Saturday 30 June 2012

நம் உயிர் நமக்குச் சொந்தமா?

வர வர, மருத்துவ மனைகளில் ஏற்படும் அனுபவங்களும் அவற்றைத் தொடர்ந்த அவலங்களும் சங்கிலித் தொடர்களாய் நீண்டு கொண்டே போகின்றன. என் நெருங்கிய சினேகிதியின் அனுபவமொன்று....

இவர் கோவையிலிருக்கிறார். இவரின் கணவருக்கு சர்க்கரை வியாதி இருந்து வந்திருக்கிறது. 3 மாதங்களுக்கு ஒரு முறை பரிசோதனைக்குச் செல்வது வழக்கம். ஒரு முறை, கணவருக்கு தொடர்ந்து 3 நாட்களுக்கு நல்ல ஜுரமும் வலது காலில் வீக்கமும் இருந்திருக்கிறது. மருந்து மாத்திரைகளுக்கு சரியாகவில்லை. அந்த சமயம் இவரின் சகோதரி மகன், தஞ்சையில் மருத்துவராய் இருப்பவர், தொலைபேசியில் நிலைமைகளை அறிந்ததும் காலில் சிறு சிறு கொப்பளங்கள் இருக்கிறதா என்று கண்டறியச் சொல்லியிருக்கிறார். இவரும் அதே போல காலை நுணுக்கமாய் தடவிப்பார்க்க, ஒரே ஒரு சிறு கொப்பளம் கண்ணில் பட்டிருக்கிறது. தன் சகோதரி மகனுக்கு அதை தொலைபேசியில் சொல்ல, அவர் நிச்சயம் சர்க்கரையின் அளவு அதிகமாய் இருக்க வேண்டும் என்று சொல்லி உடனேயே பரிசோதனை செய்யச் சொல்லியிருக்கிறார். பரிசோதனையில் சர்க்கரையின் அளவு முன்னூறுக்கும் மேல் இருந்ததும் உடனேயே தெரிந்த நண்பரொருவரின் மருத்துவமனையில் சேர்த்து வைத்தியம் பார்க்க ஆரம்பித்தார்.

அதன் பிறகு தான் சோதனை தொடர்ந்தது. ஓரிரு நாட்களிலேயே அந்த கொப்பளம் மிகப்பெரியதாக, அதை சுரண்டி சுத்தம் செய்ய ஆரம்பித்தனர் அங்கே. தினமும் சுரண்டி சுத்தம் செய்வதும் பிறகு மருந்து போடுவதுமாக அந்தப் பெரியவருக்கு நரக வேதனை தொடங்கியது. புண் இருந்த இடம் பெரிய குழியாக, மருத்துவ மனையின் தலைமை மருத்துவர், ‘ இந்தக் குழி நன்கு ஆறியதும் தொடையிலிருந்து சதை எடுத்து வைத்துத் தைத்து விடலாம்’ என்று சொல்லவும் என் சினேகிதி சம்மதித்திருக்கிறார். அதைப்போல ஒரு நாள் புண் நன்கு ஆறி விட்டது என்று சொல்லி, அவரை தியேட்டருக்கு அழைத்துச் சென்று மயக்க மருந்து செலுத்தி தொடையிலிருந்து சதை எடுத்திருக்கிறார்கள். சதையைப்பொருத்தப் போகும்போது தான் தெரிந்திருக்கிறது புண் நன்கு ஆறவில்லை என்பதும், புண்ணிலிருந்து நீர் இன்னும் வடிந்து கொண்டிருக்கிறது என்பதும்! வெளியில் வந்து என் சினேகிதியிடம் ‘ புண் ஆறாததால் தோலிலிருந்து எடுத்த சதையை வைத்துத் தைக்க முடியவில்லை. சதையை குளிர்ப்பதன வசதியில் வைத்துப் பாதுகாப்போம். புண் முழுவதுமாக ஆறியதும் அதை வைத்து தைத்து விடுவோம்’ என்று கூறியிருக்கிறார்கள். உடனே என் சினேகிதி அவரை வீட்டில் வைத்தே புண்னை ஆற்றிக் கொண்டு வருகிறேன் என்று சொல்லி கணவரை வீட்டில் வைத்தே மருந்துகளைத்தடவி, சுத்தம் செய்து புண்ணை ஆற்றியிருக்கிறார்.

