Showing posts with label தொடர்பதிவு. Show all posts
Showing posts with label தொடர்பதிவு. Show all posts

Tuesday, 2 August 2016

பயணங்கள் முடிவதில்லை!!!

சில மாதங்களுக்கு முன் சகோதரர் தமிழ் இளங்கோ அவர்களது வலைத்தளத்தில் பயணம் பற்றிய தொடர்பதிவு ஒன்றில் கலந்து கொண்டு அதன் கேள்விகளுக்கு பதில்கள் எழுதி பதிவு செய்து, என்னையும் அதில் கலந்து கொள்ளச் சொல்லி எழுதினார்கள். பல வித சூழ்நிலைகள் காரணமாக என்னால் இதுவரையில் அதில் பதிவெழுத இயலவில்லை. இப்போது தான் அந்தத் தொடர்பதிவிலிருந்த கேள்விகளுக்கு  பதிலெழுதுகிறேன். எனக்கு இந்த வாய்ப்பளித்ததற்கும் தொடர்பதிவு எழுதச் சொல்லி என்னை அழைத்ததற்கும் சகோதரர் அவர்களுக்கு என் மனங்கனிந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

பயணம் என்றதும் உடலால் செல்லும் பயணம் உடனே நினைவுக்கு வருவதில்லை! வாழ்க்கைப்பயணம் தான் உடன் நினைவுக்கு வருகிறது! வாழ்க்கையென்னும் பயணத்தில் யாரைல்லாம் நம்முடன் கூடவே வருவார்கள் என்று நம்புகிறோமோ அவர்கள் ரயில் பயணம் மாதிரி இடையிலேயே இறங்கி விடுகிறார்கள். இவர்களுடைய பிரியமெல்லாம் நிலைக்காது என்று யாரை நினைக்கிறோமோ அவர்கள் இடையிலேயே இறங்கி விடாமல் வழித்துணையாக கூடவே இணைந்து வருகிறார்கள்! வாழ்க்கையின் விசித்திரமும் நிதர்சனமும் இது தான்!

இந்தப் பயணத்தை வைத்து எத்தனை அருமையான திரைப்படங்கள் வந்திருக்கின்றன! பாலச்சந்தரின் 'ரயில் சினேகம்' எனக்கு மிகவும் பிடித்தமான சீரியல் என்றுமே! விமானப்பயணமும் கடலில் சிறு படகுப்பயணமும் இணைந்த ' பாண்டிஷ்' என்ற பழைய பாகிஸ்தானிய திரைப்படம் என்றுமே எனக்கு மறக்க முடியாத காவியம்! விரைவில் அதை ஒரு பதிவாக எழுதுவேன். 1976ல் காலஞ்சென்ற எம்.எஸ்.விஸ்வநாதன் ' பயணம் ' பற்றி ஒரு பாடல் பாடியிருக்கிறார். அதில் வரும் சில வரிகள்...

"ஆரம்பம் பள்ளிக்கு பயணம்!பின்பு
அடுத்தது ஆசையின் பயணம்!
இளம் காதலர் கண்களில் பயணம்!அந்த
கலக்கத்தில் கண்ணீரில் பயணம்!
இறைவனும் மனிதனும் பயணம் செய்தாலே
எவரை எவர் வெல்லுவாரோ!"

கண்ணதாசன் எழுதிய பாடல் இது!

இனி கேள்விகளுக்கு பதில்கள்!

1.பயணங்களில் ரயில் பயணம் எப்போதும் அலாதி தான். உங்கள் முதல் ரயில் பயணம் எப்போது என நினைவிருக்கிறதா?

முதல் பயணம் என்பதெல்லாம் நினைவில் இல்லை. சின்னஞ்சிறு  வயதில் என் நாத்தனாரின் திருமணம் நீடாமங்கலத்தில் நடந்தது. அப்போது எனக்கு 11 வயதிருக்கும். அதன் பின் மாப்பிள்ளை வீடிருக்கும் திருவையாறு சென்று பின் தஞ்சையில் நீடாமங்கலம் செல்ல இரயிலேறியது நினைவில் எழுகிறது. எல்லோரும் என்னையும் என் தங்கையையும் பாடச் சொல்ல ' பொண்ணு மாப்பிள்ளை ஒண்ணா போகுது ஜிகு ஜிகு வண்டியிலே, பொருத்தமானதொரு ஜோடி போகுது குபுகுபு வண்டியிலே' என்ற பிரபலமான பாடலை நாங்கள் பாட, மணப்பெண் [12 வருடங்கள் கழித்து என் நாத்தனாரானார்!] கழுத்தில் மணமாலையுடன் வெட்கத்தில் தலை கவிழ, அனைவரும் கைதட்டிச்சிரித்த அந்தக் காட்சி இன்னும் பசுமையாக நினைவில் உள்ளது!                                      

 2.மறக்கமுடியாத மகிழ்ச்சியான பயணம் எது? 

திருமணம் ஆனதும் எங்களின் முதல் ரயில் பயணம் சென்னையிலிருந்து மும்பை செல்லும் தாதர் எக்ஸ்பிரஸ்ஸில் ஆரம்பித்தது. பசுமையான மரங்களும் அண்ணாந்து பார்த்து ரசித்த‌  அழகிய மலைகளும் அந்த மலைகளினூடே ரயில் மெதுவாக உள்நுழைந்து போனதும் இயற்கை அழகில் அப்படியே சொக்கிப்போய் பிரமித்து அமர்ந்திருந்தது எப்போதுமே மறக்க முடியாத விஷயம்!




3.எப்படி பயணிக்கப் பிடிக்கும்?

இளம் வயதில் ரயில் கம்பிகளில் சாய்ந்து கொண்டு   நிலவைப் பார்த்துக்கொண்டே பயணம் செய்த போது அத்தனை சுகமாக இருக்கும். அப்புறம் கண்ணாடித்தடுப்புகள். குளிர்ப்பதனம் செய்யப்பட்ட பெட்டிகள் தான் பயணம் என்றாகி விட்டது. 40 வருடங்களுக்கு மேல் வெளிநாட்டு வாழ்க்கை என்பதால் விமானப்பயணங்கள் அலுத்து விட்டது. கார்ப்பயணங்கள் என்றால் நல்ல பாட்டுக்கள் ஒலித்துக்கொண்டிருக்க வேண்டும். அப்போது தான் இயற்கை அழகை முழுமையாக ரசிக்க முடியும் எனக்கு. மாட்டு வண்டி பயணங்கள் கிராமங்களில் அத்தனை ரம்மியமாக இருக்கும். விடியற்காலை நேரத்தில்  இளங்காற்று முகத்தில் மோத, வயல்களின் நாற்றுக்கள் வாசத்தை நுகர்ந்து கொண்டே செல்லும் பேருந்து பயணங்களும் மிகவும் பிடிக்கும்!!




4.பயணத்தில் கேட்க விரும்பும் இசை?

எப்போதுமே தமிழ்த்திரையிசைக்குத்தான் முதலிடம். சிலசமயம் மலையாளப்பாடல்கள், ஹிந்திப் பாடல்கள் கேட்பதுண்டு.1965லிருந்து இன்றைய பாடல்கள் வரை தமிழின் மென்மையான பாடல்கள் எப்போதுமே என்னுடன் பயணத்தில் சிடி வடிவத்தில் வரும். பெரும்பாலும் எங்கள் காரில் போகாமல் தெரிந்தவர் ஒருவரின் காரில் தான் செல்வோம். கிளம்பியதுமே அவர் என்னிடம் ரிமோட்டைக் கொடுத்து விடுவார். நான் மாற்றி மாற்றி அவரிடம் சிடி கொடுத்துக்கொண்டிருப்பேன். இப்படித்தான் பயணம் இனிமையாக, இசையுடன் செல்லும் எப்போதும்!

 5.விருப்பமான பயண நேரம்?

விடியற்காலைப்பயணம் தான் ரசனையாக இருக்கும்! ஆனால் எங்களுக்குள் ஒரு உறுதிப்பாடு உண்டு. எங்கு பயணித்தாலும் மாலை 6 மணிக்கு மேல் பயணம் செய்ய மாட்டோம். இரவு நேரங்களைக் கட்டாயமாகத் தவிர்த்து விடுவோம்!

6.விருப்பமான பயணத்துணை?

கணவரின் துணையில் பரிவும் பாதுகாப்பும் இருக்கும். மகனின் துணையில் அன்பும் அக்கறையுமிருக்கும். தோழியருடனான உரையாடல்களில் சிரிப்பும் புரிதலுமிருக்கும். இசையில் மன நிறைவிருக்கும்!



7.பயணத்தில் படிக்கவிரும்பும் புத்தகம்?

நீண்ட நேர விமானப்பயணம் என்றால் நிச்சயம் ஒரு ஆங்கில நாவல் இருக்கும். [ ஆங்கில நாவல் என்றால் நீண்ட நேரம் தாக்குப்பிடிக்கும். தமிழ் நாவலென்றால் விரைவிலேயே முடிந்து விடும்.] நம் ஊர்ப்பயணங்கள் என்றால் புத்தகங்களைத்தொடுவதில்லை! ஆனால் கை வசத்தில் இரண்டு நாவல்கள் எப்போதும் இருக்கும்!

8.விருப்பமான ரைட் அல்லது டிரைவ்?

அப்படி எதுவுமில்லை!

9.பயணத்தில் நீங்கள் முணுமுணுக்கும் பாடல்?

நல்ல பாடல்களைக் கேட்கும்போது தானாகவே அதோடு சேர்ந்து மெதுவாகப் ஹம்மிங் பண்ணுவதுண்டு!

10.கனவுப் பயணம் ஏதாவது ?

தமிழ்நாட்டில் நிறைய கிராமங்களுக்கு பயணித்து, அங்குள்ள உண‌வு முறைகள், பழக்க வழக்கங்கள், சரித்திரப்புகழ் பெற்ற கோவில்கள் இவற்றையெல்லாம் பார்க்க வேன்டும் என்ற ஆவல் உண்டு!



Monday, 11 August 2014

நட்பெனும் தொடர்பதிவு!

சில மாதங்களுக்கு முன் அன்பு சகோதரிகள் கீதமஞ்சரி, இளமதி இருவரும் இந்தத் தொடர்பதிவில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்கள். தொடர் அலைச்சல்கள், வேலைச்சுமைகள் என்று இது வரை நேரம் கிடைக்காமல் இருந்தது. ஒரு வழியாக கிடைத்த சிறிது நேரத்தில் இந்தத் தொடர் பதிவிற்கான கேள்விகளுக்கான பதில்களை எழுதுகிறேன்.

1.உங்கள் 100 வது  பிறந்த நாளை எப்படி கொண்டாட விரும்புகிறீர்கள்?

பிறரைச் சார்ந்து வாழ்வது மூப்பின்போது தவிர்க்க முடியாததாய் தொடர ஆரம்பிக்கிறது. புற வலிகள், தள்ளாமை இவற்றுடன் 100 வயது வரை வாழ்ந்திருக்க மிகுந்த மன பலம் வேண்டும். அந்த மன பலம் மனதுக்கு நெருங்கியவர்களின் அன்பினாலும் பரிவினாலும் சகிப்புத்தன்மையினாலும் மட்டுமே கிடைக்கும். அதனால் நூறாவது பிறந்த நாள் என்று ஒன்று வந்தால் அது என் மனதிற்கு இதம் கொடுத்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நாளாக மட்டுமே இருக்கும். பொருள்ளாதார வசதியும் இருந்தால் அவர்களுக்கு சிறந்த பரிசுகள் கொடுக்கும் நாளாகவும் அது அமையும்!!

2. என்ன கற்றுக்கொள்ள விரும்புறீர்கள்?

பிரியசகி சொன்னது போல மனித மனங்களை! மிகச் சாதாரணமானவராக நாம் நினைப்பவரிடம் பேரன்பு ஒளிந்திருப்பதும் நெருங்கியவராய் நாம் நினைப்பவரிடத்தில் துரோகம் ஒளிந்திருப்பதும் வாழ்க்கையின் ரகசியம். இதில் நுழைந்து மனித மனங்களைக் கற்க முயலும்போது தான் ரகசியம் கொஞ்சமாவது புரிபடுகிறது!!
ஓவியம், இசை, சமையல், தையல் மட்டுமே தெரியும். இன்னும் எத்தனைக் கலைகளை கற்க முடியுமோ அத்தனையையும் கற்க வேண்டும்!

3. கடைசியாக சிரித்தது எப்போ? எதற்காக?
  
 கடைசியக எத‌ற்குச் சிரித்தேனென்பது ஞாபகமில்லை.ஆனால் எப்போது நினைத்தாலும் என் பேரன் கேட்ட ஒரு கேள்வி என்னை சிரிக்க வைக்கும். குழந்தைகளுக்கு துக்கமோ, வலிகளோ, எதுவும் தெரியாதல்லவா? தெரிந்தவர் ஒருத்தரின் மரணச்செய்தியைச் சொல்ல உறவினர் ஒருத்தர் என் சம்பந்தி வீட்டுக்கு வந்திருக்கிறார். செய்தியைச் சொல்லி ' அவர் மேலே போய்விட்டார்' என்றிருக்கிறார். இதைக் கவனித்துக்கொன்டிருந்த என் பேரன்   [ பெயர் விமல் ஆதித்யா] ' எப்ப்டி மேலே போனார்? ஃப்ளைட்டில் ஏறிப் போனாரா?" என்று கேட்க, துக்கத்தை சொல்ல வந்தவருக்கே சிரிப்பு வந்ததை தவிர்க்க முடியவில்லை!

4. 24 மணி நேரம் பவர்கட் ஆனால் நீங்கள் செய்வது என்ன?

இப்போதெல்லாம் அறிவித்து விட்டுத்தான் பவர் கட் செய்கிறார்கள். அதனால் முதல் நாளே அடுத்த நாளுக்கு சாப்பிட தயிர்சாதம், புளியஞ்சாதம் செய்து விடுவேன். [ சாப்பட்டுப்பிரச்னை தான் முதல் பிரச்சினை! அதனால் அதை முதலில் சரி செய்து கொள்ள‌ வேண்டும்.]
பின் ரொம்ப நாளாக படிக்க வேண்டுமென்று நினைத்து முடியாமல் தேங்கிக்கொன்டிருந்த புத்தகங்களை தயாராய் எடுத்து வைத்துக்கொள்வேன். இன்வர்ட்டரின் சக்தி தீரும் வரை கணினியில் பிடித்த பாடல்களைக் கேட்பதும் வலைத்தளங்களில் மேய்வதுமாக பாதி நாள் கழிந்து விடும்.
ஆனல் எல்லாவற்றையும் விட ரொம்பவும் சுலபமான விஷ‌யம், ரொம்ப நாட்களாய் போக வேண்டுமென்று விரும்பி, ஆனால் போக முடியாமலேயே இருந்த இடங்கள் அல்லது வெளியூரிலுள்ள உறவினர் வீடுகளுக்குச் செல்வது!

5.உங்களுடைய குழந்தையின் திருமணநாள் அன்று அவர்களிடம் நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?

உணர்ச்சிப்பெருக்கான அன்றைய தினத்தில் மனதின் ஆழத்திலிருந்து ' என்றைக்கும் நீ மகிழ்வுடன் இருக்க வேண்டும்' என்று வரும் சாதாரண வாழ்த்திற்குக்கூட‌ வலிமை அதிகம்!! நானும் அதைத்தான் சொன்னேன்!

