Showing posts with label குறிப்பு முத்துக்கள். Show all posts
Showing posts with label குறிப்பு முத்துக்கள். Show all posts

Tuesday, 22 October 2013

இல்லத்து நிவாரணிகள்!!

நம் சமையலறையில் இருக்கும் பொருள்களைக்கொண்டும் வெளியில் கிடைக்கும் சில எளிமையானப் பொருள்களைக்கொண்டும் அன்றாடம் நமக்கு ஏற்படும் சிறு சிறு பிரச்சினைகளைத் தீர்க்க முடிகிறது. சின்னச் சின்ன சங்கடங்களை நிவர்த்தி செய்து கொள்ள முடிகின்றது. அந்த மாதிரியான சிறு சிறு வீட்டுக்குறிப்புக்கள் இதோ!



1..பலகாரம் செய்யும்போது எண்ணெய் வைக்கும் வேளையில் இஞ்சி சிறிது, சிறிது வாழைப்பட்டைத்துண்டு இவற்றை நசுக்கி எண்ணெயில் போட்டுப் பொரித்து எடுத்துப்போட்டு பிறகு பலகாரம் செய்தால் அதிக எண்ணெய் குடிக்காது. பலகாரத்திலும் எண்ணெய் வாசம் வராது.



2.  வாழைத்தண்டின் மேல் பட்டையை நீக்கி தண்ணீர் நிறைந்த மெல்லிய பிளாஸ்டிக் பை ஒன்றில் முக்கி முடிச்சிட்டு வைத்தால் 15 நாட்களானாலும் கெடாது.



3.  சீதாப்பழ விதைகளை வெய்யிலில் காய வைத்து அரிசி, பருப்பு டப்பாக்களில் போட்டால் பூச்சி, புழுக்கள் அண்டாது.

4.  மல்லியை முளைக்க வைக்க, ஒரு சமமான பலகையால் இலேசாக அழுத்தி எடுத்தால் போதும். முழுதாய்ப் போட்டால் முளைக்காது.

5.  அவசரமாக இட்லி மாவு புளிக்க மாவை ஹாட்பாக்ஸில் ஊற்றி வைக்கவும்.



6.  மோர் புளிக்காதிருக்க சிறிது வெண்ணெய் உருட்டி அதில் போட்டு வைத்தால் மோர் புளிக்காது.



7.  உபயோகித்த முட்டை ஒட்டை ஆங்காங்கே போட்டு வைத்தால் பல்லி வீட்டை விட்டு ஓடி விடும்.



8..மழைக்காலங்களில் தீப்பெட்டிகளில் ஏழெட்டு அரிசி மணிகளைப்போட்டு வைத்தால் தீக்குச்சிகள் நமுத்துப்போகாது.

9. ஒரு கைப்பிடி பொரியை பொடித்து சேர்த்தால் ரவா உப்பும மிகவும் சுவையாக இருக்கும்.

படங்கள்: கூகிளுக்கு நன்றி!!
 

Sunday, 19 May 2013

வீட்டுக்குறிப்புகள்!!!

கடுகு சிறுத்தாலும் காரம் போகாது என்பதற்கேற்ப, சின்னச் சின்ன வீட்டுக்குறிப்புகள் சில சமயங்களில் பெரிய அளவில் பலனைக்கொடுக்கிறது.

பல வருடங்களுக்கு முன், என் வலது கை ஆள்காட்டி விரலில் ஒரு பெரிய பிரச்சினை ஏற்பட்டது. ஃப்ரீஸரிலிருந்து மீனை எடுத்து சுத்தம் செய்து கொண்டிருந்த போது, பக்கவாட்டிலிருந்த பெரிய முள் ஒன்று சரேலென்று விரலினுள் நுழைந்து அடுத்த பக்கத்தில் வெளி வந்து நின்றது. வலியில் துடிதுடித்து உடனேயே மருத்துவரிடம் சென்றதில் அவர் அறுவை சிகிச்சை தான் செய்ய வேண்டும் என்றார். அடுத்த சில மணி நேரங்களிலேயே முள் முழுவதுமாக விரலினுள் சென்று விட்டதால், இன்னொரு மருத்துவரோ, ' ' குத்தி வெளியில் வந்து விழுந்திருக்கும், நீங்கள் உள்ளேயே இருப்பதாக கற்பனை செய்கிறீர்கள்’ என்றார். அடுத்த மருத்துவர் ‘அறுவை சிகிச்சை செய்தால் முள்ளும் வெண்மை, நரம்புகளும் வெண்மை என்பதால் நரம்புகள் ஏதேனும் அறுபட வாய்ப்பு இருக்கிறது என்று சொல்லி ஒரு திரவத்தை ‌ கொடுத்து அதை தினமும் தடவி வந்தால் நாளடைவில் முள் உள்ளுக்குள்ளேயே கரைந்து போய் விடும் என்றார். அந்த சமயம் ஊரிலிருந்து என் சினேகிதி ஒருத்தர் ‘சிறிது அரிசி மாவை மஞ்சள் தூள், சிறிது நல்லெண்ணெய் கலந்து பசை போல ‌காய்ச்சி பொறுத்துக்கொள்கிற சூட்டில் குத்திய இடத்தில் வைத்து ஒரு துணியால் அதன் மீது தினமும் கட்டி வந்தால் முள் வெளியே வந்து விடும்’ என்று எழுதியிருந்தார். அந்த கை வைத்தியத்தை தினமும் செய்து வர, அடுத்த நான்காம் மாதத்தொடக்கத்தில் முள்ளின் ஒரு பகுதி குத்திய பக்கத்திலிருந்தும் எட்டாம் மாதம் முள்ளின் அடுத்த பகுதி அடுத்த துவாரத்திலிருந்தும் வெளியே வந்தது. கை வைத்தியத்தின் பெருமை அப்போது முழுமையாக மனதில் பதிந்தது. அது போலவே தான் இந்த சின்னச் சின்ன குறிப்புகள் எதிர்பாராத சமயங்களில் பெரிய உதவிகளாய் கை கொடுக்கும்!!

