என் நெருங்கிய உறவினரின் 20 வயது மகனுக்கு அடிக்கடி தலை சுற்றல், மயக்கம் வந்து கொண்டிருந்தது. பலவிதமான பரிசோதனைகளுக்குப்பின் அந்தப்பையனுக்கு மூளையில் ஒரு கட்டி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 7 மி.மீட்டருக்கு குறைவாக அதன் அளவு இருந்தால் மருந்தினாலேயே அந்தக்கட்டியைக்கரைத்து விடலாமென்றும் அதன் அளவு அதிகமாக இருப்பதால் அறுவை சிகிச்சை செய்து தான் அந்தக்கட்டியை நீக்க வேண்டுமென்றும் தலைமை மருத்துவர் கூறி அறுவை சிகிச்சை செய்வதற்கான தேதியும் குறிக்கப்பட்டு விட்டதென்றாலும் அந்தப்பையனின் பாட்டி என்னிடம் பேசும்போது பயந்து கொண்டே இருந்தார். ஆறுதல் பலமுறை சொன்ன போதும் அவர் என்னிடம் சொன்னதெல்லாம் ‘சிகிச்சையின் போது எதுவும் தப்பாக செய்து விடக்கூடாதே’ என்பது தான். அவர் சொன்னதிலும் உண்மை இல்லாமல் இல்லை. இப்போதெல்லாம் நோயாளிக்கான சிகிச்சையைப்பற்றி கவலைப்படுவதை விட அமைந்திருக்கும் மருத்துவர் நல்ல விதமாக இருக்க வேண்டுமே, செய்ய வேண்டுமே என்பது தான் மிகப்பெரிய கவலையாக இருக்கிறது.
சென்ற மாதம் என் உறவினர் சென்னையில் மிகப்பெரிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இரு முறை பைபாஸ் சர்ஜரி இதயத்தில் செய்து கொண்டவர். 78 வயதான அவருக்கு இலேசாக நெஞ்சு வலி என்று மருத்துவமனை சென்றவருக்கு ஆஞ்சியோ தொடையில் செய்தபோது தவறான சிகிச்சை அளிக்கப்பட்டு தொடைக்குள் CLOT உண்டாகி ரண வேதனையை அனுபவித்தார், அதனால் ஏற்பட்ட வீக்கத்தை சரி செய்ய, கெட்ட இரத்தத்தை வெளியேற்றுவதற்காக பிரஷர் கொடுத்து அமுக்கி அமுக்கி அதை வெளியேற்றுவதற்குள் உயிர் போய் உயிர் வந்தது அவருக்கு. இப்படி தவறுதலாக நடந்து விட்டதற்கு ஒரு SORRY சொல்லி, ஒரு மாதத்துக்கு நடக்கக்கூடாது என்றும் சொல்லி நிறைய மருந்து வகைகளுடன் அனுப்பி விட்டார்கள். இன்னும் அவரால் சரியாக நடக்க முடியவில்லை.
