திருவரங்கத்தில் சமய ஒற்றுமை!!
திருவரங்கத்தில் தர்மவர்மனால் ஏற்கெனவே எழுப்பப்பட்ட திருவரங்கனின் முதல் கோயில், காவிரி வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டதால், பின்னர் கிள்ளிவளவனால் புதுப்பிக்கப்பட்டதுதான் இப்போது இருக்கும் திருவரங்கம் என்ற ஸ்ரீரங்கம்.
ஜடவர்ம சுந்தர பாண்டியனின் மறைவுக்குப் பின், தமிழர் ஆட்சி பல கைகளுக்கு மாறிட, இறுதியாக முகலாயர்களின் படையெடுப்பு 1310-ம் ஆண்டு நிகழ்ந்திருக்கிறது. டெல்லி சுல்தானின் தலைமைத் தளபதியான மாலிக் காஃபூரின் முரட்டுத்தனமான தாக்குதலில் பாண்டியர்கள் வீழ்ந்து விட, திருவரங்க கோயிலின் கருவூலத்தில் இருந்த விலையுயர்ந்த பொருட்கள் மற்றும் ஆபரணங்களைக் கைப்பற்றிய மாலிக் காஃபூர், தனது வெற்றியின் நினைவாக ஆலய உற்சவ மூர்த்தியின் ஐம்பொன் சிலையையும் டெல்லிக்குக் கொண்டு செல்கிறான்.
டெல்லி அரசவையில் அனைவருக்கும் முன்னால், பாண்டிய நாட்டிலிருந்து தான் கொண்டு வந்த அளவற்ற செல்வத்தை சுல்தானுக்குப் பரிசளிக்கிறான் மாலிக் காஃபூர். அப்போது மாலிக் காஃபூர் கொண்டுவந்த அரங்கன் சிலையும், அதன் முகத்தில் இருந்த வசீகரமான பொலிவும் சுல்தானின் செல்லமகள் சுரதானியை ஈர்க்க, அவள் "வாப்பா... இந்த அழகிய சிலையை நான் வைத்துக் கொள்கிறேன்!" என்று தந்தையிடம் கேட்கிறாள்.
தந்தையும் அதற்கு சம்மதிக்க, அரங்கனின் சிலையை எடுத்துக்கொண்ட சுரதானி, அதைத் தன்னுடனேயே தனது அறையில் வைத்துக் கொள்கிறாள். ஆனால், நாள்கள் செல்லச் செல்ல அரங்கனை சிலையாக இல்லாமல் உயிருள்ளதாகவே கருதுகிறாள் சுரதானி. அத்துடன் அரங்கனின் சிலையை நாளும் குளிப்பாட்டி, ஆடையுடுத்தி, மலர்களால் அலங்கரித்து, உணவு சமர்ப்பித்து என ஒவ்வொரு நாளும் விழித்தது முதல் உறங்கும்வரை கிடைக்கும்போது எல்லாம் அரங்கனுடன் நேரம் செலவிட ஆரம்பிக்கிறாள். மெல்ல, தன்னையறியாமல் அரங்கன் மீது காதலும் கொள்கிறாள்.
அதேசமயம், அரங்கன், ஆக்கிரமிப்பாளர்களுடன் செல்வதைப் பார்த்த, திருக்கரம்பனூரைச் சேர்ந்த ஒரு பெண்மணி அவர்களைப் பின் தொடர்ந்தாள். அவள் மூலமாகத்தான் அரங்கன் தில்லிக்குச் சென்றுவிட்ட விவரம் இங்கிருப்போருக்குத் தெரிய வந்தது.
இவ்வாறு, அரங்கனை மீட்டுக் கொண்டுவர தன்னாலியன்ற சேவையினைப் புரிந்ததால் அந்தப் பெண்மணியை ‘பின் சென்ற வல்லி’ என்று போற்றி, வைணவம் பாராட்டுகிறது.
