Sunday 26 February 2012

முருங்கைக்காய் தொக்கு

சமையலுக்கென தனியான வலைப்பதிவும், 2002லிருந்து எழுதி வரும் இன்னொரு வலைப்பதிவு இருந்தாலும், முத்துச் சிதறலில் கொடுக்கும் சமையல் முத்துக்களை மட்டும் மிகச் சிறந்ததாகவே இது வரை கொடுத்து வருகிறேன்.


அந்த வகையில் இந்தப் பதிவில் நான் தரவிருப்பது முருங்கைக்காய்த்தொக்கு. இந்த குறிப்பை என் சினேகிதி எனக்குத் தந்து பல மாதங்களாகியும் இது வரை நான் அதை செய்து பார்க்காமலேயே இருந்தேன். நல்ல சதைப்பற்றாக, ருசிகரமான, இளசான முருங்கைக்காய்



 இங்கே இலேசில் கிடைக்காது. கிடைக்கும்போது, வேறு வேலைகள் குறுக்கிட்டு இந்தக் குறிப்பை செய்வதை தள்ளிப்போட்டுக் கொண்டே வந்தேன். சென்ற வாரம்தான் இதை எப்படியும் செய்து விடுவது என்ற முடிவில் இறங்கி, தமிழ்நாட்டைச் சேர்ந்த கடையொன்றில் முருங்கைக்காய்களை தேடிப்பிடித்து வாங்கி இந்த தொக்கை செய்து முடித்தேன். செய்ததும் தான் தெரிந்தது இத்தனை நாட்களாக எந்த அளவு இதை மிஸ் பண்ணியிருக்கிறோம் என்று!! அவ்வளவு அபாரமான சுவை!! இதை சாதத்திற்கும் தொட்டுக்கொள்ளலாம். சூடான சாதத்தில் நெய் ஊற்றி பிசைந்தும் சாப்பிடலாம். சூடான இட்லிக்கு தொட்டுக்கொள்ள அருமையான பக்க துணை!!



தேவையானவை:

முருங்கைக்காய்-5

புளி- 2 எலுமிச்சம்பழ அளவு

மிளகாய்த்தூள்- 2 மேசைக்கரண்டி

மஞ்சள் தூள்- அரை ஸ்பூன்

வறுத்த வெந்தயம்- 1 ஸ்பூன்

பெருங்காயம் வறுத்தது- அரை நெல்லியளவு

நல்லெண்ணெய்- கால் கப்

தேவையான உப்பு

பொடியாக அரிந்த சின்ன வெங்காயம்- 1 1/2 கப்

செய்முறை:

புளியை 2 மணி நேரம் 2 கப் வெந்நீரில் ஊறவைத்து கெட்டியாக கரைக்கவும்.

சின்ன வெங்காயங்களைப் பொடியாக அரிந்து கொள்லவும்.

முருங்கைக்காய்கலை சிறு சிறு துண்டுகளாக வெட்டி தண்ணீர் சேர்க்காமல் ஒரு பாத்திரத்தில் போட்டு குக்கரில் வைத்து 2 விசில் வரை வேக வைக்கவும்.

ஆறியதும் சதையை வழித்தெடுத்து சின்ன வெங்காயத்துடன் சேர்த்து வைத்துக்கொள்ளவும்.

வெந்தயத்தையும் பெருங்காயத்தையும் நன்றாக பொடி செய்து கொள்லவும்.

வாணலியில் சூடாக்கி எண்ணெயை ஊற்றவும்.

அது சூடானதும் வெங்காய முருங்கைக்கலவையைப் போட்டு மிதமான தீயில் வெங்காய நெடி போகும் வரை வதக்கவும்.

கரைத்த புளித்தண்ணீரை ஊற்றி கொதிக்க விடவும்.

கெட்டியாக வரும்போது மஞ்சள், மிளகாய்த்தூள்கள், உப்பு சேர்த்து சிறு தீயில் சமைக்கவும்.

நன்கு கெட்டியானதும் வெந்தயத்தூளைச் சேர்த்து மேலும் ஐந்து நிமிடங்கள் சிறு தீயில் வைக்கவும்.

சுவையான முருங்கைக்காய்த்தொக்கு இப்போது தயார்!

Sunday 19 February 2012

நம்ம ஊரு நல்ல ஊரு!!!

15 நாட்களுக்கு முன் சென்னை, கோவை, தஞ்சை என்று ஒரு அவசியப் பயணம் 10 நாட்களுக்கு மேற்கொள்ள வேண்டியிருந்தது. சென்னையிலிருந்து கோவைக்கு விமானம் மூலம் உடனடியாகச் செல்ல வேண்டியிருந்ததால் காரை கோவைக்கு வரச்சொல்லி விட்டோம். அதனால் சென்னை ஏர்போர்ட்டில் இந்த முறை FAST TRACK TAXI SERVICE உள்ள இடம் சென்று மயிலாப்பூருக்கு டிக்கட் வாங்கினோம்.



