Sunday 30 October 2011

ரசனைக்கு எல்லையில்லை!!!

சமீபத்தில் நான் ரசித்த சிலவற்றை இங்கே உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.

முதல் முத்து ஒரு குட்டிக்கதை.

எந்த ஒரு விஷயத்திற்கும் பல கோணங்கள் உண்டு. தேர்ந்தெடுக்கும் கோணத்தைப்பொறுத்தே வாழ்க்கை வெற்றியாகவும் தோல்வியாகவும் அமைகிறது. ‘ வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ என்ற பழங்கால மொழி தான் ஞாபகம் வருகிறது இந்தக்குட்டிக்கதையை படிக்கும்போது. இனி கதை.. .. ..


மிகப்பெரிய ஷூ கம்பெனி ஒரு கிராமத்திற்கு தன் ஆட்கள் இரண்டு பேரை அனுப்பி, அங்கே ஷூ விற்பனை செய்வதற்கான வாய்ப்பு எப்படி இருக்கின்றன என்பதை அறிந்து வருமாறு சொல்லி அனுப்பியது.

சில நாட்கள் கழித்து, முதலாம் ஆள் ‘ இங்கே இருப்பவர்கள் யாரும் ஷூ அணிவதில்லை. இங்கே நம் ஷூக்கள் விற்பனையாவது கஷ்டம்’ என்று கம்பெனிக்குத் தகவல் அனுப்பியிருந்தான்.

இரண்டாவது ஆள், ‘ இங்கே யாருமே ஷூ அணிவதில்லை. அனைவருக்கும் காலணியின் முக்கியத்துவத்தை உனர்த்தினால் அனைவரையுமே நம் வாடிக்கையாளர்களாக ஆக்கி விடலாம்’ என்று தகவல் அனுப்பியிருந்தான்.

நம் கண்ணோட்டத்தைப் பொறுத்தே வாழ்க்கை எளிதாகவும் கடினமாகவும் தெரிகிறது’!

இந்த இரண்டாவது முத்து ஒரு மாத இதழில் படித்து வியந்த செய்தி. இதனால் கோழியின் விலையும் எதிர்காலத்தில் உயர்ந்து விடுமோ?


பெட்ரோல், டீசல் இவற்றின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதுடன், அவற்றால் வெளிப்படும் புகையால் சுற்றுப்புறச் சூழலும் மாசு படுகிறது. இதற்கு மாற்று எரிபொருளைக் குறித்த ஆய்வும் ஒரு பக்கம் நடைபெற்றுக்கொண்டே வருகிறது.

அதன் தொடர்ச்சியாக அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் கோழி மற்றும் மாட்டு இறைச்சியிலுள்ள கொழுப்பிலிருந்து சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பான, விமானத்திற்கான எரிபொருளைக் கண்டு பிடித்துள்ளனர். முதற்கட்ட சோதனையில் எரிபொருளின் தரம், இயந்திரங்களின் செயல் திறன், பாதுகாப்பு, அதன் நச்சுத்தனமை என்று எல்லா சோதனைகளிலும் கோழி எரிபொருள் வெற்றி பெற்றுள்ளது. விரைவில் கோழி எரிபொருள் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிகிறது.

மூன்றாவது முத்து நான் ஒரு வார இதழில். மிகவும் ரசித்துப் படித்த ஒரு வாசகம். எத்தனை தன்னம்பிக்கையான வாசகம்!

இது ஒரு ஆட்டோவின் பின்புறம் எழுதப்பட்டிருந்த வாசகம்:

நம்மால் முடியாதது யாராலும் முடியாது.

யாராலும் முடியாதது நம்மால் மட்டுமே முடியும்!




Monday 24 October 2011

இனிய தீபாவளிக்கு அன்பு வாழ்த்துக்களும் சுவையான இனிப்பும்!!

அன்பார்ந்த தோழமைகள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!








தீபாவளிக்காக, பதிவில் போட, வழக்கமான இனிப்புப்பலகாரங்களான பாதுஷா, லட்டு, ஜாங்கிரி, மைசூர்பாக் தவிர்த்து, என்ன இனிப்பு வித்தியாசமாக செய்யலாம் என்று நினைத்தபோது காரட் அல்வா, அதுவும் மைக்ரோவேவ் அவனில் செய்யலாம் என்று தோன்றியது. இதற்கு ஆகும் நேரம் ஏழே நிமிடங்கள் தான்! நெய்யும் குங்குமப்பூவுமாக காரட் அல்வா இதோ உங்களுக்கு!!



