Thursday 24 August 2017

முத்துக்குவியல்-47!!!

மகிழ்ச்சி முத்து:

கடந்த ஜுலை மாதம் எங்கள் இல்லத்தில் புதியதாய் ஒரு பூ பூத்திருக்கிறது! பேத்தி விஹானா பிறந்துள்ளார். அதனால் மீண்டும் உலகம் வண்ண‌மயமாகியுள்ளது!


மனிதநேய முத்து:

பணம், காசு என அலையும் இந்த காலத்திலும் பணத்தை ஒரு பொருட் டாகப் பார்க்காமல் கொடுத்ததைப் பெற்றுக்கொண்டு மனிதநேயத்துடன் மருத்துவம் பார்த்து வருகிறார் மயிலாடுதுறையைச் சேர்ந்த டாக்டர் வி. ராமமூர்த்தி.

நாகை மாவட்டம், மயிலாடுதுறை பட்டமங்கலத் தெருவில் வசித்து வரும் இவருக்கு சொந்த ஊர் முடிகொண்டான் கிராமம். விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவருக்கு தற்போது வயது 79. மயிலாடுதுறையில் அதே இடத்தில் 1959-ம் ஆண்டு முதல் மருத்துவம் பார்த்துவரும் இவரை தெரியாதவர்கள் அந்த ஊரில் யாரும் இருக்க முடியாது.




இன்றும் அதே துடிப்புடனும் அக்கறையுடனும் சிகிச்சைக்கு வருபவர்களை அணுகி மருத்துவம் செய்கிறார். சிகிச்சை பெற கட்டணமாக இவ்வளவு தர வேண்டுமென இவர் கேட்பதில்லை. அவர் பணத்தை கைநீட்டியும் வாங்குவதில்லை. தங்களால் எவ்வளவு முடியுமோ (ரூ.5 அல்லது ரூ.10 தான்) அவரது மேஜை மீது வைத்துச் செல்லலாம். காசு இல்லை என்றாலும், போயிட்டு வா என தோளைத் தட்டி அனுப்பி விடுவார். இவர் எழுதும் மருந்துகளும் ரூ.20 அல்லது ரூ.30-க்குள்தான் இருக்கும்.

மேலும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் வந்தால் நீ எந்த ஊரு, என்ன படிக்கிற, எங்க தங்கியிருக்கிற என வாஞ்சையோடு விசாரித்து விட்டு, ஊருக்கு செல்ல செலவுக்கு பணம் வைத்திருக்கியா, இந்தா இதை வைச்சுக்கோ என ரூ.10 அல்லது ரூ.20 கொடுத்து அனுப்புவார் டாக்டர் ராமமூர்த்தி.

எப்படி உங்களால் இது முடிகிறது என அவரிடமே கேட்டதற்கு அவர் “தி இந்து” நிருபரிடம் கூறியது:

சென்னை மருத்துவக் கல்லூரியில்தான் மருத்துவம் படித்தேன். அங்கு பேராசிரியர்களாக இருந்தவர்கள் மருத்துவத் துறையில் மிகப்பெரிய ஜாம்பவான்கள். இவர்கள் யாரும் தனியாக கிளினிக் வைத்து பணம் சம்பாதித்தவர்கள் அல்லர். இவர்கள் எங்களுக்கு சொல்லிக் கொடுத்ததெல்லாம் மருத்துவத்தை மனிதாபிமான அடிப்படையில் செய்யுங்கள், பணத்துக்காக செய்யக் கூடாது என்பதுதான்.

ஏழைகளிடம் காசு வாங்காதே, ஒத்தாசையாக இரு என 45 ஆண்டுகளுக்கு முன்பே காஞ்சி மகா பெரியவர் கூறினார். அதை இன்றும் கடைப்பிடித்து வருகிறேன்.

என்னிடம் வரும் மக்கள் பாசத்துடன் வருகின்றனர். அவர்களுக்கு தேவையான உதவிகளை நான் செய்கிறேன். மருத்துவத் தொழில் இன்று அப்படி இல்லை. பணம் கொடுத்துதான் மருத்துவராக வேண்டியிருக்கிறது. அந்த பணத்தை திரும்ப சம்பாதிக்க மக்களிடம் பணம் அதிகமாக வாங்க வேண்டியிருக்கிறது.

