Saturday 31 December 2016

இனிய புத்தான்டு நல்வாழ்த்துக்கள்!!

வலையுலக சகோதர, சகோதரியற்கு இனிய                      புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!! 

வற்றாத அன்பும் குறைவில்லாத நன்னலமும்    மகிழ்ச்சியும் உற்சாகமும் புது மழையாய்    அனைவரது வீட்டிலும் பொழியட்டும்!! Monday 26 December 2016

உலகின் இன்னொரு அதிசயம்!!!உலகிலேயே மிகப்பெரிய, பரந்த தீம் பார்க் ஒன்றை கடந்த ஆகஸ்ட் மாதம் துபாயில் திறந்துள்ளார்கள். அது தான்

 IMG WORLDS OF ADVENTURE!!!

ஒரு நாளைக்கு 20000 பேர்கள் வருகை தந்து ரசிக்கக்கூடிய அளவிற்கு கொள்ளளவு உடைய பிரம்மாண்டமான பார்க்காக இது விளங்குகிறது. அமீரகத்தின் மிகப்பெரிய செல்வந்தர்களான கலதாரி குழுமம் இதனை பெருஞ்செலவு செய்து நிர்மாணித்திருக்கிரார்கள். இன்னும் ஐந்து வருடங்களில் இது இன்னும் மிகப்பெரிய தீம் பார்க்காக உருவெடுக்கும் என்கிறார்கள்.ஒரு லட்சத்து நாற்பதாயிரம் சதுர மீட்டர் இடத்தில் இந்த கனவுலகம் அமைந்திருக்கிறது.  

இதன் கூரை சவுண்ட் ப்ரூஃப் செய்யப்பட்டது. நிறைய இடங்கள் அங்கங்கே அமரவும் உணவகங்கள் அங்கங்கே உண்ணவும் இருக்கின்றன.

ENTRANCE!
உலக நாடுகளின் அத்தனை பேர்களும் சாப்பிடக்கூடிய வகையில் அவை அமைந்துள்ளன. சில இடங்களில் மொபைல், காமிரா அனுமதிக்கப்படுவதில்லை. அவற்றையும் உடமைகளையும் பத்திரமாக வைத்து பாதுகாக்க அங்கங்கே கட்டணத்துடன் கூடிய லாக்கர்களையும் அமைத்திருக்கிறார்கள். உள்ளே முழுவதுமாக குளிர்ப்பதனம் செய்யப்பட்டிருப்பதால் அதுவும்  சில இடங்களில் மிகவும் சில்லென்று இருப்பதால் ஸ்வெட்டர் தேவைப்படுகிறது. அங்கங்கே கேரளாவின் 'டீக்கடை' கூட சூடாக டீ குடிப்பதற்கும் சமோசா உண்பதற்கும்  இருக்கிறது!நுழைவுக்கட்டணம் 300 திர்ஹம்ஸ் [ கிட்டத்தட்ட 6000 ரூபாய்] பண்டிகை காலங்களிலும் முக்கியமான நாட்களிலும் 50 அல்லது 100 திரஹம்ஸ் நுழைவுக்கட்டணத்தில் குறைக்கிறார்கள். காலை பத்து மணிக்கு உள்ளே நுழைந்தால் இரவு ஒன்பது வரை அங்கே விளையாடிக்கொண்டிருக்கலாம்! ஒவ்வொரு விளையாட்டிற்கும் ஷோவிற்கும் சிறுவர்கள் இத்தனை அடி உயரம் இருக்க வேன்டும், இத்தனை வயதிற்கு மேற்பட்டு இருக்க வேன்டும் என்பது போல நிறைய சட்ட திட்டங்கள் எல்லாம் உண்டு!இது 4 உலகமாக பிரிக்கப்பட்டிருக்கின்றன.

முதலாவது டிஸ்னி மார்வெல் எனப்படுவது.  [ Marvel zone ]

 இதில் அமெரிக்காவில் உள்ள டிஸ்னிலான்டுடன் இணைந்து டிஸ்னி உலகமாய் பல வித விளையாட்டுக்கள், பொழுது போக்குத் திட்டங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. தெருக்கள் பழங்கால அமெரிக்க நகரத்து சாலைகள் வடிவில்! ஸ்பைடர்மேன், Incredible HULK போன்ற சாகச வீரர்களை தியேட்டரில் அமர்ந்து பார்த்து ரசிக்கலாம். அவர்கள் சாகசங்களை ரசிக்கலாம். நாங்கள் Incredible HULK ஐப் பார்க்கச் சென்றோம்.இரு வட்டங்களான சோபாவில் உட்கார்ந்ததும் சீட் பெல்ட் போட்டிருக்கிறோமா என்று செக்யூரிட்டிகள் வந்து பரிசோதித்த பிறகு ஷோ ஆரம்பிக்கிறார்கள். கும்மிருட்டில் பறந்து பறந்து 3டி ல் சண்டை போடுகிறார் Incredible HULK!! . சோஃபா அப்படியே சுற்றுகிற‌து. வட்டமடிக்கிறது. அந்த அனுபவம் பிரமிப்பாய், அசத்தலாய் மிக அருமை!

என் பேரன்!
[CARTOON NETWORK ]

அடுத்தது கார்ட்டூன் நெட்வொர்க்குடன் இணைந்து செய்திருக்கிறார்கள்.
 மிகப்பெரிய தியேட்டர், விளையாட்டுக்கள் அடங்கிய பகுதி. சிறுவர்களின் கூட்டத்தை அதிக அளவில் காணலாம் இங்கே.மூன்றாவது Lost Valley என்ற தனி உலகம். [ LOST VALLEY]

கலதாரி என்ற அரேபிய சகோதர்கள் தங்கள் கனவுலகமாக தனிப்பட்ட முறையில் இதை நிர்மாணித்திருக்கிறார்கள். பழங்கால டயனோஸர்கள் உலகமாக பல பாகங்களாக இது அமைந்திருக்கிறது.  FORBIDDEN TERRITORY என்ற இடத்திற்குள் நாங்கள் நுழைந்தோம்.மேற்புறம் திறந்த ஒரு பழங்கால வான் போன்ற அமைப்பில் நாங்கள் ஏறி அமர்ந்து ஸீட் பெல்ட் போட்ட‌தும் எதிரே கோட்டைக்கதவு போன்றதொரு கதவு திறக்க, உள்ளே நாங்கள் அமர்ந்திருந்த ஆட்டமாடிக் வாகனம் நுழைந்தது!.கும்மென்ற இருட்டில் காடு. அங்கங்கே மெல்லிய வெளிச்சம். உறுமுகின்ற, பறக்கின்ற, தாவுகின்ற, விலங்கினங்கள்! டயனோஸர்கள்! மிக அருகே ராட்சஸ சிலந்திகள்! எங்கள் வாகனம் சுற்றுகிறது, சுழல்கிறது, திடீரென்று அந்த விலங்கினங்களுக்கேற்ப முன்னே ஒரு தாவல், பின்னே ஒரு பதுங்குதல்! என் பேரன் என் கைகளை கெட்டியாகப் பிடித்துக்கொண்டார். அற்புதமான இந்தப்பயணம் விசித்திரமான காட்டில் 15 நிமிடங்கள் சுற்றி விட்டு ஏறிய இடத்திற்கு வந்து சேர்ந்தது!இது போல நிறைய உலகங்கள்!நான்காவதாக இருப்பது IMG BOULEVARD!!

இங்கே தான் டீன் ஏஜ் இளைஞர்கள் மட்டுமல்ல, பெரியவர்களின் கூட்டமும் அலை மோதுகிறது. அதற்குக் காரணம் அங்கேயுள்ள‌ The Haunted Hotel! 

இதற்குள் நுழைந்தால் அதற்குள் இருக்கும் ஆவிகள், மயிர்கூச்செரியும் பயங்கர கூக்குர‌ல்கள், தடுமாறச்செய்யும் அனுபவங்கள் காரணமாக, 'தைரியம் உள்ள‌வர்கள் மட்டுமே உள்ளே செல்ல வேண்டும். இதய நோயுள்ளவர்கள் உள்ளே செல்லுதல் கூடாது' என்று எழுதி வைத்திருக்கிறார்கள். வரிசையில் நின்று கொண்டிருந்த‌ கூட்டத்தைப்பார்த்து விட்டு சலிப்புடன் என் மகன் வெளியே வந்து விட்டார். மகனும் மகளும் பேரனுடன் வேறு பகுதியில் விளையாடச் செல்ல, நானும் என் கணவரும் ஓய்வெடுப்பதற்காக டீயும் சமோசாவும் வாங்கிக்கொண்டு அருகிலுள்ள சிறு பார்க் போன்ற பகுதியில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். திடீரென்று எங்கள் பின்னாலுள்ள கதவு திறந்தது. நடுங்கிக்கொண்டிருந்த ஒர் பெண்ணை செக்யூரிட்டி ஒருத்தரும் ஒரு பெண்ணும் கொண்டு வந்து பக்கத்து பெஞ்சில் அமர வைத்து தண்ணீர் குடிக்க வைத்தார்கள். அப்புறம் தான் தெரிந்தது அந்தப் பெண் அந்த Haunted Hotel உள்ளே சென்று பார்த்த அனுபவத்தால் பாதிக்கப்பட்டவர் என்று! ரொம்ப நேரம் நடுக்கம் குறையவேயில்லை. தெளிந்ததும் அந்தப்பெண் சின்ன சிரிப்புடன் நகர்ந்து சென்று விட்டது.
அப்புறம் இன்னொரு பெண் அதே போல்! . மூன்றாவதாக வந்த பெண் எழுந்திருக்கவே இல்லை. அழுகையும் நடுக்கமும் மிரட்சியும் நிற்கவேயில்லை. அப்புறம் ஒரு சிறு ஆம்புலன்ஸ் கொன்டு வந்து அந்தப்பெண்ணை அனுப்பி வைத்தார்கள்!!முற்றிலும் வித்தியாசமான,  திரும்பவும் விரும்பிச் செல்லும் அனுபவமாக அமைந்தது இந்த பயணம்!!

