Thursday 30 April 2020

மீண்ட சொர்க்கம்!

ஒவ்வொரு நாளும் விடியும்போது கொரோனா பற்றி கருத்துக்களும் காமெடியும் பாடல்களும் சிந்தனைகளும் காணொலிகளும் வாட்ஸ் அப் மூலம் ஏராளமாக வந்து கொண்டேயிருக்கின்றன. சில உண்மையிலேயே சிந்திக்க வைக்கின்றன! சில கலங்கவும் வைக்கின்றன. அதில் ஒரு குரல் என்னை மிகவும் ஈர்த்ததுடன் சுவாரஸ்யமாக கவனிக்கவும் வைத்தது. அந்தக்குரல் சொன்னதெல்லாம் மறுக்க முடியாத உண்மையும் கூட! அந்த நிதர்சனமான கருத்துக்களை இங்கே அப்படியே எழுதியிருக்கிறேன்! படித்துப்பாருங்கள்!படுத்ததும் விடிந்து விட்ட நாட்களை எண்ணி  எத்தனை நாள் வருந்தியிருப்போம்!
விடிந்தும் விடியாமல் எழுந்து வந்து அடுப்பங்கரையில் சமைத்துக்கொண்டிருப்போம்!
காலை உணவைக்கூட கால நேரம் தெரியாமல் சாப்பிட்டு தொலைத்திருப்போம்!
அவதியாக கார், பைக், பேருந்து என ஏதாவதொன்றில் விடிந்தும் விடியாத கனவுகளுடன் பயணம் செய்து கொண்டிருந்திருப்போம்!
கூட்ட நெரிசல், டிராஃபிக் ஜாம் என அனுதினமும் ஏதாவது ஒன்றிற்காக காத்துக்கிடந்திருந்திருப்போம்!
எதிர்பாராத விபத்து, திடீர் மரணம் என ஏதாவதொன்றில் மனம் உடைந்து போயிருந்திருப்போம்!
வேலை முடிந்ததும் வீட்டை நோக்கி ஓடிக்கொண்டிருந்திருப்போம்!
குழந்தை, குடும்பம், பெற்றோர் என கால்கள் ஓய்வு கொள்ளும். மீண்டும் இரவு உணவு என வேலை ஓடிக்கொண்டிருக்கும்.

நீங்களே நினைத்தாலும் கனவிலும் கிடைக்காத வாய்ப்பை காலம் கொடுத்திருக்கிறது என நினைத்துக்கொள்ளுங்கள்!

அலாரம் வைத்து எழுந்து கொள்ளத்தேவையில்லை.

காலை சூரியன் எழுந்த பின்னும் அவதியின்றி அமர்ந்திருக்கிறோம்.

சாலைகளில் புகை கக்கும் வாகனமில்லை.

பகல் வேளையில் நிசப்தம் நிறைந்த சாலைகளைப் பார்க்க முடிகிறது.

அடிதடி, குத்து, வெட்டு குறைந்திருக்கிறது.

மதுக்கடை மூடிக்கிடக்கிறது.

நகைக்கடைகள் பூட்டியே கிடக்கின்றன.

ஜவுளிக்கடைகளின் விளம்பரங்களையே பார்க்க முடிவதில்லை.

நிரம்பி வழியும் மாநகர பேருந்துகளில்லை. படிகளில் தொங்கிய படி பயணம் செய்ய யாரும் இல்லை. 

தெருவெல்லாம் சுத்தமாக இருக்கிறது. 

சாக்கடைகள் தூர்வாரப்பட்டுகின்றன.

அரசியல்வாதிகள் நல்லது செய்ய நினைக்கிறார்கள்.

அடுத்தவன் பொருள் மேல் ஆசை வருவதில்லை.

