Monday 27 January 2014

முத்துக்குவியல்-25!!!

குறிப்பு முத்து:

சில மாதங்களுக்கு முன் படித்த குறிப்பு இது! உண்மையில் நடைமுறையில் பலன் கொடுக்குமா என்று தெரியவில்லை! ஆனாலும் கடும் வெய்யிலில் வெளியே அலைய நேரிடும்போது இந்த குறிப்பு பலன் கொடுத்தால் உடம்புக்கு நல்லது தானே? முன்னாலேயே இது போல செய்து அனுபவம் கிடைத்தவர்கள் சொல்லுங்கள்!

அந்த குறிப்பு:

வெய்யில் நேரத்தில் வெளியே போகும் முன் ஒரு வெங்காயத்தை பாக்கெட்டில் போட்டுக்கொண்டு ஒரு தம்ளர் தண்ணீர் குடித்துச் சென்றால் எவ்வளவு அனல் அடித்தாலும் பாதிக்காது!

தகவல் முத்து:மொபைல் ஃபோன் விழிப்புணர்வு:

புதிய மொபைல் வாங்கும்போது அதற்கான காரண்டி கார்ட், பில்லுடன் வாங்கவும்.
மொபைல் காணாமல் போனால் உடனே அருகில் உள்ள காவல் நிலையத்தில் IMEI எண்ணுடன் புகார் கொடுக்கவும்.
உங்கள் மொபைல் ஃபோனின் IMEI எண்னை தெரிந்து கொள்ள 83063 என்று டயல் செய்யவும்.
மொபைல் ஃபோன் காணாமல் போனால் அந்த எண்னை செயலிழக்கச்செய்ய உடனடியாக சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர் சேவை மையத்தைத் தொடர்பு கொள்ளவும்.
உங்கள் மொபைல் ஃபோனில் உள்ள ப்ளூ டூத் இணைப்பை எப்போது செயல்பாட்டில் வைக்க வேண்டாம். செல்ஃபோன் தகவல்கள் உங்களை அறியாமல் மற்ற‌ செல்ஃபோனுக்குச் செல்ல வாய்ப்புண்டு.
உங்கள் மொபைல் ஃபோனை பழுது பார்க்கக்கொடுக்கும்போது சிம் கார்டு, மெமரி கார்டுகளை அப்புறப்படுத்தி விட்டுக்கொடுக்க வேன்டும்.
IMEI எண் பொறிக்கப்படாத செல்ஃபோன்களை வாங்க வேண்டாம்.

சந்தோஷ முத்து:தஞ்சைக்கு சென்ற வாரம் வந்து சேர்ந்த போது, வழக்கம்போல குடும்ப நண்பரும் அவர் மனைவியும் வீட்டை சுத்தம் செய்திருந்ததில் வீடு பளிச்சென்றிருந்தது. இருந்தாலும் அதில் ஒரு வித்தியாசம் தெரிந்தது. யோசித்தபோது தான் எப்போதும் குளியலறையில் காணப்படும் பல்லியின் எச்சங்கள் எங்கும் காணப்படவில்லை என்பது புரிந்தது!   இரண்டு நாட்களுக்கு முன் சுத்தம் செய்து கழுவி விட்டிருந்தாலும் கூட, அந்த இரண்டு நாட்கள் இடைவெளியிலும்கூட பல்லிகள் எப்போதும் அசுத்தப்ப‌டுத்தியிருக்கும். இப்போது அந்த அசுத்தமேயில்லாமல் குளியலறை பளிச்சென்று இருப்பதைப்பார்த்ததும் சந்தோஷம் தாங்கவில்லை! காரணம், இதற்கு முன்பே முத்துக்குவியலில் எழுதியிருக்கிறேன். முட்டை ஒடுகள் சிலவற்றைக்கழுவி குளியலறையில் அங்கும் இங்குமாக வைத்து விட்டு ஷார்ஜாவிற்குச் சென்றிருந்தேன். அப்ப‌டி வைத்தால் பல்லிகள் வரவே வராது என்றும் எழுதியிருந்தேன். தோழி சொன்ன உபயம் இது! பல வருஷங்களுக்குப்பின் பல்லிகள் தொல்லையின்றி மனதுக்கு இப்போது மீகவும் சந்தோஷமாக இருக்கிறது!! நண்பரின் மனைவி அழைத்து வந்த வேலை செய்யும் பெண் முட்டை ஓடுகளைப்பார்த்து ' யாராவது மந்திரம் மாயம் செய்திருப்பார்களோ?' என்று அலறியது தனிக்கதை!!

