Thursday, 29 June 2017

முத்துக்குவியல்-46!!!

தகவல் முத்து:

திருப்பதி லட்டு அல்லது ஸ்ரீவாரி லட்டு

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வழங்கப்படும் லட்டு பிரசாதம் உலக பிரசித்தி பெற்றது. இந்த லட்டு பிரசாத விநியோகம் தற்போது 76-வது ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ளது. பல்லவர்கள் காலத்தில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதம் விநியோகிக்கும் முறை முதன்முறையாக அமல்படுத்தப்பட்டதாக கல் வெட்டு தகவல்கள் தெரிவிக் கின்றன

இந்த பிரசாதங்கள் ‘திருபொங்கம்’ என அழைக் கப்பட்டது. இக்காலகட்டத்தில் பக்தர்களுக்கு வெல்ல பணியாரம், அப்பம், வடை, அதிரசம் என்று ‘மனோஹரபடி’ எனும் பெயரில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இதில் வடை தவிர மற்ற பிரசாதங்கள் அதிக நாட்கள் தாக்குபிடிக்காமல் விரைவில் கெட்டு விடும் தன்மையில் இருந்தன.




இதனால் வடை பிரசாதத்திற்கு அதிக மவுசு இருந்தது. இதை கவனித்த அப்போதைய மதராஸ் அரசு, 1803-லிருந்து பிரசாதங்களை பக்தர்களுக்கு விற்கும் முறையை தொடங்கியது. அதன் பிறகே இனிப்பு பிரசாதமாக பூந்தி விநியோகம் செய்யப்பட்டது. தொடர்ந்து 1940 முதல் பூந்தி லட்டு பிரசாதமாக உருமாறியது.

லட்டு பிரசாதம் தயாரிக்கும் அளவை ‘திட்டம்’ என அழைக்கின்றனர். லட்டு தயாரிக்க பயன்படும் 51 பொருட்களை ஒரு ‘படி’ என்கின்றனர்.

இதன்மூலம் ஒரு படிக்கு 5,100 லட்டுகள் தயாரிக்கலாம். ஒரு படிக்கு பசு நெய் 185 கிலோ, கடலை மாவு 200 கிலோ, சர்க்கரை 400 கிலோ, முந்திரி 35 கிலோ, உலர்ந்த திராட்சை 17.5 கிலோ, கற்கண்டு 10 கிலோ, ஏலக்காய் 5 கிலோ உபயோகப்படுத்தப்படுகிறது.

லட்டு பிரசாதங்கள் ஆஸ்தான லட்டு, கல்யாண உற்சவ லட்டு, புரோக்தம் லட்டு என 3 வகையாக தயாராகின்றன. இதில் ஆஸ்தான லட்டு முக்கிய விழா நாட்களில் மட்டுமே தயாரிக்கப்பட்டு பிரமுகர்களுக்கு வழங்கப்படுகிறது.

கல்யாண உற்சவ லட்டு 750 கிராம் எடை கொண்டது. ரூ. 100க்கு இந்த லட்டுகள் கிடைக்கின்றன. தவிர கல்யாண உற்சவ சேவையில் பங்கேற்கும் பக்தர்களுக்கும் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

அடுத்ததாக, புரோக்தம் லட்டு. இது 175கிராம் எடை கொண்டது. இந்த வகை லட்டுகள் தான் ரூ.25க்கு பக்தர்களுக்கு விற்கப்படுகிறது.

திருமலையில் உள்ள ஏழுமலையான் கோயிலின் ஆக்னேய மூலையில் ‘போட்டு’ எனப்படும் பிரசாதங்கள் தயாரிக் கும் இடம் உள்ளது. திருமலைக் கோயிலின் சம்பங்கி பிரதாக்‌ஷணம் என்னும் இடத்தில் லட்டுகள் தயாரிக்கும் பொட்டு என்னும் மடப்பள்ளி உள்ளது. இங்கு பொருட்கள் சுமந்து செல்ல பயன்படுத்தப்படும் மூன்று கன்வேயர் பெல்ட்கள் பொருத்தப்பட்டுள்ளன, இவை மடப்பள்ளியில் இருந்து விற்பனையகத்துக்கு லட்டுக்களை கொண்டு செல்ல பயன்படுகின்றன. இங்குதான் அனைத்து பிரசாதங்களும் தயாரிக்கப்படுகிறது. இவை தயாரிக்கப்பட்ட பின்னர், ஏழு மலையானின் தாயாரான வகுல மாதாவிற்கு முதலில் படைக்கப் படுகிறது. அதன் பின்னரே மூலவருக்கு நைவேத்தியங்கள் படைக்கப்படுகின்றன.

