Monday 26 August 2013

எழில்மிகு பாண்டுரங்கன் கோவில்!

ரொம்ப நாட்களாகவே தஞ்சையிலிருந்து என் சம்பந்தி இல்லத்திற்கு மயிலாடுதுறை செல்லும்போதெல்லாம், திருவிடை மருதூரைத்தாண்டியதும் இடது பக்கம் தென்படும் அழகிய கலையழகு மிக்க கோவில் மனதை எப்போதும் ஈர்த்துக்கொண்டே இருந்தது. இந்த முறை அதற்கென நேரம் வகுத்துக்கொண்டு, அதைப்பார்க்க என் சினேகிதியுடன் சென்றே விட்டேன்.
உள்ளே நுழைந்ததுமே அதன் அழகும் கலை வேலைப்பாடுகளும் நம்மை அப்படியே அசத்துகிறது.


வெளியிலிருந்து முகப்பு
இது மராட்டிய மாநில பண்டரிபுரம் பாண்டுரங்கர் ருக்மணி  கோயிலின் சாயலாகவே பல கோடி ரூபாய் செலவில் பலவேலி நிலத்தில் கட்டப்பட்டுள்ளது.
வட இந்தியாவைப்போல் பாண்டுரங்கர் - ருக்மணி உருவங்களை
கையினால் தொட்டு வணங்கலாம்
கோவிந்தபுரம் என்ற ஊரில் இது அமைந்திருக்கிறது. முழுக்க முழுக்க மராட்டியப் பாணியில் அதாவது பண்டார்பூரில் உள்ள அசல் கோயிலைப் போலவே கட்டப்பட்டுள்ளது.


உள்ளிருந்து முகப்பு
இக்கோயில் சூரிய நமஸ்காரத்தில் உள்ள 132 பஞ்ஜாதியை (பிரிவு) வெளிப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அதாவது 40 அடி உயரத்திற்கு தளமும், அதன் மீது 92 அடி உயரத்திற்கு கோபுரமும் வட மாநில கட்டட வேலைப்பாடுடன் கட்டப்பட்டு உள்ளது. 18 என்பது ஜெயத்தை குறிக்கும் என்பதால் அதனை வெளிப்படுத்தும் வகையில் கோயில் விமானத்தின் மீது வைப்பதற்காக 18 அடி உயரத்திற்கு செப்புக்கலசம் செய்யப்பட்டு, பக்தர்கள் அதனை சுற்றி வந்து வழிபட வசதி செய்யப்பட்டுள்ளது. 27 நட்சத்திரங்களை குறிக்கும் வகையில் நுழைவாயிலில் 27 படிக்கட்டுகள் உள்ளன. கோயில் உள்பகுதியில் தெய்வங்கள், மகான்கள், யானை சிற்பங்கள் செய்யப்பட்டு கதவுகளில் பொருத்தப்பட்டுள்ளது. கோயிலின் வடக்கு பகுதியில் தீர்த்தக்குளம் இருக்கிறது.


கோவிலின் மேற்புறமும் கோபுரமும்

எங்கிருந்து பார்த்தாலும் மக்கள் காணக்கூடிய வகையில் 132 அடி உயரம் கொண்ட பிரம்மாண்டமான கோபுரம் கட்டப்பட்டுக் கம்பீரமாகக் காட்சியளிக்கிறது. பச்சைப் பசேல் என்ற வயல்களின் மையத்தில் அமைந்துள்ள கோவிலும், அதன் கோபுரமும் காண்போர் கண்களுக்கு மிகப் பெரிய விருந்து!.


கோவிலின் தோற்றம்
சுவாமியின் பள்ளியறை அமைந்துள்ள மகா மண்டபம் தென்னிந்தியக் கலைநயத்தைப் பறைசாற்றும் வகையில் அரைவட்ட வடிவில் கட்டப்பட்டுள்ளது. நாம சங்கீர்த்தனம், பஜனை, உபன்யாசம் முதலிய நிகழ்ச்சிகள் நடைபெறும் வசந்த மண்டபம் தூண்கள் எதுவுமின்றிக் கட்டப்பட்டுள்ளது மிகவும் ஆச்சரியம் அளிக்கும் விஷயம்!. சுமார் 2000 பேர் அமர்ந்து நிகழ்ச்சிகளைக் காணும் வகையில் வசந்த மண்டபம் விசாலமாகக் கட்டப்பட்டுள்ளது. மண்டபத்தின் மேல் விதானத்தில் அற்புதமான ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.