இனி வீட்டுக்குறிப்புகள் சில!

1. பனிக்காலத்தில் தேங்காய் எண்ணெய் உறைந்து காணப்படும். இதைத்  தவிர்க்க அதனுடன் எட்டு முதல் 10 துளிகள் விளக்கெண்ணெய் சேர்த்து வைத்தால் உறையாமல் இருக்கும்.



2. வேப்பிலை போட்டு ஊற வைத்த நீரை செடிகளுக்கு ஊற்றி வந்தால் செடிகள் பூச்சி அரிப்பு எதுவும் இல்லாமல் இருக்கும்.

3. புதுப்புளி வாங்கி கொஞ்ச நாட்கள் கழித்து கருக்க ஆரம்பித்து விடும். இதை தவிர்க்க புதுப்புளி வாங்கியதும் ஒரு மண் பானையில் கொஞ்சம் புளியைப்போட்டு அதன் மீது கொஞ்சம் கல் உப்பைத்தூவி அதன் மீது மீண்டும் புளியை வைத்து மறுபடியும் உப்பைப்போட்டு இப்படியே புளி, உப்பு என்று மாறி மாறிப்போட்டு மூடி வைத்தால் அடுத்த சீசனுக்கு புளி வாங்கும் வரை கருக்காமல் இருக்கும்.



4. மாம்பூக்களை நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்துக்கொண்டு, நெருப்பிலிட்டால் அதன் புகையில் கொசுக்கள் வராது.

5. பிளாஸ்டிக் பாத்திரத்தில், சூடு இல்லாத சாம்பார், ரசம், பொரியலைப் போட்டு வைத்தால் கூட, பிளாஸ்டிக்கில் கரை ஏறும். இதைத் தவிர்க்க, பிளாஸ்டிக் பாத்திரத்தின் உள் பக்கம் முழுவதும் எண்ணெய் தடவி விட்டு, உணவு வகைகளைப் போட்டால் கரை ஏறாது.



6. தேங்காய் மூடிகள் அதிகம் சேர்ந்து விட்டால், ஒரு பாத்திரத்தில் தண்ணீரை நிரப்பி, தேங்காய் மூடிகளை அதில் மூழ்கும்படி வைத்துவிடுங்கள். தினமும் இரண்டு வேளை தண்ணீரை மாற்றினாலே 4 நாட்களானாலும் தேங்காய் கெடாமல் அப்படியே இருக்கும்.

7. சாயம் போகக்கூடிய துணிகளை புதியதாக இருக்கும்போது நேரடியாக தண்ணீரில் நனைக்கக்கூடாது. கல் உப்பு கரைத்த நீரில் சிறிது நேரம் ஊற வைத்திருந்து பிறகு வழக்கம்போல துவைத்தால் அதிகப்படியான சாயம் நீங்கி விடும். அடுத்தடுத்து துவைக்கும்போது சாயம் போகாது.
வீட்டு சுவர்களில் விரிசல் இருந்தால் வெள்ளை சிமிண்டுடன் சிறிதளவு பேக்கிங் பெளடரைக்கரைத்து ஊற்றினால் விரிசலே தெரியாதவாறு ஒட்டிக்கொள்ளும்.




8. வாழைக்காயை ஈரமில்லாத பாலித்தீன் கவரில் போட்டு இறுக்கமாகக் கட்டி ஃபிரிட்ஜில் வைத்து விட்டால் ஒரு வாரம் ஆனாலும் பழுக்காது.

9. இரவு சுண்டலுக்கு ஊறவைக்க மறந்து விட்டால் காலையில் அதை ஹாட்பாக்ஸில் போட்டு வென்னீர் ஊற்றி மூடி வைத்தால் 2 மணி நேரத்தில் நன்கு பெரிதாக ஊறி விடும்.
 

Tuesday, 27 November 2012

சமையலறை நிவாரணிகள்!!


நம் சமையலறையில் நாம் அன்றாடம் உபயோகிக்கும் சில பொருள்கள் நமக்கே தெரியாமல் பல பிரச்சினைகளுக்கு நிவாரணிகளாய் உதவிக்கொண்டிருக்கின்றன. அபப்டிப்பட்ட பொருள்கள் சிலவற்றைப்பற்றிய குறிப்புகள் இங்கே.. ..!!
1. எவர்சில்வர் காஸ் அடுப்பு, குளியலறையில் உள்ள மார்பிள் தரை, கண்ணாடி பாத்திரங்கள், கார் கண்ணாடி, பல் செட், டைனிங் டேபிள் இவற்றை சுத்தம் செய்ய வினீகர் பெரிதும் உதவுகிறது.
2. வினீகர் கலந்த நீரில் பாதங்கள் மூழ்கும் வரை அரை மணி நேரம் வைத்திருந்து பிறகு கழுவினால் கால் விரல்களிலுள்ல நகங்களில் மறைந்திருக்கும் அழுக்கு வெளியேறி, நகங்கள் சுத்தமாகின்றன.
 
