Wednesday 26 January 2011

அனுபவங்களே அருமையான மருந்துகள்!!!

மருத்துவக் குறிப்புகள் பொதுவாக, மற்றவர்கள் அனுபவங்கள் மூலமாகவும் பத்திரிகைகளில் வந்தவை மூலமாகவும் நம் சொந்த அனுபவங்கள் மூலமாகவும் கிடைப்பதுதான். சில அனுபவங்கள் கேள்விப்படாததாகக்கூட இருக்கும். சில அனுபவங்கள் ஆச்சரியப்படவைக்கும். ஆனால் அந்த அனுபவங்கள் யாருக்காவது பலனளிப்பவையாக இருந்தால் அதைவிட வேறென்ன சந்தோஷம் இருக்கப்போகிறது? அதே நோக்கத்தில்தான் இங்கே இரு அனுபவங்களை எழுதி இருக்கிறேன். முதலாவது எல்லோரையும் ஆச்சரியப்பட வைத்த சம்பவம். இரண்டாவது ஒருத்தர் வலியில் கிடைத்த பாடம்.

முதல் அனுபவம்:

 
முப்பது வருடங்களுக்கு முன் நான் வார, மாத இதழ்களில் ஓவியம் வரைந்து கொண்டிருந்த நேரம். தினமணி கதிர், சாவி முதலிய இதழ்களில் என் சிறுகதைகளும் வெளி வந்து கொண்டிருந்தன. முதன் முதலாக ஆனந்த விகடனுக்கு ஓவியங்கள் அல்லாது ஒரு சிறு கதையும் அனுப்பி அது உடனே பிரசுரமானதுடன் விகடனின் உதவி ஆசிரியர் திரு.பரணீதரனிடமிருந்து பாரட்டுக்கடிதமும் வந்தது. தஞ்சைக்கு, நான் கொடுத்திருந்த முகவரிக்கு தன் தஞ்சைப் பிரதிநிதியை அனுப்பி, விகடனில் ஓவியராக தொடர்ந்து பணியாற்றவும் கேட்டிருந்தார். அப்போதுதான் நான் வெளி நாட்டில் வாழ்ந்து கொண்டிருப்பதைத் தெரிவிக்க வேண்டியதாயிற்று. உடனேயே இங்குள்ள முகவரிக்கு ஒரு சிறு கதையை அவர் அனுப்பி ஓவியம் வரைந்து அனுப்புமாறு கேட்டிருந்த நேரம்.. .. ..

ஒரு நாள் காலை ஃப்ரீஸரிலிருந்து பெரிய மீனை எடுத்துப்போட்டு வெட்டிக்கொண்டிருந்தேன். எப்படி அது நேர்ந்தது எனத் தெரியவில்லை. கண் இமைக்கும் நேரத்தில் செவுள் பக்கமிருந்த ஒரு பெரிய முள் என் வலது கை ஆள்காட்டி விரலில் பாய்ந்து உள்ளே சென்று விட்டது. பொதுவாக எந்த வலியையும் அமைதியாகவேத் தாங்கும் பழக்கமுடையவள் நான். முதல் முதலாக விரலை உதறி உதறி துடிக்க ஆரம்பித்தேன்., கண்ணீரோ அருவியாய்க்கொட்டிக்கொண்டிருந்தது. தொடர்ந்து வலியால் விரல்களை உதறிக்கொண்டிருந்ததால் விரலின் இரு பக்கமும் நீட்டிக்கொண்டிருந்த முள் விரலுக்குள்ளேயே போய்விட்டது. என் கணவர் அருகில் இல்லாத நேரம் அப்போது. என் உறவினர் உதவியுடன் ஒரு மணி நேரத்தில் மருத்துவரைப்போய்ப் பார்த்தேன். அப்போது முள் குத்திய தடயமோ, வலியோ இல்லை. மருத்துவரும் முள் உள்ளே இருந்தால் வலிக்கும், நீங்கள் கற்பனை செய்து கொண்டிருக்கிறீர்கள் என்றார். நான் எவ்வளவு சொல்லியும் நம்பவில்லை.