மைக்ரோவேவ் காரட் அல்வா

தேவையான பொருள்கள்:

காரட் துருவல்- 2 கப்
நெய்- 2 மேசைக்கரண்டி
சீனி- 5 மேசைக்கரண்டி
பால் பவுடர்- 3 மேசைக்கரண்டி
ஏலக்காய்-6
குங்குமப்பூ- சில இழைகள்
அலங்கரிக்க சீவிய சில பிஸ்தா இழைகள்

செய்முறை:

ஒரு மைக்ரோவேவ் பாத்திரத்தில் ஒரு மேசைக்கரண்டி நெய் ஊற்றி, அதன் மீது காரட் துருவலையும் போட்டு 2 நிமிடங்கள் HIGH-ல் சமைக்கவும்.

பிறகு பாத்திரத்தை வெளியே எடுத்து, ஒரு கரண்டியால் நன்கு கலக்கி மறுபடியும் 2 நிமிடம் HIGH-ல் சமைக்கவும்.

சீனியை ஏலத்துடன் பொடிக்கவும்.

பாத்திரத்தை வெளியே எடுத்து, சீனி, பால் பவுடர், குங்குமப்பூ சேர்த்து நன்கு கலக்கி மறுபடியும் 2 நிமிடங்கள் HIGH-ல் சமைக்கவும்.

மறுபடியும் பாத்திரத்தை வெளியில் எடுத்து நன்கு கிளறி, மீதமுள்ள நெய்யைச் சேர்த்து 1 நிமிடம் HIGH-ல் சமைக்கவும்.

மொத்தத்தில் ஏழு நிமிடங்களில் நெய் மணக்கும் சுவை மணக்கும் காரட் அல்வா தயார்!!

வாழ்த்துப்படங்களுக்கு கூகிளுக்கு நன்றி!!


Sunday 16 October 2011

என் அருமை அப்பா!


சில மாதங்களுக்கு முன் ஒரு மாத நாவலில் பின் பகுதியில் நான் ரசித்துப் படித்த ஒரு அழகான சிந்தனையை, நிதர்சனத்தைத்தான் இன்றைய பதிவாக நான் இங்கே வெளியிடுகிறேன். போகிற போக்கில் படிக்கிற விஷயமில்லை இது. இன்றைய வாழ்வின் எதார்த்தம் இது தான் . ஒவ்வொரு மகனும் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் அனுபவிக்கிற, நினைக்கிற விஷயங்கள் தான் இவை. இறுதியில் வருகின்ற வார்த்தைகளை நான் மிகவும் ரசித்தேன்.


ஒரு மகன் தன் அப்பாவைப்பற்றி என்ன நினைக்கிறான்?

4 வயதில்-

என் அப்பா தான் பெஸ்ட். அவரை விடச் சிறந்த அப்பா ஒருவரும் இல்லை.

6 வயதில்-

என் அப்பாவுக்கு எல்லோரையுமே தெரியும்.

10 வயதில்-

என் அப்ப நல்ல அப்பாதான். ஆனால் அவருக்கு அடிக்கடி கோபம் வருகிறது..

12 வயதில்-

ஹும்! நான் சின்னவனாக இருந்தபோது அப்பா என் மீது பாசமாக இருந்தார்.

14 வயதில்-

என் அப்பா தான் எல்லா விஷயத்தையும் சரியாகச் செய்வதாக நினைத்துக்கொண்டிருக்கிறார்.




16 வயதில்-


அப்பா அந்த காலது மனிதர். லேட்டஸ்ட் விஷயங்களே தெரிவதில்லை.

18 வயதில்-

அப்பா ஏன் இப்படி பல சமயங்களிலும் பைத்தியக்காரத்தனமாக நடந்து கொள்கிறார்?

20 வயதில்-

அப்பாவுடன் இருப்பதே கஷ்டமாக இருக்கிறது. அம்மா எப்படித்தான் இவரை சகித்துக்கொள்கிறாரோ?

25 வயதில்-


என் அப்பாவுக்கு என்ன ஆச்சு? நான் என்ன செய்தாலும் அதை எதிர்ப்பதையே முதல் காரியமாகச் செய்கிறாரே?

30 வயதில்-

என் மகனை சமாளிப்பது பெரியகஷ்டம்! நான் சின்னவனாக இருந்தபோது அப்பாவுக்கு எத்தனை பயந்து நடந்தேன்?