அதன் பிறகு கணவரை திரும்பவும் அந்த மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்று, அழைத்துச் சென்று, அங்கே மருத்துவர் பரிசோதனைகளுக்குப் பிறகு மறுபடியும் அவரை தியேட்டருக்கு அழைத்துச் சென்று பாதுகாத்து வைத்த சதையைப் பொருத்தி பெரிய கட்டு போட்டு, கொண்டு வந்து கட்டிலில் போட்டு, நான்கு நாட்களுக்குப்பிறகு தான் கட்டைப் பிரிக்க வேண்டும், அதற்குள் சதை பொருந்தி விடும் என்று சொல்லியிருக்கிறார்கள். இடையே வந்து அனைத்து செய்திகளும் அறிந்த அவரின் சகோதரி மகன், ‘ உடனேயே பொருத்தாவிட்டால், குளிர்ப்பதன வசதியில் வைத்தெல்லாம் சதையைப்பொருத்த முடியாது’ என்று சொல்லியிருக்கிறார். அதே போல, நான்கு நாட்களுக்குப்பிறகு, கட்டு பிரிக்கப்பட்டு, பொருந்த முடியாத சதைப்பகுதிகள் கீழே கிடக்க, இவரின் கணவர் பரிதாப நிலையில் இருந்திருக்கிறார். எந்தக் காரணத்தாலோ, மருந்துகள், தொடர்ந்த அதிர்ச்சியான் நிகழ்வுகள் ஒத்துக்கொள்ளாமலோ, அவர் மன நிலையும் பிறழத்தொடங்கி விட்டது. என் சினேகிதியையும் அடையாளம் தெரியாமல் போனது. மன நல மருத்துவரும் அழைக்கப்பட்டு அவர் பங்கிற்கு மருந்துகள் கொடுக்க, என் சினேகிதி கணவருக்கு மேலும் நிலைமைகள் மோசமாகவே, மருத்துவரிடம் கேள்விகள், சண்டைகள் எல்லாம் முடிந்த பின் தன் கணவரை வீட்டுக்கு அழைத்து வந்து விட்டார் என் சினேகிதி.

தெரிந்த நர்ஸ் மூலம் தொடர்ந்து சுத்தம் செய்தலும் மருந்து தடவுவதுமாக கண்காணித்து, புண் முழுவதுமாக ஆறி அந்தக் குழியே மூடி விடும் அளவு அசராமல் கணவரை வைத்துக் கவனித்தாராம். இருந்தாலும் அவர் கணவர் தொடர்ந்து மன நிலை பிறழ்ந்தவராகவே, தொடர்ந்த உளறல் பேச்சுக்களும் என் சினேகிதி உள்பட யாரையும் அடையாளம் தெரியாதவராகவே இரண்டு மாதங்களுக்கு இருந்திருக்கிறார். மெல்ல மெல்ல குணம் அடைந்து, மன நிலையும் சரியாகி, ஆறு மாதங்களுக்குப் பிறகு தன் கணவரை அதே மருத்துவரிடம் அழைத்துச் சென்று மூடிப்போன குழியைக் காண்பித்தாராம்.

அந்த மருத்துவர் ‘ எப்படியம்மா இந்த இடம் குழியே தெரியாமல் மூடிக்கொண்டது? சதையே வைக்காமல் எப்படி மூடிக்கொண்டது? ரொம்ப நன்றாக ஆற வைத்து விட்டீர்களே!’ என்று கேட்டாரம்! எதுவுமே தெரியாதது போல எப்படி அவரால் அந்தக் கேள்வியைக் கேட்க முடிந்தது? சதையை வைத்து தைக்காமலேயே சதை மூடிக்கொள்ளும் என்பது அந்த மருத்துவருக்குத் தெரியாதா? ஒரு சாதாரண குடிமகனால், நிகழ்ந்து விட்ட கொடுமைகளுக்கு சம்பந்தப்பட்ட மருத்துவர் மேல் வழக்கு போட முடியுமா? அதற்கான பொருளாதார வசதியும் பக்க பலமும் இல்லாத பொது ஜனம் என்ன தான் செய்ய முடியும்?