எது வேண்டுமென்றாலும் வீட்டிலேயே சமைத்துக்கொள்கிறோம்.
தேவையில்லாமல் எதையும் வீணடிப்பதில்லை.
காவல் துறையை மதிக்கக்கற்றுக்கொண்டிருக்கிறோம்.
மருத்துவரை தெய்வமாக பார்க்க முடிந்திருக்கிறது.
செவிலியரை சகோதரியாக ஏற்றுக்கொண்டிருக்கிறோம்.
சுற்றியிருப்போர் யாராவது இருக்க வேண்டுமென்று வேண்டிக்கொண்டிருக்கிறோம்.
சுத்தமாக இருக்கப் பழகியிருக்கிறோம்.
சிட்டுக்குருவிகள் சுதந்திரமாக பறந்து திரிகின்றன.
பறவைகள் சப்தம் பலமாய் கேட்கின்றன.
பொழுது சாயும்போது எந்த இரைச்சலுமில்லை.
நீ எப்படி வருவாயோ என்ற பயம் உன் குடும்பத்திற்கு இல்லை.
போதை தேடி யாரும் செல்வதேயில்லை.
சிகிரெட் இருந்தும் தேடி அலைய மனமில்லை.
தெருவில் எச்சில் துப்ப யோசிக்க யோசிக்கிறோம்.
வெளி நாட்டிலிருந்து வந்ததை வெளியில் சொல்ல யோசிக்கிறோம்.
அகந்தை அழிந்து போயிருக்கிறது.
தான் என்ற கர்வம் தளர்ந்து போயிருக்கிறது.
சிறு வயது ஞாபகங்களை அசை போட துவங்கியிருக்கிறோம்.
தொட்டதற்கெல்லாம் மருத்துவமனை போவதை நிறுத்தியிருக்கிறோம்.
சிரிக்கக்கற்றுகொண்டிருக்கிறோம்.
சிந்திக்கப்பழகியிருக்கிறோம்.
மற்றவர்கள் வலி புரிந்திருக்கிறது.
மனசு நோகாமல் பேச பழகியிருக்கிறோம்.

இது மட்டும் போதாது.

அப்பாவிடம் னம் விட்டுப்பேசுங்கள்.
அம்மாவின் மடியில் தலை சாய்ந்து உறங்குங்கள்.
பிள்ளைகளின் தேவைகள் அறிந்து சொல்லிக்கொடுங்கள்.
மனைவியின் மனதுக்கு நெருக்கமாக இருங்கள்.
கணவரின் கைகள் பிடித்து நம்பிக்கை கொடுங்கள்.
பிரிந்த நண்பர்களின் நம்பர்களை தேடி எடுங்கள்.
மன்னிப்பு கேட்க நினைப்பவர்களிடம் கேட்டு விடுங்கள்.
யாரையாவது மன்னிக்க வேண்டுமென்று நினைத்தால் மன்னித்து விடுங்கள்.
ஒருவேளை விரைவில் உலகம் அழிந்து போவதாயிருந்தால் எப்படி உறவுகளை நேசித்திருப்பீர்களோ, அப்படி நேசித்துப்பாருங்கள்.
பக்கத்து வீட்டுக்காரர்களிடம் பகை தெரியாது.
எதிர் வீட்டுக்காரர்களிடம் ஏமாற்றம் புலப்படாது.
எல்லோரும் நிம்மதியாக இருக்கட்டும் என மனம் நினைக்கும்.
வஞ்சம் தோன்றாது.
வாழ வேண்டும் என்ற ஆசை மீண்டிருக்கும்.
வாழ்ந்து காட்ட வாய்ப்பு கிடைத்தது என்று மனம் சொல்லும்.
மீண்டும் தொடங்குங்கள்.
இங்கு எந்த தவறை செய்தீர்களோ, அதை திருத்திக்கொள்ளுங்கள்.
வீட்டில் இருப்பதற்கு வெறுப்பாக உள்ளது என்று புலம்பாதீர்கள்.
வீடே இல்லாதவர்களை நினைத்துப்பாருங்கள்.
நீங்கள் யார் என்று உங்களுக்கே உணர்த்துவதற்காக ஒரு வைரஸ் தேவைப்பட்டிருக்கிறது அன்பர்களே!Wednesday 22 April 2020

நல்லவையும் தீயவையும்!!

ஒரு வழியாக வெளிநாட்டிலிருந்து வந்ததற்காக வீட்டின் வெளியே ஒட்டப்பட்ட ‘ இது கொரோனா வீடு. உள்ளே நுழையாதே ‘ என்ற ஸ்டிக்கர் 17ந்தேதி அகற்றப்பட்டது. ஒரு மாதிரி சிறைவாசத்திலிருந்து மீண்ட மாதிரி இருப்பதாக என் கணவர் கூறினார்கள்.