40 வயதில்-

ஹும்! அந்த காலத்தில் என் அப்பா என்னை அத்தனை ஒழுக்கத்தோடு வளர்த்தார். நானும் என் மகனை அப்படித்தான் வளர்க்க வேண்டும்!

45 வயதில்-

குழந்தைகளை-அதுவும் டீன் ஏஜ் குழந்தைகளை வளர்ப்பது மிகவும் கஷ்டம். என்னை அப்பா எப்படித்தான் சமாளித்தாரோ?

50 வயதில்-

எத்தனையோ கஷ்டங்களுக்கு மத்தியில் என் அப்பா எங்கள் எல்லோரையும் நன்றாக வளர்த்தார். எனக்கு ஒரு மகனையே ஒழுங்காக வளர்க்கத் தெரியவில்லை.

55 வயதில்-

என் அப்பா ஒரு தீர்க்கதரிசி. தனித்துவம் மிக்கவர்.

60 வயதில்-

என் அப்பா தான் பெஸ்ட். அவரை விடச் சிறந்த அப்பா ஒருவரும் இல்லை!

முதல் நிலைக்கு திரும்பவும் வருவதற்கு ஒரு மகனுக்கு 56 வருடங்கள் பிடித்திருக்கிறது. நல்ல வேளையாக உங்களுக்கு அத்தனை வயது ஆகவில்லையெனில், ஏன் தாமதிக்கிறீர்கள்? உடனடியாக உங்கள் அப்பாவுக்கு ஒரு ஃபோன் செய்து அவரை நீங்கள் மிகவும் நேசிப்பதாகச் சொல்லுங்கள்.


புகைப்படத்திற்கு நன்றி: கூகிள்

Monday 10 October 2011

நெஞ்சை அள்ளும் தஞ்சைத் தரணி- பகுதி-2

“வம்புலாஞ்சோலை மாமதிள் தஞ்சை”
என்று திருமங்கையாழ்வாரும்,

“இஞ்சி சூழ் தஞ்சை”
என்று கருவூர்த்தேவரும்,

“தஞ்சை மாநகர்” என்று
அருணகிரி நாதரும்

போற்றிப்பாடிய தஞ்சாவூரைப்பற்றி மேலும் இங்கே தொடர்கிறேன்.

சோழர் காலத்தில் செழித்து சிறந்திருந்த தஞ்சை, பிற்கால சோழ மன்னன் குலோத்துங்கன் மதுரைக்கும் பாண்டிய மன்னன் குலசேகர பாண்டியனுக்கும் இழைத்த தீங்குகளால், திரும்பவும் பாண்டிய மன்னன் மாறவர்மன் சுந்தரபாண்டியனால் முற்றிலுமாய் அழிக்கப்பட்டது. அதன் பின் மாலிக் காபூர் படையெடுப்பால் முழுவதுமாக தஞ்சை சூறையாடப்பட்டது. நாயக்க மன்னர்களும் மராட்டிய மன்னர்களும் மீண்டும் தஞ்சையை அழகிய, சிறந்த நகரமாக உயிர்ப்பித்தார்கள்.

தஞ்சை நகரம்

நான்கு திசைகளிலும் நான்கு பெரிய ராஜ வீதிகள், அதனை சுற்றி நாலு அலங்கங்கள், அதற்குள் குறுக்கும் நெடுக்குமாக அளவில்லா சந்துக்களும் அடங்கியது தான் பழைய தஞ்சை நகரம். அனைத்து திசைகளிலும் முக்கியமாய் தஞ்சை மருத்துவக்கல்லூரி தோன்றிய பின்னர் தஞ்சை நகர் நிறைய விரிவடைந்து விட்டது.

சோழர்களுக்குப்பிறகு நாயக்க மன்னர்களும் அதன் பின் மராட்டிய மன்னர்களும் தஞ்சையை ஆண்டதால் இன்றும்கூட பழைய தஞ்சையின் சில தெருக்களின் பெயர்களும் சந்துக்களின் பெயர்களும் அவர்கள் பெயரில் விளங்குகின்றன.

தஞ்சையில் ராஜராஜ சோழன் சதுக்கம், ராசேந்திர சோழன் சதுக்கம், தொல்காப்பியர் சதுக்கம், நக்கீரன் சதுக்கம் ஆகியவை தஞ்சையிலிருந்து பிரியும் குடந்தை, நாகை, பட்டுக்கோட்டை போன்ற முக்கிய சாலைகளின் சந்திப்புகளின் பெயர்களாகத் திகழ்கின்றன.