அழகிய சுதை வேலைப்பாடு

இதை மராட்டியப் பாணியில் கட்டுவதற்காக மராட்டிய மாநிலத்திலிருந்து ஸ்தபதிகள் வரவழைக்கப்பட்டனர். அவர்களுடன் தமிழக ஸ்தபதிகளும் இணைந்து இந்த அழகான கோவிலைக்கட்டியுள்ளார்கள்!


பக்த பாண்டுரங்கனின் அழகிய சிலை

பாண்டுரங்கன் ஆஸ்ரமம் சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் அமையப் பெற்றுள்ளது. இரண்டு பிரிவுகளாக அமைந்துள்ள இவற்றில் பெரும்பான்மையான இடங்கள் பசு வளர்ப்புக்காக பயன்படுத்தப்படுகிறது. சுமார் 400 பசுக்கள் இக்கோயிலைச் சேர்ந்த கோசாலையில் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
தினமும் பசு வழிபாடான கோபூஜைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகிறது.

ஆஸ்ரமத்தின் செயல்பாடுகளால் கவரப்பட்ட இப்பகுதி மக்கள் தங்கள் நிலப்பகுதியை ஆஸ்ரமத்தின் செயல்பாட்டிற்கு தர மனமாற முன்வந்து ஆஸ்ரமத்தின் பணிகளை விரிவடையச் செய்துள்ளனர்.
 

Tuesday 20 August 2013

அதிரடி மருத்துவரும் அருமையான மருத்துவ உதவி அமைப்புகளும்!!!


முதலில் ஒரு அருமையான மருத்துவ சிகிச்சை பற்றியும் ஒரு மருத்துவத் தொண்டு பற்றியும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இரு மாத இதழ்களில் இந்த விபரங்களைப்பற்றி படித்து அசந்து போன போது, இந்த விபரங்கள் நிறைய பேரைச் சென்றடைந்தால் அது எத்தனன பயனுள்ளதாக இருக்குமென்று தோன்றியதால் ஏற்பட்டதன் விளைவே இந்தப் பதிவு!  

இந்தியாவில் ஆண்டுக்கு 2.5 லட்சம் பேர்கள் சிறுநீரகப்பழுதினால் உயிரிழக்கிறார்கள். சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டால் வாழ்க்கையின் கடைசி நிமிடம் வரை சிகிச்சைகள் அவசியம். ஆனால் அந்த சிகிச்சைக்கு வசதியில்லாமலேயே பலர் உயிரிழக்கிறார்கள். இத்தைககய மக்களுக்காக தொடங்கப்பட்டது தான்  

THE TAMILNADU KIDNEY RESEARCH[TANKER] FOUNDATION,
17, wheatcrofts road, Chennai-34.
[PHONE NO: 044 2827 3407/28241635/044 4309 0998] 

பல நல்ல உள்ளங்கள் சேர்ந்து 20 வருடங்களுக்கு முன்பு இந்த அமைப்பைத் தொடங்கியிருக்கிறர்கள். சிறுநீரகப்பழுதின் கடைசிக் கட்ட சிகிச்சை சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை. அதற்கு முந்தைய கட்டமான டயாலிஸிஸ் மனம், உடல் இரண்டையும் நோகடிக்கிற சிகிச்சை. வாரம் 2 அல்லது 3 தடவைகள் செய்ய வேண்டிய டயாலிஸிஸ் சிகிச்சையின் ஒரு முறை கட்டணமே ஆயிரம் முதல் 2500 வரை. இந்தத் தொண்டு நிறுவனம் தன் உறுப்பினர்களுக்கு அதை வெறும் 375 ரூபாயில் செய்து கொடுக்கிறது. மாதம் 2 டயாலிஸ்ஸை இலவசமாக செய்தும் தருகிறது. 6 டயாலிஸிஸ் மெஷின்களுடன் இது வரை ஒரு லட்சத்துக்கு மேல் டயாலிஸிஸ் செய்து முடித்திருக்கிறார்கள் இவர்கள். இவர்களின் விழிப்புணர்வு பிரச்சாரத்தின் முதல் வரியே ‘ வருமுன் காப்போம்’ என்பது தான்! சாப்பாட்டில் உப்பின் அளவைக் குறைப்பது, துரித உணவுகளைத் தவிர்ப்பது, காய்கறிகள், பழங்கள் என்று ஆரோக்கியமான உணவைத் தொடர்வது, டாய்லட் தேவைகள் வரும்போது அதை அடக்கி வைப்பதை நிறுத்துவது, டென்ஷன் தவிர்ப்பது, உடற்பயிற்சியைக் கட்டாயமாகத் தொடர்வது-இவையெல்லாம் இவர்களின் தாரக மந்திரங்கள்!!                                  

