Sunday, 16 February 2014

ஒரு கல்யாணத்தின் கதை!

தெரிந்த குடும்பமொன்றில் ஒரு பிரச்சினை! நடுத்தர வர்க்கம் அவர். அவரின் அண்ணன் மகளுக்குத் திருமணம். வெளி நாட்டில் வேலை செய்பவர் அவரின் அண்னன். அங்கிருந்து தமிழகம் வந்து பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்த்து முடித்து நிச்சயம் செய்து விட்டார்கள். அண்ணனும் நிச்சயம் முடிந்ததும் தன் தம்பிகளை அழைத்து ஒவ்வொருத்தரும் மாப்பிள்ளைக்கு இரண்டு பவுனுக்கு செய்து விடுங்கள் என்று உத்தரவு போட்டு விட்டார். இங்கு தான் நம் நண்பரின் குடும்பத்தில் பிரச்சினை வெடித்தது. தன் அளவான வருவாயில் எப்படி இரண்டு பவுன் போடுவது? இவருக்கோ, தான் அப்படி செய்யாமலிருந்து மற்றவர்கள் செய்தால் சபை நடுவில் தன் மானமும் மரியாதையும் போய் விடும் என்ற குமைச்சல். இவர் மனைவிக்கோ, இதற்கு கிட்டத்தட்ட ஐம்பதாயிரம் செலவாகும், கடன் தானே வாங்க வேன்டும், இந்த செலவு தேவையா, இப்படி எல்லோருக்கும் கடன் வாங்கி செலவு செய்து கொன்டிருந்தால் தன் குடும்பம் என்னாவது என்ற ஆற்றாமை! பேச்சு வார்த்தைகள் காரசாரமாக போய்க்கொன்டிருந்தாலும் கணவர் தன் பிடியை விடவில்லை. கடன் வாங்கி ஒரு பிரேஸ்லெட் வாங்கி வைத்து விட்டார். திருமணத்திற்கு சொந்த ஊருக்கு கிளம்பும் சமயம் தகவல் வந்தது பெண்ணைக் காணவில்லை என்று!

பிரளயமே வெடித்தாற்போன்ற நிலை! இவர்கள் வீட்டிற்கு பத்திரிக்கை வைக்க வந்த அண்ணன் இந்த செய்தியை நடுவழியில் கேட்டு, உயிரைக்கையில் வைத்துக்கொண்டு இவர்கள் வீட்டிற்கு வந்து செய்தியைச் சொல்ல தம்பிகள் தவித்துப்போய் விட்டார்கள். இந்தப் பக்கம் அப்பாவும் அந்தப்பக்கம் அம்மாவும் பத்திரிக்கை வைக்க கிளம்பியதும் வீட்டில் இருந்த வயதானவர்கள், வேலை செய்பவர்கள் அத்தனை பேரையும் எப்படி ஏமாற்றி எங்கு சென்றது அந்தப் பெண் என்று அனைவரும் திகைத்துப்போனார்கள். நிச்சயத்தன்று ஒரே சிரிப்பும் அலங்காரமுமாகத்தானே இருந்தது என்ற கேள்வி நண்பருக்குத்திரும்பத் திரும்ப வந்து கொண்டிருந்தது. அப்புறம் தான் கொஞ்சம் கொஞ்சமாக அண்ணனிடமிருந்து கதைகள் வந்தன.

வெளி நாட்டில் வேலை செய்யும் அவரின் அண்ணன் இருக்குமிடத்தில் தூரத்துச்சொந்தத்தில் ஒரு இளைஞன்! அவனுக்கும் இவரின் பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக வளர ஆரம்பித்ததும் பெற்றவர்களுக்கு தெரிந்து போனது. தூரத்து சொந்தமென்றாலும் ஜாதியின் உட்பிரிவு இருவருக்கும் ஒன்றே தான் என்பது தெரிந்ததும் பெற்றவர்கள் 'இது அண்னன் தங்கை உறவு போன்றது' என்று சொல்லி, இருவரையும் கண்டித்து மகளையும் அழைத்துக்கொண்டு, மகளுக்கு வேறு மாப்பிள்ளை பார்க்க தமிழகம் வந்து விட்டார்.



