Thursday 26 May 2011

முத்துக்குவியல்கள்!!

வாழ்க்கையின் நீண்ட பாதையில் நடந்து கொண்டிருக்கும்போது, எத்தனையோ ஆச்சரியங்களும் பாதிப்புகளும் வழி நெடுக நமக்காக காத்துக்கொண்டிருக்கின்றன! சில நம் மனதை நெகிழ வைக்கின்றன! சில நம்மை அதிர்ந்து போக வைக்கின்றன! சில நம்மை மனம் விட்டு சிரிக்க வைக்கின்றன! ஆனாலும் ஒவ்வொருத்தர் வாழ்விலும் சில அருமையான அனுபவங்கள் ஆழ்கடலினின்றும் எடுத்த நல்முத்துக்களாய், பொக்கிஷங்களாய் என்றும் இதயத்தில் உறைந்து போகின்றன!

இங்கே வழக்கம்போல முத்துக்குவியல்களில் அதிசயிக்க வைத்த முத்தும் அசத்திய முத்தும் அருமையான முத்தும் இருக்கின்றன!

அதிசயிக்க வைத்த முத்து;


இதை ஒரு மாத இதழில் படித்தபோது உண்மையிலேயே வியப்படைய வைத்த செய்தியாக இருந்தது. இங்கிலாந்தைச் சேர்ந்த, சர்க்கஸ் குழுவில் வேலை செய்த பாபி லீச் என்பவருக்கு நிறைய சாதனைகள், அதுவும் யாருமே செய்திருக்க முடியாத சாதனைகள் செய்து உலகப்புகழ் எய்த வேண்டுமென்ற கனவும் ஆசையும் இருந்து கொண்டே இருந்தது. 1911-ல் இவர் கனடாவிலுள்ள 167 அடி உயரமான நயாகரா நீர்வீழ்ச்சியிலிருந்து ஒரு இரும்பாலான பீப்பாயினுள் உட்கார்ந்து உருண்டு விழுந்து சாதனை படைத்தார். இதனால் இவருக்கு இரு முழங்கால்களிலும் உடலின் வேறு சில பாகங்களிலும் பாதிப்புகள் ஏற்பட்டு 6 மாதங்கள் சிகிச்சை எடுக்க வேண்டி இருந்த போதிலும் இந்த மாதிரி பல சாதனைகளை முயன்று கொன்டு இருப்பதுதான் வாழ்க்கையின் சுவாரஸ்யமாக இருந்தது அவருக்கு!. 15 வருடங்கள் கழித்து ஒரு வாழைப்பழ தோலில் வழுக்கி விழுந்து, அதனால் ஏற்பட்ட காயங்களினால் அவர் மரணமடைந்தார்!

நமது பக்கத்தில் சொல்லும் “ மலையிலிருந்து விழுந்து பிழைத்தவனும் உண்டு, புல் தடுக்கி விழுந்து செத்தவனும் உண்டு” என்ற வாக்கு தான் நினைவில் எழுந்தது இதைப்பற்றிப் படித்தபோது!

அசத்திய‌ முத்து:

இதுவும் அடுத்த நாட்டில் நடந்தது தான். இது மாதிரியெல்லாம் நம் நாட்டில் நடந்தால் எப்படி இருக்கும்[!] என்ற ஏக்கத்தையும் கனவையும் ஏற்படுத்தியது இந்தச் செய்தி!

பல வ‌ருடங்களுக்கு முன்னர் நெதர்லாந்தை ஸ்பானிஷ் வீரர்கள் முற்றுகையிட்டு போர் புரிந்த போது, அவர்களை நாட்டிற்குள் நுழைய விடாமல் மக்கள் காட்டிய வீர தீரத்திற்குப் பரிசாக நெதர்லாந்தின் மன்னர் வில்லியம்ஸ் அவர்களுக்கு வரி விலக்கு அளித்தாராம்! ஆனால் அந்நகர மக்கள் அந்த வரிச்சலுகையை மறுத்து அதற்குப்பதிலாக ஒரு சர்வகலாசாலையைக் கட்டித்தருமாறு கேட்டுக்கொண்டார்களாம். மன்னனும் அவர்களின் அறிவு வேட்கையை மதித்து ஒரு சர்வகலாசாலையைக் கட்டித் தந்தானாம்.

