Monday 20 February 2017

பேலியோ டயட்!!!

கோவையைச் சேர்ந்த நியாண்டர் செல்வன் தற்போது அமெரிக்காவின் வின்கான்ஸின் பல்கலைக்கழகத்தில் வர்த்தக நிர்வாகத்துறையில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.



சில வருடங்களுக்கு முன் இவருக்கு ஆரம்ப நிலை சர்க்கரை இருப்பதை பரிசோதனைகள் மூலம் கண்டறிய நேர்ந்தது. அது தெரிந்ததும் இவர் அதிர்ந்து போய் விட்டார். காரணம், இவருடைய அப்பா, பெரியப்பா, பாட்டி அனைவருக்கும் சர்க்கரை நோயின் தாக்கம் இருந்து வந்தது. இவரின் தந்தை கடைசி வரை தினம் மும்முறை இன்சுலின் போட்டுக்கொண்டிருந்தார். இவரது பாட்டி அதிக சர்க்கரை நோயால் மாரடைப்பால் இறந்துபோனார். இவரின் அம்மா வழி தாத்தாவும் சர்க்கரை நோய், டிமென்ஷியா நோய்களினால் பாதிக்கப்பட்டிருந்ததால் இவருக்கும் சிறு வயதிலேயே சர்க்கரை நோய் பாதிப்பு ஏற்படுமென்ற நினைப்பு இருந்ததால் உடற்பயிற்சியிலும் குறைந்த அளவு கொழுப்பு இருக்கும் உணவை உண்பதிலும் தன் வாழ்க்கையை நகர்த்திக்கொண்டிருந்த‌தால்  தனக்கு சர்க்கரை நோய் ஏற்பட்டிருப்பதை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

மருத்துவரிடம் சென்றால் இவர் ஏற்கனவே எடுத்துக்கொண்டிருந்த உணவைத்தான் அவர்களும் எடுக்கச் சொன்னார்கள். நடைப்பயிற்சி, உடைப்பயிற்சியையும் விட்டு வைக்கவில்லை. இனி இவற்றை நம்பிப்பயனில்லை என்று நினைத்து பாடி பில்டிங் துறையில் பயன்படுத்தப்படும் லோ கார்போ டயட் பற்றிய நூல்களை படிக்க ஆரம்பித்தார். பேலியோ டயட், அட்கின்ஸ் டயட், போன்ற உணவு முறைகளைப்பற்றி படித்த போது அவற்றில் அசைவ உணவு வகைகள், அதுவும் கொழுப்பு மிகுந்த உணவுகள், வெண்ணெய் முதலியவற்றை எடுக்கச் சொல்லியுள்ளதை கவனித்தார்.

இவரது நாற்பதாவது வயதில் அது வரை கடைபிடித்து வந்த சைவ உணவை விட்டு அசைவ உண‌விற்கு மாற ஆரம்பித்தார். மூன்றே மாதங்களில் 12 கிலோ எடை இறங்கியது. சர்க்கரை நோயும் இரத்த அழுத்த நோயும் இவரை விட்டு ஓடிப்போயின. இப்படித்தான் இவர் பேலியோ டயட்டை கண்டறிந்தார்.

பாரம்பரிய உணவுகளான செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய், நெய் ஆகியவற்றை வெளிநாடு நிறுவனங்கள் கனோலா, சூரியகாந்தி எண்ணெய்கள் மூலம் அழித்து வருகின்றன என்று இவர் குற்றம் சாட்டுகிறார். மருந்து கம்பெனிகள் ஸ்டாடின் விற்பனையில் பல கோடி ரூபாய்களை ஈட்டுவதாகவும் குப்பை உணவுகளை விற்று அந்நிய கம்பெனிகள் கல்லா கட்டுவதாயும் இவர் கூறுகிறார்.

முக நூலில் 30 பேருடன் ஆரோக்கியம் நல்வாழ்வு என்ற குழுவை இவர் ஆரம்பித்த போது அனைவரும் இவரை கிண்டல் செய்திருக்கிறார்கள். அதன் பின் இவரது பேலியோ டயட் முறையால் அதைப் பின்பற்றியவர்கள் ஒவ்வொருத்தரும் இரத்த அழுத்தத்திலிருந்தும் சர்க்கரை நோயிலிருந்தும் வெளியேற, இவரது குழுமம் வளரத்தொடங்கியது. இப்போது இவரது குழுமத்தில் 70000 பேர்கள் இருக்கிறார்கள். அதில் பல மருத்துவர்களும் அடக்கம். இவரது குழுமத்தில் மாதந்தோறும் 1500 மெடிக்கல் ரிப்போர்ட்டுகள் வெளியிடப்படுகின்றன. அவற்றைப்பார்த்து டயட் அறிவுரை இவரது குழுமம் கூறி வருகிறது.
பேலியோ டயட் பற்றிய இவரின் கருத்துக்கள் 25 வாரங்கள் தினமணியில் தொடர்ந்து வெளி வந்தது. மேலும் இவரது கட்டுரைகள் மல்லிகை மகள், தினகரன், குங்குமம் போன்ற பத்திரிகைகளிலும் வெளி வந்தன.

