Friday 26 March 2021

காய்கறி வைத்தியம்- தொடர்ச்சி!!!

மருத்துவர் அருண் பிரகாஷ் காய்கறிகளை வேக வைக்காமல் பச்சையாகவே உண்ணும்போதுதான் அதன் முழுமையான சக்தி நமக்கு கிடைக்கும் என்பதை வலியுறுத்துகிறார். எப்படியெல்லாம் சுவையாக காய்கறிகளை, முக்கியமாக அவர் குறிப்பிடும் இந்த பன்னிரெண்டு நாட்டு காய்கறிகளை சத்துள்ள உணவாக, சமைக்காமல் சாப்பிட முடியும் என்று சில செய்முறைகளை சொல்லியுள்ளார். அனைவருக்கும் பயன்படும் என்று கருதி இங்கே அவற்றை குறிப்பிட்டிருக்கிறேன். 

நல்ல கெட்டியான தேங்காய்ப்பாலில் சிறிது எலுமிச்சை சாறு கலந்து அப்படியே மூடி வைத்தால் சில மணி நேரங்களில் அது தயிராக மாறும். அது சாப்பிடவும் நன்றாக இருக்கும் என்றும் மிகவும் ஆரோக்கியமானது என்றும் கூறுகிறார் மருத்துவர். 

வாழைக்காயை எப்படி பச்சையாக சாப்பிடலாம்?



வாழைக்காயை தோல் சீவி மிகவும் பொடிப்பொடியாக நறுக்கி அதே மடங்கு வாழைப்பழத்தையும் பொடியாக நறுக்கி நாட்டு சர்க்கரை கலந்து உண்ணலாம். ஒரு மணி நேரம் ஊற வைத்து சாப்பிடும்போது இது மிகவும் சுவையாக இருக்கும்..

அதன் தோலை பொடியாக நறுக்கி உப்பு, வெண் மிளகுத்தூள், தேங்காய்த்துருவல் போட்டு உண்ணலாம்.

வெண் பூசணியை பச்சையாக எப்படி சாப்பிடலாம்? 



பூசணிக்காயை அதன் சதைப்பகுதியையும் அதன் தோலையும் பொடியாக நறுக்கவும். அதில் நாலில் ஒரு பங்கு இஞ்சித்துருவல் சேர்த்து உப்பு, வெண் மிளகுத்தூள், மாங்காய்ப்பொடி  சேர்த்துக் கலந்து ஊற வைக்கவும். பின் தேங்காய்ப்பாலில் செய்த மோரில் போட்டு சாப்பிடவும்.

கொத்தவரங்காயை எப்படி சாப்பிடுவது?


10 கொத்தவரங்காயை மிகவும் பொடியாக அரியவும். அதில் வெண் மிளகுத்தூள், மாங்காய்ப்பொடி, உப்பு கலந்து பின் கொத்தவரங்காயில் கால் பகுதி இஞ்சி துருவலும் கலந்து வைக்கவும். இவற்றை வைப்பரில் தனியாக ஒரு நிமிடம் அடிக்கவும். பின் தனியாக அரிந்த கொத்தமல்லி இலையை      [ கொத்தவரங்காயின் அளவு] வைப்பரில் போட்டெடுத்து கொத்தவரங்காயுடன் கலந்து 2 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு சம அளவு தேங்காய்த்துருவல் கலந்து கொள்ளவும்.  இதை சாதத்தில் பிசைந்தும் சாப்பிடலாம். அல்லது ஏதேனும் சுண்டல் வேக வைத்து அதில் கலந்தும் சாப்பிடலாம்.

புடலங்காயை எப்படி பச்சையாக சாப்பிடுவது?



மேற்கண்ட முறையில் புடலங்காயையும் செய்யலாம். கொத்தமல்லிக்கு பதிலாக புதினா சேர்க்கவும்.

பீர்க்கங்காயை எப்படி உபயோகிப்பது?




இதே போல பீர்க்கங்கங்காயின் தோலிலும் செய்யலாம். அதில் கறிவேப்பிலை சேர்க்க வேண்டும். பீர்க்கங்காயை சும்மாவே சாப்பிடலாம்.