மக்களுடைய வீரத்திற்கு ஒரு மன்னன் நன்றியுடன் பரிசளிப்பது ஒரு மகத்தான சிறப்பு என்றால், சலுகைகள் வாழ்க்கைக்குத் தேவையில்லை என்று மறுத்து நகரத்தில் அறிவுக்கண்ணைத் திறக்குமாறு வேண்டிய மக்களின் மனம் அதையும் விட சிறப்பானது அல்லவா? ‘ லெய்டன் சர்வகலாசாலை’ [Leiden University ] என்று பெயரிடப்பட்டு 1575-ல் தோன்றிய இந்த சர்வகலாசாலை, உலகளாவிய தரத்தில் பல நோபல் பரிசு பெற்றவர்கள், ஆராய்ச்சியாளர்களைத் தன்னகத்தே தாங்கி இத்தனை வருடங்களில் மிகவும் புகழ் பெற்றிருக்கிறது!

அருமையான முத்து:


யாரை எப்படி வணங்க வேண்டும்?

1. இறைவனை வணங்கும்போது தலைக்கு மேல் இரு கரங்களையும் ஒரு அடிக்கு மேல் குவித்து வணங்குதல் வேண்டும்.

2. குருவை வணங்கும்போது, நெற்றிக்கு நேராக கரங்களைக் குவித்து வணங்குதல் வேண்டும்.

3. அறநெறியாளர்களை வணங்கும்போது, மார்பிற்கு நேராக கரங்களைக் கூப்பி வணங்குதல் வேண்டும்.

4. தந்தையை வணங்கும்போது, வாய்க்கு நேராக கரங்களைக் குவித்து வணங்குதல் வேண்டும்.

5. தாயை வணங்கும்போது, சாஷ்டாங்கமாகத் தரையில் படுத்து வணங்குதல் வேண்டும்.

ஆன்றோர்கள் வகுத்திருக்கும் இந்த நெறிமுறைகள் பற்றி அறிந்தபோது, தாய்க்கு நம் இந்திய நாட்டில் முன்னோர்கள் கொடுத்திருந்த மரியாதையை உணரும்போது, இந்த பண்புகளும் நெறிமுறைகளும்தான் இன்னும் இந்திய நாட்டை காப்பாற்றிக்கொண்டிருக்கிறதோ என்று

பெருமிதப்படத்தோன்றுகிறது!!

படங்கள் உதவி: கூகிள்

Wednesday 18 May 2011

நெஞ்சம் மறப்பதில்லை!!

ஆசை, காதல், நேசம், பிரியம் என்று அன்பின் பல பரிமாணங்களைத் தாங்கி இது வரை நெஞ்சை நெகிழ வைக்கும் பல்லாயிரம் கவிதைகள் புத்தக வடிவில், திரையிசைப்பாடல்கள் வடிவில் வெளி வந்து மனதை உருக வைத்திருக்கின்றன. தற்போது இணையத்திலும் பல நூறு கவிதை மலர்கள் தினமும் பூத்து நறுமணத்தைப் பரப்பி வருகின்றன. ஆனால் அண்ணன்‍ தங்கை உறவுக்கிடையில் மலர்ந்த அன்பை திரைப்படங்கள் தான் கல்லில் வடித்த சிற்பங்களாய் மனதில் செதுக்கியிருக்கின்றன. அதுவும்கூட எண்பதுகளுடன் மறைந்து விட்டன என்றுதான் சொல்ல வேண்டும். அப்படி நெஞத்தில் நீங்கா இடம் பிடித்த, என்னை மிகவும் பாதித்த‌ சில பாடல்களை இங்கே பகிர்ந்து கொள்ளப் போகிறேன்.



ஐம்பதுகளில் வெளி வந்த ஒரு பாடல். சின்னஞ்சிறு வயதில் இலங்கை வானொலியில் கேட்டு அப்படியே மனதில் பதிந்து விட்டது. சகோதரர் என்று கூடப்பிறந்தவர் யாருமற்ற ஆழ்மனது ஏக்கமோ என்னவோ, இந்தப் பாடலின் வரிகளும் டி.எம்.செளந்தரராஜனின் ஏக்கமான குரலும் மனதில் ஆழப்பதிந்து விட்டடன. நல்லதங்காள் என்ற படத்தில் ஒரு அண்ணன் தன் தங்கையை நினைத்து பாடும் பாடல் இது. நிச்சயம் இதை யாரும் கேட்டிருக்க முடியாது என்று நினைக்கிறேன். கவிதை எழுதும் யாருமே இந்த எளிய பாடலை நேசிக்காமல் இருக்க முடியாது.