தலைமை பட்டருடன் ‘பின்சென்ற வல்லி’ என்ற அந்த நாட்டியப் பெண்ணும் அவளது இசை நாட்டிய குழுவுமாக ஒரு அறுபது பேரும் டில்லி சென்று அரசரை இசையினாலும் நாட்டியத்தினாலும் மகிழ்விக்கிறார்கள். அரசனும் மகிழ்ந்து அவர்களுக்கு அளவற்ற செல்வங்களை வழங்க முடிவெடுக்கும்போது, தங்களுக்கு பொன்னும் பொருளும் வேண்டாம் என்று மறுத்த அவர்கள், அன்று ஏகாதசி என்பதால் தங்களுக்குப் பிடித்தமான அரங்கனின் சிலையைத் தந்தால் மகிழ்வோம் என்று சொல்ல, சுல்தானும் தனது வாக்குத் தவறாமல் இருக்க அதற்கு ஒப்புக்கொள்கிறார். சிலையைக் கொடுக்க சுரதானி ஒப்புக்கொள்ள மாட்டாள் என்பதால், இளவரசி உறங்கியபின், அவளுக்குத் தெரியாமல் அவர் அரங்கனை எடுத்துக்கொடுக்க, திருவரங்கத்திற்குத் திரும்புகிறது தலைமை பட்டருடன் பயணித்த இசைக்குழு.
காலையில் கண்விழித்த இளவரசி சுரதானி அரங்கன் சிலையைக் காணவில்லை என பதறியழுகிறாள். சிலையை மீட்டுத்தருமாறு தந்தை சுல்தானைக் கேட்கிறாள். ஆனால் சுல்தான் அதை மறுத்துவிட மனமொடிந்த சுரதானி, உண்ணாமல், உறங்காமல், நோய்வாய்ப்பட.. வேறு வழியின்றி அவளையே தகுந்த பாதுகாப்புடன் அனுப்பி, திருவரங்கத்திலிருந்து அரங்கனைத் திரும்பவும் எடுத்துவரப் பணிக்கிறார் சுல்தான்!
அதேநேரம், இவர்கள் வரும் தகவலை முன்கூட்டியே அறிந்த திருவரங்கத்தின் தலைமை பட்டர், ஆலயத்திலேயே ஒரு வில்வமரத்தடியில் பத்மாவதித் தாயார் சிலையைப் புதைத்துவிட்டு, அரங்கனோடு தலைமறைவாகி விடுகிறார்.
குதிரையில் பயணித்து திருவரங்கம் வந்துசேர்ந்த சுரதானி, அரங்கன் கோயிலில் உற்சவர் சிலை இல்லாமல் கோயில் மூடியிருப்பதைக் கண்டு, அங்கேயே மயக்கமடைந்து விழுகிறாள். அவள் உடலிலிருந்து ஓர் ஒளி எழுந்து, அரங்கனுடன் சேர்ந்ததைக் கண்டதாக அங்குள்ளவர்கள் சொல்கிறார்கள்.
தங்களது பிரிய இளவரசி இறந்ததை ஏற்றுக்கொள்ள முடியாமல் கோபம் கொண்ட மாலிக் காஃபூர், கோயிலைச் சேர்ந்தவர்கள் அனைவரையும் அங்கேயே கொன்றுவிடும்படி உத்தரவிட யுத்தம் அங்கு நடக்கிறது.
ஆனால், உண்மையை உணர்ந்த சுல்தானோ, தனது படையை டெல்லிக்குத் திரும்புமாறு உத்தரவிடுகிறார். மேலும் தனது மகளின் அரங்கன் மீதான அன்பை உணர்ந்த அந்த சுல்தான், அவள் இறந்த அந்த திருவரங்கக் கோயிலுக்கு ஏராளமான செல்வத்தை எழுதியும் வைக்கிறார்.
ஒருநாள், தலைமை பட்டரின் கனவில் தோன்றிய அரங்கன், சுரதானியை தனது மனைவியருள் ஒருவராக ஏற்றுக் கொண்டதை அறிவிக்க, அன்றிலிருந்து அரங்கனின் நாச்சியார்களில் ஒருவராக, 'துலுக்க நாச்சியாராக' பக்தர்களால் சுரதானி ஏற்றுக்கொள்ளப்படுகிறார்.
முகமதியருக்கு உருவ வழிபாடு கிடையாதென்பதால் அரங்கன் சன்னதியிலேயே பிரகாரத்தில் கிளிமண்டபத்திற்கெதிராக அவளை ஒரு சித்திரமாக மட்டும் வரைந்து ஒரு சன்னதியில் வைத்து ‘துலுக்க நாச்சியார்’ என்ற பெயரில் வழிபாடு நடக்கின்றது.
