துபாயில் ஏவுகணைகள்!!
28ந்தேதி
, சனிக்கிழமை
எப்போதும் போல அமைதியாகவே விடிந்தது. ஆனால் மாலை தொலைக்காட்சியில்
இஸ்ரேல்-அமெரிக்கக்கூட்டணி ஈரானில் உள்ள பெண் குழந்தைகள் படிக்கும் பள்ளியை
குண்டுகளால் தாக்கியதில் 85 மரணங்கள் ஏற்பட்டுள்ளன என்ற செய்தி திடீர் பதற்
றத்தைக் கொண்டு வந்தது. தொலைக்காட்சியை விட்டு நகராமல்
பார்த்துக்கொண்டேயிருந்தோம். சிறிது நேரத்திலேயே, ‘மத்திய
கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்காவின் ராணுவதளம், கடற்படை
தளம், விமானதளங்கள் இருக்கும் சவுதிஅரேபியா, பஹ்ரைன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார், சிரியா உள்பட பிற நாடுகள் மீது ஏவுகணைகள்
மற்றும் ட்ரோன்கள் மூலம் ஈரான் 'அட்டாக்' செய்து வருகிறது ‘ என்ற தகவல்
மனதை கலக்கியது. இங்கே பூர்ஜ் அல் அராப் என்ற புகழ்மிக்க நடச்சத்திர ஹோட்டலில்
புகை எழுந்ததை ப்பார்த்தோம். துபாய் ஏர்ப்போர்ட்டிலிருந்தும் புகை ! பலவாறு
பேசியபடியே பதட்டத்துடன் ஒரு வழியாக கண் அயர்ந்தோம். நடு இரவில் 12 மணிக்கு
எச்சரிக்கை மணி அனைவரது தொலைபேசியிலும் பயங்கர சப்தத்துடன்ஒலித்தது. வீட்டை விட்டு
யாரும் வெளியே வர வேண்டாம் என்பதே அது. மறுபடியும் உறக்கம் தொலைந்தது. வேண்டிய
சாமான்களை வாங்கி நிரப்பி விடலாமா, நகைகள், பாஸ்போர்ட்டுகளை எடுத்து பத்திரமாக தயார் நிலையில் வைத்துக்கொள்ளலாமா என்ற
விவாதங்கள் தொடர்ந்தன. மறு நாள் காலை துபாய் அரசு .’ எந்த
பொருளையும் ஸ்டோர் பண்ணி வைக்காதீர்கள். அரசு எல்லாவற்றையும் கட்டுப்பாட்டில்
வைத்துள்ளது. வீட்டை விட்டு வெளியே மட்டும் செல்ல வேண்டாம் என்று அறிவித்தது.
தற்காலிகமாக அனைத்து விமானப்பயணங்களும் நிறுத்தப்பட்டு விமானங்கள் முடக்கப்பட்டு,விமான நிலையங்கள் மூடப்படுவதாக அரசு அறிவித்தது.
ஞாயிறு முழுவதும் அங்கங்கே வெடிக்கும் சப்தங்களும் அவ்வப்போது சின்ன
சின்ன தீப்பிழம்புகளும் துபாய்க்கு வெளியே நடந்து கொண்டிருந்தது. நாங்கள்
குடியிருக்கும் இடத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் ஒரு முறை குண்டு
வெடிப்பது போல சப்தம் கேட்டது.
திங்கள் கிழமை அமைதியாகக் கடந்து சென்றது! அரசு கடந்து சென்ற
நிகழ்வுகளைப்பற்றி விளக்கமளித்தது. ஈரான் 500க்கும் மேற்பட்ட குண்டுகள், பல நூறு டிரோன்கள் செலுத்தியதாகவும் அவற்றில் பெருமளவு வானிலேயே
பாதுகாப்புத்துறையால் அழிக்கப்பட்டு விட்டதாகவும் அவற்றில் அழிந்தது போக மிஞ்சிய
துகள்கள் தான் அங்கங்கே வந்து விழுவதாகவும் அதன் விளைவாக ஏற்பட்ட தீயும் புகையும்
வெடிச்சப்தங்களும் தான் எல்லோரும் காண்பது என்றும் துரதிர்ஷ்டவசமாக ஒரு மரணமும் 11
நபர்கள் காயமடைந்துள்ளதாகவும் அறிவித்தது.