இரண்டு நாட்களில் என் கணவர் வரவும் விரலில் வலி மீண்டும் கடுமையாக வரவும் சரியாக இருந்தது. சர்ஜன் ஒருவரிடம் சென்றோம். அவர் எக்ஸ்ரே எடுத்துப் பார்த்து விட்டு ‘ நீங்கள் சொன்னது மாதிரி முள் இருக்கிறது. ஆனால் அது இரண்டாய் உடைந்து இருக்கிறது. அறுவை சிகிச்சை செய்தால் நரம்பும் வெள்ளை, முள்ளும் வெள்ளை என்பதால் சில சமயம் நரம்பு ஏதேனும் வெட்டுப்படக்கூடிய ஆபத்து இருக்கிறது. நான் ஒரு மருந்து எழுதித் தருகிறேன். அதை சிறிது தண்ணீரில் இட்டு தினமும் இருவேளை விரலை அரை மணி நேரம் வைத்திருங்கள். நாளடைவில் வலி குறைந்து அந்த முள்ளும் உள்ளே நகர்ந்து விடும் அல்லது கரையக்கூடிய சாத்தியமும் இருக்கிறது’ என்றார். நானும் சில நாட்கள் அது போலவே செய்தும் வலி மட்டும் அதிகமாகவே இருந்தது. அந்த சமயம் ஊரிலிருந்து என் சினேகிதி ஒரு மருத்துவம் எழுதியிருந்தார். பாட்டி வைத்தியம், பழமையான வைத்தியம் அது! அதன்படி 2 கப் நீரில் 2 மேசைக்கரண்டி அரிசி ரவா, 2 ஸ்பூன் நல்லெண்ணெய், சிறிது மஞ்சள் தூள் போட்டு சுண்டக்காய்ச்சி சற்று சூடாக விரலின் மீது வைத்து கட்டுப்போட்டுக் கொண்டிருந்தேன். சரியாக 4 மாதங்கள் கழித்து குத்திய துவாரம் வழியே பாதி முள் துண்டு தோலைக்கீறிக்கொண்டு வெளியேறியது. மறுபடியும் 4 மாதங்கள் கழித்து மீதித் துண்டும் அடுத்தப் பக்க துவாரம் வழியே தோலைக் கிழித்துக்கொண்டு வெளியே வந்தது.

கற்றுக்கொண்டது:

இந்த மாதிரி முள் உள்ளே சென்றாலோ அல்லது வேறு ஏதேனும் கூர்மையான பொருள் விரலுக்குள் புகுந்தாலோ, மேற்கண்ட சிகிச்சை எடுப்பது மிகுந்த பலனளிக்கும்.

பின்குறிப்பு:

ஓவியம் வரையவும் கதை எழுதவும் மனதில் எப்போதும் கனன்று கொண்டிருந்த நெருப்பு இந்தப் போராட்டத்தில் அணைந்தே போனது.

இரண்டாவது அனுபவம்

என் நெருங்கிய உறவினருக்கு ஏற்பட்ட அனுபவம் இது. இரவில் உணவுக்குப்பின் பால் அருந்திக் கொண்டிருந்தபோது அவருக்கு திடீரென்று முதுகில் இடுப்பு விலா அருகே கடுமையான வலி ஏற்பட்டது. வலி நிதானமாக ஏற்பட்டு அதிகரிக்கவில்லை. இதென்ன வலி என்று யோசிக்கும்போதே வலி சில விநாடிகளில் மிகக்கடுமையாகத் தாக்க ஆரம்பித்தது. இதயத்தாக்குதல் போல வியர்வை வெள்ளமாக வழிய, வலி வெட்டி வெட்டி கொடுமையாக அதிர வைத்தது. அவரை உடனேயே தெரிந்த மருத்துவர் வீட்டிற்கு அழைத்துச் சென்றதும், அந்த மருத்துவர் எந்த விளக்கமும் சொல்லாமல் ஊசி போட்டு மருந்துகளை சாப்பிடச் சொல்லி இன்னும் அரை மணி நேரத்தில் இந்த வலி நிற்காவிடில் மருத்துவமனையில் அவசர சிக்கிச்சையில் சேர்க்குமாறு அறிவுறுத்தினார். வீட்டுக்கு வந்து 15 நிமிடங்களுக்குள்ளேயே அந்த வலி அவருக்குத் திடீரென்று நின்றது. உடனேயே சிறுநீர் வெண்மையாகப் பிரிந்தது. நிறைய பால் அருந்தி தூங்கிப் போனார் அவர்.

மறு நாள் மாலை அவருக்குத் திரும்பவும் அதே வலி. வியர்வை வெள்ளம். கையில் தயாராக வைத்திருந்த மாத்திரைகளைப் போட்டதும் வலி முன்போலவே உடன் நின்றது. ஆரஞ்சும் ப்ளம்ஸ் பழங்களும் நிறைய எடுத்துக்கொண்டதில் உடலில் சிறிது. தெம்பு வந்தது என் உறவினர் முதலில் சென்றது ஒரு வயிறு குடல் நிபுணரிடம்தான். பல வித சிகிச்சைகள், ஸ்கான் என்று சோதனைகள் செய்யப்பட்டதில் வலி வந்ததற்கான காரணம் புலப்படவில்லை.

யதேச்சையாக தினந்தந்தி வார இதழில் ‘ சிறுநீரகக்குழாய் அடைப்பு பற்றி விரிவாக அவர் படிக்க நேர்ந்தது. அவர் எப்படியெல்லாம் வலியின் வேதனையை அனுபவித்தாரோ, அதே வலியைப்பற்றி மிகத் தெளிவாக அதில் குறிப்பிட்டிருந்தார் ஒரு இயற்கை மருத்துவர். இந்த வலி ஏற்பட்டவர்கள் பால், ப்ளம்ஸ் பழங்கள் சாப்பிடக்கூடாது என்றும் இறைச்சி வகைளை அறவே நிறுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தது.