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் 20 ஆண்டுகள் பணியாற்றினேன். அப்போது பல்வேறு பணிகளுக்காக ஏராளமானோருக்கு லட்சக்கணக்கான கையொப்பங்களை (அட்டெஸ்டெட்) இலவசமாகவே போட்டிருக்கிறேன்.

நான் பெற்ற பெரும் பாக்கியமே எனது மனைவி நீலாதான். எனது மனிதாபிமான சேவைக்கு எனது மனைவியும் முக்கிய காரணம். திருமணமானதிலிருந்து இதுவரையில் பணம் அதிகமாக சம்பாதிக்க வேண்டுமென அவர் கேட்டதில்லை. அதனால்தான் மருத்துவத் தொழிலை சேவையாக செய்ய முடிகிறது. நான் சொத்துகள் எதுவும் சேர்க்கவில்லை, ஆனால் ஏழை மக்களின் பாசத்தைத்தான் சொத்தாக சேர்த்துள்ளேன்.

எனது மகன் சீனிவாசன் மருத்துவம் படித்துவிட்டு சென்னையில் சிறுநீரகவியல் சிறப்பு மருத்துவராகப் பணியாற்றி வருகிறார். மயிலாடுதுறையிலிருந்து வருகிறோம் என யார் சென்றாலும், அவர்கள் மீது தனி அக்கறை எடுத்து மருத்துவம் செய்கிறார். பலரும் இங்கு வந்து அதை என்னிடம் சொல்லும்போது எனக்கு பெருமையாக இருக்கும். அவன் கார் வாங்கியுள்ளான், பங்களா வாங்கியுள்ளான் என்பதில் எனக்கு திருப்தி இல்லை. அவனும் ஏழைகளுக்கு உதவுகிறான் என்பதில்தான் எனக்கு திருப்தி என்றார் மனிதநேய மருத்துவர் ராமமூர்த்தி.

தகவல் முத்து:

பூண்டு:





பூண்டை பற்றி 3200 பதிப்பிக்கபட்ட மருத்துவ ஆய்வுகள் நிகழ்த்தபட்டுள்ளன. சுருக்கமாக அவை சொல்லும் செய்தி "உலகில் எல்லாரும் தினம் நாலைந்து பூண்டு பற்கள் சாப்பிட்டால் மாரடைப்பு மரணங்கள் 25% குறையும்" என்பதுதான். பூண்டின் மகிமை அதில் உள்ள அலிசினில் உள்ளது.
பூண்டு ரத்த அழுத்தத்தை 10 புள்ளிகள வரை குறைப்பதாக ஆய்வுகள் கூறுகின்ற‌ன. டயஸ்டாலிக், சிஸ்டாலிக் இரண்டு வித பிரஷர்களையும் பூண்டு குறைக்கிறது
பூண்டு டி.என்.ஏ ஆக்சைடைசேஷனால் பாதிப்படைவதை தடுக்கிறது

பூண்டு ட்ரைகிளிசரைடு மற்றும் மொத்த கொலஸ்டிரால் இரண்டையும் குறைக்கும். எல்டிஎல், எச்டிஎல்லை குறைப்பது இல்லை.

இதயத்துக்கு ரத்தத்தை கொன்டு செல்லும் என்டொதெலியம் எனும் நரம்புகளின் லைனிங்கை பூண்டு விரிவாக்குகிறது. இதனால் இதயத்துக்கு செல்லும் ரத்த ஓட்ட அளவு அதிகரிக்கும்.

