Thursday 21 August 2014

சர்க்கரையுடன் நலமாக வாழ!!

சென்ற வருடம் என் கணவருக்கு மிகுந்த உடல்நலக்குறைவு ஏற்பட்டு அதன் பின் தீவிர சிகிச்சைக்கு பின் பூரண நலமடைந்த விபரம் பற்றி இங்கே என் வலைத்தளத்தில் எழுதியிருந்தேன். அந்த ச்மயம் மன உளைச்சல் காரணமாக என் சர்க்கரையின் அளவு அதிகமாக ஏறத்தொடங்கியது. எந்த விதமான டயட்டிற்கும் மருந்துகளுக்கும் குறையவில்லை.

பொதுவாய் சர்க்கரை வியாதிக்கு ஆரம்ப நிலையில் மெட்ஃபோர்மின் மாத்திரைகள் குறைந்த அள‌வில் கொடுப்பார்கள். பின் சரியான டயட் பின்பற்றாமலிருந்தாலோ, மன உளைச்சல்கள், அளவு கடந்த கார்போஹைட்ரேட் உண‌வுகள் காரணமாகவோ இந்த மாத்திரையின் அளவுகள் அதிகரிக்கும். அதுவும் போதாமல் ஒரு கட்டத்தில் இந்த மெட்ஃபோர்மின் மாத்திரைகளுடன் வீரியம் மிக்க மருந்துகளைக் கலந்து மருத்துவர்கள் தருவார்கள். இவைகளும் பயன்படாத கட்டத்தில் இன்சுலின் தர வேன்டிய கட்டாயத்தில் நோயாளி இருப்பார். பொதுவான நடைமுறை இது தான்.

வெளிநாட்டிலும் தமிழ்நாட்டிலும் அலோபதி மருத்துவர்கள் மாற்றி மாற்றி கொடுத்த வீரியமம் மிக்க மருந்துகள் கூட‌ பலனளிக்காத நிலையில் சகோதரர் கரந்தை ஜெயக்குமார் எங்கள் சந்திப்பின்போது குறிப்பிட்ட ஒரு சித்த மருத்துவரிடம் சென்று பார்க்கலாம் என்று முடிவெடுத்தேன்.

இந்த மருத்துவரைப்பற்றி சகோதரர் ஜெயக்குமார் ஏற்கனவே தன் வலைத்தளத்தில் விரிவாக எழுதியிருக்கிறார். தன் இல்லத்தரசிக்கும் தந்தைக்கும் ஏற்பட்ட உடல் நலப்பிரச்சினைகளை இந்த மருத்துவர் சரி செய்த விதம் பற்றி எழுதியிருப்பதை கீழ்க்கண்ட இணைப்பில் படித்து தெரிந்து கொள்ளலாம்.

http://karanthaijayakumar.blogspot.com/2013/10/blog-post.htmlசித்த மருத்துவர் தம்பையா அவர்கள் தஞ்சையில் அகத்தியர் இல்லத்தில் மருத்துவமனை ஒன்றினை நடத்தி வருபவர். வடலூர் இராமலிங்க அடிகளாரின் பேரடியாராய் அருட்பெருஞ்சோதி அறக்கட்டளை என்னும் பெயரில் அறக்கட்டளை ஒன்றினை நிறுவி, நடத்தி வருபவர். இதைச்சுற்றி அகத்தியர் ஆலயம், இராமலிங்க அடிகளார் தியான மண்டபம் என அமைதி தவழும் இடங்களும் சுவர்களில் வரைந்திருக்கும் சித்தர்களின் பாடல்களும் நம் மனதிற்கு ஒரு இனம் புரியாத அமைதியினைக் கொடுக்கும்.

மதியம் நூறு முதல் 200 பேர்கள் வரை தஞ்சைப் பெரிய கோயிலுக்கு அருகில் உள்ள திலகர் திடலில் ஏழை எளியவருக்கு தினந்தோறும் அன்னதானம் செய்து அவர்களின் பசியாற்றி வருகிறார்.
மருத்துவர் தம்பையா அவர்களிடம் என் பிரச்சினையைச் சொன்னதும் என் கரத்தைப்பற்றி நாடி பிடித்து பார்த்த மருத்துவர் அவர்கள், ' சர்க்கரையை முழுவதும் குணப்படுத்த இயலாதென்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் உடலில் பரவியிருக்கும் நச்சுத்தன்மையை நீக்கி சுத்தம் செய்து விட்டாலே பாதி நோய்கள் மறைந்து விடும். அதைத்தான் உங்களுக்கு நான் செய்யப்போகிறேன்.' என்று கூறி மருந்துகள் கொடுத்தார்கள். கூடவே நான் வழக்கமாக எடுத்து வரும் வீரியம் மிக்க அலோபதி மருந்துகளையும் தொடர்ந்து எடுத்துக்கொள்ளச் சொன்னார்கள்.