தஞ்சையின் நடுவே புது ஆறு எனச்சொல்லப்படும், கல்லணையிலிருந்து தஞ்சை பாசனத்துக்காக வெட்டிய கால்வாயான கல்லணைக்கால்வாயை பல நிலைகளில் பார்க்கலாம்.

இன்று தஞ்சையில் மருத்துவக்கலூரி ஒன்றும் இருக்கிறது. அதன் காரணமாக, எந்த நகரிலுமே இல்லாத அளவு மருத்துவர்கள் இங்கிருப்பதாக, முக்கியமாக தெற்கு அலங்கம் முழுவதும் பல்துறை மருத்துவர்கள் நிறைந்திருப்பது கின்னஸ் புத்தகத்திலும்கூட இடம் பெற்றிருப்பதாகச் சொல்லுகிறார்கள்.

ஆண்களுக்கென்று சரபோஜி கல்லூரி, பெண்களுக்கென்று குந்தவை நாச்சியார் கல்லூரி, சிறுசிறு தொழில் கல்லூரிகள், தஞ்சைக்கு வெளியே மணியம்மை தொழிற்பள்ளி, மணியம்மை பல்கலைக்கழகம், சாஸ்த்ரா பல்கலைக்கழகம் என்று கல்வி வளர்ச்சிக்கான கல்லூரிகள் இருக்கின்றன.

பரத நாட்டியம்



பரத நாட்டிய பல நிலைகளை ராஜராஜ சோழன் தான் முதன் முதலாக கல்லில் வடித்தான் என்று சொல்லப்படுகிறது. ‘சதிர்’ என்று சொல்லப்பட்ட தேவதாசி குலத்திற்கென்றே சொந்தமாகக் கருதப்பட்ட நடனம், பின்னாளில் ‘தஞ்சை நால்வர்’ என்ற அறிஞர்களால் உருமாற்றப்பட்டு ‘பரத நாட்டியமாக’ ஆடப்பட்டது. பிறகு வந்த நடன வல்லுனர்கள் வழுவூர் ராமையா பிள்ளை, பாலசரஸ்வதி, திருவையாற்றைச் சேர்ந்த ருக்மணிதேவி அருண்டேல், பந்தணை நல்லூர் மீனாட்சி சுந்தரம்-இவர்களால் பரத நாட்டியம் சிறப்பான நிலையை அடைந்தது.

தஞ்சை பெரிய கோவில்:

தஞ்சை பெரிய கோவில்
ஆயிரம் ஆண்டுக்கு முன் மாமன்னன் ராஜராஜ சோழன் தஞ்சையில் ஸ்ரீ ராஜராஜீஸ்வரம் எனும் பெரிய கோவிலை கி.பி., 1006ல் தொடங்கி, 1010 ல் கட்டி முடித்தான். இக்கோயிலில் உள்ள கல்வெட்டுக்கள் சோழர்கால தமிழகத்தின் வரலாறு, கல்வெட்டியல், அரசியல், கட்டடக்கலை, சிற்பம், ஓவியம், நடனம், இசை ,சமுதாயச் சிறப்புகள், இறைக் கொள்கை ஆகியவற்றை நமக்கு பெருமிதத்துடன் தெரிவிக்கிறது. இக்கோயில் யுனெஸ்கோ நிறுவனத்தின் உலக பாரம்பரிய நினைவுச் சின்னங்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளது. தன்னிடம் தஞ்சமடைய வருபவர்களை வரவேற்கும் முகத்துடன் இக்கோவிலின் முதல் வாயில் ‘அடையாத வாயில்’ என்ற பெயருடன் திறந்தே இருக்கிறது.

தஞ்சை பெரிய கோவிலைப்பற்றி ஏற்கனவே நான் விரிவாக எழுதியிருக்கும் பதிவுகளை இங்கே பார்க்கவும்.

