Tuesday 27 November 2012

சமையலறை நிவாரணிகள்!!


நம் சமையலறையில் நாம் அன்றாடம் உபயோகிக்கும் சில பொருள்கள் நமக்கே தெரியாமல் பல பிரச்சினைகளுக்கு நிவாரணிகளாய் உதவிக்கொண்டிருக்கின்றன. அபப்டிப்பட்ட பொருள்கள் சிலவற்றைப்பற்றிய குறிப்புகள் இங்கே.. ..!!
1. எவர்சில்வர் காஸ் அடுப்பு, குளியலறையில் உள்ள மார்பிள் தரை, கண்ணாடி பாத்திரங்கள், கார் கண்ணாடி, பல் செட், டைனிங் டேபிள் இவற்றை சுத்தம் செய்ய வினீகர் பெரிதும் உதவுகிறது.
2. வினீகர் கலந்த நீரில் பாதங்கள் மூழ்கும் வரை அரை மணி நேரம் வைத்திருந்து பிறகு கழுவினால் கால் விரல்களிலுள்ல நகங்களில் மறைந்திருக்கும் அழுக்கு வெளியேறி, நகங்கள் சுத்தமாகின்றன.
 
3. வெற்றிலைக்கறை துணியில் பட்டால் அந்த இடத்தில் வினீகரை ஊற்றித் தேய்த்துக் கழுவினால் கறை மறைந்து விடும்.
4. அலுமினிய குக்கரின் உட்புறம் கறுப்பாக இருந்தால் சிறிது வினீகரைத் தடவி 15 நிமிடங்கள் கழித்து சிறிது நீர் ஊற்றிக் கொதிக்க விட்டால் கறை நீங்கி குக்கர் பளிச்சிடும்.
5. வினீகருடன் சாக் பவுடரைக் கலந்து பூசி வாஷ் பேசினைக் கழுவினால் கறைகள் நீங்கி வாஷ் பேசின் பளிச்சிடும்.
6. ஒரு கப் தண்ணீரில் ஒரு ஸ்பூன் வினீகர் கலந்து ஃபிரிட்ஜைத் துடைத்தால் வாடை நீங்கி, கறைகள் நீங்கி பளிச்சென்று ஆகும்.
7. குழந்தைகளின் வெண்ணிற யூனிஃபார்ம்களைத் தோய்க்கும்போது, 2 ஸ்பூன் வினீகர் கலந்த நீரில் அலசி, பிறகு நீலம் போட்டால் துணிகள் தும்பைப்பூவாய் காட்சியளிக்கும்.
8. பச்சையாக மாறி விட்ட பித்தளைப்பாத்திரங்கள் வினீகரும் உப்பும் கலந்து தடவி, ஊறவைத்து, பிறகு தேய்த்துக்கழுவினால் பளிச்சென்றாகும்.
9. சமையலறையிலுள்ள அலமாரிகளின் தட்டுக்களை வாரம் இரு முறை வினீகர் கலந்த நீரால் துடைத்து வந்தால் பூச்சித்தொல்லைகள் உங்களை அண்டாது.
 
 
10. பாத்திரங்களிலுள்ள ஸ்க்ரூ துருப்பிடித்துக் கொண்டால், வினீகரை இரண்டு சொட்டு விட்டு, சிறிது நேரம் ழித்துத் திருகினால் ஸ்க்ரூவை சுலபமாக எடுக்க முடியும்!
11. ரப்பர் பாண்டுகள் ஒன்றோடொன்று ஒட்டாமல் இருக்க சிறிது முகப்பவுடரைக் கலந்து வைக்க வேண்டும்.
12. குடி தண்ணீர் ரொம்பவும் கலங்கலாக இருந்தால் ஏழெட்டு துவரம்பருப்பை அரைத்துக் கலந்து விட்டால் தண்ணீர் தெளிவாகி விடும். ஒரு குடம் தண்ணீருக்கு இந்த அளவு துவரம்பருப்பு போதும்.
 