3. வெற்றிலைக்கறை துணியில் பட்டால் அந்த இடத்தில் வினீகரை ஊற்றித் தேய்த்துக் கழுவினால் கறை மறைந்து விடும்.
4. அலுமினிய குக்கரின் உட்புறம் கறுப்பாக இருந்தால் சிறிது வினீகரைத் தடவி 15 நிமிடங்கள் கழித்து சிறிது நீர் ஊற்றிக் கொதிக்க விட்டால் கறை நீங்கி குக்கர் பளிச்சிடும்.
5. வினீகருடன் சாக் பவுடரைக் கலந்து பூசி வாஷ் பேசினைக் கழுவினால் கறைகள் நீங்கி வாஷ் பேசின் பளிச்சிடும்.
6. ஒரு கப் தண்ணீரில் ஒரு ஸ்பூன் வினீகர் கலந்து ஃபிரிட்ஜைத் துடைத்தால் வாடை நீங்கி, கறைகள் நீங்கி பளிச்சென்று ஆகும்.
7. குழந்தைகளின் வெண்ணிற யூனிஃபார்ம்களைத் தோய்க்கும்போது, 2 ஸ்பூன் வினீகர் கலந்த நீரில் அலசி, பிறகு நீலம் போட்டால் துணிகள் தும்பைப்பூவாய் காட்சியளிக்கும்.
8. பச்சையாக மாறி விட்ட பித்தளைப்பாத்திரங்கள் வினீகரும் உப்பும் கலந்து தடவி, ஊறவைத்து, பிறகு தேய்த்துக்கழுவினால் பளிச்சென்றாகும்.
9. சமையலறையிலுள்ள அலமாரிகளின் தட்டுக்களை வாரம் இரு முறை வினீகர் கலந்த நீரால் துடைத்து வந்தால் பூச்சித்தொல்லைகள் உங்களை அண்டாது.
 
 
10. பாத்திரங்களிலுள்ள ஸ்க்ரூ துருப்பிடித்துக் கொண்டால், வினீகரை இரண்டு சொட்டு விட்டு, சிறிது நேரம் க‌ழித்துத் திருகினால் ஸ்க்ரூவை சுலபமாக எடுக்க முடியும்!
11. ரப்பர் பாண்டுகள் ஒன்றோடொன்று ஒட்டாமல் இருக்க சிறிது முகப்பவுடரைக் கலந்து வைக்க வேண்டும்.
12. குடி தண்ணீர் ரொம்பவும் கலங்கலாக இருந்தால் ஏழெட்டு துவரம்பருப்பை அரைத்துக் கலந்து விட்டால் தண்ணீர் தெளிவாகி விடும். ஒரு குடம் தண்ணீருக்கு இந்த அளவு துவரம்பருப்பு போதும்.
 
13. துவரம்பருப்பு வேகும்போது ஒரு தேங்காய்த்துண்டை நறுக்கிப்போட்டால் துவரம்பருப்பு வெண்ணெய் போலக் குழைந்து வேகும்.
14. ஃப்ளாஸ்கில் காப்பி வைத்து அடிக்கடி உபயோகிக்கிம்போது, அதை எத்தனை கழுவினாலும் தண்ணீர் உலர்ந்த பிறகு ஒரு வாடை அப்படியே தேங்கி நிற்கும். இதை நீக்க, நியூஸ்பேப்பரை சிறு துண்டுகள் செய்து அதில் போட்டு ஃப்ளாஸ்க் நிறைய நீர் விட்டு 12 மணி நேரம் வைத்திருந்து பிறகு கழுவி வைத்தால் அந்த வாடை இருக்கவே இருக்காது.
 
 
 

Monday, 14 May 2012

சமையல் குறிப்பு முத்துக்கள்


குறிப்பு முத்துக்களில் இன்று சமையல் சார்ந்த சில முக்கிய குறிப்புக்கள் இடம் பெறுகின்றன. நாம் அன்றாடம் அதிகமாகப் புழங்கும் சமையலறையில் இது போன்ற சின்ன சின்ன குறிப்புகள் சில முக்கியமான சமயங்களில் பெரிதும் உபயோகமாக இருக்கின்றன. இனி குறிப்புகள்......  


1.     உப்பு போட்டு வைக்கும் பாத்திரத்தில், அதன் அடியில் சிறிது அரிசியைத் தூவி அதன் மேல் உப்பை போட்டு வைத்தால் உப்பில் ஈரம் கசியாது.

2.     மீனைக்கழுவும்போது 1 மேசைக்கரண்டி உப்பைச் சேர்த்து கழுவி, பிறகு ஒரு ஸ்பூன் வினீகர் சேர்த்துக் கழுவினால் மீனின் நாற்றம் இருக்காது.


3.     சீதாப்பழ விதைகளை வெயில் நன்கு காயவைத்து பருப்பு, அரிசி டப்பாக்களில் போட்டு வைத்தால் புழு பூச்சிகள் அண்டாது.



4. வீட்டில் ஈ தொல்லை அதிகமாய் இருந்தால் அங்கங்கே புதினா இலைகளை போட்டு வைத்தால் ஈக்கள் வராது.



5. முருங்கைக்காய்களை செய்தித்தாளில் சுற்றி ஃபிரிட்ஜில் வைத்தால் அதிக நாட்களுக்கு பசுமையாகவே இருக்கும்.