Wednesday 14 December 2016

ஒரு சாதனை தொடர்ந்து கொண்டிருக்கிறது!!!

ஒரு சாதனை,சகாப்தம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அது போகும் வழியெங்கும் இனிமையை நம் செவிகளிலும் நிறைவை நம் மனங்களிலும் நிரப்பிக்கொண்டே சென்று கொண்டிருக்கிறது. அது தான்
 ஸ்ரீபதி பண்டிதராதையுல பாலசுப்ரமணியம் என்றறியப்படும் பின்னணி இசைப்பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் குரலிசை!

ஆந்திராவின் நெல்லூரில் பிறந்த எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களுக்கு தற்போது 70 வயது முடிந்திருக்கிறது! ஆனால் இன்னும் அவரின் இனிமையான குரலுக்கு வயதாகவில்லை. கம்பீரமும் குறையவில்லை!
பாடகர் என்பதோடு இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர், பின்னணி குரல் கொடுப்பவர் என்று பல அவதாரங்கள் அவர் எடுத்திருக்கிறார். அதிக பாட்டுக்கள் பாடியதற்காக கின்னஸ் உலக சாதனையில் இடம் பெற்றிருக்கிறார். இந்திய அரசாங்க  பத்மஸ்ரீ, பத்மபூஷன் விருதுகளும் 25 முறை ஆந்திராவின் ந்ந்தி விருதுகளும் நான்கு முறை தமிழக அரசு விருதுகளும் மூன்று முறை கர்நாடகா அரசு விருதுகளும் பெற்றவர்.

தமிழக, கர்நாடக, தெலுங்கு அரசு விருதுகள், இந்த மூன்று மாநில 'டாக்டர்' விருதுகள்,  ஆறு முறைகள் தேசீய விருதுகள் இன்னும் பல நூற்றுக்கணக்கான விருதுகளை வாங்கி இவர் குவித்திருக்கிறார். 1966ல் மரியாதை ராமண்ணா என்ற தெலுங்கு படத்தில் பாடகாரத் தொடங்கிய இவரின் இசைப்பயணம் தமிழில் பயணிக்க ஆரம்பித்தபோது எம்.ஜி.ஆரின் 'அடிமைப்பெண்' படத்தில் பாடியதன் மூலம் புகழேணியில் ஏற ஆரம்பித்தது. இதுவரை 40000 பாடல்களுக்கு மேல் பாடி கின்னஸ் சாதனை ஏற்படுத்தியுள்ள ஒரே ஆண் பாடகர். [பெண் பாடகரில் அந்த சாதனை ஏற்படுத்தியவர் லதா மங்கேஷ்கர்.] ஒரே நாளில் கன்னட இசை அமைப்பாளர் உபேந்திர குமாரிடம் 21 பாடல்கள் பதிவு செய்திருக்கிறார். இது ஒரு இசை சாதனையாக கருதப்படுகிறது. தமிழில் அதிக பட்சம் ஒரே நாளில் 19 பாடல்களை பதிவு செய்திருக்கிறார்.
சென்ற 9ந்தேதி இவரின் இசைக்கச்சேரி துபாயின் மிகப்பெரிய அரங்கொன்றில் நடைபெற்றது. இதற்கு முன்னே இவர் இங்கே பல முறைகள் இசை விருந்தளிக்க வந்திருக்கிறாரென்றாலும் இந்த முறை வந்த காரணம் வித்தியாசமானது. இசையுலகில் இவரின் பயணம் 50 வருடங்களை முடித்திருக்கிற வகையில் உலக நாடுகள் பலவற்றுக்கு இவர் சுற்றுப்பயணம் செய்து இசை விருந்து அளித்துக்கொன்டிருக்கிறார். இந்த இசை விருந்து எட்டு முப்பதுக்கு ஆரம்பித்து நள்ளிரவைத்தாண்டி சென்றது. இந்த இசைத்தேனை நானும் சுவைத்து அனுபவித்தேன். "என்னை இத்தனை ஆண்டுகள் ரசித்து இன்னும் உயிர்ப்போடு வைத்திருக்கும் என் ரசிகர்களுக்கு அவர்களைத்தேடிச் சென்று நன்றி சொல்லவே இந்தப்பயணம் "என்றார்
இவர். இணைந்து பாடிய எஸ்.பி.ஷைலஜா, சித்ரா, ஸ்வேதா மோகன், எஸ்.பி.சரண், கார்த்திக் அனைவரும் அந்த இரவு நேரத்தை மிகவும் இனிமையடையச் செய்தார்கள்! முதல் பாடல் ஆரம்பிக்கையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு எல்லோரையும் எழுந்து நின்று இரங்கல் தெரிவிக்கச் சொன்னார். ஜெயலலிதா பாடிய நான்கு பாடல்களில் மூன்று இவருடன் பாடியதாகச் சொல்லி அதில் ஒன்றை இவர் தேர்ந்தெடுத்துப் பாடி அவருக்கு முதல் வணக்கத்தைத் தெரிவித்தது எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் மீது அதிக மரியாதையைத் தோற்றுவித்தது.

இளம் வயதில் இவரின் குரலோடு தான் நிறைய பேர் பயணம் செய்திருப்பார்கள். இவரின் எந்தப்பாடல் மிக இனிமை என்ற கேள்விக்கு என்றுமே பதில் இல்லை. இருப்பினும் எனக்கு மிகவும் பிடித்த இவரது சில பாடல்களை இங்கே குறிப்பிட்டிருக்கிறேன்.Sunday 4 December 2016

குளோபல் வில்லேஜ்-2016!!!!

இந்த ஆண்டும் குளோபல் வில்லேஜ் வண்ண விளக்குகளுடனும் எழிலார்ந்த, பிரம்மாண்டமான கட்டிடங்களுடன் துபாயில்   பிரகாசிக்கத்தொடங்கி விட்டது. இது மார்ச் முடிய நடந்து கொண்டிருக்குமென்றாலும் வழக்கம்போல அதிக குளிர் வருவதற்கு முன் நாங்கள் சென்று விட்டோம். இந்த முறை அமெரிக்க அரங்கம் இல்லை. மேலும் மலேஷியா சிங்கப்பூரைக்காணோம். வழக்கம்போல ஒரு சில அரங்கங்க‌ளுக்குத்தான் செல்ல முடிந்தது. அதற்கே மூன்று மணி நேரமாகி விட்டது. மாலை 4 மணியிலிருந்து நள்ளிரவு வரை சுற்றினால் ஓரளவு சுற்றிபார்த்த திருப்தி கிட்டும்!

நுழைவுப்பகுதியில் இருக்கும் 'DOME'!!
கேரளாவின் கல்யாண் ஜுவெல்லரி தனக்கென எழுப்பியிருக்கும் பிரம்மாண்டமான அரங்கம்!ஈரான் அரங்கத்தின் உள்பகுதி!
தாய்லாந்து அரங்கத்துள்ளே நடனம்!
சிறுவர்கள் கார் ஓட்டவென்றே ஒரு பகுதி இருக்கிறது. கட்டணம் கட்டியதும் எப்படி காரை ஓட்டுவது என்று சொல்லிக்கொடுத்து அதன் பிறகே காரை ஒட்ட அனுமதிக்கிறார்கள். பத்தே நிமிடம் தான் ஒவ்வொருத்தருக்கும்! என் பேரன் தலையில் உடன்! [பனி கொட்டியதால்!]

Wednesday 23 November 2016

அந்த நாள் இனி வருமா?

சென்ற மாதம் அடுத்தடுத்து சில துக்கங்களுக்கு செல்ல வேண்டியிருந்தது. அவை எல்லாமே ஒவ்வொரு விதமாய் மனதை மிகவும் பாதித்தது. வாழ்க்கையின் அர்த்தம் நிஜமாகவே புரியாதது போல் மனம் குழம்பியது.