                        -------------------------------
 
HEALTH OPINION!

உள் நாட்டு நோயாளிகளுக்கு வழி காட்டுவது மட்டுமல்லாமல் வெளி நாட்டு வாழ் நோயாளிகளுக்கும் அவசர ஆலோசனைகள், உதவிகளைச் செய்கிறது இந்த நிறுவனம், அதுவும் கட்டணமில்லாமல்! 

இளைஞர்கள் சீனிவாசனும் கிருஷ்னகாயாவும் சப்தமில்லாமல் ஒரு அருமையான தொண்டை செய்து வருகிறார்கள்.  

எங்கேயோ ஒரு விபத்து நடக்கிறதா, சம்பவம் நடக்கும் இடத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் யாரேனும் துடித்துக்கொண்டிருகின்றார்களா-இவர்களை உடனேயே அழைத்தால் இவர்கள் அந்த இடத்திற்கு அருகிலுள்ள ஒரு நல்ல மருத்துவ மனையை உடனேயே பரிந்துரைக்கிறார்கள். இவர்கள் தருவது 24 மணி நேர சேவை என்பது மிகவும் பாராட்டத்தக்க அம்சம்! ஆரம்பித்த மூன்றே மாதங்களில் 40 வெளி நாட்டு நோயாளிகளுக்கும் 120 உள் நாட்டு நோயாளிகளுக்கும் வழி காட்டி சாதனை படைத்திருக்கிறார்கள்.

உடல் நலம் பாதிக்கப்பட்டால் எந்த மருத்துவ மனைக்குச் செல்வது, எந்த மருத்துவரைப்பார்ப்பது, எத்தனை செலவாகும், சென்னை அல்லது வேறு ஒரு நகரில் நோயாலிகளைச் சேர்க்க யார் உதவி செய்வார், நீண்ட நாட்கள் தங்கி ச்கிச்சை பெற வேண்டி வந்தால் யார் உதவியை நாடுவது-இத்தனை கேள்விகளுக்கும் ஒரே பதிலாக தங்கள் அமைப்பை பெருமையுடன் சொல்கிறது இந்த நிறுவனம்!! குழம்பியிருக்கும் நோயாளிக்கு சிக்கலைப் போக்கி நல்ல முடிவை வழிகாட்டுகிறது இந்த நிறுவனம்! மருத்துவ மனைகளை அமைக்கவும் இவர்கள் ஆலோசனைகள் தருகிறார்கள். முக்கியமக என்னைப்போன்ற வெளி நாட்டு வாழ் தமிழருக்கு இந்த அமைப்பு ஒரு வரப்பிரசாதம்!!  

இவர்களின் விலாசம்: 

FRONT ENDERS HEALTH CARE SERVICES PVT.LTD,
NEW NO:31[OLD NO:16], FLAT.NO:4, 3RD FLOOR,
EAST CIT NAGAR, 11 MAIN ROAD, NANDANAM,
CHENNAI-600035. PHONE: 044-2431 0050
                                                   --------------------------------------
 

எப்போதும் மருத்துவர்களிடம் செல்லும்போது ஏதாவது எனக்கு ஒரு வித்தியாசமான அனுபவம் கிடைக்காமல் இருப்பதில்லை. இந்த முறையும் தஞ்சை சென்ற போது ஒரு வேடிக்கையான அனுபவம் கிடைத்தது. 

