Wednesday, 30 July 2014

முத்துக்குவியல் -29!!

தகவல் முத்து:
:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள போச்சம்பள்ளி சந்தை, தமிழகத்தின் இரண்டாவது பெரிய சந்தை எனக் கூறப்படுகிறது. இங்கு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் சந்தை கூடுகிறது. இந்த சந்தையில் காய்கறி, தானியங்கள், தங்கம், வெள்ளி, இரும்பு சாமான்கள் மட்டுமல்லாது ஆடு, மாடுகள் என அனைத்து பொருட்களும் விலை மலிவாக கிடைக்கின்றன. 
ஒவ்வொரு பொருளுக்கும் தனித்தனி இடம் ஒதுக்கப்பட்டு, அங்கு விற்பனை நடக்கின்றது. அந்தந்த இடங்களில் வியாபாரிகளும், பொதுமக்களும் தங்களுக்கு தேவையானதை மொத்தமாகவோ அல்லது சில்லறையாகவோ வாங்கி செல்வது வழக்கம். இதன்மூலம், கணிசமாக பணம் மிச்சமாகும் என்கின்றனர் அந்த சந்தை பற்றி தெரிந்தவர்கள்.
இதற்கப்புறம் புகழ் பெற்றிருப்பது நாமக்கல்லிருந்து 30 கி.மீ தொலைவில் பேளுக்குறிச்சியில் மாசி, பங்குனி, சித்திரை மாதங்களில் மட்டும் வெள்ளிக்கிழமைகளில் மட்டும் இரவு நேரத்தில் நடக்கும் சந்தை. கடுகு, சீரகம், மிளகு, போன்ற பலசரக்குகள் முதல் சோம்பு, ஏலம், கசகசா போன்ற மசாலா பொருள்களும் துவ்ரம்பருப்பு, கடலைப்பருப்பு, மிளகாய், புளி, போன்றவைகளும்  மிகவும் மலிவாகக் கிடைக்கிறது.

அதிசய முத்து:

ஆப்கானிஸ்தான் நாட்டில் ' கார்டெஸ்' என்ற இடத்தில் நின்ற நிலையில் நான்கு கைகளுடனும் பாம்பை பூணூலாக அணிந்தும் கழுத்தில் ருத்திராட்ச மாலை தரித்தும் இடத்தந்தம் ஒடிந்தும் ஒரு பெரிய விநாயகர் காட்சி அளிக்கிறார். இதைப்படித்த போது மிகவும் ஆச்சரியமாக இருந்தது. கடந்த கால சரித்திர நிகழ்வுகள் நமக்கு அவ்வப்போது ஆச்சரியங்களை அளித்துக்கொண்டிருக்கின்றன!!

எச்சரிக்கை முத்து:

' ஆண்டிபயாடிக் எனப்படும் நோய் எதிர்ப்பு மருந்துகளின் காலத்துக்குப் பிந்தைய ஒரு காலத்தை உலகம் நோக்கிச் சென்று கொன்டிருப்பதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்திருக்கிறது. மக்கள் சாதாரண தொற்றுக்களாலும் சிறிய காயங்களாலும் உயிரிழக்கக்கூடிய ஒரு நிலை மீண்டும் உருவாகலாம் என்றும் கூறுகிறது. சூப்பர் பக்ஸ் எனப்படும் நோயை உண்டாக்கும் கிருமிகள் உருமாறி, மிகவும் சக்தி வாய்ந்த நோய் எதிர்ப்பு மருந்துகளிடம் இருந்தும் கூட தப்பித்துக்கொள்ளும் நிலையை எட்டியிருக்கிறதாம். இது இப்போது உலக அளவில் ஒரு பெரிய அபாயத்தை எட்டியிருக்கிறது என்று சொல்லப்படுகிறது. ஆண்டிபயாடிக்ஸ் மருந்துகள் அதிக அளவில் பரிந்துரைக்கப்படுவதும் முக்கியகாரணமாக கூறும் உலக சுகாதார நிறுவனம் புதிய நோய் எதிர்ப்பு மருந்துகள் விரைவில் உருவாக வேண்டும் என்றும் அவை பயன்படுத்த வேண்டிய முறைகளையும் கண்காணிக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறது.

