Monday 31 August 2015

முத்துக்குவியல்-38!!

மருத்துவ சமையல் முத்து:

மலச்சிக்கல், வாயு, வாதம், குணமாக -:

மூன்று நாட்களுக்கு ஒருமுறை முடக்கற்றான் இரசம் வைத்துச் சாப்பிட்டு வந்தால்உடலிலுள்ள வாய்வு கலைந்து வெளியேறி விடும். வாய்வு, வாதம்,மலர்ச்சிக்கள் சம்பந்தப் பட்ட எல்லாக் கோளாறுகளும் நீங்கும்.ஒரு மருத்துவர் எனக்குச் சொல்லிக்கொடுத்ததை/செய்து கொடுத்ததை கீழே சமையல் குறிப்பாக பகிர்ந்திருக்கிறேன். இம்முறையில் செய்தால் சுவை அபாரமாக இருக்கும்!!

முடக்கற்றான் ரசம் செய்யும் முறை:

ஒரு பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் எண்ணெய், ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி ஒரு கிராம்பு போட வேண்டும். கிராம்பு நுரைத்து வரும்போது 6 தம்ளர் தண்ணீர் ஊற்ற‌ வேண்டும். அரிந்த சின்ன வெங்காயம் அல்லது பெரிய வெங்காயம் அரை கப், அரிந்த தக்காளி ஒரு கப், நசுக்கிய இஞ்சி 1 ஸ்பூன், நசுக்கிய பூண்டிதழ்கள் 1 ஸ்பூன், புதினா இலைகள் சில, மல்லி இலைகள் சில, கறிவேப்பிலை ஒரு ஆர்க், ஒரு கை முடக்கற்றான் இலைகள் இவற்றைப் போட்டு கொதிக்க விடவும். உப்பு, மஞ்சள்தூள் போடவும். அரை ஸ்பூன் சீரகம், அரை ஸ்பூன் மிளகு, அரை ஸ்பூன் சோம்பு கரகரப்பாகப்பொடித்துச் சேர்க்கவும். நன்கு கொதித்து இலைகள் நிறம் மாறுகையில் தீயை நிறுத்து ரசத்தை வடிகட்டவும். இது மிகவும் சுவையாக இருக்கும்!!

உயர்ந்த முத்து:

இந்த‌ முத்துவிற்கு ஒரு சல்யூட்!
கெளசல்யா ராமசாமி திருமணமான 20 வயதில் கணவர் மூலம் எய்ட்ஸ் பரவி அதனால் வலிகளுக்கும் அல்லல்களுக்கும் ஆளானவார். தன்னை அலட்சியம் செய்த புகுந்த வீட்டுக்கெதிராக தன் நோயை வெளிப்படையாக அறிவித்து தன் உரிமைகளுக்காகப் போராடியவர். கணவரை விட்டு விலகி, நோயின் கடுமையால் கர்ப்பப்பையை நீக்கி, உயிர் வாழ மருந்து, மாத்திரைகள் வாங்குவதற்காக தான் ப்ளஸ்டூவில் நர்ஸிங் படித்திருந்ததால் எய்ட்ஸ் குறித்த விழிப்புண‌ர்வுக்காக இயங்கிய அமைப்பில் சேர்ந்து தன்னைக் காப்பாற்றிக்கொண்டவ‌ர். தான் பட்ட துன்பங்கள் மற்ற‌வர்கள் அனுபவிக்கக்கூடாது என்ற நினைப்பில் இவரைப்போல பாதிக்கப்பட்ட 3 பெண்களுடன் சேர்ந்து என்ற அமைப்பை நிறுவியவர். இந்தில் எய்ட்ஸ் பாதிப்பு ஏற்பட்ட பெண்களுக்கான முதல் அமைப்பு இது. 20000 உறுப்பினர்கள் இயங்கிக்கொண்டிருக்கும் ஆசியாவிலேயே மிகப்பெரிய அமைப்பும்கூட! எய்ட்ஸ் பாதிப்பு ஏற்பட்ட விதைவைகளூக்கான அரசு உதவிப்பணம் பெறும் வயது வ‌ரம்பை 45லிருந்து 18ஆகக் குறைக்கச் செய்தது, இந்தியா முழுவதும் எய்ட்ஸ் நோயாளிக்காக இலவச மருந்துகள் கிடைக்க‌ச் செய்தது போன்றவை இந்த அமைப்பின் சாதனைகள். இந்த அமைப்பிலுள்ள‌ பெண்மணிகளுக்காக வேலை வாய்ப்புக்கள் வாங்கித்தருவது, சட்ட ரீதியான சிக்கல்களைத்தீர்ப்பது, அவர்களுக்கான பயிற்சிகள் கொடுப்பது என சுறுசுறுப்பாக இயங்குகிறது இந்த அமைப்பு. இவர் இந்தியக் குடியரசுத்தலைவரால் சாதனைப்பெண்களுக்காக வழங்கப்ப‌டும் 'நாரி புரஸ்கார் விருது' வழங்கப்பட்டு கெளரவிக்கப்பட்டவர்.  ரீடர்ஸ் டைஜஸ்ட் வழங்கிய ' ஆசியாவிலேயே சிறந்த சமூக சேவகி விருது, என்று பத்துக்கும் மேற்பட்ட விருதுகள் பெற்றவர்.