என் உறவினர் உடனே ஒரு சிறுநீரக சிறப்பு மருத்துவரிடம் சென்றார். அவர் பரிசோதனைகளை முடித்தபின் கேட்ட முதல் கேள்வி “ சித்த மருந்துகள் ஏதேனும் தொடர்ந்து சாப்பிட்டிருக்கிறீர்களா? ‘ என்பதுதான். என் உறவினரும் தான் தொடர்ந்து 6 மாதங்கள் வேறு ஒரு பிரச்சினைக்காகச் சாப்பிட்டதைச் சொல்ல, மருத்துவர் “ சித்த மருந்துகளில் மிகக்குறைந்த சதவிகிதம் கலக்கப்படும் தாமிரம் முதலியவை சிறுநீரகக்குழாயில் மணல்போலத் தங்கி விடுகிறது. இப்படித்தான் உங்களுக்கு அதில் அடைப்பு ஏற்பட்டிருக்கிறது.” என்றவர் தொடர்ந்து ஸ்கான் செய்து, தங்கியிருந்த பொடி போன்றவை அனைத்துமே எடுத்துக்கொண்ட மருந்துகளால் வெளியேறி விட்டதாகக் கூறி 4 மாதங்களுக்கு தொடர்ந்து மருந்துகள் எடுக்கச் சொன்னார்.

கற்றுக்கொண்டது:

1. வெளியே பயணங்கள் தொடர்ந்து செய்பவர்கள் முக்கியமாக காய்ச்சிய வெந்நீரை எப்போதும் தன்னுடன் எடுத்துச் செல்வது மிகவும் அவசியம். அப்படி முடியாவிட்டாலும் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் குடிப்பது நல்லது.

2. இந்த மாதிரி காரணங்கள் அறியாத உடல் நலப்பிரச்சினைகள் தாக்கும்போது அப்போதைக்கு மருந்துகள் தீர்வுகளானதும் சும்மா இருந்து விடாமல் தன் உடலுக்கு வந்த பிரச்சினை என்ன என்பதை கண்டறியும் முயற்சி ஒவ்வொருத்தருக்கும் இருக்க வேண்டும். அப்போதுதான் அதே பிரச்சினை மறுபடியும் தலை தூக்கும்போது சமாளிக்க இயலும்.

3. வெயில் காலங்களில் நீர்க்கடுப்பு சாதரரணமாகவே நிறைய பேருக்கு வருவதுண்டு. தண்ணீருக்கு பதில் உளுந்து ஊறவைத்த நீரை அடிக்கடி குடித்துக்கொண்டிருந்தால் இந்த பிரச்சினையிலிருந்து விடுபடலாம்.

4. உயிருக்கு அத்தியாவசியமான சில மருந்துகள் தவிர எந்த மருந்தையும் 3 மாதங்களுக்கு மேல் தொடர்வது நல்லதல்ல. மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுத் தொடரவேண்டும்.

Wednesday 19 January 2011

அனுபவ அலைகள்

சகோதரி ஆசியா தன் வலைப்பூவில் 2010 டைரியின் முக்கிய நிகழ்வுகளையும் 2011-ன் எதிர்பார்ப்புகள் பற்றியும் எழுதி, இந்த தொடர்பதிவிற்கு என்னையும் அழைத்திருந்தார். அவரின் அழைப்பிற்கிணங்க இத்தொடர் பதிவை எழுத ஆரம்பிக்கிறேன்.
2010 டைரி:

பிப்ரவரி மாதம்:

என் கணவரின் பிறந்த நாளிற்காக மைசூர் பயணத்தை என் மகன் ஏற்பாடு செய்திருந்தார். வழக்கம்போல மைசூர் அரண்மனை, பிருந்தாவன் கார்டன்ஸ் இவற்றைப்பார்த்த பிறகு, நானாகவே இரண்டு இடங்களைத் தேர்வு செய்திருந்தேன். ஒன்று மைசூரிலிருந்து 45 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள சோம்நாத்பூர் என்ற ஊரிலுள்ள ஆலயம். ஹொய்சாள அரசன் மூன்றாம் நரசிம்ஹனின் ஆட்சியில் அவனது கமாண்டரால் கி.பி.1268-ல் கட்டப்பட்ட ஆலயம்.


காவிரிக்கரை ஓரமாக அமைந்த இந்த ஊர் மிகச் சிறிய கிராமம். அமைதியான ஒரு இடத்தில் தனித்து நிற்கிறது இந்த ஆலயம். ஹொய்ஸாளர்கள் ஆட்சி செய்த காலத்தில் கட்டப்பட்ட கேசவப் பெருமாள் ஆலயம் இது. பல்லவர் காலத்து சிற்பக்கலையை நினைவூட்டும் விதமாய் பிரமிக்க வைத்தது இந்தக்கோவிலின் சிற்பங்கள். நுணுக்கமாக செதுக்கப்பட்ட அழகான சிற்பங்கள் கோவிலைச் சுற்றி எழுப்பப்பட்டிருக்கும் நட்சத்திர வடிவ பிரகாரம் முழுக்க நம்மை அசர வைக்கின்றன. ஒரு இஞ்ச் இடம்கூட இடைவெளி இல்லாமல் எங்கு பார்த்தாலும் குட்டி குட்டியாக அழகு சிற்பங்கள்தான்! கருவறைக்கு உள்ளேயும் விதானங்களிலும் ராமாயணத்திலிருந்து பல காட்சிகள் சிற்பங்களாய் உருவெடுத்து நம்மை மயக்க வைக்கின்றன.