6.உலகத்தில் நடக்கும் பிரச்சனைகளை உங்களால் தீர்க்க முடியுமென்றால் எந்த பிரச்சனையை நீங்கள் தீர்க்க விரும்புவீர்கள்.?

அமைதியின்மை!

7.உங்களுக்கு ஒரு பிரச்சனை அதை தீர்க்க யாரிடம் அட்வைஸ் கேட்க விரும்புவீர்கள்.?

பிரச்சினைகளைத் தனியாக சமாளித்த அனுபவங்கள் உண்டென்றாலும் சில சமயங்களில் கணவரும் மகனும் உதவுவது உண்டு!

8.உங்களைப் பற்றி ஒருவர் தவறான செய்தியைப் பரப்புகிறார். 
அதைக் கேள்விப்பட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்?


இளமையில் நிச்சயம் தாக்கம் இருக்கும். இப்போது அது போன்றவற்றையெல்லாம் கடந்து வந்து விட்டதால் இந்த மாதிரி விஷயங்கள் பாதிப்பு ஏற்படுத்தாது. இருப்பினும் தேவையில்லாமல் நம்மைப்பற்றி தவறான செய்திகள் பரவும்போது அதற்கான நடவடிக்கை எடுக்கும் தார்மீகக் கடமை நமக்கு இருக்கிறது.

9.உங்கள் நண்பரின் மனைவி இறந்துவிட்டால்,அவரிடம் என்ன சொல்வீர்கள்?

நண்பர் இறந்து அவரின் மனைவிக்கு ஆறுதல் சொல்லப்போன கொடுமையான அனுபவம் இருக்கிறது. அவரின் இழப்புக்கு என்னவென்று ஆறுதல் கூறுவது? வார்த்தைகளுக்கு அர்த்த்ம் இல்லாத நேஎரங்களில் இதுவும் ஒன்று!

10.உங்கள் வீட்டில் நீங்கள் தனியாக இருந்தால் என்ன செய்வீங்க.?

நிறைய [ கொஞ்ச‌ம் சத்தமாக] பாட்டு கேட்பேன். அதுவும் பி.சுசீலா பாடிய பழைய பாடல்கள், 'கண்கள் எங்கே,  மாலைப்பொழுதின்  மயக்கத்திலே'   போன்ற‌ அமுத  கானங்களை !  

என்னை அன்புடன் அழைத்து என் எண்ணங்கள் சிலவற்றை இங்கே எழுதச் செய்ததற்கு அன்பிற்கினிய கீதமஞ்சரி, இளமதிக்கு என் மனம் கனிந்த நன்றி!!

இந்தத் தொடர்பதிவை தொட‌ர்ந்திட நான் அழைப்பது:

சகோதரிகள்:

1. ப்ரியா-http://wordsofpriya.blogspot.com/
2. ஹுஸைனம்மா  -http://hussainamma.blogspot.ae/
3. நிலாமகள் http://nilaamagal.blogspot.ae/
4. எழில்- http://nigalkalam.blogspot.com/

சகோதரர்கள்:

1. தமிழ் இள‌ங்கோ--http://tthamizhelango.blogspot.com/
2. கரந்தை ஜெயக்குமார்- http://karanthaijayakumar.blogspot.com/
3. சாமானியன்--http://saamaaniyan.blogspot.ae/

Friday, 4 October 2013

முதற்பதிவின் சந்தோஷம்-தொடர்பதிவு!!

' முதல் பதிவின் சந்தோஷம் என்ற தொடர் பதிவில் கலந்து கொள்ளுமாறு சகோதரர் தமிழ் இளங்கோ என்னை சென்ற மாதம் அழைத்திருந்தார்கள். அவர்களுக்கு என் இதயம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்ளுகிறேன்.

முதல் பதிவென்பதை என் வாழ்க்கையில் இரண்டு மூன்று கட்டங்களாகப் பிரிக்க வேண்டியிருக்கிறது.

என் இளம் வயதுப்பருவம் முழுக்க முழுக்க புத்தகங்கள் தான் என் முதற்காதலாக, உற்ற சினேகிதியாக இருந்திருக்கின்றன. கல்கியின் ‘ சிவகாமியின் சபதமும்’ ஆங்கிலத்தில் ‘Denise Robins நாவல்களும் கீட்ஸ், ஷெல்லி, தாமஸ் மூர் இவர்களது கவிதைகளும் தான் அந்த வயதுக்கனவுகளில் வலம் வந்திருக்கின்றன.. அதனாலேயோ என்னவோ, மனதில் கதை எழுதும் தாகம் இருந்து கொண்டே இருந்தது. இளம் வயதில் அரசுப்பள்ளியில் ஓவிய ஆசிரியையாக பணி செய்த போது, ஒரு நாள் மனதில் அதுவரை தேக்கி வைத்திருந்த ஆர்வத்தையெல்லாம் கொட்டி எழுதி
‘ பிரிந்து விட்ட பாதைகள் இணைவதில்லை’ என்ற சிறுகதையாக அப்போது, எழுத்தாளர் சாவியை ஆசிரியராகக்கொண்டு வெளி வந்து கொண்டிருந்த ‘ தினமணி கதிர்’ வார இதழுக்கு அனுப்பி வைத்தேன். எழுத்துலகில் இது தான் என் முதற்பதிவு.

அப்போதெல்லாம் பிரபல எழுத்தாளர்கள், தங்கள் முதல் சிறுகதை எத்தனை எத்தனை தொடர் முயற்சிகளைக் கண்டிருக்கின்றன என்று எழுதியதையெல்லாம் படித்திருந்ததாலோ என்னவோ கதை பிரசுரமாகுமா என்ற தவிப்போ, கனவோ ஏதுமின்றி, மற்ற என் வேலைகளில் மூழ்கி கிட்டத்தட்ட சிறுகதை அனுப்பியதையும் மறந்தே போனேன். ஒரு நாள் தினமணிக்கதிரைப் புரட்டியபோது, என் சிறுகதை என் பெயரில், ஓவியர் ஜெயராஜின் ஓவியங்களோடு வெளிவந்திருப்பதைப்பார்த்ததும், மகிழ்ச்சி, பிரமிப்பு எல்லாமே ஒரே நேரத்தில் மின்னல் போலத் தாக்கின. அதன் பின் வந்து சேர்ந்த ஆசிரியரின் கடிதம், ஊக்குவிப்பு, கதை எழுதியதற்கான அன்பளிப்பு எதுவுமே மனதில் ஊன்றிப்பதியாத அளவு நான் வானத்தில் மிதந்து கொண்டிருந்தேன் என்று தான் சொல்ல வேண்டும். நாற்பது வருடங்களுக்கு முன்னால் புகழ் பெற்ற வார இதழில் வெளி வந்த இந்த முதல் பதிவின் சந்தோஷத்தை இன்றைக்கு என்னால் வார்த்தைகளால் விவரிக்கத்தெரியவில்லை. ஆனால் மிக இளம் வயதில் கைகளில் வந்து விழுந்த புதையலாய், வரமாய் அதை நினைத்துக் கொண்டாடியது மட்டும் இன்னும் பசுமையாய் நினைவில் நிற்கிறது.

இணைய உலகில் முதற்பதிவு என்றால் அது ஒரு சமையற்குறிப்பு தான். www.mayyam.com என்ற வலைத்தளத்தின் உணவுப்பிரிவில் என் மகன் ஆர்வத்துடன் தொடங்கி வைத்தது தான் Mano’s Tamilnadu delicacies என்ற பகுதி. கணினியைப்பற்றி அதிகம் அறியாத காலம் அது. ஓரளவு இதைப்பற்றிய அறிவுடன் இதற்குள் நுழைந்த பிறகு தான் கணினி முன் உலகம் எத்தனை சிறியது என்று புரிய ஆரம்பித்தது. என் சமையல் பகுதி பல லட்சம் பேர்களால் பார்வையிடப்பட்டிருக்கிறது. எத்தனையோ பேர்களுக்கு சமையல் சொல்லிக்கொடுத்திருக்கிறேன். இதில் மன நிறைவும் சந்தோஷமும் கிடைத்திருக்கிறது. இதன் மூலம் தான் அறுசுவை நிறுவனர் பாபுவின் அழைப்பிற்கிணங்கி சமையல் நிபுணர்கள் திருமதி. கலைச்செல்வி சொக்கலிங்கம், திருமதி. ரேவதி  ஷண்முகத்துடன் இணைந்து ஒரு சமையல் போட்டியின் நடுவராக பங்கேற்க நாகைப்பட்டிணத்திற்குச் சென்றேன். அங்கே மிகப்பெரிய ஆச்சரியம் எனக்காக காத்திருந்தது. அறுசுவை நிறுவனர் என் உறவினர் என்ற செய்தி அனைவரும் உரையாடிக்கொண்டிருந்த போது யதேச்சையாகத் தெரிந்து மனதில் மிகவும் சந்தோஷம் ஏற்பட்டது. உலகம் சிறியது தான் என்ற உண்மை புலப்பட்டபோது பிரமிப்பேற்பட்டது. அதே அறுசுவையில் எல்லோருக்கும் பிரியமானவராக அறியப்பட்ட, வர்மக்கலைகள், மருத்துவம், ஆழ்நிலைத்தியானம் என்று தொடர்கள் எழுதிக்கொன்டிருந்த‌ திரு. ஹைஷ் கடைசியில் இதே மாதிரி என் உறவினர் என்று அறிந்த போது நம்ப முடியாத ஆச்சரியமும் மகிழ்ச்சியும் மனதில் சூழ்ந்தன. இணைய உலகத்தால் கிடைத்த அருமையான உறவுகள் இவை. இது தான் மிகப்பெரிய சந்தோஷம் என்று சொல்ல வேண்டும்.

தொடர்ந்து ஒரு சில வருடங்கள் என் சிறுகதைகள், ஓவியங்கள் சில
பிரபல பத்திரிகைகளில் வெளி வந்த பின் சூழ்நிலைகள் காரணமாக என்னுள் இருந்த கதாசிரியையை நான் உள்மனதிலேயே அதிக வருடங்கள் உட்கார வைத்து விட்டேன். காலச் சுழற்சியில் கடமைகள் முடிந்து எனக்கென்று சில மணி நேரங்கள் கிடைத்த போது,  எனக்கு மட்டும் வடிகால் இல்லையா என்று உள்ளே உறங்கிக்கொண்டிருந்த கதாசிரியை எழுந்து நின்று கேட்டதும் எனக்கென்று ஒரு வலைப்பூ ஆரம்பிப்பது குறித்து முயற்சிகளில் இறங்கினேன். கதைகள், கவிதைகள், மருத்துவம், ரசனை, சிந்தனை, கலைகள் என்று பல முத்துக்கள் இணைந்திருப்பதால் என் வலைப்பூ ‘முத்துச்சிதறல்’ ஆயிற்று. இது நாம் பெற்ற குழந்தை போல! எப்படி வேண்டுமானாலும் அலங்காரம் செய்யலாம், அழகு பார்க்கலாம்! இதை ஒரு நல்ல தளமாக உருவாக்குவதற்கு சினேகிதிகள் ஸாதிகா, ஆசியா, ஜலீலா உதவினார்கள். அவர்களுக்கு என் மனம் நிறைந்த நன்றியை இங்கே தெரிவித்துக்கொள்கிறேன். 

முதல் பதிவை 2010ம் ஆண்டு மார்ச் மாதம் 15ந்தேதி எழுதினேன். முதல் பதிவே குழந்தை வளர்ப்பு பற்றி இளம் அன்னையர்களுக்கு என் வேண்டுகோள் என்ற முறையில் அமைந்திருந்தது. முதல் பதிவு கொடுத்தது சந்தோஷமும் மன நிறைவும் கலந்த ஒரு உணர்வு!! எல்லாவற்றையும் விட, வலைப்பூவில் பதிவுகள் எழுதுவதும் பின்னூட்டங்கள் இடுவதும் நம் உணர்வுகளையும் அறிவையும் விசாலமாக்குகிறது என்பதுடன் அதிக தேடல்களை உண்டாக்குவதால் தனி உற்சாகமும் ஆர்வமும் எப்போதுமே மனதளவில் ததும்பிக்கொண்டேயிருக்கின்றன. இதன் மூலம் அருமையான நட்பும் அன்பும் தொடர்கதையாய் கிடைத்துக்கொண்டேயிருக்கிற்து. பதிவுலகின் மிகப்பெரிய சந்தோஷம் இது தான்!!

Monday, 10 October 2011

நெஞ்சை அள்ளும் தஞ்சைத் தரணி- பகுதி-2

“வம்புலாஞ்சோலை மாமதிள் தஞ்சை”
என்று திருமங்கையாழ்வாரும்,

“இஞ்சி சூழ் தஞ்சை”
என்று கருவூர்த்தேவரும்,

“தஞ்சை மாநகர்” என்று
அருணகிரி நாதரும்

போற்றிப்பாடிய தஞ்சாவூரைப்பற்றி மேலும் இங்கே தொடர்கிறேன்.

சோழர் காலத்தில் செழித்து சிறந்திருந்த தஞ்சை, பிற்கால சோழ மன்னன் குலோத்துங்கன் மதுரைக்கும் பாண்டிய மன்னன் குலசேகர பாண்டியனுக்கும் இழைத்த தீங்குகளால், திரும்பவும் பாண்டிய மன்னன் மாறவர்மன் சுந்தரபாண்டியனால் முற்றிலுமாய் அழிக்கப்பட்டது. அதன் பின் மாலிக் காபூர் படையெடுப்பால் முழுவதுமாக தஞ்சை சூறையாடப்பட்டது. நாயக்க மன்னர்களும் மராட்டிய மன்னர்களும் மீண்டும் தஞ்சையை அழகிய, சிறந்த நகரமாக உயிர்ப்பித்தார்கள்.

தஞ்சை நகரம்

நான்கு திசைகளிலும் நான்கு பெரிய ராஜ வீதிகள், அதனை சுற்றி நாலு அலங்கங்கள், அதற்குள் குறுக்கும் நெடுக்குமாக அளவில்லா சந்துக்களும் அடங்கியது தான் பழைய தஞ்சை நகரம். அனைத்து திசைகளிலும் முக்கியமாய் தஞ்சை மருத்துவக்கல்லூரி தோன்றிய பின்னர் தஞ்சை நகர் நிறைய விரிவடைந்து விட்டது.

சோழர்களுக்குப்பிறகு நாயக்க மன்னர்களும் அதன் பின் மராட்டிய மன்னர்களும் தஞ்சையை ஆண்டதால் இன்றும்கூட பழைய தஞ்சையின் சில தெருக்களின் பெயர்களும் சந்துக்களின் பெயர்களும் அவர்கள் பெயரில் விளங்குகின்றன.

தஞ்சையில் ராஜராஜ சோழன் சதுக்கம், ராசேந்திர சோழன் சதுக்கம், தொல்காப்பியர் சதுக்கம், நக்கீரன் சதுக்கம் ஆகியவை தஞ்சையிலிருந்து பிரியும் குடந்தை, நாகை, பட்டுக்கோட்டை போன்ற முக்கிய சாலைகளின் சந்திப்புகளின் பெயர்களாகத் திகழ்கின்றன.

தஞ்சையின் நடுவே புது ஆறு எனச்சொல்லப்படும், கல்லணையிலிருந்து தஞ்சை பாசனத்துக்காக வெட்டிய கால்வாயான கல்லணைக்கால்வாயை பல நிலைகளில் பார்க்கலாம்.