பூண்டின் கான்சர் எதிர்ப்பு தன்மையை பற்றி 600 ஆய்வுகள் நிகழ்த்தபட்டுள்ளன,
பூண்டு சாப்பிட்டவர்களுக்கு கலோன் கான்சர் வருவது 41% குறைகிறது
வயிற்று கான்சர் வருவதை பூண்டு 47% குறைக்கிறது
நுரையீரல் கான்சர் வருவதை 22% தடுக்கிறது
பிரெயின் கான்சர் வருவதை 34% தடுக்கிறது
விமான பயணத்தில் வரும் இன்ஃபெக்ஷனை தடுக்க பூண்டு உள்ள ஸ்ப்ரே பயன்படுத்தபடுகிறது
குளிர்காலத்தில் பூண்டு சபபிட்டால் சளிபிடிப்பது பாதியாக குறையும்.
ஆய்வு ஒன்றில் சுகர் உள்ளவர்களுக்கு தினம் ஒரு பூண்டு கொடுக்கபட்டதில் சராசரியாக 138 இருந்த சுகர் ஒரு மாதத்தில் 113 ஆக குறைந்தது
பூண்டு தோலுக்கு செல்லும் ரத்த ஒட்டத்தை அதிகரித்து தோலை இளமையாக வைக்கிறது
பூண்டை மெதுவான தீயில் தோலுடன் வறுத்து பின் தோலை நீக்கி உண்ணலாம். வெறும் வயிற்றில் உண்ண வேண்டும். அல்லது பாலில் நாலைந்து பற்களை போட்டு பால் இரண்டு கொதி வந்ததும் பாலோடு சேர்த்து பூண்டையும் சாப்பிட வேண்டும்.

அவசியமான முத்து:

இந்தியாவில உங்க செல்போன் தொலைந்து விட்டால் இனிமேல் கவலைப்பட வேண்டாம். எப்படியும் அது உங்களுக்குத் திரும்பக் கிடைக்கும். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியவை :




உங்கள் செல்போனிலிருந்துக்கு*#06# டயல் செய்யுங்கள்.

உடனே உங்கள் மொபைலில் ஒரு 15 டிஜிட் நம்பர் வரும்.
இதுதான் உங்கள் போனின் IMEஈ ணொ.அதனை உடனே பத்திரமாக உங்கள் ஃபைலில்   ப‌திவு செய்து வைத்துக்கொள்ளுங்கள்.ஃபோன் காணாமல் போய் விட்டால் உங்கள் நம்பரை cop@vsnl.net க்கு மெயில் செய்யுங்கள்.
காவல் நிலையத்திற்கெல்லாம் போக வேண்டியதில்லை.
உங்க மொபைல் போனை 24 மணி நேரத்தில் GPRS மற்றும் internet மூலம் கண்டுபிடித்து விடுவார்கள்.

உங்க மொபைல் போன் நம்பரை மாற்றி விட்டால்கூட‌ போன் எங்கிருந்து வேலை செய்கிறது என்பதை சுலபமாக‌ தெரிந்து கொள்ளலாம்!!

மருத்துவ முத்து:

சர்க்கரை நோயாளிகளில் நிறைய பேர் வயது முதிரும்போது சிறுநீரகத்தொல்லைகளுக்கும் ஆளாவார்கள். சிறுநீரக செயல்பாடுகள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைய ஆரம்பிக்கும். சிலருக்கு சிறுநீரகத்தின் வடிகட்டிகள் செயலிழக்க ஆரம்பித்து சிறுநீரில் புரதம் வெளியேற ஆரம்பிக்கும். இது அதிகமாக வெளியேறும்போது இரத்தத்தில் கிரியாட்டினைன் கழிவுகள் அதிகமாக ஆரம்பிக்கும். யூரியாவும் அதிகரித்து, யூரிக் அமிலமும் அதிகரிக்க ஆரம்பிக்கும்.

இவற்றையெல்லாம் சரியானபடி ஆராய்ந்து தகுந்த மருந்துகள் கொடுத்து நம் உடல்நலத்தை கண்காணிக்க நல்லதொரு மருத்துவர் தேவை. உணவுக்கட்டுப்பாடு மிகவும் அவசியமும் ஆகி விடும். பொதுவாகவே உணவில் உப்பை குறைப்பது மிகவும் அவசியம். பாதி வியாதிகள் இதனாலேயே சரியாகி விடும்.

சமீபத்தில் இதற்கான மருத்துவமுறைகளில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ள‌ன.

1. உப்பிற்கு பதிலாக நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்    இந்துப்பை வாங்கி பொடி செய்து வைத்துக்கொண்டு அதை சமையலுக்கு உபயோகப்பயன்படுத்தி வருவது உடம்பிற்கு மிகவும் நல்லது.