தங்குவதற்கோ, சாப்பிடுவதற்கோ சரியான வசதிகள் இல்லாத மிகச் சிறிய கிராமம் இது. மைசூரில்தான் அதற்கான வசதிகளைச் செய்து கொள்ள வேண்டும்.

இரண்டாவதாக நாங்கள் சென்ற இடம் 'பைலாகுப்பே' என்ற உள்ளடங்கிய சிறு கிராமம். இது குடகு மாவட்டத்தில் இருக்கின்றது. மைசூரிலிருந்து கிட்டத்தட்ட 2 மணி நேர கார்ப்பயணம். உள்ளடங்கிய சாலையில் போகும்போதே பலவிதமான வாகனங்களில் திபேத்தியர்கள் தென்படுகிறார்கள்.

ரொம்ப வருடங்களுக்கு முன் இங்கு வந்து நிரந்தரமாகத் தங்கி விட்ட திபேத்தியர்கள் [refugees] கட்டிய கோவில்கள் மற்றும் அவர்கள் தங்குமிடங்கள் இருக்கின்றன. இந்தத் தங்கக் கோவிலின் வளாகத்தினுள்ளே சென்றதுமே சப்தங்கள் மலிந்த நம் தென்னிந்தியா நம் கண்முன்னே மறைந்து விடுகிறது. முற்றிலும் புதிய, அமைதியான உலகத்திற்குள் நுழைவது போன்ற ஒரு உணர்வை தவிர்க்க முடியவில்லை. காவி உடை அணிந்த புத்த சன்னியாசிகள் சுற்றிலும் அமைதியாக நடந்து கொன்டிருக்கிறார்கள். அழகிய கலை வேலைப்பாடுகளும், ஓவியங்களும் நிறைந்த நாலைந்து கோவில்கள் நம்மை வரவேற்கின்றன. 40 உயரமுள்ள, தங்கத்தினாலான புத்தர் நம்மைப் பார்த்துப் புன்னகைக்கிறார். இது போல தங்கத்தினாலான புத்தர் சிலைகள் நிறைய அங்கே இருக்கின்றன. தாய்லாந்து கோவில்களின் கட்டிடக்கலை அந்தக் கோவில்களில் மிளிர்கின்றது. சுற்றிலும் பசுமையான இலைகளும் மரங்களும் மலர்களுமாக வெளியில் சூழ்ந்திருக்கும் அந்த அமைதி மனதிலும் நுழைந்து விட்டதை உணர முடிந்தது. வெளி நாடுகளுக்குச் செல்லும்போது, எங்காவது தமிழர்களைப்பார்த்து விட்டால், அந்தப் புதிய உலகம் திடீரென சந்தோஷத்தை அதிகரித்து விடும். ஆனல், நம் இந்தியாவில், திடீரென ஒரு திபேத்திய உலகைப்பார்த்தபோது, நாம் இந்தியாவில்தான் இருக்கின்றோமா என்று சந்தேகமே தோன்றி விட்டது!

மார்ச் மாதம்:

நானும் ஒரு பதிவராக வலையுலகில் நுழைந்தேன். எத்தனை எத்தனை பேர்களுக்கு இந்த வலையுலகம் வடிகாலாயிருக்கிறது! வெளியுலகம் அறியாத, வெளியுலகில் புகழ்பெற்ற எத்தனையோ கவிஞர்கள், எழுத்தாளர்களை விடவும் சிறந்த எழுத்தாளர்களும் கவிஞர்களும் இங்கே அசத்திக்கொண்டிருக்கிறார்கள்! அடக்கி வைக்கப்பட்ட மனப்பிரவாகங்கள் வலையுலகமெங்கும் பூஞ்சிதறல்களாய் தெறித்துக்கொன்டிருக்கின்றன.

மார்ச் இறுதியில் என் மருமகள் தான் பெற்ற குழந்தையுடன் வீட்டுக்கு வந்து சேர்ந்தார். அன்றிலிருந்து எங்கள் உலகமே மாறி விட்டது! ஒவ்வொருத்தருக்கும் தான் பெற்ற குழந்தைகளை வளர்க்கும்போது, அதன் இனிமையை முழுமையாக அனுபவிக்க முடியாது வாழ்க்கைப்பிரச்சினைகள் அழுத்திக்கொண்டிருக்கும். நின்று நிதானித்து எதையும் ரசிக்க நேரமில்லாது நாட்கள் பறக்கும். ஒரு வழியாய் சுமைகள் இறங்கி நிமிர்ந்து பார்க்கையில் காலம் பல ஓடி மறைந்திருக்கும். வளர்ந்த குழந்தைகள் இறக்கை முளைத்துப் பறக்கத் துடித்துக்கொண்டிருப்பார்கள். அவர்களின் படிப்பு, கடமைகள் என்று மறுபடியும் ஓடத்துவங்கி, அனைத்தும் முடியும்போது மூப்பு தொடங்கி, மனசின் ஆரவாரங்கள் அடங்கி அசந்து அமரும்போது, சோர்ந்து போன இதயத்தில் சில்லென்று மழைத்துளிகளைத் தூவுவதும் இளந்தென்றலாய் மனதை இதமாய்த் தடவுவதும் தன் கள்ளமற்ற புன்சிரிப்பில் உலகையே மறக்க வைப்பதுவும் ஒரு பச்சிளங்குழந்தையால் அனாசயமாக செய்ய முடிகிறது!