எல்லோருக்கும் ஒரே குழப்பம், தவிப்பு!! சின்னப் பெண், அது யாருடன் எங்கே போனது என்று புரியாமல் தெரியாமல் அந்த பெண்ணைப்பெற்ற‌வர்கள் தவித்த தவிப்பு! ஒரு கடிதமில்லை, விளக்கமில்லை. என்ன நினைக்க முடியும், எதைக்கற்பனை செய்ய முடியும்? தமிழ் நாட்டில் தான் இருக்கிறதா? யாராவது அதைக் கடத்திச் சென்றார்களா? யார் இதற்கு உதவி செய்ய முடியும்? பத்திரமாக இருக்கிறதா? அங்கங்கே எத்தனை சீரழிவுகள் நடந்து கொண்டிருக்கின்றன? அசட்டுத்துணிச்சலுடன் கிளம்பிச்சென்ற இந்த பெண் காயங்கள் எதுவும் படாமல் தப்பிக்குமா? எங்கே, எந்த திசையில் போனது? கேள்விகளுடன் அழுகையுடன் தன் சகோதரர் அழுவதைப்பார்க்க சகிக்காமல் நண்பரும் அழுகிறார்.

எல்லோரும் மதுரையிலிருந்து 200 கல் தொலைவில் இருக்கும் அவர்களின் கிராமத்தில் உட்கார்ந்து ஒன்றும் புரியாமல் அந்த இரவு நேரத்தில் குழம்பித் தவிக்கிறார்கள்..  அப்போது வருகிறது அந்த தொலைபேசி அழைப்பு!

தான் சென்னையிலிருந்து பேசுவதாகவும் தனக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை என்றும் சொல்லி தொடர்பைத்துண்டித்து விட்டது அந்தப் பெண்! ஒரு வழியாக இவர்களுக்கு நிலைமை புரிந்தது. அந்தப் பெண் தான் நேசித்த அந்தப்பையனிடம் சென்றிருக்குமோ என்று சந்தேகித்து அவளின் உடமைகளை சோதித்துப்பார்த்தால் பாஸ்போர்ட் இல்லையென்பது புரிந்த‌து. டிக்கட் வாங்குவதில் இப்போதெல்லாம் எந்த பிரச்சினையில்லை. யார் வேண்டுமானாலும் யாருக்காகவும் ஆன்லைனில் டிக்கட் வாங்க முடியும். டிக்கட் வாங்கியதும் அந்தக் கம்பெனியே அவர்களின் ஈமெயில் விலாசத்துக்கு டிக்கட் காப்பியை அனுப்பி விடுகிறது. அதை அந்த ஈமெயில் விலாசமும் கடவு எண்ணும் தெரிந்தால் எங்கிருந்தாலும் ஒரு இண்டர்நெட் சென்டருக்குச் சென்று பிரிண்ட் எடுத்துக்கொள்ள‌ முடியும். மேலும் விசாரித்ததில் இந்தப் பெண் வீட்டிற்குப் பின்னால் உள்ள‌ வாய்க்காலைக் கடந்து சிறிது தூரம் நடந்து சென்று மதுரைக்குப்போகும் பஸ்ஸைப்பிடித்து மதுரை சென்று அங்கிருந்து சென்னைக்கு அதே போலவே பஸ்ஸில் சென்றிருக்கிறது!

சென்னைக்கு உடனேயே தெரிந்தவர்களை அழைத்து மீனம்பாக்கம் ஏர்போர்ட்டிற்கு சென்று கண்காணிக்கச் சொல்லி விட்டு, எந்த விமானம்  அவர்கள் வசிக்கும் நாட்டிற்கு அந்த சமயம் செல்கிறது என்று ஆராய்ந்தால் அதிர்ச்சி காத்துக்கொண்டிருந்தது! விடியற்காலை வரை நான்கு விமானக்கள் பறந்து போகின்றன! எந்த விமானத்தில் புறப்பட்டு அந்தப் பெண் பறந்து செல்கிறது என்று எப்படி கண்டுபிடிப்பது? போலீஸில் தெரிவித்தால் சட்டப்படி புகாரைப் பதிவு செய்ய வேண்டும். நான்கு நாட்களில் திருமணம் என்ற நிலையில் எப்படி காவல் நிலையம் சென்று புகார் தருவது? அப்படியும் உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் செய்திருந்தார்கள். ஆனால் சென்னை வரை, ஏர்போர்ட் வரை இந்த கேஸ் சென்று விட்டதால், ஏர்போர்ட் கன்ட்ரோல் டவர் வரை விசாரிக்க வேண்டுமென்றால் சென்னை போலிஸில் புகாரை பதிவு செய்ய வேண்டும் என்று அவர்கள் கூறவே, மாப்பிள்ளை வீட்டிற்கு இந்த செய்தி தெரிந்து விட்டால் என்னாகும் என்ற பயத்தில் அந்த எண்ண‌த்தைக் கை விட்டார்கள்.