13. துவரம்பருப்பு வேகும்போது ஒரு தேங்காய்த்துண்டை நறுக்கிப்போட்டால் துவரம்பருப்பு வெண்ணெய் போலக் குழைந்து வேகும்.
14. ஃப்ளாஸ்கில் காப்பி வைத்து அடிக்கடி உபயோகிக்கிம்போது, அதை எத்தனை கழுவினாலும் தண்ணீர் உலர்ந்த பிறகு ஒரு வாடை அப்படியே தேங்கி நிற்கும். இதை நீக்க, நியூஸ்பேப்பரை சிறு துண்டுகள் செய்து அதில் போட்டு ஃப்ளாஸ்க் நிறைய நீர் விட்டு 12 மணி நேரம் வைத்திருந்து பிறகு கழுவி வைத்தால் அந்த வாடை இருக்கவே இருக்காது.
 
 
 

Monday 19 November 2012

ரசித்த முத்துக்கள்!!!

இன்றைய பதிவு ரசித்த முத்துக்களைத் தாங்கி வருகிறது. ரசனையில்லையென்றால் வாழ்க்கையில் சுவாரஸ்யமில்லை! இன்றைய மின்வேக வாழ்க்கையில் எதையுமே நின்று நிதானித்து ரசிக்கும் அளவுக்கு நேரமும் பலருக்கு இருப்பதில்லை. பொறுமையும் இருப்பதில்லை. இயற்கையழகும் புத்தகங்களும் திரைப்படங்களும் குழந்தையின் மென்சிரிப்பும் நம்மிடமிருக்கும் ரசனையுணர்வை என்றுமே வெளிக்கொணரத் தவறுவதில்லை! அளவுகோல்கள் தான் வித்தியாசப்படுகின்றன ஒவ்வொரு மனிதனிடமும்!

ரசித்த சிறுகதை:
24-10-12 தேவி இதழில் வெளி வந்த இந்த சிறுகதை என்னை மிகவும் நெகிழச் செய்தது!.
திருமணமான பிள்ளைகளுடன் வெளியூரில் ஒன்றாக இருக்கும் அளவு மனம் ஒப்பாமல் பெரியவரும் அவர் மனைவியும் தனிக்குடித்தனமாக ஒரு கிராமத்தில் வாழும் வாழ்க்கையை மிகவும் நளினமாகச் சொல்லுகிறது இந்தச் சிறுகதை! பெரியவர் மழைத்தூறலினூடே நடந்து செல்ல ஆசைப்படும்போது கதை ஆரம்பிக்கிறது. மனைவியின் தொடர்ந்த மறுப்பிற்கிடையே பிடிவாதம் பிடித்து மழைத்தூறலினூடே நடந்து செல்லும் அவர் குப்பைத்தொட்டியில் ஒரு நாய்க்குட்டியைக் கண்டு பிடித்து மனைவியிடம் கொண்டு வருகிறார். பாலூற்றிக்கொடுத்த அவர் மனைவியின் கால்களை நக்கியபடியே அவள் காலையே சுற்றி சுற்றி வருகிறது அந்த நாய்க்குட்டி. அதை அதன் தாயிடம் திரும்பக் கொண்டு விடும் எண்ணத்துடன் அவர் கிளம்ப, அவர் மனைவியும் அவருடன் கிளம்புகிறாள். வழியில் டீக்கடைக்காரர் ‘ என்ன இது ஆத்தாவும் இன்றைக்கு உங்களுடன் வந்துட்டுது?’ என்று கேட்கும்போது தான் அவருக்கு மனைவியை எங்கேயுமே தான் வெளியிலேயே அழைத்துச் செல்வதேயில்லை என்பது புரிகிறது. ‘ நானாவது இப்படி வெளியே அடிக்கடி நடந்து செல்கிறேன். எனக்கு மட்டும்தானா தனிமை? என்னுடனேயே வாழ்ந்து தேய்ந்து எனக்காவே இப்போதும் மூச்சு விடும் இவளை, வீட்டினுள்ளேயே 24 மணி நேரமும் அடைந்து கொண்டிருக்கும் இவளை தனிமை எத்தனை தூரம் கக்ஷ்டப்படுத்தும்? ஒரு வேளை பால் ஊற்றியதற்கே அந்த நாய்க்குட்டி அவளை சுற்றிச் சுற்றி வருகிறதே, அந்த நாய்க்குட்டிக்கு இருக்கும் நன்றி உணர்ச்சி கூட இல்லாமல்தானே இது வரை இருந்திருக்கிறேன்?’ என்று மனதிற்குள் குமைகிறார் அவர். அந்த நாய்க்குட்டியும் திரும்பப் போகாமல் கீழே விட்டும் அவள் காலையே சுற்ற, அவளின் விருப்பப்படி அந்த நாய்க்குட்டியை வீட்டுக்கு எடுத்து வருகிறார்கள் இருவரும். திரும்பவும் அவர்கள் வாழ்க்கை பழையப்டியே சென்றாலும் அவர்கள் தனிமை அந்த நாய்க்குட்டியால் மாறுகிறது. தனக்கும் பணிவிடைகள் செய்து, அந்த நாய்க்குட்டியையும் அன்போடு கவனிக்கும் அவளை அன்புடன் ரசிக்கும்போது, திரும்பவும் மழையை ரசிக்க இப்போதெல்லாம் அவர் நினைப்பதில்லை!!
                            @@@@@@@@@
குழந்தைகள் அறிவுத்திறனில் சில சமயங்களில் பெரியவர்களாக இருந்தாலும் பல சமயங்களில் அவர்கள் சிறு குழந்தைகள் தான் என்பதை பெரியவர்கள் உணர்வதேயில்லை! அப்படிப்பட்ட ஒரு பாட்டிக்கு ஒரு பேரன் கொடுக்கும் நெத்தியடி இது!
ரசித்த உரையாடல்:
பாட்டி: என்னோட பிறந்த நாளுக்கு என்ன பரிசு தரப்போறே?