'பால் மணக்கும் பருவத்திலே உன்னைப்போல் நானிருந்தேன்!
பட்டாடைத் தொட்டிலிலே உன்னைப்போல் படுத்திருந்தேன்!
அந் நாளை நினைக்கையிலே என் வயதும் மாறுதடா!'

என்ற கவிஞர் கண்ணதாசனின் வார்த்தைகளின் அர்த்தம் இப்போதுதான் முழுமையாகப் புரிகிறது!

டிசம்பர் மாதம்:

சென்ற வருடத்தின் இறுதியில் என்னை ஐந்து நட்சத்திர விடுதியில் தங்க வைத்து பரிசுகளை அள்ளி வழங்கி கணவரும் மகனும் மருமகளும் என் பிறந்த நாளைக் கொண்டாடினார்கள். உண்மையான அன்பையும்விட வேறு உயர்ந்த பரிசு எதுவும் உள்ளதா என்ன?

2011 எப்படி இருக்க வேன்டும்? இந்த வருடம் மட்டுமல்ல, எப்போதுமே பாரதியாரின் பாடல்போல வாழ்க்கை இருக்க வேண்டும்!

"மனதில் உறுதி வேண்டும்.
வாக்கினிலே இனிமை வேன்டும்.
நினைவு நல்லது வேண்டும்.
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்.
கனவு மெய்ப்பட வேண்டும்.
கைவசமாவது விரைவில் வேண்டும்.
தனமும் இன்பமும் வேண்டும்.
தரணியிலே பெருமை வேண்டும்.
கண் திறந்திட வேண்டும்.
காரியத்தில் உறுதி வேண்டும்.
பெண் விடுதலை வேண்டும்.
பெரிய கடவுள் காக்க வேண்டும்.
மண் பயனுற வேண்டும்.
வானகமிங்கு தென்பட வேண்டும்.
உண்மை நின்றிட வேண்டும்"

Wednesday 12 January 2011

கிராமத்துப் பொங்கல்

வழக்கம்போல பொங்கல் திருநாள் 15-1-2011 அன்று வரவிருக்கிறது. பொங்கல் என்றாலே என் புகுந்த வீட்டில் கொண்டாடிய பொங்கல் தான் என்றுமே நினைவில் எழும்.

என் புகுந்த வீடு தஞ்சை மாவட்டத்திலிருக்கும் அழகிய சிறு கிராமம். ஆற்றோரமாய் கிராமத்துக்குச் செல்லும் பாதை நீண்டு கொண்டே போகும். ஒரு பக்கம் நுங்கும் நுரையுமாக சலசலத்துச் செல்லும் ஆறும் மறுபக்கம் பசிய வயல்களும் குளுமையாக நமக்கு வரவேற்பு கூறும். பெரிய கூட்டுக்குடும்பம் என்பதால் வீட்டிலிருக்கும் நபர்கள் என்றில்லாமல் பக்கத்துத் தெருக்களிலிருந்து பார்க்க வருவோர், சாப்பிட வருவோர் என்று எப்போதும் அமர்க்களமாயிருக்கும்.

பொங்கலுக்கு சில நாட்களுக்கு முன்பேயே வீட்டில் களை கட்டி விடும். பொதுவாய் கிராமங்களில் மண் வீடுகளாயிருந்தால் புது மண் பூசி மெழுகுவது, சுண்ணாம்பு அடிப்பது என்று பொங்கலுக்கு ஒரு வாரம் இருக்கு முன்பே சுறுசுறுப்பாக வேலைகள் நடக்கும். போகி அன்று பழைய துணிகள், பழைய சாமான்கள் எல்லாம் அகற்றப்பட்டு சுத்தம் செய்யப்படும். பொங்கலுக்கென்றே அறுவடைக்கு முன்பே கொஞ்சமாக நெல்லை அறுத்து புத்தரிசி தயார் செய்வார்கள். வாழைத்தார், கரும்புக்கட்டு, மஞ்சள் கொத்துகள், புத்தம் புதிய பானைகள் எல்லாம் வீட்டில் வந்து இறங்கும். உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் கடைக்குச் சென்று பார்த்துப் பார்த்து பொங்கல் வாழ்த்து அட்டைகள் வாங்கி வந்து வீட்டிலிருக்கும் சிறு குழந்தை முதல் வயதானவர்கள் வரை கையெழுத்து வாங்கி தபாலில் அனுப்புவது ஒரு தனி சுவாரஸ்யம்.