இன்று தஞ்சையில் மருத்துவக்கலூரி ஒன்றும் இருக்கிறது. அதன் காரணமாக, எந்த நகரிலுமே இல்லாத அளவு மருத்துவர்கள் இங்கிருப்பதாக, முக்கியமாக தெற்கு அலங்கம் முழுவதும் பல்துறை மருத்துவர்கள் நிறைந்திருப்பது கின்னஸ் புத்தகத்திலும்கூட இடம் பெற்றிருப்பதாகச் சொல்லுகிறார்கள்.

ஆண்களுக்கென்று சரபோஜி கல்லூரி, பெண்களுக்கென்று குந்தவை நாச்சியார் கல்லூரி, சிறுசிறு தொழில் கல்லூரிகள், தஞ்சைக்கு வெளியே மணியம்மை தொழிற்பள்ளி, மணியம்மை பல்கலைக்கழகம், சாஸ்த்ரா பல்கலைக்கழகம் என்று கல்வி வளர்ச்சிக்கான கல்லூரிகள் இருக்கின்றன.

பரத நாட்டியம்



பரத நாட்டிய பல நிலைகளை ராஜராஜ சோழன் தான் முதன் முதலாக கல்லில் வடித்தான் என்று சொல்லப்படுகிறது. ‘சதிர்’ என்று சொல்லப்பட்ட தேவதாசி குலத்திற்கென்றே சொந்தமாகக் கருதப்பட்ட நடனம், பின்னாளில் ‘தஞ்சை நால்வர்’ என்ற அறிஞர்களால் உருமாற்றப்பட்டு ‘பரத நாட்டியமாக’ ஆடப்பட்டது. பிறகு வந்த நடன வல்லுனர்கள் வழுவூர் ராமையா பிள்ளை, பாலசரஸ்வதி, திருவையாற்றைச் சேர்ந்த ருக்மணிதேவி அருண்டேல், பந்தணை நல்லூர் மீனாட்சி சுந்தரம்-இவர்களால் பரத நாட்டியம் சிறப்பான நிலையை அடைந்தது.

தஞ்சை பெரிய கோவில்:

தஞ்சை பெரிய கோவில்
ஆயிரம் ஆண்டுக்கு முன் மாமன்னன் ராஜராஜ சோழன் தஞ்சையில் ஸ்ரீ ராஜராஜீஸ்வரம் எனும் பெரிய கோவிலை கி.பி., 1006ல் தொடங்கி, 1010 ல் கட்டி முடித்தான். இக்கோயிலில் உள்ள கல்வெட்டுக்கள் சோழர்கால தமிழகத்தின் வரலாறு, கல்வெட்டியல், அரசியல், கட்டடக்கலை, சிற்பம், ஓவியம், நடனம், இசை ,சமுதாயச் சிறப்புகள், இறைக் கொள்கை ஆகியவற்றை நமக்கு பெருமிதத்துடன் தெரிவிக்கிறது. இக்கோயில் யுனெஸ்கோ நிறுவனத்தின் உலக பாரம்பரிய நினைவுச் சின்னங்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளது. தன்னிடம் தஞ்சமடைய வருபவர்களை வரவேற்கும் முகத்துடன் இக்கோவிலின் முதல் வாயில் ‘அடையாத வாயில்’ என்ற பெயருடன் திறந்தே இருக்கிறது.

தஞ்சை பெரிய கோவிலைப்பற்றி ஏற்கனவே நான் விரிவாக எழுதியிருக்கும் பதிவுகளை இங்கே பார்க்கவும்.

சமயம் வளர்த்த தஞ்சை

தஞ்சையில் எல்லா சமயத்தவர்களுக்கும் வழிபாட்டுத்தலங்கள் உள்ளன. சைவ, வைணவம் தவிர, கிறிஸ்தவர்களின் திருச்சபைகள், கத்தோலிக்கர் தேவாலயங்கள், இஸ்லாமியர்களின் பள்ளிவாசல்கள், தர்க்காக்கள் அதிக அளவில் இருக்கின்றன. இது தவிர, கரந்தையில் ஆதீஸ்வரர் என்ற சமணக்கோவில் உள்ளது. தஞ்சை பெரிய கோவிலில் கருவறையின் தென்பாகத்திலும் கேரளாந்தகன் திருவாயிலிலும் புத்தர் சிலைகள் காணப்படுகின்றன. இவை தஞ்சையில் ஒரு காலத்தில் புத்த மதமும் செழித்திருந்தது என்று தெரிவிக்கிறது.

தமிழ் வளர்த்த தஞ்சை:

பழங்கால இலக்கியங்களில் ‘கருந்திட்டைக்குடி’ என்று அழைக்கப்பட்ட, தற்போது ‘கருத்தட்டாங்குடி’ என்று அழைக்கப்படும் ‘கரந்தை’ நகரம் தஞ்சைக்கு வெளியே வட திசையில் இருக்கிறது. இந்தக் கரந்தையில் தமிழ்ச்சங்கம் 1911-ம் ஆண்டு தொடங்கப்பட்டு பல்லாண்டுகளாக தமிழ்த்தொண்டாற்றி வருகிறது. இதில் முப்பது ஆண்டுகளுக்கு மேல் தமிழ்வேள் உமா மகேஸ்வரனார் தமிழை வளர்க்க அரும்பாடு பட்டார். தொல்காப்பியத்திற்கு மறுப்புரை எழுதிய தமிழ்ப்புலவர் சோமசுந்தரம் பிள்ளை என் தந்தை வழி பாட்டனார். அவருடைய ஓவியம் இன்றளவும் கரந்தை தமிழ்ச்சங்கத்தில் உள்ளது.  தமிழ்ப்புலவர் பவானந்தம் பிள்ளை பழைய சுவடிகளை தேடிப்பிடித்து அச்சேற்றிய பெருமைக்கு உரியவர்.
ராவ்சாகிப் ஆப்ரகாம் பண்டிதர் 1400 பக்கங்கள் கொண்ட ‘கருணாமிர்த சாகரம்’ என்ற பெரிய இசை நூலை வடித்தவர். இவர் பெயரில் தஞ்சை கீழவாசல் அருகே ஒரு சாலையே உள்ளது. இன்னும் தமிழ் அறிஞர்கள் வேதநாயகம் சாஸ்திரி, ராவ்பகதூர் சீனிவாசபிள்ளை, விபுலானந்த அடிகள், சிவக்கொழுந்து தேசிகர் போன்றவர்கள் தங்கள் தமிழாற்றலால் கரந்தை தமிழ்ச்சங்கத்திற்கு பெரும் தொண்டாற்றியவர்கள்.

தமிழ்ப்பல்கலைக் கழகம்


தமிழ்ப்பல்கலைக் கழகம்
 இப்பல்கலைக்கழகம் 1981-ல் மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரனின் ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்டது. தமிழ்நாட்டிலேயே தமிழுக்கென்று ஆரம்பித்த ஒரே பல்கலைக்கழகம் இது தான் என்று சொல்லப்படுகின்ற்து.



தமிழ் பல்கலைக்கழக முகப்பு
இங்கே இயல் இசை நாடகம் பயிற்றுவிக்கப்படுகின்றன. மொழி, இலக்கிய ஆய்வுகள் செய்வது, கல்வெட்டுக்கள் மற்றும் ஓலைச்சுவடிகளை புத்தகங்களாக வெளியிடுவது, அந்நிய நாட்டினர்க்கு தமிழ் கற்பித்தல் ஆகிய அரும்பணிகளை இந்த தமிழ்ப்பல்கலைக்கழகம் செய்து வருகிறது.

தென்னக பண்பாட்டு மையம்:

கலை மற்றும் பண்பாட்டினை வளர்ப்பதற்காகவும் பாதுகாப்பதற்காகவும் மத்திய அரசால் அமைக்கப்பட்டுள்ள தென்னகப் பண்பாட்டு மையம் தஞ்சாவூரில் தான் அமைந்துள்ளது. இது தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, மற்றும் கர்நாடகா ஆகிய நான்கு மாநிலங்களை உள்ளடக்கிய தென்னிந்தியாவின் தலைமை மையமாகும்.

தஞ்சை அரண்மணை



அரண்மணை தர்பார் ஹால்
 தஞ்சை அரண்மணையின் நுழைவாயில் கிழக்கு ராஜவீதியில் உள்ளது. ஆங்காங்கே பெரிய மற்றும் சிறிய கலையழகுள்ள கட்டடங்கள் காணப்படுகிறது. இவை நாயக்க மற்றும் மராத்திய மன்னர்களால் கட்டப்பட்டது. நுழைவு வாயிலில் மிகப்பெரிய முற்றம் உள்ளது.. பெரிய முற்றத்தின் வழி சென்றால் அங்கு பல தூண்களை உடைய பெரிய கூடம் உள்ளது.



கண்காணிப்பு கோபுரம்

தெற்கு பக்கத்தில் 190 அடி உயரமுடைய எட்டு அடுக்குகளை உடைய கூட கோபுரம் உள்ளது. இது கண்காணிப்பு கோபுரம் என அழைக்கப்படுகிறது. மன்னர்களின் படைக்கல கொட்டிலாக இந்த இடம் இருந்தது.


அருகே உயர்ந்த கோபுரம்

அருகே உயர்ந்த கோபுரம் ஒன்றும் உள்ளது. இவற்றின் மேலேறி நாயக்க மன்னர்கள் திருச்சி ஸ்ரீரங்கப் பெருமானை வழிபட்டதாகச் சொல்லப்படுகிறது. இந்த அரண்மனையில் நாயக்க, மராத்திய மன்னர்களின் தர்பார் ஹால் மற்றும் ராஜா சரபோஜி சரஸ்வதி மகால் நூலகம் ஆகியவை பார்க்கத் தகுந்த இடங்களாகும் மராத்திய /நாயக்க அரண்மனை கலைக்காட்சியகமாகவும் ,சரஸ்வதி மஹால் நூல் நிலையம் பழைய ஓலைச்சுவடிகளின் உறைவிடமாகவும் உள்ளன. இங்குள்ள கலைக்கூடத்தை நிறுவியவர் தமிழறிஞர் தொ.மு.பாஸ்கரத் தொண்டைமானும் கலெக்டராக இருந்த திரு. பழனியப்பனும்தான் என்று ஆய்வாலர்கள் தெரிவிக்கிறார்கள்..

சரஸ்வதி மஹால்




சோழர் காலத்தில் ‘ சரஸ்வதி பண்டாரம்’ என்று உருவாக்கப்பட்ட நூல் நிலையமே, மராட்டியர் காலத்தில் ‘சரஸ்வதி மஹால்’ என்று மாற்றப்பட்டது. இங்குள்ள நூலகத்தில் ஏறத்தாழ 4500 பழமையான புத்தகங்கள் உள்ளன. 30000க்கு மேல் ஓலைச்சுவடிகள் உள்ளன. அவை அறிஞர்கள், மன்னர்களால் கையொப்பமிட்டு வந்தவை என்று சொல்லப்படுகிறது. இதில் 300 ஆண்டுகள் நாயக்க மன்னர்களாலும் மராட்டிய மன்னர்களாலும் சேகரிக்கப்பட்ட எண்ணற்ற ஓலைச்சுவடிகள் சமஸ்கிருதத்திலும் தெலுங்கிலும் தமிழிலும் மராட்டிய மொழியிலும் உள்ளன.

சிவகங்கை பூங்கா

பெரிய கோவிலின் வடக்கே சிவகங்கை பூங்கா உள்ளது. 
பூங்காவின் உள்ளே
பூங்கா வழியே தெரியும் பெரிய கோவில் கோபுரம்

பூங்காவின் முகப்பு



பூங்காவிற்கருகே சிவகங்கைக் குளமும் நடுவேயுள்ள சிறு கோவிலும்


ஆயிரம் ஆண்டுகள் பழமையான யானைக்கால் மரம்

1000 ஆண்டுகள் பழமையான ஆலமரம் இங்குள்ளது. சுற்றிப்பார்க்க சிறு ரயில் வசதியும் உள்ளது. பொழுது போக்க ஒரு உகந்த இடமாக பலருக்கும் விளங்குகிறது.

தஞ்சை அருகே..

தஞ்சையிலிருந்து 12 கி.மீ தூரமுள்ள திருவையாறு சாஸ்திரீய இசைக்குப் புகழ் பெற்றது. தஞ்சைக்கும் திருவையாற்றிற்கும் இடையே காவிரி, வெண்ணாறு, வெட்டாறு, வடவாறு, குடமுருட்டி என்ற ஐந்து ஆறுகள் ஓடுவதால் அவற்றைச் சார்ந்த நகரம் திரு+ஐயாறு= திருவையாறு எனப்பெயர் பெற்றது.

தஞ்சைக்கு வெளியே அனைத்து திசைகளிலும் மாணிக்க வாசகர் , அப்பர், சுந்தரர், திருஞான சம்பந்தரால் பாடப்பெற்ற புகழ்பெற்ற கோவில்கள் சூழ்ந்த நகரம் தஞ்சை! நவக்கிரகங்களுக்கு தனித்தனிக் கோயில்களும், சரஸ்வதிக்கென்று தனிக்கோவிலும் தஞ்சை மாவட்டத்தில் மட்டுமே உள்ளன.

கலையழகு மிகுந்த தஞ்சையை நீங்களும் ஒரு முறை பார்க்க வாருங்களேன்!

இந்தத் தொடர் பதிவை



சகோதரர் ரமணி [தீதும் நன்றும் பிறர் தர வரா]

சகோதரி மஞ்சுபாஷிணி [கதம்ப உணர்வுகள்]

இருவரையும் தொடருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.


[அரண்மணை தர்பால் ஹால், பரத நாட்டிய புகைப்படங்களுக்கு நன்றி: கூகிள்]









Monday, 3 October 2011

நெஞ்சை அள்ளும் தஞ்சைத் தரணி!!!

இது என்னுடைய நூறாவது பதிவு!


பின் தொடர்ந்தும் அருமையான பின்னூட்டங்கள் மூலமும் எழுதுவதற்கான உத்வேகத்தையும் ஆர்வத்தையும் தொடர்ந்து அளித்து வரும் அன்புத் தோழமைகளுக்கு என் இதயங்கனிந்த எண்ணிலா நன்றிகளை சமர்ப்பித்துக் கொள்கிறேன்!



*********************


சகோதரி ஸாதிகா ‘ என் ஊர் ‘ என்னும் தொடர்பதிவில் பங்கேற்குமாறு முன்பு கேட்டிருந்தார்கள். என்னுடைய நூராவது பதிவாக என் ஊரைப் பற்றி எழுதுவதில் பெருமிதமடைகிறேன்.

சோணாடு சோறுடைத்து என்று புகழ் பாடப்பட்ட சோழ நாட்டில் பல நூறு ஆண்டுகள் தலைநகராய் இருந்த தஞ்சாவூர் தான் என்னுடைய ஊர்.

