Wednesday 30 June 2010

செராமிக் மலர்கள்

இந்த செராமிக் பூக்கள் பார்க்கும்போதே நிஜமான பூக்களைப்பார்ப்பதுபோல பிரமிப்பை உண்டாக்கும். அந்த அளவிற்கு இவற்றை கலை நுணுக்கத்துடன் வடிவமைக்கலாம். முதல் முறை செய்யும்போது விரல்களுக்கு சிறிது தடுமாற்றமிருக்கும். அதன் பின் விரல்கள் பழகி வளைந்து கொடுக்கும்.

இதற்குத் தேவையான பொருள்கள்:

1. செராமிக் பவுடர் [ இது கைவினைப்பொருள்கள் விற்கும் கடைகளில் கிடைக்கும்.]

2. Glue bottle [இதுவும் இதே கடைகளில்-செராமிக் பவுடரில் கலக்க என்று கேட்டால் கிடைக்கும்]

3. Dyes- [ பல வண்ணங்களில்]

4. சின்னதும் பெரியதுமான மெலிசான கம்பி போன்ற ஒயர்கள்

5. Cutters [ பல வடிவங்களில், சைஸ்களில்]

6. மகரந்தப்பூக்கள் பல வண்ணங்களில்

7. scrapper

8. கம்பியைச் சுற்ற மெல்லிதான துணி போன்ற பச்சை பேப்பர்கள்.

செய்முறை:

செராமிக் பவுடர் இரண்டு பங்கு, கோந்து 1 பங்கு என்று எடுத்துக்கொண்டு சப்பாத்தி மாவு போல நன்கு பிசைந்து கொள்ள வேண்டும். எந்த கலர் வேண்டுமோ அந்த dye-ஐக் கலந்து மாவை பிசைய வேண்டும்.
பின் மாவை ஒரு அரை நெல்லியளவு உருட்டி ஒரு பென்சிலால் உள்ளே சிறு துவாரம் செய்யவும். பின் கத்தரிக்கோலால் 6 இடங்களில் கட் செய்யவும். அவை ஆறு இதழ்களாகும். ஒவ்வொரு இதழையும் ஆள்காட்டி விரலாலும் பெரு விரலாலும் பிடித்து தட்டையாக்கினால் மெல்லிய இதழ்கள் உண்டாகி பூ உண்டாகும். பின் ஒரு பச்சைக்கம்பியை எடுத்து நுனியில் பசை தடவி மேலிருந்து உள்ளே நுழைத்து பின் பசை மேல் மகரந்தம் வைக்கவும். 


செய்து முடித்த பின் பூ இப்படி இருக்கும்.

சற்று பெரிய பூக்களுக்கு இதழ்களைத் தனியே செய்து வைத்துக்கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு ரோஜா பூக்களை செய்யும்போது
 5 சிறிய இதழ்களும் 6 பெரிய இதழ்களும் கட் செய்து scrapper-ன் அடிபாகத்தால் மெலிசாக்கவும்.

ஒரு கம்பியில் செராமிக் கலவையில் ஒரு சிறு உருண்டை எடுத்து மொட்டுபோல அந்தக் கம்பி நுனியில் பதிக்கவும். பின் முதல் இதழை மட்டும் முழுவதுமாக பசை தடவி அந்தக்கம்பியைச் சுற்றிலும் ஒட்டவும். பின் ஒவ்வொரு இதழிலும் அதன் கீழ்ப்பக்கம் மட்டும் பாதியளவில் பசை தடவி ஒவ்வொன்றாக கம்பியைச் சுற்றி ஒட்டிக்கொண்டே வரும்போது அழகிய ரோஜாவாக அது உருப்பெறும்.

கார்னேஷன் போன்ற மலர்களுக்கு அதற்கென்றே தனித்தனியாக cutters உள்ளன. அவற்றை வைத்து கட் பண்ணி இதே செய்முறையையும் நம் கற்பனைகளையும் சிறிது கலந்து மலர்களை உருவாக்கலாம். நான் உருவாக்கிய செராமிக் மலர்க்கொத்து இதோ!!

Friday 25 June 2010

ஒரு இளைஞனின் சீற்றம்!