Monday 18 June 2012

தயிர் சாதம்

நல்லதொரு சமையல் குறிப்பு கொடுத்து நாளாகி விட்டதால் இந்த வாரம் முத்துச்சிதறல் சமையல் முத்தாக மலருகிறது.

சாத வகைகளில் புளியோதரை, எலுமிச்சை சாதம், தேங்காய் சாதம், தயிர் சாதம், மாங்காய் சாதம், எள் சாதம், கத்தரிக்காய் சாதம், தக்காளி சாதம் என்று பல வகைகள் உண்டென்றாலும் தயிர் சாதத்தை கடைசியில் ஒரு விழுங்கு விழுங்கினால்தான் நிறைய பேருக்கு ஆத்ம திருப்தியே ஏற்படும். அந்தத் தயிர்சாதத்துக்குத் தொட்டுக்கொள்ள ஏற்ற பக்கத்துணை மாவடு ஊறுகாயா, மாங்காய்த்தொக்கா, நச்சென்ற காரத்துவையலா அல்லது வெறும் சின்ன வெங்காயமா என்ற ஒரு debate  எப்போதும் சாப்பாட்டுப்பிரியர்களிடையே நடக்கும் வழக்கம் இருக்கிறது. மாங்காயை சிறு சிறு துண்டுகளாய் நறுக்கி அதில் பச்சை மிளகாய், இஞ்சியைத் துருவிப்போட்டு உப்பும் சிறிது கலந்து சிறிது நேரம் வைத்திருந்து தயிர் சாதத்துடன் சாப்பிட்டால் வேறு பக்கத்துணையே வேண்டாமென்பார்கள் சிலர். என் ஓட்டு எப்போதுமே மாங்காய் தொக்கிற்குத்தான்!

நல்ல வெயில் கொளுத்தும் இந்த ஆனி மாதத்தில் தயிர் சாதம் போன்றதொரு அருமையான, ஆரோக்கியமான உணவு வேறேதுமில்லை. அதனால் தயிர் சாதம் பற்றித்தான் குறிப்பு கொடுக்கப்போகிறேன்.

தயிர் சாதம் என்பது வெறும் தயிரை மட்டும் கிளறி, கடுகு காயம் தாளித்து வைப்பதல்ல. அதை சுவை படச் செய்வதற்கு பல விஷயங்கள் இருக்கின்றன.


தயிர் சாதத்திற்கு தேவையான பொருள்கள்:

பச்சரிசி- 1 கப்

பால்- 1 கப்

தயிர்- 1 1/2 கப்
நல்லெண்ணெய்- 2 ஸ்பூன்

பெருங்காயத்துண்டு- சிறியது

கடுகு- 1 ஸ்பூன்

பச்சை மிளகாய்-2

இஞ்சி- ஒரு சிறு துண்டு

கறிவேப்பிலை- 1 கொத்து

தேவையான உப்பு
 செய்முறை:
 பாலை தண்ணீர் சேர்க்காமல் காய்ச்சி ஆற வைக்கவும். நல்ல பால் கிடைக்காதவர்கள் ஒரு கப் தண்ணீரில் 5 ஸ்பூன் பால் பவுடர் சேர்த்துக் கரைத்து காய்ச்சலாம். சுவையில் எந்த மாற்றமும் இருக்காது. தமிழ்நாட்டில் அமுல்யா பால் பவுடர் நன்றாக இருக்கும். வெளி நாட்டில் இருப்பவர்கள் நிடோ, ரெயின்போ, டானா என்று எந்த பால் பவுடர் வேண்டுமானாலும் சேர்த்துக் காய்ச்சலாம்.
 பச்சரிசியை நன்கு கழுவி பாலும் 2 கப் நீரும் சேர்த்து குக்கரில் வேக வைக்கவும்.
 ஆறியதும் உப்பு, தயிர் கால் கப் சேர்த்து நன்கு குழையக் கலக்கவும்.
 சாதம் குழைவாகவும் தளர்வாகவும் இருக்க வேண்டும்.
 சாதத்தை இரவு அப்படியே வைக்கவும்.
 காலையில் சாதத்தில் எல்லா தயிரையும் கலந்து கிளறவும்.
 பச்சை மிளகாயையும் இஞ்சியையும் சற்று பெரிய துண்டுகளாக அரிந்து சேர்க்கவும்.
 கறிவேப்பிலையைக் கிள்ளிப்போடவும்.
 போதிய உப்பை சேர்த்துக் கிளறவும்.
 ஒரு சிறிய வாணலியில் நல்லெண்ணெயை ஊற்றி அடுப்பில் வைக்கவும்.