ரூபாய் 450 மட்டும்தான் ஆகியிருந்தது. இரு வருடங்கள் முன்பு வரை தனியார் டாக்ஸிகளுக்கு கிட்டத்தட்ட 1000 வரை இதே இடத்திற்கு கொடுத்திருக்கிறோம். இந்த FAST TRACK TAXI SERVICE வந்ததிலிருந்து வசதியாக இருப்பதாகவும் செலவு குறைவாக இருப்பதாகவும் எல்லோருமே சொன்னார்கள். என் அனுபவமும் அதே போலத்தான் இருந்தது.


ராதாகிருஷ்ணன் சாலையில் உட்லாண்ஸ் ஹோட்டலில் தங்குவது தான் எப்போதும் வழக்கம். அதிலேயே இருக்கும் உணவகம், பக்கத்தில் சரவண பவன் -இது தான் எப்போதுமே சாப்பிட வசதி. சாப்பிட்டு வெளியில் அலையவும் வசதி. என் கணவருக்கு எங்கு சென்றாலும் இரண்டு இட்லி போதும். ஆனால் நானும் என் மகனும் எங்கெல்லாம் வித்தியாசமான உணவு இருக்கிறதோ, அங்கு தேடிப்பிடித்து செல்வோம். 25 வருடங்களாக உணவகம் வெளி நாட்டில் நடத்தி வரும் அனுபவத்தால் ஏற்பட்ட தேடல் இது. இந்த முறை என் கணவரை சம்மதிக்க வைத்து, ரொம்ப நாட்களாக போக வேண்டுமென்று நினைத்துக் கொண்டிருந்த உணவகம் ஒன்றிற்குச் சென்றோம்.

நுங்கம்பாக்கத்திலும் முகப்பேரிலும் இருக்கிறது இந்த ‘ சஞ்சீவனம் ’ என்ற உணவகம். கேரள ஆயுர்வேத மருத்துவ மனையுடனேயே இணைந்து நடத்தப்பட்டு வருகிறது இந்த ‘சஞ்சீவனம்’ ! நானும் என் கணவரும் என் சினேகிதியுமாகச் சென்றோம். ‘ராஜ கீயம்’ என்ற சாப்பாட்டைத் தேர்ந்தெடுத்தோம்.

முதலில் ஒரு பழத்துண்டு வைத்தார்கள் சாப்பிட. அதை சாப்பிட்டு முடித்ததும் சத்துள்ள ஐந்து பானங்கள் [appitizers] சிறு சிறு கப்புகளில் வரிசையாக வந்தன.



1. முதலில் பேரீச்சம்பழ ஜுஸ்

2. அடுத்தது முந்திரி, பாதாம் துண்டுகள் மிதந்த பால்.

3. அடுத்தது காய்கறி சூப்.

4. அதற்கப்புறம் கறிவேப்பிலை அரைத்துப்போட்ட ருசியான மோர்.

5. கடைசியாக சிகப்பரிசி கஞ்சி.

இவற்றை சாப்பிட்டு முடித்ததும் சமைக்கப்படாத இனிப்பு சிகப்பரிசி புட்டு, நான்கு வகை வேக வைக்காத காய்கறி பச்சடிகள் வந்தன.

அதற்கப்புறம் ஓரளவு வெந்த காய்கறி வகைகள் நான்கு, முழுவதும் வெந்த காய்கறி வகைகள் நான்கு வந்தன. அதன் பின்பே சிகப்பரிசி சாதம் புளி சேர்க்காத சாம்பார், ரசம், மோர்க்குழம்பு, துவையலோடு வந்தன.



அதன் பின் சிகப்பரிசி பாயசம், தேங்காய்த்துருவல் கலந்த பீடா தருகிறார்கள். இறுதியாக ஒரு கரண்டி தேனை கையில் ஊற்றுகிறார்கள். இது செரிப்பதற்காம்!

Appitizers ஒரு சிறு கரண்டி அளவு தானிருக்கும். மற்றபடி சாலட் வகைகள், காய்கறி வகைகளை மறுபடியும் கேட்டால் தருகிறார்கள். ருசியாகவும் நிறைவாகவும் சாப்பாடு இருந்தது. சாலட் வகைகள் நிறையவும் சாதம் குறைவாகவும் சாப்பிட்டு எழுந்தோம். எங்கள் மூவருக்கும் தண்ணீர், டிப்ஸ் உள்பட 750 ரூபாய் ஆனது. அவசியம் செல்ல வேண்டிய உணவகம் இது.

