Friday 27 May 2016

எப்படியும் உதவுங்கள்!!


இந்த உலகில் மற்றவர்களுக்கு உதவுவதற்கு எத்தனையோ வழிகள் இருக்கின்றன. பொருளால் உதவுவதற்கு நிறைய பேர்கள் இருக்கிறார்கள். அதற்கும் பரந்த மனம் வேண்டும். பொருளில்லாதவர்கள் தன் உடம்பினால் உதவுகிறார்கள். இரண்டையும் தவிர, வித்தியாசமான சிந்தைனைகளால் தன்னால் இயன்றவரை மற்றவர்களுக்கு உதவும் மனிதர்கள் நம்மிடையே வாழ்ந்து கொன்டிருக்கிறார்கள். ஆனால் இங்கே முற்றிலும் புதிய வழியில் இரண்டு பேர் உலகத்தில் துன்பப்படுகிறவர்களுக்கு உதவுகிறார்கள். அவர்களைப்பற்றிப்படித்த போது மனம் நெகிழ்ந்து போனது. நீங்களும் அவர்களைப்பற்றித் தெரிந்து கொள்ளுங்கள். 

முதலில் நம்ருதா ஷோதன் பற்றி!
 


 
இசை என்பது சிலருக்கு தொழில். சிலருக்கு பொழுது போக்கு. சிலருக்கோ மன நிம்மதி அளிக்கும் உயிர்! ஆனால் தன் இசையால் மற்றவர்களின் மனங்களுக்கு இதம் அளிப்பது ஒரு சிலரால் மட்டுமே முடியும்! நோயினாலும் ரணங்களினாலும் துன்பப்படுகிறவர்களுக்காக மட்டுமே பாடி மன நிம்மதியளிப்பதும் பாடுவதால் கிடைக்கும் வருமானத்தை நோயினால் துன்பப்படுகிறவர்களுக்காக செலவழிப்பதையுமே உயிர்மூச்சாகக்கொன்டிருப்பவர் இவர் மட்டுமே என்று எண்ணுகிறேன்.
 
இவர் பெயர் நம்ருதா ஷோதன். 58 வயதாகும் இவர் பஞ்சாப் மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்டிருந்தாலும் தற்போது ஹைதராபாத்தில் வசிக்கிறார். இசைப்பள்ளி ஆரம்பித்து அதன் மூலம் வருமானத்தை மருத்துவமனைகளில் உள்ள சிறுநீரக நோயாளிகளுக்காக உதவி வருகிறார். 'சங் பரிவார்' என்ற அமைப்பின் மூலம் வருடத்திற்கு 50 இசை நிகழ்ச்சிகள் நடத்தி அதன் மூலம் வரும் வருவாயையும் இவர் சிறுநீரக நோயாளிகளுக்கு செலவழிக்கிறார்.  இதுவரை 10000ற்கு மேற்பட்ட சிறுநீரக நோயாளிகள் டாயாலிஸிஸ் சிகிச்சை செய்து கொள்ள இவர் தன் இசை மூலம் உதவியிருக்கிறார். சிறுநீரக நோயாளியான தன் தோழியொருத்தி தொண்டு நிறுவனங்களுக்கு உதவுவதை நேரில் பார்த்தபோது தன் மனம் பெரிதும் பாதிப்பிற்குள்ளானதாகவும் அன்றிலிருந்து தன் இசையின் மூலம் நோயினால் துன்பப்படுபவர்களுக்கு உதவ வேண்டுமென்று முடிவெடுத்ததாகவும் இவர் குறிப்பிடுகிறார்.

 தன்னம்பிக்கைக்கு இன்னொரு உதாரணம் அமெரிக்காவின் ஓஹியோ மாநிலத்தில் பிறந்த சான்ஸுவார்னர்.
 
 
இவருக்கு 13 வயதில் நெஞ்சுப்பகுதியில் கட்டியும் உடலில் வெள்ளை அணுக்களால் பரவியுள்ள கான்ஸர் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. உலகிலேயே ஒரு மனிதனை இரு தீவிர நோய்கள் உடலில் பரவி பாதித்திருந்தது இவருக்கு மட்டுமே.  மருத்துவர்கள் இவர் அதன் பின் உயிர்வாழ 3 மாதங்கள் மட்டுமே வாய்ப்பு உள்ள‌து என்று கூறினார்கள். நோயைப்பற்றி துளிக்கூட கவலைப்படாமல் பயப்படாமல் தகுந்த சிகிச்சை மட்டும் எடுத்துக்கொண்டார். மூன்று வருடங்கள் இவர் உயிர் மூச்சு தொடர்ந்தது. 16 வயதில் மறுபடியும் வலது நுரையீரலில் புற்றுநோய்க்கட்டி ஒரு டென்னிஸ் பால் அளவு வளர்ந்திருந்தது. மருத்துவர்கள் அந்தக்கட்டியை யும் வலது நுரையீரலையும் நீக்கி விட்டு இன்னும் 2 வார காலமே உயிர்வாழ வாய்ப்பிருப்பதாகச் சொன்னார்கள். ஒரு வருடம் இவர் கோமாவில் விழுந்தார். அதன் பின் உயிர்த்தெழுந்து படுக்கையிலேயே இவர் மருத்துவர்கள் அளித்த சிகிச்சையை தன்னம்பிக்கையுடன் மேற்கொன்டு உயிர்வாழ்ந்தார். பிறகு நடக்கத்தொடங்கினார். ஓடினார்.விளயாடினார். நீந்தினார். கல்லூரியில் பட்டப்படிப்பினையும் முடித்தார். 