ரசித்த முத்து:

மறுபடியும் எனக்கு மிகவும் பிடித்த ஒரு பாட்டு. கூடவே பிடித்த, ரசித்த காட்சியும் கூட! ஜேசுதாசும் சித்ராவும்  மிகவும் அனுபவித்துப் பாடியிருக்கும் மிகவும் இனிமையான பாடல்! நீங்களும் ரசியுங்கள்!
ம‌ருத்துவ முத்து:

இதயத்தில் ஏற்படும் ரத்தக்குழாய் அடைப்பால், இதயத்துக்கு செல்லும் ரத்தம் ஓட்டம் தடைபடுகிறது. இதனால் நெஞ்சுவலி, இதயம் பலவீன மடைதல் மற்றும் மாரடைப்பு ஏற்படுகிறது. இதயத்தின் ரத்தக் குழாய் அடைப்புக்கு பைபாஸ் அறுவைச் சிகிச்சை அல்லது ஆஞ்சியோபிளாஸ்டி செய்வதே தீர்வாக இருந்தது.

தற்போது அறுவை சிகிச்சையின்றி ஒரு புதிய தீர்வொன்று வந்துள்ள‌து. இந்த புதிய சிகிச்சை முறையின் மூலம் ரூ.80 லட்சத்தில் வாங் கப்பட்ட நவீன கருவியின் (Enhanced External Counter Pulsation - E.E.C.P) மூலமாக கால்களில் உள்ள ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தி இதயத்தை நோக்கி ரத்தம் செலுத்தப்படும். தினமும் ஒரு மணி நேரம் வீதம் தொடர்ந்து 35 நாட்கள் இவ்வாறு சிகிச்சை அளிக்கப்படும். இதன் மூலம் ரத்தக்குழாய் அடைப்பை சுற்றி புதிதாக ரத்த நாளங்கள் உருவாகும். இந்த புதிய ரத்த நாளங்கள் மூலமாக இதயத்துக்கு சீராக ரத்தம் செல்லும். இதனால் நெஞ்சுவலி, இதய பலவீனம், மாரடைப்பு போன்ற அனைத்து பிரச்சினைகளும் தீரும். நோயாளி கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சைப் பெற வேண்டியதில்லை.

கடந்த ஒன்றரை ஆண்டுகளில் மட்டும் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சுமார் 600 நோயாளிகளுக்கு இந்த புதிய முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இரண்டாவதாக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைகளில் இந்த புதிய சிகிச்சை முறை தொடங்கப்படுகிறது. விரைவில் படிப்படியாக அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் புதிய சிகிச்சை முறை தொடங்கப் படும்.தனியார் மருத்துவமனையில் ரூ.1 லட்சம் வரை செலவாகும் இந்த சிகிச்சை, அரசு மருத்து வமனைகளில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் இலவசமாக செய்யப்படுகிறது.


 

Tuesday 25 August 2015

கண்ணின் மணியே!

ஒரு மாதத்திற்கு முன்னால் வலது கண்ணில் காடராக்ட் அறுவை சிகிச்சை செய்து கொண்டேன். அதைப்பற்றி தெளிவாக முடிந்த போது எழுதுமாறு சகோதரர் தமிழ் இளங்கோ எழுதியிருந்தார்கள். கண்ணில் தொடர்ந்து 45 நாட்கள் சொட்டு மருந்து போட வேண்டுமென்பதாலும் அறுவை சிகிச்சை நடந்த கண்ணில் கொஞ்சம் கொஞ்சமாக பார்வைத்திறன் அதிகரிப்பதாலும் பார்ப்பதிலும் எழுதுவதிலும் வித்தியாசங்கள் இருந்தன. அதனாலேயே அவ்வளவாக இணையத்திற்கு வர இயலாமல் இதுவரை இருந்து வந்தேன். ஒரு வழியாக சொட்டு மருந்து உபயோகம் இப்போது தான் முடிந்தது!

இனி கண் அறுவை சிகிச்சை பற்றி.....!