அருகிலுள்ள குவைத்திற்கும் ஈராக்கிற்கும் இடையே ஏற்பட்ட வளைகுடாப்போரின் போது குவைத்திலிருந்து வெளியேறப் படாதபாடு பட்டு ஒரு வழியாக வெளியேறி நம் தாயகமான இந்தியாவை வந்தடைந்தவர்கள் ஆயிரக்கணக்கில் இருந்தார்கள். வருமானத்தை, வளமான வாழ்க்கையை, நிம்மதியை, மோசமான கனவு போல திடீரென ஒரு நள்ளிரவு தொலைத்தவர்களில் ஒருத்தர்தான் நம் கதாநாயகன்!இவரை நாங்கள் வளைகுடா போர் முடிந்து மூன்று வருடங்களுக்குப் பிறகு தாய்லாந்து நாட்டிற்கு சுற்றுலா சென்றிருந்த நிலையில் ஒரு நண்பரது இல்லத்தில் சந்தித்தோம். குவைத்தில் ஒரு பணக்காரரின் இல்லத்தில் காரோட்டியாய் வேலை பார்த்து வந்தவர் இவர். நள்ளிரவு ஏற்பட்ட ஈராக்கின் ஆக்ரமிப்பினால் அவசரம் அவசரமாக வெளியேறிய ஆயிரக்கணக்கானவர்களில் இவருடைய முதலாளியும் ஒருத்தர். உயிருக்கே பயந்து ஓடும்போது தன் கீழ் வேலை செய்யும் மற்றவர்களைப்பற்றி அவர்களால் கவலைப்பட முடியவில்லை. நம் நண்பருடைய பாஸ்போர்ட்டும் அவருடனேயே போய் விட்டது. திண்டாடி திணறி ஒரு வழியாக இண்டியன் எம்பஸியை அடைந்திருக்கிறார்.

அந்த சமயம் இதுபோல நிராதரவான இந்தியர்களுக்காக, அவர்கள் அந்த நாட்டை விட்டு வெளியேற outpass வசதியையும் அம்மான் ஏற்போர்ட்டிலிருந்து இலவச ஏர் இந்தியா விமான பயணத்தையும் இந்திய அரசாங்கம் ஏற்பாடு செய்திருந்தது. இவர் இந்தியன் எம்பஸியை அடைந்து இந்த சலுகைகளுக்கான பேப்பர்களைக் கேட்டிருக்கிறார். அவர் இந்தியர்தான் என்பதற்கான சான்றுகளை அங்கே கேட்கவும் பாஸ்போர்ட் தொலைந்த கதையை இவர் சொல்ல, இவருக்கு உதவி செய்ய மறுத்து விட்டது இந்தியன் எம்பஸி. தன்னுடைய பாஸ்போர்ட்டே தொலைந்த நிலையில் தான் ஒரு இந்தியக் குடிமகன் தான் என்று எப்படி நிரூபிப்பது? ‘ஜன கண மன’ பாடுகிறேன். அப்போதாவது நான் ஒரு இந்தியன் என்று நம்புவீர்களா?’ என்றெல்லாம் சொல்லி அழுதிருக்கிறார். எப்படியோ கெஞ்சிக்கூத்தாடி அந்த பேப்பர்களைப் பெற்று, பல நூறு மைல்களை யார் யாருடைய கார்களிலோ ஒட்டிக்கொண்டு பிரயாணம் செய்து அம்மானை அடைந்து, விமானத்தில் ஏறி டில்லி வந்து சேர்ந்து, பின் இலவச ரயில் பயணம் மூலமாக தாயகம் வந்திருக்கிறார்.

ரயிலில் வந்த கதையை இப்படி சொன்னார்.

“ வரும் வழியெல்லாம் ந்ம் நாட்டின் ஒவ்வொரு மாநிலத்தையும் ரயில் கடந்தபோது எங்களின் நிலைமையைக் கேள்விப்பட்டு பழங்களையும் உணவுப்பொட்டலங்களையும் கதவைத் திறந்து மூட்டை மூட்டையாக கொட்டினார்கள். ஆனால் சென்னையில் யாருமே இல்லீங்க! தமிழக அரசு எதுவுமே செய்யவில்லை. ஒரு அனாதை போல வெளியே வந்து ஒரு ஆட்டோவைப் பிடித்து நண்பர் வீடு சென்று காசு வாங்கி ஆட்டோவுக்குக் கொடுத்தேன்.”

வாழ்க்கைக் கவலைகளூம் வருமானமின்மையும் துரத்த மறுபடியும் பாஸ்போர்ட் அலுவலகத்திற்குச் சென்று புது பாஸ்போர்ட்டிற்கு விண்ணப்பித்து அதற்காகக் கேட்ட லஞ்சம் 1500 ரூபாயையும் கொடுத்திருக்கிறார். அதற்கான சான்றுகளையும் வைத்துக்கொண்டு லஞ்சம் கேட்டுப்பெற்றவரை கோர்ட்டுக்கு இழுத்து அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். ஒரு வழியாக தய்லாந்தும் வந்து வேலையையும் கிடைத்து விட்டது.