பெயர்க்காரணம்:

தஞ்சன் என்னும் அசுரனை சிவபெருமான் வதம் செய்தபோது, தன் பெயரால் இவ்வூர் அழைக்கப்பட வேண்டுமென அசுரன் வேண்டியதால் இவ்வூர் தஞ்சாவூர் என்றானது என்று சொல்லப்படுகிறது. சிவபெருமான் இந்த ஊரில் தஞ்சபுரீஸ்வரர் என்ற திருப்பெயருடன் கோயில் கொண்டுள்ளார். இத்திருக்கோயில் தஞ்சாவூரிலிருந்து கும்பகோணம் செல்லும் சாலையில், பள்ளியக்ரஹாரத்திற்கு அருகில் இருக்கிறது. வைணவ சம்பிரதாயத்திலும்கூட மஹாவிஷ்ணுவே தஞ்சனை அழித்தார் என்றும், அதனால் தஞ்சை மாமணி நீலமேகப்பெருமாளாய் கோயில் கொண்டு இருக்கிறார் என்று நம்பப்படுகிறது. இந்த நீலமேகப்பெருமாள் கோயில் தஞ்சபுரீஸ்வரரின் கோயிலுக்கு நேரெதிரில் உள்ளது.என்பது வியப்புக்குரியது!

தஞ்சை என்பதற்கு “குளிர்ந்த வயல்கள் நிறைந்த பகுதி” என்று பொருள் என்றும் பழந்தமிழர் வரலாற்றில் கூறப்படுகின்றது. . “தண்+ செய்’ என்று பதம் பிரித்து இதற்கு பொருள் சொல்லப்படுகிறது.

கலைகள்

தமிழகக் கலைகளில் தஞ்சைக் கலைகளுக்குத் தனிச் சிறப்புண்டு.
இதைப் போலவே தஞ்சைக் கலைகளுக்கு உள்ள மதிப்பும் மரியாதையும் அளவிட முடியாது. இதற்குச் சான்றாகத் தஞ்சாவூர் வீணைகள், தலையாட்டிப் பொம்மைகள், ஐம்பொன் சிலைகள், தேர்ச் சிற்பங்கள், தஞ்சாவூர்த் தட்டுகள் இவற்றின் கலை நேர்த்தியைக் கூறலாம்.



தஞ்சாவூருக்குத் தெற்கே சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில்
அமைந்துள்ள. நாட்டரசன் கோட்டையில் வீணைகள்
சிறப்பாக உருவாக்கப் படுகின்றன. வீணை செய்யப்படும் பிற ஊர்களில் வீணையின் பாகங்கள் தனித்தனியே செய்யப்பட நாட்டரசன் கோட்டையில் மட்டும் ஒரே கலைஞரால் முழு வீணையும் செய்யப்படுவது குறிப்பிடத் தக்கதாகும். வீணை செய்யும் கலைத்தொழில் பல காலமாகப் பரம்பரை பரம்பரையாக இங்கு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பலா, வாகை மரங்களைக் கொண்டு வீணைகள் செய்யப் படுகின்றன.

ஏகாந்த வீணை, ஒட்டு வீணை என்ற இருவகையான வீணைகள்
தச்சர்களால் செய்யப்படுகின்றன. தஞ்சையில் வீணை செய்வதில் தேர்ச்சி மிக்க கைவினைஞர்கள் பலர் இன்றும் வாழ்ந்து வருகின்றனர். தமிழகக் கைவினைக் கலையின் பெருமை சொல்லும் தஞ்சாவூர் வீணைகள் வெளிநாடுகளுக்குப் பெருமளவில் ஏற்றுமதி செய்யப்படுவது குறிப்பிடத் தக்கதாகும்.

மிருதங்கப் பானை, உடுக்கை, நாகஸ்வரம், புல்லாங்குழல், உடுக்கை, தாளப் பானை (கடம்) என்று இசைக் கலையோடு தொடர்புடைய பல கைவினைக் கலைப் பொருட்களும் இங்கு உருவாக்கப் படுகின்றன. தஞ்சை சிவகங்கைப்பூங்காவின் வாயிலருகே வீணைகள் இழைத்துச் செய்யப்படுவதை இன்றும் நேரில் பார்க்கலாம்.

தென்னாட்டின் நெற்களஞ்சியமான தஞ்சைப் பகுதியில் நெல்மணி, ஏலக்காய் முதலியவற்றைக் கொண்டு அழகுற மாலை தொடுக்கின்றனர். தஞ்சாவூர்த் தலையாட்டிப் பொம்மை, தஞ்சாவூர் தட்டு, தூபக்கால் (விளக்கு) , பல்வேறு வடிவங்களில் அமைந்த வெண்கலத்தாலான பாக்கு வெட்டிகள், மீன் வடிவப் பல்லாங்குழிகள், வெற்றிலைப் பெட்டிகள், ஆபரணப் பெட்டிகள், உண்டியல், அகல் விளக்குகள் போன்றவையும் தஞ்சையில் பிரசித்தி பெற்றவை. உலோகங்கள் செய்வதிலும் தஞ்சை புகழ் பெற்று விலங்குகிறது. தஞ்சைக்கருகிலுள்ல நாச்சியார்கோவில் பித்தளை விளக்குகள் விற்கும் கலையுலகமாய் விளங்குகிறது.

மேற்கத்திய இசைக்கே உரித்தான வயலினைத் தமிழிசைக்கு ஏற்ப மாற்றியமைத்து முதன்முதலில் உபயோகித்தது தஞ்சையில்தான். மன்னர் சரபோஜி காலத்தில் கிளாரினெட் இசை, பாண்டு வாத்திய இசை முதன்முதலாக தமிழகத்தில் தஞ்சையில்தான் அறிமுகப்படுத்தப்பட்டது. லாவணிக்கச்சேரி உருவானதும் இங்கே தான். மகாராஷ்டிரத்திலிருந்து தஞ்சையில்தான் முதன்முதலாக ஹரிகதாகாலட்சேபம் அறிமுகம் செய்யப்பட்டது.  தஞ்சையின் குறுக்குச் சந்துகள் மிகப் பிரபலம். இங்கே தான் நாடகக் கலைஞர்கள், பொய்க்கால் குதிரை நாட்டியக்காரர்கள் வசிக்கிறார்கள்.

தொடர்கிறது.. .. ..
படங்களுக்கு நன்றி: கூகிள்



Sunday, 31 July 2011

நட்பு- தொடர் பதிவு!

சகோதரி அதிராவின் அழைப்பிற்கு அன்பு நன்றி!

நட்புக்கு இலக்கணம் திருக்குறளில் ஆரம்பித்து,  புதினங்கள், தமிழ்க்கவிதைகள், பாடல்கள், திரைப்படங்கள் என்று பலவற்றிலும் வந்து விட்டது. சின்னஞ்சிறு வயதில், உலகம் தெரியாத அந்தப் பருவத்தில், நட்பு என்ற சொல்லின் அர்த்தம் கூடப் புரியாத காலத்தில் சக பள்ளித்தோழிகள், அதே தெருவில் வசித்த மற்ற தோழிகள் என்று ஒன்றாய் கூடித் திரிந்ததுவும் நிலாவில் பாடியும் ஆடியும் களித்ததுவும் இப்போது நினைத்துப்பார்த்தால் கூட அடிக்கரும்பை சுவைப்பது போல மனசின் ஆழம் வரை இனிக்கிறது. அந்த நட்பிற்கு துரோகம் கிடையாது. பொறாமை கிடையாது. ‘ உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசுவது ’ கிடையாது.



‘ மயிலிறகு குட்டி போடுமா?’ என்ற கேள்வியில் பெரிய ஆராய்ச்சியெல்லாம் நடக்கும். பூவரசம்பூவில் மோதிரம் செய்ய போட்டிக்கு மேல் போட்டி இருக்கும். அப்புறம் கொஞ்சம் வயது அதிகமாக, பாவாடை தாவணியில் புதிய உலகம் தெரிந்ததில் சினேகிதிகளுடன் எதற்கெடுத்தாலும் சிரிப்பாயிருக்கும். படிப்பு அப்போது பிரதானமாக இருக்கும். தோளில் புத்தகப்பையும், கையில் சாப்பாட்டுப்பையுமாக, யார் வேகமாக நடப்பது என்பதில் பெரிய போட்டியே இருக்கும். அப்புறம் கல்லூரிப்பருவம். இளம் வயதின் ஆரம்பம். வீட்டின் பிரச்சினைகளைப் பகிர்ந்து கொள்வதிலும் காதலில் அமிழ்ந்து அந்தத் தவிப்பைப் பகிர்ந்து கொள்வதிலும் நட்பின் தீவிரம் இந்த வயதில்தான் அதிகரிக்கும். பாடல்களைக் கேட்டு மயங்குவதிலும் கவிதைகளைப் பற்றி ரசித்துப் பேசுவதிலும் நட்பின் அன்பு ஆழமாகும்.

இப்படி ஒவ்வொரு பருவத்திலும் ஒவ்வொரு விதமாய் வளரும் நட்பு, பல வருடங்களின் அனுபவங்களுக்குப்பிறகு, வாழ்க்கையின் நடுப்பகுதியில் உயிர்காக்கும் நட்பாகவும் அவதாரம் எடுக்கிறது. சில சமயங்களில் நட்பு முதுகில் குத்தும் எதிரியாகவும் மாறுகிறது. நட்பை சில சமயங்களில் பொருளாதாரம் தீர்மானிக்கிறது. சிலரது வாழ்க்கையில் நட்பு பொறாமையில் தீக்கனலாக மாறி தகிக்க வைக்கிறது. அந்த வயதில் ‘உயர்ந்த மனிதன் ’ திரைப்படத்தில் வரும்

“அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே
நண்பனே! நண்பனே! நண்பனே!

இந்த நாள் அன்று போல் இன்பமாய் இல்லையே
அது ஏன்? ஏன்? ஏன்? நண்பனே!

பாடம் படிப்பு ஆட்டம் பாட்டம்
இதைத் தவிர வேறெதைக் கண்டோம்

புத்தகம் பையிலே
புத்தியோ பாட்டிலே
பள்ளியைப் பார்த்ததும்
ஒதுங்குவோம் மழையிலே

நித்தமும் நாடகம்
நினைவெல்லாம் காவியம்
உயர்ந்தவன் தாழ்ந்தவன்
இல்லையே நம்மிடம்”

என்ற கவிஞர் வாலியின் பாடலை நினைக்காதவர் இருக்க முடியாது!!

உண்மையான நட்பு அந்தஸ்து பேதம் பார்ப்பதில்லை. அக்கறையும் கனிவும் அன்புமாய் நட்பை அமையப் பெற்றவர்கள் கொடுத்து வைத்தவர்கள்.

என் நட்புக்குரியவர்கள் என்று பார்த்தால், முக்கியமான சிலரைக் குறிப்பிட்டே ஆக வேண்டும்.

சில பிரச்சினைகளுக்காக சில மாதங்கள் அந்த நகரத்தில் நான் தங்கியிருந்த போது, குடும்ப நண்பரால் அறிமுகமான சினேகிதி இவர். குறுகிய நாட்களிலேயே மனம் ஒருமித்த சினேகிதிகளாகி விட்டோம். இவரைப்பற்றி முத்துச்சிதறலில் முன்னமேயே எழுதியிருக்கிறேன். கணவர் பெரிய செல்வந்தர். கையெடுத்து வணங்கக்கூடிய தோற்றம். ஆனால் வெளியில் தெரியாத மோசமான குடிப்பழக்கத்தால் வாழ்க்கையை நரகமாக்க, என் சினேகிதி அதுவும் 8 வயதிலும் 5 வயதிலும் 1 வயதிலும் பெண் குழந்தைகளைப் பெற்றவர் பல தடவைகள் தற்கொலைக்கு முயன்று கொண்டேயிருந்தார். நான் அங்கு இருந்தவரை அவரைப் பல தடவைகள் அந்த மோசமான முடிவிற்குச் செல்லாமல் தடுத்து நிறுத்தி கண்டித்திருக்கிறேன். நான் அங்கிருந்து இங்கு வந்த ஓரிரு மாதங்களிலேயே இறந்து போனார். இப்போது நினைக்கும்போது கூட மனதை கனமாக்கி விடும் சினேகிதி இவர்.

இன்னொரு சினேகிதி. மிகுந்த செல்வாக்குடன் வளர்ந்தவர். திருமணமானதும் அத்தனையும் மாறிப்போனது. சந்தேகப்படும் கணவனால் வாழ்க்கை ரணமாயிற்று. சம்பாதித்ததெல்லாம் கணவரின் பொருந்தாத வியாபாரத்தில் காற்றாய்ப் பறந்து போக வாழ்க்கை வறுமையின் கோரப்பிடியில் கழிய ஆரம்பித்தது. மலை போன்ற நம்பிக்கையை பையன் மீது வைத்திருந்தார். அவனும் விபத்தொன்றில் இறந்து போக, நிலை குலைந்து போனார் அவர். இப்போது பெண் வீட்டில் காலம் கழிக்கும் அவர் மனம் படும் பாட்டை எழுத்தில் வடிக்க முடியாது. அவ்வப்போது, 10 வருடங்களுக்கு முன்னால் இறந்த தன் மகனை நினைத்து அழும் அவரை என்னால் எப்போதுமே சமாதானம் செய்ய முடிந்ததில்லை.

சில சமயங்களில் நட்பு கூட நம்ப முடியாத அவதாரங்கள் எல்லாம் எடுக்கும். ‘அறுசுவை’ இணைய தள நிறுவனர் என்னை அவரது தளத்தில் சமையல் குறிப்புகள் எழுமாறு கேட்டுக்கொண்ட போது, அவர் ஒரு சக நண்பராகத்தான் இருந்தார். அப்புறம் நேரே சந்தித்த போதுதான் தெரிந்தது அவர் என் உறவினர் என்று! அதே போல் சக பதிவர் ‘ஹைஷ்’ நிறைய பேருக்கு நல்ல நண்பர். நல்ல அறிவுத்திறன் கொண்டவர். பலருடைய வலிகளை ‘ஹீலிங்’ என்ற முறையில் சரி செய்பவர். என் ஊரிலிருக்கும் அவரின் தங்கையைப்பார்க்கச் சென்ற போதுதான் தெரிந்தது அவரும் என் உறவினர் என்று! உலகம் எத்தனை சின்னது என்று அப்போது தான் புரிந்தது.

கடைசியாக பள்லிப்பருவத்திலிருந்து இன்று வரை தொடர்ந்து வரும் என் சினேகிதியைப் பற்றிச் சொல்ல வேண்டும். இவர் கோவையிலிருக்கிறார். எப்போது நான் ஊருக்குச் சென்றாலும் எனக்கு முன்னதாகவே என் வீட்டுக்கு வந்து பூட்டைத் திறந்து, எல்லாம் சுத்தமாக இருக்கிறதா என்று கவனித்து, ஒரு குட்டி சமையல் செய்து, நாங்கள் போய் இறங்கும்போது ஒரு ஃபில்டர் காப்பியுடன் வரவேற்பார். எத்தனை வேலைகள், பிரச்சினைகள் இருந்தாலும் நாங்கள் இருவரும் தினமும் இலக்கியம் பேச மறப்பதில்லை. பாடல்களைக் கேட்டு ரசிப்பதையும் கதைகள் பல பேசுவதையும் பிரச்சினைகளைப் பகிர்ந்து கொள்வதையும் பல வித சமையல் குறிப்புகளை செய்து பார்த்து ருசித்து சிரிப்பதையும் என்றுமே மறந்ததில்லை. அவர் என் சமையலை ருசித்து சாப்பிடுவதைப்பார்க்கும்போதெல்லாம் என் மனம் நிறைந்து விடும். நான் அவருக்காக பதிவு செய்து எடுத்துச் சென்ற பாடல்களைக் கேட்டு விழி நீர் கசிய பரவசப்படும்போது என் மனதும் புளகாங்கிதமடையும். வசந்த கால நட்பை விட இலையுதிர்க்காலத்து நட்பு ரொம்பவும் ஆழமானது!