நம் எல்லோர் கண்களிலும் இயற்கையாகவே லென்ஸ் இருக்கிறது. அதன் வழியாக ஒளிக்கதிர், பின்னாலுள்ள விழித்திரையில் விழும்போது, நம்மால் பார்க்க முடிகிறது. இந்த லென்ஸ் வெளுத்துப்போய், வெளிச்சத்தைக் கண்ணுக்குள் புகாமல் தடுக்கும்போது, அதைக் கண்புரை அல்லது காடராக்ட் என்கிறோம். லென்ஸில் மாசு படிந்து ஒளி ஊடுருவும் தன்மை இழந்து பார்வை படிப்படியாக குறைகிறது. நீங்கள் மருத்துவரிடம் சென்றால் கூட அவர் இன்னும் நன்கு வளரட்டும் என்பார். கண் புரை ஏற்படும்போது படிப்பதிலும் எழுதுவதிலும் கொஞ்சம் கொஞ்சமாக சிரமங்கள் அதிகரிக்கும். அந்த சிரமங்கள்  கணினி எதிரே அமரும்போது நன்றாகவே தெரியும்.கண் புரையை அகற்ற (அதாவது காடராக்டை குணப்படுத்த) அறுவை சிகிச்சை ஒன்றே தீர்மானமான வழி. பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், இன்னும் மிகச்சரியான மருந்துகள் காடராக்ட் வராமல் தடுக்கவோ, குணப்படுத்தவோ கண்டுபிடிக்கப்படவில்லை என்கிறார்கள்.செயற்கை லென்ஸைப் பொருத்தி, சிகிச்சை அளித்துப் நல்ல பார்வையைப் பெற முடிவது மட்டுமே சிறந்த வழி.
அறுவை சிகிச்சைக்கு முன் ஒரு நாள் வரச்சொல்லி கண்களின் அளவு, நம் பார்வைத்திறன் முதலியவற்றை பரிசோதிக்கிறார்கள். இந்த அளவுகள் நமக்கு சரியான பார்வைக்கான லென்ஸ் பொருத்த மருத்துவருக்கு உதவியாக இருக்கின்றன. கண்கள் ஸ்கான் செய்யப்படுவதுடன் கண்கள் கீழ் உள்ள சிறு பைகள், சிறு சிறு குழாய்கள் பரிசோதிக்கப்படுகின்றன. பின் இஸிஜி, இரத்தப்பரிசோதனைகள் செய்கிறார்கள்.

அறுவை சிகிச்சை செய்வதற்கு முதல் நாள் அட்மிட் ஆவது நல்லது. இரவு நல்ல தூக்கம் அவசியம் என்கிறார்கள். உள்ளூரில் உள்ள‌வர்கள் என்றால் விடியற்காலையில் அட்மிட் ஆகலாம். முதல் நாள் காலையிலிருந்தே மருத்துவர்கள் சொல்லும் சொட்டு மருந்துகளை போட்டு வர வேண்டும்.
அறுவை சிகிச்சை நடக்கும் முன் கண்ணின் கீழ் ஒரு ஊசி போடப்ப்படுகிறது. இது கண்னை சிறிது நேரம் உணர்வற்ற நிலையில் வைத்திருப்பதால் மருத்துவருக்கும் நோயாளிக்கும் அறுவை சிகிச்சை நடக்கும்போது எந்த‌ சங்கடமும் இருப்பதில்லை.

ஃபேகோ எமல்ஸிஃபிகேஷன் என்பது அல்ட்ரா சவுண்ட் முறையில்,  கண் பார்வையை மறைக்கும் புரை அல்லது படலத்தை, சிறு துவாரம் வழியாகக் கரைத்து விட்டு, அதே துவாரம் வழியாகவே லென்ஸைக் கண்ணுக்குள், தையல் இல்லாமல் பொருத்துவது தான்.இம்முறையில் கண்ணில் 5 மில்லி மீட்டர் அளவிற்கு சிறிய துவாரம் போடப்படுகிறது. அல்ட்ராசோனிக் அலைகள் (Ultrasonic waves) உதவியுடன் புரை லென்ஸ் சிறு துகள்களாக உடைக்கப்பட்டு, ஊசியின் உதவியுடன் வெளியே எடுக்கப்படுகிறது. பிறகு இதற்காகவே சிறப்பாக செய்யப்பட்ட ஐ.ஓ.எல் லென்ஸ் கண்ணில் பொருத்தப்படுகிறது. சிறிய துவாரத்தின் வழியே அறுவை சிகிச்சை செய்யப்படுவதால் தையல் போட வேண்டிய அவசியம் இல்லை. காயம் விரைவில் குணமாகிவிடும்.
 