நண்பர்கள் எதையுமே பொருட்படுத்தாது உதவிகள் செய்தார்கள். இந்த சிறைவாசம் நிறைய விஷயங்களை மீட்டெடுக்க உதவியது என்று தான் கூற வேண்டும்.

தஞ்சையில் எல்லோருக்கும் ரோஸ், நீலம், பச்சை என்று அட்டைகளை ஒவ்வொரு வீட்டுக்கும் கொடுத்திருக்கிறார்கள். பச்சை அட்டை வைத்திருப்பவர்கள் திங்கள், வியாழக்கிழமைகளில் காலை 6 மணியிலிருந்து மதியம் 12 வரை வெளியே போய் சாமான்களை வாங்கி வரலாம். ரோஸ் கலர் அட்டை வைத்திருப்பவர்கள் சனி, புதன் கிழமைகளும் நீல அட்டை வைத்திருப்பவர்கள் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளிலும் வெளியே சென்று வரலாம்.

காய்கறிகள் வாரம் இரு முறை வாசலில் வருகின்றன. உழவர் சந்தையிலிருந்து வருவதால் காய்கறிகள் மலிவாகவே கிடைக்கின்றன. பெருமளவில் மளிகை சாமான்கள் வேண்டுமானால் ஆன்லைனில் ஆர்டர் செய்து கொள்ளலாம். சிறு மளிகைக்கடைகளில் மற்ற சாமான்கள் கிடைக்கின்றன. ஆவின் பால் தவறாமல் வருகின்றது.

ஒரு வகையில் வெளியில் செல்லாமல், அலையாமல் இருப்பதாலும் உணவகங்களில் சாப்பிடாமல் இருப்பதாலும் தேவையற்ற பொருள்கள் வாங்குவது குறைந்து செலவினங்கள் கட்டுக்குள் இருக்கின்றன.இப்போதெல்லாம் அடிக்கடி தொலபேசி அழைப்புகளில் மறந்து போன உறவுகள் கூட வருகின்றன. காலம் சுருங்கி எப்போதும் தொலைபேசியில் பேசுவது கூட மறந்து போய் உறவுகள் சுருங்கிக்கொண்டிருந்த நேரத்தில் உறவுகளுக்கு  இப்போது புத்துயிர் கிடைத்தது போல இருக்கிறது! பொருள் சம்பாதிக்க, காலத்தின் பின்னே கட்டாயமாக, இயந்திரத்தன்மையுடன் ஓடிக்கொண்டிருந்த குடும்பத்தலைவர்கள் சட்டென்று நின்று குடும்பத்தின் பக்கம் திரும்பியிருக்கிறார்கள்! நிறைய வீடுகளில் தந்தையும் தாயும் பிள்ளைகளும் சேர்ந்து சிரித்து, வேலைகளில் கணவனும் மனைவிக்கு உதவுவதை பார்க்கையில் மனதுக்கு நிறைவாக இருக்கிறது. என் வீட்டிலும் இப்படித்தானிருக்கிறது. என் மருமகளிடம் இங்கிருந்து ஃபோன் செய்து எப்படி இருக்கிறாயென்று கேட்டபோது, ‘ இவர்கள் வீட்டில் இருப்பதால் இப்போது தான் வீடு வீடு போல இருக்கிறது ‘ என்று சொன்னார். எப்போதும் என் மகன் அலுவலகம் சென்றதும் அதற்கு முன்பேயே பேரன் பள்ளிக்கும் சென்று விடுவதால் என் பேத்தி தன் தாயாரைப்பிடித்த பிடி விடாது கூடவே சுற்றிக்கொண்டிருக்கும். இப்போதோ அப்பாவை விட்டு நகருவதே இல்லை!!