கூடவே, பொதுவாய் சர்க்கரை உடலில் அதிகமாகும்போது அதற்காக சில குறிப்பிட்ட மெட்ஃபோர்மின் மருந்துகள் எடுத்துக்கொள்ள‌ நேரும்போது உடம்பில் வயிற்றில் அசிடிட்டியும் அதிகரிக்கிறது. அதனால் வாயு அதிகரிக்கிற‌து. அதன் காரணமாய் உணவில்  பாகல், சுண்டைக்காய், அகத்தி போன்ற கச‌ப்பான காய்களையும் பித்தம் உண்டாக்கும் பீர்க்கையையும் நீக்குமாறும் நாட்டுப்பழங்களை அறவே நீக்குமாறும் சொன்னார்கள்.
20 நாட்களுக்குப்பிறகு சர்க்கரையின் அளவு மெதுவாகக் குறையத்தொடங்கியது. அதன் பிறகு வீரியம் மிக்க அலோபதி மருந்துகள் ஒத்துக்கொள்ளாததால் கொஞ்சம் கொஞ்சமாக அவற்றைக்குறைத்து எடுத்துக்கொள்ளச் சொன்னார்கள். ஒரு கட்டத்தில் அந்த மருந்துகளை முழுவதுமாக நிறுத்த வேண்டியதாயிற்று.  இப்போது சர்க்கரைக்கு ஆரம்ப காலத்தில் எடுத்துக்கொண்ட சாதாரண மெட்ஃபோர்மின் மாத்திரையே எடுத்துக்கொண்டிருக்கிறேன். முன்போல போதிய பழங்கள் சாப்பிட முடிவதோடு, மனதில் அமைதியும் நிறைய வந்து சேர்ந்திருக்கிறது.

ஒரு மருத்துவரிடம் நாம் போகும்போது நமது உடல்நலம் பற்றிய வேதனை, குழப்பம், வலி இவற்றுடன் தான் செல்கிறோம். நம் மனக்கவலையைப்போக்கி, மனதுக்கு தைரியம் கொடுத்து,  நம் சந்தேகங்கள் யாவற்றையும் தன் விளக்கங்களால் தீர்த்து, திரும்பி வரும்போது ஒரு புதிய நம்பிக்கையையும் மனதிற்குக் கொடுப்பது ஒரு சில சிறந்த மருத்துவர்களால் மட்டுமே முடியும். அந்த மாதிரி தன்மையுள்ள ஒரு மருத்துவரை திரு. தம்பையா அவர்களிடம் நான் காண‌ நேர்ந்தது வெகு நாட்களுக்குப்பிறகு மனதுக்கு மிகுந்த நிம்மதியையும் மன நிறைவையும் அளித்தது.

இந்த அனுபவத்திற்குப் பிறகு என் நண்பர்கள், உறவினர்கள் சிலரை மருத்துவர் தம்பையா அவர்களிட்ம் அனுப்பியிருக்கிறேன். அவர்களும் தங்களின் கடுமையான நோயின் தாக்குதல்களிலிருந்து விடுபடத் தொடங்குவதாக சொல்லுவது மனதுக்கு மிகவும் மகிழ்வளிக்கிறது.

இதற்காக மருத்துவர் தம்பையா அவர்களுக்கும் சகோதரர் ஜெயக்குமார் அவர்களுக்கும் மனம் நிறைந்த நன்றியை இங்கே தெரிவித்துக்கொள்கிறேன்!!!

நான் அடைந்த நிம்மதியை பலவிதமான நோய்களின் தாக்குதலினால் வாடி நிற்கும் பலரும் அடைய வேண்டுமென்பதற்காகவே இங்கே என் பிரச்சினையையும் எழுதியிருக்கிறேன். இந்தக் கட்டுரை யாருக்கேனும் பயன்பட்டால் இந்தப் பதிவை எழுதியதற்கான பலன் கிடைத்ததென்று மகிழ்வேன்.

விலாசம்:
டாக்டர் தம்பையா,
அகத்தியர் இல்லம்,
ரத்தினவேல் நகர்,
மாதாக்கோட்டை சாலை,
தஞ்சாவூர்.
இந்த மாதாக்கோட்டை சாலை தஞ்சாவூரிலுள்ள பழைய ஹவுஸிங் யூனிட் அருகே குழந்தை யேசு கோவிலுக்கு எதிரே காவேரி நகருக்கென்று ஒரு சாலை பிரிந்து செல்லும். அந்த சாலையிலேயே பயணித்தால் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் அகத்தியர் இல்ல்ம் என்ற போர்டு இருக்கும். அதிலிருந்து சற்று உள்நோக்கி பயணிக்க வேண்டும்.
மருத்துவர் ஐயா ஞாயிறு தவிர மற்ற‌ கிழமைகளில் காலை நேரங்களில் மட்டுமே வைத்தியம் பார்க்கிறார். முன்கூட்டியே ஃபோன் செய்து விட்டு செல்வது நல்லது.