சிறிய துவாரத்தின் வழியே அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. தையல் போடத் தேவையில்லை. கண்ணில் எரிச்சல் ஏற்படாது. நீர் வடியாது, தையல் பிரிக்கும் அவசியமும் ஏற்படாது. அதிக நாட்கள் ஓய்வு எடுக்கத் தேவையில்லை. விரைவில் பணிகளைச் செய்யமுடியும்.

ஒரு சில நோயாளிகளுக்குத் தெளிவான பார்வைக்கு கண்ணாடி அணிய வேண்டிய அவசியம் ஏற்படலாம். சிகிச்சை முடிந்த அன்றே அல்லது நம் கண்களின் நிலைமையைப்பொறுத்து மறு நாள் வீடு திரும்பி விடலாம்.  அடிக்கடி பரிசோதனைக்கு வரவேண்டிய அவசியம் இல்லை. ஒருமுறை மட்டும் மறு பரிசோதனைக்கு சென்றால் போதுமானது. ஒரு மாதத்திற்குப் பின் நிலையான பார்வையைப் பெறலாம். அறுவை சிகிச்சை முடிந்து ஒரு வாரம் கழித்து தொலைக்காட்சி பார்க்கலாம். புத்தகம் படிக்கலாம். 45 நாட்கள் வரை சொட்டு மருந்து போட்டு வர வேண்டும் என்பது தான் நாம் உபயோகிக்க வேன்டிய ஒரே மருந்து.

இது போலவே எனக்கும் நடந்தது, கண்கள் முழுமையான பார்வைத்திற‌னை அடைய ஒரு மாதம் பிடிக்கிறது.

கண்ணாடி அணிந்திருப்பவர்கள், அதுவும் மைனஸ் பவர் உள்ள‌வர்களுக்கு ஒரு கண்ணில் அறுவை சிகிச்சை முடிந்து முழுமையான பார்வைத்திறனை திரும்பப் பெற்றாலும் அறுவை சிகிச்சைக்கு ஆட்படாத இன்னொரு கண்ணில் பவர் வித்தியாசம் அதிகம் இருந்தால் பார்வை வித்தியாசப்படும். படிப்பதிலும் சற்று சிரமம் ஏற்படும். அதனால் அந்தக் கண்ணில் கொஞ்சமாக காடராக்ட் வளர்ந்திருந்தாலும் ஒரு மாதத்துலேயே அறுவை சிகிச்சை செய்து கொள்வது நல்லது. அப்போது தான் இரண்டு கண்களிலும் சமமான பார்வைத்திறன் கிடைக்கும். அப்போது தான் படிப்பதற்கு கண்னாடி போட வேன்டுமா, வேண்டாமா என்பதை தீர்மானம் செய்ய முடியும்.

இதில் முக்கியமான சில விஷயங்கள்:

1. இரத்தப்பரிசோதனைகள்  மற்றும் ஸ்கான்கள், கண் பரிசோதனைகள் செய்யும்போது, நீங்கள் சர்க்கரை நோய் உள்ள‌வராக இருந்தால், இந்த பரிசோதனைகள் செய்யும்போது உணவருந்தி இரண்டு மணி நேரம் ஆகியிருந்தால் உங்களுக்கு சர்க்கரை கொஞ்சம் கொஞ்சமாக் குறைய ஆரம்பிக்கும். அதற்கேற்ப, உங்களை எல்லா இடங்களுக்கும் அழைத்துச் செல்பவரிடம் சொல்லி முதலில் சர்க்கரை நோய்க்கான இரத்தப்பரிசோதனையை செய்து விடுங்கள். அதன் பின் ஏதாவது சாப்பிட்டு விட்டு மற்ற பரிசோதனைகள் செய்து கொள்ளலாம். உங்களுக்கு சோர்வு ஏற்படாது.

2. இன்ஷூர் செய்து கொண்டவராக இருந்தால் அதற்கான க்ளைய்ம் செய்து கொள்ள‌லாம்.

3. சில கண் மருத்துமனைகளில் கண்ணை உணர்வற்ற‌ நிலைக்கு ஆட்படுத்தாமலேயே அறுவை சிகிச்சை செய்கிறார்கள். அது உங்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தும். மருத்துவருக்கு ஒத்துழைப்பு கொடுப்பதிலும் சிரமம் ஏற்படும். அதனால் உங்களுக்கு முதல் கட்டப்பரிசோதனைகள் செய்யும்போதே அறுவை சிகிச்சையின் போது கண்ணை உணர்வற்ற‌ நிலைக்கு ஆட்படுத்தித்தான் அறுவை சிகிச்சை நடக்குமா என்பதை கேட்டு நிச்சயப்ப‌டுத்திக்கொள்ளுங்கள். என் தோழி ஒருவருக்கு எந்த ஊசியும் போடாமலேயே அறுவை சிகிச்சை நடந்து அவர் பெரிய்தும் அவதிக்குள்ளானார்.