முதலாவது ஒரு பெரியவரின் மரணம். அவருக்கு மூன்று பிள்ளைகள். மூவரும் நல்ல நிலைமையில் இருக்கிறார்கள். அதில் இருவர் வெளி நாட்டில். இறந்தவருக்கு வயது 80க்கு மேல். அவருக்கும் அவர் மனைவிக்கும் ஒத்துப்போகவில்லை. நிறைய கருத்து வேற்றுமைகள். கடைசி வரை இருவரும் அவர் மாடியிலும் அவர் மனைவி கீழேயும் தனியே வாழ்ந்தார்கள். சாப்பாடு மட்டும் அவருக்கு மாடிக்கு தவறாமல் சென்று விடும்.  அவரின் மனைவி கடைசி மகன் வீட்டுக்குச் சென்று சில நாட்கள் தங்கியிருந்ததால் இறக்கும் தருவாயில் கூப்பிட்ட குரலுக்கு ஏனென்று கேட்க அருகில் யாருமில்லை. அலைபேசியில் மகனை அழைத்து அவர் தண்ணீர் புகட்ட அவர் உயிர் பிரிந்தது. பரிவோடு, அக்கறையோடு, உள்ளன்போடு கவனிக்க யாருமில்லாத வாழ்க்கையின் அர்த்தம் என்ன? வயது ஏற ஏற மனிதர்களுக்கு கொஞ்சம்கூட விவேகம் வராதது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. கண்ணீர் விட்டு அழும் நெருங்கிய உற‌வுகளைப்பார்த்தபோது இன்னுமே ஆச்சரியமாக இருந்தது.
அடுத்தது இன்னொரு பெரியவரின் மரணம். இவரும் வயது எண்பதிற்கு மேல். ஏற்கனவே மனைவி நோயில் விழுந்து அல்லாடிக்கொண்டிருக்க, திடீரென்று இதயத்தாக்குதல் ஏற்பட்டு மருத்துவ மனையில் கொண்டு வந்து சேர்த்தார்க‌ள். இவருக்கு நான்கு பிள்ளைகளும் ஒரு பெண்ணும்! நான்கு பிள்ளைகளும் கவனிக்காத நிலையில் கணவனும் ம‌னைவியும் கடைசி வரை தனியாகவே வாழ்ந்து வந்தனர். உள்ளூரிலேயே வாழ்ந்து கொண்டிருக்கும் பெண் மட்டும் அவ்வப்போது சமைத்துப்போட்டு பார்த்துக்கொண்டார். அவரின் தம்பி மகன் தான் அவருக்குத்தேவையானதெல்லாம் பார்த்துக்கொன்டிருந்தார். இப்போது மரணத்தருவாயில் அருகில் வசிக்கும் ஒரு மகன் மட்டும் வந்து அருகிலேயே இருந்தார். தந்தையை மனைவியின் பேச்சால் கவனிக்காத, தன்னிடம் கொண்டு வந்து வைத்துக்கொள்ளாத‌ குற்ற‌ உணர்ச்சியில் அவர் கண்களிலிருந்து கண்ணீர் வடிந்து கொண்டிருந்தது. இரத்த அழுத்தம் சற்று நன்றாக அவர் பிழைக்க கொஞ்சம் வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் சொல்ல மகன் மருந்து வாங்க வெளியில் செல்ல, பெண்ணும் வேறு எதற்கோ வெளியில் சென்று விட‌, 'அவர் உயிர் சில விநாடிகளில் பிரிந்து விடும், யாராவது வந்து அவரிடம் பேசுங்கள்' என்று மருத்துவர் திடீரென்று எதிர்பாராத விதமாய் வெளியில் வந்து அழைத்தபோது அவர் பெற்ற பிள்ளைகள் அங்கு யாருமில்லை. அவரின் கடைசி விநாடிகளில் அவரின் தம்பி மகனின் கைகளைப்பிடித்தவாறே கண்ணீர் வழிய அவர் இறந்து போனார். நான்கு ஆண் பிள்ளைகளை பெற்று வளர்த்ததில் என்ன அர்த்தம்? அவரவருக்கு அவரவர் சுய நலம் தானே பெரிதாய்ப்போனது! வயதானவர்கள் வயதாக வயதாக அக்கறையையும் அன்பையும்தானே எதிர்பார்க்கிறார்கள்! நன்றிக்கடனையும் மனசாட்சியையும் மறந்து வெறும் சுமையை நினைத்து மட்டும் பயந்து போகும் இன்றைய இளைய தலைமுறையினர் ஏன் தனக்கும் ஒரு நாள் மூப்பு வருமென்பதை மறந்து போகிறார்கள்?
இன்னொரு மரணம் கொஞ்சம் வித்தியாசமானது. கணவர் இறந்த நிலையில் தன் நான்கு மகன்களிடமும் இரன்டு பெண்களிடமும் இருக்க மறுத்து தன் சொந்த ஊரில் 200 கிலோ மீட்டர் தொலைவில் கான்சரால் குடல் அறுக்கப்பட்டு சிகிச்சை செய்த நிலையில் தனியே வயலில் விவசாயம் பார்த்துக்கொண்டு வாழ்ந்த ஒரு தாயின் கதை இது! திடீரென்று அவர் இறந்து போக, பாசமான மகன் தஞ்சையிலிருந்து அடித்து பிடித்துக்கொண்டு அழுது அரற்றியவாறே சென்றதைப்பார்க்க சகிக்கவில்லை எனக்கு!

அந்தக்கால கூட்டுக்குடும்பங்கள் நினைவுக்கு வருகின்றன‌. கருத்து வேற்றுமை, பேதங்கள் என்று இருந்தாலும் ஒற்றுமை என்பது வேற்றுமையைக் கடந்து நின்றது. ஒருத்தருக்கு வலி என்றால் குடும்பத்திலுள்ள‌ அத்தனை பேரும் சூழ்ந்து நின்ற காலம் அது!பெரியவர்களுக்கு மனதாலும் உட‌லும் மரியாதை கொடுத்த அந்த நாட்கள் இனி வருமா? உடல்நலமில்லாதவரை ஒருவர் பார்த்துக்கொண்டாரென்றால் இன்னொருவர் வீட்டுப்பொறுப்புகளை கவனமாக பார்த்துக்கொள்வார். மற்றொருவர் குழந்தைகளைப்பார்த்துப் பார்த்து கவனித்துக்கொள்வார். குடும்பம் என்று இழை அறுந்து விடாமல் அன்று எல்லோரும் பார்த்துக்கொண்டார்கள். ஆனால் இன்றோ?

சுய கெளரவம் பார்ப்பதையும் வரட்டுத்தனமான பிடிவாதத்தையும் விடாமல் பிடித்துக்கொன்டு பெரியவர்கள் செய்யும் அட்டகாசத்தால் பாசமுள்ள மகன்கள் ஒரு புறம் தவிக்க, மறுபுறம் பாசமும் மனசாட்சியும் அற்றுப்போன மகன்களால் பெற்றவர்கள் பரிதவிக்க, இதற்கு எப்போது விடிவு காலம் வரும்? 

Monday 7 November 2016

முடக்கத்தான் வெங்காய தோசை!!

முடக்கத்தான் கீரையைப்பற்றி அனைவரும் அறிந்திருக்கிறோம். பொதுவாய் மூட்டுவலியை குணப்படுத்தும் தன்மை அதற்கிருக்கிறது என்பது தான் எல்லோருக்கும் தெரிந்த விஷயம்.

கை கால்கள் முடங்கிப் போய்விடாமல் தடுப்பதனால் இக்கீரைக்கு முடக்கு + அற்றான் = முடக்கற்றான் என்ற காரணப் பெயர் வந்தது.

ஆனால் முடக்கத்தான் கீரை எப்படியெல்லாம் பயன்படுகிறது நமக்கு என்பதை அறிந்தால் மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது.

பொதுவாய் நாம் ரொம்ப நேரம் சிறுநீர் கழிக்காமல் அடக்கி வைக்கும்போது இரத்தம் அப்படியே சிறுநீரையும் எடுத்துக்கொன்டு உடலின் எல்லா இடங்களுக்கும் செல்கிறது. நம் மூட்டுக்கள் அசையுமிடத்தில் சிறுநீரிலுள்ள யூரிக் ஆசிட் க்ரிஸ்டல்ஸ் அப்படியே படிந்து போய்விடுகிறது. இந்த வேலை நிறைய நாட்கள் தொடர்ந்து நடக்கும்போது கொஞ்சம் கொஞ்சமாக நம் மூட்டுக்கள் பாதிப்படைகின்றன. நாம் மூட்டுக்களை அசைக்கும்போது படிப்படியாக வலி அதிகரிக்கிறது. முடக்கத்தான் கீரையிலுள்ள தாலைட்ஸ் நம் மூட்டுக்களில் படர்ந்திருக்கும் யூரிக் அமிலத்தைக் கரைத்து அதை அபப்டியே சிறுநீரகத்திற்கு எடுத்துச் சென்று விடுகிறது. அவ்வாறு சிறுநீர் வெளியேறும்போது பொட்டாசியம், சோடியம் ஆகியவற்றை அப்படியே நம் உடலில் விட்டு விடுவதால் நமக்கு எந்த வித பாதிப்பும் இல்லாமல் முடக்கத்தான் கீரை ஒரு பெரிய மாற்றத்தை நம் உடலில் செய்து பாதுகாக்கிறது. மேலும் ஒரு கைப்பிடி இலையால் வாய்வு, மூச்சுப் பிடிப்பு, மூலம், கபம் சம்பந்தமான இருமல், மலச்சிக்கல் ஆகிய நோய்களும் சரியாகும். முடக்கத்தான் சூப் தொடர்ந்து சாப்பிடும்போது நம் வயிற்றில் சேகரமாகி தங்கியிருக்கும் வாயு வெளியேறுகிறது. வயிறு லேசாவதை நாம் உண‌ர முடியும்.
இந்த முடக்கத்தான் கீரையை நாம் துவையல், சூப், தோசை செய்து சாப்பிடலாம். இந்தக்கீரையை அதிகம் கொதிக்க வைத்தால் அதன் சத்துக்கள் அழிந்து விடும். சூப் செய்தாலும் கொதி வரும்போது தீயை அணைத்து விட வேண்டும்.