நட்பிற்கும் எல்லை இருக்கிறது. அன்பும் பாசமும் எல்லை மீறினால் அந்த நட்பில் விரிசல்கள் விழுவதைத் தடுக்க இயலாது. சார்ந்திருக்கும் நட்பை விட கூடவே இருந்து பலப்படுத்தும் நட்பு மிகவும் சிறந்தது!

இந்த நட்பு தொடர்பதிவில் பங்கேற்க‌ ந‌ண்ப‌ர்க‌ள்

1. மதுரகவி ராம்வி

2. திரு. வெங்கட் நாகராஜ்


3. 'தீதும் நன்றும் பிறர்தர வரா' ரமணி அவர்கள்.


4. ஹுஸைன‌ம்மா

ஆகியோரை அன்புட‌ன் அழைக்கிறேன்.








Sunday, 17 July 2011

மனம் கவர்ந்த முன்னுரைகள்..

தினந்தோறும் வாழ்க்கையின் புறத்தேடல்களுக்காக மின்னலாய் தோன்றி மறையும் இயந்திர நிமிடங்களுக்கிடையே, அகத்தேடல்களுக்கும் அறிவுப்பசிக்கும் போதுமான நேரத்தை ஒதுக்க முடிவதில்லை. அதுவும் பெண்களுக்கு தார்மீகக்கட்டுப்பாடுகளும் சுயமாய் நிர்ணயித்துக்கொண்ட கடமைகளும் அதிகம்.

தினசரி வாழ்க்கையிலிருந்து மறந்து போன அல்லது ஒதுங்கிப்போன சில அருமையான விஷயங்களை மீண்டும் இதயம் தேடும்போது ஏற்படும் புத்துணர்ச்சிக்கு எல்லையேயில்லை. இந்தப் புத்துணர்ச்சிக்கு வழி வகுத்த சினேகிதி திருமதி.வித்யா சுப்ரமண்யத்திற்கு என் அன்பு நன்றி!

அறிவு ஜீவிகளின் எழுத்துத் தாக்கங்கள், கடினமான சொற்பிரயோகங்கள், நிதர்சனத்தை தோலுரித்துக்காட்டும் வார்த்தைச் சாடல்கள்- இவற்றையெல்லாம் தவிர்த்து, சிறு வயதில் என்னை பதப்படுத்திய, வழிகாட்டிய, அன்பென்பதையும் உண்மையென்பதையும் சத்தியமென்பதையும் தங்கள் எழுத்து மூலம் மனதில் வளர்த்த எழுத்தாளர்களில் சிலரையும், அதன் பிறகு என்னைப் பாதித்த எழுத்தாளர்களில் சிலரையும் சில முன்னுரைகள் மூலம் அடையாளம் காட்ட இங்கே ஆசைப்படுகிறேன்.



முதலில் நான் என்றுமே ரசிக்கும் கல்கியின் சிவகாமியின் சபதம்.


இதுவரை எத்தனை முறைகள் இந்த சரித்திர நாவலைப் படித்திருப்பேன் என்று எனக்கே தெரியாது. ஒவ்வொரு தடவை படிக்கும்போதும் புதியதாக, அதே ரசனையுடன் அதே ஆழத்துடன் ரசிக்கக்கூடியதாக இருப்பதுதான் சிறந்த நாவலுக்கான அடையாளமாக நான் கருதுகிறேன். பழந்தமிழர்களின் சிறந்த அடையாளங்களாய் நிறைந்து நின்ற வீரமும் கலையும் எப்படி காதலில் அமிழ்ந்து போயின, அதே காதல் எப்படி வீரத்திற்கும் கலைத்தாகத்திற்கும் ஏற்பட்ட செருக்கான மோதலில் அழிந்து போனது என்பதுதான் ஒரே வரியில் இந்தக் கதைக்கான களம்.



இந்தக் கதை உருவானது பற்றி தனது முன்னுரையில் கல்கி இப்படி கூறுகிறார்:

‘ நீல வானத்திலிருந்து பூரண சந்திரன் அமுத கிரணங்களை பொழிந்து கொண்டிருந்தான். பூவுலகம் மோகன நிலவினிலே மூழ்கி அமைதி கொண்டு விளங்கியது. எதிரே எல்லயின்றி பரந்து கிடந்த வளைகுடாக்கடலில் சந்திர கிரணங்கள் இந்திர ஜாலத்தை செய்து கொண்டிருந்தன.

கடலோரத்து வெண்மணலில் நானும் ரசிக மணி டி.கே.சியும் சில நண்பர்களும் அமர்ந்திருந்தோம். ரசிகமணி, கோபாலகிருஷ்ண பாரதியாரின்

‘ விதியின் எழுத்தை கிழிச்சாச்சு!-முன்பு
விட்டகுறை வந்து தொட்டாச்சு! ’

என்ற வரிகளை எடுத்துரைத்தபோது, அந்த வரிகள் ஒரு சக்தி வாய்ந்த மந்திரம் போல என்னை மதியிழக்கச் செய்தது. கடலில் ஆயிரமாயிரம் படகுகளும் கப்பல்களும் திடீரென்று காட்சி அளித்தன. சற்று தூரத்தில் மாட மாளிகைகளும் கூடகோபுரங்களும் எழுந்தன. அவற்றின் உச்சியில் ரிஷபக்கொடிகளும் சிங்கக்கொடிகளும் உல்லாசமாய்ப் பறந்தன. இனிமை ததும்பிய இசைக்கருவிகளினின்றும் எழுந்த சங்கீதம் நாற்புறமும் சூழ்ந்து போதையை உண்டாக்கியது. எங்கோ யாரோ காலில் கட்டிய சதங்கைகள் ஒலிக்க நடனமாடிக்கொண்டிருந்தார்கள்..’

நான்கு பாகங்களால் உருவான தனது ‘சிவகாமியின் சபதம்’ உருவாகக் காரணமாயிருந்த அந்த நொடிப்பொழுதை கனவு மயக்கத்துடன் வர்ணிக்கும் கல்கி,  இறுதியில்

‘இத்தனை பாரத்தையும் ஏறக்குறைய 12 வருடங்களாக என் உள்ளத்தில் தாங்கிக் கொண்டிருந்தேன். கடைசி பாகத்தின் கடைசி அத்தியாத்தின் கடைசி வரியை எழுதி ‘முற்றும்’ என்று முடித்தபோது தான் 12 ஆண்டுகளாக நான் சுமந்து கொண்டிருந்த பாரம் என் ‘ அகத்திலிருந்து’ நீங்கியது’ என்கிறார்.

இரண்டாவது எழுத்தாளர் ‘அகிலனின்’ எங்கே போகிறோம்?”



எழுத்தாளர் அகிலன் ‘வேங்கையின் மைந்தன்’, ‘வெற்றித்திருநகர்’, ‘கயல்விழி’ போன்ற சரித்திர நாவல்களையும் ஞானபீடப்பரிசு உள்பட ஏராளமான விருதுகள் பெற்ற நாவல்களை எழுதியவர். அவரது ‘வேங்கையின் மைந்தன்’ நாவலின் முடிவு வாசகர்களை பாதித்ததால் அவர்களது வேண்டுகோளுக்கிணங்கி அதைப் புத்தகமாய் வெளியிட்டபோது, முடிவை மாற்றி எழுதி வெளியிட்ட பெருமை இவருக்கு உண்டு.

‘எங்கே போகிறோம்’ 1973-ல் வெளி வந்த, ராஜா சர் அண்ணாமலை செட்டியார் இலக்கியப் பரிசு பெற்ற நாவல். தன் உடலை மூலதனமாக்கிப் பொருள் குவிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்ட ஒரு பெண்தான் இந்தக் கதைக்கு தலைவி.

அகிலன் தன் முன்னுரையில் இப்படி கூறுகிறார்:

“ இந்த நாவலின் இலக்கிய வடிவம் பற்றியோ, உத்தி, உட்கருத்து பற்றியோ அளக்க முன்வருவோர், தீர்ப்பு கூற வருவோர், அவரவர் அளவுகோல்களின் பலவீனத்தையே இதில் கண்டு கொள்ள முடியும். எச்சரிக்கையுடன் இதனை நெருங்குங்கள். எரிமலையிலிருந்து வெடித்து, இன்னும் தன் சத்திய ஆவேச வெப்பம் தணியாத நிலையில் இருக்கும் ஒரு அக்னிக் குஞ்சு இது. ‘ஆன்மாவின் வெளிப்பாடு தான் கலை; சத்தியத்தில் அழகைத் தேடிப்பார்; புறக்கண்களுக்கு சத்தியத்தின் உருவம் அழகில்லாதது போலத் தோன்றினாலும் அகக்கண்களால் அதன் அழகைத் தேடிச்செல்’ என்ற காந்தியடிகளின் இலக்கியக் கொள்கையை இந்த நாவலில் நான் பரிசோதித்துப் பார்க்க முயன்றிருக்கிறேன். சத்தியமும் அசத்தியமும் ஒன்றோடொன்று கலந்து, உண்மையும் பொய்மையும் ஒன்றோடொன்று சங்கமமாகி, காக்காய்ப்பொன் பத்தரை மாற்றுத் தங்கம் போலவும் பத்தரை மாற்று பசும்பொன் துருப்பிடித்த இரும்பு போலவும் காட்சியளிக்கும் இந்த நாளில் அவற்றை இனம் பிரித்துக் காட்டுவது என் கடமை என்று தோன்றியதால் இதை செய்துள்ளேன்.”

கிட்டத்தட்ட 40 வருடங்களுக்கு முன்பே, மாறிப்போன மனிதர்களைப்பற்றியும் நாட்டைப்பற்றியும் இத்தனை கவலைப்பட்டிருக்கிறார் அகிலன். இன்று உயிரோடிருந்தால் என்ன எழுதுவார்?

மூன்றாவதாய் எழுத்தாளர் ஜெயகாந்தனின் 'சக்கரம் நிற்பதில்லை'.

என் ஆதர்ச எழுத்தாளர்களிடமிருந்து சற்று விலகி, அதன் பின் புகழ்பெற்று விளங்கிய எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கு வருகிறேன். இவரின் ‘ யாருக்காக அழுதான்’, ‘ கருணையினால் அல்ல’ போன்ற நாவல்கள் மனதை மிகவும் பாதித்தவை. முரண்பாடுகளும் உண்மையை நெஞ்சை சுடுமாறு எழுதுவதும் இவரது தனி முத்திரைகள். அவரின் முன்னுரையில்கூட ‘ பாரதியின்’ திமிர்ந்த ஞானச் செருக்கு' புலப்படுகிறது! தன் சிறுகதைத் தொகுதிகளில் ஒன்றான ‘சக்கரம் நிற்பதில்லை’யில் அவர் இப்ப்டிக் கூறுகிறார்.

“ இலக்கியமும் எழுத்தும் இந்தப் பத்திரிகைகளை அண்டியில்லை. எழுத்தையும் இலக்கியத்தையும் நம்பி நமது பத்திரிகைகள் உயர வேண்டும் என்பதே என் விருப்பம். மேலும் அபிமானமுடைய எழுத்தாளர்களும் தேர்ந்த ரசனையுடைய வாசகர்களும் நமது தமிழ்ப் பத்திரிகைகளில் இலக்கியம் தேடுவதை இன்னும் விட்ட பாடில்லை. அவர்கள் என்னையேனும் கண்டு ஓரளவு ஆறுதலடையட்டும் என்ற இலக்கியப் பொறுப்பினால் செய்யப்படும் நிஷ்காம்ய கர்மமாகவே நான் இந்த அச்சு வாகனத்தின்மீது ஆரோகணித்திருக்கிறேன். ஆனால் தரிசனம் என்பது இந்த ஊர்கோலம் மட்டுமல்ல, அது விஸ்வரூபம்..!”

நான்காவதாய் கவிஞர் வைரமுத்துவின் ‘கல்வெட்டுக்கள்’ என்ற கட்டுரைத் தொகுப்பு.

தன் முன்னுரையில் தனது இளம் வயதில் பெய்த மழையில் மறுபடியும் நனையப்போவதாய் சொல்லி, அந்த அனுபவத்திற்கு நம்மையும் அழைக்கிறார். அந்த அனுபவத்தை பதிவு செய்யும் விதத்தை அத்தனை அழகாய்ச் சொல்லுகிறார்.. . ..

“ இந்த அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளுவதற்கும் பதிவு செய்வதற்கும் ஏற்ற வாகனம் எது என்று நான் யோசிக்கிறேன். நான் அபிநயம் படிக்க வேண்டுமென்றால் எனக்கு கவிதை வேண்டும். ஆனால் கைவீசி நடக்க வேண்டுமென்றால் எனக்கு கட்டுரை வேண்டும். தன்னில் இருப்பதை விட அதிகமாய்க் கற்பனை செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்வது கவிதை; தன்னில் இருப்பதைத் தவிர எதையும் கற்பனை செய்து கொள்ளக்கூடாது என்று கட்டளையிடுவது கட்டுரை. “

கட்டுரை இலக்கியம் அவ்வளவாகப் புகழடையவில்லை என்ற தன் ஆதங்கத்தை

“ வாழ்க்கையைப்பற்றிய அகப்பார்வைகளுக்கு கொடுக்கிற முக்கியத்துவத்தை வாழ்க்கையைப்பற்றிய புறப்பார்வைகளுக்கு நாம் தரவில்லை என்பதே கட்டுரை இலக்கியக் குழந்தை இன்னும் தொட்டிலை விட்டு வெளிவராத துயரத்திற்குக் காரணம். முத்தமிழின் முதற்றமிழாக இருக்கிற இயற்றமிழ் நான்காம் தமிழாக ஆகி நசிந்து விடக்கூடாது” என்று தெரிவிக்கிறார்.

ஐந்தாவதாய், இறுதியாய் எழுத்தாளர் வித்யா சும்ரமணியத்தின் ‘ உன்னிடம் மயங்குகிறேன்’ என்ற சமூக நாவல்.

இதற்கு எழுத்தாளர் பாலகுமாரன் முன்னுரை எழுதியிருக்கிறார்.  நானும் சில வரிகள் முன்னுரையாக எழுத விரும்புகிறேன். வித்யா தவறாக நினைக்க மாட்டாரென்று நம்புகிறேன். 15 வருடங்களுக்கு முன் என்று நினைக்கிறேன், இந்த நாவலைப்படித்து விட்டு, அவரை சந்தித்து நேரில் பாராட்டி வந்தேன்.

தன்னை வளர்த்த பெரியப்பாவை தெய்வமென்ற உயரிய நிலையில் வைத்து பூஜிக்கும் மகளும் தன் கடமையில் உறுதியாய் நிற்கும் பெரியப்பாவும்தான் இக்கதையின் நாயகன் -நாயகி. இரட்டைக்குதிரைகள் பூட்டிய அழகிய ரதம் ராஜபாட்டையில் அதிவேகமாய் செல்லுவது போல இவரது கதை ஆரம்பத்திலிருந்து இறுதி வரை பறந்து செல்கிறது. பார்வையை விட்டு அகன்று போனால்கூட சில மலர்களின் நறுமணம் பின்னாலேயே தங்கி நெஞ்சை நிரப்புவது போல, இவரின் கதாபாத்திரங்களின் அன்பும் பாசமும் அதனால் ஏற்படும் தர்க்க நியாயங்களும் இதயத்தில் அப்படியே தங்கி விடுகின்றன.