6. பொரித்த அப்பளங்கள் நமுத்துப் போய் விட்டால், அவற்றை வெறும் வாணலியில் சிறிது வறுத்து தேங்காய், புளி, பச்சை மிளாகாய், கறிவேப்பிலை சேர்த்து அரைத்தால் அத்தனை சுவை! சில அப்பள வகைகளில் உப்பு அதிகம் இருக்கும். அதனால் உப்பு மட்டும் குறைவாகப்போட்டு அரைக்கவும். இதே போல, நமுத்துப்போன அப்பளங்களுடன் பச்சை மிலகாய், தேங்காய்த்துருவல், துளி இஞ்சி சேர்த்து கொரகொரப்பாக அரைத்து தயிரில் சேர்ட்து கலக்கினால் சுவையான அப்பளப்பச்சடி தயார்!!



7. குழம்பிலோ குருமாவிலோ காரம் அதிகமாகி விட்டால் 1 மேசைக்கரண்டி ஓட்ஸை குழைய வேக வைத்து அதில் சேர்த்தால் காரமும் தெரியாது, சுவையும் மாறாது.



8. சின்ன வெங்காயத்தின் தோலை சுலபமாக உரிக்க, முதல் நாளே அவற்றை ஃபிரிட்ஜில் வைத்து மறு நாள் உரிக்கவும். உரிக்க சுலபமாக வரும்.

9. புளித்தண்ணீரில் கையை நனைத்து விட்டு வெண்ணெயை கையிலெடுத்தால் கையில் வெண்ணெய் ஒட்டாமல் வரும்.

10. உப்பு கலந்த வெந்நீரில் துணியை நனைத்து டைனிங் டேபிளைத் துடைத்தால் ஈக்கள் வந்து மேசையில் அமராது.

படங்கள் உதவி: கூகிள் தேடுபொறி





     




Monday, 12 September 2011

இல்லத்திற்கு பயனளிக்கும் குறிப்புகள்!

குறிப்பு முத்துக்கள் பக்கம் வந்து ரொம்ப நாட்களாகின்றன. அன்றாடம் புழங்கும் விஷயங்களில் நமக்குத் தெரியாமல் எத்தனையோ நல்லவையும் தீயவையும் கலந்து கிடக்கின்றன. அவற்றைக் கண்டறியவும் நல்லன அல்லாதவற்றை நீக்கவும் சில உபயோகமான வழிகள் இங்கே!

குறிப்பு முத்து-1

கரப்பான் பூச்சிகளைக் கொல்ல ஒரு எளிய முறை இருக்கிறது. நான் மட்டுமல்ல, நான் சொல்லி பலரும் இந்த வழியைப்பின்பற்றி வெற்றியும் அடைந்திருக்கிறார்கள்.

போரிக் பவுடர் 1 பங்கு, கோதுமை மாவு 4 பங்கு, சீனி ஒரு பங்கு எடுத்துக்கொண்டு, இவற்றுடன் பால் சேர்த்து சப்பாத்தி மாவு போல பிசைந்து கொள்ளவும். சிறு சிறு உருண்டைகள் செய்யவும். கரப்பான் பூச்சிகள் நடமாடும் இடத்தில், நிலைகளின் மேல் என்று மூன்று நான்கு உருண்டைகள் போட்டு வைக்கவும். என்ன காரணமோ தெரியவில்லை, இதைப்போட்டு வைத்த பிறகு கரப்பான் பூச்சிகள் அத்தனையும் மறைந்து விடும். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை தேவைப்பட்டால் உருண்டைகள் புதியதாய் செய்து மாற்றவும்.

பின் குறிப்பு:  குழந்தைகள் கையில் படாமல் கவனமாகப் பார்த்துக்கொள்ளவும்.

குறிப்பு முத்து-2



பல் தேய்க்கும் பிரஷ்ஷை வாரம் ஒரு முறை உப்பு கலந்த வெந்நீரில் போட்டு வைத்து எடுத்தால் பிரஷ்ஷிலுள்ள பாக்டீரியாக்கள் அழியும்.

குறிப்பு முத்து-3

ஒரு துணியை சிறிது வேப்பெண்ணெயில் தோய்த்து அலமாரி, சாமான்கள் வைக்கும் பீரோக்களை வாரம் ஒரு முறை துடைத்து வந்தால் எறும்புகள் மொய்க்காது.

குறிப்பு முத்து-4


வீட்டைக் கழுவி டெட்டால் தெளித்ததும் உடனே மின் விசிறியை இயக்ககூடாது. கிருமிகள் அழிய தரையிலுள்ல ஈரம் தானாகவே தான் காய வேண்டும்.

குறிப்பு முத்து-5

பெட்ரோல் பங்க் அருகே கைபேசியை உபயோகப்படுத்தக்கூடாது. கைபேசியிலுள்ள பாட்டரிக்கு பெட்ரோலில் தீயை உண்டாக்கும் அளவு சக்தியிருக்கிறது. அதாவது கைபேசி ‘ 5 வாட் ’ அளவு மின்சார சிக்னலை வெளிப்படுத்தக்கூடியதாம்.

குறிப்பு முத்து-6


வீட்டில் வெள்லை அடித்தாலோ அல்லது பெயிண்ட் பூசினாலோ அந்த வாசம் நிறைய நாட்களுக்குப் போகாது. இரண்டு மூன்று வெங்காயங்களை நறுக்கி வைத்து அறையின் கதவை மூடி வைத்தால் ஒரே நாளிலேயே அந்த வாசம் மறைந்து விடும்.

