Friday 30 October 2015

பொன்வரிகள்!!!

சமீபத்தில் சுவாமி சிவானந்தர் சொன்ன சில அறிவுரைகளைப்படிக்க நேர்ந்தது. அவை எல்லாமே பொன்வரிகள் தான். மொத்தத்தில் எல்லா துன்பங்களுக்கும் மனம் தான் காரணம் என்கிறார். யோசனை செய்து பார்க்கையில் அது உண்மை தான் என்று நமக்கும் புரிகிறது. ஆனால் பல சமயங்களில் அறிவை பாசம், அன்பு, அக்கறை போன்ற உணர்வலைக‌ள் ஜெயித்து விடுகின்றன. அப்புறம் அல்லல்களுக்குக் கேட்பானேன்! இதோ அவர் சொன்ன சில அறிவுரைகள்! படித்து ரசியுங்கள்!

மன அமைதி பெற ஸ்ரீ சுவாமி சிவானந்தர் சொன்ன அறிவுரைகள்:

நீங்கள் அடிக்கடி பிறர் விஷயங்களில் தலையிடுகிறீர்களா? அவர்கள் செய்வது தவறாகவே இருக்கலாம். ஆனால் அதை முன்னிட்டு நீங்கள் ஏன் அல்லலுற வேண்டும்?

யாரையும் எதையும் குறை கூறாதீர்கள். பிறருக்குத்தீர்ப்பளிக்கும் அதிகாரம் நமக்கில்லை. உங்கள் மன அமைதியைப்பாதுகாக்க உங்கள் சொந்த வேலையில் கவ‌னம் செலுத்தினால் மட்டும் போதும்.

பயனுள்ள‌ நன்மை பயக்கும் விஷயத்தை செய்ய நாட்கணக்கில் யோசிக்காதீர்கள். அதிக யோசனை இறுதியில் நல்ல காரியங்களை செய்ய விடாமலேயே தடுத்துவிடும்.

ஆக்கப்பூர்வமான காரியங்களில் இடைவெளி ஏற்படுவது கூட, சில கவனக்குறைவான வினாடிகள் கூட வாழ்வில் உங்களைக் கீழே தள்ளி விடும். நேரத்தைப் பொன்போல பாதுகாத்து அதை மிகவும் பயனுள்ள விதத்தில் செலவழியுங்கள்.

நீங்கள் உடலளவில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தாலும் மனதை வெறுமையாக வைத்திருக்க வேன்டாம். மானசீக பிரார்த்தனைகளில், நல்ல நூல்களைப்படிப்பதில் செலவழியுங்கள். எல்லா தொல்லைகளும் மனதில் தான் ஆரம்பிக்கிறது. கடுஞ்சொற்களும் தீய செயல்களும் மனதில் தான் உதிக்கின்றன. எனவே மனதை சுத்தமாக வைத்திருங்கள். வாழ்க்கையென்னும் நதி ஸ்படிகம் போல தூய்மையாகப் பாயும்.

உங்கள் தேவைகளைப் பெருக்கிக்கொள்ளாதீர்கள். பிறகு பிச்சைக்காரனைப்போல திரியாதீர்கள். உங்கள் தேவைகளைக் குறைத்துக்கொண்டு ராஜாவைப்போல வாழுங்கள்.

காரணத்துடன் மட்டுமே பேசுங்கள். எல்லாவிதமான தேவையற்ற‌ பேச்சையும் தவிருங்கள். அளந்தே பேசுங்கள். களங்கமற்ற‌ நல்ல நோக்கம் கொண்ட வார்த்தைகளே சில சமயங்களில் தவறாகப் புரிந்து கொள்ள‌ப்பட்டு பிரிவை உண்டாக்குகின்றன. 

உங்களிடம் கேட்கப்பட்டாலன்றி எவருக்கும் புத்திமதி சொல்லப்போகாதீர்கள்.

எப்போதும் விவாதத்தில் ஈடுபடாதீர்கள். அது எப்போதுமே உருப்படியான விளைவுகளைத்தராது. மற்ற‌வர்களைப் புண்படுத்துவதுடன் சில சமயங்களில் உறவுகளிடையே தேவையற்ற‌ விவாதம் பிரிவையே உண்டாக்கி விடுகிறது.
 

Sunday 11 October 2015

கோழி திக்கடி!!!

இந்த முறை சமையல் குறிப்பிற்கு ஒரு அசைவ உணவு!

பொதுவாக கோழி சேர்த்து செய்யும் சமையலில் புலவு, பிரியாணி வகைகள் அல்லது கோழி வறுவல், குழம்பு வகைகள் என்று சமைப்போம்.

கோழி திக்கடி என்ற இந்த குறிப்பில் அரிசி உருண்டைகள் சேர்த்து கோழித்துண்டுகளுடன் சமைக்கப்படுகிறது. இதற்கு பக்க உணவோ, அல்லது சாதமோ தேவையில்லை. இதுவே முழு உணவாகிறது! இனி கோழி திக்கடியை எவ்வாறு சமைப்பது என்று பார்க்கலாம்.