ரசித்த குறுங்கவிதை:எப்படி  அழைப்பது?

கண்ணுக்குள்
குளிர்ச்சியாக நுழைந்து
இதயத்தில் வெப்பத்தை
பரப்பும் உன்னை
எப்ப‌டி அழைப்பது?
குளிர்ந்த சூரியன் என்றா?
சூடான நிலவு என்றா?


அசத்திய முத்து:

தமிழ்ப்பெண் புலவர் ஒவையாரின் பாடல் ஒன்றை படிக்க நேர்ந்தது. அதன் அர்த்தம் தெரிந்த போது அசந்து போனேன். வாழ்வியல் பாடங்களையும் ஆழ்ந்த அர்த்தங்களையும் உவமானங்களுடன் கவிதைகளாய்ப்புனைவதில் அவருக்கு நிகரேது?

இதோ அந்தப்பாடல்!

வான்குருவி யின்கூடு வல்லரக்குத் தொல்கறையான்
தேன்சிலம்பி யாவர்க்கும் செய்யரிதால்- யாம்பெரிதும்
வல்லோமே என்று வலிமைசொல வேண்டாங்காண்
எல்லார்க்கும் ஒவ்வொன் றெளிது.


பாடலின் கருத்து:

தூக்கணாங்குருவிக் கூடு, கறையான் புற்று, சிலந்திவலை, ஆகியவற்றை எல்லாராலும் செய்யமுடியாது. எல்லார்க்கும் ஒவ்வொன்றில் திறமை!  எனவே நானே வல்லவன் என்று தற்பெருமை கொள்ளுதல் தவறு!

Monday 13 January 2014

பொங்கல் நல்வாழ்த்துக்கள்!!

நம் தமிழ் மண்ணில் பொங்கல் கொண்டாடி யுகங்கள் ஆகி விட்டன. பாலைவனத்தில் தான் பல வருடங்களாகவே பொங்கல் என்றாகி விட்டது. பல இடங்களில் சிதறிக்கிடக்கும் உறவுகளை ஒன்று சேர்த்து சொந்த கிராமத்திற்கு வரவழைத்து பொங்கலைக் கொண்டாட  வேண்டும் என்று பல முறை நினைப்பதுடன் சரி. அதை செயலாக்க இன்னும் முடியவில்லை.