சமயம் வளர்த்த தஞ்சை

தஞ்சையில் எல்லா சமயத்தவர்களுக்கும் வழிபாட்டுத்தலங்கள் உள்ளன. சைவ, வைணவம் தவிர, கிறிஸ்தவர்களின் திருச்சபைகள், கத்தோலிக்கர் தேவாலயங்கள், இஸ்லாமியர்களின் பள்ளிவாசல்கள், தர்க்காக்கள் அதிக அளவில் இருக்கின்றன. இது தவிர, கரந்தையில் ஆதீஸ்வரர் என்ற சமணக்கோவில் உள்ளது. தஞ்சை பெரிய கோவிலில் கருவறையின் தென்பாகத்திலும் கேரளாந்தகன் திருவாயிலிலும் புத்தர் சிலைகள் காணப்படுகின்றன. இவை தஞ்சையில் ஒரு காலத்தில் புத்த மதமும் செழித்திருந்தது என்று தெரிவிக்கிறது.

தமிழ் வளர்த்த தஞ்சை:

பழங்கால இலக்கியங்களில் ‘கருந்திட்டைக்குடி’ என்று அழைக்கப்பட்ட, தற்போது ‘கருத்தட்டாங்குடி’ என்று அழைக்கப்படும் ‘கரந்தை’ நகரம் தஞ்சைக்கு வெளியே வட திசையில் இருக்கிறது. இந்தக் கரந்தையில் தமிழ்ச்சங்கம் 1911-ம் ஆண்டு தொடங்கப்பட்டு பல்லாண்டுகளாக தமிழ்த்தொண்டாற்றி வருகிறது. இதில் முப்பது ஆண்டுகளுக்கு மேல் தமிழ்வேள் உமா மகேஸ்வரனார் தமிழை வளர்க்க அரும்பாடு பட்டார். தொல்காப்பியத்திற்கு மறுப்புரை எழுதிய தமிழ்ப்புலவர் சோமசுந்தரம் பிள்ளை என் தந்தை வழி பாட்டனார். அவருடைய ஓவியம் இன்றளவும் கரந்தை தமிழ்ச்சங்கத்தில் உள்ளது.  தமிழ்ப்புலவர் பவானந்தம் பிள்ளை பழைய சுவடிகளை தேடிப்பிடித்து அச்சேற்றிய பெருமைக்கு உரியவர்.
ராவ்சாகிப் ஆப்ரகாம் பண்டிதர் 1400 பக்கங்கள் கொண்ட ‘கருணாமிர்த சாகரம்’ என்ற பெரிய இசை நூலை வடித்தவர். இவர் பெயரில் தஞ்சை கீழவாசல் அருகே ஒரு சாலையே உள்ளது. இன்னும் தமிழ் அறிஞர்கள் வேதநாயகம் சாஸ்திரி, ராவ்பகதூர் சீனிவாசபிள்ளை, விபுலானந்த அடிகள், சிவக்கொழுந்து தேசிகர் போன்றவர்கள் தங்கள் தமிழாற்றலால் கரந்தை தமிழ்ச்சங்கத்திற்கு பெரும் தொண்டாற்றியவர்கள்.

தமிழ்ப்பல்கலைக் கழகம்


தமிழ்ப்பல்கலைக் கழகம்
 இப்பல்கலைக்கழகம் 1981-ல் மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரனின் ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்டது. தமிழ்நாட்டிலேயே தமிழுக்கென்று ஆரம்பித்த ஒரே பல்கலைக்கழகம் இது தான் என்று சொல்லப்படுகின்ற்து.



தமிழ் பல்கலைக்கழக முகப்பு
இங்கே இயல் இசை நாடகம் பயிற்றுவிக்கப்படுகின்றன. மொழி, இலக்கிய ஆய்வுகள் செய்வது, கல்வெட்டுக்கள் மற்றும் ஓலைச்சுவடிகளை புத்தகங்களாக வெளியிடுவது, அந்நிய நாட்டினர்க்கு தமிழ் கற்பித்தல் ஆகிய அரும்பணிகளை இந்த தமிழ்ப்பல்கலைக்கழகம் செய்து வருகிறது.

தென்னக பண்பாட்டு மையம்:

கலை மற்றும் பண்பாட்டினை வளர்ப்பதற்காகவும் பாதுகாப்பதற்காகவும் மத்திய அரசால் அமைக்கப்பட்டுள்ள தென்னகப் பண்பாட்டு மையம் தஞ்சாவூரில் தான் அமைந்துள்ளது. இது தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, மற்றும் கர்நாடகா ஆகிய நான்கு மாநிலங்களை உள்ளடக்கிய தென்னிந்தியாவின் தலைமை மையமாகும்.