குறிப்பு முத்து-7

பனிக்காலத்தில் தேங்காய் எண்ணெய் உறைந்து விடும். அதைத் தவிர்க்க, தேங்காய் எண்ணெய் பாட்டிலில் சில துளிகள் விளக்கெண்னெய் விட்டு வைத்தால் தேங்காய் எண்ணெய் உறையாது.

குறிப்பு முத்து-8

கத்தி துருப்பிடித்திருந்தால் அந்தக் கத்தியை ஒரு வெங்காயத்தினுள்ளே அழுத்தி 24 மணி நேரம் வைத்திருக்கவும். அதன் பிறகு, சில தடவைகள் முன்னும் பின்னுமாக கத்தியை வெங்காயத்தினுள்ளேயே அசைத்து பின் வெளியே எடுக்கவும். துருவெல்லாம் நீங்கியிருக்கும்.

குறிப்பு முத்து-9

வெள்ளி சாமான்கள் வைத்திருக்கும் பெட்டியில் சில கற்பூர வில்லைகலைப் போட்டு வைத்தால் அவை நிறம் மாறாது.

குறிப்பு முத்து-10

காஸ் அடுப்பில் வைக்கும் வெந்நீர் சீக்கிரம் சூடாக அதனுள் ஒரு கிண்ணம் அல்லது ஒரு தம்ளரைப்போட்டு வைக்கவும்.
[ இது ஒரு மாத இதழில் படித்தது. ]



Wednesday, 17 November 2010

வீட்டுக்குறிப்புகள்

உப‌யோக‌முள்ள‌‌ வீட்டுக்குறிப்புகள் நம் அன்றாட வாழ்க்கையில் நிறைய சமயங்களில் பலன் கொடுக்கின்றன. அவற்றில் சிலவற்றை கீழே தொகுத்து எழுதியிருக்கின்றேன். யாருக்கேனும் தக்க சமயத்தில் இவை கை கொடுத்தால் மகிழ்வாக இருக்கும்!

 1. டிவி, குளிர்சாதனப்பெட்டி, ட்யூப் லைட் இவற்றை உபயோகத்திற்குப்பின் அணைத்து விட்டு மீண்டும் உடனே போடக்கூடாது. ரெஃப்ரிஜிரேட்டரில் கம்ப்ரெஸ்ஸரும், டிவியில் பிக்சர் ட்யூபும் ட்யூப் லைட்டில் பாலண்டும் பழுதாகி விடும். நிறுத்திய பின் உள்ளே மாற்றங்கள் நிகழ்ந்து பூர்த்தியாக சில நிமிடங்கள் பிடிக்கும். சில நிமிடங்கள் விட்டு மறுபடியும் போடுவது நல்லது.


2. குளிர்சாதனப்பெட்டியைத் துடைக்கும்போது பச்சைக்கற்பூரம் கலந்த நீரினால் துடைத்தால் பூச்சிகள், சிறு வன்டுகள் உள்ளே நுழையாது.



3. கறுத்துப்போன வெள்ளி சாமான்களை தாம்பூல சுண்ணாம்பு கொண்டு தேய்த்தால் பளபளவென்று ஆகி விடும்.


4. சர்க்கரை வைத்திருக்கும் பாட்டிலில் சில ஏலக்காய்களைப் போட்டு வைத்தால் எறும்புகள் சீனியை மொய்க்காது.

 5. சில வகை தண்ணீரில் துணிகள் துவைக்கும்போது துணிகள் பழுப்பாகி விடுகின்றன. இதற்கு அவற்றை சோப் பவுடரில் ஊறவைக்கும்போது 2 மேசைக்கரண்டி கல் உப்பும் சேர்த்து ஊறவைத்தால் துணிகள் பழுப்பு நிறம் நீங்கி பளிச்சென்றாகி விடும்.


6. ம‌ர‌ச்சாமான்க‌ளை பாலீஷ் செய்வ‌த‌ற்கு, முத‌லில் அவற்றை வினீகர் கலந்த நீரால் கழுவி, துடைத்து காய வைத்து பிற‌குதான் பாலீஷ் பூச வேண்டும்.

 7. மூட்டைப்பூச்சி தொந்தரவிற்கு, கட்டிலின் நான்கு கால்களிலும் சூடம் அல்லது புரசம் பூவை வைத்து கட்டி வைக்க வேண்டும். தலையணை, மெத்தை இவற்றில் கற்பூரத்தைத் தூள் செய்து தூவலாம்.


8. தோல் பொருள்க‌ளின் நிற‌ம் ம‌ங்காதிருக்க‌, அவ‌ற்றின் மீது லின்ஸிட் ஆயில் என‌ப்ப‌டும் ஆளி விதை எண்ணையைப் பூசி துடைக்க‌ வேண்டும்.
 9. ஈக்க‌ள் அதிக‌ம் உள்ள‌‌ இட‌த்தில் தூவக்காலில் நெருப்பிட்டு கிராம்புத்தூளைத் தூவினால் ஈக்கள் பறந்து விடும்.


10. மெழுகுவ‌ர்த்தி அதிக‌ வெளிச்ச்ச‌ம் த‌ர‌, அதை ஒரு பாத்திரத்தில் நிற்க வைத்து அதன் அடியில் தண்ணீர் ஊற்றி எரிய விடவும். உப்பில் புதைத்து வைத்தும் எரிய விடலாம்.












Sunday, 26 September 2010

சிறு துரும்பும் பல் குத்த உதவும்.. .. ..