கோழி திக்கடி


தேவையானவை:
கோழித் துண்டுகள்- 750 கிராம்
•வறுத்த அரிசி மாவு- 1 டம்ளர்
•மஞ்சள் தூள்- 1 ஸ்பூன்
•மிளகாய்த்தூள்- அரை ஸ்பூன்
•நறுக்கிய கொத்தமல்லி- 1 கப்
•நறுக்கிய புதினா- 1 கப்
•பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம்- 1+1/2 கப்
•மெல்லியதாக அரிந்த வெங்காயம்- அரை கப்
•பொடியாக நறுக்கிய தக்காளி- 1 கப்
•தேவையான உப்பு
•தேங்காய் விழுது- அரை கப்
•கெட்டியான தேங்காய்ப்பால்- 1 கப்
•முட்டை-1
•எண்ணெய்- 4 மேசைக்கரண்டி

•கீழ்க்கண்ட பொருள்களை அரைக்கவும்:

•ஏலக்காய்-1, பட்டை-1, கிராம்பு-1, சோம்பு-1 மேசைக்கரண்டி, தனியா-1 மேசைக்கரண்டி, மிளகாய் வற்றல்-10, சிறிய பூண்டிதழ்கள்-10, துருவிய இஞ்சி- 1 மேசைக்கரண்டி

செய்முறை:

•அரிசிமாவு வறுக்கப்பட்ட மாவாகவோ முன்னாலேயே ஆவியில் வேகவைக்கப்பட்ட மாவாக இருக்க வேண்டும். கொழுக்கட்டை மாவு அல்லது இடியாப்ப மாவு இதற்குச் சிறந்தது.
•மாவை சலித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
•முட்டையை ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து நன்கு அடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
•ஒரு அகன்ற வாணலியில் எண்ணெயை ஊற்றி சூடாக்கவும்.
•சின்ன வெங்காயம் 1 கப் மற்றும் பெரிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
•பின் அரைத்த மசாலாவை மஞ்சள் தூளுடன் சேர்த்து மெதுவான தீயில் வதக்கவும். பின் தக்காளி, புதினா, கொத்தமல்லி சேர்த்து குழைய வதக்கவும்.
•3 தம்ளர்கள் நீர், உப்பு, கோழித்துண்டுகள் சேர்த்து வேக வைக்கவும்.
•கோழி பாதி வெந்ததும் அரைத்த தேங்காய் விழுதைச் சேர்க்கவும்.
•குழம்பு நன்கு கொதித்து வருகையில் அதிலிருந்து முக்கால் தம்ளர் குழம்பை எடுத்து ஆற வைக்கவும்.
•மீண்டும் 2 கப் நீர் குழம்பில் சேர்த்து கொதிக்க விடவும்.
•ஆறிய குழம்பு, முட்டை, மீதி சின்ன வெங்காயம், பாக்கியுள்ள மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் இவற்றை சரியான அளவு உப்புடன் மாவில் சேர்த்து நன்கு மிருதுவாகப் பிசையவும்.
•சிறிய உருண்டைகள் செய்து இலேசாக தட்டி குழம்புக் கலவையில் போடவும். உருண்டைகள் எல்லாம் வேகும்வரை 10 நிமிடங்கள் குழம்பைக் கொதிக்க விடவும். உருண்டைகள் வெந்ததும் தேங்காய்ப்பால் ஊற்றவும்.
•குழம்பு கொதித்து வருகையில் அடுப்பை அணைக்கவும். 

Friday 9 October 2015

பதிவுலகத்திருவிழாவிற்கு இனியதோர் வாழ்த்து!!
புதுக்கோட்டையில் வரும் ஞாயிறன்று நடைபெற இருக்கும் வலைப்பதிவர் திருவிழாவை நினைக்கும்போது பிரமிப்பாக இருக்கிறது! வரவிருக்கும் தீபாவளிக்கு முன்னதாய் புயல் வேகத்தில் வந்து கொன்டிருக்கும் இந்த புதிய தீபாவளி, பதிவர்களின் உற்சாகம் என்னும் மத்தாப்பூக்களுடனும் செயல்திட்டங்கள் என்னும் வாண வேடிக்கைகளுடனும் பிரகாசமாக உதயமாகப்போகின்றது! பற்பல போட்டிகள், புத்த‌க வெளியீடுகள், வலைப்பதிவர் கையேடு என்று அமர்க்களப்படுத்திக்கொன்டிருக்கின்றது! தமிழறிஞர்களும் பற்பல தலைவர்களுமாய் சங்கமிக்கப்போகிறார்கள்!


வலைப்பதிவர்களின் திருவிழாவிற்கு இனிய வாழ்த்து!
பரிசுகளைப் பெறப்போகும் வல்லவர்களுக்கு புதிய வாழ்த்து!
அரங்கேறும் நூல்களுக்கு நிறைந்த வாழ்த்து!
திரைக்குப்பின் இருக்கும் கடும் உழைப்பிற்கும் முயற்சிக்கும் உற்சாகத்திற்கும் மூலகாரணங்களாய் மின்னும் நட்சத்திரங்களுக்கு
மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!!
 

Sunday 4 October 2015

அழகு மலர்கள்!!

குடும்ப நண்பர் சில அரிய அபூர்வ மலர்களின் புகைப்படங்களை அனுப்பியிருந்தார். அவற்றின் அழகும் வடிவமும் அசர வைத்ததோடு ஆச்சரியப்படுத்தவும் செய்தது!  அவற்றில் சில உங்கள் பார்வைக்கு!