பட உதவி: கூகிள்

Saturday 15 August 2015

பழமொழிகளும் அவற்றுள் மருத்துவமும்!

அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!!

வயதானவர்கள் அதுவும் கிராமத்துப்பெண்மணிகள்  சாதாரணமாகப் பேசும்போதே அழகழாய் பழமொழிகளை இடையிடையே உதிர்ப்பார்கள். அத்தனைக்கும் நமக்குப் பொருள் விளங்காது. அதுவும் சிறிய வயதில் சுத்தமாகப்புரியாது. வயதாக வயதாக அவைகளின் அர்த்தங்கள் ஆழமாகப்புரியும்போது மிகவும் பிரமிப்பாக இருக்கும். இவர்களெல்லாம் எங்காவது பள்ளி சென்று படிக்கவா செய்தார்கள்? அனுபவ மொழிகள் தான் அவை. அப்படியான‌ பழமொழிகளும் அவற்றுக்கு மருத்துவ பலன்கள், அர்த்தங்கள் அடங்கிய புத்த‌கம் சமீபத்தில் எனக்குக் கிடைத்தது.

புத்தகத்தின் பெயர்: வாய்மொழி இலக்கியமும் பாரம்பரிய மருத்துவமும்.

ஒரு மருத்துவர் எனக்கு அன்பளிப்பாகக் கொடுத்தார். படிக்கப்படிக்க அத்தனையும் பிரமிப்பாக இருந்தது எனக்கு! அதில் சில துளிகள்....தென்னை வைத்தவன் தின்னு சாவான்
பனை வைத்தவன் பார்த்து சாவான்


பண்டைய காலத்தில் கோவில்களைக் கட்டிய போது அதனுள் ஸ்தல விருட்சங்களாக மூலிகை மரங்களையும் நட்டு வைத்தார்கள் நம் முன்னோர்கள். அதன் காரணங்களை அறிந்தால் வியப்பாக இருக்கிறது. ஒவ்வொரு மரத்திற்கும் இத்தனை ஆண்டுகள் உயிர் வாழும் என்ற கணக்கு இருக்கிறதாம். அதை வைத்து இந்தக் கோயில் கட்டி முடித்து இத்தனை ஆண்டுகள் ஆயின என்பதைப் பிற்கால சந்ததியினர் தெரிந்து கொள்ள‌வும் ஒவ்வொரு மரத்திலிருந்தும் பிராண‌ன், வியானன் போன்ற உயிர் சக்திகக்ள் கிடைப்பதால் அதை சுவாசித்து மக்கள் நலமுடம் பெரு வாழ்வு வாழ வேண்டுமென்பதற்காகவும் இப்படி ஸ்தல விருட்சங்கள் நட்டு வளர்க்கப்பட்டதாம்! உதாரணத்திற்கு தாளிப்பனை என்ற ஒரு வகை பனை மரம் 1000 ஆண்டுகள் உயிர் வாழும் தன்மையுடையதாம். விதை ஊன்றியதிலிருந்து அது வளர்ந்து மரமாகி காய்த்து பலன் கொடுக்க ஆரம்பிக்கும்போது ஆயிரம் ஆண்டுகள் ஆகி விடுமாம். இந்த வகை பனை ஓலைகளில் தாம் நம் முன்னோர்கள் ஓலைச்சுவடிகளாய் பயன்படுத்தி அற்புதமான பாடல்களையும் வைத்திய முறைகளையும் எழுதி விட்டுச் சென்றிருக்கிறார்கள். ஆனால் தென்னை குறுகிய காலத்தில் ஐந்து ஆண்டு முதல் ஏழு ஆண்டுகளுக்குள் பூத்து காய்க்கத்தொடங்கி விடும். ஆனால் பனை மரமோ பூத்து காய்க்க பதினைந்து முதல் இருபது வருடங்களாகி விடும். அதனால் தான் தென்னை குறுகிய காலத்தில் பலன் தருவதால் அதன் பலனைப்பெற்று தின்று சாவான் என்றும் பனை பல ஆண்டுகள் கழித்து பலனைத்தருவதால் பலனை அடைய முடியாமல் பார்த்து சாவான் என்றும் வந்தது பழமொழி!

ஆனைக்கு ஒரு காலம் வந்தால்
பூனைக்கு ஒரு காலம் வரும்.