வீட்டுப்பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக்கொள்வதற்காகவே வேலைக்கு செல்லும் பெண்கள் சிலர் இப்போது வேறு வழியில்லாமல் வீட்டிலேயே இருந்து பிரச்சினைகளை சமாளித்து வருகிறார்கள். எனக்குத்தெரிந்த ஒரு பெண்மணி, ‘ எனக்கு வேண்டிய சாமான்களை மாஸ்க் போட்டுச்சென்றாவது எனக்கு அவசியம் வாங்கித்தந்து தான் ஆக வேண்டும் ‘ என்று மகனை விரட்டுகிறார்! இன்னொரு உறவினரோ தொலைபேசியில் பேசும்போது, அவரின் கணவரின் நண்பர் வீட்டில் கணவன், மனைவி இருவருக்குள்ளும் வீட்டிலேயே இருப்பதால் தகராறு ஏற்பட்டு அந்த நண்பர் தற்கொலை செய்து கொண்டதாக சொன்னார். என் மருமகளின் சினேகிதி தன் கணவருக்கு வீட்டிலேயே இருப்பதால் பெரிதும் மன உளைச்சல் ஏற்பட்டு depression நிலைக்குப்போய் விட்டதாகவும் அவரை விரைவில் மன நல மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டிய நிலையில் இருப்பதாகவும் கூறினாராம். கொரோனா தாக்காமலேயே எத்தனை விதமான நோய்கள்! எத்தனை விதமான அவதாரங்கள்!!

Wednesday 1 April 2020

நாம் தனிமைப்படுத்தப்படும்போது....

துபாயிலிருந்து தஞ்சைக்கு மார்ச் 8ந்தேதி புறப்பட்டபோது இத்தனை பெரிய திருப்பங்கள் வாழ்க்கையில் ஏற்படும் என்பது தெரிந்திருக்கவில்லை. தெரியாத ரகசியங்கள் நிறைந்தது தானே வாழ்க்கை!

தஞ்சைக்கு பிப்ரவரி முதல் வாரமே வந்திருக்க வேண்டியது. அப்போது தான் கொரோனா புயல் வீசத்தொடங்கிய நேரம். அந்த நேரத்தில் நாங்கள் கிளம்புவதை எங்கள் மகன் விரும்பவில்லை. ஒரு மாதமானால் கொரோனாவின் தீவிரம் குறையுமென்று நினைத்து பிரயாணத்தை ஒரு மாதம் தள்ளிப்போட்டோம். அப்போதும்கூட மகனுக்கு எங்களை அனுப்ப அவ்வளவாக விருப்பமில்லை.மார்ச் மாத ஆரம்பம் என்பதால் சென்னை விமான நிலையத்தில் காய்ச்சல் இருக்கிறதா என்று பரிசோதித்து விட்டு, விலாசம், தொலைபேசி எண் முதலியவற்றை வாங்கிக்கொண்டு அனுப்பி விட்டார்கள்.  தஞ்சை வந்து 10 நாட்கள் வரை எந்த பிரச்சினையுமில்லை. கொஞ்சம் கொஞ்சமாக கொரோனா தீவிரமடைய ஆரம்பித்ததும் நிலைமையே தலைகீழாக மாறத்தொடங்கியது.

வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் தனிமைப்படுத்தப்படுகிறார்கள் என்றும் அவர்கள் இல்லங்களின் வெளியே ஸ்டிக்கர் ஒட்டபப்டுகின்றன என்றும் கேள்விப்பட்டதும் அதற்கு முன்பாகவே தேவையான சாமான்களை வாங்கிப்போட்டு விட்டு நம்மை நாமே தனிமைப்படுத்திக்கொள்வது நல்லது என்று தீர்மானித்தோம். வேலை செய்யும் பெண்ணை தற்காலிகமாக நிறுத்தினோம். வீட்டின் மாடியை சற்று இழுத்துக்கட்ட நினைத்து அதற்கான வேலைகளை அப்போது தான் ஆரம்பித்திருந்தோம். ஜல்லி, மண், சிமிண்ட் எல்லாம் வந்து இறங்க, மேல் தளத்தில் சில பகுதிகளை இடிக்க ஆரம்பித்திருந்தார்கள். பொறியாளரிடம் எல்லா வேலைகளையும் நிறுத்தச் சொன்னோம். எல்லாவற்றுக்கும் தயாராக இருந்த போது சற்று தாமதமாகவே ரெவின்யூ அலுவலகத்திலிருந்து வந்து நாங்கள் சென்னை வந்து இறங்கிய ‘ மார்ச் 8ந்தேதியிலிருந்து ஏப்ரல் 16 வரை இந்த வீடு தனிமைப்படுத்தப்படுகிறது. உள்ளே நுழையாதே ‘ என்ற ஸ்டிக்கரை ஒட்டி, கையிலும் சீல் வைத்தார்கள்.
அன்றிலிருந்து இந்த தனிமைப்படுத்தல் வாழ்க்கை தொடங்கியது. நாமும் வெளியே போகக்கூடாது என்பதும் யாரும் நம்மை வந்து பார்க்கக்கூடாது என்பதும் முக்கிய விதிகள்.
என் சிறிய நூலகம்
அது வரை சரளமாக வந்து போன உறவுகள் இங்கு வருவதை நிறுத்திக்கொண்டார்கள். மூத்த குடிமக்கள், இவர்கள் தனிமையில் இருக்கிறார்களே, ஏதாவது ஒரு வகையில் உதவுவோம் என்ற மனிதாபிமான அடிப்படையான காருண்யம் கூட குறைந்து போயிற்று. அப்படி யாராவது வந்து நின்று பேசினால்கூட அடுத்தவர் அதைப்பார்த்து ‘ அவர்கள் அருகில் போ விட வேண்டாம் ‘ என்று எச்சரிப்பதும் காதில் விழுந்தது.

