Wednesday 30 October 2013

ரவா வாழைப்பழ கேசரி!!

தீபாவளி பல வித இனிப்பு வகைகளுடன், நெய் வாசத்துடன் நெருங்கிக்கொன்டிருக்கிறது. பல வருடங்களாயிற்று தீபாவளியின் போது தமிழகத்தில் இருந்து! இந்த வருடம் தான் ய‌தேச்சையாக அது சாத்தியமாகியிருக்கிறது. வீதியெங்கும் வெடிகளும் மத்தாப்பூ வகைகளும் கடைகளில் நிரம்பி வழிகிறது. முறுக்கு மாவு அரைப்பதும் அதிரசத்துக்கும் பயத்தம்பருப்பு லட்டுவிற்கும் மாவரைக்க, பெண்கள் பல வேலைகளுக்கிடையே மெஷினில் அரைத்து வருகிறார்கள். கடைத்தெரு செல்லவே முடியாதபடி,தஞ்சையின் முக்கிய வீதிகளிலுள்ள துணிக்கடைகடைகளில் அத்தனை கூட்டம், அடாத மழையிலும் கூட! வார இதழ்களும் மாத இதழ்களும் சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்களையும் விள‌ம்பரங்களையும் நிரப்பி அதிக விலைக்கு விற்க ஆரம்பித்து விட்டன! தீபாவளியின் அத்தனை அமர்க்களங்களையும் ரசிக்க ஆரம்பித்து விட்டேன். 

சரி, ஒரு இனிப்பைத்தந்து தீபாவளியை வரவேற்கலாமென்று நினைத்து இந்த வாழைப்பழ கேசரியைப்  பற்றி எழுத ஆரம்பிக்கிறேன்.  

பொதுவாய் கேசரி எல்லோரும் அறிந்த இனிப்பு தான். ஆனால் இந்த கேசரி செய்யும் முறை சற்றே வித்தியாசமானது. அதுவும் அதில் வாழைப்பழ துண்டுகள் சேர்க்கும்போது அலாதியான ருசி வந்து விடும். என்ன வாழைப்பழம் என்பதைப்பொறுத்து ருசியின் தன்மை வித்தியாசப்படும். ரஸ்தாளி நல்ல ருசி கொடுக்கும். முயன்று பாருங்கள்!


 
ரவா வாழைப்பழ கேசரி
தேவையான பொருள்கள்: 
வாழைப்பழம்- 2 [ கனிந்தது]
நெய்- 1 கப்
முந்திரிப்பருப்பு- 1 மேசைக்கரண்டி
திராட்சை   -   1 மேசைக்கரண்டி
ரவா            -  1 கப்
காய்ச்சி ஆறவைத்த பால்- 2 கப்
சீனி                   - 2 1/2 கப்
இலேசான சூடுள்ள நீர்- 1 கப் 

செய்முறை: 

நெய்யை மெதுவான தீயில் சூடாக்கவும்.
முதலில் முந்திரிப்பருப்பை பொன்னிறமாக வறுத்தெடுத்து வைத்துக்கொள்ள‌வும்.
அதன் பின் திராட்சையை பொன்னிறமாக வறுத்தெடுக்கவும்.
பிறகு அதே நெய்யில் ரவாவை பொன்னிறமாக வறுத்தெடுக்கவும்.
பிறகு அதில் பால், சீனி, நீர் சேர்த்து கெட்டியாகும் வரை சமைக்கவும்.
பிறகு வாழைப்பழங்களை மிகச் சிறிய துண்டுகளாக்கிச் சேர்க்கவும்.
மேலும் 5 நிமிடங்களுக்கு மெதுவான தீயில் திராட்சை, முந்திரிப்பருப்பைச் சேர்த்துக் கிளறவும்.

சுவையான ரவா வாழைப்பழக்கேசரி தயார்!! 

நெய் மணக்கும் இனிப்புக்களுடன்

மத்தாப்பூ, வெடிகளுடன்


              வலைச்சர அன்புள்ள‌ங்கள் இனிதே தீபாவளியைக்கொண்டாட‌
அன்பின் தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!
 