பேரன்: ஃபுட் பால்

பாட்டி: என்னாலே ஓடியாடி விளையாட முடியாதே!

பேரன்: நீ மட்டும் எனக்கு பகவத் கீதை வாங்கித் தந்தாயே?
                                                         @@@@@@@@@@
ரசித்த வாசகம்:
உதிரும் மலருக்கு ஒரு நாள் மரணம்.
பேசாத அன்புக்கு தினம் தினம் மரணம்!
அதனால் என்றுமே உறவுகளை நேசியுங்கள்!
அன்பை சுவாசியுங்கள்!

 

Monday 12 November 2012

ஆல்ப்ஸ் மலைகளூடே ஒரு பயணம்!!-பகுதி- 6!!


 
                அன்புச் சகோதரர்கள், சகோதரிகள் அனைவருக்கும் இதயம் நிறைந்த  
                                தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!
                         **************
ஆல்ப்ஸ் மலைகளூடே கடந்து வந்த பயணத்தின் இறுதி நாள்.. ..

மாவீரன் நெப்போலியனால் 200 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட ஆர்க்-டி-ட்ரியாம்பே என்ற அழகிய கட்டிடத்தைப் பார்த்தோம். நம் இந்தியா கேட் போல இருக்கிறது. இதில் பிரெஞ்சுப் புரட்சியில் போரிட்டு வீர மரணம் எய்தியவர்களது பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இந்த வளைவின் உச்சியில் இருக்கும் 30 கேடயங்களும் நெப்போலியன் போரிட்டு வென்ற நாடுகளைக் குறிக்கின்றன. இந்த இடத்தைச் சுற்றி அமைந்துள்ள பன்னிரெண்டு தெருக்களுக்கும் பிரெஞ்சு ராணுவத்தலைவர்களின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. இதன் உச்சியில் அமைந்துள்ள OBSERVATION CLOCK மூலம் பாரிஸ் முழுவதையும் பார்க்கலாம்!!

