Sunday 25 April 2021

கொரோனா நிகழ்வுகள்!!!

கடந்த சில நாட்களாகவே, நடிகர் விவேக் மரணம் தடுப்பூசி போட்டுக்கொள்ள நினைப்பவர்களை தயங்க வைக்கிறது. ஏகப்பட்ட குழப்பங்கள். இதைப்பற்றி நிறையவே யூ டியூபில் விவாதங்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. மக்களிடம் இந்த நிகழ்வுகளினால் ஏற்பட்டிருக்கும் தடுமாற்றங்களையும் குழப்பங்களையும் போக்க பல மருத்துவர்கள் தாமாகவே முன் வந்து விளக்கங்கள் சொல்லிக்கொண்டிருக்கின்றார்கள். அதில் ஒரு மருத்துவர் மிக‌ நன்றாக விளக்கம் சொல்லியிருக்கிறார். கேட்டுப்பாருங்கள். பலருக்கும் இது பலன் தரக்கூடியதாக இருக்கும்.

 

நானும் இங்கு [ துபாய் ] என் குடும்பத்தினருடன் தடுப்பூசி போட்டுக்கொள்ள சென்றேன். அன்று காலையிலிருந்து எனக்கு வயிற்றுப்போகு இருந்தது. மருத்துவ மனை சென்ற சமயம் தான் அது நின்றிருந்தது. அதையும் சொன்னதும் எனக்கு மட்டும் அப்போது தடுப்பூசி வேண்டாம் என்று சொல்லி மே முதல் வாரம் தேதி கொடுத்திருக்கிறார்கள்.

பதினைந்து நாட்களுக்கு முன் என் அக்காவிற்கு குடல் இறக்க அறுவை சிகிச்சை நடந்தது. அக்கா மகன் தான் அருகிருந்து எல்லாவற்றையும் கவனித்துக்கொள்ள அக்கா மருமகள் வீட்டைப் பார்த்துக்கொண்டார். பிரபல மருத்துவமனை அது. மருத்துவமனையில் ஏகப்பட்ட கொரோனா நோயாளிகள் இருந்ததால் மற்ற நோயாளிகளை பார்க்க வருபவர்களுக்கு மருத்துவமனை நிர்வாகம் தடை விதித்திருந்தது.  

அக்காவை டிஸ்சார்ஜ் செய்த மறுநாள் அக்கா மகனுக்கு கடுமையான காய்ச்சல் வந்து விட்டது. மருமகளுக்கு இருமல். அவர்களை கவனித்த மருத்துவர் இது கொரோனாவாக இருக்காது என்று மருந்துகள் கொடுத்திருக்கிறார். சரியாகாமல் காய்ச்சலும் இருமலும் அதிகமாகவே, இருவரும் தஞ்சையிலுள்ள மெடிகல் கல்லூரியில் டெஸ்ட் செய்ததில் இருவருக்குமே கொரோனா பாஸிடிவ் என்று ரிசல்ட் வந்து விட்டது. இருவரும் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதற்குள் அக்கா மகனுக்கு மூச்சுத்திணறல் ஆரம்பித்து விட்டது. அவரை வெண்டிலேட்டர் சப்போர்ட்டில் வைத்திருக்கிறார்கள். இரத்த அழுத்தமும் பிராணவாயுவும் கீழே இறங்க ஆரம்பித்து தீவிர சிகிச்சையால் தற்போது சீரான நிலைமையில் இருக்கிறது. இதற்கிடையே, ஒரு குறிப்பிட்ட ஊசி போட்டால் அவருக்கு விரைவாக குணமாகும் என்று மருத்துவர் சொன்னதன் பேரில் அந்த ஊசிக்காக எல்லா இடங்களிலும் அதை வாங்க தீவிர முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இது வரையில் அதில் வெற்றி கிடைக்கவில்லை. இங்கே அந்த ஊசி உள்ளது. மருத்துவரின் கடிதத்துடன் தான் அதை வாங்க வேண்டும். விலை நம் பணத்துக்கு 1 1/4 லட்சம். ஊரில் 35000 விலையுள்ள இந்த ஊசி தற்போதுள்ள நெருக்கடியால் 1 1/2 லட்சமாக உயர்ந்திருக்கிறதாம். நாளை தான் நாங்கள் வாங்கி அனுப்ப வேண்டுமா என்பது தெரியும். முதலில் அந்த மருந்தை வாங்க வேண்டும். அதை எடுத்து செல்பவருக்கு பி.சி.ஆர் டெஸ்ட் பண்ணி நெகடிவ் என்று ரிசல்ட் வர வேண்டும். டிக்கட் உடனேயே கிடைக்க வேண்டும். குறிப்பிட்ட அளவுள்ள டெம்பரேச்சர் உள்ள குளிர்ந்த பையில் தான் அதை பத்திரமாக எடுத்துச் செல்ல வேண்டும். 

இந்த நிகழ்வுகளால் கடந்த 15 நாட்களாய் எல்லோருக்குமே மன உளைச்சல் வீட்டில். எல்லாம் சரியாகும் என்ற நம்பிக்கை மட்டும் தான் மிச்சமிருக்கிறது.  

18 comments:

ஸ்ரீராம். said...