அடுத்த நாள் மாலை உட்லாண்ஸ் ஹோட்டல் எதிரே உள்ள ‘ இட்லி விலாஸ்’ என்ற ஒரு புதிய உணவகத்திற்குச் சென்றோம். பெயருக்கு ஏற்ற மாதிரி பல வகை இட்லிகள். நல்ல கூட்டம். அப்போதுதான் திறந்திருந்ததால் இன்னும் மெனு கார்ட் தயாராகவில்லை என்றார்கள். ஒரு கரும்பலகையில்தான் உணவு வகைகளை எழுதியிருந்தார்கள்.



குண்டூர் இட்லி,

சம்மந்தி இட்லி,

சில்லி இட்லி,

பொடி இட்லி,

சின்ன வெங்காய ஊத்தப்பம்,

இலந்தைப்பழ சப்பாத்தியும் இனிப்பு மாங்காய் பச்சடியும்,

வெட்டி வேர் எலுமிச்சை சர்பத்.

இப்படி வித்தியாசமான உணவு வகைகள். சின்ன வெங்காய ஊத்தப்பம் மிகவும் சுவை. குண்டூர் இட்லி, பொடி தடவி எண்ணெயில் வறுத்திருந்தார்கள். பொங்கலும் சாம்பார், சட்னி வகைகளுமே சுவையாகத்தானிருந்தது. மினரல் வாட்டர் பாட்டில்கள் இல்லாதது தான் குறை.

தஞ்சையில் ஒரு அனுபவம்.

பிரபல இன்ஷூரன்ஸ் நிறுவனத்தில் பணம் கட்ட ஏற்பாடு செய்து கொண்டிருந்தபோது, அவர்கள் சென்னையிலிருந்து ஃபோன் செய்து தஞ்சையிலுள்ள ஒரு மருத்துவ மனையின் விலாசம் சொல்லி இரத்தப்பரிசோதனை செய்யுமாறு சொன்னார்கள்.

மறு நாள் காலை வெறும் வயிற்றில் இரத்தம் கொடுக்கச் சென்றோம் நாங்கள். இரத்தம் கொடுக்கக் காத்திருந்தபோது, அங்கு வந்த ஒரு பெண், ‘ இதற்கு முன்னால் வந்து ரத்தம் கொடுத்துச் சென்றார்களே, அவர்கள் பெயர் என்ன தெரியுமா, நான் எழுத மறந்து விட்டேன் ’ என்று கேட்க, அங்கு ஏற்கனவே வேலை செய்து கொண்டிருந்த பெண் ‘ எனக்கெப்படி தெரியும்? நீயல்லவா ஒழுங்காக எழுதி வைத்துக்கொள்ள வேண்டும்? ’ என்றது. கேட்டுக்கொண்டிருந்த எனக்கு தலை சுற்றியது. ‘சரி தான் மறுபடியும் ஒரு அனுபவமா?’ என்று சலித்துப்போனது மனது. நமது இரத்தப் பரிசோதனையின் ரிசல்ட் ஒழுங்காக வருமா என்ற சந்தேகம் தானாக வந்தது. அதற்கப்புறம் ECG பரிசோதனைக்காக என் கணவர் உள்ளே போக, நான் ரிசப்ஷன் அருகே காத்திருந்தேன். அப்போது ஒரு பையன் வந்து, ‘ உள்ளே போயிருப்பவர் வந்ததும் இவர்களுக்கு [எனக்கு] ECG எடுத்து விடு’ என்றதும் அந்தப்பெண் ‘எனக்குத் தெரியாது ECG எடுக்க’ என்றது. அந்தப் பையன் முறைத்துப்பார்த்தவாறே சென்று விட்டான். அதே மாதிரி, எனக்கு ECG எடுக்க உள்ளே வந்த அந்தப் பெண் என்னென்னவோ பட்டன்களைத் தட்டி எதுவும் புரியாமல் வெளியே சென்று விட்டது. வேறு பெண் ஒன்று மொபைலில் பேசிக்கொண்டே வந்தது. பேசியவாறே பட்டன்களைத் தட்டியது. என் கணவர் சத்தம் போட்ட பிறகு தான் பேச்சை நிறுத்தியது.

வெளியே வந்ததுமே அந்த இன்ஷூரன்ஸ் நிறுவனத்தை அழைத்து எல்லாவற்றையும் சொல்லி இனியாவது உங்கள் நிறுவனத்தில் நம்பிக்கை வைத்து இணைய வருபவர்களுக்கு ஒரு தரமான மருத்துவமனையை அடையாளம் காட்டுங்கள் என்று கடிந்து கொள்ள வேண்டியதாயிற்று.