முடக்கத்தான் தோசை பலமுறைகளில் தயாரிக்கப்படுகிறது. மிகவும் சுவையான முடக்கற்றான் தோசை தயாரிக்கும் விதம் பற்றி இப்போது சொல்லப்போகிறேன். அவசியம் செய்து பாருங்கள். இதற்கு தக்காளி சட்னி அருமையானதொரு பக்கத்துணை!

முடக்கத்தான் வெங்காய தோசை:

தேவையானவை:

பச்சரிசி 1 கப்
இட்லி அரிசி 1 கப்
உளுந்து கால் கப்
துவரம்பருப்பு 1 மேசைக்கரண்டி
வெந்தயம் அரை ஸ்பூன்
நன்கு கழுவி சுத்தம் செய்து அரிந்த முடக்கத்தான் கீரை 2 கப்
தேவையான உப்பு
பொடியாக அரிந்த சின்ன வெங்காயம் 1 கப்
பொடியாக அரிந்த கொத்தமல்லி இலை 2 மேசைக்கரண்டி

செய்முறை:

அரிசி வகைகளையும் துவரம்பருப்பு, உளுந்து, வெந்தயம் அனைத்தையும் நான்கு மணி நேரம் ஊற வைத்து மையாக அரைக்கவும்.
பிறகு கீரையையும் சேர்த்து அரைக்கவும்.
தேவையான உப்பு சேர்த்து கரைத்து இட்லிக்கு பொங்க வைப்பது போல ஏழெட்டு மணி நேரம் பொங்க வைத்து உபயோகிக்கவும்.
தோசை சுடுகையில் சின்ன வெங்காயம், கொத்தமல்லி சேர்த்து தோசை வழக்கம்போல சுடவும்.


Sunday 30 October 2016

ஜன்னலுக்கு வெளியே!!

அது ஒரு முதியோர் இல்லம். இரண்டு வயதானவர்கள் ஒரே அறையில் தங்கியிருந்தார்கள். ஒருவருக்கு முதுகுத்தண்டில் கோளாறு. அதனால் மல்லாந்து எப்போதும் படுத்திருப்பார். இவரைப்போல இன்னொருவரும் நடமாட முடியாதவர். சர்க்கரை வியாதிக்காரர். அவருடைய கட்டில் ஜன்னலோரமாக இருந்ததால் எப்போதும் ஜன்னலுக்கு வெளியே பார்த்தபடி அமர்ந்திருப்பார்.

வருடக்கணக்காக அங்கேயிருந்ததால் இருவரும் நல்ல சினேகிதர்களாக மாறியிருந்தார்கள். இருவரையுமே பார்ப்பதற்கு யாரும் வருவதில்லை. அதனால் எப்போதுமே தங்களுக்குள் ஏதாவது பேசியபடியே நாட்களைக் கழித்தார்கள்.

ஒரு நாள் படுத்திருந்தவர் ஜன்னல் பெரியவரிடம் அங்கே தெருவில் என்ன நடக்கிறது? எனக்கு சொல்லுங்கள்' என்று கேட்க, அவருடைய நண்பர் சுவாரஸ்யமாகத் தொடர்ந்தார்.
" அங்கே ஒரு பெரிய விளையாட்டு மைதானம் இருக்கிறது. நிறைய குழந்தைகள் விளையாடிக்கொன்டிருக்கிறார்கள். பார்க்கவே அழகாய் இருக்கிறது"

படித்திருந்தவர் சொன்னார்

 " அங்கே என்ன நடந்தாலும் அவ்வப்போது எனக்குச் சொல்லுங்கள். அதையெல்லாம் கேட்பதால் மனசுக்கு மிகவும் ஆறுதலாக இருக்கிறது"

அடுத்த நாள் ஜன்னல்காரர் ' தூரத்தில் ஒரு கோவில் தெரிகிறது. ஏதோ உற்சவம் போல இருக்கிறது வாண வேடிக்கைகள் எல்லாம் அமர்க்களப்படுகின்றன" என்றார்.

"இது பங்குனி மாதம் இல்லையா? பங்குனி, சித்திரையெல்லாம் உற்சவங்கள் நிறைய இருக்கும். குணமானதும் நான் கோவிலுக்குப்போகப்போகிறேன்" என்றார் படுக்கைக்காரர் உற்சாகத்துடன்.

இன்னொரு நாள் அந்த வழியாகச் சென்ற கல்யாண ஊர்வலத்தைப்பற்றி, மாப்பிள்ளையின் அழகைப்பற்றி ரசித்துக் கூறினார். படுக்கைக்காரருக்கு கல்யாணத்தையே நேரில் பார்த்தது போல இருந்தது.

ஒரு வாரம் கழித்து ஒரு சிறு குழந்தை தன் அம்மாவிடம் அடம் பிடித்து சாலையில் போகும் ஐஸ் வண்டிக்காரனிடம் குச்சி ஐஸ் வாங்கிய கதையை சுவைபடச் சொன்னார். படுக்கைக்காரருக்கு அந்தக் காட்சியை தானே நேரில் கண்டது போல இருந்தது.சிரித்தவாறே " பெரியவர்களுக்கும் குழந்தைகளுக்கும் நடக்கும் சண்டையில் எப்போதும் குழந்தைகள் தான் ஜெயிக்கும்" என்று குதூகலித்தார்.

மறுபடியும் ஒரு நாள் ஜன்னலுக்கு வெளியே பூத்திருந்த பூக்களின் அழகை ரசித்து பேசிக்கொண்டிருந்தவர் மயங்கி விழ, உடனேயே அவரை ஸ்ட்ரெச்சரில் போட்டு வெளியே கொன்டு போனார்கள். அன்றும் அடுத்த நாளும் அவர் வராமலேயே போக, படுத்திருந்தவர் அவரைப்பற்றி விசாரித்தார். ஜன்னல்காரர் இறந்து விட்டதாக அவர்கள் சொன்னதும் அவர் அப்படியே துக்கத்தில் துயரத்தில் மூழ்கிப்போனார். தினமும் நண்பரை நினைத்து நினைத்து மருகினார்.

ஒரு நாள் நர்ஸிடம் சொல்லி தன் படுக்கையை ஜன்னலோரமாக மாற்றச் சொன்னார். மிகவும் பிரயாசைப்பட்டு கையை ஊன்றி பாதி நிமிர்ந்து ஜன்னலுக்கு வெளியே நோக்கினார்.

அங்கே தெரிந்ததோ ஒரு உயரமான மதில் சுவர் தான்!

திகைத்துப்போய் நர்ஸிடம் கேட்டார்.

" இங்கே ஒரு மதில் சுவரல்லவா இருக்கிறது! தினமும் என்னென்னவோ தெரிவதாய் அவர் ரசித்து ரசித்து சொன்னாரே?"

" உங்களுக்கு சந்தோஷம் தருவதற்காக அவர் கற்பனை செய்து சொல்லியிருப்பார்!"

நர்ஸ் சொன்னதும் அவர் அதிர்ச்சியில் ஆழ்ந்தார். நர்ஸ் மேலும் சொன்னாள்.

" உங்களுக்காவது இந்த சுவர் தெரிகிறது. அவருக்கு அதுவும் தெரியாது. ஏனென்றால் அவர் பார்வையை இழந்தவர் அய்யா!"


பெரியவர் அப்படியே பிரமித்துப்போய் அமர்ந்திருந்தார். தனக்குள் அத்தனை சோகங்கள் இருந்தும் அடுத்தவரை மகிழ்விக்க வேண்டுமென்று வாழ்ந்த அவர் எத்தனை உயர்ந்த மனிதர்!

உங்களின் சொந்த நிலைமை எப்படியிருந்தாலும் அடுத்தவருக்கு சந்தோஷம் ஏற்படும்படி நடந்து கொள்ளுங்கள். ஒருவரிம் முகத்தில் புன்னகை பூக்கும்படி செய்தீர்களென்றால் அதையும் விட உயர்ந்த விஷயம் வேறெதுமில்லை!!