 

 
 
 


 

Tuesday 22 October 2013

இல்லத்து நிவாரணிகள்!!

நம் சமையலறையில் இருக்கும் பொருள்களைக்கொண்டும் வெளியில் கிடைக்கும் சில எளிமையானப் பொருள்களைக்கொண்டும் அன்றாடம் நமக்கு ஏற்படும் சிறு சிறு பிரச்சினைகளைத் தீர்க்க முடிகிறது. சின்னச் சின்ன சங்கடங்களை நிவர்த்தி செய்து கொள்ள முடிகின்றது. அந்த மாதிரியான சிறு சிறு வீட்டுக்குறிப்புக்கள் இதோ!1..பலகாரம் செய்யும்போது எண்ணெய் வைக்கும் வேளையில் இஞ்சி சிறிது, சிறிது வாழைப்பட்டைத்துண்டு இவற்றை நசுக்கி எண்ணெயில் போட்டுப் பொரித்து எடுத்துப்போட்டு பிறகு பலகாரம் செய்தால் அதிக எண்ணெய் குடிக்காது. பலகாரத்திலும் எண்ணெய் வாசம் வராது.2.  வாழைத்தண்டின் மேல் பட்டையை நீக்கி தண்ணீர் நிறைந்த மெல்லிய பிளாஸ்டிக் பை ஒன்றில் முக்கி முடிச்சிட்டு வைத்தால் 15 நாட்களானாலும் கெடாது.3.  சீதாப்பழ விதைகளை வெய்யிலில் காய வைத்து அரிசி, பருப்பு டப்பாக்களில் போட்டால் பூச்சி, புழுக்கள் அண்டாது.

4.  மல்லியை முளைக்க வைக்க, ஒரு சமமான பலகையால் இலேசாக அழுத்தி எடுத்தால் போதும். முழுதாய்ப் போட்டால் முளைக்காது.

5.  அவசரமாக இட்லி மாவு புளிக்க மாவை ஹாட்பாக்ஸில் ஊற்றி வைக்கவும்.6.  மோர் புளிக்காதிருக்க சிறிது வெண்ணெய் உருட்டி அதில் போட்டு வைத்தால் மோர் புளிக்காது.7.  உபயோகித்த முட்டை ஒட்டை ஆங்காங்கே போட்டு வைத்தால் பல்லி வீட்டை விட்டு ஓடி விடும்.8..மழைக்காலங்களில் தீப்பெட்டிகளில் ஏழெட்டு அரிசி மணிகளைப்போட்டு வைத்தால் தீக்குச்சிகள் நமுத்துப்போகாது.

9. ஒரு கைப்பிடி பொரியை பொடித்து சேர்த்தால் ரவா உப்பும மிகவும் சுவையாக இருக்கும்.

படங்கள்: கூகிளுக்கு நன்றி!!
 

Friday 4 October 2013

முதற்பதிவின் சந்தோஷம்-தொடர்பதிவு!!

' முதல் பதிவின் சந்தோஷம் என்ற தொடர் பதிவில் கலந்து கொள்ளுமாறு சகோதரர் தமிழ் இளங்கோ என்னை சென்ற மாதம் அழைத்திருந்தார்கள். அவர்களுக்கு என் இதயம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்ளுகிறேன்.

முதல் பதிவென்பதை என் வாழ்க்கையில் இரண்டு மூன்று கட்டங்களாகப் பிரிக்க வேண்டியிருக்கிறது.

