Friday 31 December 2010

இந்த நாள் இனிய நாள்!!!




இந்த அழகிய விருதுகளை அன்புடன் உவந்தளித்த அன்புச் சகோதரர் திரு.அப்துல் காதர் அவர்களுக்கு என் இதயங்கனிந்த நன்றி! இவ்விருதுகளை சகோதரிகள் ராஜி, எழுத்தாளர் வித்யா சுப்ரமணியம், சுபத்ரா இவர்களிடம் மகிழ்வுடன் பகிர்ந்து கொள்கிறேன்.


 புதிய வருடம் உலகின் அனைத்து வளங்களுடனும் சந்தோஷங்களுடனும் என் வலையுலக தோழமைகள் அனைவருக்கும் இனிதே பிறக்க என் உளமார்ந்த வாழ்த்துக்கள்!

நாளை காலை எங்களின் உணவகத்தின் கிளையை SHARJAH-AL NADHA அருகில் திறக்கவிருக்கிறோம் என்கிற இனிய செய்தியை அனைவருக்கும் மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்ளுகிறேன்.. உங்கள் அனைவரது வாழ்த்துக்கள் நிச்சயம் எங்களை வளப்படுத்தும்-மகிழ்ச்சியூட்டும்-உற்சாகப்படுத்தும்!

Tuesday 21 December 2010

வாழைத்தண்டு ரசம்

வழக்கம்போல வித்தியாசமான சமையல் குறிப்பைக் கொடுக்க எண்ணி யோசித்தபோது எனக்கு மிகவும் பாரட்டுக்களை அள்ளி வழங்கிய இந்த ' வாழைத்தண்டு ரசம்' பற்றி எழுதலாமே என்று தோன்றியது. சாதாரணமாகவே ரசம் தமிழ்நாட்டின் மதிய உணவில் இன்றியமையாத ஒன்று! மைசூர் ரசம், மிளகு ரசம், தக்காளி ரசம், புதினா ரசம், கண்டத்திப்பிலி ரசம், பருப்பு ரசம், அன்னாசி ரசம், புளி ரசம், எலுமிச்சை ரசம் என்று ரசத்திலேயே ஊறியவர்கள் நாம். சின்ன வெங்காயம், தக்காளி, எலுமிச்சை சாறு சேர்த்து செய்யப்படும் இந்த ரசம் ஒரு முழு உணவு மாதிரி. சூடான சாதம் வடித்து, இந்த ரசம் செய்தால் போதும், தொட்டுக்கொள்ள காயும் ரசத்திலேயே கிடைத்து விடுவதால் ஒரு முழு சாப்பாடு சாப்பிட்ட திருப்தியும் கிடைக்கும்!




தேவையான பொருள்கள்:

இளம் வாழைத்தண்டு- 1 அடி நீளமானது
சிறிய வெங்காயம் 1- கை
சிறிய பூண்டிதழ்கள்-10
இஞ்சி நசுக்கியது -1 ஸ்பூன்
கீறிய பச்சை மிளகாய்- 4
கறிவேப்பிலை- ஒரு கீற்று
நறுக்கிய கொத்தமல்லி -கால் கப்
வெந்தயம் -அரை ஸ்பூன்
கடுகு -அரை ஸ்பூன்
சீரகம் -அரை ஸ்பூன்
எலுமிச்சை சாறு -ஒரு எலுமிச்சம்பழத்தினுடையது
தக்காளி [பொடியாக நறுக்கியது]- 1 கப்
தேவையான உப்பு
நெய்- 1 மேசைக்கரண்டி
மஞ்சள் தூள்-அரை ஸ்பூன்
பெருங்காயப்பொடி- அரை ஸ்பூன்
எண்ணெய்- 1 மேசைக்கரண்டி
வெந்த பருப்பு- கால் கப்
செய்முறை

ஒரு வாணலியில் நெய்யையும் எண்ணையையும் ஊற்றி சூடுபடுத்தவும்.

கடுகு போட்டு அது வெடித்ததும் சீரகம், வெந்தையம் இரண்டையும் போடவும்.

அவை இலேசாக சிவக்க ஆரம்பித்ததும் வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, இஞ்சி, பெருங்காயம்,கறிவேப்பிலை, மஞ்சள் தூள் கொத்தமல்லி சேர்த்து அவை நன்கு குழையும்வரை வதக்கவும்.

6 கப் நீரை ஊற்றி உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

வாழைத்தண்டை சிறிய வில்லை வில்லைகளாய் அரிந்து கொதிக்கும் ரசத்தில் கொஞ்சம் கொஞ்சமாக சேர்க்கவும்.