அக்காலத்தில் வாழ்ந்த சித்தர்கள் நாம் உண்ணும் முறை, உறங்கும் காலம், அவற்றை நெறிப்படுத்துதல் போன்ற பல விந்தையான விஷயங்களை தொகுத்து வழங்கியுள்ளார்கள். நாம் உண்ணும் உணவு சீரணமாக எவ்வளவு நேரத்தை உடல் எடுத்துக்கொள்ளும், ஒரு கரு உண்டானால் அது வளர்வதற்கு எத்தனை காலம் எடுத்துக்கொள்ளும் என்பதையெல்லாம் தெளிவாக எடுத்துக்கூறியுள்ளார்கள். நாம் பிறந்தது முதல் இறக்கும் காலம் வரை எட்டு பருவங்களாகப்பிரித்து ஒவ்வொரு பருவத்துக்குமான சிறப்பையும் விளக்கிக் கூறியுள்ளார்கள். முப்பது வயது வரை உடல் செல்கள் வளர்ச்சிக்காலம் என்பதால் முப்பதிற்குள் திருமணம் செய்ய வேண்டுமென்றும் கூறியிருக்கிறார்கள்.
முப்பது வ‌யதிற்குள் செரிமானமாகாத உணவுகள் சாப்பிட்டாலும் கூட செரித்து விடுமாம்.  ஆ+நெய் என்பது பசு நெய். இது ஒன்று முதல் முப்பது வயது வரை உண்டு உடலை பலமுடையதாக வளர்க்கலாம். பூ+நெய் என்பது தேன். இதை முப்பது வயது முதல் 50 வயது வரை உண்டு உடல் ஆரோக்கியத்தை சரியாக வைத்துக்கொள் என்பது தான் இதற்கு அர்த்தமாகுமாம்.

விட்டதடி உன்னாசை விளாம்பழத்தின் ஓட்டோடு!

பண்டைய காலத்தில் விலைமாதர்கள் புழக்கம் அதிகமிருந்தது. தன்னிடம் வந்து சேரும் ஆண்மகனுக்கு அவர்கள் அறியாமல் உணவோடு இடுமருந்து கொடுத்து விடுவார்களாம் அப்பெண்டிர். அது குடலோடு ஒட்டிக்கொன்டு சதா சர்வ காலமும் வலி ஏற்படுத்தி உணவினை ஒழுங்காக உண்ண‌ முடியாமல் இளைக்க வைத்து பலம் குன்றச் செய்யுமாம். அந்த ஆண்மகனுக்கு வெளியேறிச் செல்லக்கூட தென்பில்லாது போய் விடுமாம். அப்படி உடல் நலம் கெட்டவர்களுக்கு விளாம்பழத்தை தொடர்ந்து கொடுத்து வந்தால் இழந்த பலம் திரும்ப வருமாம். இழந்த பலம் திரும்பும்போதே விலைமாதர்கள் மீது ஏற்பட்ட மோகமும் இந்தப்பழமொழி போல பறந்து விடுமாம்!

எட்டி பழுத்தால் என்ன, ஈயாதவன் இருந்தால் என்ன?

எட்டிப்பழம் அதிக விஷத்தன்மையுடையது. அதனால் யாரும் அதை விரும்பி உண்ண முடியாது. மருத்துவ ரீதியில் அதன் சதைப்பகுதியையும் தோல் பகுதியையும் அந்த கால சித்தர்கள் மருந்தாக உபயோகப்படுத்தி வந்திருந்தாலும் பழமாக அது மனிதர்களுக்கு உபயோகப்பட்டதில்லை என்பது இந்த வரியின் பொருள்.

அது போல மற்ற‌வர்களுக்கு உதவி செய்யாதவர்கள் உயிரோடிருந்து என்ன பயன் என்பதை இங்கே அழகான் ஒரு சிறு கதை மூலம் விளக்கியுள்ளார் ஆசிரியர். பசியால் துடித்த ஒருவன் மற்றவர்களின் பசியறிந்து அன்னமிடும் ஒருவன் வீட்டிற்கு செல்லுகையில் வழி தவறி கருமி ஒருவனிடம் சென்று மிகவும் பசிப்பதாகச் சொல்லியிருக்கிறான். அதற்கு அந்தக் கருமியோ, ' நான் சாப்பிடுகையில் காகம் வந்தால்கூட அதை என் சாப்பிடும் கையால் விரட்ட மாட்டேன். காரணம், நான் கையை ஆட்டும்போது ஒரு பருக்கையாவது கீழே விழுந்து விட்டால் அதை அந்தக் காகம் தின்று விடும்' என்று கூறி தன் ஆள் காட்டி விரலால் இன்னொரு வீட்டை சுட்டிக்காண்பித்து ' நீ தேடி வந்திருக்கும் வீடு அது தான். அங்கு போய் சாப்பிடு' என்றானாம். அந்தக் கருமி சில நாட்களுக்குப்பிறகு இறந்த போது, அவன் உயிர் போயும் அவன் விரல் மட்டும் உயிரோடு சில நிமிடங்கள் துடித்துக்கொண்டிருந்ததாம். தான்  தானம் செய்யாவிட்டாலும் தானம் செய்த வீட்டைச் சுட்டிக்காண்பித்ததற்கே இந்தப் பலன் என்றால் மற்றவர்களுக்கு உதவி செய்பவர்களின் வாழ்க்கை எத்தனை சிறப்பாக, பயனுடையதாக இருக்கும்?