என் மாமனார் காலத்தில் பொங்கல் பொங்குவதற்கென்றே ஆற்றங்கரைக்கு பார வண்டி ஓட்டிச் சென்று பெரிய பெரிய பாத்திரங்களில் நீர் எடுத்து வருவது வழக்கமாயிருந்தது. இதற்கென்றே அணைக்கட்டில் கொஞ்சம் தண்ணீர் திறந்து விடுவார்களாம். கிராம மக்கள் அனைவருமே குடங்களிலும் தவலைகளிலும் தண்ணீர் எடுத்து வருவார்களாம். தண்ணீர் குறைவாக இருந்தால் ஆற்று மண்ணில் ஊற்று தோண்டி அதிலிருந்து தண்ணீர் எடுத்து வந்து சேமிப்பார்களாம். மண் அடுப்பை முதல் நாளே மெழுகி கோலம் போட்டு தயாராக வைத்து விடுவார்கள். .மாக்கோலங்களை பெண்கள் வீடு நிறைய இழைத்துக் கோலமிடுவார்கள்.


எங்கள் வீட்டில் பொங்கலன்று வாசலை அடைத்து எந்தக் கோலம் போடுவது என்பதில் முதல் நாள் ஒரு பெரிய ஆராய்ச்சியே நடக்கும். ஒரு வழியாக கோலத்தைத் தேர்வு செய்து முடித்த பின், அதற்கான வண்ணங்கள் பூச பொடிகளை சேகரிப்பது, கோலத்தின் நடுவே அலங்கரிக்க பரங்கிப்பூக்கள், சாணம் சேகரிப்பது என்று சுறுசுறுப்பாக வேலைகள் நடக்கும்.

பொங்கலன்று விடியற்காலை, இந்தக்கோலங்களுடன் தான் அழகாக பொழுது விடியும். ஐந்து மணிக்கே வீட்டுப்பெண்கள் எழுந்து, வீட்டிலிருக்கும் நண்டு சிண்டுகள் கோலப்பொயும் கலர்ப்பொடிகளும் எடுத்துக்கொடுத்துக் கொண்டே இருக்க வாசலை அடைத்து வரைந்த வண்ணக்கோலங்கள் நம்மை அழகாய் வரவேற்கும்.

புத்தம்புதிய பானைகளில் கோலமிட்டு, மஞ்சள் கொத்துக்களை அவற்றின் கழுத்தில் கட்டி, பாலூற்றி அடுப்பில் ஏற்றுவார்கள். ஒரு பக்கம் சர்க்கரைப் பொங்கலும் மறு பக்கம் வெண்பொங்கலும் தயாராகும். பால் பொங்கும் போது ‘பொங்கலோ பொங்கல் “ என்று தாம்பாளத்தில் கரண்டியாலடித்துக் கூவ சுற்றிலும் சிறுவர், சிறுமியர் ஆர்வத்துடன் காத்து நிற்பார்கள். எங்கள் வீட்டில் என் மாமியார் தன் பிள்ளைகளுடன் பொங்கல் கிண்டும் காட்சி பார்க்க அத்தனை ரம்யமாக இருக்கும். வீட்டுப் பெண்களுக்கு அன்று அவ்வளவாகப் பெரிய வேலைகள் இருக்காது. முந்திரிப் பருப்பு சுத்தம் செய்வது, ஏலமும் வெல்லமும் பொடித்துத் தருவது என்று சிறு சிறு வேலைகளே இருக்கும். வாழைக்காய், சர்க்கரை வள்ளி, பரங்கி, அவரை, சிறு கிழங்கு, கத்தரி, தக்காளி எல்லாம் போட்டு ஒரு பருப்புக்குழம்பு ஒரு பக்கம் கொதித்துக்கொண்டிருக்கும். பச்சரிசியும் பாலும் தேங்காய்த்துருவலுமாய் தயாராகியிருக்கும் வெண் பொங்கல் மிகுந்து விட்டால் அதில் தண்ணீர் ஊற்றி இரவில் மூடி வைத்து விடுவார்கள். காலையில் அதில் கட்டித் தயிர் ஊற்றி பொங்கல் குழம்பைத் தொட்டுக்கொண்டு சாப்பிடுவது அத்தனை அமிர்தமாக இருக்கும்! அதெல்லாம் ஒரு வசந்த காலம்!!