எப்போது கல்யாணம் என்று கேட்டோம்.

‘தாய்லாந்து பெண்ணைத்தான் கல்யாணம் பண்ணிக்கொள்ளப்போகிறேன்.  பெண்ணும் முடிவாகி விட்டது’’ என்று அவர் சொன்னதும் தூக்கிவாரிப்போட்டது.

‘இதென்ன இப்படி முடிவு?’ என்று கேட்டதும் அவர் சொன்னார்.

‘ இந்த ஊர்ப்பெண்ணை மணமுடித்தால் பெண் வீட்டில் வரதட்சிணை கொடுக்கிறார்கள். இந்த அரசாங்கம் குடியுரிமை வழங்குகிறது. வசதியான வாழ்க்கை. இந்த வசதி எனக்கு இங்குதான் கிடைக்கிறது. நம் நாட்டில் என்ன கிடைக்கும்?’

மனசு ஏனோ கனமானது. “ நாடென்ன உனக்கு செய்தது என்று பார்க்காதே. நீ உன் நாட்டிற்கு என்ன செய்தாய் என்று பார் ” என்ற புகழ் பெற்ற வரிகள் திடீரென நினைவுக்கு வந்தன!

அவரின் தார்மீகக் கோபமும் அவர் பட்ட கஷ்டங்களின் வலிகளூம் அவலங்களும் எனக்குப் புரிந்தது. ஆனால் தாய்மண்ணையே வெறுக்கும் அளவுக்கு அவரின் சீற்றம் நியாயமானதா?

Sunday 20 June 2010

மறுபடியும் அழகுக் குறிப்புகள்!

குறிப்பு முத்துக்களில் மறுபடியும் அழகுக் குறிப்புகளைத் தரலாமெனத் தோன்றியது. அதுவும் இந்த மாதிரி கோடை காலத்தில் தலையில் சூடு ஏறாமல் குளிர்ச்சியாக எப்போதும் வைத்துக்கொள்வதும் முடியைப்பராமரிப்பதும் மிகவும் அவசியம். அதனால் முடியை பராமரிக்கவும் பாதம், முகத்தைப் பராமரிக்கவும் சில குறிப்புகளை இங்கே தந்துள்ளேன்.


1. பேன்கள் தொல்லை நீங்க:

மருதாணிப்பூக்களை சுத்தம் செய்து தலயணை உறைக்குள் வைத்து அதன் மீது தலை வைத்துத் தூங்கினால் பேன்கள் தலைமுடியை விட்டு நீங்கி விடும்.

2. சீதாப்பழக்கொட்டைகளை 2 நாட்கள் நன்கு வெய்யிலில் காயவைத்து பொடி செய்து தேங்காயெண்ணையில் கலந்து வைத்து இரவில் தலைக்குத் தடவி காலையில் வெதுவெதுப்பான நீரில் குளிக்க வேண்டும். அவ்வாறு செய்து வந்தால் பேன்கள் தொல்லை ஒழியும்.

3. முக்கியமாகச் செய்ய வேண்டியது- பேன் தொல்லை அதிகமாக உள்ளவர்கள் அருகில் ஒரு நாள் கூட படுக்காமல் இருத்தல். தனியான சீப்பை உபயோகிக்க வேண்டும். அடிக்கடி சோப்பும் டெட்டாலும் கலந்த நீரில் இரவு முழுவதும் ஊறவைத்து கழுவ வேண்டும்.

4. பொடுகு நீங்க:

2 ஸ்பூன் வெந்தயத்தை ஊறவைத்து அரை கப் தேங்காய்ப்பால் சேர்த்து நன்கு மையாக அரைக்கவும். அதோடு 3 ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து தலைக்குத் தேய்த்து ஊறவைத்து குளித்து வந்தால் விரைவில் பொடுகு தொல்லை நீங்கும்.

5. வசம்பை நசுக்கி சிறிது நல்லெண்னையில் மெதுவான தீயில் கருக வறுத்து, பொடித்து அதைத் தேங்காய் எண்னெயில் கலந்து தடவி வர பொடுகுத் தொல்லை நீங்கும்.

6. வேப்பம்பூவையும் வெல்லத்தையும் கலந்து நல்லெண்னையில் சேர்த்துக் காய்ச்சி வடிகட்டி, அதை தலைக்குத் தேய்த்து வந்தால் பொடுகு நீங்கும்.