எண்ணெய் சூடானதும் கடுகைப்போடவும்.
 கடுகு வெடித்ததும் காயம் போட்டுப் பொரிந்ததும் தயிரில் இந்தத் தாளிதத்தைக்கொட்டவும்.
 நன்கு கலந்து சிறிது நேரம் வத்திருந்து பிறகு உபயோகிக்கவும்.

பின்குறிப்பு:

பொதுவாய் தயிர் சாதத்தில் காரட், சிறிய வெங்காயம், மாதுளை முத்துக்கள் சேர்ப்பதுண்டு. அவைகளை சேர்ப்பது தயிர் சாதத்தின் சுவையை சிறிது மாற்றி விடும்.
 மாங்காய்த்துண்டுகள் மட்டுமே சுவையை மாற்றாமலிருக்கும்.





Tuesday 5 June 2012

வைர முத்துக்கள்!!


தேவகோட்டையைச் சேர்ந்த திரு. சோம.வள்ளியப்பன் சிறந்த அறிஞர். BA பொருளாதாரம், மற்றும் MBA வில் மனித வளமும் படித்திருக்கும் வள்ளியப்பன் ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ், தாஜ் இண்டர் காண்டினெண்டல் ,BHEL, பெப்சி, வெர்ல்பூல், டாக்டர் ரெட்டீஸ் பவுண்டெஷன் போன்ற் நிறுவனங்களில் பணிபுரிந்தவர்.
தினமணி நாளிதழிளில் இவர் 4 ஆண்டுகள் தொடர்ந்து நடுப்பக்க கட்டுரைகள் எழுதியிருக்கிறார். ஆனந்த விகடன், குமுதம், நாணயம் விகடன் அமுதசுரபி, நமது நம்பிக்கை போன்ற இதழ்களில் தொடர்கள் எழுதியிருக்கிறார்.