இந்த முறை குறிப்பு முத்துக்களில் தினசரி வீட்டு உபயோகத்துக்கான சில நல்ல குறிப்புகள் கொடுக்கலாமென்று தோன்றியது. சிறிய விஷயங்கள்தான் என்றாலும் அவை பெரிய அளவில் சில சமயங்களில் பலன் தருகின்றன! ‘ சிறு துரும்பும் பல் குத்த உதவும்’ என்ற பழைய பழமொழியே இருக்கின்றது! சில நம் வாழ்க்கையையே புரட்டிப் போட்டு விடுகின்றன.

1. அலமாரி, பீரோ இவற்றை துடைக்கும்போது, சிறிது வேப்பெண்ணையை தொட்டு துடைத்தால் பூச்சிகள் எப்போதும் அண்டாது.

2. புதிதாக வீடு கட்டுபவர்கள் ‘ concealed wiring’ செய்யும்போது சுவற்றுக்குள் பைப்பைப் பொருத்தி, ஆண்டெனாவிலிருந்து வரும் ஒயரை இதற்குள் விட்டு தொலைக்காட்சிப்பெட்டியில் பொருத்தினால் பார்க்க அழகாக இருப்பதுடன் ஒயர்கள் சுவற்றில் வெளியில் நீளமாகத்தொங்காது. கதவு, ஜன்னல்களை மூட முடியாமல் கஷ்டப்படுவதையும் தவிர்க்கலாம்.

3. கொசுத்தொல்லைக்கு இயற்கை வைத்தியமுறையில் ஒரு மண் சட்டியில் காய்ந்த தேங்காய் நார், மாம்பூக்கள், வேப்பிலைகளைப்போட்டு எரியூட்டினால் கொசுக்கள் விட்டுக்குள் நுழையவே நுழையாது.

4. உடம்பில் எங்காவது எறும்பு கடித்தால் வலி உள்ள இடத்தில் உப்பு கலந்த நீரால் தடவினால் வலி உடனேயே நீங்கும்.

5. துணிகளில் கறை படிந்தால், கறை படிந்த இடத்தில் மட்டும் தண்ணீரால் நனைத்து, அதன் மீது ஒரு ப்ளாட்டிங் அட்டையை வைத்து அதன் மேல் இஸ்திரி செய்தால்[ iron செய்தால்] கறை நீங்கி விடும்.

6. வெள்ளைத்துணிகளுக்கு நீலம் போடும்போது, சொட்டு நீலத்துடன் சிறிது வாஷிங் சோடாவையும் கலந்து போட்டால் நீலம் திட்டு திட்டாகப் படியாது ஒரே சீராக இருக்கும்.

7. உடம்பில் ஒத்தடம் கொடுக்க Hot pack-ல் வெந்நீரை நிரப்புமுன் சிறிது கிளிசரினை ஊற்றி அதன் பின் வெந்நீரை ஊற்றினால் ரொம்ப நேரத்திற்கு வெந்நீரின் சூடு குறையாமல் இருக்கும்.

8. பற்பசையை கடைசி வரை டியூபிலிருந்து எடுக்க வேண்டுமானால், அதை வெந்நீரில் போட்டு எடுத்து அமுக்கினால் மிச்சமிருக்கும் பற்பசை எல்லாம் உடனேயே வந்து விடும்.


9. காலியான சிலிண்டரை எப்போதுமே உபயோகப்படுத்தும் சிலிண்டரின் அருகில் வைக்க வேண்டாம். காலி சிலிண்டரில் வாயு நீங்கியிருந்தாலும் திரவப்பொருள் அப்படியே உறைந்திருக்கும். எனவே விபத்து ஏற்பட்டால் இரண்டு சிலிண்டர்களும் அருகருகே இருப்பது மிகப் பெரிய ஆபத்தில் முடியும்.

10. இரும்பு ஆணிகள், ஸ்க்ரூ டிரைவர்கள் இவைகளைப் போட்டு வைத்திருக்கும் பெட்டியில் ஒரு பெரிய கற்பூர வில்லையைப் போட்டு வைத்தால் என்றுமே இந்த பொருள்கள் துருப்பிடிக்காமலிருக்கும்.

Sunday, 20 June 2010

மறுபடியும் அழகுக் குறிப்புகள்!

குறிப்பு முத்துக்களில் மறுபடியும் அழகுக் குறிப்புகளைத் தரலாமெனத் தோன்றியது. அதுவும் இந்த மாதிரி கோடை காலத்தில் தலையில் சூடு ஏறாமல் குளிர்ச்சியாக எப்போதும் வைத்துக்கொள்வதும் முடியைப்பராமரிப்பதும் மிகவும் அவசியம். அதனால் முடியை பராமரிக்கவும் பாதம், முகத்தைப் பராமரிக்கவும் சில குறிப்புகளை இங்கே தந்துள்ளேன்.


1. பேன்கள் தொல்லை நீங்க:

மருதாணிப்பூக்களை சுத்தம் செய்து தலயணை உறைக்குள் வைத்து அதன் மீது தலை வைத்துத் தூங்கினால் பேன்கள் தலைமுடியை விட்டு நீங்கி விடும்.

2. சீதாப்பழக்கொட்டைகளை 2 நாட்கள் நன்கு வெய்யிலில் காயவைத்து பொடி செய்து தேங்காயெண்ணையில் கலந்து வைத்து இரவில் தலைக்குத் தடவி காலையில் வெதுவெதுப்பான நீரில் குளிக்க வேண்டும். அவ்வாறு செய்து வந்தால் பேன்கள் தொல்லை ஒழியும்.