மறு நாள் மாட்டுப்பொங்கல். முதல் நாளே ஊர்ப் பஞ்சாயத்தில் கூடி, சீட்டுப் போட்டுக் குலுக்கி யார் வீட்டு மாட்டிற்கு முதல் மரியாதை செய்வது என்று தீர்மானித்து விடுவார்கள். அன்று காலை, ஒவ்வொரு வீட்டிலும் மாடுகளைக் குளிப்பாட்டி, அதன் கொம்புகளை கூராக சீவி விட்டு, அதில் கொப்பி போட்டு, குஞ்சமும் சலங்கையும் வைத்துக் கட்டி, வண்ணங்களால் அழகூட்டி, நெட்டி மாலைகள் அணிவித்து, பொட்டிட்டு தயாராக வைத்திருப்பார்கள். மாட்டுத் தொழுவங்கள் எல்லாம் சுத்தம் செய்யப்பட்டு கோலமிடப்படும். மாலையில் முதல் மரியாதை கொடுக்கப்பட்ட மாடுதான் முதலில் வீட்டை விட்டுக் கிளம்ப வேண்டும். மாடுகளுக்கென்று உள்ல திடலுக்கு அது முன்னால் போய்ச் சேரும். பின்னாலேயே மற்ற மாடுகளும் வந்து சேர்ந்ததும் பூசாரி வந்து, பொட்டு வைத்து பூஜை செய்வார். தார தப்பட்டைகள் முழங்கும். பிறகு எல்லா மாடுகளையும் அவிழ்த்து விடுவார்கள். அவைகள் திமிறிக்கொண்டே நாலு கால் பாய்ச்சலில் வீட்டை நோக்கி ஓடி வர, அதன் பின்னாலேயே இளைஞர்கள் அவற்றை விரட்டிக்கொண்டே ஓடி வர, முறைப்பெண்கள் அவர்கள் மேல் மஞ்சள் தண்ணீர் விசிறியடிக்க, ஊரே கொண்டாட்டமாக இருக்கும்.

அடுத்த நாள் கன்னிப்பொங்கல். பல வகைக் கட்டு சாதங்களை மாலையில் செய்து எடுத்துக்கொண்டு பெண்கள் எல்லோரும் ஆற்றங்கரைக்குச் செல்வார்கள். கோலாட்டம், கும்மி அடிப்பது என்று விளையாடி விட்டு சாத வகைகளைச் சாப்பிட்டு வருவார்கள்.

‘அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே’ என்ற பாடல்தான் மனதில் ஏக்கமாய்  எழுகிறது!

                                        
பொங்கும் பால் போல் அனைத்து சந்தோஷங்களும் என் இனிய அன்புத் தோழமைகளான உங்கள் அனைவருக்கும் வாழ்க்கையில் பொங்கிப் பெருக என் உளமார்ந்த பொங்கல் வாழ்த்துக்கள்!!


நன்றி: www.ekarai.net





Thursday 6 January 2011

ரசனையே வாழ்க்கையாய்!

பகுதி-1


ரசனையுணர்வு என்பது நம் வாழ்க்கையினூடேயே ஒன்றிப்போன ஒரு அருமையான விஷயம். பச்சிளங்குழந்தையின் கள்ளமில்லா சிரிப்பு, அருமையான, மெய்மறக்க வைக்கும் சங்கீதம், உணர்வுகளில் நல் எண்ணங்களைப் பதிவு செய்யும், ரசனையை மேன்மேலும் அதிகரிக்கும் சிறந்த புத்தகங்கள், மழைத்தூறல் சுமக்கும் பசுஞ்செடிகள், இவையெல்லாம் அன்றாட வாழ்க்கையின் அழுத்தங்களை, சுமைகளை அப்படியே குறைக்கக் கூடிய வலிமை பெற்றவை. நம் ரசனைக்கானத் தேடுதலில்தான் வாழ்க்கையின் சுவாரஸ்யம் ஒளிந்திருக்கின்றது. சிலருக்கு தன்னை மறந்து நெக்குருகி பாடப்பிடிக்கும். சிலருக்கோ அதைக் கேட்டு விழி நீர் பெருக ரசிக்கப்பிடிக்கும். கலைகள் எல்லாமே அவை பாராட்டப்படும்போதுதான் அழகில் ஒளிர்கின்றன! நான் சமீபத்தில் ரசித்த சிலவற்றை இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

ரசித்த முத்து-1

இது நான் சமீபத்தில் மறுபடியும் கேட்டு ரசித்த பழைய திரைப்படப்பாடல். பாடலை எழுதியவரின் பெயரும் படத்தின் பெயரும் மறந்து விட்டன. பாடியவர்கள் திருச்சி லோகநாதனும் எல்.ஆர்.ஈஸ்வரியும். காதல் வயப்பட்ட இருவர் முதலில் கேள்வி பதிலாக வேடிக்கையாக, விளையாட்டாகப்பாடி, இறுதியில் அன்பில் அடங்கும் வகையில் பாடல் அருமையாக அமைந்திருக்கும். அந்தப்பாடல் இதோ!

ஆண்: ஊரார் உறங்கையிலே உற்றாரும் தூங்கையிலே

நல்ல பாம்பு வேடம் கொண்டு நான் வருவேன் சாமத்திலே!

பெண்: நல்ல பாம்பு வேடம் கொண்டு நடுச்சாமம் வந்தாயானால்

ஊர்க்குருவி வேடம் கொண்டு உயரத்தில் பறந்திடுவேன்!

ஆண்: ஊர்க்குருவி வேடம் கொண்டு உயரத்தில் பறந்தாயானால்

செம்பருந்து வேடம் கொண்டு செந்தூக்காய் தூக்கிடுவேன்!

பெண்: செம்பருந்து வேடம் கொண்டு செந்தூக்காய் தூக்க வந்தால்

பூமியைக்கீறியல்லோ புல்லாய் முளைத்திடுவேன்.

