Sunday 27 January 2019

குளோபல் வில்லேஜ்-2019!!!

ஒவ்வொரு வருடமும் துபாயில் அக்டோபர் முதல் ஏப்ரல் முதல் வாரம் வரை நடக்கும் திருவிழா இது! இரவு 12 வரை கோலாகலமாக நடைபெறும் இந்தத்திருவிழாவில் திங்கட்கிழமைகளில் பெண்களுக்கும் குடும்பத்தினருக்கும் மட்டுமே அனுமதி தரப்படுகிறது. மூத்த குடிமக்களுக்கு நுழைவு சீட்டு கிடையாது! 3 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும்!

ஒவ்வொரு வருடமும் கோடிக்கணக்கான வருகையாளர்களை இது சந்திக்கிறது. இந்த முறை 70 நாடுகள் கலந்து கொண்ட இந்தத்திருவிழாவில் உலக நாடுகளின் கலாச்சாரமும் உணவுப்பொருள்களும் ஒன்றாய் இணைந்து கண்களுக்கும் நாவிற்கும் நல்விருந்து படைத்த‌ன!  நான் ஒவ்வொரு வருடமும் இதைப்பார்க்கத் தவறுவதில்லை. இந்த முறை சென்ற போது எடுத்த புகைப்படங்கள் இவை.

பழங்களை அலங்காரமாக வைக்கக்கூடிய பாத்திரம், மூடியுடன்!


சிரியா, ரஷ்ய, ஜப்பான்


ஒவ்வொரு நாட்டுக்கான உணவகத்திற்கு முன் அந்தந்த நாட்டு பாரம்பரிய உடை அணிந்து கொண்டு, ஒருவர் வெளியே வந்து நின்று, கடந்து போகும் மக்களை சாப்பிட வருமாறு அழைக்கும் காட்சி!
பஹ்ரைன்
பல்வேறு நாட்டு உணவகங்களும் சிறு சிறு தின்பண்டங்கள் விற்கும் கடைகளும் மாலையிலிருந்து சுறுசுறுப்பாய் உணவுப்பொருள்களை வியாபாரம் செய்யும். ஒரு சில காட்சிகள்!CHEST NUTகளை அனலில் வாட்டித்தருவார்கள்! சுவை அபாரமாக இருக்கும்!
SPIRAL POTATO CHIPS!
FRIED ICE CREAM!!

Monday 14 January 2019

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!!

இந்த முறை அம்மாவின் பிறந்த நாளுக்கு தஞ்சை வரவேண்டியிருந்ததால் மகன், மருமகள், பேரன், பேத்தியுடன்  துபாயில் எப்போதும் கொண்டாடும் பொங்கல் விட்டுப்போய் விட்டது. அதனால் நாங்கள் இருவரும் மட்டும் தஞ்சையில் பொங்கலைக்கொண்டாடப்போகிறோம்!


" பொங்கல் என்ற சொல், தமிழில் சோறு பொங்குவதையோ, பால் பொங்குவதையோ மட்டும் குறிப்பதல்ல. வளர்தல், உயர்தல், எழுதல், பொழிதல், நிறைதல், என பல அர்த்தங்களுடன் உள்ளும், புறமும் உற்சாகத்தை பொங்கவைக்கும் ஒரு சொல். மண்ணும், மனமும் இயற்கையால் நிறைந்து வழிவதை சொல்வது." என்று படித்தேன்! உண்மையிலேயே இந்த விளக்கத்தைப்படித்த போது மனம் நிறைவாக இருந்தது.ரொம்ப நாட்களுக்குப்பிறகு பொங்கல் ஊரில் கொண்டாடுவதால் பழைய பொங்கல் நினைவுகள் அலைமோதுவதைத் தவிர்க்க முடியவில்லை! மார்கழி மாதத்திலிருந்தே இங்கெல்லாம் பொங்கல் உற்சாகம் வந்து விடுகிறது! ஆனால் நிறைய வீட்டு வாசல்களில் வெறும் கோலங்களைத்தான் பார்த்தேன். சாணம் பிடித்து அதன் மீது பரங்கிப்பூ வைப்பதைப்பார்க்கவில்லை.கிராமங்களில் பரங்கிப்பூ வைக்கும் பழக்கம் இன்னும் தொடர்கிறது என்று நினைக்கிறேன்! முன்பெல்லாம் அந்த சாணத்தையும் ராட்டியாகத்தட்டி, காய்ந்த பரங்கிப்பூவை பத்திரப்படுத்தி வைப்பார்கள். கன்னிப்பொங்கல் அன்று, கன்னிப்பெண்கள் இவற்றை உபயோகித்து பொங்கலும் படையலும் செய்தால் திருமணம் விரைவில் கூடி வருமென்பது அன்றைய நம்பிக்கை!