ஒரு பிரபல வங்கி மேலாளருடன் பேசிக்கொண்டிருந்த போது, அவர் பேச்சு வாக்கில்  தன் நண்பர் தன்னை ஒரு மருத்துவரிடம் கூட்டிச் சென்றதைப் பற்றி விவரித்தார். அந்த மருத்துவர் இயற்கை முறை மருத்துவர் என்றும் நமது உடல் நலப்பிரச்சினைகள் எந்த உணவினால் ஏற்படுகிறதென்பதைக் கண்டு பிடித்து, அதற்கேற்ப நாம் உண்ணும் உணவு முறைகளை மாற்றிச் சொல்லிக்கொடுப்பதன் மூலம் நோய்களைத் தீர்க்கிறார் என்றார்.  

நான் எப்போதும் செல்லும் ஆட்டோ ஓட்டுனரிடமும் அந்த மருத்துவரைப்பற்றி கேட்டதற்கு அவர் அது பற்றி தனக்கு விபரம் ஏதும் தெரியாது என்றும் ஆனால் நிறைய பேர்களை அங்கு அழைத்துச் சென்றிருப்பதாகவும் சொன்னார்.  

 


நானும் ஒரு நாள் அந்த மருத்துவரிடம் சென்றேன். ஆரம்பமே அமர்க்களமாக இருந்தது. வெளியில் சென்றிருந்த அந்த மருத்துவர் நான் சென்ற பிறகு தான் வந்தார். வந்ததும் வாசலை ஒட்டிய சின்ன நடையிலிருந்த ஒரு நாற்காலியை எடுத்துப்போட்டு உட்கார்ந்தார். நோயாளிகளெல்லாம் நின்று கொண்டே தான் பேச வேண்டும். நான் நின்றவாறே என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, வங்கி மேலாளர் சொன்னதைப்பற்றியும் சொன்னேன். அதற்கு அவர் தான் இயற்கை மருத்துவத்துடன் ஆயுர்வேதமும் சித்த வைத்தியமும் சேர்த்தே பார்ப்பதாகக் கூறினார். என் பிரச்சினைகள் பற்றி கேட்டார். நான் எனக்கு சில ஆண்டுகளாக சர்க்கரை நோயின் பாதிப்பு இருப்பதாகவும் கால் வலி அடிக்கடி இருப்பதையும் கூறினேன். 

அவர் கேட்டார். 

‘ சர்க்கரை வியாதியை குணப்படுத்த முடியுமா? 

நான் சொன்னேன். 

‘ ‘சர்க்கரை வியாதியை குணப்படுத்த இயலாது. அதை எப்போதும் கட்டுக்குள் மட்டுமே வைத்திருக்க முடியும்.” 

“ அப்புறம் அதற்கு ஏன் வைத்தியம் பார்க்க வேண்டும்? இப்போது சாப்பிடும் வைத்தியத்தையே பின்பற்றலாமே?” 

எனக்கு இந்தக் கேள்விக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை. மனதுக்குள் உடனேயே கிளம்பி விடலாம் என்று முடிவெடுத்து விட்ட போதிலும் நாகரீகம் கருதி பேசாமலிருந்தேன்.

அவர் அடுத்ததாக ஒரு கேள்வி கேட்டார். 

“உங்களால் காலை 4 மணியிலிருந்து ஆறு மணிக்குள் மூலிகை சாறு தடவி குளிக்க முடியுமா? காலை 6 மணியிலிருந்து 8 மணிக்குள் மூலிகை மருந்துகள் சாப்பிட முடியுமா?” 

நான் ஏற்கனவே கிளம்பி விட முடிவு செய்து விட்டதால் ‘ இது எனக்கு ரொம்பவும் கஷ்டம்’ என்றேன். 

“ அப்படியானால் இப்போது என்ன வைத்தியத்தை பின்பற்றுகிறீர்களோ, அதையே தொடர்ந்து கொள்ளுங்கள்!’ 

நன்றி சொல்லி வெளியே வந்த போது கோபம் கூட உடனே வரவில்லை. சிரிப்பு பீரிட்டது.. இங்கே ஒரு மருத்துவர் - அவரிடம் செல்லும்போதெல்லாம் அமர்ந்ததும் நம்மை ஆசுவாசப்படுத்தி, நோயைப்பற்றி விரிவாக அலசிக் கேட்ட பிறகு, நமது பதற்றம் குறைந்த பிறகு தான் நமது இரத்த அழுத்தத்தையே பரிசோதிப்பார். நோயாளியை நிற்க வைத்து பேசும் நாகரீகத்தை இத்தனை வயதில் இங்கு தான் முதன் முதலில் பார்த்தேன். 