சிறிது நிமிடங்களிலேயே வாழைத்தண்டு வெந்து விடும்.

பருப்பையும் அரை கப் நீரையும் சேர்த்து ஊற்றவும்.

மறுபடியும் கொதி வர ஆரம்பிக்கும்போதி இறக்கி எலுமிச்சை சாறு சேர்க்கவும்.


சூடான, சுவையான வாழைத்தண்டு ரசம் ரெடி!



Tuesday 14 December 2010

தானமும் அன்பும்.. ..

முத்துக்குவியலில் மறுபடியும் மனதை நெகிழ வைத்த சில நிகழ்வுகள்தான் முத்துக்களாய் சிதறுகின்றன!

முதலாம் முத்து.

வாழ்க்கை முழுவதும் ஆச்சரியங்கள் நம்மைப் பின்னிப் பிணைந்தே வருகின்றன. சமீபத்தில் படித்து வியந்த செய்தி இது. எத்தனை பேருக்குத் தெரிந்திருக்கும் எனத் தெரியவில்லை.

கடலூர் மாவட்டம் நெய்வேலிக்கு மிக அருகிலுள்ள வடலூரில் இருக்கிறது சத்திய தருமசாலை. ‘வாடிய பயிரைக் கண்டு வாடிய’ வள்ளலார் வாடிய வயிற்றையும் கண்டு வாடி 1867-ல் இதைத்தோற்றுவித்தார். அவர் ஏற்றிய அடுப்பு 143 வருடங்களாக அணயாது எரிந்து கொண்டிருக்கின்றது. அன்றாடம் பசித்திருப்பவர்களுக்கு அன்னதானம் செய்விக்கிறது.

காலையில் பொங்கல், மதியம் சாம்பார், கூட்டு, பொரியல் ரசத்துடன் சாப்பாடு, இரவு சாதம் என்று மூன்று வேளைகளும் பசியோடு வருபவர்களுக்கு சாப்பாடு போடுகிறார்கள். பசியோடு யார் வந்தாலும், குணம், குற்றம் பாராது, யார் என்று கேளாது, பசித்திருப்பவனின் பசி போக்கு' என்ற வள்ளலாரின் உபதேசப்படி, பசிக்கிற நேரம் மட்டுமல்லாது எந்த நேரத்தில் யார் பசி என்று வந்தாலும் அன்னதானம் செய்து பசியைப்போக்குகிறார்கள் இங்கு! தினந்தோறும் நிறைய பேர் வந்து அரிசி, மற்ற பொருள்கள் என்று தந்து செல்வதாலும் வருடத்தில் ஒவ்வொரு நாள் என்று யாராவது அன்னதானப்பொறுப்பை ஏற்றுக்கொள்வதாலும் வள்லலார் ஏற்று வைத்த ஜோதி இன்னும் அணையாமல் எரிந்து கொண்டேயிருக்கிறது. தினமும் ஆயிரம் பேருக்கு சமையல் செய்ய விறகும் கிடைப்பது ஆச்சரியம்தான். மாட்டு வண்டி ஒன்று சுற்றியிருக்கும் கிராமங்களுக்குச் செல்கிறது. வண்டியைப் பார்த்ததுமே கிராமத்தார் தங்களிடமுள்ள விறகுகளை வண்டியிலேற்றி அனுப்பி வைக்கிறார்கள். இங்கே காலடி வைத்ததுமே முதலில் எதிர்படுகிற கேள்வி ‘சாப்பிடுகிறீர்களா?’ என்பதுதான். தானத்திலே சிறந்தது என்று சொல்லப்படுகின்ற அன்னதானம் இங்கே எத்தனை உன்னதமாக நடைபெறுகிறது!

இரண்டாம் முத்து:

அனுபவப்பட்டவர் ஒருத்தர் எழுதியிருந்தார். அவர் ஒரு முறை ஐந்து நட்சத்திர ஹோட்டலில் சாப்பிடச் சென்ற போது, பலரும் பலவிதமாக சாப்பாட்டு வகைகளைச் சொல்ல, அதில் பாதிக்கும் மேல் யாருமே தொடாமல் இருந்த சாப்பாட்டு வகைகளை, இவரது தோழி பேரர் உதவியுடன் pack up செய்து, வெளியே வந்ததும் சாலையோரத்தில் அமர்ந்திருந்த ஒரு பிச்சைக்காரரிடம் கொடுத்தாராம். பெற்றுக்கொண்ட பிச்சைக்காரரின் கண்களில் கண்ணீர் மின்னியதாம். மனசுக்கு நெகிழ்வாக இருந்தது படித்தபோது. நாம் செலவு செய்ததும் வீணாகாது, மற்றவர் பசி போக்க இதுவும் ஒரு வழி!