 ‘சுகம், துக்கம், இன்பம், துன்பம், நன்மை, தீமை எதைக்கண்டும் நிலை தடுமாறாது ஒரே மாதிரியான மனோபாவத்துடன் இருப்பவரையே கீதை ‘ஸ்திதபிரக்ஞன்’ என்று கூறுவதாய் இறுதியில் சொல்கிறார். எல்லாவற்றையும் கடந்த ஒரு நிலை தான் ஸ்திதபிரக்ஞன் ஆவது. ஆனால் வாசகர்களை இந்த நிலைக்கு அழைத்துச் செல்ல வித்யா முயற்சிக்கிறார். 90 சதவிகிதம் அவரது கதாநாயகி அவ்வாறிருக்க முயற்சிப்பதாகச் சொல்லும்போது, அதுவரை மனங்கனிந்து போயிருக்கும் வாசகனும் அந்த நிலைக்கு 50 சதவிகிதம் முயற்சித்தால்கூட, அதுவே அவருடைய எழுத்துக்கு வெற்றி தானே?

இக்கதையின் ஆச்சரியமே, கடைசி நாலைந்து பக்கங்களில்தான் இக்கதையின் இரண்டாவது நாயகி வருகிறார். தன் செய்கைகளினாலும் பேச்சினாலும் திடீரென்று முதல் கதாநாயகியாகவே ஆகி விடுகிறார். இவர் மூலம் வித்யா ஒரு மலையாளக்கவிதையின் தமிழாக்கத்தை கடைசியில் சொல்லி தன் மனசின் ஆதங்கத்தை ஒரு நேர்மையான எழுத்தாளராய்க் கூறுவது தான் இந்த நாவலின் சிறப்பு!.

“எத்தனை ஜென்மம் கூளத்தில் கழிந்தது!
எத்தனை ஜென்மம் ஜலத்தில் கழிந்தது!
எத்தனை ஜென்மம் மண்ணில் கழிந்தது!
எத்தனை ஜென்மம் மரங்களாய் நின்றது!
எத்தனை ஜென்மம் மிருகமாய் வாழ்ந்தது!
அத்தனையும் கழிந்து அன்னையின் கர்ப்ப வாசம்!'

கவிதையை எழுதியவர் மேலும் கூறுகிறார்;

'இந்த அரிய உயரிய மானிடப் பிறவி அவ்வளவு இலேசில் கிடைத்ததில்லை. இதற்கு முன்பு எத்தனை ஜென்மங்கள் எப்படியெல்லாம் இருந்திருக்கிறோமோ, குப்பை கூளத்தில் புழுவாய், ஜலத்தில் மீனாய், மண்ணுள் பூச்சியாய், மரங்களாய், மிருகங்களாய்..

தன்னைத்தானே அறியும் அரிய குணம் கொண்ட ஒரே ஒரு பிறவி இந்த உயர்ந்த மானிடப்பிறவி தான். அப்படிப்பட்ட உயர்ந்த பிறவி எடுத்த பின் பூர்வ ஜன்ம வாசனைகளை வர விடலாமோ?”

மனிதப்பிறவி எடுத்ததன் அர்த்தத்தை மிக அழகாய்ச் சொல்லும் இந்த நாவல் மிகச் சிறந்ததொன்று என்பதில் சந்தேகமேயில்லை!!!

இந்த தொடர்பதிவில் பங்கேற்குமாறு நான் அன்புடன் அழைக்கும் தோழமைகள்:

1. திரு.வை.கோபாலகிருஷ்ணன்[ வை.கோபால‌கிருஷ்ண‌ன்]


2. திரு.மோகன்ஜி [வான‌வில் ம‌னித‌ன்]


3. திரும‌தி. நிலாம‌க‌ள் [ப‌ற‌த்த‌ல் ப‌ற‌த்த‌ல் நிமித்த‌ம்]


4. திரும‌தி.சாக‌ம்ப‌ரி [ம‌கிழ‌ம்பூச்ச‌ர‌ம்]

Wednesday, 4 May 2011

பெயர்க்காரணம்-தொடர் பதிவு!

திரு.கோபி ராமமூர்த்தி இந்தப் பெயர்க்காரணம் தொடர்ப்பதிவில் என்னையும் பங்கேற்குமாறு சில மாதங்களுக்கு முன்பு கேட்டிருந்தார். அவருக்கு என் உளமார்ந்த நன்றி! தயக்கத்தினாலேயும் எந்த விதமான அதிக சுவாரஸ்யமான நிகழ்வுகளோ, நினைவுகளோ அதிகம் இல்லாததாலும் இதுவரை இந்த தொடர்பதிவை எழுத முனையவில்லை நான்! அப்புறம் தொடர்ந்து வந்த பெயர்க்காரணத் தொடர்பதிவுகளைப்படித்த போது இதைத் தொடருவதும் எழுதுவதும் ஒரு புதிய அனுபவமாக இருக்குமெனத் தோன்றியதால் இதோ எழுத வந்து விட்டேன்!!

 சில பேருக்கு தன் பெயரை நினைக்கும்போதே பெருமிதமாக இருக்கும். சிலருக்கோ அதை சட்டப்பூர்வமாக நீக்கி விட்டு வேறு அழகான பெயரை பதிவு செய்யத் தோன்றும்!! சில பெயர்கள் தேவையில்லாத குளறுபடிகளை ஏற்படுத்தும்!

 சில நாட்கள் முன் ஒரு மருத்துவ மனை சென்று மருத்துவருக்காகக் காத்திருந்தபோது, நர்ஸ் வந்து “ அம்மா செல்லம் யாரும்மா?” என்று கேட்டதும் எல்லோருடைய முகத்திலும் புன்னகை மலர்ந்தது. அது யார் அம்மா செல்லம் என்ற பெயருடையவர் என்று ஆவலாகக் காத்திருந்த போது, வந்த அம்மா செல்லமோ 75 வயது பாட்டி!! இது போலத்தான் என் பெயரான ‘ மனோரமா’ என்பதும் ஒரு நிமிடம் எதிரே இருப்பவரை புன்னகை செய்ய வைக்கும் எப்போதும்!

 சிறு வயதில் இந்தப் பெயர் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. பள்ளிப் பருவத்தின் இறுதியில்தான் பிரச்சினைகள் ஏற்பட்டன. நானும் என் தங்கையும் பள்ளி செல்லும்போது ‘ நாகேஷ் எங்கே காணோம்?” என்ற கேள்விக்கணைகள் பின்னாலேயே வரும். முதலில் புரியவில்லை. அது என் பெயருக்கான கிண்டல்தான் என்று புரிந்தபோது ஆத்திரமும் அவமானமும் பொங்கியெழுந்தன. நேரே அம்மாவிடம் சென்று கோபமும் அழுகையுமாக புலம்பினேன். என் அம்மா ரொம்பவும் சர்வ சாதாரணமாக “ நான் படித்த காலத்தில் இது பிரபலமான பெயர். அதுவும் உன் பெயருக்கான அர்த்தமே ‘ மனதுக்கு ரம்யமானவள்’ என்பதனால்தான் அந்தப் பெயரை வைத்தோம். இந்த மாதிரி நாகேஷ் என்ற ஒரு ஆள் வருவாரென்றோ, உன் பெயரைக் கிண்டல் செய்வார்கள் என்றோ எங்களுக்குத் தெரியுமா என்ன?” என்று சொல்லி விட்டார்கள். கூடவே “ யார் கிண்டல் செய்தார்கள் என்று சொல்லு. அப்பாவிடம் சொல்லி போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து இரண்டு தட்டு தட்டலாம்” என்று சொல்லவும் அவசர அவசரமாக நகர்ந்து விட்டேன். என் தந்தை ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் என்பதுதான் அதற்குக் காரணம்! ஏற்கனவே ஒரு ஆசிரியர் ஏதோ அதட்டி விட்டாரென்ற ஒரு காரணத்துக்காக என் தந்தை அந்த ஆசிரியரை போலீஸ் ஸ்டேஷனுக்கே வரவழைத்து ஒரு குற்றவாளியை விசாரிப்பதுபோல விசாரித்து எச்சரிக்கை செய்தவர். அப்புறம் அந்த ஆசிரியரிடமிருந்து வந்த கிண்டல்கள் எனக்குத்தானே தெரியும்!! இதனாலேயே இது போன்ற பிரச்சினைகளை வீட்டில் சொல்லவே பயமாக இருக்கும்!



உயர் நிலைப்பள்ளியைத் தொடர்ந்து கல்லூரியிலும் இந்த பிரச்சினை தொடர்ந்தது. நாகேஷ் பின்னால் வந்து கொண்டே இருந்தார்! திருமணமானதும் என் பெயரை பாதியாக சுருக்கிக் கொண்டு விட்டேன். என் கணவரின் பெயரை பின்னால் இணைத்ததும் கம்பீரமாக என் பெயர் மாறி விட்டது போல ஒரு பிரமை!


இருந்தாலும் எனக்கு கோபத்தை வரவழைக்க வேண்டுமானால் என் கணவர் என் முழுப்பெயரையும் சொல்லி அழைப்பது திருமணமான புதிதில் வழக்கமாயிருந்தது. ஒரு முறை ஷார்ஜாவில் ஒரு மருத்துவரிடம் சென்றபோது, பெயரைக் கேட்டதும் “ ஓ! ஆச்சி வந்திருக்கிறீர்களா?” என்று கேட்டு வெறுப்பேற்றினார்!


நீண்ட அனுபவங்களுக்குப் பிறகு பெயரில் எதுவுமில்லை, பெயரின் அர்த்ததிற்கேற்ப வாழ்வதில்தான் உண்மையான சிறப்பிருக்கிறது என்று புரிந்தது!!







Tuesday, 12 April 2011

பெண் எழுத்து-தொடர் பதிவு



இந்தத் தொடர்பதிவில் பங்கு பெற சகோதரி ஸாதிகா என்னை அழைத்ததற்கு என் இதயங்கனிந்த நன்றி!

எழுத்து என்பது ஆழ்ந்த மன உனர்வுகளின் அருமையான வடிகால். இலக்கியச் செறிவுக்கும் ஆழ்ந்த கருத்துக்களுக்கும் புரட்சிகரமான சிந்தனைகளுக்கும் ஆண் பெண் என்ற‌ வித்தியாசமில்லை தான். ‘ நிமிர்ந்த நன்னடையும் நேர் கொண்ட பார்வையும் நிலத்தில் யாருக்கும் அஞ்சாத நெறிகளும்’ கொண்ட ‘ பாரதி ’யின் வழி வந்த பெண்களின் உலகளாவிய பார்வையும் தீக்கனலான சிந்தனைகளும் இன்று அறிவுப்பூர்வமான எழுத்துக்களாய் ஆணுக்கு நிகராய் திக்கெங்கும் புகழ் பரப்புகின்றன! இதிலும் கருத்து பேதமில்லை. ஆனால் நிச்சயம் பெண் எழுத்துக்கும் ஆண் எழுத்துக்கும் வித்தியாசங்கள் இருக்கத்தான் செய்கின்றன!

ஒரு பெண், அவள் பெண் என்பதாலேயே அவளின் எழுத்து கண்ணியமாக, மற்றவர்கள் முகம் சுளிக்காத அளவில் தரமான எழுத்தாக இருந்தேயாக வேண்டும். புகழ் பெற்ற எழுத்தாளரான ‘ சாண்டில்யனின்’ எழுத்துக்கள் சிருங்கார ரசம் மிக்கவை. ஒரு பெண்ணால் அப்படி எழுத முடியாது, எழுத மாட்டாள் என்பது தான் நிதர்சனம். அவளைச் சுற்றி நாகரீகம், சமூகக்கட்டுப்பாடு, பண்பாடு என்ற மென்வேலிகள் இருக்கின்றன. அதை அவளால் உடைத்தெறிய முடியும். ஆனால் அவள் அதை உடைக்க விரும்ப மாட்டாள்.



அதற்கு மாறாக தன் தரம் மிக்க எழுத்தால் சூடாமணி, ராஜம் கிருஷ்ணன், லக்ஷ்மி சுப்ரமணியம், லக்ஷ்மி போன்றவர்கள் 40 வருடங்களுக்கு முன்பே ஜெயித்துக்காட்டியிருக்கிறார்கள். நிகழ்காலத்தில் சிவசங்கரி, அனுராதா ரமணன், வித்யா சுப்ரமணியம் போன்று எத்தனையோ பெண்கள் இன்று தங்களின் வித்தியாசமான எழுத்தால், வித்தியாசமான சிந்தனைகளால் புகழும் பெயரும் அடைந்திருக்கிறார்கள். முக்கிய‌மாக‌, எழுத்தாள‌ர் சிவ‌ச‌ங்க‌ரி கான்ஸ‌ர், போதைப்பொருள்க‌ளினால் ஏற்ப‌டும் சீர‌ழிவு இப்ப‌டி ப‌ல‌ ச‌மூக‌ அவ‌ல‌ங்க‌ள், வியாதிக‌ள் இவ‌ற்றை நிலைக்க‌ள‌ன்களாக‌‌க் கொன்டு ஆராய்ச்சிக‌ள் செய்து நாவ‌ல்க‌ளைப் ப‌டைத்து புக‌ழடைந்திருக்கிறார். திருமதி.விதயா சுப்ரமணியம் தனது 'உப்புக்கணக்கு' நாவலில் தேச பக்தியை நிலைக்களனாக வைத்து அன்பு என்னும் வலைகளை அதைச் சுற்றி பின்னியிருப்பார். இவர்களெல்லாம் இப்படி புகழடைந்ததற்கான அடிப்படை வேர்கள் எந்த எழுத்தில் ஆரம்பமானது என்கிறீர்கள்? குடும்ப உறவு, அன்பு, பாசம் இவற்றின் அடிப்படையில்தான்.

அதைப்பற்றித்தான் இங்கே சொல்ல வருகின்றேன். ஒரு வீடு நன்றாக இருந்தால்தான் நாடு நன்றாக இருக்கும் என்ற புகப்பெற்ற‌ ஒரு வாக்குண்டு. இன்றைக்கு நாடு முழுவதும் மன முறிவுகளும் சிதைவுகளும் விவாகரத்து வழக்குகளும் பரவிக்கிடக்கின்றன. குடும்ப உறவின் அடி நாதங்களான பிரியம், பாசம், விட்டுக்கொடுத்தல், சகிப்புத்தன்மை போன்றவை மெல்ல மெல்ல மறைந்து வருவதுதான் இவற்றுக்கெல்லாம் காரணம். இதற்கு தார்மீகப்பொறுப்பேற்க வேன்டியவர்கள் பெண்கள்தான் என்பேன் நான். மெல்லிய மயில் தோகை போல மென்மையானவள் பெண். குடும்பப்பொறுப்புகளை ஏற்று, அவள் அடையும் அனுபவங்கள் அவளுக்கு யானை பலத்தைத் தருகின்றன. அவளுக்கு அன்பையும் குடும்ப உறவின் நன்மைகளையும் பொறுப்புணர்வையும் சொல்லிக்கொடுக்க வேன்டிய பொறுப்பு இருக்கிறது. அவளின் எழுத்தில் முதல் நிலைக்களனாக இவையெல்லாம்தான் இருக்க வேண்டும். அதற்குப்பிறகு காற்றைச் சாடி, தீயாய் தகித்து, ஆகாய‌மாய் உயர்ந்திருக்க அவள் எழுத்திற்கு எத்தனையோ நிலைக்களன்கள் இருக்கின்றன! ஆனால் அடிப்படை வேரான அன்பிலிருந்தும் குடும்ப உறவிலிருந்தும்தான் அவள் எழுத்து ஆரம்பிக்க வேன்டும். அந்த எழுத்து பல இதயங்களை சுத்திகரிக்க வேன்டும். அதனால் நாடு நலம் பெற வேண்டும்.

