Sunday 26 September 2010

சிறு துரும்பும் பல் குத்த உதவும்.. .. ..

இந்த முறை குறிப்பு முத்துக்களில் தினசரி வீட்டு உபயோகத்துக்கான சில நல்ல குறிப்புகள் கொடுக்கலாமென்று தோன்றியது. சிறிய விஷயங்கள்தான் என்றாலும் அவை பெரிய அளவில் சில சமயங்களில் பலன் தருகின்றன! ‘ சிறு துரும்பும் பல் குத்த உதவும்’ என்ற பழைய பழமொழியே இருக்கின்றது! சில நம் வாழ்க்கையையே புரட்டிப் போட்டு விடுகின்றன.

1. அலமாரி, பீரோ இவற்றை துடைக்கும்போது, சிறிது வேப்பெண்ணையை தொட்டு துடைத்தால் பூச்சிகள் எப்போதும் அண்டாது.

2. புதிதாக வீடு கட்டுபவர்கள் ‘ concealed wiring’ செய்யும்போது சுவற்றுக்குள் பைப்பைப் பொருத்தி, ஆண்டெனாவிலிருந்து வரும் ஒயரை இதற்குள் விட்டு தொலைக்காட்சிப்பெட்டியில் பொருத்தினால் பார்க்க அழகாக இருப்பதுடன் ஒயர்கள் சுவற்றில் வெளியில் நீளமாகத்தொங்காது. கதவு, ஜன்னல்களை மூட முடியாமல் கஷ்டப்படுவதையும் தவிர்க்கலாம்.

3. கொசுத்தொல்லைக்கு இயற்கை வைத்தியமுறையில் ஒரு மண் சட்டியில் காய்ந்த தேங்காய் நார், மாம்பூக்கள், வேப்பிலைகளைப்போட்டு எரியூட்டினால் கொசுக்கள் விட்டுக்குள் நுழையவே நுழையாது.

4. உடம்பில் எங்காவது எறும்பு கடித்தால் வலி உள்ள இடத்தில் உப்பு கலந்த நீரால் தடவினால் வலி உடனேயே நீங்கும்.

5. துணிகளில் கறை படிந்தால், கறை படிந்த இடத்தில் மட்டும் தண்ணீரால் நனைத்து, அதன் மீது ஒரு ப்ளாட்டிங் அட்டையை வைத்து அதன் மேல் இஸ்திரி செய்தால்[ iron செய்தால்] கறை நீங்கி விடும்.

6. வெள்ளைத்துணிகளுக்கு நீலம் போடும்போது, சொட்டு நீலத்துடன் சிறிது வாஷிங் சோடாவையும் கலந்து போட்டால் நீலம் திட்டு திட்டாகப் படியாது ஒரே சீராக இருக்கும்.

7. உடம்பில் ஒத்தடம் கொடுக்க Hot pack-ல் வெந்நீரை நிரப்புமுன் சிறிது கிளிசரினை ஊற்றி அதன் பின் வெந்நீரை ஊற்றினால் ரொம்ப நேரத்திற்கு வெந்நீரின் சூடு குறையாமல் இருக்கும்.

8. பற்பசையை கடைசி வரை டியூபிலிருந்து எடுக்க வேண்டுமானால், அதை வெந்நீரில் போட்டு எடுத்து அமுக்கினால் மிச்சமிருக்கும் பற்பசை எல்லாம் உடனேயே வந்து விடும்.


9. காலியான சிலிண்டரை எப்போதுமே உபயோகப்படுத்தும் சிலிண்டரின் அருகில் வைக்க வேண்டாம். காலி சிலிண்டரில் வாயு நீங்கியிருந்தாலும் திரவப்பொருள் அப்படியே உறைந்திருக்கும். எனவே விபத்து ஏற்பட்டால் இரண்டு சிலிண்டர்களும் அருகருகே இருப்பது மிகப் பெரிய ஆபத்தில் முடியும்.

10. இரும்பு ஆணிகள், ஸ்க்ரூ டிரைவர்கள் இவைகளைப் போட்டு வைத்திருக்கும் பெட்டியில் ஒரு பெரிய கற்பூர வில்லையைப் போட்டு வைத்தால் என்றுமே இந்த பொருள்கள் துருப்பிடிக்காமலிருக்கும்.

Sunday 19 September 2010

பதிவுலகில் நான்!