ரொம்ப நாட்களாகவே ஒவ்வொரு முறையும் துபாயிலிருந்து இங்கு வந்து தங்கும்போது நாட்கள் மின்னலாய் மறைந்து விடும். வரும்போதே ஆயிரம் வேலைகள், முக்கிய திருமணங்கள், மருத்துவர்களின் சந்திப்புகள் என்று அடுக்கடுக்காக திட்டங்களும் கூடவே வருவதால் துபாய் மாதிரியே இங்கும் நாட்கள் யந்திரத்தனமாகவே பறக்கும். சற்று அமர்ந்து ஓய்வெடுக்க முனையும்போது திரும்பும் தேதி வந்து விடும். அவசர அவசரமாக தேவைப்படும் சாமான்கள் வாங்கி, அவற்றை பாக் செய்து திரும்பத் திரும்ப அவற்றின் எடையை சரி பார்த்து திரும்பவும் பறப்பதற்குத்தான் நேரம் சரியாக இருக்கும். இந்த நிகழ்வுகள் கடந்த 40 வருடங்களாக ஒரே நேர்க்கோட்டில் எப்போதும் ஏற்படும் நிகழ்வுகள்!! அடிக்கடி ‘ கொஞ்ச நாட்களாவாது நம் வீட்டில் அப்பாடா என்று உட்கார்ந்து அமைதியாக நேரத்தை கழிக்க முடிந்ததா ‘ என்ற புலம்பல் மட்டும் ஓய்ந்ததில்லை!

இப்போது அந்த நேரம் கிடைத்திருக்கிறது! ஒவ்வொரு அறையையும் தூசி தட்டி சுத்தம் செய்யலாம். அடுக்கலாம். பழைய குப்பைகளை கிளறலாம். என் புத்தகங்களை எண் வாரியாக அடுக்கலாம். என் பழைய பொக்கிஷங்களை, என் ஓவியங்களை, என் கோலங்களை, ரசிக்கலாம். சுத்த தன்யாசி ஆலாபனையை உரத்த குரலில் ஓட விட்டு ரசிக்கலாம்! அமைதியாக ரசிக்க எத்தனை விஷயங்கள் இருக்கின்றன!

வாசலில் இன்று வரைந்த கோலம்
விடியற்காலைப்பொழுதில் வாசலில் போடும் அழகிய கோலத்துடன் அப்படித்தான் நாட்களை கழிக்க ஆரம்பித்திருக்கிறேன். அருகிலுள்ள ஒரு நண்பர் தேவையான பொருள்களை அவ்வப்போது வாங்கிக்கொடுத்து சென்று விடுவார். வாட்ஸ் அப் மூலம் மளிகை சாமான்களை வாங்கிக்கொள்கிறோம். இசையின் பின்னணியில் ஒவ்வொரு வேலையையும் ரசித்து செய்ய ஆரம்பித்து விட்டோம்! நேரம் தான் போதவில்லை எங்களுக்கு!!