பின்குறிப்பு:

என்னை பாதித்த‌ ஒரு சிறுகதையை இங்கே உங்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். சில பதிவுகளுக்கு முன் நான் விமர்சித்து எழுதிய ரா.கி.ரங்கராஜன் அவர்களின் நூலான ' நாலு மூலை'யில் படித்த சிறுகதை இது!

Tuesday 18 October 2016

முத்துக்குவியல்- 43!!

தகவல் முத்து:

இன்றைய காலத்தில் கலப்படங்கள் எப்படியெல்லாம் செய்கிறார்கள் என்பதற்கு சில உதாரணக்களும் அவற்றுக்கான தீர்வுகளும்:

தரமான கடுகை கைகளில் வைத்து அழுத்திப்பார்த்தால் அதன் உட்புறம் மஞ்சளாக இருக்கும். அர்ஜிமோன் விதகள் கலக்கப்பட்டிருந்தால் கைகளில் வைத்து கசக்கிப்பார்க்கும்போது அதன் உட்புறம் வெள்ளையாக இருக்கும்.

மிளகில் பப்பாளி விதைகள் கலக்கப்படுகின்றன. மிளகை மெருகேற்றுவதற்கு மினரல் ஆயில் எனப்ப‌டும் பெட்ரோலியப்பொருள் கலக்கப்படுகிறது. முகர்ந்து பார்த்தால் மிளகு பெட்ரோல் வாடை அடிக்கக்கூடாது. 50 மில்லி தண்ணீரில் சில மிளகுகளைப்போட்டால் அது தண்ணீரில் மூழ்கினால் அவை நல்ல மிளகு. மிதந்தால் அது பப்பாளி விதை.

சீரகத்தில் குதிரை சாணமும் அடுப்புக்கரியும் கலக்கப்படுகின்றன. தனியாவிதைகளில் சல்ஃபர் ஆக்ஸைடும் மரத்தூளும் கலக்கப்படுகின்றன. மஞ்சள் தூளில் மெட்டாலிக் யெல்லோ எனப்படும் ரசாயனம் கலக்கப்படுகிறது. பால் அதிக நேரம் கெடாமலிருக்க அதில் காஸ்ட்க் சோடா, டிட்டர்ஜென்ட், யூரியா கலக்கப்படுகின்றன. மிளகாய்த்தூளில் புற்று நோயை உண்டாக்கும் சூடான் டை கலக்கப்படுகின்றன. 

தேங்காய் எண்ணெயை ஒரு கண்ணாடிக் கிண்ணத்தில் ஊற்றி வைத்தால் தடிமனான கெட்டியான படிமம் மேலே படர்ந்திருந்தால் அது நல்ல எண்ணெய். அப்ப‌டியில்லாமல் நீர்த்த நிலையில் அபப்டியே இருந்தால் அது மலிவான சில எண்ணெய்கள் கலக்கப்பட்டிருக்கும் தேங்காய் எண்ணெய்.
பஞ்சை தேனில் நனைத்து தீயில் காட்டினால் அது எரிந்தால் அது நல்ல தேன். எரியும்போது சடசடவென்று சப்தம் வந்தால் அது கலப்படத் தேன். தேனை தண்ணீரில் விட்டால் அது கரையாமல் அடிவரை சென்று தங்கினால் அது நல்ல தேன். கரைந்தால் அது வெல்லப்பாகு.

அவசிய முத்து:

நான்கு பேர் நடுவே நன்றாக நடந்து கொண்டும் பேசிக்கொண்டிருக்கும் ஒருவர் திடீரென்று தள்ளாடினாலோ, கீழே விழுந்தாலோ, அதை சாதாரணமாக எண்ணி விட வேண்டாம். அது ஒரு வேளை ஸ்ட்ரோக் ஆக இருக்கலாம். மூளைக்குச் செல்லும் இரத்தக்குழாயில் அடைப்போ அல்லது ஏதேனும் பிரச்சினைக‌ளோ இருக்கலாம்.


ஒரு சிறப்பு நரம்பு மருத்துவர் கூறுவது என்ன வென்றால், இந்த மாதிரி திடீர் தாக்குதல்களுக்குள்ளானவர்களை இனம் கண்டு உடனே மூன்று மணி நேரத்திற்குள் அவரை மருத்துவமனையில் சேர்த்து விட்டால் அவரை அதிகம் பாதிப்புகள் இல்லாமல் பிழைக்க வைத்து விடலாம் என்பதே.
சம்பந்தப்பட்டவரை முதலில் சிரிக்கச் சொல்ல வேண்டும். பின் ஒரு முழு வாக்கியத்தை சொல்லச் சொல்ல வேண்டும். அதன் பின் இரு கைகளையும் தூக்கச் சொல்ல வேண்டும். சம்பந்தப்பட்டவர் இதில் ஏதேனும் ஒன்றை செய்ய முடியாமல் கஷ்டப்ப்ட்டால் சற்றும் தாமதிக்காது அவரை உடனே மருத்துவமனையில் எமெர்ஜென்ஸியில் சேர்க்க வேண்டும். அதோடு சம்பந்தப்பட்டவர்ன் நாக்கை வெளியே நீட்டச்சொல்லி பார்க்கவும். அவர்களின் நாக்கு, பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அவர்களால் சரியாக நாக்கை நீட்ட முடியாது.

பயன் தரும் முத்து:

இரவு நேரத்தில் பயணம் செய்யும்போது இறங்க வேண்டிய இடத்தைத் தவற விட்டு விடுவோமோ என்ற கவலை இருக்கும் பலருக்கு. அதற்கு ஒரு நிவாரணம் இருக்கிறது.உங்கள் மொபைலிலிருந்து 139 என்ற எண்ணுக்கு டயல் செய்யுங்கள். அதில் கூறும் வழிமுறைகளின்படி பயண டிக்கெட்டில் இருக்கும் பி.என்.ஆர் எண்ணை பதிவு செய்யுங்கள். நீங்கள் இறங்க வேண்டிய இடம் நெருங்கியதும் உங்களுக்கு எச்சரிக்கை அழைப்பு வரும். இதனால் நீங்கள் இறங்க வேண்டிய இடம் குறித்து கவலை இல்லாமல் பயணம் செய்யலாம்.

ரசித்த முத்து:

சமீபத்தில் 'விவேக சிந்தாமணி'யைப்படித்துக்கொண்டிருந்தேன். அதில் ரசித்த ஒரு பழம் பாடல் இதோ!

குக்கலைப்பிடித்து நாவிக்
கூண்டினில் அடைத்து வைத்து
மிக்க‌தோர் மஞ்சள் பூசி
மிகு மணம் செய்தாலுந்தான்
அக்குலம் வேற தாமோ?
அதனிடம் புனுகுண்டாமோ?
குக்கலே குக்கல் அல்லால்
குலந்தன்னில் பெரியது ஆமோ?

[குக்கல்=நாய், நாவி=புனுகுப்பூனை, புனுகுநறுமணப்பொருள்

 

Saturday 8 October 2016

நாலு மூலை!!

இது என்னுடைய முன்னூறாவது பதிவு.

எனக்குத் தொடர்ந்து பின்னூட்டம் கொடுத்து அதன் மூலம் எனக்கு ஊக்கத்தையும் உற்சாகத்தையும் அளித்துக்கொன்டிருக்கும் பதிவுலக சகோதர உள்ள‌ங்களுக்கு என் மனமார்ந்த நன்றியையும் அன்பினையும் தெரிவித்துக்கொள்கிறேன்!!!

நாலு மூலை:

சமீபத்தில் படிக்க ஒரு புத்தகம் கிடைத்தது. இது சிறுகதை தொகுப்போ அல்லது பெரிய நாவலோ இல்லை. அன்றாடம் நம்மைக்கடந்து போகும் நிகழ்வுகளின் தொகுப்பு இது! எழுதியவர் காலஞ்சென்ற எழுத்தாளர் திரு.ரா.கி.ரங்கராஜன் அவர்கள்.
2012ல் தன் 85ஆவது வயதில் மறைந்த எழுத்தாளர் ரா.கி.ரங்கராஜன் அவர்கள், மிகச் சிறந்த எழுத்தாளர் மட்டுமல்ல, குமுதம் வார இதழில் நெடுங்காலம் ஆசிரியராக வேலை பார்த்தவர். 1500 சிறுகதைகள், 50 புதினங்ளுக்கு மேலாக எழுதியவர். மோகினி, சூர்யா, கிருஷ்ணகுமார் என்று இவர் பல்வேறு புனைப்பெயர்களிலும் எழுதினார். 2005ல் இவர் தன் பல்வேறு கருத்துக்களை விமர்சனக்களாகவும் அபிப்பிராயங்களாகவும் சென்னை பத்திரிகைகளில் எழுதினார். அவற்றின் தொகுப்பு 'நாலு மூலை' என்ற நூலாக 2005ல் வெளி வந்திருக்கிறது சமீபத்தில்தான் அரசு நூலகத்தில் அதை எடுத்துப்படிக்க ஆரம்பித்தேன். படிக்கப் படிக்க சுவாரஸ்யம் மிகுந்ததில் மற்ற புத்தகங்களை ஓரம் க‌ட்டி வைத்து விட்டேன்.