7. முகம் வசீகரமாக ஆக:

புதினா, எலுமிச்சை இலை இரண்டையும் ஒரு கைப்பிடி எடுத்து கொதிக்கும் வென்னீரில் போட்டு ஆவி பிடித்து வந்தால் முகம் பொலிவடைந்து வசீகரமாக மாறும். வாரம் இரு முறைகளாவது இவ்வாறு செய்ய வேண்டும்.

முகம் சிகப்பாக மாற:

8. முதல் நாள் இரவு சிறிது பாலில் 1 ஸ்பூன் கசகசாவை ஊறவைக்கவும். மறு நாள் காலை முகத்தில் தடவி காய்ந்ததும் கழுவவும். இதைத் தொடர்ந்து செய்தால் முகம் நாளடைவில் சிவக்க ஆரம்பிக்கும்.

9. காரட்டையும் தக்காளியையும் சேர்த்து அரைத்து தினமும் பூசி வந்தாலே நாளடைவில் முகம் வெளுக்க ஆரம்பிக்கும்.

10. பாளம் பாளமாக வெடிப்புடன் இருக்கும் பாதம் சரியாக:

கடைகளில் திரவ மெழுகு கிடைக்கும். அதை வாங்கி வந்து சுத்தமான மஞ்சள் தூளுடன் கலந்து வைக்கவும். தினமும் இரவில் உப்பு கலந்த சற்று சூடான நீரில் பாதங்களை 10 நிமிடங்கள் வைத்திருக்கவும். பிறகு இந்த மருந்துக் கலவையை பாதங்களில் பூசி படுக்கவும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் வெடிப்புக்கள் முழுவதுமாக நீங்கி பாதங்கள் பளபளக்கும்!

Tuesday 15 June 2010

முருங்கை கத்தரிக்காய் சாதம்

இந்த முறை சமையல் முத்தில் எந்த குறிப்பைத்தரலாம் என்று யோசித்தபோது முருங்கைக்காயையும் முருங்கைக்கீரையும் பயன்படுத்தி செய்யக்கூடிய இந்த கலவை சாதத்தை எழுதலாம் என்று நினைத்தேன். முத்துச்சிதறலில் மட்டும் மிக அதிக சுவையுடைய-ரொம்பவும் வித்தியாசமான குறிப்பைத்தான் அளிக்கவேண்டுமென்று உறுதியாயிருக்கிறேன். அந்த வகையில் இது மிகவும் வித்தியாசமான கலவை சாதம்.தேவையானவை:

பாஸ்மதி அரிசி- 300 கிராம் [ 2 கப்]
தேங்காய் எண்னெய்- 1 மேசைக்கரண்டி
நெய்- 5 மேசைக்கரண்டி
சன்னமாக அரிந்த சின்ன வெங்காயம்- 1 கப்
உரித்த சிறிய பூண்டிதழ்கள்- 2 மேசைக்கரண்டி
முருங்கைக்காய்கள்-4
முருங்கைக்கீரை- 1 கப்
நீளமாகவும் சற்று மெல்லியதாயும் அரிந்த பிஞ்சு கத்தரிக்காய்- 2 கப்
சன்னமாக அரிந்த தக்காளி- 2 கப்
சிறு துண்டுகளாய் அரிந்த குடமிளகாய்- 1
சீரகம்- 1 ஸ்பூன்
கறிவேப்பிலை- 3 கொத்து
சன்னமாக அரிந்த கொத்தமல்லி- அரை கப்
தேவையான உப்பு
மஞ்சள் தூள்- அரை தேக்கரண்டி

கீழ்க்கண்ட பொருள்களை 2 ஸ்பூன் எண்ணெயில் பொன்னிறமாக வறுத்துப் பொடிக்கவும்.

தனியா- 1 ஸ்பூன், கடலைப்பருப்பு- 1 ஸ்பூன், கசகசா- அரை ஸ்பூன்,
வற்றல் மிளகாய்-5, மிளகு- அரை ஸ்பூன், கிராம்பு-1, பட்டை- 1, சோம்பு- 1 ஸ்பூன்

செய்முறை:

1. அரிசியை 20 நிமிடங்கள் ஊற வைக்கவும்.

2. சிறிது நெய்யில் வதக்கி பின் தேவையான உப்பும் சேர்த்து 4 கப் நீர் சேர்த்து புலவு போல உதிர் உதிராக சாதம் செய்யவும்.

3. வாணலியை அடுப்பில் வைத்து சூடு செய்து எண்ணையையும் 3 மேசைக்கரண்டி நெய்யையும் ஊற்றவும்.