பி.கு: அந்த மருத்துவ மனைக்கு, இரத்தப்பரிசோதனையின் நகலை வாங்கச் சென்ற போது, நாங்கள் புகார் செய்த பின் அந்த இன்ஷூரன்ஸ் நிறுவனம் உடனடி நடவடிக்கை எடுத்ததாகவும் அதன் பலனாக தலைமை மருத்துவர் எல்லோரையும் கூப்பிட்டு மிகவும் கடிந்து கொண்டதாகவும் நகலைக் கொடுத்த உதவியாளர் சொன்னார்.







Wednesday 15 February 2012

விருதுக்கு நன்றி!!!

அன்புச் சகோதரர் திரு.வை.கோபாலகிருஷ்ணன் அவர்களும்
http://gopu1949.blogspot.com/

அன்புச் சகோதரி திருமதி.வேதாவும்
http://kovaikkavi.wordpress.com/

எனக்கு இந்த விருதை அன்புடன் வழங்கியுள்ளார்கள்.



ஒரு சின்ன கைக்குலுக்கல்போல், நேசமான சிறு அக்கறை போல, ஊக்கமும் உற்சாகப்படுத்தும் விதமாய் இனிமையான உணர்வுகளை இந்த விருதுகள் கொடுத்திருக்கின்றன! இருவருக்கும் என் இதயங்கனிந்த நன்றி!!






எனக்குப் பிடித்த சிலவற்றைப் பகிர்ந்து கொள்வதுடன் எனக்குப்பிடித்த சிலருக்கு இந்த விருதினை வழங்கி இந்த விருதினை ஒரு சங்கிலித் தொடராக தொடர வேன்டுமென்ற நிபந்தனை!

எனக்கு எப்போதுமே பிடித்த சிலவற்றை இங்கே பகிர்கிறேன்.

1. இசை.

கர்நாடக இசை, மெல்லிசை, திரையிசை, இவற்றைத் தவிர மலையாள திரைப்படங்களின் பாடல்கள், பாகிஸ்தானிய இசை, குறிப்பாக மெஹ்தி ஹாஸன் பாடல்களில் மெய்மறந்து லயிப்பதில் விருப்பம் அதிகம்

2. புத்தகங்கள் படிப்பது.

இது எனக்கு சாப்பாடு போல. தமிழிலும் ஆங்கிலத்திலும் இலக்கியங்களும் கவிதைகளும் புதினைங்களும் எப்போதுமே படித்துக்கொண்டேயிருப்பேன்.

3. சமையல்.

இந்த நிமிடம் வரை, புதிது புதியாய் சமையல் வகைகளை செய்து பார்க்கும் ஆர்வம் குறைந்ததில்லை.

4. ரசித்தவற்றை அன்புக்குரியவர்களிடம் பகிர்ந்து அதை மறுபடியும் ரசிப்பது.

5. ஓவியம்.

6. பாரதியின் கவிதைகள்.

7. இதமான நட்பு.

இனி எனக்குப்பிடித்த சில வலைப்பூக்களுக்கு இந்த விருதினை அளிக்க வேண்டும். எல்லா வலைப்பூக்களுமே தனிச்சிறப்புக்கள் கொண்டவை. எதையுமே தனித்துப்பார்க்க இயலாது. நிறைய வலைப்பூக்களை இங்கே பட்டியலிட முடியாதென்பதால் வித்தியாசமான சில வலைப்பூக்களை மட்டும் இங்கே குறிப்பிட்டு இந்த விருதினை அளிக்கிறேன்.

1. ஆறறிவு உள்ள மனிதர்களைக்காட்டிலும் ஐந்தறிவுள்ள ஜீவன்கள் பால் மிகுந்த பிரியமும் கிட்டத்தட்ட அவற்றுக்காகவுமே ஒரு வலைப்பூவை நடத்தி வருபவர் அதிரா. இவரின் வலைப்பூ: என் பக்கம்- www.gokisha.blogspot.com


2. சுந்தரத் தமிழின் சுவை குன்றாது தன் அனுபவங்களை அழகுற எழுதி வருபவர் நிலாமகள். இவரின் வலைப்பூ: பறத்தல்-பறத்தல் நிமித்தம்- www.nilaamagal.blogspot.com


3. தன் ஒவ்வொரு வலைப்பூவிலும் நகைச்சுவை மிளிர, படிப்பபவர்களை சிரிக்க வைக்கும் சகோதரர் ஆரண்யநிவாஸ் ராமமூர்த்தி. இவரின் வலைப்பூ: “ஆரண்யநிவாஸ்” ஆர்.ராமமூர்த்தி- www.aaranyanivasrramamurthy.blogspot.com


