Monday 31 July 2017

தேசீய சித்த மருத்துவமனை!!

சமீபத்தில் செவி வழியாக ஒரு மருத்துவ மனை பற்றி, அதன் தரம் பற்றி கேள்விப்பட்டதும் ஆச்சரியப்பட்டு அதைப்பற்றி செய்திகளைப்படித்த போது உண்மையிலேயே இத்தனை நாள் எப்படி இந்த மருத்துவ மனையைப்பற்றி தெரியாமலிருந்தது என்ற ஆச்சரியம் மேலோங்கியது. சென்னை வாசிகளான சினேகிதிகளைக் கேட்டால் நிறைய பேருக்கு இதைப்பற்றித் தெரியவில்லை. நிறைய பேருக்கு பயன்படுமென்பதால் இந்த மருத்துவ மனை பற்றி விரிவாக எழுதுகிறேன்.சென்னை, தாம்பரத்தில் சானிட்டோரியம் பேருந்து நிலையம் அருகில் பச்சைப்பசேலென்ற‌ மரங்களின் நிழலில் பிரமாண்டமாக எழுந்து நிற்கிறது மத்திய அரசால் நடத்தப்படும் தேசீய சித்த மருத்துவமனை. உள்ளே அங்கு அமைக்கப்பட்டிருந்த பெரிய தோட்டத்தில் பல வகை மூலிகைச் செடிகளின் பெயர்களோடு அவற்றின் மருத்துவ குணம் என்ன என்பதையும் குறிப்பிட்டு  ஒவ்வொரு மூலிகைச் செடியிலும் எழுதி ஒட்டப்பட்டிருந்தது.  அந்த வளாகத்தின் உள்ளே அயோத்தி தாச பண்டிதர் பெயரில் மருத்துவமனைக் கட்டிடம் உள்ளது.

தினமும் 2,500-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்கு செல்கின்றனர். உள்நோயாளிகளாக மட்டும் 180 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் பொது மருத்துவம், குணபாடம், சிறப்பு மருத்துவம், குழந்தைகள் மருத்துவம், நோய் நாடல், நஞ்சு நூலும் – மருத்துவ நீதி நூலும் என 6 துறைகளும் மற்றும் அதற்கான 9 புறநோயாளிகள் பிரிவும் (ஓபி) செயல்படுகிறது. காய்ச்சல், தலைவலி, மஞ்சள் காமாலை தொடங்கி வாதம், சர்க்கரை நோய், சிறுநீரக பிரச்சினை, வயிறு-குடல் நோய், தோல் நோய் என அனைத்து விதமான நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இவை தவிர பல் மருத்துவம், கண் மருத்துவம் மற்றும் வாரத்தில் ஒரு நாள் முதியோர் மருத்துவப் பிரிவும் செயல்படுகிறது.

மூளை வளர்ச்சி குறைபாடுள்ள குழந்தைகளுக்கு தனியாக சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மூலம் உள்ளிட்ட நோய்களுக்கு கத்தி இல்லாமல் அறுவை சிகிச்சையும் செய்யப்படுகிறது. அவசர சிகிச்சை மற்றும் தீவிர சிகிச்சைக்கு வருபவர்களுக்கு முதல் கட்ட சிகிச்சை அளிப்பதற்காக தனி சிகிச்சை பிரிவு ஒன்றும் செயல்படுகிறது.

பக்கவாதம், கீழ் வாதம், முடக்கு வாதம் உள்ளிட்ட 80 வகையான வாத நோய்களுக்கு சிகிச்சை அளிக்கிறார்கள். மசாஜ், வர்மம், மருத்துவம், பிசியோதெரப்பி போன்றவைகளால் சிகிச்சை அளிக்கிறார்கள். வாத நோயினால் பாதிக்கப்பட்டவரை ஒரு மண்டலம் (48 நாட்கள்) உள்நோயாளியாக அனுமதித்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.  எச்ஐவி, சர்க்கரை நோய், புற்றுநோய் மேலும் தீவிரமடையாமல் கட்டுக்குள் வைத்துக் கொள்வதற்கான சிகிச்சையும் அளிக்கிறார்கள். டெங்கு மற்றும் சிக்குன்குனியாவால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான நோயாளிகளை சித்த மருத்துவத்தின் மூலம் இங்கே குணப்படுத்தியுள்ளார்கள்.