அதன் பின் இன்னும் சாதனைக‌ள் செய்ய வேண்டுமென்று இவர் முடிவு செய்தார். மலையேற்றப் பயிற்சி செய்து 2002ஆம் ஆண்டு மே மாதம் 16ந்தேதி உலகிலேயே உயர்ந்த பனிமலைச் சிகரமான எவரெஸ்டின் மீது ஏறி ஒரு கொடியை ஏற்றினார். தான் சந்தித்த புற்று நோயாளிகள் பெய்ர்களையெல்லாம் அங்கே பொறித்து வைத்தார். இன்றைக்கும் அந்தக்கொடி அங்கு பறந்து கொண்டிருக்கிறது! 

சாதனைகளை மதிப்பீடு செய்யும் வல்லுனர்கள் உலகின் தலை சிறந்த பத்து சாதனையாளர்களில் இவரும் ஒருவர் என்று கூறி வியந்தனர். அதோடு சுவான்சுவார்னர் விடவில்லை. எல்லா கண்டங்களுக்கும் சென்று அங்கிருந்த உயர்ந்த சிகரங்களின் மீதேறி நின்றார். ' உலகம் என்னைத் திரும்பிப்பார்க்க வேண்டுமென்பதற்காக நான் இதைச் செய்யவில்லை. நம்பிக்கையுடன் முயற்சித்தால் நோய்களை வெல்லலாம், சாதனைகள் படைக்கலாம் என்பதைச் சொல்வதற்காகவே இது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுப்டுகிறேன்' என்று இவர் கூறுகிறார். இவர் எழுதிய ' KEEP CLIMBING ' என்ற புத்தகம் ப‌ல்லாயிரக்கணக்கான மனிதர்களுக்கு நம்பிக்கையூட்டும் நண்பனாக திகழ்கிற‌து.' புற்று நோயாளிகள் மலையேற்றக்குழு' என்ற அமைப்பைத் தொடங்கி இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புத்துணர்ச்சி அளித்து வருகிறார் இவர். பள்ளி கல்லூரிகளுக்குச் சென்று நம்பிக்கை ஊட்டும் சொற்பொழிவுகளை இவர் நடத்தி வருகிறார். இவரின் அருமையான வரிகள் இதோ! 

" உணவின்றி 30 நாட்கள் உயிர் வாழ்ந்து விட முடியும். நீர் அருந்தாமல் 3 நாட்கள் வரை இருந்து விடலாம். ஆனால் நம்பிக்கையை இழந்தோமானால் 30 விநாடிகள்கூட நம்மால் தாக்குப்பிடிக்க முடியாது. எனவே நம்பிக்கையை நம் ஆன்மாவின் ஒரு அங்கமாக ஆக்கிக்கொள்வோம்”' 

உதவுவதற்கு வேறெதுவும் தேவையில்லை கருணையான மனதைத்தவிர! அது இருந்து விட்டால் எப்படியாவது, எந்த வழியிலாவது துன்பப்ப‌டுகிறவர்களுக்கு உதவி செய்ய முடிந்து விடும்! உதவி பெற்றுக்கொள்கிற‌வர்களின் ஆத்மார்த்தமான நெகிழ்ச்சியால் கிடைக்கும் மன திருப்தியை மகிழ்ச்சியை வேறு எதுவும் தருவதில்லை! எப்படியும் உதவுங்கள்!!

Wednesday 11 May 2016

பூம்புகாரின் சிலப்பதிகார கலைக்கூடம்!!!

ரொம்ப நாட்களுக்கு முன் பூம்புகார் பற்றி படித்ததிலிருந்து அங்கே சென்று வ‌ர வேண்டுமென்ற ஆசை அவ்வப்போது வந்து போகும். ஆட்சி மாறுதலால் அதற்கப்புறம் பூம்புகார் கவனிக்கப்படாமல் பாழாகி விட்டது என்று கேள்விப்பட்டதும் அந்த ஆசை பின்னுக்குப்போய் விட்டது. ச‌மீபத்தில் தான் ஒரு விசேஷ நாளில் எங்கு செல்லலாம் என்ற தேடுதலில் பூம்புகார் பக்கம் என் கணவர் ஓட்டுப்போடவே தயக்கத்தை விரட்டி சம்மதித்தேன். பூம்புகார் செல்வதற்கு முன் அதைப்பற்றி சில வரிகள்.....
 


