Sunday 23 November 2014

குளோபல் வில்லேஜ் கண்காட்சி!!!

 
இங்கே, துபாயில் வருடா வருடம் குளோபல் வில்லேஜ் என்ற அரங்கத்தினுள் பல நாடுகள் தங்கள் பொருட்களை வைத்து கண்காட்சி நடத்துகின்றன. இந்த கண்காட்சி அக்டோபர் முதல் பிப்ரவரி வரை நடக்கும். இந்தியா மற்றும் உலகத்தின் பல நாடுகளிலிருந்தும் இலட்சக்கணக்கான மக்கள் இந்தக் கண்காட்சிக்கு  வந்த வண்ணம் இருப்பார்கள். இந்தியா உள்பட பல நாடுகளில் விமான பயணச்சேவை செய்யும் நிறுவனங்கள் விமானப் பயணச்சீட்டு, விசா உள்பட எல்லாமே மிகக்குறைந்த விலையில் தரும்.
அரங்கத்தினுள் தின்பண்டங்கள், பழங்கள், உணவிற்கான தனி ஸ்டால்கள் அங்கங்கே அமைந்திருக்கும். கூடவே அங்கங்கே சுத்தமும் மிக அழகுமாய் கழிப்பறைகள்..
நான் எப்போதுமே இந்தக் கண்காட்சியைப்பார்க்கத் தவறுவதிலை. காரணம் ஒவ்வொரு நாடும் அதன் அரங்கத்தை அத்தனை அழகாய் அமைத்திருக்கும்.இந்த முறையும் சென்று ரசித்து வந்தேன். ஆனால் நேரமின்மையால் அனைத்து நாடுகளையும் பார்த்து ரசிக்க முடியவில்லை. ரசித்தவரை சில புகைப்படங்கள் உங்களுக்காக......


இரான் அரங்கம்
கம்போடியா அரங்கம்
கம்போடியா நாட்டுப்பெண்ணின் அலங்காரம்! கூட நின்று போட்டோ எடுக்க எல்லோருக்கும் அவசரம்!
சிங்கப்பூர் மலேஷியா அரங்கம்

முகப்பு நுழைவாயில் பகல் நேரத்தில்!
முகப்பு நுழைவாயில் இரவு நேரத்தில்!
ஐக்கிய அரபுக்குடியரசு அரங்கம்
பாகிஸ்தான் அரங்கம்
குவைத் அரங்கம்
இடையிலே போகும் சிறு இரயில்!
பின்னணியில் அரங்கங்களுடன் ஒரு வித்தியாசமான கோணம்!

 
 

Thursday 13 November 2014

முத்துக்குவியல் -32!!

தகவல் முத்து:

காஸ்  சிலிண்டருக்கும் எக்ஸ்பைரி டேட் உண்டு. சிலிண்டரின் மேல் வ்ட்டமான கைப்பிடியைத்தாங்கிக்கொன்டிருக்கும் மூன்று பட்டியான கம்பிகளில் தான் நம் காஸ் சிலிண்டரின் எக்ஸ்பைரி டேட் போடப்பட்டிருக்கும். ஒரு வருடம் நான்கு காலாண்டுகளாய் பிரிக்கப்பட்டு அதற்கு ஒரு குறியீடும் இருக்கும். ஜனவரி முதல் மார்ச் வரை A என்றும் ஏப்ரல் முதல் ஜுன் வரை B என்றும் ஜுலை முதல் செப்டம்பர் வரை C என்றும் D அக்டோபர் முதல் டிசம்பர் வரை என்றும் குறிப்பிடப்படுகிறது. உதாரண்த்துக்கு காஸ் சிலிண்டரில் A 14 என்று இருந்தால் அந்த காஸ் சிலிண்டரை 2014ம் வருடம் மார்ச் வரை தான் உபயோகப்படுத்த முடியும் என்று அர்த்தம். காஸ் சிலிண்டர் வாங்கும்போது இதையும் கவனித்து வாங்க வேன்டும் என்பது முக்கியம்.

