பித்த காலத்தில் 2010ல் எழுதிய பதிவு இது. இப்போதைய பதிவர்கள் அநேகம் பேர் அப்போது தொடர்ந்ததில்லை. அதனால் எல்லோருக்குமே இது புதிய பதிவு தான். இதை எழுதும்போது மனதில் இருந்த ரணம் பத்து வருடங்களுக்குப்பிறகாவது குறைந்துள்ளதா என்று நினைத்துப்பார்த்தால் இன்னும் உள்ளே அந்த ரணம் நீரு பூத்த நெருப்பாகவே இருக்கிறது. பதிவைப்படித்த பிறகு உங்களுக்கும் அது புரியும்.

25 வருடங்களுக்கு முன் நடந்த நிகழ்வு இது. 

நானும் என் சினேகிதியும் ஊட்டி வரை சென்று விட்டு தஞ்சைக்குத்திரும்பிய தினம் அது. என் சகோதரி வீட்டில் தான் என் அம்மாவும் இருந்தார்கள். அதனால் அங்கு வந்து தான் இறங்கினோம். அன்றிரவு என் அம்மாவுக்கு திடீரென்று மூச்சுத்திணறல் ஏற்பட்டது. என் சகோதரியும் சினேகிதியுமாகச் சேர்ந்து உடனே அவர்களை மருத்துவ சிகிச்சைக்கு அழைத்துச் சென்றார்கள். வீட்டிலிருந்த சகோதரி மகனை நான் கவனித்து மறு நாள் காலை வீட்டிலேயே தங்கி வேலை செய்யும் பெண், சகோதரி மகன் இருவரையும் உறவினர் இல்லம் ஒன்றில் விட்டு விட்டு அதன் பின் நான் மருத்துவமனை செல்வதாகப் பொறுப்பேற்றிருந்தேன்.

சகோதரி வீட்டில் தங்கி வேலை செய்த பெண்ணின் பெயர் கலா. அழகும் துறுதுறுப்புமான பெண். காலையிலேயே எழுந்து வீட்டில் உள்ள வேலைகளைப்பார்த்து சகோதரி மகனையும் கவனித்து விட்டு நேரே என்னிடம் வந்து ‘அம்மா, இந்த ட்ரெஸ் எனக்கு அழகாக இருக்கா’ என்று கேட்டாள். அப்போதுதான் கவனித்தேன், அந்த உடை நான் அவளுக்கு பரிசளித்தது என்பதை. அப்போதுதான் பூப்பெய்திய 13 வயதுப்பெண் அவள். ரொம்பவும் அழகாக இருக்கிறது என்று சொன்னேன். வீட்டை பூட்டு முன் என் கணவரிடமிருந்து தொலைபேசி அழைப்பு.[ மொபைல் இல்லாத காலம்] என் தாயாருக்கு மிகவும் உடல் நலமில்லாததைச் சொன்னதும் பேசி முடிக்கும்போது, ‘உடனேயே போய் விட வேண்டாம், தம்பி இப்போது அழைப்பார். அவரிடமும் விஷயத்தைச் சொல்லி விட்டுச் செல்’ என்று என் கணவர் சொல்லவே தொலைபேசி அழைப்பிற்காகக் காத்திருந்தேன்.

இதையெல்லாம் கவனித்துக்கொண்டிருந்த கலா, ‘அம்மா, நான் போய் தெருமுனைக்குச் சென்று ஆட்டோக்காரரை அழைத்து வருகிறேன்’ என்றாள். நான் உடனேயே மறுத்தேன். “ஒரு வேளை தொலைபேசி அழைப்பு வருவதற்குள் ஆட்டோ வந்துவிட்டால்- எனக்கு இங்கு ஆட்டோக்காரர்களையெல்லாம் பழக்கம் கிடையாது. ஒருவேளை காத்திருப்பது பிடிக்காமல் ஏதாவது சொல்லலாம். இரு. தொலைபேசி அழைப்பு வந்ததும் நீ போகலாம் ஆட்டோ அழைத்து வர” என்று மறுத்தேன். அவள் பிடிவாதமாக ‘அதெல்லாம் ஒன்றும் சொல்ல மாட்டாங்கம்மா, எங்களுக்குப் பழக்கமானவர்கள் இருக்கிறார்கள்” என்று கிளம்பிப்போனாள்.

அதன் பின் எனக்கு என் கொழுந்தனாரிடமிருந்து வந்த தொலைபேசி அழைப்பிற்கு பதிலளித்து விட்டு வீட்டைப்பூட்டிக் கொண்டு என் சகோதரி மகனுடன் வெளியே தயாராக அமர்ந்திருந்தேன். 10 நிமிடமாகியும் கலா வரவில்லை. ஆட்டோ கிடைக்கவில்லையோ என்று யோசனை செய்து கொண்டிருந்தேன்.

திடீரென்று பக்கத்துத் தெருவில் இருக்கும் எங்கள் உறவினர் வந்தார். ‘என்னம்மா, இங்கே வீட்டைப் பூட்டி விட்டு உட்கார்ந்திருக்கிறாய்?’ என்று கேட்டதும் நான் விபரத்தைச் சொன்னேன்.

பேசாமல் ஒரு நிமிடம் அமர்ந்திருந்தவர் ‘கலா லாரி மோதி மூளை சிதறி செத்துப்போய் சாலையில் கிடக்கிறாள் அம்மா, இந்த வீட்டில் வேலை செய்யும் பெண் ஆயிற்றே, தகவல் சொல்லலாம் என்றுதான் வந்தேன்’ என்றார்.

அவர் அதற்கடுத்தாற்போல பேசியது எதுவுமே என் காதில் விழவேயில்லை. மரணங்களை எதிர்பாராத தருணங்களில் பல முறை சந்தித்திருக்கிறேன். சில வாழ்க்கையை அப்படியே புரட்டிப் போட்டிருக்கின்றன. ஆனால் இப்படி நிலை குலைய வைத்ததில்லை. எப்படி அழகாக, மஞ்சள் பூசிக்குளித்து, எனக்காகவும் வேலைகள் செய்து கொடுத்து [எனக்கு அன்று உடல் நலம் வேறு சரியில்லாமல் இருந்தது] புதிய ஆடை அணிந்து சந்தோஷமாகப்போனவள் இப்படி ஒரு நிமிடத்தில் காற்றுக்குமிழியாக மறைந்ததை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

என் உறவினர் ‘ அம்மா, இங்கேயே இருப்பது ஆபத்து. கலாவின் சொந்தங்கள் எல்லாம் குடிகாரர்கள். கூட்டமாக அங்கே அவள் உடல் அருகே நின்று கொண்டிருக்கிறார்கள். இங்கே விரைவில் வந்து நின்று தொல்லை கொடுப்பார்கள். நான் போய் உடனே ஆட்டோ பிடித்து வருகிறேன். நீ உடனே கிளம்பு “ என்று கூறி, ஆட்டோ பிடித்து வந்து என்னை அனுப்பி வைத்தார். அன்று முழுவதும் என் உறவினர்கள் என்னை சூழ்ந்து கொண்டு ஒருவர் மாற்றி ஒருவர் ஆறுதல் கூறியதெல்லாம் என் மனதில் பதியவேயில்லல.

ஒரு பக்கம் கலாவின் அப்பாவும் அம்மாவும் என் உறவினர் வீட்டுக்கு வந்து என் சகோதரி வீட்டில் வேலை செய்து கொண்டிருக்கும்போது அவள் இறந்ததால் இழப்பீடு தொகை அதிகமாக வேண்டுமென்று கேட்டுக்கொண்டிருந்தனர். காலையில் மூளை சிதறி இறந்த பெண்ணுக்கு அவர்கள் அன்று மாலையே பணம் கேட்டுக்கொண்டிருந்தனர். இந்தத் தொல்லை தாங்காமல் என் கொழுந்தனார் தன் நண்பரான போலீஸ் அதிகாரியை சந்தித்து அழைத்து வரப் புறப்பட்டிருந்தார். இன்னொரு பக்கம் உடல் நலம் தேறத்தொடங்கியிருந்த என் தாயாருக்கு உண்மை தெரியாது, பெரிய மனக்குறை நான் சரியாகவே பேசவில்லை என்று! இதையெல்லாம் தாண்டி மிகப் பெரிய மன வேதனையில் நான் தவித்துக்கொண்டிருந்தேன்.

அவள் நான் சொல்லச்சொல்ல பிடிவாதமாக கிளம்பினாளே, அப்போது நான் அதட்டி உட்காரவைத்திருந்தால் இப்படி அநியாயமாக இறந்திருக்க மாட்டாளோ, அந்த ஒரு சில நிமிடங்களில் அவளை நான் கோட்டை விட்டு விட்டேனே” என்ற மனதின் தவிப்பை என்னால் வெகு நாட்களுக்கு நிறுத்தவே முடியவில்லை. இன்று நினைத்தால்கூட மனதில் வேதனை எழுவதை தவிர்க்க முடியவில்லை. அந்த தொலைபேசி அழைப்பு கொஞ்சம் முன்னால் வந்திருந்தால்கூட அந்த மரணத்தின் அழைப்பிலிருந்து அவள் தப்பித்திருப்பாளே என்ற மனதின் தவிப்பை அடக்க முடியவில்லை. நான் அவளைப் போக வேண்டாம் என்று சொன்னதற்கும் அவள் பிடிவாதமாகப் போனதற்கும் இடையில் மரணம் அவளுக்காகக் கொடூரமாகக் காத்திருந்ததை அறியாமல் போய் விட்டேனே என்ற தாபம் இன்னும் மறையவில்லை. அப்போதுதான் பூத்த அந்தப் புது மலர் அடையாளம் தெரியாமல் வாடி உதிர்ந்து போய்விட்டது.


Sunday, 25 April 2021

கொரோனா நிகழ்வுகள்!!!

கடந்த சில நாட்களாகவே, நடிகர் விவேக் மரணம் தடுப்பூசி போட்டுக்கொள்ள நினைப்பவர்களை தயங்க வைக்கிறது. ஏகப்பட்ட குழப்பங்கள். இதைப்பற்றி நிறையவே யூ டியூபில் விவாதங்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. மக்களிடம் இந்த நிகழ்வுகளினால் ஏற்பட்டிருக்கும் தடுமாற்றங்களையும் குழப்பங்களையும் போக்க பல மருத்துவர்கள் தாமாகவே முன் வந்து விளக்கங்கள் சொல்லிக்கொண்டிருக்கின்றார்கள். அதில் ஒரு மருத்துவர் மிக‌ நன்றாக விளக்கம் சொல்லியிருக்கிறார். கேட்டுப்பாருங்கள். பலருக்கும் இது பலன் தரக்கூடியதாக இருக்கும்.

 

நானும் இங்கு [ துபாய் ] என் குடும்பத்தினருடன் தடுப்பூசி போட்டுக்கொள்ள சென்றேன். அன்று காலையிலிருந்து எனக்கு வயிற்றுப்போகு இருந்தது. மருத்துவ மனை சென்ற சமயம் தான் அது நின்றிருந்தது. அதையும் சொன்னதும் எனக்கு மட்டும் அப்போது தடுப்பூசி வேண்டாம் என்று சொல்லி மே முதல் வாரம் தேதி கொடுத்திருக்கிறார்கள்.

பதினைந்து நாட்களுக்கு முன் என் அக்காவிற்கு குடல் இறக்க அறுவை சிகிச்சை நடந்தது. அக்கா மகன் தான் அருகிருந்து எல்லாவற்றையும் கவனித்துக்கொள்ள அக்கா மருமகள் வீட்டைப் பார்த்துக்கொண்டார். பிரபல மருத்துவமனை அது. மருத்துவமனையில் ஏகப்பட்ட கொரோனா நோயாளிகள் இருந்ததால் மற்ற நோயாளிகளை பார்க்க வருபவர்களுக்கு மருத்துவமனை நிர்வாகம் தடை விதித்திருந்தது.  

அக்காவை டிஸ்சார்ஜ் செய்த மறுநாள் அக்கா மகனுக்கு கடுமையான காய்ச்சல் வந்து விட்டது. மருமகளுக்கு இருமல். அவர்களை கவனித்த மருத்துவர் இது கொரோனாவாக இருக்காது என்று மருந்துகள் கொடுத்திருக்கிறார். சரியாகாமல் காய்ச்சலும் இருமலும் அதிகமாகவே, இருவரும் தஞ்சையிலுள்ள மெடிகல் கல்லூரியில் டெஸ்ட் செய்ததில் இருவருக்குமே கொரோனா பாஸிடிவ் என்று ரிசல்ட் வந்து விட்டது. இருவரும் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதற்குள் அக்கா மகனுக்கு மூச்சுத்திணறல் ஆரம்பித்து விட்டது. அவரை வெண்டிலேட்டர் சப்போர்ட்டில் வைத்திருக்கிறார்கள். இரத்த அழுத்தமும் பிராணவாயுவும் கீழே இறங்க ஆரம்பித்து தீவிர சிகிச்சையால் தற்போது சீரான நிலைமையில் இருக்கிறது. இதற்கிடையே, ஒரு குறிப்பிட்ட ஊசி போட்டால் அவருக்கு விரைவாக குணமாகும் என்று மருத்துவர் சொன்னதன் பேரில் அந்த ஊசிக்காக எல்லா இடங்களிலும் அதை வாங்க தீவிர முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இது வரையில் அதில் வெற்றி கிடைக்கவில்லை. இங்கே அந்த ஊசி உள்ளது. மருத்துவரின் கடிதத்துடன் தான் அதை வாங்க வேண்டும். விலை நம் பணத்துக்கு 1 1/4 லட்சம். ஊரில் 35000 விலையுள்ள இந்த ஊசி தற்போதுள்ள நெருக்கடியால் 1 1/2 லட்சமாக உயர்ந்திருக்கிறதாம். நாளை தான் நாங்கள் வாங்கி அனுப்ப வேண்டுமா என்பது தெரியும். முதலில் அந்த மருந்தை வாங்க வேண்டும். அதை எடுத்து செல்பவருக்கு பி.சி.ஆர் டெஸ்ட் பண்ணி நெகடிவ் என்று ரிசல்ட் வர வேண்டும். டிக்கட் உடனேயே கிடைக்க வேண்டும். குறிப்பிட்ட அளவுள்ள டெம்பரேச்சர் உள்ள குளிர்ந்த பையில் தான் அதை பத்திரமாக எடுத்துச் செல்ல வேண்டும். 

இந்த நிகழ்வுகளால் கடந்த 15 நாட்களாய் எல்லோருக்குமே மன உளைச்சல் வீட்டில். எல்லாம் சரியாகும் என்ற நம்பிக்கை மட்டும் தான் மிச்சமிருக்கிறது.  