 

Monday 11 August 2014

நட்பெனும் தொடர்பதிவு!

சில மாதங்களுக்கு முன் அன்பு சகோதரிகள் கீதமஞ்சரி, இளமதி இருவரும் இந்தத் தொடர்பதிவில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்கள். தொடர் அலைச்சல்கள், வேலைச்சுமைகள் என்று இது வரை நேரம் கிடைக்காமல் இருந்தது. ஒரு வழியாக கிடைத்த சிறிது நேரத்தில் இந்தத் தொடர் பதிவிற்கான கேள்விகளுக்கான பதில்களை எழுதுகிறேன்.

1.உங்கள் 100 வது  பிறந்த நாளை எப்படி கொண்டாட விரும்புகிறீர்கள்?

பிறரைச் சார்ந்து வாழ்வது மூப்பின்போது தவிர்க்க முடியாததாய் தொடர ஆரம்பிக்கிறது. புற வலிகள், தள்ளாமை இவற்றுடன் 100 வயது வரை வாழ்ந்திருக்க மிகுந்த மன பலம் வேண்டும். அந்த மன பலம் மனதுக்கு நெருங்கியவர்களின் அன்பினாலும் பரிவினாலும் சகிப்புத்தன்மையினாலும் மட்டுமே கிடைக்கும். அதனால் நூறாவது பிறந்த நாள் என்று ஒன்று வந்தால் அது என் மனதிற்கு இதம் கொடுத்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நாளாக மட்டுமே இருக்கும். பொருள்ளாதார வசதியும் இருந்தால் அவர்களுக்கு சிறந்த பரிசுகள் கொடுக்கும் நாளாகவும் அது அமையும்!!

2. என்ன கற்றுக்கொள்ள விரும்புறீர்கள்?

பிரியசகி சொன்னது போல மனித மனங்களை! மிகச் சாதாரணமானவராக நாம் நினைப்பவரிடம் பேரன்பு ஒளிந்திருப்பதும் நெருங்கியவராய் நாம் நினைப்பவரிடத்தில் துரோகம் ஒளிந்திருப்பதும் வாழ்க்கையின் ரகசியம். இதில் நுழைந்து மனித மனங்களைக் கற்க முயலும்போது தான் ரகசியம் கொஞ்சமாவது புரிபடுகிறது!!
ஓவியம், இசை, சமையல், தையல் மட்டுமே தெரியும். இன்னும் எத்தனைக் கலைகளை கற்க முடியுமோ அத்தனையையும் கற்க வேண்டும்!

3. கடைசியாக சிரித்தது எப்போ? எதற்காக?
  
 கடைசியக எத‌ற்குச் சிரித்தேனென்பது ஞாபகமில்லை.ஆனால் எப்போது நினைத்தாலும் என் பேரன் கேட்ட ஒரு கேள்வி என்னை சிரிக்க வைக்கும். குழந்தைகளுக்கு துக்கமோ, வலிகளோ, எதுவும் தெரியாதல்லவா? தெரிந்தவர் ஒருத்தரின் மரணச்செய்தியைச் சொல்ல உறவினர் ஒருத்தர் என் சம்பந்தி வீட்டுக்கு வந்திருக்கிறார். செய்தியைச் சொல்லி ' அவர் மேலே போய்விட்டார்' என்றிருக்கிறார். இதைக் கவனித்துக்கொன்டிருந்த என் பேரன்   [ பெயர் விமல் ஆதித்யா] ' எப்ப்டி மேலே போனார்? ஃப்ளைட்டில் ஏறிப் போனாரா?" என்று கேட்க, துக்கத்தை சொல்ல வந்தவருக்கே சிரிப்பு வந்ததை தவிர்க்க முடியவில்லை!

4. 24 மணி நேரம் பவர்கட் ஆனால் நீங்கள் செய்வது என்ன?