எந்த கெடுதலும் இல்லை. சாதாரண சமையல் உப்பில் கிடைக்கும் சுவை இதிலும் கிடைக்கும். கால்.கை வீக்கம் தோன்றினால் டாக்டர்கள்," உப்பை குறைங்க" என்பார்கள். அப்படி ஒரு பிரச்சினை இந்துப்பில் வருவதில்லை. இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும், மற்றவர் அனைவருக்கும் இது சிறந்த உப்பு ஆகும்!!! ஆயுர்வேத நிபுணரும், பேராசிரியருமான எஸ்.சுவாமிநாதன் அவர்கள் " இந்துப்பு மனதிற்கு நல்லது.
வாதம், பித்தம், கபம் மூன்றையும் போக்க வல்லது., இலேசானது.
சிறிதளவு உஷ்ணமுள்ளது,  கடலுப்பை உண்ணும் போது அது முடிவில் இனிப்பாக மாறிவிடும். அது விரைவில் சீரணமாகாது. ஆனால் இந்துப்பு இதற்கு நேர்மாறானது. கடலுப்பினால் ஏற்படும் கெடுதலைக்கூட தடுத்து விடும்" என்று கூறுகிறார்கள்.

2. சில சர்க்கரை நோய்க்கான மருந்துகள்கூட சிறுநீரில் புரதம் வெளியேறக்காரணமாகின்றன என்பது சமீபத்தில் நான் அறிந்து கொண்ட உண்மை. நீண்ட நாட்களாக, வருடங்களாக ஒரே விதமான மருந்துகளை எடுத்து வருபவர்கள் உங்கள் மருத்துவரை அணுகி அது பற்றி கலந்து பேசி அறியுங்கள். சில மாத்திரைகள் இந்த புரதம் வெளியேறுதலை அதிகரிக்க வல்லவை என்பதையும் சில மாத்திரைகள் சிறுநீரில் புரதம் வெளியேறுதலையும் வயிற்றுப்பிரச்சினைகளையும் குறைக்க வல்லவை என்பதையும் நல்ல மருத்துவர்கள் விளக்கி உங்கள் மருந்துகளை மாற்றிக்கொடுப்பார்கள். மொத்தத்தில் சிறு நீரகத்தைப் பாதுகாத்துக்கொள்ளுவதற்கு நமது முயற்சியும் கட்டாயம் தேவை.

3. மூக்கிரட்டை வேர் சிறுநீரகத்திற்கு மிக நல்லது.




அது சிறுநீரகத்தின் செயல்பாட்டுத்தன்மையைப்புதுப்பிக்க உதவுகிறது. அதை ஒரு பானைத்தண்ணீரில் ஊறப்போட்டு அந்தத் தண்ணீரைக் குடித்து வரலாம். மூக்கிரட்டைப்பொடியும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கிறது. அதில் கால் ஸ்பூனை விடக்குறைந்து எடுத்து சற்று மிதமான வெண்ணீர் ஒரு தம்ளரில் கலந்து காலை வெறும் வயற்றில் குடித்து வருவதும் நல்லது.

Monday 14 August 2017

திரை விமர்சனம்!!!!

பவர் பாண்டி!

பல நாட்களாக பார்க்க நினைத்த படம். இரண்டு மாதங்களுக்கு முன்பு தஞ்சையிலிருந்த போது, அதன் விமர்சனங்கள்,  கதையினால் கவரப்பட்டு, பெரிய திரையில் பார்க்க பெரிதும் முயற்சி செய்தேன்.  பல வித சூழ்நிலைகளால் முடியாமல் போய் விட்டது. நேரம் கிடைத்த போது, அது  அரங்கத்தை விட்டே போயிருந்தது. இங்கு வந்த பிறகு, இப்போது தான் ‘ பவர் பாண்டி’ திரைப்படத்தைப்பார்க்க வாய்ப்பு கிடைத்தது.

ஆனால் படம் பார்க்க ஆரம்பித்ததும் ஒவ்வொரு அங்குலமாக ரசித்துப்பார்த்தேன்.



படத்தின் பெயரில் மட்டும்தான் பழமை இருக்கிறது. ஆனால் படம் முழுவதும் புதுமைச் சிந்தனைகள்!இந்தப்படத்தின் நாயகனான 60 வயதைக்கடந்த முதியவருக்கும் அது போல உடல் மொழியிலும் உடைகளிலும் உணர்வுகளிலும் புதுமைச்சிந்தனைகள்!