இங்கே முன்பெல்லாம் தமிழகப் பொருள்களை வாங்கவென்றே துபாய் சென்று வருவோம். இப்போதெல்லாம் ஷார்ஜாவிலேயே ' சென்னை மளிகை' என்று கடைகள் வந்து விட்டன. பண்டிகை தினங்களில் அததற்குத் தகுந்த மாதிரி பொருள்கள் வந்து விடும். மஞ்சள், பூஜை சாமான்கள், மாலைகள், வாழை இலைகள், மல்லிகைச் சரங்கள், அருமையான மதுரை குங்குமம் என்று கிடைத்து விடும். பொங்கல் சமயம் மஞ்சள்  கொத்து, இஞ்சிக்கொத்து, கரும்பு என்று வந்து விடும். விலையை மட்டும் யோசிக்கவே கூடாது. கிடைக்கிறதே என்று சந்தோஷப்பட்டுக்கொள்ள வேண்டும்.மனைவி, குழந்தைகள் என்று ஊரில் இருக்க, இங்கே தனிமையில் வாடும் நண்பர்களை மட்டும் பொங்கல் சாப்பிட அழைப்போம். எல்லோருக்கும் அலுவலம் இருக்கும். யாருக்கும் இங்கே அவ்வளவு எளிதில் விடுமுறை கிடைத்து விடாது. அதனால் அனைவருக்கும் வசதியாக, விடியற்காலையிலேயே பொங்கல் செய்து விடுவேன். விடியற்காலை 4 மணிக்கெல்லாம் குளித்து நாதஸ்வர இசைப்பின்னணியில் பொங்கல் செய்ய ஆரம்பித்தால் 7 மணிக்குள் சர்க்கரை பொங்கல், வெண் பொங்கல், பொங்கல் குழம்பு என்று முடியும்போது நண்பர்கள் எல்லாம் வர ஆரம்பித்து விடுவார்கள்.   அப்புறம் சிலர் இட்லி கேட்டார்கள் என்பதால் சூடான இட்லியும் சட்னியுடன் செய்து விருந்தளிக்க ஆரம்பித்தோம். ரொம்பவும் நெருங்கிய நண்பர் ஒரு முறை கேட்டுக்கொண்டதால் நியதிகள், மரபுகள் மீறி இஸ்லமிய, கிறிஸ்துவ நண்பர்களுக்காக உருளைக்கிழங்கு வறுவலும், கோழி வறுவலும் டைனீங் டேபிளுக்கு வந்தது. வந்தவர்கள் மன மகிழ்வுடன் பசியாறிச்செல்ல வேண்டும். அவ்வளவு தான்.

இந்த முறை பேரன் முன்னிலை வகிப்பதால் அவருக்காக நேரத்தை முதன் முதலாக மாற்றி எல்லோரையும் போல் நண்பகலில் பொங்கல் வைக்கிறோம்!!

வலையுலக அன்புள்ளங்கள் அனைவரது இல்லங்களிலும்
பொங்கும் பாலென மகிழ்ச்சி பொங்க

பொங்கல் நல்வாழ்த்துக்கள்!! 

Tuesday 7 January 2014

அழகிய அதிசயங்களும் உலக சாதனைகளும்!!!

சென்ற வாரம் புது வருடப்பிறப்பன்று இன்னொரு உலக சாதனையை முறியடித்து கின்னஸ் உலக சாதனை செய்தது துபாய். குவைத் தனது நாட்டு அரசு அமைப்பின் ஐம்பது ஆன்டுகள் நிறைவிற்காக 2012ம் ஆண்டு ஐந்து கிலோ மீட்டர் சுற்றளவிற்கு வாணவேடிக்கைகள் செய்து கின்னஸ் உலக சாதனை படைத்தது. இப்போது புது வருடப்பிறப்பன்று துபாய் தன் அழகிய அதிசயங்கள் அனைத்திலும் 99.4 கி.மீ சுற்றளவில் 4 லட்சத்து ஐம்பதாயிரம் வாணவேடிக்கைகள் நிகழ்த்திக்காட்டி கின்னஸ் சாதனை செய்து முடித்தது.

பல மாதங்களுக்கு முன்பே இந்த வாணவேடிக்கை நடப்பதாக அறிவிக்கப்பட்ட அத்தனை அதிசயங்களைச் சுற்றி அமைந்துள்ள சாதாரண ஹோட்டல்கள் முதல் ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் வரை 100 சதவிகிதம் நிறைந்து விட்டது!  நிகழ்ச்சி  தொடங்குவதற்கு சில மணித்துளிகள் முன்பே அதைச்சுற்றியிருந்த முக்கிய சாலைகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு விட்டது.

துபாய் நகரின் பிரமிக்கத்தக்க, அழகிய அதிசயங்களைப் பார்க்கலாமா?