என் இளம் வயதுப்பருவம் முழுக்க முழுக்க புத்தகங்கள் தான் என் முதற்காதலாக, உற்ற சினேகிதியாக இருந்திருக்கின்றன. கல்கியின் ‘ சிவகாமியின் சபதமும்’ ஆங்கிலத்தில் ‘Denise Robins நாவல்களும் கீட்ஸ், ஷெல்லி, தாமஸ் மூர் இவர்களது கவிதைகளும் தான் அந்த வயதுக்கனவுகளில் வலம் வந்திருக்கின்றன.. அதனாலேயோ என்னவோ, மனதில் கதை எழுதும் தாகம் இருந்து கொண்டே இருந்தது. இளம் வயதில் அரசுப்பள்ளியில் ஓவிய ஆசிரியையாக பணி செய்த போது, ஒரு நாள் மனதில் அதுவரை தேக்கி வைத்திருந்த ஆர்வத்தையெல்லாம் கொட்டி எழுதி
‘ பிரிந்து விட்ட பாதைகள் இணைவதில்லை’ என்ற சிறுகதையாக அப்போது, எழுத்தாளர் சாவியை ஆசிரியராகக்கொண்டு வெளி வந்து கொண்டிருந்த ‘ தினமணி கதிர்’ வார இதழுக்கு அனுப்பி வைத்தேன். எழுத்துலகில் இது தான் என் முதற்பதிவு.

அப்போதெல்லாம் பிரபல எழுத்தாளர்கள், தங்கள் முதல் சிறுகதை எத்தனை எத்தனை தொடர் முயற்சிகளைக் கண்டிருக்கின்றன என்று எழுதியதையெல்லாம் படித்திருந்ததாலோ என்னவோ கதை பிரசுரமாகுமா என்ற தவிப்போ, கனவோ ஏதுமின்றி, மற்ற என் வேலைகளில் மூழ்கி கிட்டத்தட்ட சிறுகதை அனுப்பியதையும் மறந்தே போனேன். ஒரு நாள் தினமணிக்கதிரைப் புரட்டியபோது, என் சிறுகதை என் பெயரில், ஓவியர் ஜெயராஜின் ஓவியங்களோடு வெளிவந்திருப்பதைப்பார்த்ததும், மகிழ்ச்சி, பிரமிப்பு எல்லாமே ஒரே நேரத்தில் மின்னல் போலத் தாக்கின. அதன் பின் வந்து சேர்ந்த ஆசிரியரின் கடிதம், ஊக்குவிப்பு, கதை எழுதியதற்கான அன்பளிப்பு எதுவுமே மனதில் ஊன்றிப்பதியாத அளவு நான் வானத்தில் மிதந்து கொண்டிருந்தேன் என்று தான் சொல்ல வேண்டும். நாற்பது வருடங்களுக்கு முன்னால் புகழ் பெற்ற வார இதழில் வெளி வந்த இந்த முதல் பதிவின் சந்தோஷத்தை இன்றைக்கு என்னால் வார்த்தைகளால் விவரிக்கத்தெரியவில்லை. ஆனால் மிக இளம் வயதில் கைகளில் வந்து விழுந்த புதையலாய், வரமாய் அதை நினைத்துக் கொண்டாடியது மட்டும் இன்னும் பசுமையாய் நினைவில் நிற்கிறது.

இணைய உலகில் முதற்பதிவு என்றால் அது ஒரு சமையற்குறிப்பு தான். www.mayyam.com என்ற வலைத்தளத்தின் உணவுப்பிரிவில் என் மகன் ஆர்வத்துடன் தொடங்கி வைத்தது தான் Mano’s Tamilnadu delicacies என்ற பகுதி. கணினியைப்பற்றி அதிகம் அறியாத காலம் அது. ஓரளவு இதைப்பற்றிய அறிவுடன் இதற்குள் நுழைந்த பிறகு தான் கணினி முன் உலகம் எத்தனை சிறியது என்று புரிய ஆரம்பித்தது. என் சமையல் பகுதி பல லட்சம் பேர்களால் பார்வையிடப்பட்டிருக்கிறது. எத்தனையோ பேர்களுக்கு சமையல் சொல்லிக்கொடுத்திருக்கிறேன். இதில் மன நிறைவும் சந்தோஷமும் கிடைத்திருக்கிறது. இதன் மூலம் தான் அறுசுவை நிறுவனர் பாபுவின் அழைப்பிற்கிணங்கி சமையல் நிபுணர்கள் திருமதி. கலைச்செல்வி சொக்கலிங்கம், திருமதி. ரேவதி  ஷண்முகத்துடன் இணைந்து ஒரு சமையல் போட்டியின் நடுவராக பங்கேற்க நாகைப்பட்டிணத்திற்குச் சென்றேன். அங்கே மிகப்பெரிய ஆச்சரியம் எனக்காக காத்திருந்தது. அறுசுவை நிறுவனர் என் உறவினர் என்ற செய்தி அனைவரும் உரையாடிக்கொண்டிருந்த போது யதேச்சையாகத் தெரிந்து மனதில் மிகவும் சந்தோஷம் ஏற்பட்டது. உலகம் சிறியது தான் என்ற உண்மை புலப்பட்டபோது பிரமிப்பேற்பட்டது. அதே அறுசுவையில் எல்லோருக்கும் பிரியமானவராக அறியப்பட்ட, வர்மக்கலைகள், மருத்துவம், ஆழ்நிலைத்தியானம் என்று தொடர்கள் எழுதிக்கொன்டிருந்த‌ திரு. ஹைஷ் கடைசியில் இதே மாதிரி என் உறவினர் என்று அறிந்த போது நம்ப முடியாத ஆச்சரியமும் மகிழ்ச்சியும் மனதில் சூழ்ந்தன. இணைய உலகத்தால் கிடைத்த அருமையான உறவுகள் இவை. இது தான் மிகப்பெரிய சந்தோஷம் என்று சொல்ல வேண்டும்.