பேலியோ டயட்  சர்க்கரை வியாதியை எப்படி குணப்படுத்துகிறது?

No carb no sugar என்பதுதான் பேலியோவின் அடிப்படை.




நம் உடம்பில் அளவுக்கு அதிகமான கொழுப்பு சேர்ந்திருக்கிறது. அதுதான் குண்டாக இருக்கக் காரணம். இந்தக் கொழுப்பு சேரக் காரணம், நாம் சாப்பிடும் உணவில் உள்ள கார்போஹைட்ரேட்கள். நாம் கார்போஹைட்ரேட்டை தவிர்க்கும்போது, நம் உடம்பு அதை தேட ஆரம்பிக்கிறது. அப்போது, உடம்பில் சேர்ந்திருக்கும் கொழுப்பை எரித்துப் பயன்படுத்த தொடங்குகிறது. இதன்மூலம்தான் எடை குறைகிறது. ‘ஆனால் நாம் நேரடியாக கொழுப்பையே சாப்பிடுகிறோமே... அது என்ன ஆகும்?’ என்றால், அது கொழுப்பாக சேராது. அது நம் உடலின் அன்றாட இயக்கத்துக்குத் தேவையான சக்தியாக மாறி, எரிக்கப்பட்டுவிடும். சுருங்கச் சொன்னால், கொழுப்பைக் கரைக்க, கொழுப்பை சாப்பிட வேண்டும்.

உண்மையில் பேலியோ டயட் என்பது நவீன கால கண்டுபிடிப்பு அல்ல. இது ஆதி மனிதனின் உணவுமுறை. விவசாயம் கண்டுபிடிப்பதற்கு முந்தைய கற்காலத்தை, `பேலியோலித்திக்’ என்பார்கள். அப்போது சாப்பிட்டதைப் போல அரிசி, கோதுமை உள்ளிட்ட தானியங்களைத் தவிர்த்து, நல்ல கொழுப்பு அடங்கிய முட்டை, மீன், இறைச்சி, விதைகள், கொட்டைகள், போன்றவற்றை உண்பதே பேலியோ டயட். இது வாழ்நாள் முழுமைக்குமான ஓர் ஆரோக்கியம் தரும் உணவு முறை. எடைக்குறைப்புக்கான பிரத்தியேக டயட் அல்ல; இதைப் பின்பற்றினால் எடைக்குறைப்பு தானாகவே நிகழும். தேவையில்லாத கொழுப்பு கரைந்து, உடல் வலுவடையும்.

சர்க்கரை வியாதியை வரவழைப்பது மாவுச் சத்து நிரம்பிய அரிசி, பருப்பு, கோதுமை போன்ற தானிய உணவுகள். இவர் பேலியோ உணவுக்கு மாறுகிறார் என்று வைத்துக்கொள்ளுவோம். காலை உணவாக நெய்யில் வறுத்த 4 ஆம்லெட் சாப்பிடும்போது பசி முழுவதுமாக அடங்கி விடுகிறது. முட்டையில் துளியும் மவுச்சத்து இல்லையென்பதால் இரத்தத்தில் துளியும் சர்க்கரை ஏறாது. 2, 3 மணி நேரங்கழித்து அவரது சர்க்கரை அளவு குறையும். மதியமும் இரவும் இது போல பேலியோ டயட்டை பின்பற்றும்போது அவரது சர்க்கரை அளவு குறைந்து கொண்டே வரும். ஒரு சில மாதங்களில் உடலில் இயல்பானதாக மாறி விடும்.

கொலஸ்ட்ரால் நமக்கு நண்பன் என்று கூறுகிறார் இவர். இதயமே முழுக்க முழுக்க சிகப்பு இறைச்சியாலும் நிறை கொழுப்பினால் உருவானது என்றும் மனித உடலில் வேறெந்த உறுப்புக்களையும்விட மூளையில் 10 மடங்கு கொழுப்பு உள்ளது என்றும் கூறும் இவர் ஆண்களுக்கு ஆண்மையை அளிக்கும் TESTOSTERONE  என்ற ஹார்மோனும் பெண்களுக்கு பெண்மையை அளிக்கும் ஈஸ்ட்ரோஜன் என்ற ஹார்மோனும் சுரப்பதற்கான மூலப்பொருளே கொலஸ்ட்ரால் என்று இவர் புள்ளி விபர‌ங்களைத்தெரிவித்து கொழுப்பு எந்த அளவிற்கு உடலுக்கு நன்மையை அளிக்கிறது என்று மேலும் சில விபரங்கள் சொல்கிறார்.

தொடரும்...


Sunday 5 February 2017

பென்சில் ஓவியம்!!!

புத்தக அலமாரியில் அலசிக்கொண்டிருந்த போது கிடைத்த  பழைய நோட்டில் இந்த ஓவியம் இருந்தது. வெறும் பென்சிலாலும் கூர்மையான கருப்பு ஸ்கெட்ச் பேனாவாலும் வரைந்தது.



1995ல் வரைந்திருக்கிறேன். வரைந்து பத்து வருடங்க‌ளுக்கு மேல் ஆகி விட்டன!