மூன்றாம் முத்து:

மனம் மிகவும் கலங்கிப்போன சமீபத்திய செய்தி. கணவன் வெளி நாட்டில் இருக்க, மனைவி[தமிழ் நாடு] வேறு ஒருவருடன் முறையற்ற உறவு கொண்டிருக்க, புரிந்தும் புரியாத அவளது ஆறு வயதுக் குழந்தை பக்கத்து வீட்டில் அதைப்பற்றிப்பேசியதை அறிந்ததும் கோபம் கொண்ட அந்த தாய் [ தாய் என்று எழுத அருவருப்பாக உள்ளது] அடுப்பூதும் ஊதுகுழலால் சூடு வைத்தும் ஆத்திரம் அடங்காது அயர்ன் பாக்ஸை சூடு பண்ணி முதுகில் இழுத்திருக்கிறாள். குற்றுயிராகக் கிடந்த குழந்தையை மீட்டு, அந்தப் பெண்ணையும் அவள் காதலனையும் காவல்துறையினர் சிறையில் அடைத்திருக்கிறார்கள்.

இதைப்படித்தபோது மனம் துடித்து விட்டது. மலரை விட மெல்லியது குழந்தையின் மனமும் உடலும். எப்படித் துடித்திருக்கும் அது! தூக்கு தண்டனை வேண்டுமா, வேண்டாமா என்று வாதங்கள் நடந்து கொண்டு இருக்கின்றன. இந்த மாதிரி தாய்மையின் உன்னதமான அர்த்ததைக் கெடுக்கும், பிஞ்சுக்குழந்தையை சித்திரவதை செய்யும் ஒருத்தருக்கு உடனேயே அந்த மாதிரி தண்டனைதான் தரவேண்டும்.

நான்காம் முத்து:

நான் ரசித்த ‘ஓஷோ’வின் ஒரு குட்டிக்கதை:

ஒரு துறவி தன் சீடர்களிடம் ‘கோபமாக நாம் இருக்கும்போது நாம் ஏன் கத்துகிறோம்?’ என்று கேட்டாரம்.

அவரது சீடர்கள் ‘ அமைதியை இழந்து விடுவதால்தான் கத்துகிறோம்’ என்றார்களாம்.

அந்தத் துறவி, ‘கேள்வி அதல்ல. கோபமாக இருக்கும்போது நாம் கோபம் கொள்பவர் அருகிலேயே இருந்தாலும் ஏன் கத்துகிறோம்? மென்மையான குரலில் பேசினால் அவருக்குக் கேட்காதா?’ என்று கேட்டாராம். சீடர்கள் பதில் சொல்லத் தெரியாமல் விழிக்கவே துறவி மீண்டும் தொடர்ந்தாராம்.

“ ஒருவர் மீது மற்றவர் கோபப்படும்போது இருவரது இதயங்களிலும் அகங்காரம் தலை தூக்குவதால் அவர்கள் மனதளவில் தொலைதூரம் விலகிப்போய் விடுகிறார்கள். அதனால்தான் கத்திப் பேசுகிறார்கள். ஆனால் ஒருத்தரை மற்றவர் நேசிக்கும்போது அங்கே அகந்தை அற்றுப்போய் இதயங்கள் நெருங்கிப்போகின்றன. அதனால் மென்மையாகவே அவர்களால் பேச முடிகிறது. தன்னலமற்ற அன்பில் அகந்தை முழுவதுமாய்க் கரைந்து காணாமல் போகிறது”

எத்தனை சத்தியமான வார்த்தை!

Tuesday 7 December 2010

இசையுடன் கண்ணீர்!!

இந்த ஓவியம் கூட 20 வருடங்களுக்கு முன் வரைந்ததுதான். ஒரு ஹிந்திப் படத்தில் [படம் பெயர் நினைவில்லை]மறைந்த பழம்பெரும் நடிகர் மதன்பூரி வயலின் துணையுடன் பாடிக்கொண்டே இருக்கையில் கண்ணீர் முத்துக்கள் உருண்டு விழும்! அந்த சோகமும் ததும்பிய விழிகளும் வேதனை நிரம்பிய முக பாவங்களும் என்னைப்பாதித்தன. அந்தக் காட்சியை ஒரு வீடியோவில் பதிவு செய்து அதை ஸ்டில் செய்து வரைந்தேன். போஸ்டர் பெயிண்ட்ஸ் கொன்டு உருவாக்கிய ஓவியம் இது.