பண்டைய காலத்தில் சோழப்பேரரசின் தலைநகராக விளங்கிய பூம்புகாருக்கு காவிரிப்பூம்பட்டினம் என்ற பெயரும் உண்டு. பூம்புகார் நாகை மாவட்டத்தில் சீர்காழி வட்டத்தில் கருவி என்ற இடத்திலிருந்து ஆறு கற்கள் தொலைவில் உள்ளது. 11500 வருடங்களுக்கு முன்பே தோன்றிய பழமையும் உலக வர்த்தக வர்த்தகத்திற்கான சந்தையையும் மகதம், அவந்தி, மராட்டா நாட்டு கைவினைக்கலைஞர்களின் கலைக்கூடங்களையும் தன்னகத்தே கொண்டிருந்த சிறப்புடையது பூம்புகார். இதன் பெருமை மணிமேகலை, சிலப்பதிகாரம், பட்டிணப்பாலை போன்ற நூல்களில் மட்டுமல்ல, வெளிநாட்டிலிருந்து வந்த தாலமியின் குறிப்புகளிலும் பிராகிருத மொழியிலிருக்கும் புத்தர் பற்றிய கதைகளிலும்கூட பாடப்பட்டிருக்கிறது. இதன் முக்கிய சிறப்பு காவிரி நதி இங்கு தான் கடலில் கலக்கிறது. ஹரப்பா, மொகஞ்சாதோரோ நாகரீகத்தைக்காட்டிலும் தற்போதைய ஈராக்கிலுள்ள மெசபடோமியா பகுதியிலிருந்த சுமேரியர்கள் நாகரீகத்தைக்காட்டிலும் தொன்மையானதும் சிறப்பானதுமானது பூம்புகார் நாகரிகம்!   

இத்தைகைய சிறப்பு வாய்ந்த பூம்புகாரில் 1973ல் சிலப்பதிகார கலைக்கூடம் என்ற பெயரால் ஒரு நினைவுக்கூடம் எழுப்பப்பட்டுள்ளது.  மாமல்லபுரம் சிற்பக்கல்லூரி மாணவர்களால் வடிக்கப்பட்டது. மிகப்பெரும் துறைமுகமாக விளங்கிய காவிரிப்பூம்பட்டினம் நகரத்தின் 7 தெருக்களை நினைவுப்படுத்தும் விதமாக 7 அடுக்குகளை கொண்ட கோபுர அமைப்புடனும், கலைநயத்துடனும் இந்த சிலப்பதிகாரக் கலைக்கூடம் உருவாக்கப் பட்டிருக்கிறது. இங்கே கற்சிற்பங்களாக உருவாக்கி வைத்துள்ளார்கள்! அதைத்தான் பார்த்து ரசிக்க முடிவெடுத்தோம்.
 
மயிலாடுதுறையிலிருந்து 22 கிலோ மீட்டர் பயணம் சென்று பூம்புகாரை ஒரு நாள் பகல் 11 மணியளவில் சென்றடைந்தோம். சிலப்பதிகார கலைக்கூட வாயில், மாதவி தோரண வாயில், மாதவி தோரண வாயில், கண்ணகி தோரண வாயில்கள் வழியே நகருக்குள் சென்றோம். அழகுற நிர்மாணிக்கப்பட்ட இந்த வாயில்கள் எல்லாம் இன்றைய சுவரொட்டிகளாலும் விளம்பரங்களாலும் பொலிவிழந்து கிடந்தன. வாயில்களின் அழகை நீங்களே
பாருங்கள்!   
 


 
சிலப்பதிகாரக்கூட நுழைவாயில். கதவில் சிலம்பு!!


 கலைக்கூடத்தின் உள்ளே கோவலன் கண்ணகியின் வாழ்க்கையை முழுவதுமாக சிற்பங்களாக செதுக்கியிருக்கிறார்கள். அதில் ஒன்று இந்த சிலை! இது கோவலன் கண்ணகியின் திருமண அறிவிப்பை சொல்லும் சிற்பம்! கீழே உள்ளது அத்தனை சிற்பங்களையும் அடக்கியுள்ள‌ சிற்பக்கூடம்!


வெளியே வந்து கடலைப்பார்க்க நடந்து சென்றோம். வழியெல்லாம் குப்பைகள்! குப்பைகளுக்கு நடுவே சிற்றுண்டி கடைகள்! அதையும் தாண்டிச் சென்றால் கருவாடு விற்கும் கடைகள் கடல் வரை நீண்டிருந்தன!


நன்றி கூகிள்:
நாசியில் மோதும் நாற்றம் கடற்காற்றில் எங்கும் பரவியிருக்க மனது சொல்லொணாத வேதையில் ஆழ்ந்தது! முத்தும், பவளமும், பட்டும், ரத்தினமும் கடைவிரிக்கப்பட்ட இடத்தில் கருவாடும், மீனும் குப்பைகளும்!!
பெருகியிருந்த கூட்டம் காரணமாய் கடற்கரையை கிட்டத்தில் பார்க்க முடியவில்லை.கலங்கரை விளக்கத்தைப் பார்த்து விட்டு அதே குப்பைகள் ந‌டுவே திரும்பி நடந்தோம் !