பரங்கிக்காயை எப்படி சாப்பிடுவது?



இதேபோல பரங்கிக்காயை பொடியாக நறுக்கி அதில் நாலில் ஒரு பங்கு இஞ்சி துருவல் சேர்த்து வைப்பரில் அடிக்கவும். பரங்கி அளவு பேரீச்சை நறுக்கி நட்டு சர்க்கரை  சிறிது சேர்த்து 1 மணி நேரம் ஊற வைக்கவும். கோதுமை மாவு 4 ஸ்பூன், நாட்டு சர்க்கரை 8 ஸ்பூன் சேர்த்து கரைத்து அது கெட்டியாகும் வரை கொதிக்க வைத்து ஊற வைத்திருப்பவற்றை போட்டு கலக்கவும். இது பாயசம். கோதுமை கொதிக்கும்போது தேங்காயையும் சேர்க்கலாம்.

கோவைக்காயை எப்படி பச்சையாக சாப்பிடுவது?


கோவைக்காயையும் வெள்ளரியையும் பொடியாக நறுக்கி உப்பு, வெண் மிளகுப்பொடி, மாங்காய்ப்பொடி போட்டு ஊறவைக்கவும் [ 1 மணி நேரம்] 3 நாட்டுத்தக்காளி 3ஐ வெந்நீரில் போட்டு பிறகு தோலெடுத்து அரைத்துக்கொள்ளவும்.. அதை கொதிக்க விட்டு அது ஒரு ரசப்பதத்தில் இருக்கும் போது இறக்கி ஊறியவற்றை அதில் போட்டு குடிக்கவும். இரவு நேரத்தில் குடிப்பது நல்லது..

தேங்காய்த்துருவலை எப்படி உபயோகிப்பது?  



தேங்காய்த்துருவல் ஒரு பங்கு என்றால் அதில் அரைப்பங்கு கோதுமை மாவு. ஒரு பங்கு நாட்டு சர்க்கரை சேர்த்து கைகளால் பிசைந்தால் எல்லம் சேர்ந்து ஒரு இனிப்பு வரும். அது உடம்புக்கு நல்லது.

எலுமிச்சையை எப்படி ஆரோக்கியமாக சாப்பிடலாம்?

 

2 தக்காளி+ ஒரு எலுமிச்சை தோலுடன் அரைத்து உப்பு அல்லது நாட்டு சர்க்கரை போட்டு குடிக்கலாம்.

வெண்டைக்காயை எப்படி உபயோகிக்கலாம்?



வெண்டைக்காய் 10 எடுத்து பொடியாக நறுக்கி தண்ணீரில் போட்டு ஊற வைத்து காயை தனியாக எடுத்து விட்டு  தண்ணீருடன் நட்டு சர்க்கரை போட்டு குடிக்கலாம். வறுத்த தனியா தூள் 2 ஸ்பூன், வறுத்த எள் 2 ஸ்பூன், உப்பு, மாங்காய்ப்பொடி, வெண் மிளகுப்பொடி, நாட்டு சர்க்கரை , சிறிது தேங்காய் அனைத்தையும் அரைத்து வெண்டைக்காய் கலந்து சாப்பிடவும்.

கத்தரிக்காயை எப்படி சாப்பிடலாம்?

2 கத்தரிக்காய், 2 தக்காளி எடுத்து வெந்நீரில் அரை மணி நேரம் போட்டு வைத்திருந்தால் அவை மிருதுவாக மாறும். பின் அவற்றை அரைத்து வடிகட்டி சாறு எடுத்து அதில் உப்பு, சிறிது சாம்பார்ப்பொடி அல்லது ரசப்பொடி கலந்து குடிக்கலாம்.

 

Tuesday 9 March 2021

இது ஒரு அதிசயம்!!!

