Tuesday 31 December 2013

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!
அன்பான குடும்பமும்
ஆயிரமாய் நற்சிந்தனைகளும்
இனியதாய் நற்பயன்க‌ளும்
ஈகையில் இன்பமும்
உயர்வான எண்ண‌ங்களும்
ஊரே தோழமையுமாய்
எல்லாமும் கைவரப்பெற்று
ஏற்ற மிகு வாழ்க்கை தனை

அனைவரும் அடைந்திருக்க‌
ஆயிரமாயிரம் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!! 

Tuesday 24 December 2013

அன்புள்ளங்களுக்கு இனிய நன்றி!!


என்னுடைய 200 வது பதிவு இது.

தமிழகத்துக்கும் அரபு நாட்டிற்குமான தொடர்ந்த பயண‌ங்கள், அது தொடர்பான சுமைகள் பல நேரங்களில் நான் நினைத்த அளவு எழுத இயலாமலும் பின்னூட்டங்கள் தர இயலாமலும் இருந்து வருகிற போதிலும் பதிவெழுதுவது என்பது குளிர்ந்த மழைச்சாரலில் அவ்வப்போது நனைகிற மாதிரி மனதுக்குக் கிடைக்கிற சந்தோஷம் இது! பதிவுலகில் நுழைந்ததிலிருந்து இன்று வரையிலும் பதிவுகள் வெளியிட்ட போது, எந்த ஒரு பதிவிலுமே ஆர்வமும் சுவாரஸ்யமும் எனக்குக் குறைந்ததேயில்லை.   இயல்பான எழுத்தார்வம் ஒரு காரணம் என்றாலும் அதற்கு முக்கிய காரணம் வலையுலக நண்பர்களாகிய உங்கள் அனைவரது அன்பும் தொடர்ந்து வரும் உங்களின் அருமையான பின்னூட்டங்களும் தான்!!

உங்கள் அனைவருக்கும் என் இதயங்கனிந்த நன்றிகள்!!சிலந்தி வலைகள்!!

வாழ்க்கையில் வளர்ப்புப்பிராணிகள் என்று பலரும் நாய், பூனை, பறவைகள் என்று அன்புடன் வள‌ர்ப்பதைப்பார்த்திருக்கிறோம். அவற்றையொட்டி பல விதக்ககதைகளை அறிந்திருக்கிறோம், ரசித்திருக்கிறோம். ஆனால் சிலந்திப்பூச்சிகளையும் ஒருத்தர் செல்லப்பிராணிகள் போல தன் வீட்டில் வைத்து வளர்க்க முடியும் என்பதை நினைத்துப்பார்க்கவே முடியவில்லை. அப்படியொரு செய்தியை அறிந்த போது ஆச்சரியமாக இருந்தது. மனிதர்களுக்கே உரிய ரசனையும் குணங்களும் சிலந்திகளுக்கும் இருப்பதை அறிந்த போது என் ஆச்சரியம் மேலும் அதிகரித்தது. நான் ரசித்த செய்திகளை இங்கே தொகுத்திருக்கிறேன்.