முதியவருக்கு மகன் வீட்டில் சகல வசதிகளுடன் உடற்பயிற்சி சாதனங்களுட்ன் ஒரு அறை. அதுவும் மாடியில். கூடவே பக்கத்து மாடி வழியாக 20 வயது பையனின் நட்பு. மருமகளின் அக்கறை, பேரன், பேத்திகளின் கொஞ்சல்!

இந்த தினசரி சந்தோஷங்கள் அவருக்குப் போதவில்லை. சின்ன வயசிலிருந்து நியாயங்களைத்தட்டி கேட்ட பழக்கம் இந்த அறுபது வயதிலும் தொடர்கிறது. அதனால் வரும் பிரச்சினைகள் மகனின் மனதை சலிப்படைய வைக்கிறது. ஒரு கட்டத்தில் காவல் நிலையத்திலிருந்து போலீஸ்காரர்கள் வீட்டிற்கே வந்து புகார் செய்ய மகன் தனக்குத் தந்தை அவமானமிழைத்து விட்டதாக குமைந்து பேசும்போது தந்தை கோபத்திலும் மனக்கஷ்டத்திலும் வெடிக்கிறார். தனக்கு அந்த வீட்டில் சுத்ந்திரமில்லாதது போல உணர்கிறார்.
“பெருசு… உன் மகன் வாழ்க்கையையும்… உன் பேரன் பேத்தியோட வாழ்க்கையையும்தான் நீ வாழ்ந்துக்கிட்டிருக்கே. உன் வாழ்க்கையை எப்ப வாழப்போறே?” என்று பக்கத்து வீட்டு டீன் ஏஜ் பையன் ஒரு பக்கம் உசுப்பிவிடுகிறான்.



குடித்து விட்டு மகனிடம் புலம்பி வெடிக்கிறார்.
‘வயசான காலத்துல சும்மா இருக்கமாட்டியா?என்ற மகனின்கேள்விக்கு, ‘சின்ன வயசுல நீ எப்பவும் அப்பா மேல ஏறி விளையாடிக்கிட்டே இருப்பே. உன்னை நான் எப்பவும் தொந்தரவா நினைச்சதே இல்லை ராசா! ஏண்டா சும்மா இருக்குறதுன்னா அவ்ளோ ஈசியா போச்சா. அது எவ்வளவு கஷ்டம் தெரியுமா? ‘ என்று அழுகிறார்.

இரவோடிரவாக மகனுக்கு ஒரு கடிதம் எழுதி வைத்து விட்டு, தன் சேமிப்புப் பணத்தையும் ஒரு பைக்கையும் எடுத்துக்கொண்டு இலக்கில்லாமல் பயணிக்கிறார்.

தன் வயதொத்த நண்பர்களிடம் நடுவழியில் தன் சிறுவயதுக்காதலை-‍நிறைவேறாத காதலையும் சோகத்தையும் சொல்கிறார் அவர்.  மிகச்சிறு வயதில் பாவாடை தாவணியில் மதுரை நகரிலிருந்து தன் கிராமத்துக்கு வந்திருக்கும் பூந்தென்றல் மீது அவருக்கும் வெள்ளை மனதுடன் சுற்றித்திரியும் வீர சாகசங்கள் செய்யும் அவர் மீது பூந்தென்றலுக்கும் காதல் பிறக்கிறது. கோயில் திருவிழா பின்னணியில் அவர்களுக்குள் காதல் மலருவது, மழையில் பாண்டி நனைவது கண்டு, குடையை பிடித்துக்கொண்டு ஓடி வரும் பூந்தென்றல், “மழையில் ஏன் நனையிறே? குடைக்குள் வா” என்று அழைக்க, “நீ ஏன் குடைக்குள் இருக்கே? வெளியே வா” என்று பாண்டி அழைக்க, இருவரும் கொட்டும் மழையில் நனைந்து குதூகலிப்பது என அழகிய கவிதையாய் அவர்கள் காதல் வளருகிறது.