தஞ்சை அரண்மணை



அரண்மணை தர்பார் ஹால்
 தஞ்சை அரண்மணையின் நுழைவாயில் கிழக்கு ராஜவீதியில் உள்ளது. ஆங்காங்கே பெரிய மற்றும் சிறிய கலையழகுள்ள கட்டடங்கள் காணப்படுகிறது. இவை நாயக்க மற்றும் மராத்திய மன்னர்களால் கட்டப்பட்டது. நுழைவு வாயிலில் மிகப்பெரிய முற்றம் உள்ளது.. பெரிய முற்றத்தின் வழி சென்றால் அங்கு பல தூண்களை உடைய பெரிய கூடம் உள்ளது.



கண்காணிப்பு கோபுரம்

தெற்கு பக்கத்தில் 190 அடி உயரமுடைய எட்டு அடுக்குகளை உடைய கூட கோபுரம் உள்ளது. இது கண்காணிப்பு கோபுரம் என அழைக்கப்படுகிறது. மன்னர்களின் படைக்கல கொட்டிலாக இந்த இடம் இருந்தது.


அருகே உயர்ந்த கோபுரம்

அருகே உயர்ந்த கோபுரம் ஒன்றும் உள்ளது. இவற்றின் மேலேறி நாயக்க மன்னர்கள் திருச்சி ஸ்ரீரங்கப் பெருமானை வழிபட்டதாகச் சொல்லப்படுகிறது. இந்த அரண்மனையில் நாயக்க, மராத்திய மன்னர்களின் தர்பார் ஹால் மற்றும் ராஜா சரபோஜி சரஸ்வதி மகால் நூலகம் ஆகியவை பார்க்கத் தகுந்த இடங்களாகும் மராத்திய /நாயக்க அரண்மனை கலைக்காட்சியகமாகவும் ,சரஸ்வதி மஹால் நூல் நிலையம் பழைய ஓலைச்சுவடிகளின் உறைவிடமாகவும் உள்ளன. இங்குள்ள கலைக்கூடத்தை நிறுவியவர் தமிழறிஞர் தொ.மு.பாஸ்கரத் தொண்டைமானும் கலெக்டராக இருந்த திரு. பழனியப்பனும்தான் என்று ஆய்வாலர்கள் தெரிவிக்கிறார்கள்..

சரஸ்வதி மஹால்




சோழர் காலத்தில் ‘ சரஸ்வதி பண்டாரம்’ என்று உருவாக்கப்பட்ட நூல் நிலையமே, மராட்டியர் காலத்தில் ‘சரஸ்வதி மஹால்’ என்று மாற்றப்பட்டது. இங்குள்ள நூலகத்தில் ஏறத்தாழ 4500 பழமையான புத்தகங்கள் உள்ளன. 30000க்கு மேல் ஓலைச்சுவடிகள் உள்ளன. அவை அறிஞர்கள், மன்னர்களால் கையொப்பமிட்டு வந்தவை என்று சொல்லப்படுகிறது. இதில் 300 ஆண்டுகள் நாயக்க மன்னர்களாலும் மராட்டிய மன்னர்களாலும் சேகரிக்கப்பட்ட எண்ணற்ற ஓலைச்சுவடிகள் சமஸ்கிருதத்திலும் தெலுங்கிலும் தமிழிலும் மராட்டிய மொழியிலும் உள்ளன.

சிவகங்கை பூங்கா

பெரிய கோவிலின் வடக்கே சிவகங்கை பூங்கா உள்ளது. 
பூங்காவின் உள்ளே
பூங்கா வழியே தெரியும் பெரிய கோவில் கோபுரம்

பூங்காவின் முகப்பு



பூங்காவிற்கருகே சிவகங்கைக் குளமும் நடுவேயுள்ள சிறு கோவிலும்


ஆயிரம் ஆண்டுகள் பழமையான யானைக்கால் மரம்

1000 ஆண்டுகள் பழமையான ஆலமரம் இங்குள்ளது. சுற்றிப்பார்க்க சிறு ரயில் வசதியும் உள்ளது. பொழுது போக்க ஒரு உகந்த இடமாக பலருக்கும் விளங்குகிறது.

தஞ்சை அருகே..

தஞ்சையிலிருந்து 12 கி.மீ தூரமுள்ள திருவையாறு சாஸ்திரீய இசைக்குப் புகழ் பெற்றது. தஞ்சைக்கும் திருவையாற்றிற்கும் இடையே காவிரி, வெண்ணாறு, வெட்டாறு, வடவாறு, குடமுருட்டி என்ற ஐந்து ஆறுகள் ஓடுவதால் அவற்றைச் சார்ந்த நகரம் திரு+ஐயாறு= திருவையாறு எனப்பெயர் பெற்றது.