நாகர்கோவிலைச் சேர்ந்த ஓய்வு பெற்ற விலங்கியல் துறைப்பேராசிரியை திருமதி. அன்ன சுதாதேவி தன் வீட்டில் 40 க்கும் மேற்ப‌ட்ட சிலந்திப்பூச்சிகளை வளர்த்து வருகிறார். இவர் வீட்டில் சுவர், கதவு போன்ற எல்லா இடங்களிலும் சிலந்திப்பூச்சிகள் ஓடி விளையாடிக்கொண்டிருக்கின்றன. சிலந்திப்பூச்சிகளால் மனித வாழ்வுக்குக் கிடைக்கும் நன்மைகளைப்பற்றி ஆய்வு செய்து முனைவர் பட்டமும் பெற்றுள்ளார் இவர்வலைகள் பின்னுவதால் இவற்றிற்கு வலையான் என்றும் பெயர் உண்டு. உலகில் 30 ஆயிரம் வகை சிலந்திப்பூச்சிகள் உள்ள‌ன.  பொதுவாக சிலந்திக‌ள் ஆறு மாதம் வரையில் தான் உயிர் வாழ்கின்றன. சிலந்திகள் முட்டையிட்டு வலை பின்னி அவற்றை மூடி பாதுகாக்கின்றன. இவை குக்கூன் என்றழைக்கப்படுகின்றன. ஒவ்வொரு குக்கூனிலும் 10 முதல் 500 வரை முட்டைகள் இருக்குமாம்.
சிலந்திப்பூசிகளின் அடி வயிற்றில் ஆறு ஓட்டைகள் உள்ள‌ன. இவற்றின் வழியாக வரும் ' சிப்பனர் ரெட்' என்ற திரவம் காற்று பட்டதும் நூல் போல மாறி விடுகின்றது. இவற்றைக்கொண்டு தான் சிலந்திகள் வலை பின்னுகின்றன. இவற்றில் ஆர்ஃப் வலை, சீட் வலை, புனல் வலை என்று பல பிரிவுகள் உள்ள‌ன. இவை காற்று, மழையில் அழிந்து போகாத அளவிற்கு உறுதியானவை. விதம் விதமாக இவை வலை கட்டினாலும் இவற்றுக்கு கண் பார்வை கிடையாது. வலையில் ஏற்படும் அதிர்வுகளால்தான் உணவைக்கண்டறிகின்றன. சிலந்திகள் திரவ உணவை மட்டுமே உண்பதால் மற்ற‌ பூச்சிகளிலுள்ள திரவத்தை மட்டுமே உண்டு வாழ்கின்றன. வலையில் பூச்சிகள் வந்து சிக்கிக் கொண்டால் தன் உடலிலுள்ள விஷம் போன்ற திரவத்தை அதன் மீது செலுத்தி அவற்றை செயலிழக்க வைத்து அதன் பின் அந்த பூச்சிகளிலுள்ள திரவத்தை உறிஞ்சுகிறது.

அயல்நாடுகளில் இதய வால்வு அறுவை சிகிச்சைக்கும் பாரசூட், மீன் வலை தயாரிப்பிற்கும் சிலந்தியின் வலையை உபயோக்கிகிறார்கள். பயிர்களைத் தாக்கும் பூச்சிகளை அழிக்க சிலந்திகளை வயல்களில் விடலாம் என்ற விழிப்புணர்வை விவசாயிகளிடம் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. வீடுகளிலும் ஈக்கள், கொசுக்கள் இவற்றை இந்த சிலந்திகள் அழிக்கின்றன.

பிளக்சிபல் என்ற சிலந்தி தினமும் 10 ஈக்களைப் பிடித்து தின்கின்றனவாம். அரைனஸ் என்ற சிலந்தி மாலையில் மட்டுமே வலை பின்னுமாம். அதாவது, மாலையில் வலை கட்டி பூச்சிகளைப்பிடித்து உண்டு விட்டு காலை தன் வலையைக் கலைத்து விட்டுச் சென்று  விடுமாம். யோலோபோரஸ், ஆர்ஜியோப்பல்சல்லா போன்ற சிலந்திகள் கண்கள் இல்லாமல் தன் வலையை நீள‌ அகலம் கச்சிதமாகப்பார்த்து வெள்ள நிற நூலால் பார்டர் கட்டி அழகு படுத்துமாம்.
ஸ்டிகேடைவஸ் என்ற வகை சிலந்தி தன‌க்கு இரை கிடைத்ததும் தன் குடும்பத்துடன் சேர்ந்து தான் உண்ணுகின்றன. அதே போல தன் குடும்பத்துடன் அருகிலுள்ள‌ கூடுகளுக்கு விருந்துக்கும் செல்லுமாம் தன் குடும்பத்துடன்!