உடனேயே அவர்கள் நாட்டில் வசிக்கும் உறவினரை அழைத்து அங்கிருக்கும் ஏர்ப்போர்ட் வாசலிலேயே காத்திருக்கச் சொல்லி சொல்லவே, சில மணி நேரங்களிலேயே அந்தப் பெண்ணை அங்கே வளைத்துப்பிடித்தார்கள். பலவாறு புத்திமதிகள் சொல்லி அந்த‌ உறவினரே அந்தப் பெண்னை திரும்ப தமிழகத்திற்கு, ஊருக்கு அழைத்து வந்தார். வந்ததுமே பெற்றவர்கள் அழ, அந்தப்பெண்ணும் கண்ணீர் விட, ' நீங்கள் முடிவு செய்த மாப்பிள்ளையையே கல்யாணம் செய்து கொள்கிறேன்' என்று இறுதியில் சொல்லி முடித்தது அந்தப் பெண்!

எத்தனை தவிப்பு! எத்தனை கண்ணீர்! எத்தனை தேடல்! எத்தனை பதற்ற‌ம்! தொடர்ந்து வந்த நான்கு நாட்களும் மறைமுகமான கண்காணிப்புடன் ஒரு வழியாக திருமணம் நடந்து முடிந்தது! அந்த கண்காணிப்பிற்கு தேவையே இருக்கவில்லை, அத்தனை சடங்குகளையும்  மிகவும் மகிழ்ச்சியுடனேயே அந்தப் பெண் செய்து முடித்ததாக எங்கள் நண்பரின் மனைவி அதிசயித்துச் சொன்னார்!

இதற்கு எங்கள் நண்பரின் வீட்டைப்போல, ஒவ்வொரு வீட்டிலும் முறை செய்யவும் செலவு செய்யவும் விருந்திற்கு பரிசளிக்கவும் எத்தனை எத்தனை போராட்டங்கள்!

அந்த மனமகனை நினைத்த போது தான் ரொம்பவும் பரிதாபமாக இருந்தது எனக்கு! நடந்தது எதுவும் தெரியாமல் எத்தனை க‌னவுகளுடன் இருந்திருப்பார்!

பெற்றவர்களின் பாசமும் அன்பும் பாதிக்கவில்லை. காதலும் பெரிதாகத் தெரியவில்லை! இந்தப் பெண்கள் எங்கே செல்கிறார்கள்?










Tuesday, 4 February 2014

தோரணமலை!!!

பொதுவாய் விசித்திரமான, சரித்திர உண்மைகளை தன்னகத்தே கொண்ட கோவில்களின் வரலாறுகள் என்னை எப்போதுமே ஈர்க்கும். அதைப்பற்றி விரிவாக அறிந்து கொள்ள ஆவல் எழும். அப்படிப்பட்டதொரு ஆச்சரியகரமான கோவில் இது!!

தோரணமலை

தென்றல் தவழும் தென்பொதிகை மலைத்தொடரில் திருநெல்வேலி மாவட்டம் தென்காசி கடையம் பாதையின் மேற்கில் யானை வடிவமாய் அமைந்துள்ளது தோரணமலை. குலுக்கை மலை, ஆனைமலை என்றும் அழைக்கப்படுகிறது. வாரணம் என்ற சொல் யானையைக் குறிக்கும். இச்சொல் காலப்போக்கில் தோரணம் என்று மருவி தோரணமலை என்று அழைக்கப்படுவதாகச் சொல்கிறார்கள். 64 சுனைகள் இருப்பதால் தோரணமலை இயற்கை ராணியின் சிம்மாசனமாகத் திகழ்கிறது.
சுமார் ஆயிரம் வருடங்களுக்கு முன்பு அகத்தியரின் ‘மருத்துவமனை’யாக விளங்கிய இந்தத் தோரணமலை நாளடைவில் அப்படியே தூர்ந்து விட்டது.  இங்கு முருகனுக்கு அமைக்கப் பட்டிருந்த கோயிலும் காணாமல் போய்விட்டது. பல்லாண்டுகளுக்குப்பிறகு, இங்கிருக்கும் சுனையில் முருகன் சிலை கிடைத்திருக்கிறது. அதை எடுத்து தற்போதுள்ள இடத்தில் வைத்து வணங்க ஆரம்பித்திருக்கின்றனர். இங்கு முருகப்பெருமான் கையில் வேலுடன், மயில் வாகனத்தில் அருள்புரிகிறார்.