1940-களில் விநியோகம் செய்யப்பட்ட லட்டு பிரசாதங்கள் கல்யாண உற்சவ லட்டு போன்று பெரிய அளவில் இருந்தன. அந்த காலகட்டத்தில் இவை 8 அணாவிற்கு விற்கப்பட்டன. பின்னர் இவை படிப்படியாக விலை உயர்த்தப்பட்டு இன்று ரூ.25க்கு பக்தர்கள் கைகளில் மகாபிரசாதமாக கிடைக்கிறது.

திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஏறக்குறைய 1.5 லட்சம் லட்டுக்களை நாளொன்றுக்கு தயாரிக்கிறது.ஏறக்குறைய 200 சமையல் பணியாளர்கள் லட்டு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். இந்த சமையல் பணியாளர்கள் பொட்டு கார்மீகலு என அழைக்கப்படுகின்றனர்.

அசத்தல் முத்து:

'கடத்தநாடன் களரி பயிற்சி மையம்' என்பதை 1949ல்  தொடங்கி 76 வயதிலும் கையில் வாளுடன் 'களரி' எனபப்டும் தற்காப்புக்கலையை கற்றுத்தருகிறார் மீனாட்ஷி அம்மா. இந்த மையம் கேரளாவில் கோழிக்கோடு மாவட்டத்தில் வடகரா என்னும் ஊரில் அமைந்திருக்கிறது. இந்த கேரளப்பெண்மணிக்கு சமீபத்தில் பத்மஸ்ரீ விருது கிடைத்திருக்கிறது.





ஏழு வயதில் களரியைக்கற்கத்தொடங்கிய இவர் தன் குருநாதர் ராகவனையே பதினேழு வயதில் மணந்தார். இவரின் கணவர் தொடங்கிய இந்த களரி மையத்தில் ஜாதி, மத வித்தியசங்கள் பார்ப்பதில்லை. ஆறு வயதில் தொடங்கி 26 வயது வயது வரை குழந்தைகளும் இளைஞர்களும் இளம் பெண்களும் இந்த தற்காப்புக்கலையைக் கற்க இங்கே சேர்க்கப்படுகிறார்கள்.  ஒவ்வொரு வருடமும் ஜுன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை இந்த மையம் பயிற்சி தருகிறது.




கணவரின் மறைவுக்குப்பிறகு மீனாட்சியே இந்தப்பயிற்சி மையத்தை நடத்தி வருகிறார். இதற்கு கட்டணம் ஏதும் கிடையாது.  மரபுவழிப்படி குருதட்சிணை மட்டுமே. உடல் வலிவை ஏற்படுவதோடு இந்தக் களரிப்பயிற்சி இரத்த அழுத்தம் ஏற்படாமல் பாதுகாக்கிறது என்கிறார் மீனாட்சி.

அருமையான முத்து:

கிரிக்கெட் வீரர் டோனி தன் கிரிக்கெட் வாழ்க்கையில் மிகப்பெரிய உயரங்களையெல்லாம் தொட்டிருக்கிறார். ஆனாலும் சமீபத்தில் அவரின் விளையாடும் திறன் சற்று குறைந்த போது அவரைக் கிண்டல் செய்யாத ஆட்களே இல்லை. ஏன், அவரை ஒரு வீரராக சேர்த்துக்கொண்ட அவரின் அணியின் உரிமையாளர்களே அவரை பலவாறு பேசி ஏளனம் செய்தார்கள். அந்த சமயத்தில் அவரின் மனைவி வெகுண்டெழுந்து சில வார்த்தைகள் சொன்னார். எவ்வளவு அருமையானவை அவை!