Monday, 15 February 2021

எண்ணங்கள்!!!

ஆறுதலும் தைரியமும் கொடுத்து அன்புடன் எழுதிய அனைத்து அன்புள்ளங்களுக்கும் இனிய நன்றி!!


 கொரோனா பாதிப்பு ஏற்பட்டு கிட்டத்தட்ட 25 நாட்களுக்குப்பிறகு மீண்டும் வலைத்தளம் வருகிறேன்.

கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வந்து கொண்டிருக்கிறோம். ஆனாலும் இங்கே ஐக்கிய அமீரகத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதாக பத்திரிக்கைகளில் செய்தி வருகின்றன. ஆரம்பத்தில், கடந்த மார்ச்சில் இருந்த அதிக தாக்கம் இப்போது இருக்கிறது. ஆனாலும் அதிக கட்டுப்பாடுகள் இல்லாமல் திறமையாக சமாளித்து வருகிறது அரசு. மார்ச்சுக்குள் முழுக்கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விடலாம் என்று சொல்லுகிறது அரசு. 

அனைத்து வியாபாரங்களும் படுத்து விட்டன. பெரிய பெரிய கம்பெனிகள் தங்கள் தொழிலாளர்களை வெளியே மொத்தமாக அனுப்புகின்றன. உணவகங்கள் அத்தியாவசியமான தொழிலாய் போய் விட்டதனால் ஓரளவு உயிர்ப்புடன் இயங்கி வருகின்றன. அதனாலேயே மளிகை. காய்கறி வியாபாரம் சுறுசுறுப்பாக இயங்கி வருகின்றன. எங்கள் உணவகங்களும் பல சட்ட திட்டங்களுடன் இயங்கி வருகின்றன. சென்ற வருடம் போல இந்த சமயத்திலும் மீண்டும் பாதி இருக்கைகளுடன் தான் இயங்க வேண்டும் என்று சுகாதார அலுவலகம் சொல்லி விட்டது. 

ஒரே ஒரு நல்ல விஷயம் பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் வாடகையை ஓரளவிற்கு குறைத்து விட்டன. வீடுகள் நிறைய காலியாகி விட்டன. இருக்கிற கம்பெனிகளும் பாதி சம்பளம் தான் கொடுக்க முடிகிறது ஊழியர்களுக்கு. துபாயைப்பொறுத்த வரை, சுற்றுலா தான் நாட்டின் வருமானத்திற்கு பெருமளவில் ஆதாரமாக இருக்கிறது. அதில் விழுந்த அடியால் நிறைய சுற்றுலா கம்பெனிகள் பல இன்னும் எழுந்திருக்க முடியவில்லை. நிறைய சுற்றுலா கம்பெனிகளின் உரிமையாளர்கள் வேறு தொழில்களில் இறங்கி விட்டார்கள். என் மகனும் சுற்றுலா கம்பெனி வைத்திருப்பவர். இன்னும் சில மாதங்களுக்கு விமானங்கள் முழுமையாக இயங்க முடியாத நிலையில் எல்லா நாடுகளுமே இருப்பதால் என் மகனும் எங்கள் உணவக தொழிலில் முழுமையாக இறங்கி விட்டார். ஆச்சரியம் என்னவென்றால்  இளம் தம்பதிகள் கொரோனாவைப்பற்றி கவலைப்படாமல் துபாய்க்கு சுற்றுலா வந்து செல்கிறார்கள். மாஸ்க் போட்டுக்கொண்டு, முதல் சில நாட்கள் தனிமைப்படுத்திக்கொண்டு ஒவ்வொரு இடமாக சுற்றிப்பார்த்து ரசிக்கிறார்கள். கொரோனோவைப்பார்த்து அலுத்துப்போய் விட்டது போலிருக்கிறது அவர்களுக்கு!

சமீபத்தில் தான் அதுவும் கொரோனா பாதித்த பிறகு தான் படித்தேன் கொரோனா பாதித்தால் நாவின் சுவை நரம்புகள் வேலை செய்யாது என்பதை. அது தான் கொரோனா பாதிப்பின் முதல் அடையாளமாம். எங்கள் அனைவருக்குமே நாக்கு மரத்துப்போய் எந்த சுவையுமே 10 நாட்களுக்கு தெரியாமல் இருந்தது. அடுத்தது முகரும் சக்தியும் போய் விடுகிறது. அப்புறம் தான் வரட்டு இருமல், காய்ச்சல், இருமல், உடம்பு வலி என்று தொடர்கிறது. மூச்சுத்திணறல் பற்றி கேட்ட போது, எங்கள் டாக்டர் " கொரோனா பாதித்ததே தெரியாமல் மிகவும் தாமதமாக கண்டு பிடித்து அதற்குள் அதன் பரவல் உடலில் அதிகமாகிப்போனால் எப்படியும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு பத்து நாட்களுக்குள் மூச்சுத்திணறல் ஏற்பட்டு விடும். ஆரம்பத்திலேயே கண்டு பிடிக்கப்பட்டு விட்டால் அந்த மாதிரி பாதிப்புகள் எதுவும் ஏற்படாது. முதல் பத்து நாட்களுக்குள் மூச்சுத்திணறல் வரவில்லையென்றால் அதற்கப்புறம் வராது. " என்று சொன்னார். 

வெளியே செல்ல வழியில்லாமல் தனிமைப்படுத்திக்கொண்டு விட்ட‌தால் எங்கள் உணவகங்களை மேலாளர்கள் தான் பார்த்துக்கொண்டார்கள். தொலைபேசி வழியாகத்தான் இயங்கிக் கொண்டிருந்தோம். 

திடீரென்று ஒரு உணவக மேலாளரின் மனைவி ஊரில் இறந்து விட்டதாக தகவல் வந்தது. அவரை உடனேயே அனுப்பி வைத்தோம். அவர் முப்பதாம் நாள் காரியங்களை முடித்து விட்டு திரும்பி வந்தார். அவர் வந்து ஒரு வாரம் ஆகவில்லை. அதற்குள் முக்கியமான சமையல்காரருக்கு மயக்கம் ஏற்பட, பரிசோதனைகள் செய்ததில் அவருக்கு ஆஞ்சியோ செய்து தான் பார்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் சொல்லி விட்டார்கள். அப்போது கூட, அவர் ஊருக்குப்போக விரும்பவில்லை. நாங்கள் எங்கள் ஊழியர்கள் அனைவருக்கும் இன்ஷூரன்ஸ் செய்திருப்பதால் இங்கே சிகிச்சையோ அறுவை சிகிச்சையோ மேற்கொண்டால் மிகவும் குறைந்த செலவிலேயே சிகிச்சை முடிந்து விடும். அவருக்கு ஆஞ்சியோ செய்ததில் மூன்று அடைப்புகள் இருந்ததால் இன்றைக்கு அவருக்கு மூன்று ஸ்டென்ட் பொருத்தப்பட்டது. மொத்த செலவும் நம் இந்திய ரூபாயில் பத்தாயிரம் தான்!! 

பல வருடங்களுக்கு முன்பு. என் கொழுந்தனாருக்கு இதய அறுவை சிகிச்சை நடந்த போது எங்கள் உயிரே எங்களிடம் இல்லை. அந்த அளவு பதட்டமும் க‌வலையும் இருந்தன. இப்போதோ எல்லாமே சர்வ சாதாரணமாக போய் விட்டது. 


Monday, 1 February 2021

இதுவும் கடந்து போகும்!!!

 பதினைந்து நாட்களுக்கு முன், பொங்கல் முடிந்த அடுத்த சில நாட்களில் என் மருமகளுக்கு உடல் வலி அதிகம் ஏற்பட்டது. அடுத்த நாளிலேயே மகனுக்கும் அதே மாதிரி உடம்பு முழுவதும் வலி வந்ததும் என் மகன் காரை எடுத்துக்கொன்டு கொரோனா சென்டருக்குச் சென்று பரிசோதனை செய்து வந்தார். அடுத்த நாளிலேயே பாஸிடிவ் என்ற ரிசல்ட் வந்து விட்டது. அன்றைக்கே சற்று அதிகமாக பணம் கட்டியதும் வீட்டிற்கே வந்து அனைவருக்கும் சாம்பிள் எடுத்துச்ச் என்றார்கள். அடுத்த நாளே எங்கள் எல்லோருக்கும் பாஸிடிவ் என்ற தகவலுடன் அரசு சுகாதார அமைப்பிலிருந்து செய்தி வந்தது. அன்றிலிருந்து அடுத்த பத்து நாட்களுக்கு தனிமைப்படுத்திக்கொள்ளும்படியாக தகவல் வந்தது. உடனேயே வேலை செய்யும் பெண்ணை தற்காலிகமாக நிறுத்தினோம். பேப்பர் பிளேட்டுகள், தம்ளர்கள், அத்தியாவசிய உணவுப்பொருள்கள் என்று வாங்கினோம். அடுத்த நாளிலிருந்து காய்ச்சல், உடல் வலி, குளிர், சளி, இருமல், ஒவ்வாமை என்று அனைவருக்கும் தீவிரமாக உடலை படுத்தி எடுக்க ஆரம்பித்து விட்டது. எங்களுக்கு தெரிந்த தமிழ் மருத்துவரிடம் தேவையான ஆலோசனைகள் பெற்றோம். தினமும் விட்டமின்கள் C, D, ZINC எடுப்பதுடன் காய்ச்சலுக்கும் தீவிர சளி பிடித்தலுக்கும் மருந்துகளை வாட்ஸ் அப்பிலேயே எழுதி அனுப்பினார். மிகவும் கவனமாக இருக்கும்படியும் அதிகமான ஓய்வெடுக்கும்படியும் உடலை வருத்தி வேலைகளை செய்தால் கொரோனாவின் பாதிப்பு அதிகமாகுமென்றும் சொன்னார். வீட்டிலுள்ள இரு சிறு குழந்தைகளைப்பற்றி கவலைப்பட வேண்டாமென்று சொல்லி அவர்களுக்கு ஒரு டானிக் போல தரச்சொன்னார்.


கடந்த 15 நாட்கள் வீடே ஒரு க்ளினிக் போல ஆகியது. மிகுந்த உடல் பிரச்சினைகளுக்கிடையே ஒவ்வொரு நாளும் போராட்டமாக நகர்ந்தது. காய்ச்சலால் உடல் தள்ளாமை. வலி மாத்திரையைப்போட்டுக்கொண்டு, வலுக்கட்டாயமாக ஏதேனும் உணவு தயாரித்தாலும் யாருக்குமே சாப்பிட முடியாமை, வெளியிலிருந்து உணவு வாங்கினாலும் அதே நிலைமைதான். வெளியே துபாய் குளிர் 15 டிகிரிகளுக்கு இரவு நேரத்தில் இறங்கியது. ஒவ்வொரு நாளும் சிறு சிறு முன்னேற்றங்களுடன் நாள் நகர்ந்து சென்றது. 11 நாட்கள் முடிவில் அரசாங்கத்தின் சுகாதார அமைப்பிலிருந்து ' நீங்கள் வெற்றிகரமாக கொரோனா பாதிப்பை கடந்து விட்டீர்கள். வாழ்த்துக்கள். இனி நீங்கள் மகிழ்வுடன் இருங்கள்' என்று தகவல்கள் வந்தன. அப்படியும் மெதுவாக சிறு சிறு வலிகளுடன் நாட்கள் கடந்து கடந்த இரண்டு நாட்கள்தான் எல்லோரும் கொஞ்சம் சாப்பிட ஆரம்பித்திருக்கிறோம். குவாரன்டைன் நாட்கள் பதினான்கையும் கடந்து வந்து விட்டோம். இப்போது தான் வீடு மெதுவாக இயங்கத்தொடங்கியிருக்கிறது. வேலைக்காரப்பெண் வேலை செய்ய வந்து விட்டது. கொஞ்சம் அப்பாடா என்றிருக்கிறது. இன்னும் சிறிது இருமல், தொண்டையில் பாதிப்பு என்று இன்னும் உள்ளே மருந்துகள் போய்க்கொண்டிருக்கின்றன. இழந்த தெம்பு திரும்பி வர இன்னும் மூன்று மாதங்களாகும் என்று மருத்துவர் சொல்லி, சத்தான உணவு வகைகள், அசைவம் என்று சாப்பிடச் சொல்லியிருக்கிறார். இன்னும் சோர்வு இருக்கிறது. இதுவும் கடந்து போகும் என்ற நம்பிக்கையில் நாட்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன!!!

Monday, 28 December 2020

முகங்கள்-4!!!!


இது ஒரு உறவினர் ஒருவரின் வாழ்க்கையைப்பற்றியது. மனைவி 50 வயது முடிவதற்குள்ளேயே சர்க்கரை நோயால் இறந்து விட்டார். இரண்டு பிள்ளைகள், இரண்டு பெண்கள்., மூதத பிள்ளை தான் குடும்பத்தை தாங்கிய வேர். அந்தப்பிள்ளைக்கு சிறிய வயதிலேயே மார்க் 80 சதவிகிதம் எடுத்திருந்தாலும் ஏன் 90 சதவிகிதம் எடுக்கவில்லை என்று அடிமேல் அடி விழும். நோயுள்ள தாயின் வேலைகளை பள்ளிப்பருவத்திலேயே அந்தப்பிள்ளை செய்யும். மனதில் வலியோடு தான் வயதும் வளர்ந்தது. வியாபாரத்தில் நொடித்துப்போன அந்தப் பெரியவருக்கு உறவினர்கள் எல்லாம் உதவி செய்ய அந்தக் குழந்தைகள் எல்லாம் நல்லபடியாக படித்தார்கள். மூத்த மகன் வெளிநாடெல்லாம் சென்று பொருளீட்டி தன் அப்பா பெயரில் இடம் வாங்கி மிகப்பெரிய வீட்டையும் கட்டினார். மூத்த மகனின் திருமணத்தைப்பார்க்கக்கூட கொடுத்து வைக்காமல் அந்த தாயார் இறந்து போனார். மூத்த மகளின் திருமணமும் முடிந்தது.

அப்புறம் தான் பிரச்சினைகள், குடும்பத்தகராறுகள் எல்லாம் வரத்தொடங்கின. இத்தனைக்கும் மருமகளாக வந்த உறவுப்பெண் மிக நல்ல மாதிரி. அவரால் எந்தப்பிரச்சினையும் வரவில்லை. பிரச்சினையெல்லாம் அப்பாவுக்கும் மகனுக்கும் இடையில் தான்.  மூல காரணம் இளைய தங்கையின் தேவையற்ற பேச்சுக்கள் தான். அவ்வளவு பிரச்சினைகளும் முற்றிப்போய் ஒரு நள்ளிரவில் தன் தந்தையையும் திருமணமாகாத தன் தங்கையையும் வீட்டை விட்டு வெளியே அனுப்பினார் மகன். ஒடிந்து போனார் தந்தை. தங்கைக்கும் சரி, தம்பிக்கும் சரி, திருமணமோ அல்லது நல்ல வேலையில் அமர்த்துவதோ எதுவும் தன்னால் செய்ய முடியாது என்று மறுத்தும் விட்டார் அந்த மகன். இத்தனைக்கும் நல்ல வேலையில் சொந்த வீட்டுடன் மிக வசதியாக இருந்தார் அவர்.