மருத்துவ முத்து:

சர்க்கரை நோய்க்கு எளிமையான மருந்து:



தேவையானவை:

வெந்தயம்‍ 50 கிராம், கருஞ்சீரகம்‍ 25 கிராம், ஓமம்‍ 25 கிராம், சீரகம்‍ 25 கிராம்
இவற்ரை ஒன்றாகச் சேர்த்து வறுத்துப்பொடி செய்யவும். இதில் ஒரு சிறு ஸ்பூன் எடுத்து தினமும் வெறும் வயிற்றில் காலை சுவைத்து சாப்பிடவும். வேன்டுமானால் சிறிது தண்ணீர் அதன் பிறகு குடித்துக்கொள்ளலாம். ஒரு வாரம் இப்படி செய்து வந்தால் சர்க்கரையின் அளவு நிறைய குறையும்.

ரசிக்கும் முத்து:




மொகலாயச் சக்கரவர்த்தி அக்பருக்கும் ஆமிர் நாட்டு  இந்திய ராஜப்புத்திர இளவரசி ஜோதாவிற்கும் இடையே மலர்ந்த காதலை மிக அழகாக வெளியிட்டுக்கொன்டிருக்கிறது ' ஜோதா அக்பர்' என்னும் சீரியல். இது ஜீ தொலைக்காட்சியில் தினமும் மாலை ஒளிபரப்பிக்கொன்டிருக்கிறார்கள். மொகலாயர்களின் கட்டிடக்கலையின் பிரமிக்க வைக்கும் அழகும் இந்து அரசர்களின் வீரமும் சிறந்த நடிப்பும் இரு மதங்களின் பல்வேறு வேற்றுமைகள் அன்பென்ற ஒன்றினால் அழகாய் இணையும் காட்சிகளும் என்னை தினமும் ஈர்க்க வைத்துக்கொன்டிருக்கின்றன. ஹிந்தியில் ஏற்கனவே ஒளிபரப்பிக்கொண்டிருப்பதால் அதற்கு ஏற்ப தமிழ் உரையாடல்கள் இருக்கின்றன. தமிழ்ச்செறிவோடு கூடிய வசனக்களும் அக்பரின் கம்பீரமான குரலும் இந்த சீரியலுக்கு மேலும் அழகு சேர்க்கின்றன. அப்படியே ஒன்றிப்போய் ர்சித்துக்கொண்டிருக்கிறேன். நீங்களும் பார்த்து ரசியுங்கள்!!










 

Wednesday, 23 July 2014

சித்தர் குரு நமச்சிவாயர்!!

சித்தர்களின் வாழ்க்கையைப்பற்றிய வரலாறுகளைப் படிக்கும்போது ஆச்சரியம் மேலிடுகிறது. முன்பு தேரையர் என்ற சித்தர் விளைவித்த ஆச்சரியங்களைப்பற்றி  படித்து, அவற்றைப் பகிர்ந்து கொன்டேன். இப்போது எழுதவிருப்பது மற்றொரு சித்தரைப்பற்றி!

' குரு பிதா குருர் மாதா குருதேவா பரசிவா
  சிவருஷ்டரே குருஸ்த்ராதா குரோருஷ்டேண காஷ்சன்'

[ குருவே தந்தை: குருவே தாய்: குருவே இறைவன்: கடவுளுக்கு கோபம் வந்தால் குரு காப்பாற்றுவார். ஆனால் குருவிற்கு கோபம் வந்தால் நம்மைக் காப்பாற்றுபவர் யாரும் இல்லை.]

' குருர் பிரம்மா குருர் விஷ்ணு குருர் தேவோ மஹேஸ்வரந‌
  குரு சாஷாத் பரம் தத்வம் தஸ்மாத்குரும் உபாஸ்ரயேத்நந'

[ குருவே பிரம்மா; குருவே விஷ்ணு; குருவே மகேஸ்வரன்; குருவே பரப்ரம்ம சொரூபனாகவும் இருக்கிறார். குருவை முழுமையாகச் சரணடைதல் அனைத்திலும் உயர்ந்தது.

இப்படி வேதங்களிலும் உபநிஷத்துக்களிலும் கூறப்பட்டிருக்கிறது.