" ஊழ்வினை தெரியுமா? "ஒரு பறவை உயிரோடு இருக்கும் போது அது எறும்புகளை சாப்பிடும். அதே பறவை இறந்து விட்டால் எறும்புகள் பறவையை சாப்பிடும். நேரமும், சூழலும் எப்போது வேண்டுமானாலும் மாறலாம். உங்கள் வாழ்க்கையில் எவர் ஒருவரையும் குறைத்து மதிப்பிடாதீர்கள், காயப்படுத்தாதீர்கள். இன்றைக்கு நீங்கள் வலுவானவர்களாக இருக்கலாம். ஆனால் மறந்துவிடாதீர்கள் காலம் உங்களை விட பலமானது. ஒரு மரம், பல மரக்குச்சிகளைத் தரும். ஆனால் ஒரே ஒரு மரக்குச்சி மில்லியன் கணக்கிலான மரங்களை அழிக்க வல்லது. ஆகவே நல்லவராக இருங்கள், நல்லதையே செய்யுங்கள்".

Sunday, 18 June 2017

தந்தையின் அருமையும் பெருமையும்!!!

அன்புச் சகோதரர்கள் அனைவருக்கும் தந்தையர் தின நல்வாழ்த்துக்கள்! 

சகோதரர் ரமணி அவர்களின் யோசனைக்கு தலை வணங்கி ஏழு வருடங்களுக்கு முன் நான் தந்தையின் பெருமையைப்பற்றி எழுதியதை மீள் பதிவாக ' தந்தையர் தினத்துக்காக ' இங்கே மறுபடியும் இணைப்பதில் பெருமை அடைகிறேன்!!

                   *********************************************************






இலக்கியங்களிலும் கவிதைகளிலும் புதினங்களிலும் திரைப்படங்களிலும் பழங்காலத்திலிருந்து இன்றைய காலம் வரை தாய்மையைப்பற்றி-அதன் சிறப்பையும் உயர்வையும் பற்றி எழுதாத கவிதைகளில்லை! பாடாத பாடல்கள் இல்லை!! சொல்லாத வார்த்தைகள் இல்லை!!! ஆனால் சொல்லாத-வெளிப்படாத உணர்வுகளுக்கு என்றுமே ஒரு புனிதம் உண்டு. கவிஞர் கண்ணதாசன் சொன்னது போல ‘சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை’ என்ற கவித்துவமான வரிகளுக்கு இணையானதுதான் ஒரு தந்தையின் பெருமை! 

ஆலமரம் எத்தனையோ பேர்களுக்கு குளிர்ச்சி தருகிறது! நிழல் தருகிறது ஒரு தாய் தன் குழந்தைகளுக்குத் தரும் இதம் போல! ஆனால் அந்த ஆலமரத்தைத் தாங்கிப் பிடிக்கும் அதன் வலிமையான வேர்களைப்பற்றி யாரும் பேசுவதில்லை!




சில வருடங்களுக்கு முன் தஞ்சையில் என் வீட்டருகேயுள்ள-எனக்கு பழக்கமுள்ள ஒரு பெண் மருத்துவரிடம் செல்ல வேண்டியிருந்தது. அவர்களுக்காக காத்திருந்தபோது அங்கே புதிதாக ஒட்டப்பட்டிருந்த இரு சிறிய சுவரொட்டிகளை கவனித்தேன். முதலாவது தாய்மையின் உயர்வைப்பற்றிய கவிதை. மிக அருமையாக இருந்தது. அடுத்ததுதான் என்னை முதலில் வியப்பிலாழ்த்தி, பின் நெகிழ்ந்து கனிந்து போக வைத்தது.

அந்த கவிதை.. .. .. ..


அம்மா இல்லத்தின் தன்மானம் என்றால்
  அப்பா இல்லத்தின் அடையாளம்!
  அம்மா ஊட்டுவது அன்பு.
  அப்பா காட்டுவது மனத்தெம்பு!

  நாளும் பொழுதும் உணவளிப்பவள் அம்மா-ஆனால்
  அந்த உணவை சம்பாதித்துத் தருவது அப்பா என்பதை
  மறந்தே போகிறோம்!

  கல்லில் இடறும்போது வாயில் வரும் வார்த்தை
‘அம்மாடியோ!’
  காரில் மோதி கீழே விழும்போது வாயில் வரும் வார்த்தை
 ‘ஐயோ அப்பா!’