ஆர்க்-டி-ட்ரியாம்பே

ஆர்க்-டி-ட்ரியாம்பேயின் இன்னொரு தோற்றம்!!

ஆர்க்-டி-ட்ரியாம்பே- மிக அருகில் !
இறுதி நாளன்று, இந்த இடத்தையும் மறுபடியும் ஈஃபில் டவரையும் பார்க்கவும் ஷாப்பிங் செய்யவும் ஒரு தமிழரின் டாக்ஸியை ஏற்பாடு செய்திருந்தார் பாரிஸிலிருக்கும் எங்கள் நண்பரொருவர். அதனால் நிதானமாக எல்லாம் பார்த்து முடித்து, நண்பர்களுக்கும் எங்களுக்கும் அன்பளிப்புப்பொருள்கள் சில வாங்கி முடித்த போது மதியம் 12 மணி ஆகி விட்டிருந்தது.

ஸீன் ஆற்றுப்பாலத்தருகே அசத்திய சிற்பங்கள்!!

இருவர் மட்டுமே செல்லக்கூடிய கார்!
பாரிஸ் கடைத்தெருக்களில் குட்டி குட்டியாய் ஓடும் சிறு சிறு கார்களைப் பார்த்து அதைப்பற்றி விசாரித்தோம். இருவர் மட்டுமே அமர வசதியுள்ல அந்தக் கார் ஓட்ட லைசென்ஸ் தேவையில்லை என்றும் வீதிகளில் மட்டுமே அதை ஓட்ட முடியும் என்றும் ஹைவேக்களில் அதை ஓட்ட அனுமதி இல்லை என்றும் தமிழ் ஓட்டுனர் தகவல் சொன்னபோது ஆச்சரியமாக இருந்தது.
பசி வயிற்றைக் கிள்ள, எங்கேனும் தமிழ் ஹோட்டலுக்கு அழைத்துச் செல்லச் சொன்னபோது, அவர் சிரித்தபடியே எங்களை அழைத்துச் சென்று ஒரு தெருவில் இறக்கி விட்டார். ‘ இங்கே பார்க்கிங் செய்ய முடியாது. சாப்பிட்டதும் என்னை அழையுங்கள்’ என்று சொல்லிச் சென்றார்.
அந்த வீதியில் நடந்த போது, பாரிஸ் என்ற உணர்வு மறைந்து போய் சென்னையில் இருக்கும் உணர்வு ஏற்பட்டது. அந்தளவிற்கு, தெரு முழுக்க தமிழ்ப்பெயர்களில் கடைகளும், ஹோட்டல்களும் நிரம்பியிருந்தன! அன்னபூர்ணா ஹோட்டல், கணேஷ் பவன், கிருஷ்ண பவன், செட்டிநாடு உணவகம் என்று வரிசையாக பெயர்கள்!! ஒரு வழியாக செட்டி நாடு உணவகத்தில் நுழைந்து மூன்று சாப்பாடுகளுக்கு ஆர்டர் செய்து விட்டு அமர்ந்தோம், சாதம், வற்றல் குழம்பு, சாம்பார், கறி வகைகள் என்று வர வர, என்னவோ புதுசாய் சாப்பாட்டைப் பார்க்கிற மாதிரி பிரமை ஏற்பட்டது. 8 நாட்களாய் ரொட்டி, கேக் வகைகள், வெண்ணெய், முட்டை என்று சாப்பிட்டு வரண்டு போயிருந்த நாக்கிற்கு தேவாமிர்தமாக அந்த சாப்பாடு கடகடவென்று உள்ளே இறங்கியது. நாங்கள் ஒரு வார்த்தை கூட பேசிக்கொள்ளாமல் சாப்பிட்டு முடித்தோம். இத்தனை ருசிசொயாக சாப்பிட்டதேயில்லையென்று கூடத் தோன்றியது!! ‘ சொர்க்கமே என்றாலும் அது நம்மூரு போல வருமா?” என்ற பாடல் தான் நினைவில் எழுந்தது.
உண்மை தான்! 
சரித்திரங்கள் பேசும் குடைவரை கோவில்கள், பிரமிக்க வைக்கும் சிற்பங்கள், புகழ் பெற்ற கோட்டைகள், அழகிய அரண்மனைகள், அருவிகள், ஆறுகள், பிரம்மாண்டமான மலைகள், நீர்த்தேக்கங்கள், ஓவியங்கள் என்று நம் இந்தியா முழுவதும் தங்கச் சுரங்கங்கள் கொட்டிக்கிடக்கின்றன! இந்திய சுற்றுலாத்துறையின் முழு கவனமும் அக்கறையும் முழுமையாக இவற்றில் பதிந்தால் இத்தனையும் வெளி நாட்டினர் மத்தியில் எந்த அளவு பகழ் பரப்பும்! எத்தனை பிரமிப்பைத்தரும், நாங்கள் இங்கே பிரமித்து நின்ற மாதிரி!!
 