அரங்கமாநகரின் இதயமாம் பெரியபெருமாள் பள்ளிகொண்டிருக்கும் இடத்துக்கு அருகிலுள்ள அர்ச்சுன மண்டபத்தில் அவள் ஓவியமாய் இன்றைக்கும் மிளிர்கிறாள்.
மதம் கடந்த அந்தக் காதலின் அங்கீகாரமாக இன்றும் அரங்கனுக்கு காலையில் லுங்கி போன்ற வஸ்திரம் அணிவித்து, அவர்கள் உணவாக ரொட்டி வெண்ணை நைவேத்தியம் செய்கிறார்கள்.
இந்த ரொட்டி நம்முடையது போல் இல்லாமல் லேசாக வெல்லம் கலந்து இனிப்பாக இருக்கும்.
மிக மிக மெல்லியதாக சுவையானதாக இருக்கும். தொட்டுக் கொள்ள வெண்ணை. முதலில் துலுக்க நாச்சியாருக்கு படைக்கப்பட்டு, பின்பு அரங்கனுக்கு நைவேத்தியம் செய்யப்படுகிறது.
திருமஞ்சன காலங்களில் வேட்டிக்குப் பதில் லுங்கி வஸ்திரம்.
மற்ற கோயில்களுக்கு இல்லாத இன்னொரு சிறப்பு, அரங்கனுக்கு வெந்நீரில் மட்டுமே திருமஞ்சனம். இதன் சூட்டை மணியக்காரர் கையில் வாங்கி சரியான பதம் என்று ஆமோதித்தபின் தான் செய்ய வேண்டும்.
இடையில் 4, 5 தடவை கைலி மாற்றி கைலியைக் கட்டுவார்கள்.
சில குறிப்பிட்ட திருமஞ்சனங்களின் இறுதியில் அரையர் அந்த கைலி வஸ்திரங்களைப் பிழிவார். அந்தத் தீர்த்தத்தை எல்லோருக்கும் கொடுப்பார்கள். ஈரவாடைத் தீர்த்தம் என்று பெயர்.
முதலில் துலுக்க நாச்சியாருக்கு படைக்கப்பட்டு, பின்பு அரங்கனுக்கு நைவேத்தியம் செய்யப்படுகிறது.
மார்கழி மாத பகல்பத்து உற்சவம் பத்து நாட்களும் துலுக்க நாச்சியாரைத் தரிசிக்க(அல்லது அவர் இவரை தரிசிக்க) அந்த சன்னதியின் முன்பான படிவழியாக ஏறித்தான் ‘அருச்சுனன் மண்டபம்’ செல்வார்.
அரையர், ‘ஏழைகளுக்கிரங்கும் பெருமாள்… ஆபரணங்களுக்கு அழகுசேர்க்கும் பெருமாள்… பன்னிரு நாச்சியார் பரவும் பெருமாள்…’ என்று இழுத்து இழுத்துப் பாட மெதுவாக ஆடி ஆடி அந்தப் படியில் ஏறும் அழகைக் காண கண்கோடி வேண்டும்.
அரங்கனது நடை ஒவ்வொரு இடத்துக்கும், நேரத்துக்கும் ஒவ்வொரு மாதிரி வித்தியாசமானது.
‘திருப்பதி வடை, காஞ்சி குடை, அரங்கர் நடை’ என்றே ஒரு சொலவடை உண்டு.
எல்லாவற்றிலும் துலுக்கநாச்சியார் படியேற்றம் விசேஷமானது.
‘படியேற்ற ஸேவை’ என்றே இதற்குப் பெயர்.
மதுரை, கீழ்த்திருப்பதி போன்ற ஆலயங்கள் திருச்சுற்றில், இவளுக்கு என்று தனிச் சன்னிதிகள் பிற்காலத்தில் எழுப்பப்பட்டன.
இன்னும் ஆந்திரக் கோவில்களில் இவளை பீவி நாஞ்சாரம்மா என்று தான் வழிபடுகின்றனர்.
காதலுக்கும் அன்புக்கும் மதம் என்ற ஒன்று இல்லை என்பதை அரங்கநாதரே அகிலத்துக்கு உறுதி செய்கிறார்.