Saturday 21 April 2018

பாட்டி வீடு!!

சின்ன வயதில் தாத்தா, பாட்டி வீடென்றால் எல்லோருக்குமே அந்த நினைவுகள் இளம் பருவத்தின் கவலையில்லா, மகிழ்ச்சிகரமான நாட்களைக்கொண்டதாக மட்டுமேயிருக்கும். அதனால் இந்தப் பெயரைப்பார்த்ததும் எல்லோருக்கும் ஆச்சரியமாக இருக்கும். உண்மையில் இது சென்னையில் சமீபத்தில் தோன்றியிருக்கும் சைவ உணவகம்.

முகப்பு
என் மகன் துபாயிலிருந்து அனுப்பியிருந்த தகவல் பார்த்து, துபாய் புறப்படுவதற்கு முன் முதல் நாள் இந்த உணவகம் சென்றோம்.
பழமையும் புதுமையுமான தோற்றம். தி.நகரில், பாகீரதி அம்மாள் தெருவில் அமைந்திருக்கிற்து இந்த அழகிய உணவகம். முன்கூட்டியே பதிவு செய்திருந்தால் மட்டுமே அங்கே சாப்பிட முடியும்.

உள்ளேயிருந்து வாசல், பதிவு செய்யும்/உள்ளே அனுப்பும் வரவேற்பாளர்
காலையிலேயே பதிவு செய்த போது,  “12-1.30 ஸ்லாட்டில் சாப்பிடுகிறீர்களா அல்லது 1.30-3.00 ஸ்லாட்டில் சாப்பிடுகிறீர்களா, ஏனென்றால் சாப்பிட்டு முடிக்க எப்படியும் ஒன்றரை மணி நேரமாகி விடும் “ என்றார்கள். நாங்கள் 12 மணிக்கு பதிவு செய்து விட்டு சாப்பிடச் சென்றோம்.

ஆனால் சாப்பாட்டிற்கு இன்னும் சிறிது நேரமாகும் என்று சொல்லி முன்புறம்


இருந்த கொட்டகையில் அமர வைத்து மணம் மிக்க மோர் குடிக்கக் கொடுத்தார்கள். அதன் பின் உள்ளே சாப்பிட நுழைந்தோம்.

உணவகம் செல்லும் நுழைவாயில்!!
பழமையும் புதுமையும் கலந்த அலங்காரம்.


கலர் கலராய் ஜிகினா வேலைப்பாடு அமைந்த இளைஞர்கள் பரிமாறினார்கள். முதலில் WELCOME DRINK வந்தன. இளநீர் பானகம், தர்பூசணி வெள்ளரி சாறு, மாங்காயிலிருந்து செய்யப்பட்ட ‘ பன்னா’ எனும் சாறு என்று சிறு கிண்ணங்களில் வந்தன. அவை குடித்து முடித்ததும், சோளமும் சீஸும் கலந்து செய்த பகோடா ஒன்று, ஜவ்வரிசி வடை ஒன்று, பிடி கொழுக்கட்டை ஒன்று சிறு கிண்ணங்களில் வந்தன.


அவை உண்டு முடித்ததும் ஒரு சப்பாத்தி முருங்கைக்காய் மசாலாவுடனும் ஒரு இடியாப்பம் சொதியுடனும் வந்தன.


அதன் பிறகு குதிரைவாலி அரிசியில் செய்த பிஸிபேளா சாதம் வடகங்களுடனும் உருளைக்கிழங்கு வருவலுடனும் வந்தன.
அவற்றை சாப்பிட்டு முடித்ததும் வேப்பம்பூ ரசமும் தக்காளி ரசமும் இரு கிளாஸ் தம்ளர்களில் ஆவி பறக்க வந்தன. இவற்றின் சுவை பிரமாதம்!


அதன் பின் பாட்டி வீட்டு தட்டு எனப்படும் MAIN COURSE வந்தது. ஒரு கப் சாதம், பலாக்காய் பொரியல், கிள்ளிப்போட்ட சாம்பார், வாழைக்காய் வறுவல், கடைந்த கீரை, மாம்பழ மோர்க்குழம்பு, பருப்பு துகையல், முட்டைக்கோஸ் பருப்பு உசிலி, தயிர் சாதம் எல்லாம் வந்தன.

கை கழுவ வால் பாத்திரத்தில் தண்ணீரும் பித்தளை போகிணியும்!!
சாப்பிட்டு முடிந்ததும் காஃபி மூஸ், கருப்பட்டி ஹல்வா, இளநீர் பாயசம் போன்ற இனிப்பு வகைகளுடன் இறுதியாக ஆவி பறக்கும் ஃபில்டர் காஃபி அதி அற்புதமான சுவையுடன்!
நிறைகள்:

எல்லா உணவு வகைகளும் தரத்துடன் ருசியாகவே இருந்தன. மற்றவற்றின் ருசிக்கு முன் சாப்பாடு, காய்கறி வகைகள் கொஞ்சம் ருசி கம்மி தான்! ஒரு வித்தியாசமான அனுபவம்!