இவர் எழுதிய, அள்ள அள்ளப் பணம் ( 4 பாகங்கள்) என்ற பங்குச் சந்தை பற்றிய புத்தகம் விற்பனையில் சாதனை படைத்துவருகிற புத்தகமாகும்.  சன், சன் நியூஸ், ஜெயா, ஜெயாபிளஸ்,விஜய், பொதிகை தொலைக் காட்சி கலைஞர், கலைஞர் செய்திகள், நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று, பங்குச் சந்தை பற்றியும் மனிதவள மேம்பாடு குறித்தும் தொடர்ந்து பேசி வருகிறார். சமீபத்தில் இவர் எழுதிய ‘ தடையேதுமில்லை’ என்ற அருமையான புத்தகத்தைப் படித்தேன். அதனின்றும் சில துளிகள்...
1.   நாம் இன்றிருக்கும் நிலை நிச்சயமானதா? இந்த இடம், இருப்பு, சூழ்நிலை மாறினாலும் நாம் தனியாகவோ, அல்லது வேறு இடம், சூழ்நிலையிலும் பரிமளிக்க, ஜொலிக்கக்கூடியவர்களா? நாம் வெப்பத்தை தானே உமிழும் சூரியனா? அல்லது பிற கிரகத்திலிருந்து வெப்பத்தை வாங்கி உமிழும் நிலவா? நாம் வைரமா? அல்லது சாதாரணக்கல்லா? மாறி வரும் உலகில் எதுவும் நிச்சயமில்லை. அதனால் எங்கேயும் எப்போதும் மதிப்பு பெறும் வைரக்கற்களாய் நம்மைத் தயாரித்து வைத்துக்கொள்வது அவசியமல்லவா?
2.   எப்போது வேண்டுமானாலும் திடீரென்று வரக்கூடிய, தற்சமயம் கண்ணுக்குத் தெரியாத சந்தர்ப்பங்களுக்காக தன்னை தயாரித்துக்கொள்ளுகிறவர்கள் வெற்றி பெருகிறார்கள். சந்தர்ப்பம் வந்த பிறகு தான் தயாரிக்க முடியும் என்பவர்களுக்காக சந்தர்ப்பங்கள் காத்திருப்பதில்லை.
3.   Demand excellence, you will get excellence என்பார்கள். மிகச் சிறந்தவற்றையே நாம் நம்மிடம் கேட்க வேண்டும். கேட்டது நிச்சயம் கிடைக்கும்.
4.   நம்மை விடச் சிறப்பானவர்கள் மத்தியில் இருப்பது, நம்மிடம் பழகுபவர்களிடம், அவர்கள் செய்து கொண்டிருப்பதை விட மேலானவற்றைக் கேட்பது, நம்மிடமிருந்து நாமே அதிகமாய் எதிர்பார்ப்பது போன்றவை நமது செயல்பாடுகளும் அவற்றின் தரமும் அதிகரிக்க வழி வகுக்கும்.
5.   பிறர் சொல்வதைக்கேட்க 25% புரியும். செய்வதைப்பார்க்க 50% புரியும். நாமே செய்து பார்க்கும்போது தான் 75% லிருந்து 100 % வரை புரியும்.
6.   வாழ்க்கைப் பயணம் முழுவதும் தெளிவான இலக்குகளைத் தேடி வகுத்துக்கொண்டு, அவற்றை அடைய முயற்சிப்பதில்தான் வாழ்க்கை பயனுள்ளதாகவும் சுறுசுறுப்பானதாகவும் அமைகிறது.
7.   பலவீனங்களை சரி செய்வதையும் விட, அவற்றைப்பற்றிக் கவலைப்படுவதை விட, நமது பலங்களை அதிகரிக்கலாமே?
8.   எடுத்த செயலினை முடிப்பது, எத்தனை முறைகள் வீழ்ந்தாலும் தளர்வதில்லை. எத்தனை தடைகள், இடையூறுகள் வந்தாலும் விடுவதில்லை. இந்த மாதிரியான விடாமுயற்சி தான் வாழ்க்கையில் மிகவும் வெற்றிகரமாக இருக்க உதவுகிறது.
9.   செய்து கொண்டிருப்பது எதுவாக இருந்தாலும் அதை இதயப்பூர்வமாகச் செய்யும்போது, முயற்சிகள் தொடரும்போது, அதன் முடிவு வெற்றியைத்தவிர வேறு எதுவாக இருக்கும்?
10. எண்ணங்களே செயல்களாகின்றன. எந்த தாவரத்தின் விதை பூமியில் விழுகிறதோ, அந்த தாவரம் முளைத்து மரமாகின்றது. மனதின் எண்ணங்களும் அப்படியே. முளைத்து வளர்கின்றன. பிரச்சினை தரும் எண்ணங்களை ஆரம்பத்திலேயே இனம் கண்டு பிடித்து வெளியேற்றி விட வேண்டும்.
11. வெற்றிகரமான வாழ்க்கைக்கு முக்கியத் தேவைகள்:

எந்தக் காலக்கட்டத்திலும் நமது உணர்வுகளைத் தைரியமாகச் சொல்லுதல்.
அடுத்தவர் உணர்வுகளையும் உரிமையையும் மதித்தல்.
உதட்டளவில் இன்றி உண்மையாக அன்புடன் இருத்தல்.
மற்றவர்களின் பலவீனங்களையே கவனிக்காமல் அவர்களின் பலங்களைக் கவனித்து அதற்கு முக்கியத்துவம் கொடுப்பது.
மற்றவர்கள் நம்மைப்போலவே சிந்திக்க வேண்டும், பேச வேண்டும், பழக வேண்டும் என்று எதிர்பார்க்காமல் அவர்கள் அப்படி இருப்பது அவர்களின் உரிமை என்று நம்புதல்.
மற்றவர்கள் மீது நம்பிக்கை காட்டுதல்.