திருமதி. விஜி சத்யா என்னைத் தொடர்பதிவிற்கு அழைத்து விட்டாலும் முதலில் எழுதுவதற்கு சிறிது தயக்கமிருந்தது. ஆனாலும் அவர்களின் அன்பை மதிப்பது பெரிதாகப்பட்டதால் இந்த தொடர்பதிவில் எழுத ஆரம்பிக்கிறேன்.

திருமதி. .விஜிக்கு என் அன்பார்ந்த நன்றி!


1. வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?

இதே பெயர்தான் - மனோ சாமிநாதன்.

2. அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?.

இதுதான் என் உண்மைப் பெயர்.

3. நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி.

தமிழ் வலைப்பூ உலகில் காலடி எடுத்து வைத்ததைப் பற்றி சொல்லுமுன், பொதுவான வலைத்தளங்களில் முதல் அடி எடுத்து வைத்ததைப் பற்றிச் சொல்ல வேண்டும்.

என் ஒரே மகன் ஸ்விட்சர்லாண்டில் படிப்பை முடித்து, பயிற்சிக்காக அமெரிக்கா செல்ல ஆயத்தங்கள் செய்து கொண்டிருந்தபோது, என் தனிமையைப்போக்குவதற்காக, வீட்டில் கம்ப்யூட்டர் வாங்கி, இண்டர்நெட் தொடர்பை முதன்முதலாக ஏற்படுத்தியதுடன் மட்டுமல்லாது, என் சமையல் திறன் எனக்கு உற்சாகத்தைக் கொடுக்க வேண்டுமென்ற நோக்கத்துடன் என் மகன் 2003-ல் ஆரம்பித்து வைத்ததுதான் www.mayyam.com/hub என்ற பிரபலமான வலைத்தளத்தில் Indian food பிரிவில் Mrs.Mano’s Tamilnadu delicacies என்ற தொடர். இது தற்போது 10 லட்சத்திற்கும் மேலான பார்வையாளர்களையும் தொடர்ந்து பாராட்டுக்களையும் எனக்குப் பெற்றுத்தந்து என் தொடரின் மூன்றாம் பாகத்திலும் நுழைய வைத்துள்ளது. இதுதான் வலையுலகத்தில் என் முதல் நுழைவு. பிறகு இதைப்பார்த்து அழைத்த ‘அறுசுவை ‘ வலைத்தள நிறுவனரின் வேண்டுகோளுக்காக, அங்கே சில வருடங்கள் பங்கேற்பு. இடையில் மகனின் திருமண முயற்சியின் காரணமாக சில வருடங்களின் தொடர் அலைச்சலினால் வேறு சில வலைத்தளங்களின் அழைப்பையும் புறக்கணிக்க வேண்டியதாகியது. இவ்வளவுக்கும் இடையில் எனக்கென தனி வலைப்பூ ஆரம்பிக்க வேண்டுமென்ற ஆசை பல வித கடமைகளில் கனவாகவே பல வருடங்கள் தொடர்ந்து இப்போதுதான் நனவாகியுள்ளது. இதற்காக ஆரம்பத்தில் எனக்கு ஊக்கம் கொடுத்து சில யோசனைகளும் சொன்ன தங்கை ஸாதிகாவிற்கும் பின்னால் சில குறிப்புகள் கொடுத்த தங்கை ஜலீலாவிற்கும் இங்கே என் இதயங்கனிந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

4. உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?

பிற வலைத்தளத் திரட்டிகளில் இணைவதுதான் பிரபலமடைதல் என்றால் அதற்கான யோசனைகளைத் தானாகவே முன்வந்து சொல்லி விளக்கிய சகோதரர் இர்ஷாத் தான் பெரிதும் காரணமானவர். அவருக்கும் இங்கே என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மற்றபடி நம் வலைத்தளம் பிரபலமாவதென்பது நம் எழுத்தில்தான் இருக்கிறது என்பது என் எண்ணம்!

5. வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?

என் அனுபவங்களையும் பிறர் அனுபவங்களையும் சில சமயங்களில் பகிர்வதுண்டு. அவற்றை எழுதுவதே, யாருக்கேனும் அவை ஏதாவது ஒரு விதத்தில் உதவியாக இருக்குமென்ற நோக்கத்தில்தான். இதனால் நல்ல விளைவுகள் கடந்த காலத்தில் நிகழ்ந்துமிருக்கின்றன.

6. நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

நிச்சயம் இதை பொழுது போக்கு என்று சொல்ல முடியாது. பெரும்பாலான குடும்பங்களில் பெண் என்பவள் குடும்பத்தைப் பேணி காப்பதிலும் சமைப்பதிலும் தன் பொழுதைக் கழிக்கிறாள். இளமையில் தன் கணவனிடமும் முதுமையில் தன் பிள்ளைகளிடமும் தன் மனதிலுள்ள அனைத்தையும் பகிர்ந்து கொள்ள முடியாமலும் தன் திறமைகளை வளர்த்துக்கொள்ள முடியாமலும் அவளின் நேரம் இயந்திர கதியில் எப்போதும் சுழன்று கொண்டே இருக்கிறது. விசு ஒரு திரைப்படத்தில் தன் மனைவியிடம் சொல்வார், ‘ஆண்களுக்காவது ரிட்டயர்மெண்ட் இருக்கிறது. ஆனால் உங்களுக்கெல்லாம் சமையலிலிருந்து ஓய்வே இல்லையே?” என்று!! இந்த வலைப்பூவில் எழுதுவது என்பது எல்லா பெண்களுக்கும் ஒரு வடிகால் என்றுதான் சொல்வேன் - எனக்கும் சேர்த்துத்தான்!! மற்ற வலைப்பூக்களைப் பார்த்தால் தெரியும் எத்தனை பெண்கள் சமையலிலும் கலைகளிலும் கவிதைகளிலும் சிந்தனைகளிலும் எப்படியெல்லாம் தங்களின் திறமைகளை வெளிப்படுத்துகிறார்கள் என்று!

7. நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?

ஆங்கிலத்தில் மட்டும் சமையலுக்கென்று ஒரு வலைப்பூ உள்ளது.

http://www.manoskitchen.blogspot.com/

8. மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?.

தன்னிறைவும் மனப்பக்குவமும் இருந்தால் கோபம், பொறாமை போன்ற உணர்ச்சிகளுக்கு இடமேயில்லை.

9. உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி.

பகிர்ந்ததும் பாராட்டியதும் என் கணவர்தான். என்னுடைய அத்தனை திறமைகளையும் இந்த நிமிடம் வரை ஊக்குவித்து வளர்த்து வரும் அவரைப்பற்றி விவரிக்க என்னிடம் வார்த்தைகளில்லை.

10.கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...

சினேகமும் புரிதலும் அன்புமாக கணவர், கரிசனமும் பிரியமும் தோழமையுமாக மகன், மகளாக மருமகள், பொக்கிஷமாக பேரன் என்ற அன்பு மயமான குடும்பம். உண்மை, நேர்மை, உழைப்பு, அன்பு, கருணை-இவைதான் வாழ்க்கையின் தாரக மந்திரங்கள்!

சின்னஞ்சிறு வயதில் கர்நாடக சங்கீதம் பயின்று, அரங்கேற்றம் நடந்தது ஒரு பகுதி. தண்ணீர் ஊற்றாமலேயே தன்னால் வளரும் காட்டுச்செடி போல எந்த விதப்பயிற்சியுமின்றி வளர்ந்த ஓவியத்திறமை இன்னொரு பகுதி..


ஓவியம் வரைய ஆனந்த விகடனின் துணை ஆசிரியர் திரு.பரணீதரனால்.அழைக்கப்பட்டதும் கதாசிரியையாய் அதே விகடனிலும் சாவியிலும் எழுத ஆரம்பித்ததும் வாழ்வின் நடுப்பகுதி.

இவை அனைத்தையும் பின்னுக்குத் தள்ளி முதலில் குடும்பக் கடமைகளுமாய் இப்போது வலைப்பூவுமாய் தொடர்வது இன்றைய பகுதி!

இன்றைய பெருமிதம் வலையுலக நட்புகள்!

இன்றைய வேண்டுதல் அனைவரும் மகிழ்வுடனும் நலமுடனும் இருக்க வேண்டுமென்பது!

இந்த தொடர் பதிவில் பங்கேற்க நான் அழைக்கும் தோழமைகள்:

திருமதி. மேனகா

திருமதி. ஆசியா ஓமர்

திரு.ஹைஷ்

திரு.கோபி

Sunday 12 September 2010

முத்துக்குவியல்-2

முதலாம் முத்து:

பெண்கள் சம்பந்தமான சமீபத்திய மாத இதழ் ஒன்றில் ஒரு சுவாரஸ்யமான ஒரு விஷயத்தைப்படித்தேன்.