இவர்களின் காதல், பூந்தென்றலின் அப்பாவுக்கு தெரிய வர, அவர் கத்தி களேபரம் செய்யாமல், எதையும் காட்டிக்கொள்ளாமல், திடுதிடுப்பென மகளுடன் மதுரைக்கு புறப்பட்டு விடுகிறார். பூந்தென்றல் உருக்கமாக ஒரு கடிதம் எழுதி, அதை பாண்டியிடம் சேர்க்க ஏற்பாடு செய்துவிட்டு, அப்பாவோடு கிளம்பிப் போய்விடுகிறார். காதலியை பிரிந்து தவிக்கும் பாண்டி, மதுரைக்குப் போய் பூந்தென்றலை சந்திக்க முயன்று, முடியாமல் தோற்று, விரக்தியுடன் சென்னை சென்று, சினிமாவில் சேர்ந்து, பவர் பாண்டி ஆகிறார்.

இப்போது அவரின் பயணம் சிறு வயது காதலியைத் தேடும் இலக்கோடு ஆரம்பிக்கிறது.

அதற்கு ஃபேஸ்புக் உதவி செய்ய, தன் தோழர்களிடம் விடை பெற்றுக்கொண்டு அவளைக்காண ஹைதராபாத் பயணிக்கிறார்.  கணவனை இழந்து மகளுடன் தனியாக வசிக்கும் அவள் அவரை வந்து சந்திப்பதும் பழைய நினைவலைகள் உள்ளத்தில் வந்து பாய இருவருமாய் பழங்கதைகள் பேசுவதும் சிரிப்பதும் நடப்பதும் உணர்வுகளைப்பகிர்வதுமாக அந்த ஒரு நாள் சந்திப்பு அழகிய கவிதையாய் மலர்கிறது.

துணைகளை இழந்து முதிர்ந்த வயதில் தனியாய் இருக்கும் அவர்கள் வாழ்க்கையில் இணைந்தார்களா என்பது தான் மீதிக்கதை.

முதியவராய் வாழ்ந்து காட்டியிருக்கிறார் ராஜ்கிரண்.
தன் முதல் காதலைப்பற்றி நண்பர்களிடம் கூறும்போது அவர் முகத்தில் இருக்கும் வெட்கமும் அது நிறைவேறமல் போனதைப்பற்றி கூறும் போது அவரிடும் தென்படும் ஏக்கமும், பேரக்குழந்தைகளுடன் இருக்கும் போது அவர் முகத்தில் இருக்கும் மகிழ்ச்சியும், தனது மகன் திட்டினாலும் அதை மனதில் வைத்துக்கொண்டு வெளிக்காட்டாமல் இருக்கும் போது அவரின் மனதில் இருக்கும் வலியும் பல வருடங்களுக்கு பின் தன்னுடைய முதல் காதலியை சந்திக்கும் போது அவருக்கும் இருக்கும் உற்சாகமும் மீண்டும் தனது காதலை சொல்லும்போது அவரிடம் இருக்கும் குழந்தைத்தனமும் திரையில் பார்க்கும்போது அவரிடன் நடிப்பின் முதிர்ச்சி நமக்கு தெரிகிறது.



ரேவதி பழைய காதலியாய் இன்றைய நிலையில் பக்குவப்பட்ட ஒரு முதிர்ந்த பெண்ணாய் அனாயசமாக நடிக்கிறார். பழைய சிறு வயது காதலனைப் பார்த்து விட்ட சந்தோஷம், அதனால் ஏற்பட்ட மனநிறைவு, அதே சமயம் தனது இன்றைய நிலை பற்றிய ஜாக்கிரதை உணர்வு அத்தனையையும் தன் முகத்திலும் குரலிலும் மிக அழகாய் பிரதிபலிக்கிறார். பல வருடங்களுக்குப் பிறகு தன்னை வந்து சந்திக்கும் பழைய காதலனிடம் ஓர் எல்லைக்குள் நின்று அன்பும் பரிவும் காட்டும் நடிப்பில் சபாஷ் போட வைக்கிறார். ’‘ ஏன் நீ என்னைத்தேடி வரவேயில்லை?’ என்று ராஜ்கிரணிடம் கேட்கும்போது அவர் மனதில் இன்னும் நிறைவேறாத ஏக்கமிருப்பதை அந்தக் கேள்வி அழகாய் வெளிப்படுத்துகிற்து.