ஆரம்பத்திலேயே எழுதுவதற்கான கருத்துக்கள் கிடைக்கும் விதம் பற்றி தன் முன்னுரையில் சுவைபடச் சொல்கிறார். ஒரு முறை இளையராஜாவிடம் பேசிக்கொண்டிருந்த போது அவர் சொன்னாராம், " கற்றுக் கொண்டதை எல்லாம் கொட்டி விட்டேன். ஐயோ, இனிமேல் என்ன செய்யப்போகிறோம் என்று ஆர்மோனியம் எதிரே திகைத்துப்போய் உட்கார்ந்த போது தானாகவே பாட்டு வருகிறது. பறவை ஒருத்தர் சொல்லியா பறக்கிறது? It happens! Music happens!!"
அது போல எழுத உட்கார்ந்ததும் பல்வேறு கருத்துக்கள் எப்படியாவது கிடைத்து விடுகின்றன என்கிறார் இவர்!

ஒரு காஷ்மீர நாட்டுப்புற கதை பற்றி எழுதியிருந்தார். ஒரு இளவரசன் ஒரு ஏழைப்பெண் மீது காதல் கொண்டு அவள் தந்தையிடம் சென்று பெண் கேட்கிறான். அவர் அவனுடைய தொழில் என்ன என்று கேட்கிறார். அவன் எனக்கு தொழில் எதுவும் தெரியாது. பத்து தலைமுறைக்கான சொத்து இருக்கிறது என்றானாம். அதற்கு அந்தப்பெண்ணின் தந்தை முதலில் ஒரு தொழிலைக்கற்று வா. அப்புறம் பெண் தருவதைப்பற்றி யோசிக்கிறேன் என்றானாம். இளவரசன் விதவிதமான பூ வேலைப்பாடுகள் அடங்கிய காஷ்மீர கம்பளம் நெய்யக் கற்று அதில் தேர்ச்சி அடைந்தான். தான் விரும்பிய பெண்னையும் மணந்து கொண்டான். சில காலம் கழித்து இளவரசனும் அவன் நண்பர்களும் காட்டிற்கு வேட்டையாடச் சென்ற போது கொள்ளையர்களால் சிறை வைக்கப்பட்டார்கள். சில நாட்கள் கழித்து, எதற்கு இவர்களுக்கு வெட்டியாக சோறு போட வேண்டும் என்று நினைத்து, இளவரசனிடம் உனக்கு ஏதாவது தொழில் தெரியுமா என்று கேட்டார்களாம். தனக்கு கம்பளம் நெய்யத்தெரியும் என்று இளவரசன் சொன்னதும் அதற்கான பொருள்களை வாங்கிக்கொடுக்க இளவரசன் மிக அழகான கம்பளம் நெய்தானாம். இதை ஊருக்குள் கொண்டு சென்றால் நிறைய பணம் கிடைக்குமா என்று அவர்கள் கேட்டதும் இளவரசன் ஊருக்குள் கொஞ்சமாகத்தான் பணம் கொடுப்பார்கள். இதையே அரண்மனையில் சென்று விற்றால் நிறைய பண்ம கிடைக்கும் என்று சொன்னானாம். அவர்களும் அது போலச் செய்ததும் நிறைய பணம் கிடைத்ததாம். மறு நாள் அரசனின் படை வீரர்கள் கொள்ளையர் இருந்த இடத்தை சூழ்ந்து அவர்களைக் கொன்று இளவரசனைக் காப்பாற்றினார்களாம். காரணம் அந்தக் கம்பளத்தில் காஷ்மீர மொழியில் தான் இருக்குமிடத்தையும் தனக்கு நேர்ந்துள்ள ஆபத்தைப்பற்றியும் இளவரசன் எழுதியிருந்தது தான் காரணம்.
இந்தச் சிறுகதையை எழுதி விட்டு ஒவ்வொருத்தரும் ஏதாவது ஒரு தொழிலைக்கற்க வேண்டுமென்ற முனைப்பு வருகிறதல்லவா என்று கேட்டிருந்தார்!

ஒரு ஆன்மீக தலைவரின் சீடர் கூறிய அருமையான கருத்தை இடையே சொல்லியிருக்கிறார்.
"ஒரு ஊருக்கு காரில் போய்க்கொண்டிருக்கும்போது வழியில் ஒரு எருமை குறுக்கிட்டது. மாட்டுக்காரன் தன் கம்பினால் அதை அடித்து விரட்டினான். அது சாலைக்கு மறுபக்கம் போய் விட்டது. அப்போதும் மாட்டுக்காரன் அதை அடிப்பதை நிறுத்தவில்லை. தொடர்ந்து அடித்துக்கொண்டே இருந்ததைப்பார்த்தபோது நான் யோசித்தேன். அது தான் சாலையிலிருந்து ஒதுங்கிப்போய் விட்டதே? அப்புறமும் ஏன் அதை அடிக்க வேண்டும்? ஏனென்றால் அது ஒரு சமயம் அடம் பிடித்துக்கொண்டு அவன் சொன்னதைக்கேட்காத கோபம் அவன் மன‌சிலிருந்து அகலவில்லை. பழசை நினைத்து அடிக்கிறான். இப்படித்தான் வாழ்க்கையில் நாம் நடந்து கொள்கிறோம். பழசை மறக்காமல் நினைத்து கோபப்பட்டு நம் நிம்மதியைக் கெடுத்துக்கொள்கிறோம்!"

பேரன் பேத்திகளிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்பதையும் இடையில் கூறுகிறார்.
"பேரன், பேத்திக்களிடம் முடியாது, கிடையாது என்று சொல்வது மிகவும் கடினமான காரியம்தான். ஆனாலும் அவர்கள் கேட்கும் எல்லாவற்றுக்கும் சரியென்று சொல்வதும் ஆமோதிப்பதும் வீட்டில் பல பிரச்சினைகளைக் கொண்டு வந்து விடுகின்றன என்பதையும் தாத்தாக்களும் பாட்டிகளும் புரிந்து கொள்ள வேண்டும். எதையாவது உங்கள் பேரக்குழந்தை கேட்டு அதன் பெற்றோர் மறுத்திருந்தால் அது உங்களிடம் தான் அடுத்ததாய் சலுகைக்கு வரும். நீங்கள் அது கேட்டதை கொடுத்தாலோ அல்லது வாங்கித்தந்தாலோ, அதற்கு தன் அம்மா, அப்பாவை மதிக்கத்தேவையில்லை என்ற எண்னம் வந்து விடும். எதையும் உங்கள் மூலம் சாதித்துக்கொள்ளலாம் என்ற எண்ணம் வந்து விடும். அதனால் குழந்தையிடம் பக்குவமாகச் சொல்லி அப்பா, அம்மா சொல் மதிக்க வேண்டும் என்று நீங்கள் பழக்க வேண்டும்"

நிறைய பக்கங்களில் நகைச்சுவை மிளிர்கிறது!

இந்தியாவை சுற்றிப்பார்க்க வந்திருந்த ஒரு அமெரிக்கர் ஒரு சுவாமிஜியின் நல்லியல்புகளை தொடர்ந்து கவனித்து வந்தாராம். ஒரு நாள் அவரிடம் சென்று ' சுவாமிஜி! மந்திரங்களுக்கு நல்ல மகிமை உன்டு என்றும் அவற்றைத் தொடர்ந்து சொல்லி வந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும் என்றும் அடிக்கடி சொல்லி வருகிறீர்கள். எனக்கும் ஒரு நல்ல மந்திரம் சொல்லிக்கொடுங்கள். அதனால் ஒரு நல்ல பலன் கிடைத்தால் சந்தோஷப்படுவேன்' என்றாராம். சுவாமிஜியும் ஒரு மந்திரம் சொல்லிக்கொடுத்து ' உனக்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம் இந்த மந்திரத்தை சொல்லு. ஆனால் எக்காரணம் முன்னிட்டும் இந்த மந்திரத்தை யாருக்கும் சொல்லிக்கொடுக்கக்கூடாது' என்று சொல்லி சத்தியமும் வாங்கிக்கொண்டாராம். அதன் படியே அமெரிக்கரும் ஊருக்குத்திரும்பியது முதல் அந்த மந்திரத்தை சொல்லி வந்தாராம்.
அவரின் மனைவி ஒரு ராட்சஸி. கணவன் உயிரை தினமும் கொல்லாமல் கொன்று வருபவள். தன் கணவன் இந்தியாவிலிருந்து திரும்பியதிலிருந்து தினமும் தனக்குள்ளாகவே ஏதோ முனகிக்கொண்டிருப்பதை ஒரு நாள் பார்த்தாள், இரண்டாம் நாள் பார்த்தாள், அதன் பின் அவளால் பொறுத்துக்கொள்ல முடியவில்லை. கணவனிடம் கேட்டாள் அவன் தினமும் என்ன சொல்லிக்கொண்டிருக்கிறான் என்று! அவனும் விஷயத்தைச் சொல்லி இது ஒரு மந்திரம், இதை யாரிடமும் சொல்ல மாட்டேன் என்று வாக்கு கொடுத்திருக்கிறேன் என்று சொல்ல, பலத்த சண்டையாகி விட்டது அங்கே. மிரட்டலுக்கும் வற்புறுத்தலுக்கும் மசியாத கணவனிடம் 'இனி ஒரு நாள் கூட உன்னுடன் வாழ மாட்டேன் என்று சொல்லி விட்டு மூட்டை முடிச்சை கட்டிக்கொன்டு அவள் அங்கிருந்து கிளம்பிச் சென்று விட்டாள். அவனுக்கு ஒரே சந்தோஷம்! ' மந்திரம் என்றால் இதுவல்லவோ மந்திரம்! கை மேல் பலன் கிடைத்து விட்டதே' என்று ஆனந்த கூத்தாடினான் அவன்!

