Saturday 2 April 2022

போரின் மறு பக்கம்!!!

இன்றைக்கு பல கோடி மக்கள் வெளியேற்றமும் ஆயிரக்கணக்கான உயிரிழப்புகளும் நிகழ்ந்த நிலையில் இன்னும் உக்ரைன் ரஷ்யா போர் முடிவுக்கு வரவில்லை. எனக்கு 1990 ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஈராக் குவைத் நாட்டை ஆக்ரமிப்பு செய்ததும் அதைத்தொடர்ந்த நிகழ்வுகளும் அமெரிக்கத்தலையீடும் சதாம் ஹுஸைன் மறைவும் அடுக்கடுக்காக நினைவில் எழுந்தன. 


குவைத் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்த போது ஏராளமான மக்கள் செளதி அரேபியாவிற்கு புலம் பெயர்ந்து கொண்டேயிருந்தார்கள். நாஸ்டர்டாம்ஸ் கணிப்புகள் நிறைய வெளியே வந்தன. அதுவரை நாஸ்டர்டாம்ஸ் கணிப்புகள் பற்றிய ஆடியோ, வீடியோ எல்லாம் அரேபிய நாடுகளில் தடை செய்யப்பட்டிருந்தன! அதையும் மீறி அந்த வீடியோக்கள் எங்கள் கைகளில் கிடைத்தன. அவற்றைப்பார்த்த போது மூன்றாம் உலகப்போரின் கணிப்புகள், அதைத்தொடர்ந்த போர்கள் என்று பார்த்தபோது மிக பயங்கரமாக இருந்தது. 



சிறிது நாட்களில் அனைத்து அரபு நாடுகளும் தாக்கப்படலாம் என்ற வதந்தியும் அதன் பின்னாலேயே . ஆந்த்ரா பவுடர் தூவப்படலாம் என்ற ஹேஷ்யங்களும் எழுந்தன. மாஸ்க் விற்பனை அதிகரித்தது. துபாய் விமான நிலையங்கள் எல்லாமே மூடப்படப்போகின்றன என்ற தகவல்கள் வந்ததும் எங்கள் குடும்பமும் உறவுகளும் நட்பும் பெண்கள் குழந்தைகள் மட்டும் வெளியேறி இந்தியா வந்து சேர ஆண்கள் மட்டும் பின்னாலேயே வருவதாக சொன்னார்கள். அமெரிக்க போர்க்கப்பல்கள் அமீரக பாதுகாப்பிற்கு வந்து கடலில் நின்றன. கடைசியில் அரபு நாடுகளுக்கு எந்த வித ஆபத்தும் ஏற்படவில்லை. ஆனாலும் குவைத் ஈராக் போரில் கடுமையாக பாதிக்கப்பட்ட ஒரு தமிழரை அதற்கப்புறம் நான்கு ஆண்டுகள் கழித்து தாய்லாந்தில் சந்தித்தோம்.

நாங்கள் தாய்லாந்து நாட்டின் தலைநகரம் பாங்காக் நகருக்கு 1994ல் சுற்றுப்பயணம் சென்றிருதோம். அங்கிருந்த சில தமிழக உணவங்களால் நம் சாப்பாட்டிற்கு எந்தக் குறையுமில்லாமல் பயணம் தொடர்ந்து கொண்டிருந்தது.. அப்போது தெரிந்த நண்பர் ஒருவர் அவருக்குத்தெரிந்த ஒரு தமிழ் உணவகத்தில் சாப்பிட அழைத்தார். அழைப்பை ஏற்று அவருடன் அந்த உணவகம் சென்றோம். அதன் நிறுவனரும் அவரின் நண்பரும் உள்ளே அழைத்துச்சென்று உணவகத்தை சுற்றிக்காண்பித்தனர் நாங்களும் உணவகத்தொழில் செய்கிறோமென்பதால். அதற்கப்புறம் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த போது அந்த நண்பருக்கு சில நாட்களில் திருமணம் என்பதை அறிந்தோம். வாழ்த்து சொல்லி விட்டு பெண் பற்றி விசாரித்த போது மணப்பெண் தாய்லாந்து நாட்டுப் பெண் என்று அறிந்து அதிர்ச்சி அடைந்தோம். காதல் திருமணமில்லை என்று மறுத்த அவர் ' இந்த நாட்டு பெண்ணைத்திருமணம் செய்து கொண்டால் நமக்கு வரதட்சிணை, சொத்து எல்லாம் தந்து பெண்ணும் தருவது வழக்கம். அதனால் தான் இந்த முடிவு' என்றார்.

தமிழ்ப்பெண்ணை மணக்க விரும்பவில்லையா என்று கேட்டோம்.

அவர் கசப்புடன் சிரித்தார். அப்புறம் அவர் சொன்ன கதை.....

1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒரு இரவு திடீரென்று இராக் குவைத்தை ஆக்ரமித்த போது, இந்த நண்பர் குவைத்தில் வேலை செய்து கொண்டிருந்த ஆயிரமாயிரம் தமிழர்களில் ஒருவர்! நகரமே தீப்பிடித்து எரிகிறது. நிறைய பேர் பிணைக்கைதிகளாய் பிடித்து இழுத்துச்செல்லப்படுகிறார்கள். 