இப்படி மிக சுவாரசியமாக பல பழமொழிகளை ஆசிரியர் ப.செல்வம் இந்தப்புத்தகத்தில் மருத்துவ விளக்கங்களுடனும் அதன் பயன்களுடன் சொல்லியிருக்கிறார்.

புத்தகம் கிடைக்குமிடம்:
ஸ்ரீபுற்று மகரிஷி மருத்துவ சேவை மையம், 
629, பேஸ் 2,சத்துவாச்சேரி, வேலூர் 632 009
தொலைபேசி: 94434 22935
விலை: 150


 

Friday 7 August 2015

எப்படி ஜெயிப்பது?

ஷார்ஜாவிலிருந்து தஞ்சை வந்து ஒரு மாதம் ஓடிப்போய் விட்டது. இந்த மாதம் முழுவதுமே அனுபவங்களுக்கு குறைவில்லை. அதுவும் மோசமான, மனதை பாதிக்கும் அனுபவங்கள் தான். வாழ்க்கை என்பதே திருப்பங்கள் நிறைந்த அனுபவங்கள் தான்! ஆனால் இந்த அனுபவங்கள்.....

வந்த சில நாட்களிலேயே என் கணவரின் சகோதரருக்கு இரவில் நெஞ்செரிச்சல் போலும் பிசைவது போலவும் உணர்வு ஏற்பட, விடியற்காலை மருத்துமனையில் சேர்த்தால் பரிசோதனைகளில் இதயத்திற்குச் செல்லும் இரத்தக்குழாய் ஒன்றில் முழுவதும் அடைப்பு என்றும் எந்த நேரம் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்று சொல்லிய நிலையில் உடனடியாக ஆஞ்சியோ பிளாஸ்டி முறையில் இரத்தக்குழாயில் 'ஸ்டெண்ட் ' வைத்து மருத்துவர்கள் சிகிச்சை செய்து முடித்தார்கள். முதல் நாளிரவு என் மகன் ஊருக்குக் கிளம்பியதால் வழியனுப்ப வந்திருந்தார் இவர். மறு நாள் விடியற்காலை ஊருக்குச் சென்றடைந்த விபரம் சொல்ல என் மகன் தொலைபேசியில் அழைத்தபோது என் கொழுந்தனாருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி முடிந்து விட்டது! வாழ்க்கையில் அவசரமான திருப்பங்கள் எத்தனை எத்தனை!

ஒருவாறாக அலைச்சல் முடிந்து என் கண்ணிற்கு அறுவை சிகிச்சை நடந்தது. வீட்டிற்கு வந்து சில நாட்களிலேயே மறுபடியும் தொலைபேசி அழைப்பு. இந்த முறை எங்கள் ஷார்ஜா உணவகத்தில் மானேஜராக வேலை செய்து கொண்டிருந்தவரின் மனைவி அதே மருத்துவ மனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருடைய பிரச்சினை வினோதமானது. ஃபுட் பாய்ஸன் காரணமாக அவருடைய உனவுக்குழாயில் அங்கங்கே பொத்தல்கள் ஏற்பட்டு விட்டனவாம். அதன் கார‌ணமாய் உண்ணும் உண‌வு உண‌வுக்குழாயில் இறங்க முடியவில்லை. மேலும் ஏற்கனவே உண்ட உணவு கல்லீரலைப்பாதித்துக்கொண்டிருக்கிற‌து என்று மருத்துவர்கள் சொல்லி அந்த ஓட்டைகளை அடைத்தார்கள். தற்போது அவர் அபாய கட்டத்தை தாண்டி விட்டாராம். ஆனால் மாதாமாதம் அவர் மருத்துமனை வந்து அந்த ஓட்டைகளை அடைத்துக்கொண்டு போக வேண்டுமாம். தற்போது செய்தது நிரந்தர அடைப்பு இல்லையாம்! தலையை சுற்றுகிறது அல்லவா?