4. சீரகம் சேர்த்து அவை பொரிய ஆரம்பித்ததும் சின்ன வெங்காயத்தையும் பூண்டையும் சேர்த்து வதக்கவும்.

5. பிறகு தக்காளி, முருங்கைக்கீரை, கத்தரிக்காய், குட மிளகாய், சிறிய துண்டுகளாய் அரிந்த முருங்கைக்காய்கள், மஞ்சள் தூள், கறிவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு சேர்த்து சிறு தீயில் சமைக்கவும்.

6. முருங்கை நன்கு வெந்து, மசாலா கெட்டியாகி, எண்ணெய் மேலே தெளிய ஆரம்பித்ததும் வறுத்த பொடியைச் சேர்த்து, மீதமிருக்கும் நெய்யையும் சேர்த்து சிறு தீயில் சற்று வதக்கவும்.

7. இந்த காய்கறி கலவையில் சாதத்தைக் கொட்டி சிறு தீயில் சில நிமிடங்கள் கிளறவும்.

8. தேவையானால் சிறிது நெய் சேர்க்கவும்.

9. முருங்கை கத்தரிக்காய் சாதம் தயார்!

பொருத்தமான பக்க உணவுகள்:

 உருளைக்கிழங்கு வறுவல்,


கோழி வறுவல்,


தயிர் பச்சடி


முதலியவை ஆகும்.

Tuesday 8 June 2010

இதுவும் பெண்கள் கையில்தான் இருக்கின்றது!!


கொஞ்ச காலமாகவே எந்தப் பத்திரிக்கையைப் பிரித்தாலும் விவாகரத்து வழக்குகள், கோரிக்கைகள் அதிகமாகத் தென்படுகின்றன. காரணங்களைப் படிக்கும்போது சகிப்புத்தன்மையும் விட்டுக்கொடுத்தலும் இல்லாததும் அவசர வாழ்க்கையும் தனி மனித ஈகோவும்தான் பெரும்பாலான வாழ்க்கையில் விளையாடி அருமையான பல எதிர்காலங்களை அழிக்கும் சக்திகளாய் இருக்கின்றன என்பது புரியும்போது மனது வேதனையுறுகிறது.


பல வருடங்களுக்கு முன் எழுத்தாளர் சிவசங்கரி எழுதிய ‘பாலங்கள்’ என்ற நாவல் நினைவுக்கு வருகிறது. தன் தாத்தா பாட்டி காலத்து வாழ்க்கை முறைகள், தன் அப்பா-அம்மா காலத்து வாழ்க்கை முறைகள், அன்றைய காலத்து வாழ்க்கை முறைகள் என்று சுவைபட வித்தியாசங்களையும் மறந்து போன நல்ல விஷயங்களையும் எழுதியிருப்பார்.

எத்தனை நல்ல விஷயங்களை இப்போதைய தலைமுறை மறந்து போயிருக்கிறது, இழந்திருக்கிறது என்பதை கடந்து போன வருடங்களைத் திரும்பிப்பார்க்கையில் நன்றாகவே உணர முடிகிறது.

துள்ளி விளையாடும் குழந்தைப் பருவத்தை குழந்தைகள் இழந்து வருகிறார்கள். அவர்களுக்கு எங்கள் காலத்தில் அனுபவித்த நிலாச்சோறு, பாண்டி ஆட்டம், ஆற்றில் குதித்து நீச்சலில் புரண்ட சந்தோஷம், கொடுக்காபுளியும் புளியங்காயும் நண்பர் குழுவோடு போட்டி போட்டுக்கொண்டு பறித்து உண்ட திருப்தி-இப்படி எதுவுமே இன்றில்லை. இந்த மாதிரி விலையாட்டுக்களினாலும் நீச்சலினாலும் உடலளவில் ஏற்பட்ட பயிற்சி, தெம்பு இன்றைய குழந்தைகளிடம் இல்லை. கம்ப்யூட்டர் அவர்கள் உடலைக் கெடுப்பதுடன் எதிர்கால நோய்களுக்கு வழி வகுக்கிறது. கம்ப்யூட்டரில் விளையாடிக்கொண்டே பக்கத்தில் நொறுக்குத்தீனிகளையும் ஒரு கை பார்ப்பது இன்னும் மோசம். அவர்களின் அதிக புத்தகச்சுமைகளும் பாடங்களும் அவர்களை இப்போதிலிருந்தே ஒரு எந்திர வாழ்க்கைக்குத் தயாராக்கிக்கொண்டு வருகின்றன.