வெளியேறி வந்த அந்த தந்தை யோசித்தார். 70 வயதைக்கடந்த நிலையில், தனக்கென்று எந்த சொத்தும் வாழ்வாதாரமும் இல்லாத நிலையில் என்ன செய்வது என்று தீவிரமாக யோசித்ததின் முடிவு எங்கள் எல்லோரையும் அதிர்ச்சியில் தள்ளியது. மகன் தன் பெயரில் கட்டிய வீட்டை மகனுக்குத் தெரியாமல் ரகசியமாக விற்றார். வந்த தொகையில் நான்கு மனைகள் வாங்கி ஒவ்வொருத்தருக்கும் ஒரு மனை என்று நான்கு பிள்ளைகளுக்கும் எழுதி வைத்தார். மீதியில் தனக்கென ஒரு பிளாட் வாங்கினார். பாக்கியை வங்கியில் போட்டு அதன் மூலம் வரும் வருமானத்தில் வாழ்க்கையை தொடர்வது என்று முடிவெடுத்தார். கடைசி பெண்ணுக்கும் பிள்ளைக்கும் சிக்கனமாக திருமணத்தையும் செய்து வைத்தார்.  ' நான் செய்தது உலகத்திற்கு இழிவாகத்தான் தெரியும். ஆனால் என்னைப்பொறுத்தவரை இது நியாயம்' என்று எழுதி வைத்தார் தந்தை.

வீட்டை விற்ற செய்தி கிடைத்ததுமே மூத்த மகன் பொங்கி எழுந்தார்.  தந்தைக்கும் மகனுக்குமிடையே நிறைய வாக்குவாதங்கள், கடிதங்கள் எல்லாம் நிகழ்ந்தன. அதன் பிறகும் சினம் தணியாத மகன் தந்தை மேல் வழக்கும் தொடர்ந்தார். எப்படியும் தந்தைக்கு தான் சாதகமாக வழக்கு முடியும் என்ற நிலையிலும் மகன் அதை ஒத்துக்கொள்ள மறுத்தார். இந்த வழக்கு சில வருடங்களாக இழுத்துக்கொண்டிருந்தது.

இடையே, நான் அந்த உறவினருடன் பேசிக்கொண்டிருந்த போது ' நீ வேண்டுமானால் அவனுடன் பேசிப்பார்க்கிறாயா? அவனுக்கு புரிகிற மாதிரி எல்லாவற்றையும் சொல்லி பேசிப்பார்க்கிறாயா?' என்று கேட்டார். இத்தனைக்கும் பிறகு அவருக்கு இன்னும் மகன் மீது பாசம் இருக்கிறது என்று புரிந்த போது, ஆச்சரியமாக இருந்தது. நானும் ஒத்துக்கொண்டேன். சென்னையில் இருந்த அவரின் மகனோடு தொலைபேசியில் பேசி, அவரின் தந்தையின் நிலைமையை புரிய வைக்க முயன்றேன். இறுதியில் ' நீ அவரிடம் தந்தையென்ற‌ பாசம் கூட காண்பிக்க வேண்டாம், அன்பு என்று கூட வேண்டாம். ஒரு வயதானவரிடம் காட்டக்கூடிய கருணையையாவது காண்பிக்கலாமே? அந்தக் க‌ருணையோடு அவருக்கு நீ சாப்பாடு போடலாமே? " என்று கேட்டேன். அதற்கு அவர் ‘ உங்களுக்குத் தெரியாது அவரைப்பற்றி. சாப்பிடுகிற சாப்பாட்டில் விஷம் வைக்கத் தயங்காதவர் அவர். அவர் தப்பு பண்ணியிருந்தால் கடவுள் அவரை தண்டிப்பார். நான் தப்பு பண்ணியிருந்தால் அதே கடவுள் என்னை தண்டிக்கட்டும்' என்றார். ' இதற்கு மேல் பேச முடியாது' என்று சொல்லி நான் பேசுவதை முறித்து விட்டேன். ஆனால் இந்த கடுமையான பேச்சுகளை நான் அந்தத் தந்தையிடம் சொல்லவில்லை. பூசி மழுப்பி விட்டேன்.

அதற்கப்புறம் ஓரிரு வருடங்களில் அவர் நோய்வாய்ப்பட்டு இறந்து போனார். தன் தந்தை மரணப்படுக்கையில் இருந்த போது கூட தனக்கு இழந்த சொத்தை இப்போதாவது அவர் திரும்பத்தருவாரா என்பதிலேயே தான் அந்த மகனின் நாட்டமிருந்தது.

அதற்கு அடுத்த வருடமே அந்த மகனுக்கு கல்லீரல் செயலிழந்து போனது. 2,3 வருடங்களாக மிகவும் கஷ்டப்பட்டிருக்கிறார். கல்லீரல் மாற்று சிகிச்சையும்  அவருக்கு செய்தாலும் பலன் கிடைப்பது  சந்தேகத்திற்கிடம் தான் என்று மருத்துவர்களும் சொல்லி விட்டார்களாம்.  உடலெல்லாம் நீர் தேங்கி அதற்காக அறுவை சிகிச்சைகள் செய்த நிலையில் சில மாதங்களுக்கு முன் அவரும் இறந்து போனார். எல்லா சொந்த பந்தங்களையெல்லாம் விட்டு ஒதுங்கி இருந்ததால் அவரின் இறப்பிற்கு மிக நெருங்கிய உறவுகள் கூட போகவில்லை.  அந்த இறப்பு செய்தி கிடைத்த பிறகு ஒரு வாரம் வரை அதன் தாக்கம் எனக்கு இருந்து கொண்டே இருந்தது.  ஒரு மகன் என்ன தப்பு செய்தாலும் அவன் பெற்றோர்களால் அதை மன்னிக்க முடிகிறது. தன் பெற்றோர்கள் தப்பு செய்தால் மட்டும் ஏன் அந்த மகனால் மன்னிக்க முடியவில்லை?  

Thursday, 22 October 2020

முகங்கள்-3!!!!

 

என் கணவரின் நண்பர் அவர். கல்லூரி நண்பர். கல்லூரிக்காலங்களில் சீரான சிந்தனைகள் கொண்டிருந்தார்.  வெடிச்சிரிப்பும் கிண்டல் பேச்சுகளும் சுறுசுறுப்பும் அவரின் கூடப்பிறந்தவை. வங்கி அதிகாரியாக அவருக்கு வேலை கிடைத்தது.. அவரவர் திருமணங்களுக்குப்பிறகு சந்திப்புகள் குறைந்து விட்டன.  அதுவும் வெளிநாட்டில் வாழ்வதால் குறைந்து போன உறவுகளில் அவரின் நட்பும் ஒன்று.

ரொம்ப காலத்துக்குப்பிறகு, சமீபத்தில் என் கணவர் தன் கல்லூரி நண்பர்களையெல்லாம் தேடிப்பிடித்து சந்தித்துக்கொண்டிருந்தார்கள். அப்போது அவர் இருக்குமிடத்தையும் கண்டுபிடித்து அவரின் வீட்டுக்குச் செல்ல முடிவு பண்ணினோம்.

ஒரு வழியாய் தஞ்சைக்கு அருகிலுள்ள ஒரு கிராமத்திலுள்ள அவரின் வீட்டுக்குச் சென்றபோது கோலூன்றி எங்களை வரவேற்ற அவரைப்பார்த்ததும் ரொம்பவும் அதிர்ச்சியாக இருந்தது. தவறி விழுந்து கால் எலும்பு நொறுங்கி பல முறை அறுவை சிகிச்சைகள் செய்திருந்தார். அவற்றில் தவறுதலான வழிகாட்டுதல்களின் காரணமாக  சில தவறான சிகிச்சைகள் செய்ததால் அவருக்கு பாதிப்பு மிக அதிகமாக இருந்தது. மிகவும் சிரமப்பட்டுக்கொண்டிருந்த அவரைப்பார்த்தபோது மனது கனமாகிப்போனது. அவரின் மகன்கள் இருவரும் குடும்பத்துடன் சென்னையில் இருப்பதாயும் தன் மனைவியுடன் தான் தனியாக இருப்பதாயும் சொன்னார்.  எந்த நோய்க்கும் எந்த அறுவை சிகிச்சைக்கும் அவர் இரண்டாவது ஒப்பினியன் எந்த மருத்துவரிடமும் எடுக்கவில்லை என்பது புரிந்தது. அவரை தஞ்சையிலுள்ள எங்கள் உறவினரான அறுவை சிகிச்சை நிபுணரிடம் காட்டி கால்களை பரிசோதிக்க வைத்தோம். என் கணவர் அவருக்கு உடைகள் மாற்றவும் நடக்க வைக்கவும் உதவியபோது கண்கள் கலங்கி விட்டார்.



அப்புறம் தான் எங்களுக்கு ஒரு அத்திர்ச்சியான விஷயம் தெரிந்தது. 20 வருடங்களுக்கு முன் அவர் பக்கவாதம் வந்து பாதிக்கப்பட்டு மூளையிலும் பாதிப்பு ஏற்பட்டபோது மருத்துவர் அவர் குடும்பத்தினரிடம்
இவரைக் காப்பாற்ற ஒரே ஒரு வழியிருக்கிறது. ஒரு வீரியம் மிக்க ஊசி போடுவதன் மூலம் இவரின் உயிரைக் காப்பாற்றி விட முடியும். ஆனால் எப்போது வேண்டுமானாலும் இவரின் பார்வை போய் விடும். நீங்கள் சம்மதித்தால் மட்டுமே இந்த ஊசி போட முடியும்.” என்று சொல்ல, குடும்பத்தினர் அனைவரும் கூடிப்பேசி, சம்மதித்து அவருக்கு அந்த ஊசி போடப்பட்டு அவரின் உயிர் காப்பாற்றப்பட்டது.  கடந்த 20 வருடங்களுக்கு அவரின் பார்வை போகவில்லை என்பது மிகப்பெரிய ஆச்சரியம். கடந்த சில வருடங்களாகத்தான் அவர் பார்வை இலேசாக மங்கத்தொடங்க ஆரம்பித்திருக்கிறது. இதில் அதிர்ச்சியும் ஆச்சரியமுமான விஷயம் ஒன்றே ஒன்று தான். இந்த 20 வருடங்களில் அவரோ அவர் குடும்பத்திலுள்ளவர்களோ இதற்கான எந்த முயற்சியையும் எடுக்க வில்லை! ஒரு கண் மருத்துவரிடம் சென்று இதைப்பற்றி அலசி கண்களைக்காப்பாற்ற ஏதேனும் வழி இருக்கிறதா என்ற எந்த பிரயத்தனமும் செய்யவில்லை என்பதை நம்பவே முடியவில்லை. இத்தனைக்கும் நன்கு படித்த, அரசியல் செல்வாக்குள்ள குடும்பம்.  இப்போது அவருக்கு இலேசாக பார்வைக்குறைவு ஏற்பட்டிருக்கிறது. எங்களின் வற்புறுத்தலுக்கு சம்மதித்து என் சகோதரியின் மகளான கண் மருத்துவரிடம் சென்றார். கண் அறுவை சிகிச்சை நிபுணரான அவர் பார்வை குறையத்தொடங்கி விட்டது. இனி பார்வையைத்திரும்பப் பெற முடியாது  என்று ஆழ்ந்த பரிசோதனைக்குப்பின் உறுதியாகச் சொல்லி விட்டார்.  மிகவும் வருத்தமாக இருந்தது எங்களுக்கு.

இப்போது தன் முன்னே அருகில் வந்து நிற்பவர்களை மட்டுமே அவரால் அடையாளம் கண்டு கொள்ள முடிகிறது அவரால்.   எழுபதுகளில் இருக்கும் அவருக்கு சரியாக நடக்க முடியாத நிலையில் இதுவரை இருந்த பார்வையும் முழுமையாக இல்லாது போய் விட்டால், அப்புறம் மீதமிருக்கும் வாழ்க்கையை எப்படி அவரால் மனதளவிலும் உடலளவிலும் சமாளிக்க முடியும் என்பதை நினைக்கையில் மனம் வேதனையில் ஆழ்கிறது.

கண் பார்வை கொஞ்ச நஞ்சம் இருக்கும்போதே எங்கள் இல்லத்துக்கு வர வேண்டுமென்று ஆசைப்பட்டார். நாங்களும் சரியென்றோம். ஆனால் இந்தக் கொரோனாவால் வர இயலாமல் போய் விட்டது. இனி எப்போது பார்க்க நேரிட்டாலும் அப்போது அவரது பார்வை இருக்குமா?

Saturday, 6 June 2020

உன் உயிர் உன் கையில்!

சில நாட்களுக்கு முன் மருத்துவர் அமுதகுமார் எழுதிய ' பயனுள்ள மருத்துவ செய்திகள்' என்ற புத்தகம் படிக்க நேர்ந்தது. அதில் ஒரு அத்தியாயத்தின் பெயர் " போலி மருந்துகளை தவிர்க்கும் வழி ". அதைப்படித்த போது ஒரு சுவாரஸ்யமான செய்தியை அறிய முடிந்தது.

இந்தப்புத்தகம் 2004ல் எழுதப்பட்டிருக்கிறது. ' போலி மருந்துகளையும் போலி மருந்துகள் தயாரிப்பவர்களையும் தரக்குறைவான மருந்துகளையும் கண்டு பிடிக்க வழியில்லாததால் ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் லத்தீன் அமெரிக்காவிலும் உள்ள இலட்சக்கணக்கான மக்களின் தேக ஆரோக்கியம் கேள்விக்குறியாக இருக்கிறது ' என்று ஜெனீவாவிலுள்ள உலக சுகாதார மையத்தின் மருந்துகள் ஒருங்கிணைப்பாளரான டாக்டர் லெம்பிட் ராக்கோ கூறியுள்ளதாக குறிப்பிட்டிருக்கிறார். 15 வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட புத்தகம் இது. அப்போதே போலி மருந்துகளின் பரவலை தடுக்க முடியவில்லை என்னும்போது, இப்போதைய நிலைமைஎப்படியிருக்கிறது? என்னவென்று தெரியவில்லை.