இங்கு புறநோயாளிகளின் பதிவும் ஆலோசனையும் சரியாக 8 மணிக்கு ஆரம்பிக்கிறது. பதிவுக்கட்டணம் பத்து ரூபாய் மட்டுமே.  பதிவுப்புத்தகத்தில் நம் விவரங்களைப் பதிவு செய்து, நமக்கென்ன நோயால் பிரச்சினையோ அதற்கேற்ற மாதிரி எண்ணைக்குறிப்பிட்டு அங்கே அனுப்புகிறார்கள். அறைக்குள் சென்று பதிவுப்புத்தகத்தைக் காண்பித்ததும் நம்முடைய பிரச்சினையை விசாரித்து அதற்கேற்ற மாதிரி ரத்தம், சிறுநீர், எக்ஸ்ரே போன்ற பரிசோதனைகளுக்கு அனுப்புகிறார்கள். இஸிஜி உள்ளிட்ட அனைத்துப்பரிசோதனைகளும் இங்கு இலவசம்.

பரிசோதனைகள் தேவைப்படாதவர்களுக்கு மாத்திரைகள், எண்ணெய், லேகியம் என எழுதிக்கொடுக்க அங்குள்ள பார்மஸியில் வாங்கிக்கொள்ளலாம்.  எண்ணெய், லேஹியம் வாங்க்கொள்ள பாட்டில்கள், டப்பாக்கள் கையோடு கொண்டு செல்வது நல்லது. மருந்துகளை வாங்கிக்கொண்டு மீண்டும் மருத்துவர்களிடம் செல்ல வேண்டும். மருந்துகளை எப்படி சாப்பிட வேண்டும், இஞ்சி சாற்றில் கலந்து சாப்பிடுவது, வெற்றிலையோடு சாப்பிடுவதா அல்லது தேனுடனா என்பது பற்றியும் தைலம் தேய்க்கும் முறை பற்றியும் விளக்கமாகச் சொல்லுகிறார்கள். மருந்துகள் முற்றிலும் இலவசம். ஆனால் மருந்துகள் ஒரு வாரத்திற்கு மட்டுமே கொடுக்கப்படுகின்றன. வாராவாரம் நோயாளிகள் வர வேண்டும். மருந்துகளினால் ஏற்படும் முன்னேற்றத்தைப்பற்றி கேட்டுத் தெரிந்த் கொண்ட பிறகே அதற்கேற்ப மருந்துகளில் மாற்றம் செய்து கொடுக்கிரார்கள்.
வாரத்தின் அனைத்து நாட்களும் இங்கு விடுமுறையின்றி இயங்குகிறது.

வளாகத்தினுள் இருக்கும் உணவகத்தில் சிற்றுண்டிகள், காப்பி, டீ சகாய விலையில் விற்கப்படுகின்றன. உள் நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவுக்குக் கட்டணமில்லை. அவர்களின் உடல்நிலைக்கேற்ப வாத, பித்த, க பத்திய உணவுகள் சுகாதார முறைப்படி தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்படுகின்றன.

இங்கு தன் தந்தைக்காக சிகிச்சைக்கு சென்று வந்த ஒருவரின் விமர்சனம்:

து முழுவதும் இலவசமாக மக்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனை, சுத்தம் சுகாதாரம் எல்லாமே பெரிய ஆங்கில கார்பொரெட் மருத்துவமனைக்கு நிகராக இருக்கிறது.
மருந்து கொடுக்கும் இடத்தில் பெரும்பாலும், எண்ணெய், கஷாயம் போன்றவை கொடுக்கப்பட்டாலும் ஒரு துளி கூட கீழே நீங்கள் பார்க்க முடியாத அளவிற்கு உடனுக்குடன் சுத்தம் செய்து பராமரிக்கப் படுகிறது.

ஒரு நயா பைசா கூட செக்யூரிட்டி முதல் சுத்தம் செய்பவர் வரை யாரும் கேட்பதில்லை. அமைதியாக கூட்டத்தைக் கட்டுப்படுத்தி, வரிசையை சிறப்பாக ஒழுங்கு படுத்தி, கேட்கும் கேள்விகளுக்கு பொறுமையாகப் பதில் சொல்லி ஆச்சரியப்படுத்துகிறார்கள்.
எனக்கு ஆன மொத்த செலவு, கார் பார்க்கிங் 5/-, பதிவு கட்டணம் 5/- மட்டுமே. ஐந்து நாட்களுக்கான மருந்தே வழங்கப்படுகிறது. செவ்வாய்க் கிழமை மதியம் 3மணிக்குச் சென்றால், மூத்த குடிமக்களுக்கு அதிக நாட்களுக்கு மருந்து வழங்கப்படுகிறது.
நான் சென்ற காலை 8 லிருந்து 11 மணிக்குள்ளாக எப்படியும் ஆயிரம் பேராவது, மருத்துவர்களைப் பார்த்து மருந்து வாங்கிச் சென்றிருப்பார்கள், அந்த அளவுக்கு வேகமாகவும், சிறப்பாகவும் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளை கையாள்கிறார்கள்.