பல அரேபியர்கள் அவசரமாக தப்பித்துச் செல்வதில் முனைப்புடன் இருக்கிறார்கள்! இந்தியர்களும் மற்ற வெளிநாட்டினரும் தங்கள் உடைமைகளையும் குருவி போல சிறுகச் சிறுக சேர்த்த பணத்தையும் பொருள்களையும் நகைகளையும் பாஸ் புக்குகளையும் அப்படியே விட்டு விட்டு தப்பித்து ஓடுகிறார்கள். பாதி பேர் செளதி அரேபியா எல்லயைக்கடந்து அந்த நாட்டுக்குள் நுழைகிறார்கள். மீதி பேர் இராக்கின் பஸ்ரா வழியாகவோ அல்லது பாலைவனம் தாண்டி வேறு வழியாகவோ அம்மான் செல்ல



முனைகிறார்கள்.  அவரவர் கார்களை எடுத்துக்கொண்டு வீடுகளில் எல்லாவற்றையும் அப்படியே போட்டு விட்டு பறந்து செல்கிறார்கள்! இந்திய அரசாங்கம் ஏர் இந்தியா விமானங்களை அம்மானின் நிறுத்தி வைத்திருக்கிறது. அதற்கு அம்மானில் உள்ள இந்தியத்தூதரகம் சென்று ஒவ்வொருத்தரும் தன் பாஸ்போர்ட்டையோ அல்லது ஆதாரங்களையோ காண்பித்து அதன் பின்னர் தான் விமானத்தில் ஏற வேண்டும். தூதரகம் முன்னால் துணிகளிலும் கிழிந்த பாய்களிலும் துணியாலான கொட்டகைகளிலும் ஏராளமானவர்கள் நாட்கணக்கில் தங்கள் பெயர் எப்போது அழைக்கப்படும் என்று காத்துக்கிடந்தார்கள். 



நம் நண்பரும் தன் முதலாளியை சந்திக்க ஓடுகிறார். அப்போது தான் அவரும் வீட்டை அப்படியே போட்டு விட்டு வெளியேறி விட்டது தெரிகிறது. பாஸ்போர்ட்டுக்கும் முதலாளியிடம் தான் சேமித்து வைத்திருக்கும் பணத்துக்கும்  என்ன செய்வது? தலையில் அடித்துக்கொண்டு அழுதவாறே குவைத்திலுள்ள இந்திய தூதரகத்துக்கு சென்றாராம். அங்கே ‘ நீ இந்தியன் என்று எப்படி நம்புவது?’ என்று கேட்டதும் ‘ நான் இந்தியனென்று எப்படி நிரூபிப்பேன்? ‘ஜன கண மன’ பாடினால் நம்புவீர்களா’ என்று அழுதிருக்கிறார். இந்திய தூதரகம் உதவி செய்ய கடுமையாக மறுத்து விட்டது. அங்கிருந்து வெளியேறி எல்லைக்கு கார்களில் பறந்து சென்று கொண்டிருக்கும் முகமறியாத நபர்களிடம் கெஞ்சிக்கூத்தாடி ஒரு காரில் இடம் பிடித்து இரவில் குளிரில் பாலைவனத்தில் படுத்து எப்படியோ சமாளித்து அம்மானில் அவரும் விமானம் ஏறி விட்டார். டில்லி வந்ததும் அங்கிருந்த அதிகாரிளால் தமிழ்நாட்டுக்குச் செல்லும் ரயிலில் ஏற்றி விடப்பட்டாராம். ஒவ்வொரு மாநிலத்தை புகைவண்டி கடக்கும்போது அங்கங்கே மக்கள் பழங்கள், ரொட்டிகள், சாப்பாட்டு பொட்டலங்கள் என்று வழி நெடுக கொடுத்திருக்கிறார்கள்.

“ கிளைமாக்ஸே அப்புறம் தாங்க! நம் தாய்த்திருநாடு கண்ணில் பட்டதும் அப்படியே கண்களில் கண்ணீர் வந்து விட்டது. ரயில் நின்றதும் பார்த்தால் ஒருத்தர் கூட கண்ணில் படலைங்க. எங்களுக்காக தமிழக அரசு எந்த ஏற்பாடும் செய்யலைங்க. அநாதை போல வெளியில் வந்தோம். காசில்லாமல் ஆட்டோ ஏறி ஒரு நண்பன் வீட்டுக்கு சென்று அவனிடம் காசு வாங்கிக்கொண்டு என் ஊருக்கு சென்றேன். திரும்பவும் பாஸ்போர்ட் எடுத்தேன். அதற்காக 1500 ரூபாய் லஞ்சம் கொடுத்தேன். திரும்பவும் லஞ்சம் வாங்கியவரை தகுந்த ஆதாரங்களுடன் கோர்ட்டுக்கு இழுத்து கொடுத்த 1500ஐ திரும்பப்பெற்றேன். மனசில் அத்தனை ரணமும் வெறியும் ஆத்திரமும் இருந்தன. தாய்லாந்து வந்தேன். வேலையில் சேர்ந்தேன். இதோ ஒரு தாய்லாந்து பெண்ணை மணக்கப்போகிறேன்! என் நாடு எனக்கு வாழ்க்கை கொடுக்கவில்லை. ஆதரவளிக்கவில்லை. எனக்கு பிழைப்பும் கொடுத்து சந்தோஷத்தையும் கொடுக்கும் இந்த நாடு எந்த வகையில் தாழ்ந்தது?”

அவர் பேச்சிலிருந்த வேதனையும் கனமும் எங்கள் மனதையும் கனமாக்கியது. எந்த பதில் சொன்னாலும் அவர் மனசின் ரணம் குறையாது என்பதை உணர்ந்தோம்! போரின் இன்னொரு பக்கம் இது தான்! இப்படி எத்தனை பேரின் வாழ்க்கை தடம் புரள்கிறது! வன்முறையும் ஆக்கிரமிப்புமாக போர் புரியும் நாடுகள் இதற்கு பதில் சொல்லுமா?