என் சினேகிதியின் பெண் ஒரு  காணொளியை அனுப்பியிருந்தார். வெறும் காய்கறிகளால் வைத்தியம் செய்யும் முறையைப்பற்றியும் அந்த வைத்தியம் செய்யும் மருத்துவர் பற்றியுமான காணொளி அது. எனக்கு பல ஆச்சரியங்களை அந்த காணொளி கொடுத்தது. கோவையிலும் பெங்களூருவிலும் பல தீவிர நோய்களை, குணப்படுத்த முடியாமல் கைவிட்ட நோயாளிகளை தங்களுடைய காய்கறி வைத்தியத்தை செய்து காப்பாற்றி வரும்  மருத்துவர்கள் இருப்பதை அறிந்தேன். கோவையிலிருக்கும் மருத்துவரைப்பார்ப்பது எனக்கு வசதி என்பதால் அவரைப்பற்றியும் அவர் மருத்துவமனை பற்றியும் நண்பர்களிடம் விசாரித்து தகவல்கள் அனுப்பச் சொன்னேன்.

மருத்துவர் அருண் பிரகாஷ் மொத்தம் 12 நாட்டு காய்கறிகளான புடலங்காய், கத்தரிக்காய், பரங்கிக்காய், கொத்தவரை, எலுமிச்சை, கோவைக்காய், வெண் பூசணி, முருங்கைக்காய், தேங்காய், வெண்டைக்காய், பீர்க்கங்காய், வாழைக்காய் போன்ற காய்கறிகளைக்கொண்டு வைத்தியம் செய்கிறார்.


செரிமானத்திற்கு வெண் பூசணி, சிறுநீரக பிரச்சினைகளுக்கு கத்தரிக்காய், நரம்பு மண்டலத்திற்கு கொத்தவரை, வாயு மண்டலத்திற்கு புடலங்காய், தசை மண்டலத்திற்கு பரங்கி, தோல் மண்டலத்திற்கு கோவைக்காய், சுவாச மண்டலத்திற்கு முருங்கை,  நிணநீர் மண்டலத்திற்கு பீர்க்கை,  நாளமில்லா சுரப்பி மண்டலத்திற்கு எலுமிச்சை,  எலும்பு மண்டலத்திற்கு தேங்காய்,  நாளமுள்ள சுரப்பி மண்டலத்திற்கு வெண்டைக்காய்,  இரத்த ஓட்ட மண்டலத்திற்கு வாழைக்காய் என்று நம் உடலுக்கான நல்ல பயன்பாடுகள் இந்த காய்கறிகள் மூலம் கிடைக்கும் என்று சொல்லுகிறார். 

வர மிளகாய், முக்கியமாக பச்சை மிளகாய் உடலுக்கும் நாட்டுக்கும் கேடு என்பது தான் இவரது தாரக மந்திரம். எந்த வியாதிக்கு எந்த காய்கறி என்பதை தேர்ந்தெடுத்து அவற்றுடன் வெற்றிலைகளை அரைத்து உப்பு போட்டோ அல்லது நாட்டு சர்க்கரை சேர்த்தோ குடிக்கச் சொல்லுகிறார். உணவில் நல்லெண்ணெய், கடலெண்ணெய், தேங்காய் எண்ணெய் மட்டுமே உபயோகிக்க வேண்டுமென்றும் பால் சார்ந்த பொருள்கள், பருப்பு வகைகள் இவற்றை தவிர்க்க வேண்டுமென்றும் வலியுறுத்துகிறார். எந்த விதமான மருத்துவ ரிப்போர்ட்களையும் இவர் பார்க்க மறுக்கிறார். நோயாளியின் கைகளையும் பாதங்களையும் பார்த்தே தான் மருத்துவம் செய்வதாகக் கூறுகிறார். நேரில் செல்லும் நோயாளிகளுக்கு நாடி பிடித்து பார்ப்பதாக என் சினேகிதி சொன்னார். 

பல நோய்களை சரியாக்கிய காணொளிகளைப் பார்த்தேன். தொண்டையில் புற்று நோய் வந்து மரணத்தருவாயிலிருந்த ஒரு பெண்மணியை வெறும் எலுமிச்சம்பழத்தின் மூலம் உயிர் பிழைக்க வைத்த செய்தியையும் பத்தே மணி நேரத்தில் எந்த வலியுமில்லாமல் சிறுநீரக கற்கள் வெளியே வந்ததாக கூறிய நோயாளியின் கதையையும் தாங்கிய காணொளிகள் கண்டேன். டயாலிஸ் செய்யும் நிலைக்கு வந்த நோயாளிகளின் சிறு நீரகப்பிரச்சினைகளையும் அடிக்கடி சரியாக்கிக்கொண்டுள்ளார்.