மிகவும் கடுமையான, கொடுமையான காலகட்டம்.  உங்கள் அக்கா மகன் விரைவில் பூரண நலம் அடைய பிரார்த்தனைகள்.   எங்கள் உறவிலும் ஒரு பையன், 36 வயது, அடுத்த மாதம் கல்யாணம் (இருந்திருந்து இப்போதுதான் பெண் கிடைத்தது) திடீரென சில சாதாரண சிம்ப்டம்ஸ் தெரிந்து கொரோனா என்று உறுதியாகி, சட்டென ஆக்சிஜன் லெவல் இறங்கி, மருத்துவமனைகளில் இடம் கிடைக்காமல் அப்புறம் கிடைத்து...    இப்போது கொஞ்சமாக தேறி வந்தாலும் டென்ஷன் தொடர்கிறது.

Avargal Unmaigal said...

எல்லாம் நலம் பெறும் அதற்காக பிரார்த்திக்கின்றேன்

Thulasidharan V Thillaiakathu said...

மனோ அக்கா நிகழ்வு வருத்தமாக இருக்கிறது. எப்படி எல்லாம் ஒவ்வொருவரையும் இது ஆட்டி வைக்கிறது. கேட்கும் போது கலக்கமாகவும் இருக்கிறது.

அந்த மருத்துவர் உடனே டெஸ்ட் செய்யச் சொல்லியிருக்கலாம்....கொரோனா பாசிட்டிவா இல்லை நெகட்டிவோ காய்ச்சல், இருமல் சளி இருந்தாலே உடனே டெஸ்ட் செய்வது நல்லது. அதுவும் இந்த நேரத்தில்...
எல்லாம் நல்லபடியாக பிரார்த்தனைகள் அக்கா..
வீடியோ பார்க்கிறேன்...

கீதா

Geetha Sambasivam said...

விரைவில் பிரச்னைகள் எல்லாம் தீர்ந்து மன அமைதியும் மகிழ்ச்சியும் கிட்டப் பிரார்த்திக்கிறோம். அக்கா மகன் விரைவில் குணம் பெறவும் பிரார்த்திக்கிறோம்.

திண்டுக்கல் தனபாலன் said...

விரைவில் குணமாக வேண்டுகிறேன்...

கரந்தை ஜெயக்குமார் said...

விரைவில் குணம் பெறுவார்

கோமதி அரசு said...

உங்கள் அக்காள் மகன் விரைவில் நலபெற பிரார்த்திக்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு மனோ,
பதிவு முழுவதையும் படித்து மனம் மிக வருந்துகிறது. தங்கள்
அக்கா பையன் நல்ல குணம்
பெறுவார். பெற பிரார்த்தனைகள்.
எத்தனை சிரமப்படுகிறாரோ. நீங்கள் அனுப்பும்
மருந்து பலன் அளிக்கட்டும் மா.
தைரியமாக இருங்கள்.
போன வருடமே அக்கம் பக்கத்தில் இருப்பவர்களின் உறவுகள்
கேரளாவிலும் மும்பையிலும்
அவதிப் பட்டார்கள்.
சீக்கிரம் ,பாதுகாப்புடன் தடுப்பூசி உங்களுக்குக்
கிடைக்கட்டும். இறைவன் துணை.

துரை செல்வராஜூ said...

மிகவும் கொடுமையான கால கட்டத்தில் இருக்கின்றோம்... பதிவிலுள்ள விஷயங்கள் நெஞ்சை அழுத்துகின்றன...

நம்முடைய கட்டுப்பாடும் இறைவன் அருளுமே நம்மைக் காப்பாற்ற வல்லவை...

இறைவனை வேண்டி நிற்போம்...

மனோ சாமிநாதன் said...

பிரார்த்தனைகளுக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி சகோதரர் ஸ்ரீராம்!

மனோ சாமிநாதன் said...

தேறுதலுக்கும் பிரார்த்தனைக்கும் அன்பு நன்றி மதுரைத்தமிழன்!

மனோ சாமிநாதன் said...

பிரார்த்தனைகளுக்கு அன்பு நன்றி கீதா!

மனோ சாமிநாதன் said...

அன்பான பிரார்த்தனைகளுக்கு இனிய நன்றி கீதா சாம்பசிவம்!

மனோ சாமிநாதன் said...

பிரார்த்தனைக்கு அன்பு நன்றி தனபாலன்!

மனோ சாமிநாதன் said...

நம்பிக்கை தந்ததற்கு அன்பு நன்றி சகோதரர் ஜெயக்குமார்!

மனோ சாமிநாதன் said...

பிரார்த்தனைக்கு அன்பு நன்றி கோமதி அரசு!

மனோ சாமிநாதன் said...

பிரார்த்தனைக்கு அன்பு நன்றி வல்லி சிம்ஹன்! இங்கே அந்த மருந்தை வாங்க முடியவில்லை. ஹாஸ்பிட்டல் மூலமாக வரும் வேண்டுகோளுக்கு மட்டும் மருந்தை தர முடியுமென்று சொல்லி விட்டார்கள். ஆனால் தற்போது என் அக்கா மகன் உடல் நலம் நன்றாக உள்ள‌து. இன்னும் ஐசியுவில் தான் உள்ளார்.

மனோ சாமிநாதன் said...

இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் துரை.செல்வராஜ்!!