" பொன்னே! புதுமலரே! பொங்கி வரும் காவிரியே!
மின்னும் தாரகையே! வெண்மதியே!


கண்ணே வாவென்பேன், கை நீட்டி வந்திடுவாய்!
அண்ணா என அழைப்பாய், அள்ளி அணைத்திடுவேன்!
கன்னந்தனைக் கிள்ளி கனிவாய் முத்திடுவேன்!
உன்னையென் தோளேற்றி விண்ணமுதம் காட்டிடுவேன்!


அம்புலி வேணுமென்று அடம் பிடித்தே அழுவாய்!
பிம்பம் தனைக்காட்டி பிடிவாதம் போக்கிடுவேன்!
அந்த நாள் போனதம்மா! ஆனந்தம் போனதம்மா!
அந்த நாள் இனி வருமா? ஆனந்த நிலை தருமா?"

அடுத்த பாடல், அண்ணன் தங்கையாகவே நடிகர் திலகம் சிவாஜியும் நடிகையர் திலகம் சாவித்திரியும் வாழ்ந்த அதனாலேயே பெரும் புகழ் எய்திய 'பாச மலர்' திரைப்படத்தில் வருவது.


ஒரு அண்ணன் தன் தங்கை எப்படியெல்லாம் மன மகிழ்வுடன் எதிர்காலத்தில் வாழ வேண்டும் என்று தன் தங்கையின் திருமணக் கனவுகளுடன் பாடிய பாடல் இது. மறுபடியும் டி.எம்.செளந்தரராஜன் உணர்ச்சி மிகப் பாடியிருக்கும் பாடல் இது. கண்ண‌தாசனின் காவியப்புகழ் பெற்ற இந்தப்பாடலும் பல்லாயிரக்கணக்கான மக்களின் கைக்குட்டைகளை நனைய வைத்த இந்த அருமையான படமும் காலங்கள் பல கடந்தும் நெஞ்சில் இன்னமும் நிலைத்திருக்கின்றன.

" மலர்களைப்போல் தங்கை உற‌ங்குகிறாள்!
அண்ணன் வாழவைப்பான் என்றே அமைதி கொண்டாள்!
கலைந்திடும் கனவுகள் அவள் படைத்தாள்! -அண்ணன்
கற்பனைத் தேரில் பறந்து சென்றான்!


மாமணி மாளிகை, மாதர்கள் புன்னகை!
மங்கல மேடையில் பொன்வண்ணம் கண்டான்!
மாவிலைத் தோரணம் ஆடிடக் கண்டான்!
மணமகன் வந்து நின்று மாலை சூடக் கண்டான்!


ஆசையின் பாதையில் ஓடிய பெண்மயில்
அன்புடன் கால்களில் பணிந்திடக் கண்டான்!
வாழிய கண்மணி, வாழிய என்றான்!
வான்மழை போல் கண்கள் நீரில் ஆடக்கண்டான்!


பூமணம் கொண்டவள் பால் மணம் கொண்டாள்!
பொங்கிடும் தாய்மையில் சேயுடன் நின்றாள்!
மாமனைப்பாரடி கண்மணி என்றாள்!
மருமகள் கண்கள் தம்மில் மாமன் தெய்வம் கண்டான்!"

இந்த மூன்றாவது பாடல் எண்பதுகளில் டி.ராஜேந்தர் இயக்கிய 'என் தங்கை கல்யாணி ' என்ற திரைப்படத்தில் வெளி வந்தது. சித்ராவும் எஸ்.பி.பாலசுப்ரமண்யமும் சோகமும் வலியும் மிகுந்த இந்தப்பாடலுக்கு உயிர் கொடுத்து பாடியிருப்பார்கள். ரொம்பவும் எளிமையான வரிகளாலான, ஆனால் ஆழ்ந்த கருத்துக்களுடைய பாடல் இது.

அண்ணன் பாடுவது:


தோள் மீது தாலாட்ட என் பச்சைக்கிளி நீ தூங்கு!
தாய் போலத்தாலாட்ட என் தங்கமே நீ தூங்கு!
நிலவைக் கேட்டா புடிச்சுத்தருவேன் மாமன்!
உலகைக் கேட்டா வாங்கித் தருவேன் மாமன்!