World Islands:


இது பற்பல சிறு சிறு தீவுகள் அடங்கிய ஒரு கூட்டமே. இது துபாய் கடற்கரைக்கு 4 கிலோ மீ தொலைவில் கடலினுள் அமைந்திருக்கிறது. உலக வரைபடத்தின் தோற்றத்தில் இருக்கும் இவை ஒவ்வொன்றும் உலக நாடுகளின் பெயரிலேயே விற்கப்படுகிறது. பல கோடி செலவில் உருவாக்கப்பட்டு வரும் இந்த சிறு தீவுக்கூட்டங்கள் கொஞ்சம் கொஞ்சமாக பிரபலமாகி வருகிறது.

Palm Jumeirah:


வாண வேடிக்கைகளில் !!!

THE PALM ISLANDS என்பது பனைமர வடிவில் வில்லாக்கள் கட்டப்பட்ட பகுதி. மிகப்பெரிய செல்வந்தர்களால் மட்டுமே இந்த வில்லாக்களை வாங்க முடியும். இது Palm Jumeirah, Palm Jebel Ali and Palm Deira என்று மூன்று பிரிவாகக் கட்டப்படுகிறது. Palm Jumeirah முடிந்து விட்டது. தெற்கு ஆசியாவிலிருந்து வந்த, ஏறத்தாழ 40,000 தொழிலாளர்களைக் கொண்டு இத்தீவைக் கட்டமைத்தார்கள்.
.மற்ற இரண்டும் இன்னும் ஆயத்த வேலைகளில் இருக்கின்றன.
 

ATLANTIS, the Palm:


110 ஏக்கரில் அமைந்துள்ள, உலகப்புகழ் பெற்ற ஐந்து நட்சத்திர ரிஸார்ட் ஹோட்டல் இது. 1500 விருந்தினர் அறைகளும் 20 உணவகங்களும் மெஸபடோமியர் காலத்துக் கோவிலும் பல ஏக்கரில் அமைந்துள்ள பார்க், 65000 கடல் வாழ் உயிரினங்கள், மீன்கள் கொண்ட Aquarium மும் அடங்கிய  மிகப்பெரிய ஹோட்டல் இது.

வாண வேடிக்கைகளில் அட்லாண்டிஸ்!!
Burj Al Arab:


இது துபாயிலுள்ள ஜுமேரா கடற்கரையிலிருந்து 280 மீட்டர் தொலைவில் கடலில் அமைந்துள்ள செயற்கையான தீவு ஒன்றில் நிர்மாணிக்கப்பட்ட ஐந்து நட்சத்திர சொகுசு ஹோட்டல். அங்கிருந்து ஒரு பாலம் மூலம் கரைக்கு வருவது போல அமைக்கப்பட்டுள்ளது. உலகிலேயே ஒரு நாள் இரவிற்கு அதிக வாடகையை வசூலிக்கும் ஹோட்டலாக இது திகழ்கிறது. இதில் அமைந்துள்ள ராயல் சூட் ஒரு இரவிற்கு 48000 டாலர்கள்  வாடகை என்று பிரமிக்க வைக்கிறது!!

வாண வேடிக்கைகளில் பூர்ஜ் அல் அராப்!!!
BURJ KHALIFA [ BURJ DUBAI]:


828m, [2717 ]அடி உயரம் கொண்ட,  உலகின் உயர்ந்த சாதனைச் சின்னம் இது. இதில் 30000 வீடுகள், ஏழு நட் சத்திர ஹோட்டல்கள், மிகப்பெரிய வணிக வளாகமாகிய துபாய் மால், 30 ஏக்கரில் அமைந்துள்ள BURJ LAKE  எல்லாம் அடங்கியிருக்கிறது.
பல உலக சாதனைகளை இந்த BURF KHALIFA முறியடிக்கிறது. உலகின் மிக உயர்ந்த உணவகம், உலகில் அதிகதூரம் உயரே செல்லும் லிஃட் என்று பலவித சரித்திரங்கள் இதில் அடக்கம்.


வாண வேடிக்கைகளில் பூர்ஜ் கலீஃபா!!