கொஞ்ச நாட்களுக்கு முன்னால் மலேரியா நோய்க்கு உலகெங்கும் கொடுக்கப்படும் ' குளோரோகுயின்' மாத்திரைகளுக்காக டிரம்ப் நம் பிரதமர் மோடியிடம் முதலில் யாசித்து, பின் பயமுறுத்தி தனக்கு இந்த மாத்திரைகளை ஏற்றுமதி செய்ய வைத்தார். கொரோனா வாராமல் தடுப்பதற்காக ஏராளமானவர்கள் மருத்துவருடைய சீட்டு இல்லாமல் குளோரோகுயின் மாத்திரைகள் உட்கொண்டதை நானே பார்த்திருக்கிறேன்.
இந்த மருத்துவர் அதே குளோரோ குயின் மாத்திரைகள் பற்றியும் சொல்லியிருக்கிறார்.

உலகெங்கும் மலேரியா நோயினால் சுமார் 30 கோடி மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். அதற்காக கொடுக்கப்படும் குளோரோகுயின் மாத்திரைகள் மிகவும் கசப்புத்தன்மை உடையவை என்றும் போலி மருந்துகள் தயாரிப்பவர்கள் இந்த கசப்பு கொடுப்பதற்காக வேறு ஏதேதோ சேர்ப்பதாகவும் 200 மில்லி கிராம் குளோரோகுயின் சேர்க்க வேண்டியதற்கு பதில் வெறும் 41 மில்லி கிராம் குளோரோகுயின் மருந்தை சேர்த்து மாத்திரைகள் தயாரித்து மார்க்கெட்டில் விற்று விடுகிறார்கள் என்று சொல்லியிருப்பதைப்படிக்கும்போது பகீரென்கிறது.

காலாவதியான மருந்தை சாப்பிட்ட ஒருவர் எந்த அளவு உயிருக்கு போராடினார் என்பதை, 2011 ல் பதிவிட்டிருந்தேன். அதை மீள் பதிவாக இங்கே மறுபடியும் போடுவது எல்லோருக்கும் உபயோகமாக இருக்குமென்று நம்புகிறேன்.

இதோ அந்த மீள் பதிவு:

உன் உயிர் உன் கையில் !!!

வீட்டிலுள்ள என் சிறிய நூலகத்தில் பழைய நாவல் ஒன்றைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது தற்செயலாக பழைய வார இதழ்த் தொகுப்பு ஒன்றில் இந்த செய்தியைப் படிக்க நேர்ந்தது. மருத்துவ உலகத்தில் எத்தனை எத்தனையோ புரட்சிகள், புதிய கன்டு பிடிப்புகள் என்று தினம் தினம் ஏற்பட்டுக்கொன்டே இருக்கின்றன. ஆனாலும் இந்த செய்தி எனக்கு மிகவும் புதிய செய்தியாக இருந்தது. கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு முன்பே நடைபெற்ற உண்மை சம்பவம் இது. இந்த சிகிச்சை இன்னும் நடைமுறையில் இருக்கிறதா, இந்த சிகிச்சையில் இன்னும் பல மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றனவா என்று தெரியவில்லை. யாராவது ஒரு மருத்துவர் இதற்கு பதில் சொன்னால் நன்றாக இருக்கும். மயிர்க்கூச்செரியும் இந்த அனுபவத்தை நான் இங்கே என் அன்புத் தோழமைகளிடம் பகிர்ந்து கொள்கிறேன். எந்த வியாதியும் துன்பமும் வெறும் நிவாரணங்களினால் மட்டும் தீர்ந்து விடாது. அதற்கு மேல் மனதில் தைரியமும் தளராத நம்பிக்கையும் இருக்க வேன்டும். அப்போதுதான் துன்பங்களையும் வியாதியையும் எதிர்த்து ஒரு மனிதனால் போராட முடியும். அப்படி போராடிய மனிதன் கதை இது.

1985ம் வருடம் நடந்த கதை இது. இவர் பெயர் காந்தி சாமுண்டீஸ்வரன். இளைஞர். ஒரு புத்தக நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். ஒரு நாள் ஆட்டோ விபத்தில் சிக்கி, தோள் சதை பிய்ந்து மருத்தவ மனையில் சேர்க்கப்பட்டார். மருத்துவர்கள் அனைத்து விதமான சிகிச்சைக்ள் செய்தும் காயங்கள் ஆறாமல் இருக்கவே, பல்வேறு சோதனைகளின் முடிவில் மருத்துவர்கள் அவருக்கு ' பிளாஸ்டிக் அனிமியா' இருப்பதைக் கண்டுபிடித்தார்கள். அதாவது, ரத்தத்தை உறைய வைக்கக்கூடிய 'பிளேட்லெட் ' ரத்த அணுக்கள் அவருக்கு மிகவும் குறைவாக இருந்தன. சராசரியாக ஒரு கனமில்லி மீட்டரில் இருக்க வேன்டிய 1.5 லட்சம் பிளேட்லெட்டுக்களுக்கு பதிலாக சுமார் 35000 தான் இருந்தன. ரத்த அணுக்களை உற்பத்தி செய்யும் எலும்பு மஜ்ஜையும் இறுகி விட்டது. பல வித சிகிச்சைகள் அளித்தும் சரியான பலன் அளிக்காமல் மீதமிருக்கிற ஒரே ஒரு வழியைத்தான் மருத்துவ நிர்வாகம் அவருக்குச் சொன்னது.

20 நாட்களுக்கு ஒரு முறை அவர் இரத்தம் ஏற்றிக்கொள்ள வேண்டும் என்பதுதான் அது. காந்திக்கு ரத்தம் ஏற்றிக்கொள்வது வழக்கமாகிப் போனது. உடலில் ரத்த அணுக்கள், பிளேட்லெட்டுகள் குறையும்போது,கண்கள் இருண்டு மயங்கி கீழே விழுவார்.பிறகு மருத்துவமனையில் கண் விழிப்பார். யாராவது ரத்தம் ஏற்றிக்கொண்  டிருப்பார்கள். இதற்கு தீர்வும் முறையான சிகிச்சையும் கிடையவே கிடையாதா எனப் பார்க்காத மருத்துவமும் தேடாத மருத்துவரும் எதுவுமே இல்லாமல் போயின. கடைசியில் வேலூர் சி.எம்.சி மருத்துவ மனையின் குருதியல் துறை மருத்துவர், டாக்டர் மாமன் சான்டி, ஒரு மருந்து இருப்பதாகச் சொன்னார். 'இந்த மருந்துக்கு நோய் தீர்க்கும் உறுதி 50 சதவிகிதம்தான் என்பதையும் உயிருக்கு உத்தரவாதமில்லை என்பதையும் மருந்து வெளி நாட்டிலிருந்துதான் தருவிக்க வேண்டுமென்பதையும் சொன்னார்.

குதிரையின் சீரம்தான் அது!




காந்திக்கு வாழ்க்கையை வாழ்ந்தே தீர வேண்டுமென்ற விருப்பம் இருந்தது. மருந்து பற்றி விசாரித்தபோது, அது அன்றைய தேதியில் 1700 டாலர்கள் என்று சொல்லப்பட்டது. ஏற்கனவே கைக்கு மீறிய செலவுகளால் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தவர்க்கு நண்பர்கள், தந்தை, புத்தக வெளியீட்டார்கள் என்று பலரும் உதவினார்கள். மருந்தும் ஒரு விமானி மூலம் தில்லி வந்து சேர்ந்தது. ஆனால் அதை வெளியில் எடுத்து வர போராடினார்கள். சுங்க வரி 24% கட்ட வேண்டும் என்றார்கள். இங்கிலாந்து மருத்துவர்களும் இந்திய மருத்துவர்களும் அது உயிர் காக்கும் மருந்து என்று சான்று கூறினாலும் அரசின் உயிர் காப்பு மருந்துப்பட்டியலில் லிம்ப்போகுளோபின் என்ற இந்த மருந்து இல்லை. ஒரு மத்திய அமைச்சர் உதவியுடன், உத்தரவாதம் அளித்து படாத பாடுபட்டு மருந்தை வெளியில் கொன்டு வந்தார்கள்.

அந்த மருந்து இந்தியாவிற்கும் புதிது. மருத்துவர்களுடன் சேர்ந்து காந்தியும் அந்த மானுவல் புத்தகத்தைப் படித்தார்.
இந்த மருந்தில் ஒரு மில்லி மீட்டர் அளவு எடுத்து ஒரு பாட்டில் சலைனில் கலந்து முதலில் பரிசோதனைக்காக செலுத்த வேண்டும். செலுத்திய சிறிது நேரத்தில் தலைமுடி, உடலிலுள்ள முடிகள் விறைக்கும்.பயங்கரமாக உடல் அரிப்பெடுக்க ஆரம்பிக்கும். நாடித்துடிப்பு குறைந்து கொண்டே வரும். கடுமையாகக் குளிரும். குதிரையின் சீரத்தை உடம்பு ஏற்றுக்கொண்டதும் மீண்டும் உடலில் வெப்பம் கூடி, நாடித்துடிப்பு சீரான நிலைமைக்கு வரும். அதன் பின் நாள்தோறும் 5 எம்.எல் மருந்து செலுத்த வேண்டும்.

காந்திக்கு இது எப்படியும் முடியலாம் என்று புரிந்தது. 'எனக்கொரு ஆசை. நான் என் இதயத்துடிப்பை கண்ணால் பார்த்துக்கொன்டே இருக்க வேன்டும்' என்றார். அவரது ஆசையை ஒத்துக்கொண்ட டாக்டர் மாமன் சாண்டி அவர் அருகில் ஒரு மானிட்டரை வைக்க ஏற்பாடு செய்தார். நர்ஸ் அதைப்பற்றி விளக்கிச் சென்றார்.

அவர் கூறியவை காந்தியின் மனதில் ரீங்காரமிட்டுக்கொண்டே இருந்தது.

" பாருங்க, இந்த மானிட்டரில் உங்க இதயத்துடிப்பின் கிராஃபிக் தெரியும். எழுபது இருந்தா நார்மல். மருந்து சாம்பிள் டெஸ்டில் பல்ஸ் 40க்கு கீழே இறங்கும். அதுக்கும் கீழே போனால் மூச்சு திணறும். கீழே நேர்க்கோடாகி விட்டதுன்னா கொஞ்ச தூரம் அப்படியே போய் புள்ளியா நின்னுடும், அவ்வளவு தான்"

காந்திக்கு அந்த மருத்து மனை முழுவதும் ஒரு நண்பர் கூட்டமே இருந்தது. அவரது தந்தையின் பல்கலைக் கழகப்பணியால், வேளாண்மை மருத்து மாணவர்கள் நிறைய பேர் புதிதாய் ரத்தம் கொடுக்கக் காத்திருந்தார்கள். மருத்துவ சிகிச்சை தேவைப்படும் அளவிற்கு ரத்த அணுக்கள் உடலில் ஏற்றப்பட்டு தயார் நிலையில் அவர் வைக்கப்படார். மருத்துவ மனை முகப்பிலுள்ள தேவாலயத்தில் பிரார்த்தனைக் கூட்டம் நடந்தது. காந்தியுடன் அவரைப்போலவே நோய் கொண்ட 42 வயது, 25 வயது ஆண்கள், 12 வயது சிறுமி என்று மூன்று பேர் இந்த சாம்பிள் டெஸ்டிற்கு இணக்கம் தெரிவித்திருந்தார்கள். காந்திக்காக வரவழைக்கப்பட்ட மருந்தில் பரிசோதனைக்காக தயாரானார்கள்.

குதிரையின் சீரம் கலக்கப்பட்ட சலைன் காந்தியின் உடலில் செலுத்தப்பட்டது. என்னென்ன நடக்கும் என்று சொல்லப்பட்டிருந்ததோ, அத்தனையும் நடக்க வேண்டும்னெறு மனசு பிரார்த்தனை செய்தது. உடல் அணுக்களிலெல்லாம் இந்த மருந்தை ஏற்றுக்கொள் என்று மனசு கெஞ்சி அலைந்தது.

சிறிது நேரத்தில் முடி ஜிவ்வென்று விறைத்து குத்திட்டு நின்றது. காந்தி சந்தோஷம் தாங்காமல் விறைத்து நின்ற முடியைத் தடவினார்.

பக்கத்தில் படுத்திருந்த 12 வயது சிறுமிக்கு மருந்தின் எதிர் விளைவால் கண், காதுகளில் உள்ள சிறு சிறு நரம்புகள் உடைந்து ரத்தப் பெருக்கு அதிகமாக ஏற்பட, அவளை மருத்துவர்களால் காப்பாற்ற முடியவில்லை.

காந்திக்கு அரிப்பு ஏற்பட்டதும் கைகள் கட்டப்பட்டன. குளிர் எடுத்ததும் உடலில் போர்வைகள் போர்த்தப்பட்டன. 
இதயத்துடிப்பு குறைய ஆரம்பித்ததும் மூச்சுத் திணறல் ஆரம்பித்தது. மார்புக்குள்ளே ஒரு வெற்றிடம் அழுத்திப்பிடிக்க ஆரம்பித்ததும், காந்தியின் மனது ' எப்படியாவது உயிர் வாழ வேண்டும்' என்று தொடர்ந்து புலம்ப ஆரம்பித்தது.

சில விநாடிகளில் அவரின் மூச்சுத் திணறல் குறையத் தொடங்கி உடலின் வெப்பம் கூட ஆரம்பித்தது. அருகிலிருந்த 25 வயது வாலிபர் கண் திறக்காமலேயே இறந்து போனார். அவர் பக்கத்தில் படுத்திருந்த 45 வயது ஆண்மகன் இறந்து விட்டார் என்று உறுதி செய்யப்பட்டு, பிணவறைக்கு எடுத்துச் செல்லப்பட்ட பின் படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்தார். அங்கிருந்து நடந்தே தன் படுக்கைக்கு வந்ததும் அனைவரது மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. ஆனால் மூன்றாம் நாள் இறந்து போனார்.

காந்தியின் உயிராசை மட்டும் நிலைத்தது. அதன் பின் தொடர்ந்து ஒரு வாரம் 5 எம்.எல் மருந்து அவரது உடலில் செலுத்தப்பட்டது.