இப்படி வளரும் குழந்தைகளுக்கு படிப்பும் அதைச்சார்ந்த விஷயங்களும்தான் முன்னுக்குத் தெரியும். இவர்களே வளர்ந்து ஆளாகும்போது இந்தப்படிப்பைத்தவிர மற்ற நல்ல விஷயங்கள் அவர்களுக்குத் தெரிவதில்லை. சொல்லித்தரப்படுவதில்லை.அதனால் ஏதாவது சொன்னாலும் அவர்கள் அறிவைப்பயன்படுத்தி விவாதங்கள் செய்து அவற்றைப் புறந்தள்ளுகிறார்கள். ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையப்போவதில்லை.

சில வருடங்களுக்கு முன் சென்னையிலிருந்து திரும்பிக்கொண்டிருந்த ரயில் பயணத்தில் 15 வயது சிறுமி என் அருகில் அமர்ந்திருந்தாள். பேசும்போது அந்தப் பெண்ணின் அறிவு என்னை அசத்தியது. திகைக்க வைத்ததென்றே சொல்ல வேண்டும். ஒரு பக்கம் கல்கியின் சரித்திர நாவல்கள், திருக்குறள் பற்றிய அலசல்கள், மறு பக்கம் நான் வழக்கமாகப் படிக்கும் ஆங்கில நாவலாசிரியர்களைப் பற்றி ஆர்வமாகத் தெரிந்து கொண்டு தான் படிக்கும் நாவலாசிரியர்களை சிபாரிசு செய்த ஆர்வம், இன்றைய மாணவர்களின் ஒழுக்கக்கேடுகள், ஒழுங்கீனங்கள், ஊனமுற்றோருக்கான உதவி மையத்தில் உதவி செய்ய தான் இணைந்திருப்பது பற்றிய உற்சாகம்-இப்படிப்பட்ட அறிவுப்பூர்வமான அந்த பெண்ணின் உடைகளில் மட்டும் நேர்த்தி இல்லாததுடன் முகத்தையும் சுளிக்க வைத்தது என்றுதான் சொல்ல வேண்டும். பிறர் கவனம் படாமல், கண்ணியமாக உடையணிய அவள் சொல்லித்தரப்படவில்லை. இப்படித்தான் இன்று நிறைய பெண் குழந்தைகள் வளர்கின்றார்கள். இவர்கள் இளம் பெண்களாக மாறும்போது பொறுமை, நிதானம், பணிவு-இவை தவிர்த்து இந்த அறிவுப்பூர்வமான விவாதங்கள் மட்டும் தீவிரமாகத் தொடர்கின்றது. பெற்றோரிடம் சண்ட மாருதமாக புயலாக தர்க்கிக்க வைக்கிறது.

ஒரு முறை என் மகனுக்கு பெண் தேடிக்கொண்டிருந்த சமயம்-ஒரு திருமணப் பதிவு மையத்திற்கு ஒரு பெண்ணும் அவளுடைய பெற்றோர்களும் வந்திருந்தார்கள். மாப்பிள்ளைக்கு என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும் என்று அவளுடைய பெற்றோர் சொல்ல முனைந்த போது அந்தப்பெண் இடை மறித்து, ‘ அதெல்லாம் நானே சொல்லி விடுகிறேன், இவர்களுக்கு அதெல்லாம் ஒழுங்காக சொல்லத் தெரியாது. என் கருத்துக்களைப்பற்றியும் புரியாது’ என்று முகத்தில் அடித்த மாதிரி பேச, ஒதுங்கிய பெற்றோரின் கண்களில் அத்தனை வேதனை!

இப்படிப்பட்ட மனப்பான்மையுடன் திருமணத்திற்குள் புகும் பெண்ணிடம் எப்படி விட்டுக்கொடுத்தலும் சகிப்புத்தன்மையும் புரிந்து கொள்ள முயற்சித்தலும் இருக்கும்? எங்கோ பிறந்து திருமணத்தில் புதிதாக இணையும் இளைஞனிடம் எப்படி எதிர் வாதங்கள் இல்லாமல் இருக்கும்? இப்படித்தான் விவாகரத்துக்களும் அதற்கானக் காரணங்களும் சங்கிலித்தொடராய்த் தொடர்கின்றன. பெண் சுதந்திரம், ஆணும் பெண்ணும் சரி நிகர் சமானம் என்றெல்லாம் பேசி சாதாரணப்பிரச்சினைகளை சூறாவளியாக்கி திருமண வாழ்க்கை என்ற கடைசி வரைத் தொடரும் பந்தத்தை இன்று விவாகரத்து என்ற வடிவில் பாதியிலேயே அழிப்பதுதான் நடந்து வருகிறது.