4. வண்ணக்குழைவுகளிலும் பென்சில் கோடுகளிலும் உயிர்ச் சித்திரங்களை உருவாக்கி நம்மை அசத்தி வருபவர் ப்ரியா. இவரின் வலைப்பூ: என் மனதிலிருந்து- www.enmanadhilirundhu.blogspot.com


5. எழுத்தாளரும் கவிஞருமான கே.பி.ஜனா. இவரின் வலைப்பூ: கே.பி.ஜனா- www.kbjana.blogspot.com


விருது பெற்ற அன்புத் தோழமைகள் அனைவருக்கும் இதயங்கனிந்த அன்பு வாழ்த்துக்கள்!!


Wednesday 8 February 2012

வித்தியாசமானதொரு கோவில்!!

மறைந்த எழுத்தாளர் கல்கி தனது வரலாற்றுப்புதினமான ‘பொன்னியின் செல்வனில்’ கதை முழுவதும் பின்னால் மறைந்திருந்தே ராஜராஜசோழனுக்கும் அவரின் தந்தையார் சுந்தர சோழனுக்கும் காவல் தெய்வமாக விளங்கிய ‘மந்தாகினி’ என்ற ஒரு பெண்ணைப்பற்றி அருமையாக சித்தரித்திருப்பார்.



சிறு வயதில் அவரை சுந்தர சோழன் இலங்கை சென்றிருந்தபோது காந்தர்வ மணம் புரிந்ததாயும், பின் அவரை நிர்க்கதியாய் தவிக்க விட்டதாயும் அதனால் ஏற்பட்ட மன உளைச்சலால் தொடர்ந்த உறக்கமற்ற இரவுகள், அவரையே தெய்வமாக வழிபட்ட மந்தாகினி, சுந்தர சோழரை தன்னுயிரைத்தந்து இறுதியில் அவர் காப்பாற்றியது என்று அவரின் கதை நிகழ்வுகள் உணர்ச்சிக்குவியல்களாய் இறுதி வரை தொடர்ந்து வந்திருக்கும். இந்த மந்தாகினி தேவியாருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ராஜராஜசோழன் கோவில் எடுத்து, தஞ்சை எல்லையில் காவல் தெய்வமாக வைத்து பூஜித்ததாய் கேள்விப்பட்டிருக்கிறேன். ரொம்ப நாட்களாய் அங்கே போய் பார்த்து வர எண்ணியும் சென்ற மாதம் தான் அது நிறைவேறியது. அந்தக் கோவில்தான்


செங்கமல நாச்சியம்மன் கோயில்!!



கோவிலின் முகப்பு
சிங்கள நாச்சியம்மன் கோயில் என்றும் செங்காச்சியம்மன் கோவில் என்றும் செங்க நாச்சியம்மன் கோவில் என்றும் அழைக்கப்படுகின்றது.

தஞ்சை நகரத்தில் திருச்சி செல்லும் சாலையில் மேம்பாலம் தாண்டி ராஜப்பா நகர் என்பதுதான் தஞ்சை நகரத்தின் நகர்ப்புற வளர்ச்சியில் முதன் முதலாகத் தோன்றியது. இதையடுத்து வல்லம் வரையில் ஒரே முந்திரிக்காடாக இருந்திருக்கிறது. இந்தக் காட்டுப் பகுதியில் இருந்ததுதான் செங்கமல நாச்சியம்மன் எனும் சிங்கள நாச்சியம்மன் கோயில். தற்சமயம் இந்தக் கோயில் குந்தவை நாச்சியார் அரசினர் பெண்கள் கல்லூரிக்கு மிக அருகாமையில் அமைந்திருக்கிறது. மக்கள் இதனை செங்கநாச்சியம்மன் அல்லது செங்காச்சியம்மன் என்றே அழைக்கின்றனர். இந்தக் கோயிலுக்கு நேர் வடக்கு திசையில் அப்போது காடாக இருந்த [ இப்போதைய மருத்துவக் கல்லூரி ] சாலையில் ஓர் நடுகல் நடப்பட்டு, அந்த இடத்தைத் தாண்டும் போது, இந்த அம்மனை வழிபடுவதற்காக அமைக்கப்பட்டிருந்தது.