இதற்குப்பிறகு தான் க்ளைமாக்ஸே இருக்கிறது. அவரின் உடல் நிலையில் பல சோதனைகள் நடத்திய டாக்டர் மாமன் சாண்டி, காந்தியின் எலும்பு மஜ்ஜையில் ஒரு ஆண்டி பயாடிக் மருந்தின் பாதிப்பு இருப்பதைக் கண்டறிந்தார். கடந்த சில வருடங்களில் அவர் என்னென்ன மருந்துகள் சாப்பிட்டார் என்பது குறித்து காந்தியிடம் விசாரித்தார். எப்போதாவது சளி பிடிக்கும்போதெல்லாம் தானே மருந்துக்கடையில் ஏதேனும் ஆண்டி பயாடிக் மருந்து வாங்கி சாப்பிட்டதாக காந்தி சொன்னார். கடைசியாக எப்போது அது போல ஆண்டி பயாடிக் மருந்து சாப்பிட்டீர்கள் என்று நினைவு படுத்திப்பாருங்கள் என்று டாக்டர் தொடர்ந்து வற்புறுத்தவே, நினைவுகளைக் குடைந்ததில் கடைசியாக காந்திக்கு, தான் பெங்களூர் ரயில் நிலையத்திற்கு ஓடுகிற அவசரத்தில், ஒரு மருந்துக் கடையில் தான் கேட்ட மருந்து இல்லாததால் ஏதோ ஒரு ஆண்டி பயாடிக் மருந்து கொடுங்கள் என்று வாங்கி சாப்பிட்டது நினைவுக்கு வந்தது. பல்வேறு ஆண்டிபயாடிக் மருந்துகளைக் காட்டி இதுவா, அதுவா என்று டாக்டர் விசாரிக்க, கடைசியில் காந்தி சாப்பிட்ட மருந்தை கண்டு பிடித்தார் டாக்டர் மாமன் சாண்டி. அந்த மருந்தையும் எலும்பு மஜ்ஜையில் ஏற்பட்டிருந்த வீழ்படிவையும் பரிசோதித்துப்பார்த்ததில் காலம் முடிந்து போன அந்த மருந்தைச் சாப்பிட்டதுதான் காந்தியின் அத்தனை துயரங்களுக்கும் காரணம் என்பதை டாக்டர் கண்டறிந்தார். தகுந்த சான்றுகள் இலாததால் அவரால் நுகர்வோர் கோர்ட்டில் இது குறித்து வழக்கு போட முடியவில்லை.

அவர் மருத்துவ மனையை விட்டு வெளியேறும்போது, மருத்துவர்கள் அவர் திருமணம் செய்து கொள்வது நல்லதல்ல என்றும் குழந்தைகள் பிறப்பது அதைவிட நல்லதல்ல என்றும் எச்சரித்தார்கள்.குழந்தை பிறந்தால் அது மூளை வளர்ச்சியற்றுத் தான் பிறக்கும் என்று அறிவுறுத்தினார்கள். ஆனால் அதற்கு முன்பே திருமணம் செய்திருந்த காந்திக்கு, குறைகள் ஏதுமற்ற அழகான குழந்தையே பிறந்தது.

கோவையில் புத்தக வெளியீட்டு நிறுவனம் நடத்திக்கொண்டிருக்கும் இவர் 18 வருடங்கள் முன் சொன்னது.

" இப்போது என் உடலில் 1.55 லட்சம் பிளேட்லெட்டுக்கள் உள்ளன. என்னுள் இருக்கும் குதிரையின் சீரம் ஒரு குதிரையைப்போலவே என்னைக் களைப்பிலாமல் உழைக்க வைக்கிறது"!

மிகவும் ஆபத்தான நிலையில் உயிர் வாழ்ந்த இவர், அதையும் விட பல மடங்கு ஆபத்தான சிகிச்சை முறையை எடுத்துக்கொண்டது இவரது மன உறுதியையும் தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் எடுத்துக்காட்டுகிறது.

இன்றைய நடைமுறை உலகில் அவசரத்திற்குக்கூட மருத்துவரிடம் செல்லப் பொறுமையில்லாமல் ஒரு மருந்துக்கடை சென்று கேட்டு மருந்து வாங்கி சாப்பிடுபவர்கள் ஏராளம். இப்படி சாப்பிடுவது எந்த அளவு தீவிரமாக உயிரைப் பாதிக்கும் என்று இதைப்படித்த பிறகாவது சிலராவது உணர வேண்டுமென்பதுதான் இந்தப் பதிவின் நோக்கம். எல்லோருக்கும் டாக்டர் மாமன் சாண்டி போன்ற அருமையான மருத்துவர் கிடைத்து விட மாட்டார்.

நம் உயிர் நம் கையில்தான் பெரும்பாலான நேரங்களில் இருக்கின்றது!




Thursday, 7 May 2020

முகங்கள்-3!!!

அந்தப் பெரிய மருத்துவமனையின் புகழ்பெற்ற இதய மருத்துவரைப்பார்ப்பதற்காக காத்துக்கொண்டிருந்தேன். நல்ல கூட்டம். மருத்துவர் வரிசைப்படி சில நோயாளிகளைப்பார்ப்பதும் நடுநடுவே எக்கோ கார்டியோக்ராம்,  டி.எம்.டி செய்ய அருகிலிருந்த வேறொரு அறைக்கு செல்வதுமாக இருந்தார். மணி மதியம் ஒன்றைத் தாண்டியது, திடீரென்று மருத்துவர் வெளியே சென்றார். அருகிலிருந்த வயதான பெண்மணி என் தேடுதலைப்பார்த்து ‘ மருத்துவர் வெளியே போயிருக்கிறாராம். வருவதற்கு 2 மணியாகுமாம்’ என்றார்.

நான் அப்போது தான் அந்தப் பெண்மணியை சரியாக கவனித்தேன். நெற்றியில் குங்குமம் இல்லாமல், சற்றே வெள்ளி நரைகளுடன் முகத்தில் கவலையுடன் காணப்பட்டார் அவர். அருகே ஒரு இளம் பெண். மென்னகையுடன் என்னையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

‘ ஏம்மா, உங்களுக்கு உடம்பு ஏதும் சரியில்லையா?’ என்று கேட்டேன்.
அவர் அதே கவலையுடன் விவரித்தார்.

‘ எனக்கு ரொம்ப நாட்களாக நெஞ்சில் வலியிருக்கிறதம்மா. ‘பளிச் பளிச்சென்று ‘ சில சமயம் அதிகமாகவே வலிக்கும். இப்போதும் அப்படியே தானிருக்கிறதம்மா. ‘

‘ இதற்கு முன்னால் வேறு இதய மருத்துவரை பார்த்திருக்கவில்லையா?’ என்று நான் கேட்டதும், ‘  ஆறு மாதம் முன்பு தான் பார்த்தேம்மா. இதயத்தில் எந்தப்பிரச்சினையும் இல்லை என்று சொன்னார்கள். ஆனால் இந்த வலி வரும்போது பயமாகி விடுகிறது. அதனால் தான் இந்த டாக்டர் பெரிய இதய நிபுணர் என்று சொன்னார்கள். அவரிடமும் காட்டி விடுவோம் என்று வந்தேன்..’ என்று சொன்னவர் தன் அருகிலிருந்த பெண்ணை சுட்டிக்காட்டி, ‘ இவளுக்கு சீக்கிரம் கல்யாணம் பண்ணி விட்டால் அப்புறம் கவலையில்லை. அதனால் தான் என் உடம்பை இப்படியெல்லாம் கவனித்துப்பார்க்க வேண்டியிருக்கிறது. ‘ என்றார் பெருமூச்சு விட்டபடி.

‘வேறு குழந்தைகள் இல்லையா?’ என்று நான் கேட்டேன்.

‘ இவளுக்கு மூத்தவளுக்கு நாலு வருஷங்களுக்கு முன் தான் கல்யாணம் பண்ணிக்கொடுத்தேன். என் கணவர் இருந்தவரைக்கும் பிரச்சினையில்லாமல் இருந்தது அவர் தாசில்தாராக இருந்தார். இவளையும் எம்.பி.ஏ படிக்க வைத்து விட்டேன். வேலைக்குப்போகிறாள்..’ என்றார்.

நான் ஆறுதலாக பேசியபடி அவருக்கு தைரியம் சொன்னேன்.
‘ கவலைப்படாதீர்கள். முன்பேயே உங்களுக்கு இதயத்தில் பாதிப்புகளில்லை என்று சொல்லியிருக்கிறார்கள். நிச்சயம் இந்த டாக்டரும் அதைத்தான் சொல்லப்போகிறார், பாருங்கள். எனக்கென்னவோ நீங்கள் தினமும் சாப்பிடும் உணவில் தான் பிரச்சினையிருக்கிறது என்று தோன்றுகிறது. நீங்கள் அடிக்கடி பருப்பு வகைகள், உருளைக்கிழங்கு, வாழைக்காய் இதெல்லாம் சாப்பிடுவீர்களா’ என்று கேட்டேன்.

அவர் பதில் சொல்லுமுன்பே அந்த பெண் ‘ ஆமாம் ஆண்ட்டி, அம்மாவுக்கு இதெல்லாம் ரொம்ப இஷ்டம். அதுவும் தினமும் சாம்பார் செய்யணும். கடலைப்பருப்பு சுண்டல் ரொம்ப இஷ்டம்!’ என்று சொல்லி சிரித்தது.

‘ என்னம்மா, அதெல்லாம் சாப்பிட்டால் இப்படியாம்மா நெஞ்சு வலிக்கும்?’ என்று அந்த அம்மா வெள்ளந்தியாகக் கேட்டார்.

‘ நமக்கு வயதாகிறதல்லவா? உடம்பு முன்போல இதையெல்லாம் அவ்வளவு சீக்கிரத்தில் ஜீரணம் பண்ணாது. அத்தனையும் வாயுவாக உடம்பில் அப்படியே தங்கும்’ என்று நானும் சிரித்தேன்.

அப்புறம் சொன்னேன், ’ டாக்டர் தன் சோதனைகளில் உங்களுக்கு ஒன்றும் இல்லையென்று சொல்லி விட்டால், வீட்டுக்குப்போனதும் இந்த உணவுப்பொருள்களையெல்லாம் நிறைய குறைத்து விடுங்கள். தினமும் 3 ஏலக்காய்களை அவை சக்கையாக போகுமளவு மென்று அதன் சாறை விழுங்குங்கள். இந்த வலி ஓடிப்போய் விடும். தினமும் அரை ஸ்பூன் சுக்குப்பொடி போட்ட மோர் இரண்டு வேளைகளாவது குடியுங்கள். ‘

அப்புறமும் அரை மணி நேரத்திற்கு அந்த இதய மருத்துவர் வராததால் அந்த அம்மாவிடம் சொல்லிக்கொண்டு சாப்பிடச் சென்றேன். திரும்பிய போது அவர்கள் சோதனைகளை முடித்து விட்டு மீண்டும் டாக்டரை பார்க்க அமர்ந்திருந்தார்கள்.

என்னைப்பார்த்ததுமே என் கைகளைப்பிடித்துக்கொண்டு, ‘ தெய்வம் போல வந்து நல்ல வார்த்தைகள் சொன்னீர்கள் அம்மா. எனக்கு இதயத்தில் எந்தப்பிரச்சினையுமில்லை என்று இவரும் சொல்லி விட்டார்’ என்றார்.

‘ அப்புறமென்ன, வீட்டிற்கு போனதும் நிம்மதியாகத்தூங்குங்கள். நான் சொன்னபடி தினமும் ஏலக்காய், சுக்கு எடுத்துக்கொள்ளுங்கள்’ என்றேன்.



அவர் என் கைகளை விடாமல், ‘அம்மா, உங்களிடம் ஒரு விஷயம் மறைத்து விட்டேன். எனக்கு ஒரு மகன் இருக்கிறானம்மா. அவன் தான் மூத்தவன். ஒரு பெண்ணைக் காதலித்தவன் அவளையே கல்யாணம் பண்ணிக்கொண்டு எங்கோ போய் விட்டான். எங்கிருக்கிறான் என்பதும் எனக்குத்தெரியாது’ என்றார்.

அவர் விழிகளோரம் கண்ணீர் எட்டிப்பார்த்தது.

அந்தக்கண்ணீரைப்பார்த்ததும் எனக்கு உடனே பதில் சொல்ல முடியவில்லை. எத்தனை வலி, எத்தனை ஏக்கம் அந்தக்கண்களில்!! இளைய மகளுக்கான பொறுப்பை தைரியமாக தோள்களில் சுமப்பவருக்கு, ஆசையாய் வளர்த்த மகன் கட்டறுத்துக்கொண்டு போய் எங்கோ இருந்தாலும் அந்த துரோகத்தை இன்னும் விழுங்க முடியவில்லை!

‘ விடுங்கம்மா. உங்களை அடியோடு மறந்து சென்றவரைப்பற்றி ஏன் நினைத்து கலங்குகிறீர்கள்? உங்கள் பெண் தான் மகனுக்கு நிகராக உங்களை இத்தனை அன்போடு கவனித்துக்கொள்கிறாளே?’ என்று ஆறுதலாக சொல்ல முயன்றேன்.

‘ பத்து மாதம் சுமந்து பெற்ற பிள்ளையம்மா அவன்! ‘

அந்த தாயின் ஏக்கத்தைப்பார்த்தபோது பதில் சொல்ல என்னால் முடியவில்லை.

நான் தஞ்சை வந்த பிறகு, அவரிடமிருந்து நான்கு நாட்கள் கழித்து எனக்கு ஃபோன் வந்தது.

‘ அம்மா, நீங்கள் சொன்ன வைத்தியத்தில் எனக்கு நெஞ்சு வலியே இப்போதெல்லாம் இல்லையம்மா’ என்று சந்தோஷத்துடன் பேசினார்.

மனசில் நிறைவு ஏற்பட்டாலும் அந்தக் கலங்கிய விழிகள் தான் என் முன்னே தெரிந்தன!

Wednesday, 22 April 2020

நல்லவையும் தீயவையும்!!

ஒரு வழியாக வெளிநாட்டிலிருந்து வந்ததற்காக வீட்டின் வெளியே ஒட்டப்பட்ட ‘ இது கொரோனா வீடு. உள்ளே நுழையாதே ‘ என்ற ஸ்டிக்கர் 17ந்தேதி அகற்றப்பட்டது. ஒரு மாதிரி சிறைவாசத்திலிருந்து மீண்ட மாதிரி இருப்பதாக என் கணவர் கூறினார்கள்.

நண்பர்கள் எதையுமே பொருட்படுத்தாது உதவிகள் செய்தார்கள். இந்த சிறைவாசம் நிறைய விஷயங்களை மீட்டெடுக்க உதவியது என்று தான் கூற வேண்டும்.