3. முக்கியமாகச் செய்ய வேண்டியது- பேன் தொல்லை அதிகமாக உள்ளவர்கள் அருகில் ஒரு நாள் கூட படுக்காமல் இருத்தல். தனியான சீப்பை உபயோகிக்க வேண்டும். அடிக்கடி சோப்பும் டெட்டாலும் கலந்த நீரில் இரவு முழுவதும் ஊறவைத்து கழுவ வேண்டும்.

4. பொடுகு நீங்க:

2 ஸ்பூன் வெந்தயத்தை ஊறவைத்து அரை கப் தேங்காய்ப்பால் சேர்த்து நன்கு மையாக அரைக்கவும். அதோடு 3 ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து தலைக்குத் தேய்த்து ஊறவைத்து குளித்து வந்தால் விரைவில் பொடுகு தொல்லை நீங்கும்.

5. வசம்பை நசுக்கி சிறிது நல்லெண்னையில் மெதுவான தீயில் கருக வறுத்து, பொடித்து அதைத் தேங்காய் எண்னெயில் கலந்து தடவி வர பொடுகுத் தொல்லை நீங்கும்.

6. வேப்பம்பூவையும் வெல்லத்தையும் கலந்து நல்லெண்னையில் சேர்த்துக் காய்ச்சி வடிகட்டி, அதை தலைக்குத் தேய்த்து வந்தால் பொடுகு நீங்கும்.


7. முகம் வசீகரமாக ஆக:

புதினா, எலுமிச்சை இலை இரண்டையும் ஒரு கைப்பிடி எடுத்து கொதிக்கும் வென்னீரில் போட்டு ஆவி பிடித்து வந்தால் முகம் பொலிவடைந்து வசீகரமாக மாறும். வாரம் இரு முறைகளாவது இவ்வாறு செய்ய வேண்டும்.

முகம் சிகப்பாக மாற:

8. முதல் நாள் இரவு சிறிது பாலில் 1 ஸ்பூன் கசகசாவை ஊறவைக்கவும். மறு நாள் காலை முகத்தில் தடவி காய்ந்ததும் கழுவவும். இதைத் தொடர்ந்து செய்தால் முகம் நாளடைவில் சிவக்க ஆரம்பிக்கும்.

9. காரட்டையும் தக்காளியையும் சேர்த்து அரைத்து தினமும் பூசி வந்தாலே நாளடைவில் முகம் வெளுக்க ஆரம்பிக்கும்.

10. பாளம் பாளமாக வெடிப்புடன் இருக்கும் பாதம் சரியாக:

கடைகளில் திரவ மெழுகு கிடைக்கும். அதை வாங்கி வந்து சுத்தமான மஞ்சள் தூளுடன் கலந்து வைக்கவும். தினமும் இரவில் உப்பு கலந்த சற்று சூடான நீரில் பாதங்களை 10 நிமிடங்கள் வைத்திருக்கவும். பிறகு இந்த மருந்துக் கலவையை பாதங்களில் பூசி படுக்கவும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் வெடிப்புக்கள் முழுவதுமாக நீங்கி பாதங்கள் பளபளக்கும்!

Thursday, 13 May 2010

அழகுக் குறிப்புகள்!!

இந்த தடவை குறிப்பு முத்துக்களில் ‘அழகுக் குறிப்புகளை’க் கொடுக்கலாமென்று தோன்றியது. பெண்களுக்கான குறிப்புகள் மட்டும் அல்ல இவை. ஆண்களும் இவற்றைப் பின்பற்றலாம்.


1. தலை முடி வளர:

அரை லிட்டர் நல்லெண்ணெய்யை காய்ச்சி இறக்கி அதில் ஒரு கைப்பிடி கறிவேப்பிலையைப் போட்டு மூடி வைக்கவும். இந்த எண்ணெயை அடிக்கடி தலையில் தேய்த்துக் குளித்து வரவும். தலையில் தேய்க்கு முன் இலேசாக சூடு படுத்தித் தேய்க்கவும்.

2. வளமான தலைமுடிக்கு:

தலை குளிக்கப் போகுமுன் பாதாம் எண்ணெயுடன் தேங்காய்
எண்ணெயை சம அளவில் கலந்து தலையில் தேய்த்து அரை மணி
நேரம் ஊற வைத்து தலை குளிக்கவும். இது முடி கொட்டுவதையும்
நிறுத்தும்.

3. முடி கொட்டுவது நிற்க:

ஆலிவ் எண்ணெயில் ஒரு முட்டை கலந்து தேய்த்து தலை குளித்து வரவும்.

4. கண்கள் கீழுள்ள கருவளையங்களைப் போக்க:

அரை ஸ்பூன் விளக்கெண்ணெய், அரை ஸ்பூன் தேங்காய் எண்ணெய் கலந்து குழைத்து தடவி வந்தால் விரைவில் பலன் கிடைக்கும்.

5. பாத வெடிப்பு:

தொடர்ந்து கடுகெண்ணெயைத் தடவி வந்தால் சரியாகி விடும்.

6. தலையில் ஏற்படும் வழுக்கை, சொட்டை முதலியவை நீங்க:

தாமரைஇலைகளைப் பறித்து சாறெடுத்துக்கொள்ளவும். அதற்கு
சமமான அளவு நல்லெண்ணெய் சேர்த்து காய்ச்சவும். நீர்ப்பசை நீங்கி
தைலம் மேலே மிதக்கத் தொடங்கியதும் ஆறவிட்டு பத்திரப்படுத்தவும்.
இதை தினமும் தடவி வந்தால் வழுக்கை மறைந்து முடி நன்கு வளரும்.