இப்படி சுவாரஸ்யமான நிகழ்வுகளை இவரும் நூல் முழுவதும் சுவாரஸ்யமாக சொல்லிக்கொண்டே போகிறார்!வழக்கமான புதினங்களிலிருந்து வித்தியாசப்ப‌டுகின்ற‌ நூல் இது! படித்துப்பாருங்கள்!

கிடைக்குமிடம்:

கிழக்கு பதிப்பகம்,
16, கற்பகாம்பாள் நகர்,
மயிலாப்பூர், சென்னை 4 

Friday 30 September 2016

வெங்காய பக்கோடா!!

ரொம்ப நாட்கள் கழித்து ஒரு சமையல் குறிப்பு! எல்லோருக்கும் பிடித்த குறிப்பு என்பது தான் இதில் ஸ்பெஷல்! அதுவும் மற்றெல்லா சமயங்களையும் விட மழைக்கால மாலை நேரங்களில் இதை செய்யும்போது ருசி இன்னும் கூடுதலாகவே தெரியும்! அது தான் வெங்காய பக்கோடா!
இதற்கு பெரிய வெங்காயம் தான் நன்றாக இருக்கும். இனி குறிப்பிற்கு போகலாம்!
வெங்காய பக்கோடா:

தேவையான பொருள்கள்:

பெரிய வெங்காயம் நான்கு
பொடியாக அரிந்த பச்சை மிளகாய் 3
மிளகாய்த்தூள் அரை டீஸ்பூன்
பெருங்காயம் சிறிய கோலி அளவு
சோம்பு 1 ஸ்பூன்
நறுக்கிய கறிவேப்பிலை 2 மேசைக்கரண்டி
பொடியாக அரிந்த கொத்தமல்லி 2 மேசைக்கரண்டி
நெய் 1 மேசைக்கரண்டி
கடலை மாவு, அரிசி மாவு, உப்பு தேவையான அளவு

செய்முறை:வெங்காயத்தை நீள நீளமாக, மெலிசாக அரிந்து கொள்ள‌வும்.
பெருங்காயத்தை ஒரு கிண்ண‌த்தில் போட்டு சிறிது வென்னீரை ஊற்றி வைக்கவும். இதை பல மணி நேரங்களுக்கு முன்னாலேயே செய்து கொள்ளலாம். அதனால் பக்கோடா செய்யும்போது பெருங்காயல் நன்கு இளகி இருக்கும்.

வெங்காய‌த்தையும் பச்சை மிளகாயையும் ஒரு பாத்திரத்தில் போட்டு கையால் நன்கு நெரித்துப்பிசையவும்.

இப்போது கடலை மாவை சலித்து வெங்காயத்தில் கொஞ்சம் கொஞ்சமாகப்போட்டு பிசிறவும். அதிகமாக போட்டு விட்டால் மெது பக்கோடா ஆகி விடும். கொஞ்சமாக போட்டால் தூள் பக்கோடா ஆகி விடும். அதனால் மாவு வெங்காய‌த்தில் நன்கு ஒட்டுமாறு தேவையான அளவு சேர்த்துப்பிசையவும். பெரும்பாலும் 2 கப் கடலைமாவு சரியாக இருக்கும். இதற்கு 1 கப் சலித்த அரிசி மாவு, கொத்தமல்லி, கறிவேப்பிலை, மிளகாய்த்தூள், சோம்பு தகுந்த உப்பு, பெருங்காய விழுது எல்லாம் கலந்து நன்கு பிசையவும்.நன்கு பிசைந்ததும் நெய்யை சூடாக்கி மாவில் ஊற்றி மறுபடியும் பிசையவும். எண்ணெயை சுட வைத்து மிதமான சூட்டில் சிறு சிறு பக்கோடாக்களாக போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
சுவையான வெங்காய பக்கோடா தயார்!

 

Wednesday 21 September 2016

தற்கொலை மரணங்கள்!!

சில நாட்களுக்கு முன், தொடர் நிகழ்வுகளாக தெரிந்தவர்கள் இல்லங்களில் தற்கொலை மரணங்கள். ஒன்றின் பாதிப்பிலிருந்து மீளுமுன் அடுத்த மரணம். முதலாவது மரணம் கிராமத்தில் நடந்தது. இள‌ம் வயது தம்பதி. ஒரு சின்ன குழந்தை மட்டும் இருந்தது. குடிப்பதற்கு காசு கேட்டு மனைவி தர மறுத்ததால் கணவனே ஆத்திரத்தில் மனைவி மீது மண்ணெண்னெய் ஊற்றி எரித்து விட்டான். என்னைக்காப்பாற்றுங்கள் என்று அலறியவாறே உடல் முழுக்க தீ பற்றி எரிய அப்பெண் தெருவில் ஓடி வந்த காட்சியை என் உறவினரால் பல நாட்களுக்கு மறக்க இயலவில்லை. வேதனை என்னவென்றால் கணவன் தன்னை கொல்லவில்லை, யதேச்சையாக நடந்தது என்று மனைவி மரண வாக்குமூலம் தந்தது தான்!அடுத்ததும் குடியால் வந்தது தான். மனைவி குடிக்க காசு தராத கோபத்தில் 'இப்போது உன் கண்ணெதிரேயே சாகிறேன் பார்' என்று சொல்லி கணவன் விஷத்தைக் குடித்து விட்டான். அவன் நண்பர்கள் அலறிப்புடைத்துக்கொண்டு, பைக்கில் அவனை ஏற்றிக்கொண்டு தஞ்சை மருத்துமனைக்கு பறக்க, வழியில் பைக் விபத்துக்குள்ளாகி அவனது கதையும் அங்கேயே முடிந்து போனது.

அடுத்தது, இளம் கணவன் மனைவிக்குள் தகராறு. வீட்டிலிருந்து அனைவரும் பல‌ அலுவல்கள் காரணமாக வெளியே போகும் வரை காத்திருந்து அந்தப் பெண் தற்கொலை செய்து கொண்டது.

30 வருடங்களுக்கு முன் என் நெருங்கிய சினேகிதி தற்கொலை செய்து கொண்டார். மூன்று பெண் குழந்தைகள் பத்து வயதிலும் ஐந்து வயதிலும் ஒரு வயதிலுமாக இருந்தன. அதிலும் மூத்த பெண் கால் ஊனமான பெண் வேறு! கணவனின் அதிகமான குடிபோதை, அவர் கொடுத்த அடி, உதைகள், அவரால் தாக்கு பிடிக்க முடியாமல் சில தற்கொலை முயற்சிகளில் ஈடுபட்டபோது நானே அவரைக் காப்பாற்றி இருக்கிறேன். பெண் குழந்தைகளை சுட்டிக்காண்பித்து நான் திட்டும்போதெல்லாம் அழுவார். நான் வெளிநாட்டில் இருக்கும்போது அவர் இற‌ந்து விட்டார். தற்கொலை என்றார்கள். கணவன் தான் பெட்ரோல் ஊற்றி கொளுத்தி விட்டார் என்றார்கள். ஆனால் மரண வாக்குமூலத்தில் அவர் தன் கணவன் தான் தன்னைக் கொளுத்தினார் என்று சொல்ல அவர் கணவர் சிறைக்குச் சென்றார். ஆனால் அவர்கள் மேல்தட்டு வர்க்கம், மிகுந்த பணக்காரர்கள் என்பதால் விரைவில் அவர் ஜாமீனில் வெளி வந்தார். உடனே குழந்தைகளை கவனிக்க‌ என்று திருமணமும் பண்ணிக்கொண்டார்!35 கோடிக்கும் அதிகமானோர்  உலக அளவில் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார மையம் கடந்த அக்டோபர் 10-ம் தேதி நடந்த உலக மன நல ஆரோக்கிய தினத்தில் தெரிவித்துள்ளது. ஆண்டுக்கு 8 லட்சம் தற்கொலைகள் என உலக நாடுகளில், இந்தியா முதல் இடத்தில் உள்ளது. படிப்பறிவிலும், பொருளாதாரத்திலும் வளர்ச்சி பெற்ற மாநிலமான தமிழகம், தற்கொலையில் முதல் இடத்தில் இருக்கிறது. பொதுவாகக் குடும்பப் பிரச்சினை, நோய், வரதட்சிணை, தேர்வில் தோல்வி, காதல் பிரச்சினை போன்ற பிரச்சினைகள் தற்கொலை முடிவுக்குக் காரணமாக இருக்கும். சமீப காலமாக தந்தை அடித்தார், ஆசிரியர் வகுப்பறையில் சக மாணவர்கள் இருக்கும் போது திட்டினார் என்பது போன்ற அற்ப காரணங்களுக்காகவெல்லாம் தற்கொலைகள் நிகழ்கின்றன.