தஞ்சையில் எல்லோருக்கும் ரோஸ், நீலம், பச்சை என்று அட்டைகளை ஒவ்வொரு வீட்டுக்கும் கொடுத்திருக்கிறார்கள். பச்சை அட்டை வைத்திருப்பவர்கள் திங்கள், வியாழக்கிழமைகளில் காலை 6 மணியிலிருந்து மதியம் 12 வரை வெளியே போய் சாமான்களை வாங்கி வரலாம். ரோஸ் கலர் அட்டை வைத்திருப்பவர்கள் சனி, புதன் கிழமைகளும் நீல அட்டை வைத்திருப்பவர்கள் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளிலும் வெளியே சென்று வரலாம்.

காய்கறிகள் வாரம் இரு முறை வாசலில் வருகின்றன. உழவர் சந்தையிலிருந்து வருவதால் காய்கறிகள் மலிவாகவே கிடைக்கின்றன. பெருமளவில் மளிகை சாமான்கள் வேண்டுமானால் ஆன்லைனில் ஆர்டர் செய்து கொள்ளலாம். சிறு மளிகைக்கடைகளில் மற்ற சாமான்கள் கிடைக்கின்றன. ஆவின் பால் தவறாமல் வருகின்றது.

ஒரு வகையில் வெளியில் செல்லாமல், அலையாமல் இருப்பதாலும் உணவகங்களில் சாப்பிடாமல் இருப்பதாலும் தேவையற்ற பொருள்கள் வாங்குவது குறைந்து செலவினங்கள் கட்டுக்குள் இருக்கின்றன.இப்போதெல்லாம் அடிக்கடி தொலபேசி அழைப்புகளில் மறந்து போன உறவுகள் கூட வருகின்றன. காலம் சுருங்கி எப்போதும் தொலைபேசியில் பேசுவது கூட மறந்து போய் உறவுகள் சுருங்கிக்கொண்டிருந்த நேரத்தில் உறவுகளுக்கு  இப்போது புத்துயிர் கிடைத்தது போல இருக்கிறது! பொருள் சம்பாதிக்க, காலத்தின் பின்னே கட்டாயமாக, இயந்திரத்தன்மையுடன் ஓடிக்கொண்டிருந்த குடும்பத்தலைவர்கள் சட்டென்று நின்று குடும்பத்தின் பக்கம் திரும்பியிருக்கிறார்கள்! நிறைய வீடுகளில் தந்தையும் தாயும் பிள்ளைகளும் சேர்ந்து சிரித்து, வேலைகளில் கணவனும் மனைவிக்கு உதவுவதை பார்க்கையில் மனதுக்கு நிறைவாக இருக்கிறது. என் வீட்டிலும் இப்படித்தானிருக்கிறது. என் மருமகளிடம் இங்கிருந்து ஃபோன் செய்து எப்படி இருக்கிறாயென்று கேட்டபோது, ‘ இவர்கள் வீட்டில் இருப்பதால் இப்போது தான் வீடு வீடு போல இருக்கிறது ‘ என்று சொன்னார். எப்போதும் என் மகன் அலுவலகம் சென்றதும் அதற்கு முன்பேயே பேரன் பள்ளிக்கும் சென்று விடுவதால் என் பேத்தி தன் தாயாரைப்பிடித்த பிடி விடாது கூடவே சுற்றிக்கொண்டிருக்கும். இப்போதோ அப்பாவை விட்டு நகருவதே இல்லை!!

வீட்டுப்பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக்கொள்வதற்காகவே வேலைக்கு செல்லும் பெண்கள் சிலர் இப்போது வேறு வழியில்லாமல் வீட்டிலேயே இருந்து பிரச்சினைகளை சமாளித்து வருகிறார்கள். எனக்குத்தெரிந்த ஒரு பெண்மணி, ‘ எனக்கு வேண்டிய சாமான்களை மாஸ்க் போட்டுச்சென்றாவது எனக்கு அவசியம் வாங்கித்தந்து தான் ஆக வேண்டும் ‘ என்று மகனை விரட்டுகிறார்! இன்னொரு உறவினரோ தொலைபேசியில் பேசும்போது, அவரின் கணவரின் நண்பர் வீட்டில் கணவன், மனைவி இருவருக்குள்ளும் வீட்டிலேயே இருப்பதால் தகராறு ஏற்பட்டு அந்த நண்பர் தற்கொலை செய்து கொண்டதாக சொன்னார். என் மருமகளின் சினேகிதி தன் கணவருக்கு வீட்டிலேயே இருப்பதால் பெரிதும் மன உளைச்சல் ஏற்பட்டு depression நிலைக்குப்போய் விட்டதாகவும் அவரை விரைவில் மன நல மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டிய நிலையில் இருப்பதாகவும் கூறினாராம். கொரோனா தாக்காமலேயே எத்தனை விதமான நோய்கள்! எத்தனை விதமான அவதாரங்கள்!!

Wednesday, 1 April 2020

நாம் தனிமைப்படுத்தப்படும்போது....

துபாயிலிருந்து தஞ்சைக்கு மார்ச் 8ந்தேதி புறப்பட்டபோது இத்தனை பெரிய திருப்பங்கள் வாழ்க்கையில் ஏற்படும் என்பது தெரிந்திருக்கவில்லை. தெரியாத ரகசியங்கள் நிறைந்தது தானே வாழ்க்கை!

தஞ்சைக்கு பிப்ரவரி முதல் வாரமே வந்திருக்க வேண்டியது. அப்போது தான் கொரோனா புயல் வீசத்தொடங்கிய நேரம். அந்த நேரத்தில் நாங்கள் கிளம்புவதை எங்கள் மகன் விரும்பவில்லை. ஒரு மாதமானால் கொரோனாவின் தீவிரம் குறையுமென்று நினைத்து பிரயாணத்தை ஒரு மாதம் தள்ளிப்போட்டோம். அப்போதும்கூட மகனுக்கு எங்களை அனுப்ப அவ்வளவாக விருப்பமில்லை.



மார்ச் மாத ஆரம்பம் என்பதால் சென்னை விமான நிலையத்தில் காய்ச்சல் இருக்கிறதா என்று பரிசோதித்து விட்டு, விலாசம், தொலைபேசி எண் முதலியவற்றை வாங்கிக்கொண்டு அனுப்பி விட்டார்கள்.  தஞ்சை வந்து 10 நாட்கள் வரை எந்த பிரச்சினையுமில்லை. கொஞ்சம் கொஞ்சமாக கொரோனா தீவிரமடைய ஆரம்பித்ததும் நிலைமையே தலைகீழாக மாறத்தொடங்கியது.

வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் தனிமைப்படுத்தப்படுகிறார்கள் என்றும் அவர்கள் இல்லங்களின் வெளியே ஸ்டிக்கர் ஒட்டபப்டுகின்றன என்றும் கேள்விப்பட்டதும் அதற்கு முன்பாகவே தேவையான சாமான்களை வாங்கிப்போட்டு விட்டு நம்மை நாமே தனிமைப்படுத்திக்கொள்வது நல்லது என்று தீர்மானித்தோம். வேலை செய்யும் பெண்ணை தற்காலிகமாக நிறுத்தினோம். வீட்டின் மாடியை சற்று இழுத்துக்கட்ட நினைத்து அதற்கான வேலைகளை அப்போது தான் ஆரம்பித்திருந்தோம். ஜல்லி, மண், சிமிண்ட் எல்லாம் வந்து இறங்க, மேல் தளத்தில் சில பகுதிகளை இடிக்க ஆரம்பித்திருந்தார்கள். பொறியாளரிடம் எல்லா வேலைகளையும் நிறுத்தச் சொன்னோம். எல்லாவற்றுக்கும் தயாராக இருந்த போது சற்று தாமதமாகவே ரெவின்யூ அலுவலகத்திலிருந்து வந்து நாங்கள் சென்னை வந்து இறங்கிய ‘ மார்ச் 8ந்தேதியிலிருந்து ஏப்ரல் 16 வரை இந்த வீடு தனிமைப்படுத்தப்படுகிறது. உள்ளே நுழையாதே ‘ என்ற ஸ்டிக்கரை ஒட்டி, கையிலும் சீல் வைத்தார்கள்.
அன்றிலிருந்து இந்த தனிமைப்படுத்தல் வாழ்க்கை தொடங்கியது. நாமும் வெளியே போகக்கூடாது என்பதும் யாரும் நம்மை வந்து பார்க்கக்கூடாது என்பதும் முக்கிய விதிகள்.
என் சிறிய நூலகம்
அது வரை சரளமாக வந்து போன உறவுகள் இங்கு வருவதை நிறுத்திக்கொண்டார்கள். மூத்த குடிமக்கள், இவர்கள் தனிமையில் இருக்கிறார்களே, ஏதாவது ஒரு வகையில் உதவுவோம் என்ற மனிதாபிமான அடிப்படையான காருண்யம் கூட குறைந்து போயிற்று. அப்படி யாராவது வந்து நின்று பேசினால்கூட அடுத்தவர் அதைப்பார்த்து ‘ அவர்கள் அருகில் போ விட வேண்டாம் ‘ என்று எச்சரிப்பதும் காதில் விழுந்தது.

ரொம்ப நாட்களாகவே ஒவ்வொரு முறையும் துபாயிலிருந்து இங்கு வந்து தங்கும்போது நாட்கள் மின்னலாய் மறைந்து விடும். வரும்போதே ஆயிரம் வேலைகள், முக்கிய திருமணங்கள், மருத்துவர்களின் சந்திப்புகள் என்று அடுக்கடுக்காக திட்டங்களும் கூடவே வருவதால் துபாய் மாதிரியே இங்கும் நாட்கள் யந்திரத்தனமாகவே பறக்கும். சற்று அமர்ந்து ஓய்வெடுக்க முனையும்போது திரும்பும் தேதி வந்து விடும். அவசர அவசரமாக தேவைப்படும் சாமான்கள் வாங்கி, அவற்றை பாக் செய்து திரும்பத் திரும்ப அவற்றின் எடையை சரி பார்த்து திரும்பவும் பறப்பதற்குத்தான் நேரம் சரியாக இருக்கும். இந்த நிகழ்வுகள் கடந்த 40 வருடங்களாக ஒரே நேர்க்கோட்டில் எப்போதும் ஏற்படும் நிகழ்வுகள்!! அடிக்கடி ‘ கொஞ்ச நாட்களாவாது நம் வீட்டில் அப்பாடா என்று உட்கார்ந்து அமைதியாக நேரத்தை கழிக்க முடிந்ததா ‘ என்ற புலம்பல் மட்டும் ஓய்ந்ததில்லை!

இப்போது அந்த நேரம் கிடைத்திருக்கிறது! ஒவ்வொரு அறையையும் தூசி தட்டி சுத்தம் செய்யலாம். அடுக்கலாம். பழைய குப்பைகளை கிளறலாம். என் புத்தகங்களை எண் வாரியாக அடுக்கலாம். என் பழைய பொக்கிஷங்களை, என் ஓவியங்களை, என் கோலங்களை, ரசிக்கலாம். சுத்த தன்யாசி ஆலாபனையை உரத்த குரலில் ஓட விட்டு ரசிக்கலாம்! அமைதியாக ரசிக்க எத்தனை விஷயங்கள் இருக்கின்றன!

வாசலில் இன்று வரைந்த கோலம்
விடியற்காலைப்பொழுதில் வாசலில் போடும் அழகிய கோலத்துடன் அப்படித்தான் நாட்களை கழிக்க ஆரம்பித்திருக்கிறேன். அருகிலுள்ள ஒரு நண்பர் தேவையான பொருள்களை அவ்வப்போது வாங்கிக்கொடுத்து சென்று விடுவார். வாட்ஸ் அப் மூலம் மளிகை சாமான்களை வாங்கிக்கொள்கிறோம். இசையின் பின்னணியில் ஒவ்வொரு வேலையையும் ரசித்து செய்ய ஆரம்பித்து விட்டோம்! நேரம் தான் போதவில்லை எங்களுக்கு!!

Wednesday, 4 March 2020

முகங்கள்-2!!!



வாழ்க்கையில் நிறைய விசித்திரங்களைப்பார்க்கிறோம். சில சமயங்களில் அவற்றின் அர்த்தங்கள் புரிவ‌தேயில்லை. இதுவும் அந்த மாதிரியான ஒரு விசித்திரம்.

35 வருடங்களுக்கு மேலாக எங்களுக்குப்பழக்கமானவர் அவர். அவரின் மனைவியைப்பற்றித்தான் இந்தக்கதை. திருமணம் ஆன போதே எல்லா தரப்பிலும் பிடித்து தான் திருமணம் ஆனது. ஆனால் நாகரீகம் அறியாத, அதிகம் படிக்காத, எதற்கும் குதர்க்கமாக பேசுகிற‌ மனைவியால் இருவருக்குள்ளும் சச்சரவுகள் அதிகமாய் தொடர்ந்தன. இதில் இவரின் அம்மாவும் இந்த மாதிரி மருமகளுடன் நான் இருக்க மாட்டேனென்று அடிக்கடி வாதம் செய்ய பிரச்சினைகள் அதிகமானாலும் இல்லறமும் குடும்ப வாழ்க்கையும் தொடர்ந்து கொண்டு தான் இருந்தது. முக்கிய காரணம் அது கிராமம். விவாக ரத்து என்ற சொல்லுக்கே பயப்பட்ட காலம் அது. அதனால் இந்த இல்லறம் கசப்புகளுடன் தொடர்ந்து கொண்டிருந்தது. வருடங்கள் பறந்தன. அம்மா மறைந்தார். பெண்களுக்கு திருமணமாயின. இவர் மனைவிக்கு சர்க்கரை நோய் வந்தது. அதிக சர்க்கரையினால் உடல் நிலையில் நிறைய பாதிப்புகள். இவர் மனைவியை நன்றாக செலவழித்து கவனித்தார். ஆனாலும் அவர் மனைவி எந்த மாத்திரைகளையும் சாப்பிடாமல் அப்ப‌டியே வைத்திருப்பார். காலையில் 10 மணிக்கு எழுந்து தட்டு நிறைய பழையமுது சாப்பிடுவார். இந்த விஷயத்தில் கணவருடைய சொல்லையோ அல்லது வேறு. யாரும் எதுவும் சொன்னாலும் மதிக்க மாட்டார். மதிய சாப்பாடு மாலை 4 மணிக்குத்தான். நண்பர் அதனால் கிராமத்து டீக்கடை சென்று தன் சாப்பாட்டை பார்த்துக்கொள்வார். இதனால் வீட்டு நிலைமை வெளியில் தெரிந்த அவமானம் வேறு நண்பர் மனதுக்குள் புழுங்குவார். அவர் மனைவிக்கு மாத்திரைகளுடன் இன்சுலினும் கூடியது. அப்படியும் இரத்த சர்க்கரை அளவு 400க்கும் கீழே வரவில்லை. அதனாலெல்லாம் அவர் கவலைப்படவில்லை. நண்பருக்கும் அவர் மனைவிக்கும் பேச்சு வார்த்தை குறைந்து ஒரு நாள் நின்றே போனது. 
ஒரு நாள் அவர் மனைவி இரத்த வாந்தி எடுக்க ஆரம்பித்ததும் மருத்துவமனைக்கு எல்லோரும் ஓடினார்கள். கல்லீரலில் 4 ஓட்டைகள் என்று சொல்லி மருத்துவமனையில் அதை அடைத்தார்கள். ஒழுங்காக மருந்துகளை உட்கொண்டால் 5 வருடங்கள் உயிருடன் இருக்கலாம் என்ற அறிவுறுத்தலுடன் திரும்ப வீட்டுக்கு அனுப்பப்பட்டார்.