பங்களாதேஷ் உலகிலேயே வறுமையான நாடுகளில் ஒன்று. அங்கு பாதிக்கும் மேற்பட்டோர் படிப்பறிவில்லாது, கிராமங்களில் வசிக்கிறார்கள். கற்பனையில்கூட நினைத்துப்பார்க்க முடியாத அளவு ஒரு பழங்கால வாழ்க்கையை அவர்கள் வாழுகிறார்கள். அவர்கள் வாழ்க்கைத்தரத்தை மாற்ற அங்குள்ள ‘ D.Net” என்ற சமூக சேவை நிறுவனம் ஒரு அருமையான முயற்சியை ஆரம்பித்திருக்கிறது. இதற்கு இருபதுக்கும் மேற்பட்ட பெண்களுக்கு ‘இன்ஃபோ லேடீஸ்’ என்ற பெயரில் வேலை கொடுத்து அவர்களுக்கு சைக்கிள், இண்டர்நெட் இணைப்புடன் கூடிய மொபைல் ஃபோன், லாப்டாப், டிஜிட்டல் காமிரா-இவைகளைக் கொடுத்து அவைகளில் தகுந்த பயிற்சியையும் அளித்து ஒவ்வொருத்தருக்கும் சில கிராமங்கள் என்று பிரித்துக்கொடுத்து அனுப்புகிறார்கள். ஒவ்வொரு பெண்ணும் தினமும் 10 கிராமங்களுக்காவது சென்று நூற்றுக்கணக்கானவர்களை சந்தித்து அவர்களது குறைகளை கேட்கிறார்கள்.


ஏதோ வானத்திலிருந்து வந்த தேவதையைப்போல இவர்கள் நடந்து கொள்ளுவதில்லை. இவர்களும் ஏதாவது ஒரு கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர்களாயிருப்பதால் அவர்கள் மொழியிலேயே பேசுகிறார்கள். அவர்களது லாப்டாப்பில் அனைத்து தகவல்களும் வங்க மொழியிலேயே பதிவாகி இருப்பதால் அவர்களால் மக்களிடம் அவர்களின் பிரச்சினைகள் பற்றி சுலபமாகப் பேச முடிகிறது.

இல்வாழ்க்கைப் பிரச்சினைகள்-உதாரணத்திற்கு கணவன் மனைவியைத் தள்ளி வைத்து இரண்டாவது திருமணம் செய்து கொள்ளப்போவது தெரிந்தால், இவர்கள் உடனேயே அந்த மனைவியை சந்தித்து, இந்த மாதிரி தவறான வழியில் போகும் கனவனுக்கு சட்டப்படி எந்த மாதிரி தண்டனைகள் காத்திருக்கின்றன என்று விளக்கி அவர்கள் பயத்தைப்போக்கி அவர்களுக்கு தன்னம்பிக்கையை விதைக்கிறார்கள். அவளுடைய கணவனையும் அவன் பெற்றோரையும் சந்தித்து ஜெயிலுக்கு எந்த மாதிரி தண்டனையுடன் போக நேரும் என்பதை விளக்கிச் சொல்கின்றனர். கனவன் பயந்து போய் மறுபடியும் மனைவியிடமும் குழந்தைகளிடமும் சேருகிறான்.


ஒரு விவசாயி தன் நிலத்தில் விளைந்த தக்காளி திடீரென்று வியாதி வந்தது போல சுருங்க ஆரம்பித்து விட்டது என்று கவலைப்படுகிறார். உடனே அந்த பெண் அந்த பழங்களை தன் டிஜிட்டல் காமிராவில் புகைப்படங்கள் எடுத்து ஈமெயில் மூலம் தன் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கிறாள். அங்கே பலதரப்பட்ட விஷயங்களில் அறிவில் மேம்பட்டவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அதற்கான காரணங்களை கண்டுபிடித்து, அந்தப் பெண்ணை தொலைபேசியில் கூப்பிட்டு சொல்கிறார்கள். அந்த ஏழை விவசாயிக்கு உடனடியாக நிவாரணம் கிடைக்கிறது. கிராமங்களில் ‘சிறுவர்களுக்கு எப்படி அடிப்படை பழக்க வழக்கங்களைக் கற்று கொடுப்பது, கல்வியின் அவசியம்'-இப்படி பல விஷயங்களை குறும்படமாக போட்டுக் காண்பிக்கிறார்கள். கர்ப்பிணிப் பெண்களுக்கும் வயதானவர்களும் அவரவர்களின் சிறு சிறு பிரச்சினைகளையும் இவர்கள் தனது லாப்டாப்பின் மூலமாகவும் டிஜிட்டல் காமிரா மூலமாகவும் தீர்த்து வைக்கிறார்கள். மருத்துவ உதவிகளும் மருத்துவர்களை அவ்வப்போது குழுக்களாக கிராமங்களுக்கு அழைத்து வந்து இவர்களது நிறுவனம் செய்கிறது. அதற்கு மிகச் சிறிய தொகையை இவர்கள் வசூலிக்கிறார்கள். வங்க அரசு இவர்களை ஊக்குவிப்பதுடன் அவ்வப்போது உதவவும் பாராட்டவும் செய்கிறது! இதையெல்லாம் படித்தபோது நம் தமிழ்நாட்டுக்கு எப்போது இந்த மாதிரி முன்னேற்றம் கிடைக்கும், அந்த கனவுலகம் சீக்கிரம் வராதா என்ற ஏக்கம் ஏற்பட்டது!