பாரிஸை விட்டு விமானம் மேலோக்கிப் பறந்த போது இத்தனையும் நினைவில் எழ, மனதில் ஏக்கம் தான் சூழ்ந்தது!!

Monday 5 November 2012

ஆல்ப்ஸ் மலைகளூடே ஒரு பயணம்!!-பகுதி- 5!!



பாரீஸ் நகரின் அழகு!
பாரீஸில் இரண்டு நாட்கள்தான் தங்கியிருந்தோம். இந்த இரண்டு நாட்களில் பாரீஸின் கலைப்பொக்கிஷங்கள் எதையுமே முழுமையாகப் பார்த்து விட இயலாது என்பது பிறகு தான் புரிந்து கொள்ள முடிந்தது.
டிஸ்னிலாண்ட் முகப்பு
முதல் நாள் டிஸ்னிலாண்ட் சென்றோம். இதுவுமே காலை 10 மணிக்குச் சென்று மாலை 5 மணி வரை அங்கிருந்தாலும் அதை முழுவதுமாகச் சுற்ற நேரம் பற்றாது போனது. கலையுணர்வு கலந்து மின்னிய கட்டிடங்கள், சிறு சிறு கடைகள், உணவகங்கள்- இவற்றில் ஒரு பகுதியைத்தான் பார்க்க முடிந்தது.
உள்ளே ஒரு அழகான வாயில்!
இது ஒரு கனவு மாளிகை!
இன்னொரு அழகிய முகப்பு!
 
டிஸ்னிலாண்ட் உள்ளேயுள்ள‌ டாய்லட்டின் தோற்ற‌ம்!
ஒரு தெருவின் முகப்பு!
தெருவில் வரும் அழகிய ரயில் வன்டி!

ரயிலில் ஒரு அழகு!

உள்ளே ஒரு கடையின் பிரம்மாண்டமான அழகு!

கடையில் உள்ள ஒரு அழகிய சிற்பம்!
பாரீஸைச் சுற்றிப்பார்க்க வேண்டுமென்றால் நன்கு நடக்க வேண்டும். சாதாரண கட்டிடங்கள் கூட கலையழகு கொண்ட முகப்புகளைத் தாங்கியுள்ளன. ஸ்விட்சர்லாந்திலாவது அங்கேயுள்ள மக்கள் சற்று ஆங்கிலம் பேசினார்கள். இங்கே, பாரீஸிலோ பிரஞ்சு மக்கள் ஆங்கிலம் பேசுவதில்லை. இதை டூர் ஆரம்பிக்கும்போதே எச்சரித்து சொன்னார்கள். அது தான் உண்மையாக இருந்தது. நல்ல வேலையாக, என் மகனின் படிப்பும் வேலையும் டூரிஸம் சார்ந்தது என்பதாலும் பிரெஞ்சும் அறிந்தவர் என்பதாலும் எங்களுக்கு எந்தப்பிரச்சினையும் எழவில்லை.
இங்கும் வானை முட்டும் கட்டிடங்களைப் பார்க்க முடியவில்லை. எல்லாமே பார்த்தவரையில் ஒரளவு உயர்ந்த மாடிக் கட்டிடங்கள் தான். பொதுவாய் பாரீஸை 24 மணி நேரமும் சுற்றிக்காட்டும் பஸ்கள் இருக்கின்றன. டிக்கெட் வாங்கிக்கொண்டால் எங்கு வேண்டுமானாலும் இறங்கி சுற்றிப்பார்த்து விட்டு மறுபடியும் அதே மாதிரி பஸ்ஸில் ஏறி வேறு இடம் சென்று
 