மறுபடியும் அதே கதை தான். நண்பர் மருந்து மாத்திரைகள் வாங்கிக்குவிப்பதும் வெளியில் சாப்பிடுவதுமாக இருக்க, அவர் மனைவி வழக்கம்போல மருந்துகளை ஒழுங்காக எடுக்காமலும் நேரம் தவறிய சாப்பாடுமாக இருப்பதும் தொடர்ந்தது. அப்படியும் 4 வருடங்கள் எந்த விதப்பிரச்சினையுமில்லாமல் ஓடி விட்டன. நாலரை வருடங்கள் முடிந்த நிலையில் சென்ற மாதம் மறுபடியும் இரத்த வாந்தி எடுத்தார். இந்த முறை மிக அதிகம். நாங்கள் அவர் பிழைக்க மாட்டாரென்றே நினைத்தோம். செய்தி தொலைபேசி மூலம் நண்பர் சொன்னபோது வயிறு கலங்கி விட்டது.

மறுபடியும் அதே மருத்துவர் கல்லீரலில் ஏற்பட்ட 3 ஓட்டைக‌ளை அடைத்தார். இந்த முறை 3 வருடங்கள் பிழைத்திருந்தாலே அதிகம் என்று எச்சரித்தும் சொல்லி விட்டார். 

நண்பரின் மனைவியும் வீட்டுக்கு நலமாக திரும்பி விட்டார். 
கணவனும் மனைவியும் பேச்சு வார்த்தையில்லாமலேயே கணவர் செலவு செய்ய, ம‌னைவி நலமாகி விட்டார். வாழ்க்கையின் மிகப்பெரிய ஆச்சரியமாக இருந்தது எனக்கு.

எத்தனையோ பேர் தங்கள் உடல் நலத்தை கண்ணும் கருத்துமாகப் பார்த்துக்கொள்ளுகிறார்கள். கணவன் மனைவியையும் மனைவி கணவனையும் அன்புடனும் அக்க‌றையுடனும் கவனிக்கிறார்கள்! ஆனாலும் நிறைய பேருக்கு நோய் தணிவதில்லை. மரணங்களும் நிகழ்கின்றன. ஆனால் மருந்துகளும் ஒழுங்காக எடுக்காமல் சரியான உணவுமின்றி, இந்த அளவு பேராபத்திலிருந்து நண்பரின் மனைவி மீண்டது எப்படி? அவர் அதிர்ஷ்டக்காரர் என்று சொல்வதா? அல்லது கொடுத்து வைத்தவர் என்று சொல்லுவதா? இல்லை, அவரின் ஆயுசு கெட்டி என்று சொல்வதா? இதன் பொருள் உண்மையிலேயே  விளங்கவில்லை எனக்கு!

Monday, 11 November 2019

முகங்கள்-1 !!

வாழ்க்கையில் சிறு வயது முதல் இன்றைய நாள் வரை பல முகங்களை அவ்வப்போது பார்க்கிறோம். ஒவ்வொருத்தருக்கும் பல முகங்கள் இருப்பது கண்டு திகைக்கிறோம், அதிர்ச்சி அடைகிறோம், பல சமயங்களில் கண்ணீரில் வீழ்கிறோம். ஆனால் நம் வாழ்க்கையென்றில்லாமல் அதற்கப்பாற்பட்டு அவ்வப்போது எதிர்பாராமல் தோன்றும் சில முகங்கள் நமக்கு படிப்பினையை கற்றுக்கொடுக்கின்றன. சில முகங்கள் நம்மைத் தெளிவடைய வைக்கின்றன. சில முகங்கள் நம்மை மிகவும் பாதித்து நிறைய சிந்திக்கவும் வைக்கின்றன. அப்படி ஒரு முகத்தை சமீபத்தில் நான் பார்த்தேன்.

சென்ற மாதம் சென்னை ஏர்ப்போர்ட்டுக்கு நாங்கள் தங்கியிருந்த நட்சத்திர விடுதியிலிருந்து கிளம்பிய போது நாங்கள் முதல் நாளே கேட்டிருந்தபடி ஓலா கார் வந்து நின்றது. ஓட்டுனரைப்பார்த்தபோது சற்று தயக்கமாக இருந்தது. விஜய் படத்து வில்லனின் அடியாட்களில் ஒருவன் போல தோற்றம். வாராத சுருட்டை முடி. கழுத்தில், கைகளில் மணிமாலைகள். முரட்டுத்தனமான முகம். சற்று தூரம் வரை காரில் மெளனம் நிலவியது. அருகே உட்கார்ந்திருந்த என் கணவர் கேட்டார்கள், சீட் பெல்ட் போடவில்லையா என்று. அதற்குப்பிறகு அந்த மனிதர் பேசினார் பாருங்கள், அசர வைக்கிற பேச்சு!

" நேற்று பாண்டிச்சேரி போனேன் சார். ஐந்தாறு காலேஜ் பெண்கள் என்னை புக் செய்திருந்தார்கள். பீச் போகச் சொன்னார்கள் சார். அங்கே ஒரே குடியும் கும்மாளமுமாக ஒரே ரகளை! தமிழ்நாட்டுப்பொண்ணுங்க சார்! எல்லாம் சின்ன பொண்ணுங்க சார்! என் கார் சீட் பெல்ட்டையும் உடைத்து விட்டார்கள். எப்படி சார் இப்படி குடித்து, ஆட்டம் போடுகிறார்கள்! ஒரு வீட்டில் கூடவா அம்மாவோ அப்பாவோ ஒழுங்காயில்லை? தட்டிக் கேட்க மாட்டாங்களா சார்! எங்க சார் போகுது நம்ம நாடு?"

என் கணவருக்கும் சரி, எனக்கும் சரி ஒரு நிமிடம் பதில் சொல்லவே முடியவேயில்லை. அவர் பேச்சில் இருந்த சமூக அக்கறை அசர வைத்தது.
மறுபடியும் தொடர்ந்தார் அவர்.

"இப்ப இருக்கிற சின்னப்பொண்ணுங்களையெல்லாம் பார்க்கிறப்போ ரொம்ப கவலையாக இருக்கு சார். எனக்கும் ஒரு தங்கச்சி இருக்கு சார். அதை படிக்க அனுப்பும்போதே சொல்லிட்டேன். நல்ல படிக்கணும். வேறெ எதிலேயும் கவனம் போகக்கூடாது. உன் கல்யாணம் வரைக்கும் நான் கார் ஓட்டி சாம்பாத்திப்பதே உன்னை கரை சேர்க்கத்தான். அதை மனசில வச்சுக்கிட்டு நீ படின்னு கண்டிச்சு சொல்லிட்டேன்."

நான் கேட்டேன், " அதென்ன கல்யாணம் வரைக்கும் கார் ஓட்டுவது? தங்கச்சி கல்யாணத்துக்கப்புறமும் உங்கள் வாழ்க்கையை நீங்கள் பார்க்க வேண்டாமா?" என்று.

அவர் பதிலில்
" அம்மா, நான் காசிமேட்டுக்காரம்மா. மீன் பிடிப்பது தான் என் தொழில். படகோட்டுவது மட்டும் தானம்மா வாழ்க்கை, கனவு. சின்ன வ‌யசிலேயே பன்னிரெண்டு வயசிலேயே அப்பாவும் அம்மாவும் இறந்திட்டாங்க. தங்கச்சி சின்ன குழந்தை. ஒரு சொந்தக்காரன் கூட உதவிக்கு வரவில்லை. அக்கம் பக்கத்துக்காரங்க உதவினாங்க. என் தங்கச்சியை வளர்த்தேன். ஒரு சொந்தக்காரன் கிட்டக்கூட நான் உதவின்னு போய் நிக்கலை. மீன் பிடிச்சுத்தான் வளர்த்தேன். பணம் பத்தலை. அப்பப்போ விஜய், விக்ரம் படங்களில் வேஷம் கட்டுறேன். அப்புறம் இந்தக்காரைப் புடிச்சேன். எப்போ தங்கச்சி கல்யாணம் முடியுதோ, அதற்கப்புறம் நான் படகிலெ ஏறிடுவேன்"

" வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்யலாமே? நல்ல பணம் கிடைக்கும். சீக்கிரம் தங்கச்சிக்கு கல்யாணம் முடிக்கலாம்"

" வெளிநாடெல்லாம் வேண்டாம்மா. எனக்கு என் குப்பம் தாம்மா வாழ்க்கை. சீக்கிரம் கடமையை முடிச்சிட்டு படகேறி கடலில் போகணும். அதாம்மா என் கனவு. தங்கச்சி கூட சொன்னது, நானும் வேலைக்குப்போய் சம்பாதித்தால் உன் கடனையெல்லாம் சீக்கிரம் முடிச்சிடலாம் அண்ணேன்னு சொன்னது. கடனையெல்லாம் முடிச்சிட்டுத்தான் கல்யாணம் என்றால் நீ ஒளவையாராகி தான் கல்யாணம் நடக்கும் என்று சொல்லிட்டேன் அம்மா."

' கவலைப்படாதே, உன் நல்ல மனசுக்கு நீ என்றைக்கும் நல்லாத்தான் இருப்பாய்' என்றேன் காரிலிருந்து இறங்கும்போது.

' எங்கேம்மா, எத்தனை சம்பாதித்தாலும் பணம் கரைந்து போகிறது. எப்படி நன்றாக இருப்பது?



கார் சென்ற பிறகும் மனம் கனத்துக்கொண்டிருந்தது கொஞ்ச நேரம் வரை.

Wednesday, 7 August 2019

ஒரு விபத்தும் சில ஆச்சரியங்களும்!

முதலில் விபத்து பற்றி எழுதுகிறேன். கம்போடியாவில் ஒரு கோவிலைப்பார்க்க ந‌டந்து கொண்டிருந்த போது அந்த தளம் சரியில்லாத பாதையில் எது தடுக்கியது என்று தெரியவில்லை, திடீரென்று ஒன்றும் புரியாமல் மின்னல் வேகத்தில் தலை குப்புற விழுந்தேன். அந்த ஒரு கணம் விழும்போதே, பிடித்துக்கொள்ள எதுவும் அருகில் இல்லாமல் நான் தவித்தது மட்டும் தான் நினைவில் உள்ளது. சற்று அருகில் நடந்து வந்து கொண்டிருந்த என் கணவரும் வழிகாட்டியும் ஓடி வந்து என்னைத்தூக்கிய போது தான் கால் பயங்கரமாக வலித்தது புரிந்தது. இடது கால் கட்டை விரல் ச‌ற்று பெயர்ந்து முழுவதுமாக வீங்க ஆரம்பித்திருந்தது. அதற்குள் கோவில் அருகே வந்து விட்டதால் நான் வெளியே அமர்ந்து கொண்டு, என் கணவரையும் வழிகாட்டியையும் கோவிலைப்பார்க்க சொல்லி அனுப்பி விட்டேன். எப்போதும் கையில் வைத்திருக்கும் மூவ் ஆயின்மெண்ட் எடுத்து தடவிக்கொண்டு, குளிர்ந்த travel wipe-ஐ எடுத்து ஒத்தடம் கொடுத்ததில் வலி சற்று குறைந்தது. மறுபடியும் காரில் ஏறி உணவுண்ண தமிழ் உணவகத்திற்குச் சென்றோம். அங்கே, உணவகத்தின் உரிமையாளரிடம் காயத்தைக்காட்டி, சிகிச்சைக்கு எங்கே போவது என்று விசாரித்தோம்.

நாங்கள் இருந்தது கம்போடியாவின் பழமையான, புராதன நகரமான சியாம் ரீப். இங்கு கம்போடிய மொழி பேசும் ம்ருத்துவர் தான் கிடைப்பார் என்றும் அது நமக்குப்புரியாது என்றும் ஆங்கிலம் பேசும் மருத்துவமனைகள் கிடையாது என்றும் கூறி முதல் உதவிக்காக ஆங்கிலம் பேசினால் புரிந்து கொள்ளக்கூடிய ஒரு பார்மஸிக்கு அனுப்பி வைத்தார். நாங்கள் மறுநாள் வியட்நாம் நாட்டின் புகழ்பெற்ற ஹோஸ்மின் சிட்டி நகருக்கு செல்வதால் அங்கு ஆங்கிலம் பேசினால் புரிந்து கொள்ளக்கூடிய மருத்துவமனைகள் இருப்பதாகவும் மேலும் தகவல்கள் சொன்னார். அவர் சொன்னபடியே, பார்மஸி சென்று முதல் உதவி பெற்றுக்கொண்டு எங்கள் ஹோட்டலுக்கு திரும்பினோம். தொலைபேசியில் பேசியபோது எங்கள் மகனும் வியட்நாமில் மருத்துவ உதவி பெறுவது தான் நல்லது என்று சொல்ல, மறுநாள் கம்போடியாவில் சக்கர நாற்காலியின் உதவியுடன் விமானம் ஏறினோம்.



அன்று மாலை ஹோஸிமின் நகரின் ஒரு பொது மருத்துவமனைக்குச் சென்றோம். விபத்து பற்றி தெளிவாகக் கேட்டறிந்த அவர்களின் கனிவு என்னை அசத்தியது. பல்லைக்கடிக்கும் ஆங்கிலத்தில் மருத்துவப்பெண்மணியும் ஊழியர்களும் பேசி விசாரித்ததும் என் அனைத்துத் தகவல்களையும் அறிந்த விதமும் எப்படி பாராட்டுவது என்று தெரியவில்லை. பின் எக்ஸ்ரே எடுக்க அந்தப்பிரிவின் தலமை மருத்துவரே வந்தார். என்னை அவரே சக்கர நாற்காலியில் அமர வைத்து அவரே தள்ளிக்கொண்டு சென்றார். விரலை பல முறை பல விதத்தில் எடுக்க வேண்டியிருந்த‌தால் ஒரு சில முறைகள் அதற்காக sorry கேட்டுக்கொண்டார். மறுபடியும் அவரே சக்கர நாற்காலியில் அமர வைத்து மருத்துவரின் அறைக்கு வெளியே விட்டுச் சென்றார்.