இது போன்ற பல அரிய தகவல்களைச் சொல்லும் அன்ன சுதா தேவி மற்ற‌ உயிரினங்களுக்கு சரணாலயம் இருப்பது போல சிலந்திகளுக்கும் அரசாங்கம் ஒரு சரணாலயம் ஏற்படுத்த வேண்டும் என்று கோருகிறார்.

Wednesday 18 December 2013

சாதம் எப்படி சாப்பிட வேண்டும்?

 சாதம் எப்படி உண்ண வேண்டும் என்பது பற்றிய சில குறிப்புகளை ஒரு புத்தகத்தில் படித்தேன். மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. அதைப் பகிர்ந்து கொள்ள நினைத்த போது, பழைய சங்க காலப் பாடல்களில் படித்த சில அழகிய கருத்துக்கள் நினைவில் எழுந்தன.

ஒளவையார் எது கொடியது என்ற தன் வெண்பாவில், எல்லாவற்றையும் விட கொடுமையானது, அன்பில்லா பெண்டிர் கைகளால் பரிமாறப்படும் உணவை உண்பது தான் என்று அழுத்தம் திருத்தமாகக்க் கூறியிருக்கிறார்.

என்பெல்லாம் பற்றி எரிகின்ற தைய்யையோஅன்பிலாள் இட்ட அமுது என்றும் கூறியிருக்கிறார்.

இன்னொரு வெண்பா [பாடல் சரியாக நினைவில் இல்லை]
பாலும் தேனும் பாகும் கலந்து அத்தனை சுவையான அடிசிலும் அன்பில்லாத கையால் உண்ணும்போது விஷமாகிறது. அதுவே பழைய சாதம் கூட அன்போடு பரிமாறப்படுகிறபோது, அதுவே அமிர்தமாகிறது என்று அழகாகக்கூறுகிறது !


முன்னோர்கள் சொல்லி வைத்த பழமொழிகளின் சிறப்பும் பாடல்களின் அருமையும் நினைக்க நினைக்க ஆச்சரியமாயிருக்கிறது!

சரி, இப்போது சாதம் எப்படி சாப்பிட வேன்டும் என்ற விஷயத்திற்கு வருகிறேன்.

சாதம் எப்படி சாப்பிட வேண்டும்?


சாதத்தை எப்படி சாப்பிடுகிறோம் என்பதில்தான் நல்ல உடல் நலத்துக்கான சூட்சமம் இருக்கிறதாம்.
தமிழ் நாட்டில் அதிக அளவில் சர்க்கரை நோய் இருப்பதற்குக்காரணம் தினமும் அரிசி சாதம் சாப்பிடுவது என்று பலரும்சொல்கிறார்கள். அது தவறு. அதை எப்ப்டி சாப்பிடுகிறோம் என்பது தான் முக்கியம். பலரும் இன்று குக்கரில் வேக வைத்த சாதம் சாப்பிடுகிறார்கள். கஞ்சியை வடிக்காமல் சாதம் சாப்பிடுவதால்தான் நீரிழிவு ஏற்படுகிறது.

சாதம் வடித்த கஞ்சி சூடாக இருக்கும்போது சிறிது உப்பைப்போட்டு பருகினால் கண் எரிச்சல், பித்தம் ஆகியவை அகலும். அதுவே கஞ்சி ஆறிப்போய் குடித்தால் வாயு வை ஏற்படுத்தும். சாதம் உலையில் கொதிக்கும்போதே கஞ்சியை எடுத்துப் பருகினால் நீர்க்கடுப்பை நீக்கும்.

கொதிக்கக் கொதிக்க சோறு சாப்பிடக்கூடாது. மிதமான சூட்டிலேயே சாப்பிட வேண்டும். அதே நேரம் சில்லென்று ஆறிப்போய் சாப்பிட்டால் கீல் வாதம், மூட்டு வாதத்தை ஏற்படுத்தும்.