ஆண்: பூமியைக்கீறியல்லோ புல்லாய் முளைத்தாயானல்

காராம்பசு வேடம் கொண்டு கடித்திடுவேன் அந்தப்புல்லை!

பெண்: காராம்பசு நீயானால் கழுத்து மணி நானாவேன்!

ஆரா மரத்தடியில் அரளிச் செடியாவேன்!

ஆண்: ஆரா மரமுறங்க அடி மரத்தில் வண்டுறங்க

உன் மடியில் நானுறங்க என்ன தவம் செய்தேனடி!!

ரசித்த முத்து-2

குழந்தையின் பூஞ்சிரிப்பையும் அதன் மழலையும் ரசிக்கத் தெரிந்தவன் தான் உலகத்தில் சிறந்த ரசனையாளன் என்பேன் நான்! சில சமயம் குழந்தைகளின் நேர்மையான கேள்விகள் நம்மை பதிலளிக்க முடியாதபடி திணற வைக்கும். சில மாதங்களுக்கு முன் ஒரு வார இதழில் அதன் ஆசிரியர் குழந்தையைப்பற்றி

‘ குழந்தைகள் விடியற்காலையில் பெய்யும் பரிசுத்தமான பனித்துளிகள் மாதிரி! அவை பூமியில் விழுந்த பிறகு தான் மனிதர்களின் அழுக்குகளுடன் கலந்து போகின்றன” என்று எழுதியிருந்த வரிகள் எத்தனை சத்தியமானவை! நான் ரசித்த ஒரு குழந்தையின் பேச்சு இதோ!

அப்பா, அம்மா, குழந்தை மூவரும் உறவினர் விட்டுக்குச் செல்லும் வழியில் பேருந்தில் பேசிக்கொண்டே வருகிறார்கள்.

அப்பா சொல்கிறார்:

நாம் போய் விட்டுத் திரும்பி வரும்போது இருட்டி விடும். பேசாமல் அங்கேயே தங்கி விடலாமா?”

அம்மா சொல்கிறார்:

“ தங்கலாம்தான். அவர்களும் தங்கத்தான் சொல்வார்கள். ஆனால் நாம் உடனேயே ஒப்புக்கொண்டால் இதற்காகவே காத்திருந்து விழுந்தடித்துக்கொண்டு ஒப்புக்கொண்ட மாதிரி ஆகி விடும் அவர்கள் இரண்டு தடவை சொல்லட்டும். அதன் பிறகு நாம் சரியென்று சொல்லுவோம்”

இவர்கள் நினைத்த மாதிரியே தான் நடந்தது. அவர்கள் கிளம்ப முற்பட்டபோது இரவு தங்கிச் செல்லுமாறு அவர்களும் வற்புறுத்த, இவர்களும் திரும்பத் திரும்ப ‘அதெல்லாம் பரவாயில்லை’ என்று மறுக்க, பார்த்துக்கொண்டேயிருந்த குழந்தை இடையில் புகுந்து பளீரெனக் கேட்டது.

“ ஏம்மா! நீதான் அப்பாவிடம் நாம் இரண்டு தடவை வேண்டாம் என்று சொல்லுவோம். அதன் பிறகு ஒத்துக்கொள்வோம் என்று சொன்னாயே! அப்புறம் ஏன் திரும்பத் திரும்ப வேண்டாம் என்று சொல்லுகிறாய்?”

பெற்றோர் முகத்தில் அசடு வழிந்ததைப்பற்றி சொல்லவா வேண்டும்?

ரசித்த முத்து-3

பெண் என்பவளின் இளமைக்காலம் முழுவதும் ஆட்டமும் பாட்டமும் சிரிப்புமாகக் கழிந்தாலும் பெற்றோர் வீடு என்றுமே அவளுக்கு நிரந்தரமில்லாது போகிறது. புதிய நாற்றாக அவள் புகுந்த வீட்டில் நடப்படுகிறாள். செழித்து வளருகிறாள். ஆலமரமாகிறாள். இதை சங்கத்தமிழ்ப் பாட்டில் அழகாக விளக்கியிருப்பதை சமீபத்தில் ஒரு கதையில் படித்து மிகவும் ரசித்தேன்.

சீர்கெழு வெண்முத்தம் அணிபவர்க்கு அல்லதை

நீருளே பிறப்பினும், நீர்க்கு அவைதாம் என் செய்யும்?

நேருங்கால் நும்மகள் நுமக்கும் ஆங்கு அனையளே!

இதன் அர்த்தம்:

நல்ல முத்து தண்ணீரில் பிறந்தாலும் அந்தத் தண்ணீருக்கு ஒரு பயனையும் செய்யாது. அதை அணிகின்ற மனிதருக்குத்தான் அழகு சேர்க்கும். பெண்ணும் அப்படித்தான். பெற்றவர்களுக்கு அவள் என்றும் சொந்தமில்லை. போய்ச்சேரும் இடத்திற்குத்தான் சொந்தம் ஆவாள். அதன் உலகமும் ஆவாள்!

எத்தனை அழகான உதாரணம்!!