தற்கொலை எண்ணங்களை உருவாக்குவதில் மன அழுத்தம் முக்கியப் பங்கு வகிக்கிறது. இக்கால இளம் பருவதினருக்கு மன தைரியம், சகிப்புத் தன்மை, கூடி வாழ்தல் போன்றவற்றை கற்றுத் தர எந்தப் பெற்றோருக்கும் நேரமும் இல்லை, அக்கறையும் இல்லை. இதனால் அவர்கள் சிறு வயதில் இருந்தே யந்திரத்தனமாக, எந்தவித உன்னத குறிக்கோளுமில்லாமல் வளருகிறார்கள்.  இதனால் அவர்களுக்கு சிறு பிரச்சினை ஏற்படும்போது தாங்கிக்கொள்ள‌ முடியாமல் மன உளைச்சல் ஏற்பட்டுத் தற்கொலை செய்து கொள்வதற்குத் தயாராகிறார்கள்.

எந்தப் பிரச்சினையையும் மன தைரியத்துடன் போராடினால் எளிதில் அப்பிரச்சனை தீர்ந்து விடும் என்பது அவர்களுக்குப்புரிவதில்லை.

முறையான உணவு, மன இறுக்கத்தைப் போக்கும் உடற்பயிற்சி, மனப் பயிற்சி, யோகாசனம் போன்ற பயிற்சி முறைகள்,குழந்தைகளுக்கு பாசத்தையும் விட்டுக்கொடுத்தலையும் சொல்லிக்கொடுத்தல் போன்ற அணுகு முறைகளை இன்றைய பெற்றோர் அவசியம் குழந்தைகளுக்கு பயிற்றுவிக்க வேண்டும்.

பள்ளிகளிலும் தன்னம்பிக்கை வளர்க்கும் புத்தகங்களை உடைய நூலகத்தை ஏற்படுத்துவது, ரசனையை மேம்படுத்தும் திரைப்படங்களை அறிமுகப்படுத்துவது, மாணவ சமுதாயத்திற்குப்பயன்படும் வகையில் ஆரோக்கியமான பட்டிமன்றங்களை அடிக்கடி நடத்தி அவர்களின் சிந்தனைகளை கூர்மைபப்டுத்துவது,சக மனிதர்களின் மீதான நேசத்தை வளர்க்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வது, எதிர்காலத்தை நல்லபடியாக அமைத்துக்கொள்வதற்கு வழிகாட்டும் பல்வேறு துறை நிபுணர்களை அழைத்து வந்து பேச வைப்பது போன்ற செயல்பாடுகள் மூலம் இளம் தளிர்களை நல்வழிக்கு, நல்லுலகத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும். வளரும் பருவத்தினராவது இத்தகைய மன அழுத்தங்களுக்கு ஆட்படாமல் வளமாக வாழ வேன்டும்.


 

Sunday 4 September 2016

குளோபல் விபாஸனா பகோடா!

Which two persons are rare in the world? One who serves others selflessly without expecting anything in return; and one who is grateful toward anyone who does one a kindness. These two persons are rare in the world. -‍ கெளதம புத்தா

சென்ற வருடம் மும்பை சென்றிருந்தபோது அமைதியான ஒரு இடத்திற்குச்  சென்றிருந்தோம்.அது தான் குளோபல் விபாஸனா பகோடா!அமைதியான, அழகான, அசத்தலான இந்த பகோடாவை ரசித்தபோது மனதின் பிரமிப்பு ஒவ்வொரு நிமிடமும் அகலேவேயில்லை. அத்தனை அழகு! இந்த பகோடாவைச்சுற்றி பொன்னிற வண்ணத்தால் எழுதப்பட்டிருந்த வாக்கியங்களைப்படித்த போது மனதில் சொல்லவொண்ணாத அமைதி ஏற்பட்டது.

இந்த வாக்கியங்களும் தியானமும் உலகெங்கும் பரவினால் உலகில் எத்தனை பேர் மனத்தெளிவு அடைவார்கள், குரோதங்கள் மறைந்து எப்படியெல்லாம் அன்பினால் இந்தப் பெருவெளி நிறையும் என்று மனது ஏங்கியது. 


நுழைவாசல்
இந்த பகோடா விபாஸனா என்ற தியானம் மேற்கொள்வதற்காகவும் புத்தருடைய கொள்கைகளுக்கு நன்றி சொல்லும் வகையிலும் 2000ஆம் ஆண்டு கட்டுமானம் ஆரம்பிக்கப்பட்டது. அரபிக்கடலுக்கும் கோரை என்ற கிராமத்திற்கும் இடையே உள்ள‌ இடத்தில் கட்டப்பட்டிருக்கிறது. மிக அருகில் அரபிக்கடலின் அலைகள் சலசலத்துக்கொண்டிருக்கின்றன. இது மும்பாயில் மேற்கு போரிவலியில் கோரை என்னும் கிராமத்தில் அழகாக நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது. பர்மீய கலைத்திறனும் இந்திய கலைத்திறனுமாய் இணைந்து கட்டப்பட்டிருக்கிறது. 2009ல் அன்றைய ஜனாதிபதி பிரதீபா பட்டேல் இதைத்திறந்து வைத்தார். இந்த பகோடா கட்டப்பட்டதன் நோக்கம் இது உலக அமைதிக்கு ஒரு சின்னமாக விளங்க வேன்டும் என்பது தான்.

நுழைவாசலிலிருந்து பகோடா! முகப்புக்கட்டிடத்தின் கலைநயமான அழகைப்பாருங்கள்!
இந்திய கட்டடக்கலை நிபுணர் சந்துபாய் சோம்புரா என்பவரால் இது வடிவமைக்கப்பட்டது. இதன் உள்ளே அமைந்திருக்கும் சில அரிதான கற்களை பர்மீயர்கள் தானம் செய்திருக்கிறார்கள். இந்தியாவில் கிடைக்காத தங்க நிற வண்ண‌ம் பூச தாய்லாந்து மக்கள் உதவினார்கள். ஒரு மாணவர் இந்தக்கட்டிடம் அமைந்துள்ள இடத்தை தானமாக வழங்க, மற்ற மாணவர்கள் இக்கட்டிடம் கட்ட 800 கோடி ரூபாயை திரட்டிக்கொடுத்துள்ளார்கள்.

பகோடா செல்லப் படிகளில் ஏறும்போதுஇது உலகிலேயே மிக நீள‌மான கல்லாலான குவிமண்டபத்தை [ DOME ]  தன்னகத்தே அடக்கியுள்ள‌து. எந்த விதமான பில்லர்கள் துணையின்றி இது கட்டப்பட்டிருக்கிறது.

பகோடாவிற்கு ஏறும் வழியில்
பகோடாவின் அழகிய பக்கவாட்டுத்தோற்ற‌ங்களும் கலை நயமிக்க வேலைப்பாடுகளும்!!
பகோடா ஏறுமுன் பக்கவாட்டில் அமைந்துள்ள‌ புத்தர் சிலை!
இதற்குள் சுமார் 8000 பேர் அமர்ந்து தியானம் செய்யக்கூடிய வகையில் மிகப்பெரிய கூடம் அமைந்துள்ளது. சில வகை தியானங்கள் இலவசமாக சொல்லிக்கொடுக்கப்படுகிறது. இந்த விபாஸ‌னா தியானம் உலகெங்கும் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் பின்பற்றப்படுகிறது.

தினமும் காலை 9.30லிருந்து மாலை 7 மணி வரை மக்கள் பார்க்க அனுமதியுண்டு. மாலை 6.30 வரை நுழைய அனுமதிக்கிறார்கள். நுழைவுக்கட்டணம் கிடையாது. கீழ்க்கண்ட வலைத்தளத்தில் மற்ற தகவல்களை அறியலாம்.

http://www.globalpagoda.org/

இந்த பகோடா ஏகாந்தமான, நகரத்திலிருந்து வெகு தொலைவில் உள்ளதொரு இடத்தில் அமைந்திருப்பதால் சொந்தமான காரில் அதுவும் நண்பர்களுடன் போவது தான் நல்லது. மாலை நான்கு மணிக்குச் சென்றால் வெய்யிலின் தாக்கம் அதிகம் இல்லாமல் எல்லாவற்றையும் ரசித்துப்பார்க்கலாம். மாலை ஐந்தரைக்குத் திரும்பி விடலாம்.