இவ்வாலயம் அமைக்கப்பட்ட காலம் என்னவென்று அறுதியிட்டுக் கூற முடியவில்லை. சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்கலாம் என்பது பெரும்பான்மையோரின் கருத்து. என்றாலும் சுமார் 300 ஆண்டுகளாகத்தான் இவ்வாலயம் பெரும்பாலான மக்களால் அறியப்பட்டிருக்கிறது.
சுமார் 2,000 அடி உயரம் கொண்ட இம்மலைமீது ஏறிச்சென்று முருகனை வணங்க ஒற்றையடிப் பாதை மட்டுமே நெடுங்காலமாக இருந்து வந்தது. பக்தர்களின் வருகை அதிகரிக்க, பாதையைச் சீரமைக்கும் அவசியம் உண்டானது. இதைக் கருத்தில் கொண்ட ஆலய நிர்வாகியான ஆதிநாராயணன், அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார்.



ஆதிநாராயணன்  இந்தக் கோயிலை மக்களுக்கு அறிமுகப்படுத்த நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள சுமார் 150 சினிமா தியேட்டர்களில் தோரணமலை குறித்த சிலைடுகளை காட்ட வைத்தார். ஒரு  கோயிலுக்கு விளம்பரமாக இதுபோல் சினிமா தியேட்டரில்  சிலைடு காட்டிய சம்பவம் வேறெங்குமே நடந்ததாக தெரியவில்லை. அதைப் பார்த்துத் தான் பக்தர்கள் தோரணமலைக்கே வரத் தொடங்கினர்.

இப்பகுதியைச் சுற்றியுள்ள தொழிலதிபர்களையும் செல்வந்தர்களையும் ஆன்மிகத்தில் ஈடுபாடு உள்ளவர்களையும் ஆதிநாராயணன் நாடிச் சென்று, அவர்களது நிதியுதவி, பொருளுதவி மூலம் மலைமீதுள்ள முருகன் ஆலயத்தைப் புதுப்பித்ததோடு, 1,085 படிக்கட்டுகள் கொண்ட பாதையையும் அமைத்தார்.

படிக்கட்டுகள் அமைக்கப்பட்ட பின்னர் இவ்வாலயத்துக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது


தோரண மலையில் அகத்தியர் அமைத்த ‘மருத்துவமனை’ 1000 வருடங்களுக்கு முன்பே இயங்கி வந்தது. தற்போது கூட தீராத நோயென்று வந்து பாறையில்  அமர்ந்து தியானம் செய்பவர்களுக்கு அந்த நோய் தீருகிறது! மருத்துவ படிப்புக்கு மனு கொடுத்து விட்டு, இங்கு வந்து தியானம் செய்தால், மருத்துவப் படிப்பிற்கான இடம் உறுதியாகிறது என்றும் சொல்கிறார்கள்.
தோரண மலைக்கும் சற்று மேலே ஏறினால் ஒரு அடர்ந்த குகை இருக்கிறது. இதை கோரக்கர் குகை என்கிறார்கள். ஒரு வகையான மருத்துவ குணம் கொண்ட உப்பினாலும் மூலிகையாலும் இந்த குகை உருவாக்கப்பட்டது என்று சொல்லப்படுகிறது.

தேரையர்

தலையைப் பிளந்து அறுவைச் சிகிச்சை செய்வது என்பது, அறிவியல் வளர்ந்துள்ள இன்றைய நிலையில் கூட, கடுமையான சோதனைக்களத்தில் நிற்கும் உணர்வைத் தருகிறது. ஆனால், நம் தேசத்தில் எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, மூலிகை வகைகளைக் கொண்டே இந்த சிகிச்சை நடத்தப்பட்டிருக்கிறது. இந்த சிகிச்சையை செய்தவர் அகத்தியர் என்றாலும், அது வெற்றி பெற காரணமானவர் தேரையர் சித்தர். வைத்தியரே குழம்பி நின்ற வேளையில், துணிச்சலையும் சமயோசிதத்தையும் குழைத்து, இந்த அறுவை சிகிச்சை வெற்றி பெற காரணமானார்.
தேரையர் சித்தர்சமாதியானது தோரணமலை என தெரிய வருகிறது.. தமிழ் மூதாட்டி அவ்வையார், தேரையரின் திறமையைப் பற்றித் தெரிந்து, அவரை அகத்தியரிடம் அறிமுகப்படுத்தியதாகவும், அவரை அகத்தியர் சீடராக ஏற்றுக்கொண்டதாகவும் தகவல் இருக்கிறது.

