Saturday 19 February 2022

முத்துக்குவியல்-66!!

 உயர்ந்த முத்து:

திருமணமாகாதவர்கள், கணவரைப் பிரிந்தவர்கள், இழந்தவர்கள், விவாகரத்தானவர்கள், குடும்பத்தாரால் கைவிடப்பட்டவர்கள் என தனிமையில் தவிக்கும் பெண்களுக்கு ஆறுதலையும், வாழ்க்கையில் வெளிச்சத்தையும் காட்டுகிற ஒரு அமைப்பு ‘வழிகாட்டும் ஒளி’.

கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், விதவைகள், விவாகரத்தான பெண்கள், திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் பெண்கள் என தனிமையுடன் வாழ்க்கையில் போராடிக்கொண்டிருக்கும் பெண்களுக்கு வழிகாட்டும் ஒளி விளக்காக விளங்கிக்கொண்டிருக்கிறார், பிரேமா. 61 வயதாகும் இவர் வங்கி அதிகாரியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். சென்னை கோடம்பாக்கத்தில் வசித்து வருகிறார். பிரேமாவின் வாழ்க்கை தனிமையில் துயரங்களை அனுபவிக்கும் பெண்களின் சோகங்களை சுமக்கும் போராட்ட பின்னணியை கொண்டது. அதில் இருந்து மீள்வதற்காக மேற்கொண்ட முயற்சிகள் அவரை சமூக சேவகியாக மாற்றி இருக்கிறது.


தன்னை போல் ஆதரவின்றி தனிமையில் வாழ்க்கையை நகர்த்தும் பெண்களுக்கு உதவிக்கரம் நீட்டும் விதமாக ‘நேசம்’ என்ற அமைப்பை நடத்தி வருகிறார். பொருளாதார ரீதியாக அவர் களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் நோக்கில் கைத்தொழில், வேலை வாய்ப்பு பயிற்சிகளை வழங்கி வருகிறார். கணவன், குடும்பத்தினர் ஆதரவு இன்றி நிராதரவாக நின்று குழந்தைகளை வளர்க்க கஷ்டப்பட்ட பெண்கள் இவரின் வழிகாட்டுதலால் வாழ்க்கையில் முன்னேறி இருக்கிறார்கள். தங்கள் குழந்தைகளை படிக்க வைத்து நல்ல நிலைக்கும் உயர்த்தி இருக்கிறார்கள்.

இவர் நடத்தும் ‘வழிகாட்டும் ஒளி’ என்ற சேவை மூலம் கல்வி உதவி பெற்று படித்தவர்கள் ஏராளமானோர் என்ஜினீயர்களாக, தனியார் நிறுவனங்களில் அலுவலர்களாக பணிபுரிந்து வருகிறார்கள். நிறைய பேர் படிப்பை தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். படிக்கும் வயதிலேயே குடும்பத்திற்கு வருமானம் ஈட்டிக்கொடுக்கும் வகையில் ஏழை சிறுவர், சிறுமியர் களுக்கு வீட்டில் இருந்தே கைத்தொழில் செய்வதற்கும் பயிற்சி வழங்கிக்கொண்டிருக்கிறார், பிரேமா.

இளம் வயதில் பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்திருக்கிறார். அந்த வாழ்க்கையும் நிலைக்காமல் போயிருக்கிறது. அந்த துயரமும், மீண்டும் பெற்றோருடன் சேர முடியாத தவிப்பும், தனிமை வாழ்க்கையும் மனதை வேதனைக்குள்ளாக்கி இருக்கிறது..

காதல் திருமண வாழ்க்கை தந்த துயரத்தில் இருந்து மீள்வதற்குள்ளாக விபத்து ரூபத்தில் மீண்டும் வேதனை தொடர்ந்திருக்கிறது. தன் தோழியுடன் இருசக்கர வாகனத்தில் சென்றவர் விபத்தில் சிக்கி இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டு எழுந்து நடமாடமுடியாமல் அவதிப்பட்டிருக்கிறார். அதிலிருந்தும் தேறியவர் இப்போது குடல் புற்றுநோய் பாதிப்புக்கு மத்தியிலும் தொடர்ந்து சேவை மனப்பான்மையுடன் இயங்கிக்கொண்டிருக்கிறார். 

இசை முத்து:

பொதுவாய் நாதஸ்வரத்தில் மிக இனிமையான திரைப்படப் பாடல்களை அதன் இனிமையும் தரமும் கொஞ்சம் கூட குன்றாது அதே இனிமையுடன் வாசிக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்ததில்லை. என் நம்பிக்கையை உடைத்து விட்டது இந்தப்பாடல். தர்பாரி கானடா ராகத்தை அப்படியே இழைத்து இழைத்து நம்மை மெய்மறக்க வைக்கிறது இவர்களின்  நாதஸ்வர இசை! கேட்டுப்பாருங்கள்!


சாதனை முத்து:

Cerebral palsy, dyslexia and dysarthria என்ற இந்த மூன்றும் நம் உடலின் தசைகளைப் பாதிக்கும் நோய்கள். இவற்றால் பாதிக்கப்பட்டு சரியாக நடக்க முடியாத, பேச்சு வராத 21 வயது மும்பை இளைஞர் ஒருவர் கல்வியில் முன்னேறி பட்டப்படிப்பு படித்து, லக்னோ ஐ.ஐ.எம்.மில் உயர் கல்விக்கு தேர்வாகியிருக்கிறார். இவர் யாஷ் அவதேஷ்.


 எண்களை கணக்கிட வராத குறைபாடும் இவருக்கு இருந்தது. விடாமுயற்சியுடன் கற்று, CAT- 2019 தேர்வில் 92.5 சதவிகிதத்துடன் வெற்றி பெற்று ஐ.ஐ.எம்.மில் இடம் பெற்றிருக்கிறார்.