தஞ்சைக்கு வெளியே அனைத்து திசைகளிலும் மாணிக்க வாசகர் , அப்பர், சுந்தரர், திருஞான சம்பந்தரால் பாடப்பெற்ற புகழ்பெற்ற கோவில்கள் சூழ்ந்த நகரம் தஞ்சை! நவக்கிரகங்களுக்கு தனித்தனிக் கோயில்களும், சரஸ்வதிக்கென்று தனிக்கோவிலும் தஞ்சை மாவட்டத்தில் மட்டுமே உள்ளன.

கலையழகு மிகுந்த தஞ்சையை நீங்களும் ஒரு முறை பார்க்க வாருங்களேன்!

இந்தத் தொடர் பதிவை



சகோதரர் ரமணி [தீதும் நன்றும் பிறர் தர வரா]

சகோதரி மஞ்சுபாஷிணி [கதம்ப உணர்வுகள்]

இருவரையும் தொடருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.


[அரண்மணை தர்பால் ஹால், பரத நாட்டிய புகைப்படங்களுக்கு நன்றி: கூகிள்]









Monday 3 October 2011

நெஞ்சை அள்ளும் தஞ்சைத் தரணி!!!

இது என்னுடைய நூறாவது பதிவு!


பின் தொடர்ந்தும் அருமையான பின்னூட்டங்கள் மூலமும் எழுதுவதற்கான உத்வேகத்தையும் ஆர்வத்தையும் தொடர்ந்து அளித்து வரும் அன்புத் தோழமைகளுக்கு என் இதயங்கனிந்த எண்ணிலா நன்றிகளை சமர்ப்பித்துக் கொள்கிறேன்!



*********************


சகோதரி ஸாதிகா ‘ என் ஊர் ‘ என்னும் தொடர்பதிவில் பங்கேற்குமாறு முன்பு கேட்டிருந்தார்கள். என்னுடைய நூராவது பதிவாக என் ஊரைப் பற்றி எழுதுவதில் பெருமிதமடைகிறேன்.

சோணாடு சோறுடைத்து என்று புகழ் பாடப்பட்ட சோழ நாட்டில் பல நூறு ஆண்டுகள் தலைநகராய் இருந்த தஞ்சாவூர் தான் என்னுடைய ஊர்.

பெயர்க்காரணம்:

தஞ்சன் என்னும் அசுரனை சிவபெருமான் வதம் செய்தபோது, தன் பெயரால் இவ்வூர் அழைக்கப்பட வேண்டுமென அசுரன் வேண்டியதால் இவ்வூர் தஞ்சாவூர் என்றானது என்று சொல்லப்படுகிறது. சிவபெருமான் இந்த ஊரில் தஞ்சபுரீஸ்வரர் என்ற திருப்பெயருடன் கோயில் கொண்டுள்ளார். இத்திருக்கோயில் தஞ்சாவூரிலிருந்து கும்பகோணம் செல்லும் சாலையில், பள்ளியக்ரஹாரத்திற்கு அருகில் இருக்கிறது. வைணவ சம்பிரதாயத்திலும்கூட மஹாவிஷ்ணுவே தஞ்சனை அழித்தார் என்றும், அதனால் தஞ்சை மாமணி நீலமேகப்பெருமாளாய் கோயில் கொண்டு இருக்கிறார் என்று நம்பப்படுகிறது. இந்த நீலமேகப்பெருமாள் கோயில் தஞ்சபுரீஸ்வரரின் கோயிலுக்கு நேரெதிரில் உள்ளது.என்பது வியப்புக்குரியது!

தஞ்சை என்பதற்கு “குளிர்ந்த வயல்கள் நிறைந்த பகுதி” என்று பொருள் என்றும் பழந்தமிழர் வரலாற்றில் கூறப்படுகின்றது. . “தண்+ செய்’ என்று பதம் பிரித்து இதற்கு பொருள் சொல்லப்படுகிறது.

கலைகள்

தமிழகக் கலைகளில் தஞ்சைக் கலைகளுக்குத் தனிச் சிறப்புண்டு.
இதைப் போலவே தஞ்சைக் கலைகளுக்கு உள்ள மதிப்பும் மரியாதையும் அளவிட முடியாது. இதற்குச் சான்றாகத் தஞ்சாவூர் வீணைகள், தலையாட்டிப் பொம்மைகள், ஐம்பொன் சிலைகள், தேர்ச் சிற்பங்கள், தஞ்சாவூர்த் தட்டுகள் இவற்றின் கலை நேர்த்தியைக் கூறலாம்.