இரண்டாம் முத்து:

பல வருடங்களுக்கு முன் ஊரில் ஏற்பட்ட அனுபவம் இது. ஒரு நாள் விடியற்காலை வீட்டின் வாசலுக்கு வந்தபோது எதிரே இருந்த பள்ளத்தில் சுற்றிலும் சிலர் சூழ்ந்திருக்க வலிப்பு நோயால் வாயில் நுரையுடன் துடித்துக்கொண்டிருந்தார் ஒருவர். என் சகோதரி மகனைக் கூப்பிட்டு ஒரு இரும்புக்கம்பியைக் கையில் கொடுக்கச் சொன்னேன். உடனேயே சில நிமிடங்களில் வலிப்பு நின்று சாதாரணமானார் அவர். வீட்டிற்கு அழைத்துச் சென்று அவரைப்பற்றி விசாரித்தபோது ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் என்றும் வேலை தேடி வந்ததாகவும் சொன்னார். என் சகோதரியின் கணவரது வேட்டியையும் சட்டையையும் கொடுத்து அணிய வைத்து, சாப்பிட வைத்து கையில் பணமும் கொடுத்து ஊருக்கு உடனேயே திரும்பிப்போகச் சொன்னபோது அவர் ‘இன்னொரு உதவிம்மா’ என்றார். விவரம் கேட்டபோது. ‘ ஒரு வீணாகிப்போன டேப் கிடைக்குமா?’ என்று கேட்டார். அதன் டேப் சுருளை கையில் வைத்து மோர்ந்து கொண்டிருந்தால் வலிப்பு வராது என்று விவரித்தார். அதையும் கொடுத்தனுப்பியபோது மன நிறைவுடன், தெரியாத இந்தத் தகவல் ஆச்சரியத்தையும் கொடுத்தது!

Friday 10 September 2010

பெருநாள் வாழ்த்துக்கள்!


அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய தோழமைகள் ஸாதிகா, ஆசியா, ஜலீலா, மலிக்கா, ஹுஸைனம்மா, ஜெய்லானி, அப்துல் காதர், இளம் தூயவன், நூருல் அமீன், ஜுலைஹா நஸீர், அஹ்மத் இர்ஷாத், ரியாஸ், மற்றும் அனைத்து இஸ்லாமிய சகோதர, சகோதரியற்கு என் இதயங்கனிந்த பெருநாள் வாழ்த்துக்கள்!!

Sunday 5 September 2010

மலாய் குலோப்ஜாமூன்

மறுபடியும் சமையலறையில் நுழைந்து விட்டேன்.என்ன செய்யலாம் என்று யோசித்தபோது அடுத்த வாரம் வரவிருக்கும் ரமதான் பெருநாளிற்காக ஒரு இனிப்பைத் தேர்ந்தெடுக்கலாம் என்று தோன்றிற்று! தேர்ந்தெடுத்த இனிப்பு மலாய் குலோப்ஜாமூன்! சாதாரணமாகவே குலோப்ஜாமூன் எல்லோருக்கும் பிடித்ததுதான். இதில் பாலை சர்க்கரையுடன் திரட்டுப்பாலைப்ப்போல் காய்ச்சி, குலோப்ஜாமூன் செய்ததும் அதன் மேல் ஊற்றி, குளிர்சாதனப்பெட்டியில் வைத்து பரிமாற வேண்டும். இரண்டு மடங்கு இனிப்பாகவும் அருஞ்சுவையோடும் இருக்கும்!