  ஏனெனில் சின்னச்சின்னத் துன்பங்களில் 
  தேடுவது அம்மாவின் அன்பு! 

  ஆனால் பெரிய துன்பங்களில் துணை நிற்பது
  அப்பாவின் ஆதரவு!

   அப்பா ஒரு நெடிய ஆலமரம்!
   அவர் தரும் குளிர் நிழலே குடும்பம்!’


மருத்துவரிடம் இதைப்பற்றிப் பேசி பாராட்டியபோது அவர்களின் விழியோரத்தில் கண்ணீர் முத்துக்கள்!!

‘என் அப்பா சமீபத்தில்தான் இறந்து போனார்கள். ஆனால் அவரின் அன்பு, அவர் கொடுத்த மனத்தெம்பு, தைரியம், தன்னம்பிக்கை எல்லாவற்றையும் ஒரு நொடியில் இழந்து விட்டேன்!’ என்றார்கள்.

உண்மைதான்! அன்பிற்குரியவர்கள் திடீரென்று மறையும்போது அந்த அன்புடன் வாழ்வில் உள்ள நம்பிக்கையும் அதைச் சார்ந்த அனைத்து விஷயங்களும் ஆட்டம் கண்டு விடுகின்றது! அந்தக்கவிதையில் உள்ளது போல பெரிய துன்பங்களில் தெம்புடன் பிடித்துக்கொண்ட தோள்கள் மறைந்து விட்டன! 

ஒரு தந்தையின் பெருமையை உணர்த்த இதைவிட எளிமையான, அழகான கவிதையை நான் படித்ததில்லை!

Tuesday, 13 June 2017

மருத்துவங்கள் பலவிதம்!!!!

கடந்த சில மாதங்கள் தஞ்சையில் இருந்தபோது பல விதமான நோயாளிகள், நோயால் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்த உறவுகள், மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் அவதியுற்றுக்கொண்டிருந்தவர்கள் என்று வெளியில் புறப்பட்டுப்போக நேர்ந்ததெல்லாம் இந்த மாதிரி காரணங்களுக்காகவே என்று ஆகிப்போனது. ஒரு சந்தர்ப்பத்தில் மனது மிகவும் சலித்துப்போய் எங்காவது சுப காரியம் என்று போய் வந்தால் மனதுக்கு ஒரு மாற்றம் இருக்குமே என்று கூட யோசனை வந்தது.

இடையே சில மருத்துவ பிரச்சினைகளுக்கு தீர்வுகளும் நல்லவிதமான யோசனைகளும் சிலருக்கு என்னால் தர முடிந்ததில் இத்தனை அலைச்சல், சலிப்பையும் மீறி மனதிற்கு நிறைவும் கிடைத்தது.  நம்மால் சிலருக்கு வேதனைகள் தீருவது நமக்கு விவரிக்க இயலாத மன நிறைவு அளிக்கும்தானே? அவற்றை இங்கே பகிர்ந்து கொள்ளப்போகிறேன். இணையம் மூலம் நிறைய பேருக்கு அவை பலனளிக்கும் என்கிற ஆவலும் அக்கறையும் தான் காரணங்கள்.

தாங்க முடியாத பல்வலிக்கு:



இதை மட்டும் முன்பேயே எழுதியிருக்கிறேன். பல்வலி இருக்குமிடத்தில் இரவு படுக்கும்போது ஒரு துண்டு உப்பு நார்த்தங்காயை வைத்து சற்று அழுத்தி விட்டுக்கொண்டு அப்படியே தூங்கி விடலாம். காலையில் விழித்தெழும்போது பல் வலி சுத்தமாக நீங்கியிருக்கும். அந்த நார்த்தங்காய்த்துண்டை துப்பி விட்டு மிதமான வெந்நீர் விட்டு வலி இருந்த இடத்தைக் கொப்பளித்து சுத்தம் செய்து கொள்ளவும். அதன் பின் மறுபடியும் பல் வலி அந்த இடத்தில் அநேகமாக வராது.