ஒரு நல்ல குரு அமைந்தால் சீடனுக்குப் பெருமை. ஒரு நல்ல சீடன் அமைந்தால் குருவிற்குப் பெருமை. அதன் படி சீடனாக வந்து குருவிற்குத் தொன்டு செய்து, குருவிற்கு குருவாகவே உயர்ந்தவர் நமச்சிவாயர்.
இயல்பிலேயே ஞானம் வாய்க்கப்ப‌ட்டிருந்த இவர் ஒரு நல்ல குருவைத்தேடி காடு மேடெல்லாம் அலைந்து கடைசியில் திருவண்ணாமலைக்கு வந்து சேர்ந்தார். அங்கே பிரம்மத்தில் லயித்த பார்வையுடன் புற உணர்வுகளை மறந்த தவத்தில் திருவண்ணாமலை வீதிகளில் அலைந்து கொண்டிருந்த குகை நமச்சிவாயத்தைக்கண்டதும் இவரே நம் குரு என முடிவு செய்து அவர் பின்னாலேயே போக ஆரம்பித்தார். ஆனால் அவரோ இவரைத் திரும்பியும் ஏறெடுத்தும் பார்க்கவில்லை. குகை நமச்சிவாயருக்கு பசித்தால் இல்லங்கள் முன் நின்று 'நமச்சிவாயம்!' என்பார். உள்ளிருப்பவர்கள் வெளியே வந்து அவரின் குவிந்த கரங்களில் கஞ்சியையோ அல்லது கூழையோ ஊற்றுவார்கள். அதனை உறிஞ்சிக்குடித்த பின் குகை நமச்சிவாயர் அகன்று விட, அவர் கரங்களினின்றும் கீழே வழிந்து விழும் மிகுதியான கஞ்சியை கையேந்திக் குடிப்பார் இளைஞர் நமச்சிவாயர். தன்னை சீடராக குகை நமச்சிவாயர் ஏற்றுக்கொள்ளா விட்டாலும் அவர் உறங்கும் மலைப்பகுதி சென்று உறங்கும் அவரின் பாத‌ங்களைப் பிடித்து விட்டு, அவர் உறங்கிய பின்பே தானும் உறங்கச் செல்லுவார்.
ஒரு நாள் குருவின் பாதங்களை மெல்லப்பிடித்து விட்டுக்கொண்டிருந்த சீடர் திடீரென்று பெருங்குரலில் சிரிக்க ஆரம்பித்தார். குகை நமச்சிவாயர் கோபமடைந்து காரணம் கேட்க, ' ஒன்றுமில்லை குருவே, திருவாரூர் தியாகராஜர் சன்னதியில் நடனமாடிக்கொன்டிருந்த பெண்ணொருந்தி திடீரென்று கீழே விழுந்து விட்டாள். அதைப்பார்த்து மக்களெல்லாம் சிரிக்கவே, எனக்கும் சிரிப்பு வந்து விட்டது என்றார். அதைக்கேட்ட குருவானவர் ஆச்சரியமுற்று, ' ' இவன் இருப்பது இங்கே, ஆனால் காட்சியை உணர்வது அங்கே' என்று நினைத்தவர் ' அப்பா, நீ இன்றடைந்த நிலையே வேறு! இன்று முதல் என் சீடனாகி விட்டாய்' என்றார்.

மற்றொரு நாள் குரு அருகே பவ்யமாக நின்று கொன்டிருந்த சீடர், திடீரென்று எரிந்து கொன்டிருந்த தீயை அணைப்பது போல பாவனை செய்து தன் வேஷ்டி நுனியைத் திருகினார். குரு காரணம் கேட்க, ' குருவே, தில்லை கோவிலில் திரைச்சீலை தீப்பற்றி எரிந்தது. அதைக் கோயில் குருக்கள் அணைத்தார். அதனால் நானும் அந்தத் தீயை அணைத்தேன்' என்றார். குரு ஆச்சரியத்துடன் எழுந்து நின்று, ' நமச்சிவாயம்! நீ இன்றிருப்பது மிக மிக உயர்ந்த நிலை' என்று வாழ்த்தினார்.

ஒரு நாள் தான் உண்ட உணவு செரிக்காமல் திடீரென்று உமிழ்ந்தார் குரு. உடனேயே சீடர் நமச்சிவாயம் அதை அருகிலிருந்த மண் கலயத்தில் தாங்கிப்பிடித்தார். குரு சீடரை நோக்கி ' இதனை மனிதர் காலடி படாத இடமாகப்பார்த்துக்கொட்டி வா' என்றார். சீடரும் மண் கலத்தை சுமந்து வெளியே சென்று சற்று நேரத்தில் திரும்பி வந்தார். வந்தவரிடம் குரு கேட்டார், ' மனிதர் காலடி படாத இடம் பார்த்து கொட்டினாயா?' சீடர் மிகவும் பணிவாக ' மனிதர் காலடி படாத இடம் ஏது என் வயிற்ரைத்தவிர? அதனால் நானே அதை விழுங்கி விட்டேன்' என்றார் மிக இயல்பாக!