இதில் ராஜ்கிரணின் நண்பனாக பக்கத்து மாடி வழியாக அடிக்கடி சந்தித்துப்பேசும் இருபது வயது பையனின் குணச்சித்திரம் மிகவும் சுவாரஸ்யம். இந்தக்கால இளைஞன் அவன். ராஜ்கிரண் ஒரு சமயம் அவனிடம் ‘ அந்தக்கால கேப்பைக்கூழில், பழங்களில் எல்லாம் எத்தனை விட்டமின்கள் இருக்கின்றன தெரியுமா? உங்களுக்கெல்லாம் ஐபாட் தெரிகிறது,, ஃபேஸ்புக், ட்விட்டர் எல்லாம் தெரிகிறது, ஆனால் இதெல்லாம் தெரியவில்லை’ என்பார்.  அதற்கு அவன் அனாயசமாக ‘ விட்டமின்களுக்காக இதையெல்லாம் எதற்கு பெரிசு சாப்பிட வேண்டும்? கொஞ்சம் விட்டமின் மாத்திரைகள் எடுத்துக்கொண்டால் ஆயிற்று!’ என்று இந்தக்கால இளைஞனாய் பதில் சொல்லும்போது நம் முகம் தானாகவே சிரிப்பால் விரியும்.

குழந்தைகள்  குறிப்பாக மிக அழகாக நடிக்கின்றன. ஒரு கட்டத்தில் பேரன் தாத்தாவுக்காக தன் தந்தையிடம் கேள்வி கேட்கிறான். “ ஏம்பா தாத்தாவை திட்டினே? நான் உன்னைத்திட்டினா உனக்கு எத்தனை கஷ்டமாக இருக்கும்? அது போலத்தானே நீ திட்டும்போது தாத்தாவுக்கு கஷ்டமாக‌ இருக்கும்? '

இன்னொரு சமயம் ‘‘எனக்கு என் அப்பா அம்மாவவிட தாத்தா தான் ரொம்ப பிடிக்கும் ’ என்று சொல்கிறான். தாத்தா பேரக்குழந்தைகளை பிரிந்து எங்கோ தூரத்தில் இருந்தாலும் குழ்ந்தைகளின் நினைவு அவரை உருக்குகிறது. தன் பக்கத்து வீட்டு நண்பனுக்கு ஃபோன் பண்ணி அவர்களைப்பற்றி விசாரிக்கிறார். அவனும் போய் பேரக்குழந்தைகளிடம் ஃபோனை திறந்து வைத்துக்கொண்டு பேசுகிறான். குழந்தைகள் தங்களை விட்டுப்போன தாத்தா பற்றி கோபமாகப் பேசுகின்றன. இவனும் ‘ அந்த கிழம் அதுக்குன்னு இப்படி பண்ணிட்டுப்போயிருக்கக்கூடாது’ என்கிறான். உடனே அந்தக்குட்டி பேரன் சொல்லுகிறான், ‘ என் தாத்தாவை கிழம் என்று சொன்னால் அப்படியே அடிச்சு போட்டுடுவேன்!’

அதை அந்தப்பக்கம் கேட்கும் தாத்தா கண்களைத் துடைத்துக்கொள்கிறார். நாமும் தான்!!

எந்த வயதிலும் காதலும், நேசமும், அன்பும், நட்பும் ஒரே மாதிரியே இருக்கும்… என்பதை ராஜ்கிரணும் ரேவதியும் அத்தனை உண்மையாக திரையில் நிகழ்த்துகிறார்கள். ரேவதியின் ஒவ்வொரு பார்வையும் அதற்கு ராஜ்கிரணின் ஒவ்வொரு அசைவும் ஆயிரம் அர்த்தங்க்ள் சொல்கின்றன!! ‘‘உன் மனதில் நான் இன்னும் இருக்கேனா?’’ என்று ரேவதியிடம், ‘மெசேஜ்’ மூலம் கேட்கும் இடத்திலும், அவர் பதில் தராமல் போனதற்காக நேரில் போய் கதவைத்தட்டி, ‘‘நான் உன் கிட்ட பேச மாட்டேன், போ’’ என்று செல்லமாக கோபித்துக்கொள்ளும் இடத்திலும் மனசு அப்படியே கனத்துப்போகிறது.