பழையமுது சாப்பிட்டுத்தான் நம் முன்னோர் நல்ல தெம்புடனும் ஆரோக்கியத்துடனும் வாழ்ந்தார்கள். முதல் நாள் தண்ணீர் சாதத்தில் ஊற்றி, மறு நாள் காலையில் பழைய சோற்றை சாப்பிடுவது உடலுக்கு குளிர்ச்சி, வலிமை தருவதுடன் வயிற்றுக்கோளாறு, அல்சர், மூட்டு வலி, தோல் நோய்கள் எதுவும் பாதிக்காமல் பாதுகாக்கிறது. பழைய சோற்றில் தயிர் ஊற்றி சாப்பிடக்கூடாது. மோரைக்கடைந்து ஊற்றி சாப்பிட வேண்டும்.

சோறு வெதுவெதுப்பாக இருக்கையில் பசும் பால் ஊற்றி சாப்பிட்டால் தண்ணீர்த்தாகம் ஏற்படுவதும் பித்தம் உண்டாவதும் நீங்கும்.

பச்சரிசி சோற்றில் பால் சேர்த்துச் சாப்பிட வாதம், பித்தம் நீங்கும். சிலர் சாம்பார், ரசம், வற்றல் குழம்பு என்று சாதத்தில் பிசைந்து சாப்பிட்டு மோர் போட்டு சாப்பிடாமல் எழுந்து விடுவார்கள். இது உடம்புக்கு மிகவும் கெடுதல். மோர் சாதம் செரிமானக்கோளாறுகளை நீக்கி, வாதம், பித்ததை தணிக்கிறது.

மாதாந்திர பிரச்சினை உள்ள பெண்களுக்கு சிவப்பரிசி சாதம் மிகவும் நல்லது. சம்பா சோறு வயிற்றுப்பொருமலுக்கு மிகவும் நல்லது.

வாழையிலையில் சாப்பிவதால் அதிலுள்ள துவர்ப்பு சத்து உடலில் சேர்ந்து நன்மை செய்கிறது.

Tuesday 10 December 2013

முத்துக்குவியல் -24!!

ஆச்சரியப்பட வைத்த முத்து:நோபல் பரிசு பற்றி நம் எல்லோருக்கும் தெரியும். ஆனால் அந்தப்பரிசு என்ன காரணத்தால் உருவாக்கப்பட்டது என்பதை அறிந்த போது மிகுந்த ஆச்சரியமாக இருந்தது. இயற்கையான முறையில் எல்லோருக்கும் உதவ வேன்டும் என்ற உந்துதலில் அவை ஏற்படுத்தப்படவில்லை. தன் பெயருக்கு விளைந்த களங்கத்தைத் துடைக்கவே நோபல் பரிசுகளை வருடா வருடம் தரும் முறையை ஏற்படுத்தினார் நோபல்!
ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி ஆல்ஃப்ரெட் நோபல் முதன் முதலாக டைனமைட்டை கண்டுபிடித்தார். சிறிது நாட்களில் அவர் சகோதரர் இறந்த போது, இவர் இறந்ததாக தவறாகப் புரிந்து கொண்ட ஒரு பிரெஞ்சு நாளிதழ், டைனமைட் கண்டு பிடித்த இவர் ஒரு மரண வியாபாரி என்று குறிப்பிட்டிருந்தது. தன் பெயர் உலக சரித்திரத்தில் தவறாக இடம் பெறப்போகிறது என்று அஞ்சினார் ஆல்ஃப்ரெட் நோபல். தீர யோசித்தவர் தன் உயிலை எழுதினார். அதன் படி, தன் சொத்துக்களில் பெரும் பங்கை இயற்பியல், வேதியல், மருத்துவம், இலக்கியம், சமாதானம் என்ற ஐந்து பிரிவுகளில் உலகளாவிய பரிசுகள் ஒவ்வொரு ஆண்டும் தன் பெயரில் வழங்கப்பட வேண்டும் என்று உயில் எழுதி விட்டு இறந்து போனார். நோபல் இறந்து ஐந்து வருடங்கள் கழித்து 1901ஆம் ஆண்டு டிசம்பர் 10ந்தேதியிலிருந்து முதன் முதலாக நோபல் பரிசுகள் வழங்கப்பட்டன. முதன் முதலாக எக்ஸ்ரேயைக் கண்டு பிடித்த ராண்ட்ஜன்  பரிசு பெற்றார்.