பழம்பெரும் பெண் புலவர் ஒளவையார் தனது தனிப்பாடலில்

" பர்த்தாவுக்கேற்ற பதிவிரதை உண்டானால்
எத்தாலும் கூடி இருக்கலாம்‍ சற்றேனும்
ஏறுமாறாக இருப்பாளே- யாமாயின்
கூறாமல் சந்நியாசம் கொள்"

என்று கூறியிருப்பதை நான் அடிக்கடி நினைத்து ஆச்சரியப்பட்டதுண்டு. ஒரு பெண்னே, 'உன் மனைவி சற்று ஏறுமாறாக இருந்தால் கூறாமல் சந்நியாசம் கொள்' என்று ஆண்களுக்குக் கூறியிருக்கிறார். அந்த அளவிற்கு அந்தக்காலத்தில் பெண்களுக்கான நெறி முறைகளும் கட்டுப்பாடுகளும் இருந்தன. இப்போது காலம் எல்லாவற்றையும் மாற்றி விட்டது. ஆணுக்கு நிகரான சம உரிமை வந்து விட்டது. படிப்பில், அலுவலகங்களில், சாதனைகளில் இப்படி பல விஷயங்களில் பெண் உயர்ந்து நிற்கிறாள். ஆனால் காலச்சுழற்சியில் காணாமல் போனதென்னவோ திருமண உறவுகளும் கூட்டுக்குடும்பங்களும்தான்!

இதற்கு அடிப்படைக்காரணங்களான அன்பையும் பாசத்தையும் குடும்ப உறவுகளுக்கான வேர்களான விட்டுக்கொடுத்தல், பொறுப்புணர்ச்சி, பொறுமை இவற்றையும் முழுமையாக உயிர்த்தெழுக்கசெய்வதுதான் பெண் எழுத்தின் அடி நாதமாக இருக்க வேண்டும். வள‌‌ரும் குருத்துக்க‌ளும் செழித்து வளர்ந்திருக்கும் இளைய தலைமுறையும் இதனால் பயன் பெற வேன்டும். முதியோர் இல்லங்கள் மறைய வேன்டும்.

இந்த அடி நாதங்களைத்தான் ஆதார சுருதிகளாக தன் புதினங்களில் எப்போதும் எழுதி வருகிறார் எழுத்தாளர் வித்யா சுப்ரமணியம்! அதற்காக சக பதிவர் என்ற முறையிலும் அவரின் சினேகிதி என்ற முறையிலும் அவருக்கு இங்கே நன்றி கூறுகிறேன்!

இந்தத் தொடர் பதிவில் பங்கேற்க

அன்பிற்குரிய‌


எழுத்தாளர் வித்யா சுப்ரமணியம்,
எப்போதும் அன்பையும் உண்மையும் தன் எழுத்தில் கொண்டு வரும் 'கற்ற‌லும் கேட்டலும்' ராஜி,
தன் கவிதைகளாலும் இலக்கிய சிந்தைனைகளாலும் எப்போதும் அசத்தி வரும் 'முத்துச்சரம்' ராமலக்ஷ்மி,

இவ‌ர்க‌ளை அன்புட‌ன் அழைக்கிறேன்!



நன்றி: கூகிள்

Monday, 7 March 2011

சாப்பாட்டிற்கான தொடர்பதிவு இது!!

அன்பு சகோதரி ஜலீலா [சமையல் அட்டகாசங்கள் ]கடந்த மாதம் இந்தத் தொடர்பதிவிற்கு அழைத்திருந்தார். நேரமின்மையால் அதை இப்போதுதான் தொடர முடிந்தது. உணவு, உணவு முறைகள் பற்றியான பதிவு இது.

கேள்வி எண்:1

இயற்கை உணவை சாப்பாட்டில் சேர்த்துக்கொள்வதுண்டா?

இயற்கையுணவு என்பதன் அர்த்தம் அடுப்பில் வைத்து சமைக்கப்படாத, எப்படி அது இயற்கையாக நமக்குக் கிடைக்கிறதோ, அப்படியே அதை உண்ண வேண்டும் என்பது தான். பல இயற்கை வைத்திய சிகிச்சை நிலையங்களில் இதைப் பின்பற்றுகிறார்கள். எனினும் முழுவதுமாக எனக்குத் தெரிந்த வரையில் எல்லா வேளைகளிலும் பின்பற்றுவதில்லை. சாப்பாட்டில் சாலட் போலத் தருகிறார்கள்.

கோவையில் உள்ள ஒரு இயற்கை வைத்திய சிகிச்சை நிலையத்திற்கு ஓய்வு எடுத்துக்கொள்ளுவதற்காக நான் அடிக்கடி செல்லுவதுண்டு. அங்கே காலை 11 மணிக்கும், பின் மாலை 6 மணிக்கும் என்று இரு வேளைகள்தான் உணவு தருவார்கள். சமையலில் மிகக்குறைவான எண்ணெய் தான் சேர்ப்பார்கள். மிளகாய், புளி சேர்ப்பதில்லை. பாதி உப்பு தான். தேங்காயைப் பாலாக சேர்க்கும்போது தான் அது கொழுப்பாக உடலில் படிகிறது என்பதால் அவர்கள் தேங்காய்த்துருவலாக உணவில் நிறைய சேர்ப்பார்கள். சமைக்காத உண‌வாக காய்கறித்துருவல்கள், முளைகட்டிய தானியங்கள்,  சிறிதளவே உப்பும் நிறைய அளவு தேங்காய்த்துருவலும் சேர்த்து கொடுப்பார்கள்.

இப்படி இல்லாமல் அவலைக் கழுவி அத்துடன் தேங்காய்த் துருவல், வெல்லம் கலந்து முழு நேர உண‌வாக சாப்பிடலாம்.

நான் சாலட் வடிவில் அவ்வப்போது நிறைய காய்கறிகளை உண‌வில் சேர்த்துக்கொள்வதுண்டு. பச்சை ஆப்பிள், தக்காளி, வெங்காயம், காரட், முள்ள‌ங்கி, வெள்ளரிக்காய், இவை அனைத்தையும் வகைக்கொன்றாய் எடுத்து துருவிக்கொண்டு, சிறிது உப்பும் சிறிது எலுமிச்சை சாறும் கலந்து உண்டால் மிகவும் சுவையாக இருக்கும். இது எனக்கு ஒரு மருத்துவர் சொன்ன குறிப்பு. வேறு எதுவுமே உணவாக எடுத்துக்கொள்ளாமல் முழு உணவாக இதை எடுத்துக்கொள்வதுண்டு.    

கேள்வி எண்:2

இயற்கை உணவுப் பழக்கம் எந்த விதத்தில் உங்களுக்கு பயன் தருகிறது?

இந்த மாதிரி சாலட் முழு உணவாக சாப்பிட்டபின் வயிறு மிக இலேசாக இருக்கும். மற்ற‌ உணவுப்பொருள்கள் சாப்பிடும்போது ஏற்படும் கனம், அஜீரணக்கோளாறுகள் இருப்பதில்லை. மேற்சொன்ன இயற்கை வைத்திய சிகிச்சை நிலையத்தில் பழக்கம் ஏற்பட்ட பிறகு, உணவில் எண்ணெய், காரம் அதிகம் சேர்ப்பதில்லை.

கேள்வி எண்:3

அன்றாடம் சரியான நேரத்தில் சாப்பிடுவீர்களா? அல்லது பசிக்கும் நேரத்தில் உண்பீர்களா?

சரியான நேரத்தில் சாப்பிடுவதை வீட்டில் அனைவருமே கடைபிடிக்கிறோம். அதனால் பசியும் கண்ட நேரத்தில் வராது.

கேள்வி எண்:4

வலைப் பதிவில் சமையல் சம்பந்தமாக எழுதுவதற்கு யார் உங்களுக்கு தூண்டுகோலாக இருந்தார்கள்?

முதன் முதலாக சமையல் சம்பந்தமாக எழுதுவதற்கு  ஊக்கம் கொடுத்ததுடன் ஒரு பிரபல தளத்தின் சமையல் பகுதியில் எனக்கென ஒரு பிரிவையும் என் மகன்தான் ஆரம்பித்து வைத்தார். அது இன்றைக்கு 8 வருடங்களைக்கடந்து மூன்றாவது பகுதியாகப் போய்க்கொண்டிருப்பதுடன் 10 லட்சத்திற்கு மேற்பட்ட பார்வையாளர்களையும் நிறைய பாராட்டுக்களையும் பெற்றுத்தந்திருக்கிறது. அதன் லின்க் கீழே:

http://www.mayyam.com/talk/forumdisplay.php?25-Indian-Food

கேள்வி எண்:5

புதியதாக ஏதாவது உணவுவகை முயற்சி செய்து பார்த்திருக்கிறீர்களா? அது சரியாக வரவில்லை என்றால் என்ன செய்வீர்கள்?

அடிக்கடி புதிய உண‌வு வகைகளைத்தான் செய்து பார்ப்பேன். இரு சமையல் தளங்கள் வைத்திருப்பதாலும் இயற்கையாகவே சமையலில் மிகுந்த ஆர்வமென்பதாலும் இன்று வரை புதிய சமையல் பக்குவங்களை அடிக்கடி செய்து பர்த்துக்கொன்டேதான் இருக்கிறேன். சரியாக வரவில்லை என்பதெல்லாம் கிடையாது.

கேள்வி எண்: 6

உங்களது அன்றாட சமையலில் நீங்கள் கட்டாயம் தவிர்க்கும் சமையல் சம்பந்தமான பொருட்கள் ஏதாவது மூன்று?

தேங்காய் அரைத்துச் சேர்ப்பதை அதிகம் தவிர்ப்பேன். வர மிளகாய், பச்சை மிள‌காய் இவற்றை மிகவும் குறைவாகத்தான் சேர்ப்பேன். சேர்க்கும்போதும் உள்ளிருக்கும் விதைகளை முழுவதும் எடுத்து விட்டுத்தான் சேர்ப்பேன். எண்ணெயை கூடியவரை குறைத்தே சேர்ப்பேன்.

கேள்வி எண்: 7

தினப்படி சமையலில் நீங்கள் அடிக்கடி சேர்த்துக்கொள்ளும் சமையல் பொருட்கள் சில?

கொத்துமல்லி இலை, சிவந்த தக்காளி, பெருங்காயம் இவற்றை அதிகம் சேர்ப்பேன்.

கேள்வி எண்:8

குடும்ப உறுப்பினர்கள் ஒன்றாக சேர்ந்து அமர்ந்து சாப்பிடுவதால் என்ன நன்மைகள் உண்டாகிறது?

குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து உண்ணும்போது அந்நியோன்யம் பெருகுகிறது என்பது மறுக்க முடியாத உண்மை. ஒருத்தரை ஒருத்தர் கவனித்து பரிமாறும்போது அங்கே அக்கறையும் அன்பும் கூடுதலாகிறது.

கேள்வி எண்:9

உங்களுக்குப் பிடித்த உணவகத்தில் நீங்கள் விரும்பாத உணவு பரிமாறப்பட்டால் என்ன செய்வீர்கள்?

இதற்கு வாய்ப்பு கிடையாது என்றே சொல்லலாம். எனினும் சில சமயம் நாம் விரும்பிக்கேட்கும் உணவு கறுப்பாய் காந்தலாய் வருவதுன்டு. அந்த சமயம் அதை திருப்பி எடுத்துப்போகச் சொல்லி விடுவேன். அவர்களாகவே மறுபடியும் நல்லதாக கொன்டு வந்து தருவதும் நடந்திருக்கிறது.

இந்த தொடர்பதிவிற்கு அழைத்து என்னை அது பற்றி எழுத வைத்த சகோதரி ஜலீலாவிற்கு என் அன்பு நன்றி!!

இந்தத் தொடர்பதிவிற்கு அன்புச் சகோதரர்கள் வை.கோபாலகிருஷ்ண‌ன், ஆரண்ய நிவாஸ் ராமமூர்த்தி‍, சகோதரிகள் லக்ஷ்மி, ராஜி இவர்களை 

அன்புடன் அழைக்கிறேன்.   

Wednesday, 19 January 2011

அனுபவ அலைகள்

சகோதரி ஆசியா தன் வலைப்பூவில் 2010 டைரியின் முக்கிய நிகழ்வுகளையும் 2011-ன் எதிர்பார்ப்புகள் பற்றியும் எழுதி, இந்த தொடர்பதிவிற்கு என்னையும் அழைத்திருந்தார். அவரின் அழைப்பிற்கிணங்க இத்தொடர் பதிவை எழுத ஆரம்பிக்கிறேன்.
2010 டைரி:

பிப்ரவரி மாதம்:

என் கணவரின் பிறந்த நாளிற்காக மைசூர் பயணத்தை என் மகன் ஏற்பாடு செய்திருந்தார். வழக்கம்போல மைசூர் அரண்மனை, பிருந்தாவன் கார்டன்ஸ் இவற்றைப்பார்த்த பிறகு, நானாகவே இரண்டு இடங்களைத் தேர்வு செய்திருந்தேன். ஒன்று மைசூரிலிருந்து 45 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள சோம்நாத்பூர் என்ற ஊரிலுள்ள ஆலயம். ஹொய்சாள அரசன் மூன்றாம் நரசிம்ஹனின் ஆட்சியில் அவனது கமாண்டரால் கி.பி.1268-ல் கட்டப்பட்ட ஆலயம்.


காவிரிக்கரை ஓரமாக அமைந்த இந்த ஊர் மிகச் சிறிய கிராமம். அமைதியான ஒரு இடத்தில் தனித்து நிற்கிறது இந்த ஆலயம். ஹொய்ஸாளர்கள் ஆட்சி செய்த காலத்தில் கட்டப்பட்ட கேசவப் பெருமாள் ஆலயம் இது. பல்லவர் காலத்து சிற்பக்கலையை நினைவூட்டும் விதமாய் பிரமிக்க வைத்தது இந்தக்கோவிலின் சிற்பங்கள். நுணுக்கமாக செதுக்கப்பட்ட அழகான சிற்பங்கள் கோவிலைச் சுற்றி எழுப்பப்பட்டிருக்கும் நட்சத்திர வடிவ பிரகாரம் முழுக்க நம்மை அசர வைக்கின்றன. ஒரு இஞ்ச் இடம்கூட இடைவெளி இல்லாமல் எங்கு பார்த்தாலும் குட்டி குட்டியாக அழகு சிற்பங்கள்தான்! கருவறைக்கு உள்ளேயும் விதானங்களிலும் ராமாயணத்திலிருந்து பல காட்சிகள் சிற்பங்களாய் உருவெடுத்து நம்மை மயக்க வைக்கின்றன.

தங்குவதற்கோ, சாப்பிடுவதற்கோ சரியான வசதிகள் இல்லாத மிகச் சிறிய கிராமம் இது. மைசூரில்தான் அதற்கான வசதிகளைச் செய்து கொள்ள வேண்டும்.