குறைகள்:

ஒன்று முடிந்து இன்னொன்று வருவதற்கு நிறைய நேரம் பிடித்தது. அதற்குள் நமது பசியும் பறந்து விடும்போல இருந்தது! என் கணவருக்கு பொறுமை பறி போய் விட்டது. சாப்பிடுவதற்கு ஒன்றரை மணி நேரம் என்பதை அவர்களால் பொறுத்துக்கொள்ளவே முடியவேயில்லை. எப்போதும் எதையுமே, நேரம் உள்பட வேஸ்ட் பண்ணாதவர்கள். அவர்களை சமாதானப்படுத்துவது தான் பெரிய வேலையாக இருந்தது.
விலை கொஞ்சம் தான்! ஒரு சாப்பாடு ரூ 891. குழந்தைகளுக்கு பாதிக்கட்டணம் என்று சொன்னதாக நினைவு. முன்கூட்டியே விசாரித்துக்கொள்ள வேண்டும்! வயதானவர்களுக்கு இந்த சாப்பாடு கொஞ்சம் அதிகம்!

Tuesday 10 April 2018

வித்தியாசமான புகைப்படங்கள்!!துபாய் நகரில் 1979ல் கட்டப்பட்ட 39 தளங்கள் கொண்ட கட்டிடம் இது [மஞ்சள் கட்டிடம்]. 40 வருடங்களுக்கு முன் நாங்கள் பார்த்து வியந்த கட்டிடம் இது. ஐக்கிய அமீரகத்தின் 100 ரூபாய்த்தாளில் [ அங்கே பணத்திற்கு திரஹம் என்று பெயர்] இது அச்சிடப்பட்டிருக்கிறது

இப்போது உலகிலேயே உயரமான கட்டிடமும் அதனருகேயே பல உயரமான அழகிய கட்டிடங்கள் வந்து விட்டாலும் இதன் புகழ் அப்படியே தானிருக்கிறது.
2.

ஜெயங்கொண்ட சோழபுரத்திலுள்ள பிரகதீஸ்வரர் கோவிலின் நந்தி இது.
நந்தி லிங்கத்திலிருந்து 200 மீட்டர் தொலைவில் உள்ளது. தினமும் சூரிய ஒளி இந்த நந்தி மீது பட்டுச் சிதறி அந்த ஒளிக்கதிர்கள் கருவறையில் உள்ள லிங்கத்தின் மீதும் பட்டு பிரதிபலித்து பிரகாசிப்பது மிகவும் அற்புதமான காட்சி 

  


3. கன்யாகுமரியில் விடியற்காலையில் கதிரவன் கீழ்த்திசையில் எழுந்து வரும் காட்சியைக்காண குவிந்திருக்கும் மக்கள்!!

4.

செட்டிநாட்டு அரண்மனை ஒன்றின் முகப்பு தோற்றம்!

5. 
                   

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா  ராஜாமடம் அருகே  வங்கக் கடலோரம் ,அமைந்துள்ளது மனோரா என்ற எழில் கோபுரம் .
அகழி கோட்டை , தங்கும் அறைகள் , 9 அடுக்குகள் கொண்ட கலங்கரை விளக்க கோபுரம் போல் விளங்கும் இந்த மனோராவை 1814ல் கடல் போரில் நெப்போலியனுடன் போரிட்டு ஆங்கிலேயர்கள் வெற்றி பெற்றதைப் பாராட்டும் வகையில், தஞ்சையை ஆண்ட தஞ்சாவூர் மராத்திய மன்னர் இரண்டாம் சரபோஜி  நினைவுச்சின்னமாக நிறுவினார். . மனோரா கோட்டையில் தமிழ் , தெலுங்கு , மராட்டி , உருது , ஆங்கிலம் ஆகிய மொழிகளில் 5 கல்வெட்டுக்கள் உள்ளன

அறுகோண வடிவமும் 8 அடுக்குள்ள இந்தக் கோபுரத்தின் உயரம் 120 அடி, உச்சியை அடைய 120 படிகள் உள்ளன.மனோரா கோட்டையில் 3 வாயில்கள் உள்ளன. பழங்காலமரபின்படி வாயிற்காப்போன் அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

6. 

   வாட்ஸ் அப்பில் வந்த ஒரு புகைப்படம்! இது                                       ஆண்களுக்காக!!