தஞ்சாவூருக்குத் தெற்கே சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில்
அமைந்துள்ள. நாட்டரசன் கோட்டையில் வீணைகள்
சிறப்பாக உருவாக்கப் படுகின்றன. வீணை செய்யப்படும் பிற ஊர்களில் வீணையின் பாகங்கள் தனித்தனியே செய்யப்பட நாட்டரசன் கோட்டையில் மட்டும் ஒரே கலைஞரால் முழு வீணையும் செய்யப்படுவது குறிப்பிடத் தக்கதாகும். வீணை செய்யும் கலைத்தொழில் பல காலமாகப் பரம்பரை பரம்பரையாக இங்கு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பலா, வாகை மரங்களைக் கொண்டு வீணைகள் செய்யப் படுகின்றன.

ஏகாந்த வீணை, ஒட்டு வீணை என்ற இருவகையான வீணைகள்
தச்சர்களால் செய்யப்படுகின்றன. தஞ்சையில் வீணை செய்வதில் தேர்ச்சி மிக்க கைவினைஞர்கள் பலர் இன்றும் வாழ்ந்து வருகின்றனர். தமிழகக் கைவினைக் கலையின் பெருமை சொல்லும் தஞ்சாவூர் வீணைகள் வெளிநாடுகளுக்குப் பெருமளவில் ஏற்றுமதி செய்யப்படுவது குறிப்பிடத் தக்கதாகும்.

மிருதங்கப் பானை, உடுக்கை, நாகஸ்வரம், புல்லாங்குழல், உடுக்கை, தாளப் பானை (கடம்) என்று இசைக் கலையோடு தொடர்புடைய பல கைவினைக் கலைப் பொருட்களும் இங்கு உருவாக்கப் படுகின்றன. தஞ்சை சிவகங்கைப்பூங்காவின் வாயிலருகே வீணைகள் இழைத்துச் செய்யப்படுவதை இன்றும் நேரில் பார்க்கலாம்.

தென்னாட்டின் நெற்களஞ்சியமான தஞ்சைப் பகுதியில் நெல்மணி, ஏலக்காய் முதலியவற்றைக் கொண்டு அழகுற மாலை தொடுக்கின்றனர். தஞ்சாவூர்த் தலையாட்டிப் பொம்மை, தஞ்சாவூர் தட்டு, தூபக்கால் (விளக்கு) , பல்வேறு வடிவங்களில் அமைந்த வெண்கலத்தாலான பாக்கு வெட்டிகள், மீன் வடிவப் பல்லாங்குழிகள், வெற்றிலைப் பெட்டிகள், ஆபரணப் பெட்டிகள், உண்டியல், அகல் விளக்குகள் போன்றவையும் தஞ்சையில் பிரசித்தி பெற்றவை. உலோகங்கள் செய்வதிலும் தஞ்சை புகழ் பெற்று விலங்குகிறது. தஞ்சைக்கருகிலுள்ல நாச்சியார்கோவில் பித்தளை விளக்குகள் விற்கும் கலையுலகமாய் விளங்குகிறது.

மேற்கத்திய இசைக்கே உரித்தான வயலினைத் தமிழிசைக்கு ஏற்ப மாற்றியமைத்து முதன்முதலில் உபயோகித்தது தஞ்சையில்தான். மன்னர் சரபோஜி காலத்தில் கிளாரினெட் இசை, பாண்டு வாத்திய இசை முதன்முதலாக தமிழகத்தில் தஞ்சையில்தான் அறிமுகப்படுத்தப்பட்டது. லாவணிக்கச்சேரி உருவானதும் இங்கே தான். மகாராஷ்டிரத்திலிருந்து தஞ்சையில்தான் முதன்முதலாக ஹரிகதாகாலட்சேபம் அறிமுகம் செய்யப்பட்டது.  தஞ்சையின் குறுக்குச் சந்துகள் மிகப் பிரபலம். இங்கே தான் நாடகக் கலைஞர்கள், பொய்க்கால் குதிரை நாட்டியக்காரர்கள் வசிக்கிறார்கள்.

தொடர்கிறது.. .. ..
படங்களுக்கு நன்றி: கூகிள்