அவரிடம் விளக்கம் சொல்ல வரும் ரேவதியிடம் அவர் கேட்கிறார், ‘ நம்ம வாழ்க்கையில் நம் பிள்ளைகள்தான் இருக்காங்க, ஆனால் நாம அவர்கள் வாழ்க்கையில் இருக்கோமா?”

ஆழமான, அர்த்தமுள்ள கேள்வி இது!

தன் மகளிடம் தன் சின்ன வயது காதலைப்பற்றி ரேவதி சொல்லுகையில் மகள் தன் அம்மாவின் இன்றைய வாழ்க்கைக்கு ஒரு துணை அவசியம் வேண்டும், அது ஏன் அவரது முந்தைய காதலராக இருக்கக்கூடாது? என்று அழகாய் அம்மாவிடம் வாதிடுகிறாள். ,மறுநாள் ராஜ்கிரணின் மகனும் வந்து அப்பாவிடம் மன்னிப்பு கேட்டு அழும்போது மெல்ல தன் மகனுடன் அவர் புறப்படுகிறார். கடைசி காட்சியில் ரேவதி, ராஜ்கிரணிடம் பழைய கருப்பு–வெள்ளை புகைப்படத்தை பரிசாக கொடுப்பதும், பதிலுக்கு ராஜ்கிரண், ரேவதியிடம் பத்திரமாக வைத்திருந்த பழைய காதல் கடிதத்தை கொடுப்பதும் ரேவதி அவருக்காக காத்திருப்பது போல சொல்வதும் அவர் திரும்ப வருவோமென்ற நம்பிக்கையில் கையசைத்து விடை பெறுவதும் அவர் மகன் புன்னகையுடன் கீழே குனிந்து கொள்வதும் -காட்சிகள் மறுபடியும் கவிதைகளாய் விரிகின்றன!!

மனித உறவுகளின் உன்னதமான உணர்வின் வெளிப்பாட்டை மிக அருமையாக திரைப்படமாக்கியுள்ளார் இயக்குனர் தனுஷ். தமிழ் சினிமாவிற்கு ஒரு புதிய கதவை திறந்து வைத்திருக்கிறார் என்று தான் அழுத்தமாகச்சொல்ல வேண்டும்.

தங்களது ஆசை, சந்தோஷம் அனைத்தையும் தியாகம் செய்துவிட்டு பிள்ளைகளுக்காகவே வாழும் பெற்றோர், பிள்ளைகள் வளர்ந்த பிறகும், அதே பிள்ளைகளிடம் அடிமையைப் போல வாழாமல், தங்களுக்கான வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதை தான் ப.பாண்டியில் சொல்லியிருக்கிறார் இயக்குநர் தனுஷ். குறிப்பாக பேரன் பேத்தி எடுத்து தாத்தா ஆனவர்கள் கடைசிவரை அவர்களது மகன் வாழ்க்கையையோ, அல்லது பேரன்களின் வாழ்க்கையையோ தான் வாழ்கின்றார்கள்.. அவர்களுக்கான கடைசிக்கால வாழ்க்கை எங்கே தொலைந்து போனது என்பதை ராஜ்கிரணின் பவர் பாண்டி கதாபாத்திரம் வாயிலாக உயிரோட்டமாக உலவ விட்டுள்ளார்..

நாம் வாழ்ந்து கொன்டிருக்கும் இந்த வாழ்க்கை அன்பு, பாசம், , கோபம், கருணை, ஆதங்கம் ஏக்கம் போன்றவற்றால் நிறைந்திருக்கிறது. இதே உணர்வுகள் ஒரு அறுபது வயது மனிதருக்குள்ளும் இருக்கும் என்பதை ஒவ்வொரு மகனும் புரிந்து கொண்டு, தன் தந்தையை ஒரு குழந்தையைப்போல கவனிக்க வேன்டுமென்பதே இந்தத் திரைப்படத்தின் மையக்கருத்து!

தந்தையின் தோள்களில் கடைசியாக எப்போது சாய்ந்தோம்? தாய், தந்தையின் சிரிப்பை கடைசியாக எப்போது ரசித்தோம் என்ற் கேள்விகள் ஒவ்வொரு மகனிடமும் எழுந்தால் இந்தப் படம்  வெற்றி பெற்று விட்டது என்று அர்த்தம் கொள்ளலாம்!