கால் வலி, உளைச்சல், குத்தும் வலி [ தொடையிலிருந்து பாதம் வரை]:

ஒரு நாள் உறவினரின் குழந்தைக்கு நாவல்பழ ஜுஸ் வாங்க ஒரு இயற்கை அங்காடிக்குச் சென்றிருந்தேன்.  யதேச்சையாக ஒரு களிம்பு கண்ணில் பட்டது. சர்க்கரை நோய் உள்ளவர்களின் கால் வலிக்கு என்று அதன் மீது எழுதியிருந்தது. எனக்கு எப்போதுமே குதிகால் எலும்புகளில் வலி இருக்கும். அதற்கு இது பயன்படுகிறதா என்று பார்க்கலாம் என்று நினைத்து ஒரு பாட்டில் வாங்கி வந்தேன். வீட்டுக்கு வந்து பிரித்து அதனுள் இருந்த பேப்பரைப் படித்துப்பார்த்த போது மருந்தை கெண்டைக்காலில் மட்டுமே தடவ வேண்டுமென்பதை கவனித்தேன். உறங்கச்செல்லும்போது கெண்டைக்காலில் சற்று தாராளமாக தடவிக்கொண்டு உறங்க வேண்டும். அது போலவே இரண்டு நாட்கள் தடவினேன். மூன்றாம் நாள் பல மாதங்கள், ஏன் வருடக்கணக்காக குதிகால் எலும்பில் தொடர்ந்து இருந்த வலியைக்காணோம்! எனக்கு நம்பவே முடியவில்லை. இரண்டு மாதமாகியும் அந்த வலி இன்னும் வரவில்லை.  என் சகோதரியின் மருமகள் 10 நாட்களாக காலில் தொடையிலிருந்து கடுமையான வலி என்று பல மருந்துகளை உபயோகித்து, மருத்துவரிடமும் சென்று பலனில்லாமல் இந்த மருந்தையும் உபயோகிக்க ஆரம்பித்தார். இரண்டே நாட்களில் வலி அனைத்தும் போய் இது வரை திரும்ப வரவில்லை என்று சில நாட்களுக்கு முன் அலைபேசியில் சொன்னார். இப்போது இந்த மருந்தின் புகழ் அங்கே அனைவரிடமும் பரவிக்கொண்டிருக்கிறது.

மருந்தின் பெயர்: CONARCS, விலை ரூ 120. படத்தை இத்துடன் இணைத்திருக்கிறேன்.




ஹீமோகுளோபின் அதிகரிக்க:

ஒரு புத்தகத்தில் படித்த குறிப்பு இது. உபயோகப்படுத்த மறந்து போய் பல காலமாக என் ஃபைலில் அப்படியே இருந்தது. சமீபத்தில் தான் மறுபடியும் இந்தக் குறிப்பைப்படிக்க நேர்ந்த போது இதை எப்படி இத்தனை நாட்களாக மறந்து போனோம் என்று அதிர்ச்சியாக இருந்தது. ஏனெனில் ஹீமோகுளோபின் எனக்கும் என் கணவருக்குமே குறைவாகவே பல காலமாக இருந்து வருகிறது. என் மறதியை நொந்து கொண்டேன்.
உலர்ந்த கருப்பு திராட்சையை தண்ணீரில் ஊற வைத்து சாப்பிட வேண்டும் என்பது தான் பொது விதி. எப்படி சாப்பிட வேண்டுமென்பதற்கு விதிமுறைகள் இருக்கின்றன.  இதற்கு 72 திராட்சைகள் தேவைப்படும். முதல் நாள் 3 திராட்சைகளைக் கழுவி ஒரு தம்ளர் நீரில் முதல் நாளிரவே ஊற வைக்க வேண்டும். மறு நாள் காலை வெறும் வயிற்றில் ஒரு திராட்சையை மென்று தின்று அது ஊறிய தண்ணீரில் மூன்றில் ஒரு பங்கை குடிக்க வேண்டும். மதியம் 12 மணிக்கு அடுத்த திராட்சை, அடுத்த பங்கு ஊறிய நீர், மாலை 6 மணிக்கு கடைசி திராட்சையை மென்று பாக்கியுள்ள நீரை குடிக்க வேண்டும்.  உடனேயே அடுத்த நாளுக்காக ஆறு திராட்சையை ஊறப்போட வேண்டும். மறு நாள் மேற்சொன்ன மாதிரியே சாப்பிட வேண்டும். அதற்கடுத்த நாள் ஒன்பது திராட்சைகள். அதற்கடுத்த நாள் 12 திராட்சைகள்.  இந்த 12 திராட்சைகள் மட்டும் மூன்று நாட்கள் தொடர்ந்து ஊறப்போட வேண்டும். அதற்கடுத்த நாள் ஒன்பது, அதற்கடுத்த நாள் ஆறு, அதற்கடுத்த நாள் 3 என்று குறைத்து மொத்தம் 9 நாட்கள் சாப்பிட வேண்டும்.  3, 6, 9, 12, 12, 12, 9, 6, 3 என்று இந்த வரிசைகளில் சாப்பிட்டு  முடிக்க வேண்டும். அதற்கப்புறம் 2 நாட்கள் கழித்து இரத்தப்பரிசோதனை செய்து பார்க்க வேண்டும்.  நான் அவ்வளவாக முதலில் இதை நம்பவில்லை. வெறும் உலர் திராட்சையில் அதுவும் 9 நாட்களில் எப்படி ஹீமோகுளோபின் கூடும் என்று தான் நினைத்தேன். இரத்தப்பரிசோதனை முடிவு வந்ததும் அசந்து போய் விட்டேன். 10.5ல் இருந்த என் ஹீமோகுளோபின் 12க்கும் 12ல் இருந்த என் கணவரின் ஹீமோகுளோபின் 15க்கும் ஏறியிருந்தது!!
குறைந்த செலவில் அருமையான பலன் கொடுக்கும் இயற்கை வைத்தியம் இது! செய்து பாருங்கள்! அவ்வளவாக திருப்திகரமாக ஹீமோகுளோபின் ஏறவில்லையென்றால் இன்னொரு 9 நாட்கள் கருப்பு திராட்சைகளை மேற்சொன்ன முறையில் உண்ண வேண்டும்!

சிறுநீரகப்பிரச்சினைகள்

நீண்ட நாள் சர்க்கரை நோய் இருப்பவர்களுக்கும் வேறு பல அசாதாரண காரணங்களாலும் தற்போதெல்லாம் சிறுநீரகப்பிரச்சினைகள் அதிகம் ஏற்படுகின்றன. அவற்றை நமக்குச் சுட்டிக்காண்பதற்கும் நம் மீது அக்கறையுள்ள மருத்துவர் அமைய வேண்டும். ‘ எல்லா மருத்துவர்களும் நோயாளியிடம் இதைப்பற்றி சொல்லிக்கொண்டிருக்க மாட்டார்கள்’ என்று ஒரு சிறுநீரக ஸ்பெஷலிஸ்ட் மருத்துவரே என்னிடம் சொன்னார்!! பொதுவாய் சிறுநீர் பரிசோதனையில் 60 வயது மேற்பட்டவர்களுக்கு, அதுவும் சர்க்கரை நோயுள்ளவர்களுக்கு ALBUMIN TRACE என்று காணப்படும். இப்படி இருந்தால் நமக்கு சிறுநீரக நோய் ஆரம்பித்து விட்டது என்று அர்த்தம். அதிகப்படியான புரதம் இரத்தத்தால் உட்கிரகிக்க முடியாமல் சிறுநீரக நெஃப்ரான்கள் பலமிழந்து, அதன் வடிகட்டிகளின் துளைகள் பெரிதாவதால் சிறு நீர் வழியே வெளியேறுகிறது. சர்க்கரை, டயட், உயர் இரத்த அழுத்தம், பிற இரத்தப்பரிசோதனைகளான யூரியா, கிரியாட்டினைன் முதலியவை நாம் கட்டுக்குள் வைத்திருக்கிற வரையில் பிரச்சினை இல்லை.  நாளடைவில் கிரியாட்டினைன் அல்லது யூரியாவின் அளவு அதிகமாகலாம். அப்போது தான் மருத்துவர்கள் மருந்துகள் கொடுப்பார்கள்.  இயற்கையான முறையில் இரத்தத்தில் அதிகமாகும் கிரியாட்டினைனை குறைக்கும் வழி இது!