30 வருடங்களுக்கு முன் இங்கு வந்த புதிதில் நான் கற்றுக்கொண்ட இனிப்பு இந்த குலோப்ஜாமூன்! அப்போது ஷார்ஜாவில் ஹாலிடே இன் என்ற நாலு நட்சத்திர ஹோட்டல் மட்டும்தான் இருந்தது. அதன் தலைமை சமையல்காரர் உபயோகித்த குறிப்பு இது. பின்னாளில் நானும் என் மகனும் சேர்ந்து இதை மலாய் குலோப்ஜாமூன் ஆக்கினோம்!! இதற்காக நான் உபயோகிப்பது ஹாலந்தில் தயாராகி வரும் ‘ நிடோ’ பால் பவுடர் தான். இந்தியாவில் ‘அமுல்’ அல்லது ‘ சாகர் ’ பால் பவுடர் சரியாக உள்ளது.மலாய் குலோப்ஜாமூன்:

தேவையான பொருள்கள்:

குலோப்ஜாமூனுக்கு:

பால் பவுடர்- 8 மேசைக்கரண்டி
மைதா மாவு- 3 மேசைக்கரண்டி
பேக்கிங் பவுடர்- கால் ஸ்பூன்
சோடா பை கார்பனேட்- 2 சிட்டிகை
மிருதுவான வெண்ணெய்- 1 மேசைக்கரண்டி
தண்ணீர்- 2 to 3 மேசைக்கரண்டி
சீனி- 2 கப்
பாகு காய்ச்ச தண்ணீர்- 31/2 கப்
ஏலப்பொடி-அரை ஸ்பூன்
குங்குமப்பூ- 1 சிட்டிகை
பொறிப்பதற்குத் தேவையான எண்ணெய்
மெல்லிய பிஸ்தா சீவல்கள்-2 மேசைக்கரண்டி

மலாய் செய்ய:

தண்ணீர்-3 கப்
பால் பவுடர்- 15 ஸ்பூன்
சீனி- 12 ஸ்பூன்
ஏலப்பொடி- கால் ஸ்பூன்
குங்குமப்பூ- 1 சிட்டிகை

செய்முறை:

முதலில் மலாய் செய்து தயாராக வைத்துக் கொள்ள வேண்டும்.
தண்ணீரில் பால் பவுடரை நன்கு கரைத்து ஒரு பாத்திரத்தில் கொட்டி அடுப்பில் வைத்து காய்ச்சவும்.
குழம்பு போல கெட்டியாகும்போது சீனி, ஏலப்பொடி, குங்குமப்பூ சேர்த்து எல்லாம் கலந்து கொதித்து மறுபடியும் சற்று கெட்டியானதும் இறக்கி வைக்கவும்.
குலோப்ஜான் செய்ய, முதலில் பால் பவுடர், பேக்கிங் பவுடர், சோடா உப்பு மூன்றையும் கலந்து இரண்டு தரம் சலிக்கவும்.
சலித்த கலவையில் வெண்ணெய் சேர்த்து முதலில் நன்கு விரல்களால் கலக்கவும்.
பின் தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து மிருதுவாக பிசையவும்.
மாவு அதிகம் கெட்டியாக இல்லாமல் மிருதுவாக, பளபளப்பாக இருக்க வேண்டும்.
சிறு அரை நெல்லியளவு உருண்டைகளாக உருட்டவும்.
போதுமான எண்ணெயை வாணலியில் ஊற்றி சூடுபடுத்தவும்.
சூடு மிகக்குறைவாக இருக்கவேண்டும்.
உருண்டைகளைக் கொஞ்சம் கொஞ்சமாக போட்டு பொன்னிறமாக வறுத்தெடுக்கச்வும்.
இப்போது உருண்டைகள் இன்னொரு மடங்காக பெரிதாகியிருக்கும்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீர், சர்க்கரையைப் போட்டு காய்ச்சவும்.
கொதி வரும்போது, தீயை மிதமாக வைத்து, உருண்டைகளை அதில் போடவும்.
குங்குமப்பூவைத் தூவவும்.
20 நிமிடங்களில் உருண்டைகள் இன்னொரு மடங்கு பெரிதாகியிருக்கும்.
பாகும் சற்று கெட்டிப்பட்டிருக்கும்.
இதுதான் சரியான பதம்.
இறக்கி ஒரு பாத்திரத்தில் கொட்டவும்.
சற்று ஆறியதும் காய்ச்சி வைத்திருக்கும் கெட்டிப்பாலை[மலாய்] பரவலாக அவற்றின்மேல் ஊற்றவும்.
பிஸ்தா சீவல்களைத் தூவவும்.
சுவையான மலாய் குலோப்ஜாமூன் தயார்!!