எக்ஸ்ரே என் விரலுக்கு எந்த வித பாதிப்புமில்லை என்று சொன்னதால்  மருத்துவர் எழுதிக்கொடுத்த மாத்திரை, மருந்துகள் கொண்ட பேப்பருடன் அங்கிருந்த பெண் ஊழியர் இன்னொரு அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றார். நாங்கள் பணத்தை கட்டியதும் எல்லா விபரங்களும் அடங்கிய ஒரு ஃபைல், மற்றும் பணம் கட்டிய ரசீது, மருத்துவரின் என்னைப்பற்றிய குறிப்பு அனைத்தும் தந்தார்கள். இதெல்லாம் கொடுத்து இன்ஷூரன்ஸ் claim பண்ணலாம் என்று அவர்கள் சொன்னதும் ஏற்ப‌ட்ட வியப்பு இலேசில் குறையவில்லை!

எக்ஸ்ரே ஒன்றுமில்லை என்றாலும் இந்த விபத்து நடந்து இன்று 8 மாதங்கள் கடந்து விட்ட போதிலும், என் இடது கால் கட்டை விரலில் இன்னும் கொஞ்சம் வலி, மரத்துப்போன தன்மை இருந்து கொண்டு தானிருக்கிறது!

எந்த நாட்டிற்கு சென்றாலும் தேவையான மருந்துகள் அடங்கிய ஒரு மெடிக்கல் கிட் எடுத்துச் செல்ல வேண்டியது மிக அவசியம். நான் எப்போதுமே உள்ளூர் சென்றாலும்கூட இந்த மெடிக்கல் கிட் எடுத்துச் செல்வதுடன் எனக்கான மாத்திரைகள் இரண்டு செட் எடுத்து செல்வேன். ஒன்று கைப்பையிலும் மற்றது பெட்டியிலும் இருக்கும். ஒன்று தொலைந்தாலும் இன்னொன்று காப்பாற்றும்! ஆனால் இந்த அனுபவத்தில் எந்த ஊர் சென்றாலும் உள்ளூரோ, வெளியூரோ, அங்கிருக்கும் இந்திய மருத்துவர்கள் லிஸ்ட், ஆங்கிலம் அறிந்த மருத்துவ மனைகள் விபரங்களும் எடுத்துச்செல்ல வேன்டும் என்பதை புரிய வைத்தது! [ சில சமயங்களில் கூகிள் உதவி கூட கிடைக்காது!]

கடந்த 4 மாதங்களாக இருமலும் தொண்டைப்புண்ணுமாக இருந்ததால் தஞ்சையில் ஒரு மருத்துவரிடம் காண்பித்துக்கொண்டதில் அவர் எக்ஸ்ரே எடுக்கச் சொன்னார். முன்பு போலில்லாமல் எக்ஸ்ரே ஃபிலிம் 10 நிமிடங்களிலேயே கிடைத்து விட்டது. மருத்துவர் பார்த்து விட்டு நுரையீரலில் சளி கொஞ்சம் தங்கியிருப்பதாகச் சொல்லி  மருந்து மாத்திரைகள் எழுதிக்கொடுத்தார். என் உறவினரான மற்றொரு டாக்டர் அந்த எக்ஸ்ரேயைப்பார்த்து விட்டு, 'எக்ஸ்ரே அவ்வளவு க்ளியராக இல்லையே' என்று சொல்லி மேலே பேசவில்லை. மறுபடியும் நான் எப்போதும் செல்லும் பெண் மருத்துவரிட்ம் காண்பித்தபோது, அவர் உடனேயே ' எக்ஸ்ரே சரியாக இல்லை. நீங்கள் 4 மாதங்களுக்குப்பின் அங்கேயே [ நான் வசித்து வரும் துபாய் நகரில் ] ஒரு எக்ஸ்ரே எடுத்து விடுங்கள்' என்றார்! எனக்கு அதிர்ச்சியில் ஒன்றும் புரியவில்லை.

ஒரு நிமிடம்  வியட்நாம் அனுபவம் மனத்திரையில் ஓடியது. இத்தனைக்கும் பல போர்களால் பாதிக்கப்பட்டு, இப்போது தான் அடி மட்டத்திலிருந்து முன்னேறி வரும் ஒரு ஏழை நாடு அது. ஊரும் மொழியும் புரியாத இடத்தில்கூட கண்கூடாகப்பார்த்த தொழில் மரியாதை நம் பிரம்மாண்டமான இந்தியாவில் இல்லையே!

Wednesday, 28 November 2018

கானல் நீர்!!!

சென்ற மாதம் நண்பர் வீட்டில் ஒரு நிகழ்வு!  மனதை மிகவும் காயப்படுத்திய நிகழ்வு. வெளி நாட்டு வாழ்க்கை பற்றி கில்லர்ஜி சில நாட்களுக்கு முன்னெழுதியிருந்தது அது போன்ற பல நிகழ்வுகளை ஞாபகப்படுத்த ஆரம்பித்தது. அதற்கு முன் இங்கு மழையிலும் சில்லென்று உறைய வைக்கும் குளிர் காற்றிலும் ஒரு நாளைக்கு பன்னிரெண்டு மணி நேரம் கடும் உழைப்பில் கரைந்து கொண்டிருக்கும் நம் மக்களைப்பற்றியும் சில வார்த்தைகள் சொல்ல வேண்டும்..

கண்ணுக்கெட்டிய தூரம் வரை கானல் நீராய் பாலைவனமாய் இருந்த இந்த நாடு கடந்த 40 வருடங்களில் மாட மாளிகையும் அழகு கோபுரங்களுமாய் தகதகக்கிறது. ஆனாலும் அன்றிலிருந்து இன்று வரை குடும்பத்தைக்காக்க, எல்லாவற்றையும் துறந்து ஆண்கள் இங்கே வேலை தேடி வருவது மட்டும் நின்றபாடில்லை. இப்போதெல்லாம் ஆண்களுக்கு இணையாக பெண்களும் தங்களின் படிப்பிற்கேற்றாற்போல வேலைக்கு வர ஆரம்பித்திருக்கிறார்கள்.
இங்கே வேலைக்கு கூலித்தொழிலாளர்கள் காலை ஐந்து மணியிலிருந்து தங்களது தொழிற்கூடங்களுக்கு அழைத்துச்செல்ல வரும் பேருந்துகளுக்காக அங்கங்கே காத்து நிற்பார்கள். அப்போதெல்லாம் எங்களின் உணவகம் அவர்களுக்காகவே காலை ஐந்து மணிக்கு திறக்கப்பட்டு சுடச்சுட இட்லியும் சாம்பார், வடையுமாய் காத்திருக்கும். ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் வடை அல்லது இட்லியைப்போட்டு அதன் மீது சாம்பாரை ஊற்றி வாங்கிச்செல்வார்கள். வெளியே வாங்கும் சாப்பாடு கட்டுபடியாகாதவர்கள் ஒருத்தருக்கொத்தர் முறை போட்டுக்கொண்டு ஒருத்தர் சமைப்பது, இன்னொருத்த‌ர் பாத்திரங்கள் கழுவுவது, இன்னொருத்தர் காய்கறிகள் அரிந்து தருவது என்று நாட்களை கடத்துவார்கள். வெள்ளிக்கிழமையானால் தாய் நாட்டுக்கு உறவுகளை அழைத்துப்பேசுவதும் அழுவதும் கலங்குவதும் எப்போதுமே நடக்கும். அப்போதெல்லாம் மொபைல் கிடையாது என்பதால் உறவுகளை தமிழ்நாட்டுக்கு அழைத்துப்பேசுவதற்கும் அத்தனை சீக்கிரம் தொட ர்பு கிடைக்காமல் தாவு தீர்ந்து விடும்.
இதில் எத்தனையோ சோகங்கள்! எத்தனையோ கண்ணீர்த்திவலைகள்!! எத்தனையோ பிரச்சினைகள்!!முதலில் குறிப்பிட்டிருந்த படி, சில நாட்களுக்கு முன் எங்கள் நண்பர் வீட்டில் ஒரு சோகம். கணவர் வெளி நாட்டில் வேலை செய்து குடும்ப‌த்தைக் காப்பாற்றிக்கொண்டு, பொருளாதார நிலையால் ஊருக்குக்கூட சில வருடங்களாகவே போகாமலிருந்தார். மனைவி எப்போதும்போல அவர் அனுப்பும் பணத்தில் சிக்க‌னமாக செல்வு செய்து கொண்டு, குழந்தைகளை படிக்க வைத்து, பாதுகாத்துக்கொண்டிருந்தார். கல்லூரியில் மேற்படிப்பு படித்துக்கொன்டிருந்த மூத்த பெண் திடீரென்று ஒரு நாள் கல்லூரியிலிருந்து வீடு திரும்பவில்லை. பதறி, அழுது, பல நண்பர்களை வைத்து தேடியதில் அந்தப்பெண் தன் மனதுக்குப்பிடித்தவனுடன் சென்று விட்டது தெரிந்தது. இவர்கள் வீடு வசதியான, கெளரவமான வீடு என்பதால், கீழ் நிலையில் இருந்த அவனுடைய குடும்பம் யோசனை செய்து பெண்ணுக்குத்தாலி கட்டி, காவல் நிலையத்துக்கும் சென்று பாதுகாப்பும் செய்து கொண்டது. ஒரே ஊர் வேறு! இவர்கள் காவல் நிலையத்திற்குச் சென்று அழுது, முறைப்படி திருமணம் செய்து கொடுத்து விடுகிறோம் என்று வீட்டுக்கு அழைத்துப்பார்த்தும் அந்தப்பெண் வர மறுத்து விட்டது. ' என்னைப்பொறுத்த வரை என் பெண் செத்து விட்டது' என்று பெண்ணின் தாயார் அழுத அழுகை நினைவை விட்டு மறைய‌ மறுக்கிறது. வெளி நாட்டில் வாழும் தந்தையோ அவளை நான் தலை முழுகி விட்டேன் என்று சொல்லி அழுகையோடு ஃபோனை வைத்து விட்டார். மூன்று நான்கு முறை அந்தப்பெண்ணின் தாயாரிடம் இங்கிருந்து கூப்பிட்டு பேசிய போதும் அவரின் குமுறலுக்கும் அழுகைக்கும் வார்த்தைகளால் என்னால் ஆறுதல் படுத்த முடியவில்லை. பெற்றோர் தன் மீது வைத்த பாசத்திற்கும் நம்பிக்கைக்கும் அருமையாக வளர்த்த பெண் கொடுத்த விலை இது!

முன்பெல்லாம், அதாவது 50 வருடங்களுக்கு முன்னால் மொபைல், தொலைபேசிகளின் அதிகப்படியான புழக்கங்கள் இல்லாத காலத்தில், ஊரில் ஏற்படும் எந்த ஒரு பிரச்சினைக்கும் உடனடியாக வெளிநாட்டிலிருந்து வீடு திரும்ப முடியாது. என் கணவரின் மூத்த சகோதரர் அரேபியாவிலும் [ அப்போதெல்லாம் அனைத்து அரபு நாடுகளும் சேர்ந்து அரேபியா என்றழைக்கப்பட்டது ] அடுத்த சகோத‌ரர் அஸ்ஸாமிலும் வேலை செய்து கொண்டிருந்த போது அவர்களின் தந்தை [ என் மாமனார் ] இறந்து போனதற்கு, அவர்களின் முகத்தினை க‌டைசியாகப் பார்க்க‌க்கூட வர முடியவில்லை. வீட்டுக்குக் கடமையாற்ற செல்ப‌வர்கள் அடிக்கடி கொடுக்கும் விலை இது!

முன்பு எங்கள் உண‌வகத்தில் மூன்று வேளையும் சாப்பிட ஒரு த‌மிழ் நண்பர் வருவார். இங்கே துறைமுகத்தில் நல்ல‌தொரு வேலையில் பல வருடங்களாக வேலை பார்த்துக்கொண்டிருந்தார். ஒரு நாள் வேலையை விட்டு விட்டு ஊரிலேயே இருந்து கொள்வதாகச் சொல்லிச் சென்றார். சில மாதங்கள் சென்ற பின் என் கணவ‌ரின் இளைய சகோதரரிடம்  'உங்கள் சகோதரரின் உண‌வகத்தில் ஏதாவது வேலை கிடைக்குமா என்று கேட்டு சொல்லுங்கள் ' என்று சொல்லியிருக்கிறார். அதன் காரணத்தையும் என் கணவரின் சகோதரரே சொன்னார். இங்கே பாலைவனத்தில் மழையிலும் வெயிலிலும் குளிரிலும் சம்பாதித்த பணத்தையெல்லாம் தன் மனைவி பெயரில் நிலமாகவும் ஆபரண‌ங்களுமாக வாங்கி சேமித்து விட்டுத்தான் அவர் ஊருக்குச் சென்றிருக்கிறார். சென்றதுமே அவரின் மனைவி ' நான் வேறு ஒருத்தரை இனி வாழ்நாள் முழுவத‌ற்குமாக சார்ந்து விட்டேன். என் பெயரில் இருக்கும் சொத்துக்கள் அனைத்தும் இனி எனக்கே சொந்தம் ' என்று சொல்லி விட, அதிர்ச்சியில் ஆழ்ந்து விட்ட அவர் மறுபடியும் சாதாரண நிலைக்குத் திரும்பவே அதிக நாட்கள் பிடித்ததாம். நாங்களும் அதிர்ச்சியில் உறைந்து போனோம்! இது மனைவி மேல் வைத்திருந்த நம்பிக்கைக்கு கணவன் கொடுத்த விலை! அதே போல ஒற்றையாய் தனிமையில் குடும்பத்தை கவனித்துக்கொண்டு கணவனுக்காக ஒரு தவம் செய்வது போல மனைவி காத்துக்கொண்டிருக்க, வெளி நாட்டில் வேறு ஒரு பெண்ணுடன் குடும்பம் நடத்திக்கொண்டிருக்கும் ஆண்களின் கதைகளும் தொடர்ந்து கொன்டு தானிருக்கிறது!

மனைவியின் அன்பு, கணவனின் அக்கறை, குழ‌ந்தையின் மழலை, பெற்றவர்களின் பாசத்தவிப்பு, குடும்பம் என்ற குதூகலம், ஆசுவாசம்  என்று இவை அத்தனையையும் புறந்தள்ளினால் தான் பொருளாதார நிலை மேம்படும் என்றால் எல்லாவற்றிலிருந்தும் விலகிப்போக வேண்டியிருக்கிறது என்பது தான் நிதர்சனம்! அதுவரை இந்த அத்தனை சந்தோஷங்களும் கானல் நீர் தான்!!