இறங்கிக்கொள்ளலாம். இந்த மாதிரி வசதி இங்கே துபாயிலும் உண்டு! பஸ்ஸில் நாம் உட்கார்ந்திருக்கும் இருக்கையிலேயே ஸ்பீக்கர் இருக்கிறது. ஹெட்ஃபோனும் இருக்கிறது. அதை எடுத்து காதில் பொருத்திக்கொண்டு, எந்த மொழி வேண்டுமோ அதைத் தட்டினால் அந்த மொழியில் முன்பே பதிவு செய்யப்பட்ட சுற்றுலா இடங்களின் தகவல்களை அந்தந்த இடங்கள் வந்ததும் மிகச் சரியாக நமக்கு விவரிக்கின்றது.
இங்கு பூமிக்கடியில் கார் நிறுத்தங்களுக்கான இடங்களும் ரயில்கள் செல்வதுமாக அமைந்திருப்பதால் தெருக்களில் கூட்ட நெருக்கடி என்பது இல்லை.
பாரீஸ் 105 சதுர கிலோ மீட்டர்கள் அளவுள்ல சிறிய நகரம் தான். சீன் ஆற்றின் இரு கரையிலும் தான் நகரின் முக்கிய கட்டிடங்கள் அதிகம் இருக்கின்றன. சரித்திர பின்னணி கொண்ட 32 பாலங்கள் இந்த நதிக்கு இருக்கின்றன. அழகிய பாலங்கள் அமமந்த ஒரே நதி உலகில் இது மட்டுமே!
சீன் ஆற்றின் இரு புறமும் மக்கள் கூட்டம் கூடமாக பேசிக்கொண்டும் உணவருந்திக்கொண்டும் இயற்கையை ரசித்துக்கொண்டும் அமர்ந்திருக்கிறார்கள். நமது அகண்ட காவேரி நினைவுக்கு வராமல் இல்லை. காவிரியின் கரையோரம் அமர்ந்து இயற்கை அழகை ரசிக்க நமக்கு எங்கே நேரம் இருந்திருக்கிறது?
 
மாலையில் ஈஃபில் டவரைப் பார்க்கச் சென்றோம். உலக அதிசயங்களில் ஒன்றான இது 986அடி உயரத்தில் கம்பீரமாக நிற்கிறது. 1889 ஆம் ஆண்டு அலெக்ஸாண்ட்ரே கஸ்டாவ் ஈஃபில் என்பவரால் ப்ரெஞ்சுப்புரட்சியின் நூற்றாண்டைக்குறிக்கும் ஒரு பொருட்காட்சிக்காக நிர்மாணிக்கப்பட்டது. இது மூன்று தளங்களைக் கொண்டுள்ளது. மேலே ஏற படிக்கட்டிடங்களும் உண்டு. கேபிள் கார் போன்ற அமைப்புடைய லிஃப்ட் வசதியும் உண்டு.



பல்லாயிரக்கணக்கான இரும்புத்தகடுகளையும் ஏழு மில்லியன் இரும்பு ஆணிகளையும் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது இது. இங்கே, துபாயில் உலகின் மிக உயர்ந்த கட்டிடமான ‘பூர்ஜ் கலீஃபா’ வைப் பார்த்து விட்டதாலோ என்னவோ, ஈஃபில் டவர் எந்த விதமான தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்று தான் சொல்ல வேண்டும்!

தொடரும்.. .. ..