மண்ணுக் குதிரை அவனை நம்பி வாழ்க்கை என்னும் ஆற்றில் இறங்க‌
அம்மா நினைச்சாளா! உன்
மாமன் தடுத்தேண்டா!
வார்த்தை மீறி போனா பாரு!
வாழ்க்கை தவறி நின்னா கேளு!
வந்தது பொறுக்கலைடா! என் மானம் த‌டுக்குதடா!
தங்க ரதமே தூங்காயோ? தாழம் மடலே தூங்காயோ?
முத்துச்சரமே தூங்காயோ? முல்லைவனமே தூங்காயோ?


தங்கை பாடுவது:


நெருப்பைத் தொட்டா சுடுமே என்று
சின்ன வயதில் அண்ணன் தடுக்கும்!
மீறித்தொட்டேன் நான், கதறி அழுதேன் நான்!
ஓடி வந்து அண்ண‌ன் பார்க்கும்!
தவறை மறந்து மருந்து போடும்!
இப்பவும் நெருப்பைத் தொட்டேன்!
அதை ஆற்ற யாருமில்லே!


தோள் மீது தாலாட்ட என் பச்சைக்கிளி நீ தூங்கு!
தாய் நெஞ்சம் தாலாட்ட என் தங்கமே நீ தூங்கு!"

என்றுமே இந்த இனிய பாடல்களை நெஞ்சம் மறப்பதில்லை!!

படங்களுக்கு நன்றி: கூகிள்

அன்புள்ளங்களிடமிருந்து ஒரு உதவி!!

அன்புத் தோழமைகளுக்கு!


எல்லோருக்கும் வந்த பிரச்சினை எனக்கும் கடந்த வியாழ‌னன்று ஆரம்பித்தது. ஆரம்பத்தில் தற்போது உள்ள பதிவு மறைந்து, அதற்கு முந்தின பதிவு வந்தது. அதன் பின் அது ஒழுங்காக வந்தாலும் அனைவருடைய பின்னூட்டங்கள் அனைத்தும் காணாமல் போயின. இது வரை அவை மீண்டும் வரவில்லை. அதற்குப்பின் வந்த பின்னூட்டங்கள் மட்டுமே இணைக்க முடிந்தது. அதுவல்ல என்னுடைய பிரச்சினை. என்னுடைய இன்பாக்ஸிலிருந்து என்னால் அன்றிலிருந்து வெளியேற‌ முடியவில்லை. கூகிள் உதவி மையம் சென்று படித்து பல தீர்வுகளை செய்து பார்த்தும் பலனில்லை. www.blogger.com-ல் புகுந்தாலே user name, password  எதுவுமில்லாமல் நேரே இன்பாக்ஸ் வந்து விடுகிறது. இன்பாக்ஸிலிருந்து வெளியேற முடிவதில்லை! யாரேனும் இதற்கு தீர்வு சொன்னால் என்னுடைய தற்போதைய பிரச்சினை விலகும். நல்லதொரு தீர்வை என் அன்புத் தோழமைகளிடமிருந்து ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.



அன்புடனும் நன்றியுடனும்


மனோ சாமிநாதன்.

Wednesday 4 May 2011

பெயர்க்காரணம்-தொடர் பதிவு!

திரு.கோபி ராமமூர்த்தி இந்தப் பெயர்க்காரணம் தொடர்ப்பதிவில் என்னையும் பங்கேற்குமாறு சில மாதங்களுக்கு முன்பு கேட்டிருந்தார். அவருக்கு என் உளமார்ந்த நன்றி! தயக்கத்தினாலேயும் எந்த விதமான அதிக சுவாரஸ்யமான நிகழ்வுகளோ, நினைவுகளோ அதிகம் இல்லாததாலும் இதுவரை இந்த தொடர்பதிவை எழுத முனையவில்லை நான்! அப்புறம் தொடர்ந்து வந்த பெயர்க்காரணத் தொடர்பதிவுகளைப்படித்த போது இதைத் தொடருவதும் எழுதுவதும் ஒரு புதிய அனுபவமாக இருக்குமெனத் தோன்றியதால் இதோ எழுத வந்து விட்டேன்!!

 சில பேருக்கு தன் பெயரை நினைக்கும்போதே பெருமிதமாக இருக்கும். சிலருக்கோ அதை சட்டப்பூர்வமாக நீக்கி விட்டு வேறு அழகான பெயரை பதிவு செய்யத் தோன்றும்!! சில பெயர்கள் தேவையில்லாத குளறுபடிகளை ஏற்படுத்தும்!