இலக்கிய முத்து:

கீரனின் சொற்பொழிவிலிருந்து:
வாழை, தென்னை, பனை எல்லாமே அவைகளாகவே மட்டையையும் ஓலையும் கொடுக்கும். ஈச்ச மரங்கள் மட்டும் அவைகளாகவே மட்டையையோ, ஒல்லையையோ தராது. அரிவாளைத்தூக்கினால் தான் மட்டையைக் கொடுக்கும். அதுபோல, கஞ்சர்கள் நல்ல காரியத்திற்கு பண உதவி செய்ய மாட்டார்கள். அரிவாளைத்தூக்கும் போக்கிரிகளுக்குத்தான் பணத்தை கொடுப்பார்கள்.

அசத்தல் முத்து:

எண்ணங்கள் பற்றி கவனமாக இருங்கள்
அவை வார்த்தைகளாக உருவாகுகின்றன.
வார்த்தைகளில் கவனமாக இருங்கள்
அவை செயலாக உருப்பெறுகின்றன!
செயல்களில் கவனமாக இருங்கள்
அவை பழக்கமாக உருவாகுகின்றன!
பழக்கங்களில் கவனமாக இருங்கள்
அவை ஒழுக்கமாக உயர்வு பெருகின்றன.
ஒழுக்கத்தில் கவனமாக இருங்கள்!
அது தான் உங்கள் வாழ்க்கையை உருவாக்குகின்றன!!


சமையல் முத்து:

உருளைக்கிழங்கு வறுவல் செய்யும்போது, ரோஸ்ட் செய்ததற்கான அழகிய நிறம் வர, வாணலியில் எண்ணெய் விட்டு ஒரு ஸ்பூன் சீனி போடவும். காயும் எண்ணெயில் சீனி உருகி, கரைந்து பழுப்பு நிறமாகி நுரைத்து புகைய ஆரம்பிக்கும். இது தான் ச்ரியான பதம். உட்ன்டியாக உருளைக்கிழங்கு வறுவல் செய்ய ஆரம்பிக்கலாம். சீனி போட்டத்தையே கண்டு பிடிக்க முடியாது என்பதோடு, சீக்கிரம் அழகிய தோற்றம் வந்து விடும்.

மருத்துவ முத்து:

திடீரென்று வயிற்றின் இடது புறம் சூட்டு வலி ஏற்பட்டால் 1 ஸ்பூன் சீரகம், சிறிது கல் உப்பு இரண்டையும் வாணலியில் போட்டு வறுத்து நன்றாக வெடித்து ஓரளவு கருகியதும் எடுத்து அம்மியில் பொடித்து வாயில் போட்டு தண்ணீர் குடித்தால் உடனேயே சூட்டு வலி மறையும்.

ரசித்த முத்து:

இது அவ்வையார், மனிதன் தன் வயிற்றை விளித்துப் பாடுவது போல அமைந்த பாடல்.
"ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய்
இருநாளுக்கு ஏலென்றால் ஏலாய் - ஒருநாளும்
என்நோ(வு) அறியாய் இடும்பைகூர் என்வயிறே
உன்னோடு வாழ்தல் அறிது."

மனிதன் தன் நாக்கைக்கட்டுப்படுத்தாமல் செய்யும் தவறுக்கு எதற்கு தன் வயிறை குறை சொல்ல வேன்டும் என்று நினைத்த ரமண மகரிஷி, வயிறு மனிதனை நோக்கிப் புலம்புவது போல பாடலை மாற்றிப் பாடினார்.
'' ஒரு நாழிகை வயிறு எற்கு ஓய்வு ஈயாய் நாளும்
  ஒரு நாழிகை உண்பது ஓயாய்
  ஒரு நாளும் என் நோவு அறியாய் இடும்பை கூர் என் உயிரே
  உன்னோடு வாழ்தல் அரிது''

பாடலின் பொருள் இதுதான்:
''மனிதனே! வயிறாகிய எனக்கு நீ ஒரு நாழிகை கூட ஓய்வு அளிப்பதில்லை. ஒரு நாழிகைகூட நீ சாப்பிடுவதை நிறுத்துவதில்லை. ஒரு நாளும் என் துன்பம் உனக்கு தெரிவதில்லை. எனக்குத் தொல்லை தரும் என்னுயிரே! உன்னோடு வாழ்தல் அரிது.''
அவ்வையார் எழுதிய் பாடலின் பொருளை விடவும் ரமண மகரிஷி எழுதியது தானே அர்த்தம் மிகுந்திருக்கிறது?