நாங்கள் அடிக்கடி துபாய்க்கும் தஞ்சைக்கும் பயணங்கள் செய்து கொண்டிருப்பதால் அவ்வப்போது வீட்டை சுத்தம் செய்து கொண்டேயிருப்போம். அதனால் போகிப்பண்டிகைக்கு முன்பிலிருந்தே எல்லோர் வீட்டிலும் வீட்டையே தலைகீழாக புரட்டிப்போட்டு சுத்தம் செய்வதைப்பார்க்கும்போது வேடிக்கையாக இருக்கிறது!அடுத்ததாக நான் பார்த்து அசந்து போவது, திருமணமாகி புகுந்த வீட்டில் இருக்கும் பெண்ணுக்கு செய்யும் சீர்வரிசை! புதிதாக மணம்முடித்த பெண்ணுக்கு, பிறந்த வீட்டில் இருந்து, இரண்டு வெண்கல பொங்கல் பானைகள், கரண்டிகள்,  பச்சரிசி, கரும்பு, மஞ்சள் குலை, வாழைத் தார், ஆகியவற்றோடு சாப்பாட்டுக்குரிய காய்கறிகள், வெல்லம், நெய், துணிமணி என அனைத்தும் இந்த சீரில் இடம்பிடிக்கிறது!சில கிராமங்களில் பொங்கலுக்கு முன்பாக வரும் பதினைந்து, ஒன்பது, ஏழு என வசதிப்பட்ட ஒற்றைப்படை நாளில், சொந்த பந்தங்களை அழைத்துக் கொண்டு, பெண்ணைக் கட்டிக்கொடுத்திருக்கும் வாழ்க்கைப்பட்டிருக்கும் வீட்டுக்குச் சென்று இந்த சீர்வரிசையை கொடுக்கிறார்கள்!

பெற்றவர்கள் உயிருடன் இருந்தால் அவர்கள் தான் பெண்ணின் சகோதரர்களையும் அழைத்துக்கொண்டு தங்கள் பெண்ணின் புகுந்த வீடு சென்று பொங்கல் சீர்வரிசை வைப்பார்கள். அவர்கள் காலத்துக்குப்பின்னும் சகோதரர்கள் தங்கள் வசதிக்கேற்ப பணமோ, பொருள்களோ, துணிமணிகளோ சீர்வரிசை பல்லாண்டு காலமாகக் கொடுத்து வருவது இன்னும் தஞ்சைப்பக்கத்தில் இருந்து வருகிற ஒரு பழக்கம்!இப்படி பல சிறப்புகளுடன் வழக்கம்போல பொங்கல் திருநாள் நாளை
உதயமாகிறது! புத்தரிசிப்பொங்கலைப்போல, வாழ்க்கை முழுவதும் இனிமையான நினைவுகள் பொங்கிப்பெருக, அனைத்து வலையுலக அன்புள்ளங்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த இனீய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!


படங்கள்:கூகிளுக்கு நன்றி!

Tuesday 8 January 2019

தாத்தாவும் அம்மாவும்!

சகோதரர் கரந்தை ஜெயக்குமாரிடம் பேசிக்கொண்டிருந்த போது, முதல் சந்திப்பிலேயே ,என் தாத்தா ஒரு தமிழ்ப்புலவரென்றும் தொல்காப்பியத்திற்கு மறுப்புரை எழுதியவர் என்றும் அவரது நூல்கள் மன்னார்குடி அரங்கசாமி நூல்நிலையத்தில் உள்ளன என்றும் அவரது பெயர் சோமசுந்தரம் பிள்ளை என்றும் சொன்னேன். தனக்கு அப்படி ஒருவரைப் பற்றித் தெரிந்திருக்கவில்லையே என்று சகோதரர் சொன்னார்.