ரசித்த முத்து:

வீழ்ந்தால் விதையாக விழு.
எழுந்தால் மரமாக உயர்ந்து எழு.
ஓடினால் ஆற்றைப்போல ஓடு.
தேடினால் கடல் கடந்து தேடு.
நேசித்தால் மனித நேயத்தை நேசி.
வாசித்தால் உழைப்பின் மகத்துவத்தை வாசி! 


[அவசியமான] குறிப்பு முத்து:

கரப்பான் பூச்சிக்கு பயப்படாதவர் யார்? வீட்டிற்கு வீடு அரசாட்சி செய்யும் இதை அழிக்க ஒரு குறிப்பு: சினேகிதி சொன்னது இது.
வெள்ளரி தோல்களை ஒரு அலுமிய பாத்திரத்தில் போட்டு வைத்தால் இந்த வாசனைக்கு கரப்பான் பூச்சிகள் கிட்டே வராது.

மருத்துவ முத்து:

மூக்கிலிருந்து நீர் கொட்டுவதற்கு:
மண் சட்டியில் நல்லெண்ணெய் ஊற்றி விளக்கேற்றி, சமையல் மஞ்சளை எண்ணெயில் நனைத்து பிறகு விளக்கில் சுட்டால் வரும் புகையை முகர்ந்தால் மூக்கிலிருந்து நீர் கொட்டுவது நிற்கும்.SMART SOCKS:

சாதாரணக்குழந்தைகளை விட, எடை குறைவாக, மூச்சுத்திணறல் போன்ற பல்வகைப் பிரச்சினைக‌ளுடன் பிறக்கும் குழந்தைகளை பொதுவாய் மருத்துவ மனைகளில் இன்குபேட்டரில் வைத்து பாதுகாக்கிறார்கள். இந்தக் குழந்தைகள் சுவாசிக்கும் ஆக்ஸிஜன் அளவை, இதயத்திடிப்பினை தாய் அறிந்து கொள்ளும் விதத்தில் அமெரிக்காவில் ஒரு பிரபல நிறுவனம் ' ஸ்மார்ட் ஸாக்ஸ்' தயாரித்துள்ள‌து.
இந்த ஸாக்ஸை குழந்தைக்கு அணிவித்து விட்டால் இந்த ஸாக்ஸிலுள்ள ஒரு கருவி குழந்தையின் இதயத்துடிப்பு, தோலின் தன்மை, உடலின் வெப்ப அளவு, தூக்கத்தின் நிலைகள், போன்றவற்றை பதிவு செய்து அதன் பெற்றோர்களுக்கு வழங்கப்பட்டுள்ள‌ ஸ்மார்ட் ஃபோனுக்கு அந்தத் தகவல்களை இணைய தளம் மூலம் அனுப்பி வைக்கிறது. குழந்தைக்கு திடீரென்று மூச்சுத்திணறல் ஏற்பட்டாலோ இதயத்துடிப்பில் மாறுதல்கள் ஏற்பட்டாலோ இந்தக் க‌ருவியின் மூலம் ஸ்மார்ட் ஃபோனுக்கு எச்சரிக்கை அலாரம் வடிவில் உடனடியாக வந்து சேரும். பெற்றோரும் உடனடியாக மருத்துவரை அழைக்க முடியும்.

கலங்க வைத்த முத்து:இந்தப்புகைப்படத்தை என் சினேகிதி அனுப்பியிருந்தார். குழந்தையை அதன் தாய் அன்போடு கொஞ்சும் பின்னணியில் ஒரு கவிதை! முதியோர் இல்லத்தில் வாடும் ஒரு தாயில் கண்ணீர் தான் தலைப்பு!
நீ இருக்க ஒரு கருவறை
இருந்தது என் வ்யிற்றில்!
நான் இருக்க ஒரு இருட்டறை
கூடவா இல்லை உன் வீட்டில்?