தொடர்ந்து ஒரு சில வருடங்கள் என் சிறுகதைகள், ஓவியங்கள் சில
பிரபல பத்திரிகைகளில் வெளி வந்த பின் சூழ்நிலைகள் காரணமாக என்னுள் இருந்த கதாசிரியையை நான் உள்மனதிலேயே அதிக வருடங்கள் உட்கார வைத்து விட்டேன். காலச் சுழற்சியில் கடமைகள் முடிந்து எனக்கென்று சில மணி நேரங்கள் கிடைத்த போது,  எனக்கு மட்டும் வடிகால் இல்லையா என்று உள்ளே உறங்கிக்கொண்டிருந்த கதாசிரியை எழுந்து நின்று கேட்டதும் எனக்கென்று ஒரு வலைப்பூ ஆரம்பிப்பது குறித்து முயற்சிகளில் இறங்கினேன். கதைகள், கவிதைகள், மருத்துவம், ரசனை, சிந்தனை, கலைகள் என்று பல முத்துக்கள் இணைந்திருப்பதால் என் வலைப்பூ ‘முத்துச்சிதறல்’ ஆயிற்று. இது நாம் பெற்ற குழந்தை போல! எப்படி வேண்டுமானாலும் அலங்காரம் செய்யலாம், அழகு பார்க்கலாம்! இதை ஒரு நல்ல தளமாக உருவாக்குவதற்கு சினேகிதிகள் ஸாதிகா, ஆசியா, ஜலீலா உதவினார்கள். அவர்களுக்கு என் மனம் நிறைந்த நன்றியை இங்கே தெரிவித்துக்கொள்கிறேன். 

முதல் பதிவை 2010ம் ஆண்டு மார்ச் மாதம் 15ந்தேதி எழுதினேன். முதல் பதிவே குழந்தை வளர்ப்பு பற்றி இளம் அன்னையர்களுக்கு என் வேண்டுகோள் என்ற முறையில் அமைந்திருந்தது. முதல் பதிவு கொடுத்தது சந்தோஷமும் மன நிறைவும் கலந்த ஒரு உணர்வு!! எல்லாவற்றையும் விட, வலைப்பூவில் பதிவுகள் எழுதுவதும் பின்னூட்டங்கள் இடுவதும் நம் உணர்வுகளையும் அறிவையும் விசாலமாக்குகிறது என்பதுடன் அதிக தேடல்களை உண்டாக்குவதால் தனி உற்சாகமும் ஆர்வமும் எப்போதுமே மனதளவில் ததும்பிக்கொண்டேயிருக்கின்றன. இதன் மூலம் அருமையான நட்பும் அன்பும் தொடர்கதையாய் கிடைத்துக்கொண்டேயிருக்கிற்து. பதிவுலகின் மிகப்பெரிய சந்தோஷம் இது தான்!!