தேரையரின் நிஜப்பெயர் தெரியவில்லை. ஆனால், அவர் தேரையர் என்ற பெயர் பெற ஒரு நிகழ்ச்சியே காரணமானது. எப்படியிருப்பினும், இவர் அகத்தியரின் சீடராக இருந்தது நிஜமே.
அகத்தியர், காடுகளில் கிடைக்கும் மூலிகைகளைக் கொண்டு பலவித ஆராய்ச்சிகளைச் செய்து கொண்டிருந்தார். தேரையர் அவர் கேட்கும் மூலிகை வகைகளைத் தேடிப்பிடித்து கொண்டு வந்து மருந்து தயாரிக்க உதவினார்.,
காசிவர்மன் என்ற அரசனுக்கு கடும் தலைவலி ஏற்பட்டது. நாளாக நாளாக வலி அதிகரித்தது.  அகத்தியரைத் தேடி அவரது குடிலுக்கு வந்த‌ மன்னனிடம் அகத்தியர் மிகுந்த கருணை கொண்டார். 
அகத்தியர் அவனைத் தைரியப்படுத்தினார். மன்னன் உறங்கியபோது அவனின் மூக்கு துவாரம் வழியே தேரை எனப்ப்டும் தவளைக்குஞ்சு உள்புகுந்து மூளைப்பகுதியில் தங்கியிருப்பதால் இந்த வலியென்ற காரணம் சொல்லி கபால அறுவை சிகிச்சை தான் இதற்கான தீர்வு என்று தீர்மானித்தார். ஒரு வித மூலிகையால் மன்னனை மயக்கமுற்ச்செய்து கபாலத்தைத் திறந்தார்.


அவர் தீர்மானித்தபடியே மூளையில் ஒரு தேரை மிரள மிரள விழித்துக் கொண்டிருந்தது.  கையால் எடுக்க முற்பட்டு தேரை ஏதாவது ஒரு இடத்தில் போய் பதுங்கிக் கொண்டால், உயிருக்கு ஆபத்தாகி விடும்! வைத்திய மாமேதை அகத்தியரே கலங்கி நின்ற போது, அருகில் நின்ற தேரையர் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொண்டு வந்தார். மன்னன் தலையருகே வைத்து, கைகளை தண்ணீருக்குள் விட்டு அளைந்தார். தண்ணீரின் சல சல சத்தம் கேட்ட தேரை தலையில் இருந்து குதித்து தண்ணீருக்குள் விழுந்து விட்டது.


சிஷ்யனின் அபார அறிவு திறனை அகத்தியர் பாராட்டி, சந்தன காரணீயம் என்ற மூலிகையால் உடைந்த தலையை ஒட்ட வைத்தார் என்று வரலாற்றுக்குறிப்பு கூறுகிறது.  

இன்னொரு சமயத்திலும்  தேரையர். . பாண்டிய மன்னன் ஒருவனின் கூன் முதுகை தன் மருத்துவத்தாலும் புத்திசாலித்தனத்தாலும் சரி செய்தார். மருத்துவத்தில் தேர்ந்த இவர் அகத்தியரின் கட்டளையின் படி 21 வைத்திய நூல்களை எழுதி தமிழனுக்கு பொக்கிஷமாக விட்டுச் சென்றிருக்கிறார். பிற்காலத்தில் தொல்காப்பியம் என்ற நூலை எழுதி தொல்காப்பியர் என்ற பெருமையைப்பெற்றவரும் இவரே என்று கூறப்படுகிறது.  பல காலம் வாழ்ந்த அவர்  தோரணமலையில் சமாதியானதாக தெரிய வருகிறது.

ஓங்கி உயர்ந்த மலை, அடிவாரம் தொடங்கி மலை உச்சி வரை ஆங்காங்கே சுனைகள், அடிவாரத்தில் சப்த கன்னிகையர் கோவில், மலையின் பின்புறம் சாஸ்தா கோவில், மலை உச்சியில் முருகன் கோவில் என ஆன்மீகப்பிரியர்களுக்கு தோரனமலை நிச்சயம் ஆனந்தத்தைத்தரும்!!