குரு அப்படியே திகைத்துப்போனார். எத்தனை மன உறுதி இருந்தால், எந்த அளவு உயர்ந்த சிந்தனை இருந்தால், எந்த அளவு குருவிடம் பக்தி இருந்தால் தான் உமிழ்ந்ததை கொஞ்சம் கூட அறுவறுப்பு இல்லாமல் அதை விழுங்கியிருப்பார்?

கண்களில் கண்ணீர் பெருக சீடரைத்தழுவினார். ' அப்பா, நீ இனி சீடன் இல்லை. குரு நமச்சிவாயர். ஆத்மஞானத்தைப்பொறுத்தவரை மிக உயர்ந்த நிலை அடைந்து விட்டாய் இனி நீ சிதம்பரம் சென்று தில்லை கோவிலில் இருப்பாயாக. அங்கே உன்னால் ஆக வேண்டிய வேலைகள் இருக்கின்றன. இனி நீ இங்கே இருப்பது சரியில்லை. ஒரே கம்பத்தில் இரண்டு யானைகளைக்கட்டுவது சரியில்லை. அப்படி கட்டுவதும் முறையில்லை" என்றாராம்.

குரு வாக்கிற்கு மறுவாக்கில்லை என்பதால் குரு நமச்சிவாயர் சிதம்பரம் புறப்பட்டார். வழியில் பசி அதிகமானதால்

"அண்ணா மலையா ரகத்துக் கினியாளே
உண்ணா முலையே உமையாளே- நண்ணா
நினைதொறும்போற்றிசெயநின்னடியாருண்ண
மனை தொறும் சோறுகொண்டு வா"

என்று அம்பிகையை நினைத்துப்பாடவே, அம்பிகை அருணாசலேஸ்வரர் ஆலயத்திலிருந்து உணவு வகைகளை எடுத்து வந்து அயர்ந்து கிடந்தவருக்கு கொடுத்து பசியாற்றினாராம். இப்படி வழி நெடுக அவரின் பசி தீர்க்க இறைவியை அன்னம் கொண்டு வரும்படி அவர் பாடல் பாட, இறைவியே நேரில் உணவெடுத்து வந்து அவர் பசியாற்றியதாக வரலாறு.

குரு நமச்சிவாயர் தில்லை கோவில் சென்று தங்கி பாமாலைகள் பாடினார். அதன் அருகே உள்ள திருப்பாற்கடல் என்னும் தலத்தில் தவமியற்ற ஆரம்பித்தார். அவர் அடி தொழுத அடியவர் அளித்த பொன்னையும் பொருளையும் கொண்டு ஆலயத்திருப்பண்னிகள் செய்தும் ஏழைகள் துயர் துடைத்தும் பலருக்கும் நன்மைகள் செய்தும் பாமாலைகள் இயற்றியும் புகழ் பெற்று வாழ்ந்தார்.

இவர் இயற்றிய ' அண்ணாமலை வெண்பா' மிகவும் புகழ் பெற்றது.
இவ்வாறு ஒரு சீடராக, குருவாக, பக்தராக, ஆலயப்பணியாளராக, புலவராக, ஞானியாக பல காலம் வாழ்ந்த குரு நமச்சிவாயர் திருப்பாற்கடல் அருகேயுள்ள‌ திருப்பெருந்துறையில் மகா சமாதி அடைந்தார்.
 

Monday, 14 July 2014

மருத்துவச் செய்திகள்!!!

முதலாம் செய்தி:

மஸ்குலர் டிஸ்ட்ரோஃபி ( MUSCULAR DYSTROPHY என்பது  சதை இறுகி செயல்பாடு இழக்கும் நோய். சென்னையில் இயங்கி வரும் MUSCULAR DYSTROPHY ASSOCIATION INDIA [MDA] என்ற அமைப்பு சமீப காலமாக தசை உருக்கி நோய் பற்றிய விழிப்புணர்வை ஊட்டி வருகிறது. சென்னை மாநகராட்சி உதவியுடன் 1A, MODEL SCHOOL ROAD, THOUSAND LIGHTS, CHENNAI [ PH: 9787734448] என்ற முகவரியில் தசை உருக்கி நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக இலவசப்பள்ளி நடத்தி வருகிறது. இவர்களுக்காகவே டிஸைன் செய்யப்பட்ட பேருந்து வசதியும் குழந்தைகளின் தேவையைப்புரிந்து கொண்டு செயல்படும் அற்புதமான ஆசிரியைகளும் அமைந்துள்ள‌ இப்பள்ளி நல்லதொரு சேவையை செய்து வருகிறது.