இரண்டாவதாக நாங்கள் சென்ற இடம் 'பைலாகுப்பே' என்ற உள்ளடங்கிய சிறு கிராமம். இது குடகு மாவட்டத்தில் இருக்கின்றது. மைசூரிலிருந்து கிட்டத்தட்ட 2 மணி நேர கார்ப்பயணம். உள்ளடங்கிய சாலையில் போகும்போதே பலவிதமான வாகனங்களில் திபேத்தியர்கள் தென்படுகிறார்கள்.

ரொம்ப வருடங்களுக்கு முன் இங்கு வந்து நிரந்தரமாகத் தங்கி விட்ட திபேத்தியர்கள் [refugees] கட்டிய கோவில்கள் மற்றும் அவர்கள் தங்குமிடங்கள் இருக்கின்றன. இந்தத் தங்கக் கோவிலின் வளாகத்தினுள்ளே சென்றதுமே சப்தங்கள் மலிந்த நம் தென்னிந்தியா நம் கண்முன்னே மறைந்து விடுகிறது. முற்றிலும் புதிய, அமைதியான உலகத்திற்குள் நுழைவது போன்ற ஒரு உணர்வை தவிர்க்க முடியவில்லை. காவி உடை அணிந்த புத்த சன்னியாசிகள் சுற்றிலும் அமைதியாக நடந்து கொன்டிருக்கிறார்கள். அழகிய கலை வேலைப்பாடுகளும், ஓவியங்களும் நிறைந்த நாலைந்து கோவில்கள் நம்மை வரவேற்கின்றன. 40 உயரமுள்ள, தங்கத்தினாலான புத்தர் நம்மைப் பார்த்துப் புன்னகைக்கிறார். இது போல தங்கத்தினாலான புத்தர் சிலைகள் நிறைய அங்கே இருக்கின்றன. தாய்லாந்து கோவில்களின் கட்டிடக்கலை அந்தக் கோவில்களில் மிளிர்கின்றது. சுற்றிலும் பசுமையான இலைகளும் மரங்களும் மலர்களுமாக வெளியில் சூழ்ந்திருக்கும் அந்த அமைதி மனதிலும் நுழைந்து விட்டதை உணர முடிந்தது. வெளி நாடுகளுக்குச் செல்லும்போது, எங்காவது தமிழர்களைப்பார்த்து விட்டால், அந்தப் புதிய உலகம் திடீரென சந்தோஷத்தை அதிகரித்து விடும். ஆனல், நம் இந்தியாவில், திடீரென ஒரு திபேத்திய உலகைப்பார்த்தபோது, நாம் இந்தியாவில்தான் இருக்கின்றோமா என்று சந்தேகமே தோன்றி விட்டது!

மார்ச் மாதம்:

நானும் ஒரு பதிவராக வலையுலகில் நுழைந்தேன். எத்தனை எத்தனை பேர்களுக்கு இந்த வலையுலகம் வடிகாலாயிருக்கிறது! வெளியுலகம் அறியாத, வெளியுலகில் புகழ்பெற்ற எத்தனையோ கவிஞர்கள், எழுத்தாளர்களை விடவும் சிறந்த எழுத்தாளர்களும் கவிஞர்களும் இங்கே அசத்திக்கொண்டிருக்கிறார்கள்! அடக்கி வைக்கப்பட்ட மனப்பிரவாகங்கள் வலையுலகமெங்கும் பூஞ்சிதறல்களாய் தெறித்துக்கொன்டிருக்கின்றன.

மார்ச் இறுதியில் என் மருமகள் தான் பெற்ற குழந்தையுடன் வீட்டுக்கு வந்து சேர்ந்தார். அன்றிலிருந்து எங்கள் உலகமே மாறி விட்டது! ஒவ்வொருத்தருக்கும் தான் பெற்ற குழந்தைகளை வளர்க்கும்போது, அதன் இனிமையை முழுமையாக அனுபவிக்க முடியாது வாழ்க்கைப்பிரச்சினைகள் அழுத்திக்கொண்டிருக்கும். நின்று நிதானித்து எதையும் ரசிக்க நேரமில்லாது நாட்கள் பறக்கும். ஒரு வழியாய் சுமைகள் இறங்கி நிமிர்ந்து பார்க்கையில் காலம் பல ஓடி மறைந்திருக்கும். வளர்ந்த குழந்தைகள் இறக்கை முளைத்துப் பறக்கத் துடித்துக்கொண்டிருப்பார்கள். அவர்களின் படிப்பு, கடமைகள் என்று மறுபடியும் ஓடத்துவங்கி, அனைத்தும் முடியும்போது மூப்பு தொடங்கி, மனசின் ஆரவாரங்கள் அடங்கி அசந்து அமரும்போது, சோர்ந்து போன இதயத்தில் சில்லென்று மழைத்துளிகளைத் தூவுவதும் இளந்தென்றலாய் மனதை இதமாய்த் தடவுவதும் தன் கள்ளமற்ற புன்சிரிப்பில் உலகையே மறக்க வைப்பதுவும் ஒரு பச்சிளங்குழந்தையால் அனாசயமாக செய்ய முடிகிறது!

'பால் மணக்கும் பருவத்திலே உன்னைப்போல் நானிருந்தேன்!
பட்டாடைத் தொட்டிலிலே உன்னைப்போல் படுத்திருந்தேன்!
அந் நாளை நினைக்கையிலே என் வயதும் மாறுதடா!'

என்ற கவிஞர் கண்ணதாசனின் வார்த்தைகளின் அர்த்தம் இப்போதுதான் முழுமையாகப் புரிகிறது!

டிசம்பர் மாதம்:

சென்ற வருடத்தின் இறுதியில் என்னை ஐந்து நட்சத்திர விடுதியில் தங்க வைத்து பரிசுகளை அள்ளி வழங்கி கணவரும் மகனும் மருமகளும் என் பிறந்த நாளைக் கொண்டாடினார்கள். உண்மையான அன்பையும்விட வேறு உயர்ந்த பரிசு எதுவும் உள்ளதா என்ன?

2011 எப்படி இருக்க வேன்டும்? இந்த வருடம் மட்டுமல்ல, எப்போதுமே பாரதியாரின் பாடல்போல வாழ்க்கை இருக்க வேண்டும்!

"மனதில் உறுதி வேண்டும்.
வாக்கினிலே இனிமை வேன்டும்.
நினைவு நல்லது வேண்டும்.
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்.
கனவு மெய்ப்பட வேண்டும்.
கைவசமாவது விரைவில் வேண்டும்.
தனமும் இன்பமும் வேண்டும்.
தரணியிலே பெருமை வேண்டும்.
கண் திறந்திட வேண்டும்.
காரியத்தில் உறுதி வேண்டும்.
பெண் விடுதலை வேண்டும்.
பெரிய கடவுள் காக்க வேண்டும்.
மண் பயனுற வேண்டும்.
வானகமிங்கு தென்பட வேண்டும்.
உண்மை நின்றிட வேண்டும்"

Sunday, 19 September 2010

பதிவுலகில் நான்!

திருமதி. விஜி சத்யா என்னைத் தொடர்பதிவிற்கு அழைத்து விட்டாலும் முதலில் எழுதுவதற்கு சிறிது தயக்கமிருந்தது. ஆனாலும் அவர்களின் அன்பை மதிப்பது பெரிதாகப்பட்டதால் இந்த தொடர்பதிவில் எழுத ஆரம்பிக்கிறேன்.

திருமதி. .விஜிக்கு என் அன்பார்ந்த நன்றி!


1. வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?

இதே பெயர்தான் - மனோ சாமிநாதன்.

2. அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?.

இதுதான் என் உண்மைப் பெயர்.

3. நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி.

தமிழ் வலைப்பூ உலகில் காலடி எடுத்து வைத்ததைப் பற்றி சொல்லுமுன், பொதுவான வலைத்தளங்களில் முதல் அடி எடுத்து வைத்ததைப் பற்றிச் சொல்ல வேண்டும்.

என் ஒரே மகன் ஸ்விட்சர்லாண்டில் படிப்பை முடித்து, பயிற்சிக்காக அமெரிக்கா செல்ல ஆயத்தங்கள் செய்து கொண்டிருந்தபோது, என் தனிமையைப்போக்குவதற்காக, வீட்டில் கம்ப்யூட்டர் வாங்கி, இண்டர்நெட் தொடர்பை முதன்முதலாக ஏற்படுத்தியதுடன் மட்டுமல்லாது, என் சமையல் திறன் எனக்கு உற்சாகத்தைக் கொடுக்க வேண்டுமென்ற நோக்கத்துடன் என் மகன் 2003-ல் ஆரம்பித்து வைத்ததுதான் www.mayyam.com/hub என்ற பிரபலமான வலைத்தளத்தில் Indian food பிரிவில் Mrs.Mano’s Tamilnadu delicacies என்ற தொடர். இது தற்போது 10 லட்சத்திற்கும் மேலான பார்வையாளர்களையும் தொடர்ந்து பாராட்டுக்களையும் எனக்குப் பெற்றுத்தந்து என் தொடரின் மூன்றாம் பாகத்திலும் நுழைய வைத்துள்ளது. இதுதான் வலையுலகத்தில் என் முதல் நுழைவு. பிறகு இதைப்பார்த்து அழைத்த ‘அறுசுவை ‘ வலைத்தள நிறுவனரின் வேண்டுகோளுக்காக, அங்கே சில வருடங்கள் பங்கேற்பு. இடையில் மகனின் திருமண முயற்சியின் காரணமாக சில வருடங்களின் தொடர் அலைச்சலினால் வேறு சில வலைத்தளங்களின் அழைப்பையும் புறக்கணிக்க வேண்டியதாகியது. இவ்வளவுக்கும் இடையில் எனக்கென தனி வலைப்பூ ஆரம்பிக்க வேண்டுமென்ற ஆசை பல வித கடமைகளில் கனவாகவே பல வருடங்கள் தொடர்ந்து இப்போதுதான் நனவாகியுள்ளது. இதற்காக ஆரம்பத்தில் எனக்கு ஊக்கம் கொடுத்து சில யோசனைகளும் சொன்ன தங்கை ஸாதிகாவிற்கும் பின்னால் சில குறிப்புகள் கொடுத்த தங்கை ஜலீலாவிற்கும் இங்கே என் இதயங்கனிந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

4. உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?

பிற வலைத்தளத் திரட்டிகளில் இணைவதுதான் பிரபலமடைதல் என்றால் அதற்கான யோசனைகளைத் தானாகவே முன்வந்து சொல்லி விளக்கிய சகோதரர் இர்ஷாத் தான் பெரிதும் காரணமானவர். அவருக்கும் இங்கே என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மற்றபடி நம் வலைத்தளம் பிரபலமாவதென்பது நம் எழுத்தில்தான் இருக்கிறது என்பது என் எண்ணம்!

5. வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?

என் அனுபவங்களையும் பிறர் அனுபவங்களையும் சில சமயங்களில் பகிர்வதுண்டு. அவற்றை எழுதுவதே, யாருக்கேனும் அவை ஏதாவது ஒரு விதத்தில் உதவியாக இருக்குமென்ற நோக்கத்தில்தான். இதனால் நல்ல விளைவுகள் கடந்த காலத்தில் நிகழ்ந்துமிருக்கின்றன.

6. நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

நிச்சயம் இதை பொழுது போக்கு என்று சொல்ல முடியாது. பெரும்பாலான குடும்பங்களில் பெண் என்பவள் குடும்பத்தைப் பேணி காப்பதிலும் சமைப்பதிலும் தன் பொழுதைக் கழிக்கிறாள். இளமையில் தன் கணவனிடமும் முதுமையில் தன் பிள்ளைகளிடமும் தன் மனதிலுள்ள அனைத்தையும் பகிர்ந்து கொள்ள முடியாமலும் தன் திறமைகளை வளர்த்துக்கொள்ள முடியாமலும் அவளின் நேரம் இயந்திர கதியில் எப்போதும் சுழன்று கொண்டே இருக்கிறது. விசு ஒரு திரைப்படத்தில் தன் மனைவியிடம் சொல்வார், ‘ஆண்களுக்காவது ரிட்டயர்மெண்ட் இருக்கிறது. ஆனால் உங்களுக்கெல்லாம் சமையலிலிருந்து ஓய்வே இல்லையே?” என்று!! இந்த வலைப்பூவில் எழுதுவது என்பது எல்லா பெண்களுக்கும் ஒரு வடிகால் என்றுதான் சொல்வேன் - எனக்கும் சேர்த்துத்தான்!! மற்ற வலைப்பூக்களைப் பார்த்தால் தெரியும் எத்தனை பெண்கள் சமையலிலும் கலைகளிலும் கவிதைகளிலும் சிந்தனைகளிலும் எப்படியெல்லாம் தங்களின் திறமைகளை வெளிப்படுத்துகிறார்கள் என்று!

7. நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?

ஆங்கிலத்தில் மட்டும் சமையலுக்கென்று ஒரு வலைப்பூ உள்ளது.

http://www.manoskitchen.blogspot.com/

8. மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?.

தன்னிறைவும் மனப்பக்குவமும் இருந்தால் கோபம், பொறாமை போன்ற உணர்ச்சிகளுக்கு இடமேயில்லை.

9. உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி.

பகிர்ந்ததும் பாராட்டியதும் என் கணவர்தான். என்னுடைய அத்தனை திறமைகளையும் இந்த நிமிடம் வரை ஊக்குவித்து வளர்த்து வரும் அவரைப்பற்றி விவரிக்க என்னிடம் வார்த்தைகளில்லை.

10.கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...

சினேகமும் புரிதலும் அன்புமாக கணவர், கரிசனமும் பிரியமும் தோழமையுமாக மகன், மகளாக மருமகள், பொக்கிஷமாக பேரன் என்ற அன்பு மயமான குடும்பம். உண்மை, நேர்மை, உழைப்பு, அன்பு, கருணை-இவைதான் வாழ்க்கையின் தாரக மந்திரங்கள்!

சின்னஞ்சிறு வயதில் கர்நாடக சங்கீதம் பயின்று, அரங்கேற்றம் நடந்தது ஒரு பகுதி. தண்ணீர் ஊற்றாமலேயே தன்னால் வளரும் காட்டுச்செடி போல எந்த விதப்பயிற்சியுமின்றி வளர்ந்த ஓவியத்திறமை இன்னொரு பகுதி..


ஓவியம் வரைய ஆனந்த விகடனின் துணை ஆசிரியர் திரு.பரணீதரனால்.அழைக்கப்பட்டதும் கதாசிரியையாய் அதே விகடனிலும் சாவியிலும் எழுத ஆரம்பித்ததும் வாழ்வின் நடுப்பகுதி.

இவை அனைத்தையும் பின்னுக்குத் தள்ளி முதலில் குடும்பக் கடமைகளுமாய் இப்போது வலைப்பூவுமாய் தொடர்வது இன்றைய பகுதி!

இன்றைய பெருமிதம் வலையுலக நட்புகள்!

இன்றைய வேண்டுதல் அனைவரும் மகிழ்வுடனும் நலமுடனும் இருக்க வேண்டுமென்பது!

இந்த தொடர் பதிவில் பங்கேற்க நான் அழைக்கும் தோழமைகள்:

திருமதி. மேனகா

திருமதி. ஆசியா ஓமர்

திரு.ஹைஷ்

திரு.கோபி