 


சர்க்கரை நோய்க்காக‌வும் வயிறு சம்பந்தமான பிரச்சினைகளுக்காகவும் அவரது மருத்துவ மனைக்கு சில மாதங்களுக்கு முன் அழைத்தேன். வரவேற்பில் இருந்த பெண் நான் சொல்லிய விவரங்களைக் கேட்டு விட்டு மூன்று புகைப்ப‌டங்களை, 1. இரண்டு உள்ள‌ங்கைகளை, 2. பாதங்களை, 3. இடுப்பு வரையிலான நம் தோற்ற‌ம் என்று அனுப்பச் சொல்லியது. கூடவே 650 ரூபாய்க்கு டிராஃப்ட் எடுத்து அனுப்பச் சொன்னது. எல்லாம் கிடைத்ததும் உங்களுக்கு டாக்டர் உங்களிடம் பேசுவது பற்றி தகவல் தருகிறோம் என்று சொன்னது. இந்த முறை வெளி மாநிலத்தில், வெளிநாட்டில் உள்ள‌வர்களுக்கும் பிரயாணம் செய்து நேரில் வர முடியாத நிலையில் உள்ளவர்களுக்கு மட்டுமே. என் சினேகிதியின் பிரச்சினைக்கு நான் இவரிடம் போகச் சொன்னேன். அவர் கோவையிலுள்ளவர். அவர் 300ரூ fees தந்ததாக கூறினார். 

அவர்கள் சொன்ன எல்லாவற்றையும் செய்து அனுப்பியதும் ஒரு தொலைபேசி எண்ணுக்கு மாலையில் அழைக்கச் சொன்னார்கள். அதன்படி மாலையில் அழைத்தேன். மருத்துவர் பொறுமையாக அனைத்து பிரச்சினைகளையும் கேட்டறிந்து விட்டு, உங்களுக்கு எப்படி இதற்கு உணவு எடுக்க வேண்டும் என்ற குறிப்புகள் எல்லாம் சிறிது நேரத்தில் வாட்ஸ் அப் மூலம் வரும் என்று சொன்னார்.

அதன்படி சில நிமிடங்களில் நான் எப்படி எப்படி என்னென்ன எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற தகவல்கள், என் பதிவு எண் போன்ற விபரங்கள் வந்தன. 

காலையிலும் இரவிலும்  உணவுக்கு முன் 2 கத்தரிக்காய்கள், 2 தக்காளி, 6 வெற்றிலையை அரைத்து சாறு பிழிந்து வடிகட்டி நாட்டு சர்க்கரை அல்லது உப்பு சேர்த்து குடித்து வர வேண்டும். காலையில் கத்தரிக்காய் சாறுடன் 100 கிராம் தேங்காய்த்துருவல்+ 3 பேரீச்சம்பழங்கள் சாப்பிட வேண்டும். இதை சாப்பிட்ட பின் பசித்தால் ஏதேனும் சாப்பிட்டுக்கொள்ளலாம். 11 மணியளவில் நன்கு ஊற வைத்த கோதுமை 5 மேசைக்கரண்டி நன்கு மென்று உண்ண வேண்டும். இரவில் கூடுதலாக கத்தரிக்காய் சாறுடன் 6 வெண்டைக்காய்கள் பச்சையாக கடித்து சாப்பிட வேண்டும். பால் சார்ந்த பொருள்களான தயிர், வெண்ணெய், சீஸ், பால் பவுடர் மற்றும் துவரம்பருப்பு, பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு இவற்றையும் வெங்காயம் பூண்டு, பச்சை மிளகாய், வரமிளகாய், மிளகாய்த்தூள் இவற்றையும் நீக்க வேண்டும். அதற்கு பதிலாக முழுத்துவரை, கொள்ளு, முழு பச்சைப்பயறு இவற்றை சேர்த்துக்கொள்லலாம். முன்பே சொல்லியுள்ள‌ மாதிரி எண்ணெய் வகைகளை உபயோகிக்க வேண்டும். 