இரண்டாம் செய்தி:

எங்கள் நண்பரொருவரின் குடும்பத்தில் அவரின் தாயாருக்கு மலக்குடல் கான்ஸர் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. மருத்துவர் கான்ஸரால் வீணாகியிருந்த பகுதியை வெட்டி நீக்கி விட்டு அந்த இடத்தில் அடி வயிற்றில் துளை போட்டு ஒரு டியூபும் பொருத்தி கழிவுகள் அதன் வழியே வெளியேற வழி செய்தார். அந்த டியூபின் நுனியில் ஒரு பை எப்போதும் இணைக்கப்பட்டிருக்கும். தசைகள் இதற்கு உதவ முடியாது என்பதால் செயற்கை முறையில் கழிவுகள் தானாக வெளியேறி அதோடு இணைக்கப்பட்டிருக்கும் பையில் சேகரம் ஆகும். இதை உண‌ரும் நோயாளி தானாகவே அந்தப்பையை அப்புறப்படுத்தவும் மறுபடியும் வேறொரு பையை வயிற்றோடு அந்தத் துளை இருக்குமிடத்தில் கட்டிக்கொள்ளவும் பயிற்சி கொடுக்கப்படுகிறார்.

அந்த அறுபது வயது தாய் பட்ட வேதனைகளை பார்க்க முடியவில்லை. ஆனால் படிப்பறிவில்லாததாலோ என்னவோ, அவர் இந்த வாழ்க்கையை ஏற்றுக்கொள்ள‌ பழகிக் கொண்டார்.  மகன்களிடம் இருக்க மறுத்து, தன் வயல் வேலைகளைப் பார்க்க கிராமத்துக்குக் கிளம்பி விட்டார். இப்போதும் தனியே கிராமத்தில் இருந்து கொண்டு, தன் பிரச்சினைகளையும் சமாளித்துக்கொண்டு, வயல் வேலைகளையும் தினசரி பார்த்து வருகிறார்.

குடல் அறுவை சிகிச்சையில் புகழ் பெற்ற மருத்துவரான டாக்டர் ரங்கபாஷ்யத்திடம் பணி புரிந்த சிஸ்டர் சரோஜா இதற்கு அரிய தொண்டாற்றி வருகிறார். 74 வயதைக் கடந்து விட்டாலும் இப்போதும் பல மருத்துவக்கல்லூரிகளிலும் மருத்துவ மனைகளிலும் இது தொடர்பாகச் சொற்பொழிவு நடத்தி வருகிறார். சாதாரணமாக இந்தப் பைகள் வைத்துக்கொள்ள‌ மாதம் ரூ 500 முதல் 2000 வரை ஆகிறது. காற்று புகாத, வெளியே கசியாத, நாற்றமில்லாத பையை நோயாளியின் வசதிக்கு ஏற்ற மாதிரு உருவாக்க இவர் பெரிதும் உதவியிருக்கிரார்.

STOMA CARE எனப்படும் இதைப்பற்றிய தகவல்கள் அறிந்து கொள்ள‌ www.stomacare.co.in என்ற வலைத்தளத்தை அணுகலாம். தொடர்புக்கு: 93833 39899

மூன்றாம் செய்தி:

இனி ஒரு மருத்துவக்குறிப்பு:

இஞ்சிப்பால்:

ஒரு வேளை ஒருவர் குடிக்கக்கூடிய அளவு:




ஆள்காட்டி விரல் பருமனில் சிறு துண்டு இஞ்சி எடுத்து சீவவும். அதை நசுக்கி முக்கால் தம்ளர் நீரில் கொதிக்க விடவும். இஞ்சியில் சாரம் தண்ணீரில் நன்கு இறங்கியதும் வடிகட்டவும். அரை கப் காய்ச்சிய பாலில் இந்த சாற்றை கலக்கவும்.தேவையான தேன் அல்லது பனங்கல்கண்டு கலக்கவும். இந்தப்பாலை காலை வெறும் வயிற்றில் குடிக்கவும்.

நுரையீரல் சுத்தமாகும்.
சளியை ஒழித்துக்கட்டும்.
வாயுத்தொல்லை என்பதே வராது.
தேவையில்லாத கொழுப்பு கரையும்.
தொப்பை குறையும்
எடை குறையும்
இரத்தக்குழாயின் அடைப்பு கரையும்.
சினைப்பை கட்டிகள், புற்று நோயை குண‌ப்படுத்தும் வல்லமை வாய்ந்தது.

வாய்ப்புண், வயிற்றுப்புண், ஆசன‌வாய்ப்புண் உடையவர்கள் இதைக்குடிப்பதை தவிர்க்க வேன்டும்.