7. முகப்பொலிவிற்கும் அழகிற்கும் ஒரு face pack!

தேவையான பொருள்கள்:

பாசிப்பயிறு- 100 கிராம்
கஸ்தூரி மஞ்சள்- 100 கிராம்
கசகசா- 10 கிராம்
உலர்ந்த ரோஜா மொட்டு- 5 கிராம்
பூலாங்கிழங்கு- 5 கிராம்
எலுமிச்சை இலை, வேப்பிலை, துளசி இலை மூன்றும் 2 கிராம்.


மொத்தமாக அரைத்து சலித்து வைத்துக்கொள்ள வேண்டும்.
தினமும் சிறிது எடுத்து தயிரில் கலந்து முகம் கழுத்தில் தடவி வந்தால்
மாசு மருவற்ற முகம் கிடைப்பதுடன் நிறமும் நாளடைவில் சிவக்க ஆரம்பிக்கும். இதை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை யாவரும் உபயோகிக்கலாம்.

Wednesday, 31 March 2010

வீட்டு உபயோக குறிப்புகள்

நமது அன்றாட வாழ்க்கையில் சில பிரச்சினைகளை, தொந்தரவுகளை, வீட்டில் புழங்குகையில், உடல் நலக் குறைவில் மேலும் பல வகைகளிலும் சந்திக்கிறோம். சில சமயம் அவற்றை சரி செய்ய பணமும் தேவையில்லாமல் செலவு செய்கிறோம். அந்த மாதிரி நேரங்களில் நமக்குத் தெரிந்தவர்கள் யாராவது ரொம்பவும் சாதாரணமாகச் சொல்லும் ஒரு தீர்வு கூட அசந்து போகிற மாதிரி பலன் அளிக்கிறது. அந்த மாதிரி குறிப்புகளைத்தான் மற்றவர்களுக்கும் பயன்பட வேண்டும் என்ற நோக்கத்தில் இங்கே எழுத ஆரம்பித்திருக்கிறேன்.

1. கல் தோட்டில் எண்ணெய் இறங்கி விட்டால், அதை ஒரு வெள்ளைத் துணியில் குப்புற வைத்து, அந்த வெள்ளைத் துணியை ஒரு இட்லிப் பாத்திரத்தில் வைத்து 15 நிமிடங்களுக்கு ஆவியில் வைத்தால், தோட்டில் இறங்கியிருந்த எண்ணெய் முழுவதும் துணியில் இறங்கி விடும்..

2. தங்க நகைகள் அழுக்கடைந்து விட்டால் ஏதேனும் பற்பசையைத் தடவி ப்ரஷால் தேய்த்தால் அழுக்கெல்லாம் நீங்கி நகைகள் புதிதுபோல மின்னும்.
3.. பல்லிகள் அதிகம் வராமல் தடுக்க; கடுக்காயைத் தூள் செய்து பொடித்த கற்பூரத்தை சம அளவில் கலக்கவும். இதில் ஒரு தேக்கரண்டிக்கு ஒரு டம்ளர் தண்ணீர் என்ற விகிதத்தில் தேவையான அளவில் கலந்து, வீட்டைக் கழுவிய பிறகு ஆங்காங்கே ஜன்னல்கள், கதவுகள் ஓரமாகத் தெளித்தால் பல்லிகள் நடமாட்டம் வெகுவாகக் குறையும்.


4. கண்ணாடி டம்ளர்கள் ஒன்றுக்குள் ஒன்று புகுந்து எடுக்க வராவிட்டால், கீழ் டம்ளரை கொதிநீரில் வைத்து, மேலுள்ள டம்ளரில் மிகக்குளிர்ந்த நீர் ஊற்றி சிறிது நேரத்தில் மேல் டம்ளரை இழுத்தால் எளிதாக வந்துவிடும்.

5. புத்தக பீரோவில் புகையிலைத் துண்டுகளைப் போட்டு வைத்தால் பூச்சிகள் வராது.

6. தூபக்காலில் நெருப்புத் துண்டங்களைப் போட்டு அதன் மீது கிராம்புத்தூளைத் தூவவும். அந்த புகைக்கு ஈக்கள் ஓடிவிடும்.

7. உப்பு கலந்த நீரை சமையலறையில் சுவர்களோரம் தெளித்தால் எறும்புகள் வராதிருக்கும்.


8. வாஷ் பேசின் அடைத்துக்கொண்டால் அரை கப் வினீகரில் 2 ஸ்பூன் சமையல் சோடா கலந்து வாஷ் பேசினின் துவாரங்களில் ஊற்றவும்.
அரை மணி நேரம் கழித்து கொதிக்கும் வென்னீர் 1 லிட்டர் அதில் ஊற்றவும். அடைப்பு நீங்கி விடும்.

9. தேனீ அல்லது தேள் கடிக்கு: புகையிலையை ஒரு சிட்டிகை எடுத்து ஒரு சொட்டு நீரில் கலந்து கடிவாயில் வைத்து ஒரு பாண்ட் எய்டின் உதவியால் அழுத்தமாக ஒட்டவும். வலி உடனடியாக மறையும்.

10. வீட்டில் பல்லிகள் வருகை அதிகமிருந்தால் ஆங்காங்கே மயிலிறைகை போட்டு வைப்பது அவற்றின் வருகையை நிறைய குறைத்து விடும். சுவற்றின்மீது கூட அலங்காரமாக ஒட்டி வைப்பது நல்ல பலனைத் தரும்.