நான் ஏன் பெண் குழந்தைகள் பற்றி குறிப்பாய் எழுதுகிறேன் என்றால் அவர்களைத்தான் நான் எதிர்காலக் குடும்பங்களின் தூண்களாய்க் கருதுகிறேன். ‘ஆளும் வளரணும், அறிவும் வளரணும், அது தாண்டா வளர்ச்சி ‘ என்று பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் சொன்ன வரிகள் நினைவுக்கு வருகின்றன. அவர் சொன்ன மாதிரி ஆளும் வளர்ந்தாலும் அறிவும் வளர்ந்தாலும் மனம் வளராமல் இருப்பதனால்தான் மன முறிவுகள் ஏற்படுகின்றன.

பெண் அன்பிலே கனிந்து போகிறவள். அதுவே அவளை பலமாக்குகிறது. அடிப்படை குணங்கள், பண்புகளுடன் வளர்க்கப்பட்ட, விட்டுக்கொடுத்தலும் சகிப்புத்தன்மையும் புரிந்து கொள்ளுதலும் இருக்கும் பெண்களின் இல்லங்கள் என்றுமே சொர்க்கமாய்த் திகழ்கின்றன.

என்றுமே ஒரு ஆண் பொருளீட்டுவதன் பொருட்டு வெளியில் எங்காவது, அல்லது ஏதாவது ஒரு தேசத்திற்கு என்று காலம் காலமாகப் போக நேரிடுகிறது. பல இன்னல்கள்,இழப்புகள், காயங்களை அவன் எதிர் கொள்ள வேண்டியிருக்கிறது. அத்தனைக்கும் அவன் வடிகாலாய்த் தேடுவது தன் வீட்டைத்தான். தனது குடும்பத்தைத்தான். இளம் வயதில் இப்படி என்றால் தேகம் தளர்ந்து வேலையை விட்டு விலகி வெளிப்புற சகவாசங்கள் குறைந்து இல்லத்திலேயே இருக்கவேண்டிய நிலை வந்ததும் அவன் இன்னும் தன் குடும்பத்தைச் சார்ந்து தன் மனைவியைப் புதிதாகப் புரிந்து தவித்து நிற்கிறான். இப்படி எல்லா தருணங்களிலும் பெண் என்பவளை ஒரு ஆண் ஒரு வடிகாலாக சார்ந்து நிற்கிறான். பெண் ஒரு சக்தியாக, தோள் கொடுப்பவளாக, புரிந்து கொண்ட சினேகிதியாக நடக்க முயற்சித்தால் மெல்ல மெல்ல விவாகரத்துக்களும் இனி சாகாதோ?

சில மாதங்களுக்கு முன் ‘தேவதை’ இதழில் வந்த இந்த கவிதை என் மனதை அப்படியே பிரதிபலித்தது. என்னோடு நீங்களும் பகிர்ந்து கொள்ளுங்கள்!

தலைமுறை தள்ளாட்டம்

"சரித்திரமே இல்லை தாத்தா பாட்டிக்கிடையில் சண்டை வந்ததாய்!

சண்டைகளும் சமாதாங்களும் அறைக்குள்ளேயே நடந்து முடிந்தன

அம்மா அப்பா வாழ்வில்!

எங்களுக்குள் புரிதலில் சேதமாகி விரிசலானபோது

பெரியவர்கள் புரிய வைத்ததில் இல்லாமல் போயிற்று எல்லா பிரச்சினைகளும்!

அறிவுரைகள் எடுபடாமல் விவாகரத்தே தீர்வாயிற்று என் மகள் விவாகரத்தில்.. ..

அன்பு, புரிதல், சகிப்புத்தன்மை, மனிதம் குறுகிப்போக,

கல்வி, சுயநலம், கர்வம், சம்பாத்தியம் பெருகியதைப்போலத்தான்

பெருகியிருக்கிறது விவாகரத்துக்கள்!"
Thursday 3 June 2010

வீட்டு மருத்துவம்!!