கோவிலின் உட்புறம்
இந்த ஆலயம் வடக்கு நோக்கிக் கட்டப்பட்ட ஆலயம். சுற்றுப்புற மக்களால் மிக சிறப்பாக வழிபாடு நடத்தப்படும் ஆலயமாக இது திகழ்கிறது. இங்கு மக்கள் மிகவும் பயபக்தியோடும், சுத்தமாகவும் பால்காவடி எடுத்து வந்து வழிபாடு செய்வதை இப்போதும் காணலாம். விசேஷ நாட்களில் பெண்கள் இவ்வாலயத்தின் முன்புறமுள்ள குளக்கரையில் திறந்த வெளியில் செங்கல் அடுப்பு வைத்து பொங்கலிட்டு வழிபடுகிறார்கள். தஞ்சை நகரத்திலுள்ள பல தெருவினர் இந்தக் கோயிலுக்கு பாற்குடம் காவடி எடுத்து வழிபடுவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர்.

இது குறித்து வேறொரு ஒரு வரலாற்றுச் செய்தியும் உண்டு.

ஒரு காலத்தில் இங்கு ஆட்சிபுரிந்து வந்த ஒரு சோழ அரசன் ஒரு சிங்கள அரசனை பலமுறை அழைத்தும் , அவரை அவமரியாதை செய்வதைப் போல வராமல் இருந்துவிட்டு இறுதியில் இங்கு தன் மனைவி, மந்திரிகளுடன் வந்திருக்கிறான். சக்கரவர்த்தியிடம் இருந்த பயத்தின் காரணமாகத் தன் உடன் வந்தவர்களை தலைநகரான தஞ்சையை ஒட்டிய இந்தக் காட்டுப் பகுதியில் தங்க வைத்துவிட்டு அவன் மட்டும் ஒரே ஒரு அமைச்சரைத் துணைக்குக் கூட்டிக் கொண்டு அரண்மனை சென்று சக்கரவர்த்தியைக் கண்டானாம்.



உள்ளிருக்கும் காவல் தெய்வமொன்றின் ஓவியம்!
உள்ளே சென்ற சிங்கள அரசனுக்கு என்ன நேர்ந்ததோ, அவன் வெளியே வரவேயில்லை. வெளியில் காத்திருந்த அமைச்சருக்கு தங்கள் அரசன் கொல்லப்பட்டிருக்க வேண்டுமென்று பயம் ஏற்பட்டு அவ்விடத்தை விட்டு அகன்று ராணியிடம் வந்து உடனே நாடு திரும்பிவிட வேண்டுமென்று கூற ராணி மட்டும் அரசனுக்கு ஏற்பட்ட கதியைத் தெரிந்து கொள்ளாமல் திரும்ப முடியாது என்று கூறியிருக்கிறாள். பிறகு அவ்விடத்திலேயே ராணி தனது உயிரை அழித்துக்கொண்டு விட்டதாகவும் தெரிகிறது. அந்த சிங்களப் பெண்மணி உயிர்த்தியாகம் செய்த அந்த இடத்தில்தான் சிங்கள நாச்சியார் கோயில் என்ற பெயரில் இந்த ஆலயம் எழுப்பப்பட்டதாக செய்திகள் கூறுகின்றன. இந்த ராணியின் தியாகம் பற்றிய அந்தக் கால கிராமப்புறப் பாடல்கள் தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகத்தில் இருப்பதாகவும் கூறுகிறார்கள். கல்வெட்டுகளிலும் இந்தச் செய்தி காணப்படுவதாகவும் கூறுகிறார்கள்.


பதினெட்டாம்படி கருப்பணசாமி
இந்த ஆலயத்தில் அம்மன் அமர்ந்த கோலத்தில் நான்கு கைகள், கைகளில் சூலம், பாசம், கபாலம் ஆகியவையுடன் அம்மனின் தோற்றம் உக்கிரமாக இருப்பதைப் பார்க்கலாம்.



மதுரை வீரன்
இங்கே மதுரைவீரனுக்கு சிலை உள்ளது. இங்குள்ள சூலம், அடைக்கலம் காத்த ஐயனார் என்று வழிபடப்படுகிறார். பதினெட்டாம்படி கருப்பணசாமி என்றொரு சுதைச் சிற்பமும் இருக்கிறது. இவர் புலி மீது அமர்ந்திருப்பது போல அமைக்கப்பட்டிருக்கிறது. உள்ளே சிறிய பிரகாரம் சுத்தமாக வைக்கப்பட்டிருக்கிறது.


காவல் தெய்வம் வேதமுனி
இக்கோயிலின் முன்பாக ஒரு குளம் இருக்கிறது. அதன் கரையில் தென்மேற்கு மூலையில் சுதையாலான ஒரு பெரிய 12 அடி உயரமுள்ள வேதமுனி எனும் சிலை தோள்களில் பச்சைக்கிளிகளுடனும் காதுகளில் நாகங்களுடனும் வலது கையில் உயர்த்திப் பிடித்த வாள் ஒன்றுடன் ஒரு கல் திண்ணையில் காவல் தெய்வம் போல அமர்ந்திருக்கிறது. இடக்கையில் ஒரு புத்தகம். இருப்பது ஆச்சரியத்தை அளிக்கிறது!!