இன்றும் அமைதியாக கடந்து போயுள்ளது. இங்கு எல்லா கடைகளும்
இயங்குகின்றன. உணவகங்கள் [ எங்களுடைய உணவகம் உள் பட] வழக்கம்போல
இயங்கிக்கொண்டிருக்கின்றன.
தூரத்தில் ஈரான், அருகேயுள்ள இஸ்ரேல், லெபனான் என்று
இன்னும் தாக்கிக்கொண்டிருக்கிறது.
இந்த நாடு டூரிசத்திற்கு பெயர் போனது என்பதும் அதன் வருவாயே நாட்டின்
பொருளாதாரத்திற்கு அச்சாணி என்பதும் அனைவருக்கும் தெரிந்திருக்கும்.
இங்குள்ள முக்கிய விமானமான எமிரேட்ஸ் மட்டுமே அது வேலை
செய்யாமலிருக்கும்போது ஒரு நிமிடத்திற்கு ரூபாய் 8 மில்லியன் பணத்தை இழக்கின்றது.
பிரிட்டிஷ் பயணிகள் மட்டுமே லட்சக்கணக்கில் பயணம் செய்ய முடியாமல்
ஹோட்டலிலேயே தங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். அப்படியானால் உலகம்
முழுவதிலிருந்தும் வந்துள்ள பயணிகள் எத்தனை எத்தனை ஹோட்டல்களில் ஊருக்கு திரும்ப
முடியாமல் தவித்துக்கொண்டிருப்பாரர்கள்! இவர்கள் அனைவருக்குமே கடந்த நான்கு
நாட்களுக்கு எந்த கட்டணமும் வாங்கக்கூடாது என்று அரசு கட்டளையிட்டிருக்கிறது! அப்படி
நடு வழியில் இங்கே சிக்கித்தவிக்கும் இந்தியர்கள், வெளி நாட்டவர்களை கொஞ்சம் கொஞ்சமாக
அவரவர்கள் சொந்த நாட்டிற்கு அனுப்பும் வேலை நேற்றிலிருந்து தொடங்கியிருக்கிறது.
1990ம் வருடம் ஆகஸ்ட் மாதம் நடந்த குவைத் இராக்
போர் நினைவுக்கு வருகிறது. கிட்டத்தட்ட 800 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் குவைத்
பாதிக்கப்பட்டு நாடிழந்த மக்கள் தப்பிப்பதற்காக ஜோர்டான். அம்மான், செளதி அரேபியாவிற்கு புலம் பெயர்ந்ததெல்லாம் நடந்த போது ஏற்பட்ட
நெருக்கடியில் நானும் என் மகனும் மட்டும் ஊருக்கு வந்து ஒரு வருடம் தங்கியிருந்தோம்.
ஆனால் துபாய் வாழ்க்கையில் என்றுமே பிரச்சினைகள் இருந்ததில்லை. சட்டத்திற்கு உட்பட்டு
வியாபாரம் செய்து வாழ்க்கை அமைதியாகத்தான் சென்று கொண்டிருந்தது. வாழ்வாதாரத்தை சிறக்க
வைத்தது இந்த நாடு தான். இந்தியர்களுக்கான மரியாதை என்றுமே குறைந்ததில்லை.
இப்போதும் வாழ்க்கை இதுவரை அமைதியாக சென்று கொண்டிருக்கிறது. கடந்த 50
வருடங்களாக இங்கே வசித்து வருகிறோம். வெளி நாடு என்பதையே மறந்து சொந்த நாடு போல உணர்வுடன்
வசித்து வருவதற்கு காரணமே துபாய் ஒரு அமைதி பூங்காவாக இருந்தது என்பது தான்! இனியும்
அந்த நிலைமை நீடிக்கும் என்ற நம்பிக்கையில் தான் இங்கே அனைவரும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
பார்க்கலாம்!!

No comments:
Post a Comment