முன்பே நான் எழுதியிருந்தது போல வீட்டிலிருக்கும் பொருள்களைக் கொண்டு நமக்கு நாமே சிறு சிறு உடல் நலக்குறைவுகளுக்கு வைத்தியம் செய்து கொள்ளக்கூடிய குறிப்புகளின் இரண்டாவது பகுதி இது. இவை எல்லாமே என் இல்லத்தில் நான் செய்து பார்த்து பலனடைந்த குறிப்புகள்தான்! பார்வையாளர்கள் அனைவருக்கும் நிச்சயம் உபயோகமாக இருக்குமென நம்புகிறேன்.
 பகுதி-2

1. கடுமையான தலைவலி இருக்கும்போது கட்டை விரலால் வலப்பக்க மூக்கை மூடிக்கொண்டு இடப்பக்க மூக்கால் சுவாசிக்கவும். 10 நிமிடங்களிலேயே பலன் தெரியும். தொடர்ந்த தலைவலிக்கு தினமும் காலையும் மாலையும் 10 நிமிடங்கள் இந்த மூச்சுப்பயிற்சியை செய்து வந்தால் விரைவில் தொடர் தலைவலி நீங்கி விடும்.

2. மிகவும் களைப்பாக இருந்தால் இதையே மாற்றி இடப்பக்க மூக்கை விரலால் மூடிக்கொண்டு வலப்பக்க மூக்கால் 10 நிமிடங்கள் சுவாசிக்கவும். விரைவிலேயே களைப்பு நீங்கி புத்துணர்ச்சி கிடைக்கும்.

3. தொடர்ந்து விக்கல் இருக்கும்போது மூச்சை இழுத்துக்கொண்டு மனதிற்குள் ஒன்றிலிருந்து 50 வரை சொல்லி பிறகு மூச்சை விடவும். இப்போது விக்கல் நின்றிருக்கும்.

4. தொடர்ந்த கடும் வயிற்றுக்கடுப்பிற்கு, உலர்ந்த திராட்சையை 50 கிராமை எடுத்து முதல் நாளிரவு வெந்நீரில் ஊறப்போடவும். மறு நாள் காலை அதைப் பிசைந்து காய்ச்சிய பசும்பால் அரை கப்பில் கலந்து வெறும் வயிற்றில் குடிக்கவும். ஓரிரு முறைகள் இது போல செய்தால் வலி அகன்று விடும்.

5. வெய்யில் காலங்களில் நெல்லிக்காய்களை கழுவி துடைத்து வெய்யிலில் நன்கு காய வைக்கவும். ஒரிரு நாட்களிலேயே விரல்களினால் அழுத்தினால கொட்டை இலகுவாக அகன்று விடும். மறுபடியும் நெல்லிக்காய்களை வற்றலாக கறுப்பாக ஆகும்வரை காய வைத்து எடுக்கவும். இந்த நெல்லி வற்றல் ‘நெல்லி முள்ளி’ என்று அழைக்கப்படுகிறது. ஒரு கிலோ நெல்லி முள்ளிக்கு 100 கிராம் மிளகை எடுத்துக்கொண்டு நன்கு பொடிக்கவும். இந்தப்பொடியை தினமும் காலை அரை ஸ்பூன் தேன் கலந்து வெறும் வயிற்றில் சாப்பிடவும். சப்பிட்ட 1 மணி நேரத்திற்கு தண்ணீர் தவிர எதையும் சாப்பிடக்கூடாது. இவ்வாறு சாப்பிட்டு வந்தால் உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை போன்ற கடும் வியாதிகளின் தாக்கம் வெகுவாகக் குறையும்.

6. வெந்தயம் 100 கிராம், மிளகு 4 மேசைக்கரண்டி-இவற்றை இலேசாக வறுத்துப்பொடிக்கவும். இதை காலையும் இரவும் 1 ஸ்பூன் வீதம் சாப்பிட்டு இளஞ்சூடான வென்னீர் அருந்தி வந்தால் சர்க்கரையைக் கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்கலாம்.

7. தினமும் 2 நெல்லிக்காய்களை அரைத்து சாறு பிழிந்து தேனில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது இரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிக்க உதவும்.

8. சூட்டினால் திடீரென்று அதிகமாய்க் கஷ்டப்படுத்தும் வயிற்று வலிக்கு, இளம் சூடான வென்னீரில் 2 ஸ்பூன் நெய், 2 ஸ்பூன் சீனி கலந்து குடித்தால் 10 நிமிடங்களில் வலி நிற்கும்.

9. சூட்டினால் ஏற்படும் வயிற்று வலிக்கு, இதோ இன்னொரு மருத்துவம். ஒரு தம்ளர் தண்ணீரில் எலுமிச்சை சாறு உப்பு சரியான அளவில் கலந்து குடித்தால் வெகு விரைவில் வலி சரியாகி விடும்.

10. தொப்புளைச் சுற்றி விளக்கெண்ணெய் தடவி மஸாஜ் செய்வதும் இந்த வலி வெகுவாகக் குறைய வழி வகுக்கும்.