சென்ற வருடம் என்று நினைக்கிறேன்,என் தாத்தாவைப்பற்றி சில குறிப்புகள் கிடைத்ததை என் கொழுந்தனார் சென்னையிலிருந்து அனுப்பி வைக்க, அவற்றை நான் சகோதரரிடம் பகிர்ந்து கொண்ட போது, ' இவரையா சொன்னீர்கள், இவர் 'இலக்கணம் சோமசுந்தரம் பிள்ளை என்றலவா எனக்குத் தெரியும் என்று சொன்னார். இப்போது சில நாட்களுக்கு முன் தாத்தாவைப்பற்றி பல வருடங்களாக கரந்தையில் வெளி வந்து கொண்டிருக்கும் தமிழ்ப்பொழில் என்ற இதழ் மூலம் நிறைய விபரங்கள் அறிந்து கொண்டதாகக் கூறி சகோதரர் அவற்றை எனக்கு அனுப்பி வைத்தார். அவற்றை முழுமையாக படித்து முடித்த போது, மனதில் ஏற்பட்ட பெருமிதத்தையும் நெகிழ்ச்சியையும் தமிழில் எழுத வார்த்தைகளில்லை! 

நன்றி: திரு.ஜெயக்குமார் அவர்கள்.
என் மிகச்சிறு வயதிலேயே என் தந்தை மறைந்து விட்டதால் தாத்தாவைப்பற்றி அதிகம் நான் அறிந்ததில்லை. அம்மாவைப்பெற்ற அம்மாச்சி மறையும் வரை எங்கள் வீட்டில் தான் இருந்தார்கள். என்னிடம் மிகவும் பிரியம் வைத்திருந்த அவர்கள் காது கேளாமையாலும் அமைதியான சுபாவத்தாலும் அதிகம் பேசி நான் பார்த்ததில்லை. அந்தச் சிறிய வயதில் என் பாரம்பரிய வேர்களைத் தேடிப்பிடிக்கும் ஆர்வம் எனக்கு புலப்பட்டதில்லை. இந்த அம்மாச்சி தான் என் தாத்தாவிற்கு மூத்த மகள். என் தாத்தாவின் இரண்டாவது மகன் தான் என் தந்தை. கடைசி மகள் என் மாமியார். தன் மூத்த சகோதரியின் மகளைத்தான் என் தந்தை மணந்தார்கள். என் தந்தையின் கடைசி சகோதரியின் ஐந்தாவது மகனைத்தான் நான் மணந்தேன். 

என் பாரம்பரிய வேர் பற்றி எனக்குத் தெரியும். ஆனால் எத்தனை ஆழமானது என்பதை சகோதரர் ஜெயக்குமார் மூலம் தான் இப்போது அறிந்து கொண்டேன். இந்த அருஞ்செயலுக்காகவும் என் அழைப்பிற்கிணங்கி என் தாயாரின் பிறந்த


திரு &திருமதி கரந்தை ஜெயக்குமார் அவர்களுடன்
நாள் விழாவிற்கு இல்லத்தரசியுடன் வருகை தந்து சிறப்பித்ததற்கும் ஜெயக்குமார் அவர்களுக்கு என் மனம் நிறைந்த நன்றியை இங்கே தெரிவித்துக்கொள்வதில் பெருமிதம் அடைகிறேன்.என் தாயாரின் நூறாவது பிறந்த நாள் விழா 31ந்தேதி சிறப்பாக நடந்தேறியது. இதில் தொலைந்து போன, மறந்து போன பல உறவுகளை சந்தித்தது மனதுக்கு நிறைவாக இருந்தது.

என் தங்கை, அக்கா, அம்மாவுடன் நான். 
அம்மா நன்றாகப்படித்தவர். ஆங்கிலப்புலமை உள்ளவர். இந்த வயதிலும் தன்னம்பிக்கையும் மன உறுதியும் நிரம்பப்பெற்றவர். நினைவாற்றல் அதிகம் இன்னும் இருக்கிறது. தாத்தாவைப்பற்றி பேசிய போது, தன் சிறு வயதில் அவரிடம் சீவக சிந்தாமணி, மணிமேகலை முதலான நூல்களைப்பற்றி கற்றதாதாகவும் ஒவ்வொரு குழந்தைக்கும் தான் வேலை பார்த்த இடத்து கோவில்களின் இறைவன், இறைவி பெயரை வைத்ததாகவும் கூறினார்கள். அம்மாவிற்கு நாங்கள் அனைவரும் சேர்ந்து விழா எடுத்ததில் மிகுந்த மகிழ்ச்சி!!!