 சில நாட்கள் முன் ஒரு மருத்துவ மனை சென்று மருத்துவருக்காகக் காத்திருந்தபோது, நர்ஸ் வந்து “ அம்மா செல்லம் யாரும்மா?” என்று கேட்டதும் எல்லோருடைய முகத்திலும் புன்னகை மலர்ந்தது. அது யார் அம்மா செல்லம் என்ற பெயருடையவர் என்று ஆவலாகக் காத்திருந்த போது, வந்த அம்மா செல்லமோ 75 வயது பாட்டி!! இது போலத்தான் என் பெயரான ‘ மனோரமா’ என்பதும் ஒரு நிமிடம் எதிரே இருப்பவரை புன்னகை செய்ய வைக்கும் எப்போதும்!

 சிறு வயதில் இந்தப் பெயர் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. பள்ளிப் பருவத்தின் இறுதியில்தான் பிரச்சினைகள் ஏற்பட்டன. நானும் என் தங்கையும் பள்ளி செல்லும்போது ‘ நாகேஷ் எங்கே காணோம்?” என்ற கேள்விக்கணைகள் பின்னாலேயே வரும். முதலில் புரியவில்லை. அது என் பெயருக்கான கிண்டல்தான் என்று புரிந்தபோது ஆத்திரமும் அவமானமும் பொங்கியெழுந்தன. நேரே அம்மாவிடம் சென்று கோபமும் அழுகையுமாக புலம்பினேன். என் அம்மா ரொம்பவும் சர்வ சாதாரணமாக “ நான் படித்த காலத்தில் இது பிரபலமான பெயர். அதுவும் உன் பெயருக்கான அர்த்தமே ‘ மனதுக்கு ரம்யமானவள்’ என்பதனால்தான் அந்தப் பெயரை வைத்தோம். இந்த மாதிரி நாகேஷ் என்ற ஒரு ஆள் வருவாரென்றோ, உன் பெயரைக் கிண்டல் செய்வார்கள் என்றோ எங்களுக்குத் தெரியுமா என்ன?” என்று சொல்லி விட்டார்கள். கூடவே “ யார் கிண்டல் செய்தார்கள் என்று சொல்லு. அப்பாவிடம் சொல்லி போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து இரண்டு தட்டு தட்டலாம்” என்று சொல்லவும் அவசர அவசரமாக நகர்ந்து விட்டேன். என் தந்தை ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் என்பதுதான் அதற்குக் காரணம்! ஏற்கனவே ஒரு ஆசிரியர் ஏதோ அதட்டி விட்டாரென்ற ஒரு காரணத்துக்காக என் தந்தை அந்த ஆசிரியரை போலீஸ் ஸ்டேஷனுக்கே வரவழைத்து ஒரு குற்றவாளியை விசாரிப்பதுபோல விசாரித்து எச்சரிக்கை செய்தவர். அப்புறம் அந்த ஆசிரியரிடமிருந்து வந்த கிண்டல்கள் எனக்குத்தானே தெரியும்!! இதனாலேயே இது போன்ற பிரச்சினைகளை வீட்டில் சொல்லவே பயமாக இருக்கும்!



உயர் நிலைப்பள்ளியைத் தொடர்ந்து கல்லூரியிலும் இந்த பிரச்சினை தொடர்ந்தது. நாகேஷ் பின்னால் வந்து கொண்டே இருந்தார்! திருமணமானதும் என் பெயரை பாதியாக சுருக்கிக் கொண்டு விட்டேன். என் கணவரின் பெயரை பின்னால் இணைத்ததும் கம்பீரமாக என் பெயர் மாறி விட்டது போல ஒரு பிரமை!


இருந்தாலும் எனக்கு கோபத்தை வரவழைக்க வேண்டுமானால் என் கணவர் என் முழுப்பெயரையும் சொல்லி அழைப்பது திருமணமான புதிதில் வழக்கமாயிருந்தது. ஒரு முறை ஷார்ஜாவில் ஒரு மருத்துவரிடம் சென்றபோது, பெயரைக் கேட்டதும் “ ஓ! ஆச்சி வந்திருக்கிறீர்களா?” என்று கேட்டு வெறுப்பேற்றினார்!


நீண்ட அனுபவங்களுக்குப் பிறகு பெயரில் எதுவுமில்லை, பெயரின் அர்த்ததிற்கேற்ப வாழ்வதில்தான் உண்மையான சிறப்பிருக்கிறது என்று புரிந்தது!!