நாட்டில் எப்படியெல்லாம் மருத்துவர்கள் இருக்கிறார்கள்!

Saturday 10 August 2013

முத்துக்குவியல்-22!!

அசத்திய தகவல் முத்து:

நவரத்தினங்களின் உண்மைத்தன்மையைக் கண்டு பிடிக்க:


1. நல்ல முத்தென்பது நுரையற்ற பாலில் மிதக்கும்.
2. மரகதத்தை குதிரையின் முகத்தருகே கொண்டு சென்றால் அது தும்ம‌ வேண்டும்.
3. கோமேதகத்தை பசும் நெய்யில் போட்டால் குங்குமப்பூ வாசனை வரும்.
4. நீலக்கல்லை பச்சிலை சாற்றில் போட்டால் மெதுவாக சப்தம் எழுப்பும்.
5. வைடூரியத்தை பச்சிலை சாற்றில் போட்டால் அது நீல நிறமாக மாறும்.
6. புஷ்பராகத்தை சந்தனம் அரைக்கும் கல்லில் வைத்தால் தாமரைப்பூ மணம் கமழும்.
7. பச்சைக்கல்லை குத்து விளக்கின் முன்னே வைத்தால் சிவப்பாக தெரியும்.

ரசித்த முத்து:பாரதி பாஸ்கர் நடுத்தர வயதில் அல்லாடும் பெண்களைப்பற்றி எழுதியதில் சில வரிகள்!

ஒரு அம்மாவிடம் காட்டும் எரிச்சலை, எரிந்து விழுகிற சிடுசிடுப்பை வீட்டில் யாரிடமும் காட்டி விட முடியாது. அம்மா? அவள் மீது தான் பூமாதேவி என்ற லேபிள் குத்தியிருக்கிறதே, அதனால் அவள் தாங்கிக் கொள்வாள்.

குடும்பமே ஹாலில் கிரிக்கெட் பார்த்துக்கொண்டிருக்க, இரு அடுப்புகளில் இரு தோசைக்கல்களைப் போட்டு மாற்றி மாற்றி தோசை ஊற்றி, அடுக்களைக்கும் ஹாலுக்கும் ஓடி ஓடி சுடச்சுட பரிமாறியதும் இவளே. இன்று திருமணம் ஆன மகன், தன் மனைவி அடுக்களையில் இருந்தாலும் தானே வந்து காப்பி போட்டுக்கொண்டு, அவளுக்கும் ஒரு தம்ளர் கொடுப்பதை பார்த்தும் பாராமல் இருக்கிறவளும் இவளே!

ஆரம்பத்தில் மாமியாரிடம் பேச்சு வாங்கி கஷ்டப்பட்டு, இன்றைக்கு மருமகளிடம் பேச முடியாது நயத்தகு நாகரீகம் பாராட்டும் இவள் வாழ்வு ஒரு எழுதப்படாத சரித்திரம்.

இளமையில் எதையும் தாண்டி ஓடி விட முடிகிறது. நடுத்தர வயதிலோ உரிய மரியாதை இல்லாத உழைப்பு விழலுக்கு இரைத்த நீரோ என்ற ஏமாற்றம் தாக்குகிறது. தனக்கான அடையாளத்தையும் அங்கீகாரத்தையும் தேடும் பெண்ணின் வலியும் ஆழ்மன எக்கமும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது!

ரசித்த கவிதை:

இது ஒரு சினேகிதியிடமிருந்து வந்த எஸ்.எம்.எஸ்!

நிலவை நேசி மறையும் வரை!
கனவை நேசி கலையும்  வரை!
இரவை நேசி விடியும் வரை!
மலரை நேசி உதிரும் வரை!
நட்பை நேசி உயிர் பிரியும் வரை!

புன்னகைக்க வைத்த வாசக முத்து:காதல் திருமணம்:  தானாய் போய் கிணற்றில் விழுவது.
பெரியவர்கள் செய்து வைக்கும் திருமணம்:  பலர் சேர்ந்து கிணற்றில் தள்ளுவது.