இப்போதெல்லாம் அறிவித்து விட்டுத்தான் பவர் கட் செய்கிறார்கள். அதனால் முதல் நாளே அடுத்த நாளுக்கு சாப்பிட தயிர்சாதம், புளியஞ்சாதம் செய்து விடுவேன். [ சாப்பட்டுப்பிரச்னை தான் முதல் பிரச்சினை! அதனால் அதை முதலில் சரி செய்து கொள்ள‌ வேண்டும்.]
பின் ரொம்ப நாளாக படிக்க வேண்டுமென்று நினைத்து முடியாமல் தேங்கிக்கொன்டிருந்த புத்தகங்களை தயாராய் எடுத்து வைத்துக்கொள்வேன். இன்வர்ட்டரின் சக்தி தீரும் வரை கணினியில் பிடித்த பாடல்களைக் கேட்பதும் வலைத்தளங்களில் மேய்வதுமாக பாதி நாள் கழிந்து விடும்.
ஆனல் எல்லாவற்றையும் விட ரொம்பவும் சுலபமான விஷ‌யம், ரொம்ப நாட்களாய் போக வேண்டுமென்று விரும்பி, ஆனால் போக முடியாமலேயே இருந்த இடங்கள் அல்லது வெளியூரிலுள்ள உறவினர் வீடுகளுக்குச் செல்வது!

5.உங்களுடைய குழந்தையின் திருமணநாள் அன்று அவர்களிடம் நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?

உணர்ச்சிப்பெருக்கான அன்றைய தினத்தில் மனதின் ஆழத்திலிருந்து ' என்றைக்கும் நீ மகிழ்வுடன் இருக்க வேண்டும்' என்று வரும் சாதாரண வாழ்த்திற்குக்கூட‌ வலிமை அதிகம்!! நானும் அதைத்தான் சொன்னேன்!

6.உலகத்தில் நடக்கும் பிரச்சனைகளை உங்களால் தீர்க்க முடியுமென்றால் எந்த பிரச்சனையை நீங்கள் தீர்க்க விரும்புவீர்கள்.?

அமைதியின்மை!

7.உங்களுக்கு ஒரு பிரச்சனை அதை தீர்க்க யாரிடம் அட்வைஸ் கேட்க விரும்புவீர்கள்.?

பிரச்சினைகளைத் தனியாக சமாளித்த அனுபவங்கள் உண்டென்றாலும் சில சமயங்களில் கணவரும் மகனும் உதவுவது உண்டு!

8.உங்களைப் பற்றி ஒருவர் தவறான செய்தியைப் பரப்புகிறார். 
அதைக் கேள்விப்பட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்?


இளமையில் நிச்சயம் தாக்கம் இருக்கும். இப்போது அது போன்றவற்றையெல்லாம் கடந்து வந்து விட்டதால் இந்த மாதிரி விஷயங்கள் பாதிப்பு ஏற்படுத்தாது. இருப்பினும் தேவையில்லாமல் நம்மைப்பற்றி தவறான செய்திகள் பரவும்போது அதற்கான நடவடிக்கை எடுக்கும் தார்மீகக் கடமை நமக்கு இருக்கிறது.

9.உங்கள் நண்பரின் மனைவி இறந்துவிட்டால்,அவரிடம் என்ன சொல்வீர்கள்?

நண்பர் இறந்து அவரின் மனைவிக்கு ஆறுதல் சொல்லப்போன கொடுமையான அனுபவம் இருக்கிறது. அவரின் இழப்புக்கு என்னவென்று ஆறுதல் கூறுவது? வார்த்தைகளுக்கு அர்த்த்ம் இல்லாத நேஎரங்களில் இதுவும் ஒன்று!

10.உங்கள் வீட்டில் நீங்கள் தனியாக இருந்தால் என்ன செய்வீங்க.?

நிறைய [ கொஞ்ச‌ம் சத்தமாக] பாட்டு கேட்பேன். அதுவும் பி.சுசீலா பாடிய பழைய பாடல்கள், 'கண்கள் எங்கே,  மாலைப்பொழுதின்  மயக்கத்திலே'   போன்ற‌ அமுத  கானங்களை !  

என்னை அன்புடன் அழைத்து என் எண்ணங்கள் சிலவற்றை இங்கே எழுதச் செய்ததற்கு அன்பிற்கினிய கீதமஞ்சரி, இளமதிக்கு என் மனம் கனிந்த நன்றி!!

இந்தத் தொடர்பதிவை தொட‌ர்ந்திட நான் அழைப்பது:

சகோதரிகள்:

1. ப்ரியா-http://wordsofpriya.blogspot.com/
2. ஹுஸைனம்மா  -http://hussainamma.blogspot.ae/
3. நிலாமகள் http://nilaamagal.blogspot.ae/
4. எழில்- http://nigalkalam.blogspot.com/

சகோதரர்கள்:

1. தமிழ் இள‌ங்கோ--http://tthamizhelango.blogspot.com/
2. கரந்தை ஜெயக்குமார்- http://karanthaijayakumar.blogspot.com/
3. சாமானியன்--http://saamaaniyan.blogspot.ae/