செங்கமல நாச்சியம்மன்
 தை மாதத்தில் செவ்வாய்க்கிழமைகளில் கரகம் எடுக்கப்படுகிறது. சிம்ம வாகனத்தில் அம்மன் வீதிவலம் வருவதுண்டு. ஆடிமாதத்தில் காப்புக்கட்டியும் மற்ற பல மாதங்கள் பல தெருவார்கள் வந்து வழிபாடு செய்தும் வருகிறார்கள். பலகாலம் இங்கு ஆடு, கோழி இவை பலியிடப்பட்டு வந்தன. இதுவும் தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்துக்கு உட்பட்ட கோயில் எனினும் பெரும்பாலன விசேஷங்கள் பொதுமக்களின் காணிக்கைகள் மூலமே நடத்தப்பட்டு வருகின்றன!!



கோபுரத்தின் அழகு!
ஒரு காவல் தெய்வத்துக்கு, ஒன்றுக்கு பத்தாய் அதைச் சுற்றிலும் காவல் தெய்வங்கள் இருக்கும் இந்த செங்க நாச்சியம்மன் கோவில் மிக மிக வித்தியாசமானதொரு கோவில்தான்!!

Friday 3 February 2012

அர்த்தமுள்ள ரசனைகள்!!

சமீபத்தில் ரசித்த சில விஷயங்களின் தொகுப்பு இது! ஒவ்வொரு விஷயமும் ஒவ்வொரு விதத்தில் பாதித்தது மனதை!




இயக்குனர் லிங்குசாமி தன் வாழ்க்கையை செம்மையாக்கியது ஒரு புத்தகம்தான் என்கிறார். இவர் ஒரு வார இதழில் எழுதிய கருத்துக்கள் மிகவும் யோசிக்க வைத்தது.

உண்மை தான்! பிரச்சினைகள் எல்லோரது வாழ்க்கையிலும் ஒன்றல்ல, நிறையவே இருக்கின்றன. சில சமயங்களில் எதை சரியாக்குவது, எதை சமாளிப்பது, எதைத் தீர்த்தால் எது சரியாகும் என்று குழம்பவே செய்கிறோம். இவரின் அனுபவமும் யோசனையும் நிச்சயம் எல்லோருக்குமே பலனளிக்கும், எனக்கும் சேர்த்துத் தான்!!

வேலையில்லாமல் தொடர் நிகழ்வுகளாக ஏமாற்றங்களும் அதிர்ச்சிகளும் நிர்ப்பந்தகளும் வாழ்க்கையைத் தாக்கிக்கொண்டேயிருந்தபோது, இயக்குனர் லிங்குசாமி ஒரு பலவீனமான மன நிலையில் தற்கொலையைப்பற்றியும்கூட யோசித்திருக்கிறார். பணப்பற்றாக்குறை, சினிமா வாய்ப்பு தேடி அலைந்து தொடர்ந்த ஏமாற்றங்கள், சிறு வயதிலேயே முடிந்த திருமணத்தால் இரண்டு வீட்டிலும் மனைவியை சென்னைக்கு அழைத்துப்போகச் சொல்லி தொடர்ந்த நெருக்கடி என்று மனம் தவித்துக்கொண்டிருந்த நிலையில்தான் ‘ நீ இறந்தால் உனக்காக அழுபவர் யாரோ?’ என்ற மொழிபெயர்ப்பு புத்தகத்தை [who will cry when you die?] படிக்க நேர்ந்திருக்கிறது. இந்தப் புத்தகம் தன் வாழ்க்கையையே புரட்டிப்போட்டதாகச் சொல்லுகிறார் இவர். தன்னம்பிக்கைத் தொடர்களும் பிரச்சினைகளைக் குறித்த அலசல்களும் ஆய்வுகளும் புத்தகங்களாக ஏற்கனவே நிறைய வந்திருந்தாலும் இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் ராபின் ஷர்மா பிரச்சினைகளைக் கையாளும் விதம் பற்றி எழுதியிருந்த விதம் அவரை மிகவும் ஈர்த்திருக்கிறது. ராபின் ஷர்மா எழுதியிருந்ததன் முக்கிய சாராம்சம்:

“பிரச்சினைகளைப்பற்றியே சிந்திக்காமல் அவற்றை முதலில் பட்டியலிடுங்கள். அவற்றில் எது தலையாய பிரச்சினை என்று அப்போது தான் உங்களுக்கு புலப்படும். அதைத் தீர்க்க முற்பட்டால் உங்கள் வாழ்க்கையில் வெற்றி கிட்டும்.’