அதன் படியே உண்ன ஆரம்பித்தேன். தவிர்க்க வேண்டிய பொருள்களை அகற்றி புதியதாக சில குறிப்புகள் கண்டு பிடித்து சாப்பிட முடிந்தது. இல்லையென்றாலும் அரிசியும் கொள்ளும் சேர்த்த பொங்கல், தோசை, இட்லி, சப்பாத்தி, வெங்காயம், பூண்டு இல்லாத கிரேவிகள், சாத வகைகள் என்று உண்ண ஆரம்பித்தேன். 10 நாட்களுக்குப்பிறகு என் சர்க்கரை குறைய ஆரம்பித்தது. 80க்கு கீழ் வெறும் வயிற்றில் சர்க்கரை இறங்கியதும் 2 மாத்திரைகளை நீக்கினேன். அதன் பிறகும் சர்க்கரை 74லேயே இருந்தது. வயிற்றில் பிரச்சினைகள் யாவும் குறைந்தது. வயிற்றுப்பொருமல், செரிமானக்குறைவு, வாயு பிரச்சினை, எல்லம் நீங்கியது. உள்ளங்காலில் வெடிப்புகள் மறைய ஆரம்பித்தன. சர்க்கரை நோய் ஏற்பட்ட பிறகு நெடுங்காலமாய் தொடர்ந்து இரவு நேரங்களில் கால் நரம்புகள் இழுப்பதும் நின்று போனதை என்னால் இன்னும் நம்பவே முடியவில்லை. மொத்தத்தில் மிகவும் ஆரோக்கியமாக இருப்பதாய் நெடு நாட்களுக்குப்பின் உணர முடிகிறது. 

பொங்கலுக்குப்பிறகு, கொரோனாவாலும் என் காலில் ஒரு சிறிய விபத்து ஏற்பட்டதாலும் வெளியிலிருந்து உணவு பல சமயங்களில் வாங்கி உண்ண வேண்டியிருந்த சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டேன். அதன் பிறகு சர்க்கரை மட்டும் ஏறத்தொடங்கியது. இப்போது மறுபடியும் என்னால் சமைக்க முடிந்த நிலையில் மீண்டும் சர்க்கரையை கட்டுக்குள் கொண்டு வர 10 நாட்கள் தேவையாக இருந்தன. அதனால் இந்த உணவுக்கட்டுப்பாடுகளை அவசியம் தவறாது கடைபிடிக்க வேண்டியது முக்கியம்.

இந்த வைத்தியத்தில் எந்த விதமான பக்க விளைவுகளும் இல்லையென்பதால் தான் இந்த வைத்தியத்தை தேர்ந்தெடுத்தேன். கூடவே காய்கறிகளின் சத்துக்களும் வேக வைக்காமல் நம்மிடம் முழுமையாக வந்து சேருகிறது. முக்கியமான தேவைகள் நாவிற்கான கட்டுப்பாடுகளும் மனக்கட்டுப்பாடுகளும் தான்! இவை உறுதியாக இருந்தால் நாம் நோயை வென்று விடலாம். 

மருத்துவருக்கு வலைத்தளம் உள்ளது. அதில் அவரது விலாசமும் தொலைபேசி எண்ணும் உள்ளது. கீழே அதன் இணைப்பும் சில காணொளிகளும் இணைத்திருக்கிறேன்.

ஒரு நல்ல மருத்துவ சிகிச்சை கிடைத்து  நாள்பட்ட நோய்கள் அளித்து வரும் துன்பங்கள் நிறைய பேருக்கு நீங்கி வாழ்க்கையில் அனைவரும் நலமுடனிருக்க வேண்டுமென்ற எண்ணமே இந்தப்பதிவிற்கு காரணம். முக்கியமாக திரு.தனபாலனுக்கு இந்தப்பதிவு மிகவும் உபயோகமாக இருக்கும் என்றே நம்புகிறேன். அனைவரும் என்றும் நலம் பெற வேண்டுகிறேன்

http://www.vegetableclinic.com/