பத்து வருடங்கள் முன்னால், என் கணவருக்கு அதே மருத்துவ மனையில் பித்தப்பையையும் பித்தக்குழாயிலிருந்த கற்களையும் நீக்கி, பித்தக்குழாயிலிருந்த அசுத்தங்கள் அனைத்தும் வடிய ஸ்டெண்ட் போட்டு, அந்த ஸ்டெண்ட்டை நீக்க 20 நாட்கள் கழித்து வரச்சொன்னார்கள், அதே போல 20 நாட்கள் கழித்து அந்த ஸ்டெண்ட் நீக்கப்பட்டு, நாங்களும் விமானமேறி துபாய் வந்ததோம். சரியாக மூன்று மாதங்கள் கழித்து என் கணவருக்கு ஒரு இரவில் உடலில் குளிர் ஜுரம் போல பலமாக நடுக்கம் ஏற்பட்டதும் உடனேயே எமெர்ஜென்ஸியில் துபாய் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டபோது என் கணவருக்கு இரத்த அழுத்தம், ஆக்ஸிஜன், எல்லாம் குறைந்து தொற்று கல்லீரலில் பரவி மிக சீரியஸான நிலைக்கு சென்று விட்டார்கள். 2 நாட்களில் ஆக்ஸிஜன் சற்று ஏறியிருந்த சமயம் உடனடியாக அவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் காப்பாற்றி விட்டார்கள். அதைத்தொடர்ந்த பல மோசமான பாதிப்புகளிலிருந்தும் என் கணவர் மீண்டு எழுந்து வந்த பின்பு, நான் தலைமை மருத்துவரிடம் , “ ஏற்கனவே இரு அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக நடந்த பின்பும் எதனால் இவர்களுக்கு இப்படி உயிருக்கு ஆபத்தான நிலைமை ஏற்பட்டது “ என்று காரணம் கேட்டபோது, அவர் ‘ உங்கள் கணவருக்கு உங்கள் ஊரில் வைத்த ஸ்டென்டை மிகவும் குறுகிய காலத்துக்குள் எடுத்து விட்டார்கள். நாங்கள் இந்த காரணத்துக்காக ஸ்டென்ட் வைக்கும்போது 3 மாதம் வரை அதை நீக்க மாட்டோம். அப்போது தான் அசுத்த நீரெல்லாம் முழுமையாக வடியும்” என்றார். அவர் சொன்னது போலவே ஜுன் மாதம் என் கணவருக்கு வைத்த ஸ்டென்ட்டை செப்டம்பரில் தான் நீக்கினார்கள். எத்தனை எத்தனை தவறுகள் நம் மருத்துவமனைகளில் நடக்கின்றன!
என் தங்கையைப்பற்றி முன்னமேயே எழுதியிருந்தேன். நுரையீரலில் பயாப்ஸி எடுக்க நல்ல உடல்நலத்துடன் மருத்துவமனையினுள் சென்றவர் தவறான சிகிச்சையால் அங்கேயே உயிரிழந்து வெளியே வந்தார். எத்தனை பெரிய கொடுமை இது! அவர் இறந்து ஏழு மாதங்களாயும் இன்னும் அந்த அதிர்ச்சியிலிருந்து வெளியே வரமுடியவில்லை.
ஒரு முறை கெண்டைக்காலில் ஏற்பட்டிருந்த வலிக்காக மருத்துவமனைக்கு ஸ்கான் எடுக்கச்சென்றிருந்தேன். பின்னங்கால்களில் ஸ்கான் எடுத்தார்கள். அந்த ஸ்பெஷலிஸ்ட் தன் உதவியாளரிடம் சொல்கிறார் ‘ இவர்களுக்கு வெரிகோஸ் வெயின் பிரச்சினையும் உள்ளது. இதோ, இங்கு செல்லும் நரம்பைப்பாருங்கள்’ என்று! அதற்கு அவரின் உதவியாளர் ‘ இல்லையில்லை. இது வெரிகோஸ் நரம்பு கிடையாது. இவர்களுக்கு அந்த பிரச்சினை இல்லை’ என்கிறார். இந்த விவாதம் என் கண் மூன்னாலேயே நடந்தது. இவர்களின் ஸ்கான் ரிப்போர்ட் எப்படியிருக்கும்? அதை வைத்து மருத்துவர் என்ன விதமான முடிவு எடுப்பார்? அவர் கொடுக்கும் சிகிச்சை எப்படி இருக்கும்?
மருத்துவமனைகள் நம்மை காக்கும் என்று நம்பித்தான் நாம் மருத்துவர்களிடம் செல்கிறோம். அவர்களே தவறுகள், அதுவும் சரி செய்யவே முடியாத தவறுகள் செய்தால் நாம் எங்கே போவது? எங்கே போய் நியாயம் கேட்பது?