மீண்டும் மீண்டும் படிக்க, மனதில் தெளிவு ஏற்பட்டது அவருக்கு. தன் பிரச்சினைகளை பட்டியலிட்டார். ஆயிரம் பிரச்சினைகள் இருந்தாலும் மூன்று பிரச்சினைகள் தான் தலையாய பிரச்சினைகள் என்று புலப்பட்டது.

1. மனைவியை சென்னைக்கு எப்போது அழைப்பது?

2. படம் எப்போது செய்வது?

3. அதே கதையா அல்லது புதிய கதையா?

நன்கு யோசித்ததில் முதலில் படம் செய்தால் போதும், மற்றவை தானாகவே அமைந்து விடும் என்ற உண்மை புலப்பட்டது. எந்தெந்த கம்பெனிகளில் கதை சொல்லியிருக்கிறோம், எங்கெங்கு சொல்லவில்லை என்று கடும் முயற்சி எடுத்து இன்னொரு பட்டியலிட்டபோது, மறுபடியும் வெளிச்சம் தென்பட்டது. இந்த பட்டியல் தயாரித்த இருபதாம் நாள் சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரித்த ‘ஆனந்தம்’ திரைப்படத்தில் இயக்குனராக அமர்ந்து விட்டார் இயக்குனர் லிங்குசாமி. அதற்கப்புறம் தன் வாழ்க்கையில் ஆனந்தம்தான் என்று சொல்லும் இவர், இந்தப் புத்தகத்தை தான் வாசித்தேன் என்று சொல்வதை விட, நேசித்தேன் என்று சொல்வதை விட, சுவாசித்தேன் என்று சொல்வது தான் சரியானது என்றும் மகிழ்வுடன் குறிப்பிடுகிறார்.



2. தேவர் மகன் படத்தில் வரும் வசனம் கூட இன்றைய வாழ்க்கைக்கு எது அர்த்தமுள்ளது என்பதை எத்தனை அழகாகக் காட்டுகிறது!! நாம் விதைக்கும் ஒவ்வொரு நல்ல விஷயமும் எத்தனை தலைமுறைக்கு பயன் தருகின்றது!!

ரசித்த தேவர் மகன் திரைப்படத்தில் வரும் ஒரு வசனம்:

"எல்லா பயபுள்ளையும் ஒரு நாளைக்கு சாக வேண்டியது தான். வாழறது முக்கியம்தான். ஆனா மத்தவங்களுக்கு பயனுள்ள வாழ்க்கையா வாழ்ந்துட்டு செத்துட்டு போறது தான் அந்த சாவுக்கே பெருமை!!


விதை விதைச்சவுடனேயே பழம் சாப்பிடணும்னு நினைக்க முடியுமோ? இன்னிக்கு நான் விதைக்கிறேன். நாளைக்கு நீ பழம் சாப்பிடுவே. அப்புறம்? உன் பையன் சாப்பிடுவான். அதற்கப்புறம்? அவன் பையன் சாப்பிடுவான். அதையெல்லாம் பார்க்கறதுக்கு நான் இருக்க மாட்டேன். ஆனா விதை நான் போட்டது."

3. ரசித்த வாசகம்:

ஒரு மரத்தால் ஆயிரம் தீக்குச்சிகளை உருவாக்க முடியும்.

ஒரு தீக்குச்சியால் ஆயிரம் மரங்களை அழிக்க முடியும்.


4. பொதுவாக இனிப்பு வகைகள், சாக்கலேட்டுகள் சாப்பிடுவதால் உடல் நலத்திற்கு தீங்கு, உடல் பருக்கும் என்று தான் கேள்வியுற்றிருக்கிறோம். ஆனால் இந்த ஆய்வு நம்மை திகைக்க வைக்கிறது!

பெண்கள் சாக்கலேட் சாப்பிட வேண்டும்!!!

33000 பெண்களிடம் எடுக்கப்பட்ட புதிய ஆய்வின்படி, சர்க்கரை, பால் குறைவாகவும் கோக்கோ அதிகமாயும் உள்ள சாக்கலேட்டுகள் தினமும் 45 கிராம் சாப்பிட்டு வருபவர்களில் 1000 பேர்களில் 3 பேருக்கு மட்டுமே பக்கவாதத்துக்கான அறிகுறிகள் தென்படுவதாக ஸ்வீடன் நாடு சொல்கிறது.

படங்கள் உதவி: கூகிள்