அதற்கடுத்த சில நாட்களில் நெருங்கிய உறவினரின் மரணச் செய்தி! இவர் 15 வருடங்களுக்கு முன் நுரையீரல் பாதிப்பில் கடைசிக்கட்டத்தில் உயிர் பிழைத்தவர். அவருக்கு கடந்த ஒரு மாதமாகவே அவ்வப்போது சுரம் வந்திருக்கிறது. அதை சாதாரணமாகவே அவரும் அவரின் வீட்டினரும் நினைத்திருக்கிறார்கள். அது நிமோனியா வைரஸாக மாறி அவரின் நுரையீரலைத்தாக்கியபோது அவர் அபாய கட்டத்துக்கு வந்து விட்டார். கூடவே அவருக்கு சர்க்கரை இருந்திருக்கிறது. அதையும் உடற்பயிற்சி மூலம் சரியாக்கி விடலாம் என்ற நினைப்பில் அதற்கு மருந்துகள் எடுத்துக்கொள்ள‌வில்லை.  அது கல்லீரலையும் சிறுநீரகத்தையும் பாதித்து விடவே அவரால் பிழைக்க முடியாமல் போய் விட்டது. படித்தவர்களே இப்படி இருந்தால் என்ன செய்வது?

மறுபடியும் தொலைபேசி அழைப்பு. இது பெங்களூரிலிருந்து! அழைத்தது ஷார்ஜாவில் நெடுநாள் பழகிய‌ நண்பர். இப்போது தான் சில வருடங்களாக பெங்களூரில் இருக்கிறார்கள். அவர் மனைவி சர்க்கரை நோய்க்கு ஆளானவர். ஆனால் அதைக்கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளாமல் போய் சிறுநீரகம் பழுதுற்று கஷ்டப்பட்டவர். அப்போதே ஒரு நாளைக்கு அரை லிட்டர் தான் தண்ணீர் குடிக்க வேண்டுமென்று மருத்துவர்கள் சில வருடங்கள் முன்பு சொன்னபோதே அதை மறுத்துப்பேசி வந்தவர். இறுதியில் சிறுநீரக சுத்தகரிப்பு செய்யும்போதே [டயாலிஸிஸ்] இறந்து விட்டார். தொலைபேசியிலேயே அவருக்கு ஆறுதல் சொன்னோம்.

நாங்கள் கிளம்பும்போதே அங்கு வேலை பார்த்துக்கொண்டிருக்கும் எங்கள் உறவினர் ஒருவருக்கு MOTOR NEURON DECEASE எனப்படும் நோய் வந்திருந்தது. மூளையின் செல்கள் இறந்து, மேலும் செல்கள் வளர்ச்சி இல்லாமல் போவதே இந்தப் பிரச்சினை. இந்த நோய் வந்தவர்கள் பிழைத்தது இல்லை. இதற்கு காரணங்களும் கண்டுபிடிக்கவில்லை. உலகமெங்கும் இதற்கான ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றனவாம். இதை குண‌ப்படுத்த மருந்துமில்லை என்றும் சொல்லப்படுகிறது. இந்த நோய் வந்தவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக இளைத்து, சிறுத்து, பேச்சு நின்று கடைசியில் இறக்கிறார்கள். நாங்கள் கிளம்பி வரும்போதே மன அமைதியில்லாமல் மன பாரத்துடன் தான் வந்தோம். ஆனால் இது ஆரம்ப நிலையில் இருந்தால் இதற்கு சில நிவாரணங்கள் இருப்பதாக தற்போது சொல்லுகிறார்கள். தற்போது இவர் பெங்களூரில் இருக்கும் NIMHANS மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார். நரம்பியல் கோளாறுகளுக்கான மிகச் சிறந்த மருத்துவ மனை இது. உடல் நிலையில் சில முன்னேற்றங்கள் இருப்பதாக சொல்லுகிறார்கள். எப்படியாவது அவர் பிழைக்க வேண்டும்!

இப்போதெல்லாம் இயற்கை மனிதனுக்கு எவரும் வெல்ல முடியாத பல சோதனைகளை ஏற்படுத்தி வைக்கிறது. சோதனைகளை வெல்வதற்கு மன பலமும் நம்பிக்கையும்தான் முக்கிய தேவையாக இருக்கிறது. மனிதன் ஒவ்வொரு சோதனையையும் ஜெயிக்க ஜெயிக்க, இயற்கை இன்னொரு புது விதமான சோதனையைக் கொண்டு வருகிறது. எப்படி ஜெயிப்பது?

மருத்துவர்கள், பத்திரிகைகள் அனைத்தும் பரிந்துரைப்பது சரியான உணவுப்பழக்கங்களும் நோய்களைப்பற்றிய விழிப்புணர்வும் மட்டுமே!