உள்ளே தங்கி சிகிச்சை பெறும் வசதிகளும் உண்டு, ஜெனரல் வார்ட் என்றால் 20/- ஒரு நாளைக்கும், ஏசி ரூம் என்றால் 350/- ஒரு நாளைக்கும் வாங்குவதாக அறிகிறேன். அட்டைக் கடி வைத்தியம் முதல் பல பாரம்பரிய சித்த வைத்திய முறைகள் இலவசமாக மக்களுக்கு அரசாங்கம் இந்த மருத்துவமனை மூலம் அளிக்கிறது. 
மேலும் விவரங்களுக்கு:

http://www.nischennai.org/

Monday 17 July 2017

பாடல்கள் கோடி பெறும்!!

சில சமயங்களில் எப்போதோ படித்த, மறக்க முடியாத சில வரிகள் பளிச்சென்று மனதில் தோன்றும். அவை பாடல் வரிகளாக இருக்கலாம் அல்லது ஒரு திரைப்படத்தில் பேசப்பட்ட வரிகளாக இருக்கலாம் அல்லது ஒரு பாடலில் வந்த வரிகளாகக்கூட இருக்கலாம்.  எங்கு கேட்டோம், எங்கு படித்தோம் என்று சினேகிதிகளுடன் அலசி ஆராய்ந்து கண்டு பிடிப்பதில் ஒரு தனியான சுகம் இருக்கும்.

அப்படித்தான் ஒரு நாள் சினேகிதியுடன் பேசிக்கொண்டிருந்த போது ‘ சுட்ட பழம், சுடாத பழம்’ பற்றிய விவாதம் வந்தது.  அவ்வையார் பாடிய பல பாடல்கள் சாகா வரம் பெற்றவை. அதையெல்லாம் கணினி உதவியுடன் திரும்பப் படித்து ரசித்தோம். அதிலிருந்து மிகவும் ரசித்த இரண்டு பாடல்கள் மட்டும் எழுதுகிறேன்...

முதல் பாடல்:

சோழ மன்னன் ஒருவன் தனது அவைக்களப் புலவர்களை ஒரு நாள் அழைத்து, ‘நாளை பொழுது விடிவதற்குள் நீங்கள் நாலு கோடி பாடல்கள் பாட வேண்டும்’ என்று ஆணையிட்டான்.
ஓர் இரவுக்குள் நாலு கோடி பாடல்களை எப்படிப் பாடுவது என்று அவைக்களப் புலவர்கள் செய்வதறியாது திகைத்துப்போய் அமர்ந்திருந்தார்கள்.  அப்போது அங்கே வந்த ஒளவையார்  புலவர்களின் கவலைக்கான காரணத்தைக் கேட்டு அறிந்தார். உடனே அவர் புலவர்களைப் பார்த்து, ‘இதற்காகவா திகைத்தீர்கள். கவலை வேண்டாம். இப்போதே நாலு கோடி பாடலைப் பாடுகிறேன்; மன்னனிடம் சென்று அதைப் பாடுங்கள்’ என்று கூறிவிட்டு ஒரே ஒரு பாடலை மட்டும் பாடினார்.

இது தான் அந்த நாலு கோடி பாடல்!

மதியாதார் முற்றம் மதித்தொரு கால்சென்று 
மிதியாமை கோடி பெறும்; 
உண்ணீர் உண்ணீர் என்று உபசரியார் தம்மனையில் 
உண்ணாமை கோடி பெறும்; 
கோடி கொடுத்தும் குடிப்பிறந்தார் தம்மோடு 
கூடுதல் கோடி பெறும்; 
கோடானு கோடி கொடுப்பினும் தன்னுடைநாக் 
கோடாமை கோடி பெறும்.  

(ஒளவையார் தனிப் பாடல்:42)

1. நல்ல பண்புகளை மதித்து நடக்காதவரை மதித்து அவரது வீட்டின் முன்பகுதியை மிதிக்காமல் இருப்பது, கோடி பொன்னுக்கு இணையானது ஆகும். 

2. உண்ணுமாறு விரும்பிக் கேட்டுக் கொள்ளாதவரின் வீட்டில் உண்ணாமல் இருப்பது கோடி பொன்னுக்கு இணையானது ஆகும். 

3. கோடி பொன்னைக் கொடுத்தாவது நல்ல குடும்பத்தில் பிறந்தவர்களுடன் சேர்ந்து வாழ்வது கோடி பொன்னுக்கு இணையானது ஆகும். 

4. பலகோடி பொன் கிடைப்பதாக இருந்தாலும் சொன்ன சொல்லிலிருந்து தவறாமல் வாழ்வது கோடி பொன்னுக்கு இணையானது ஆகும். 

இரண்டாவது பாடல்:

காட்டில் அலைந்து திரிந்து களைப்புடன் அமர்ந்திருந்த அவ்வையாரிடம் அங்கே வந்த மாடு மேய்க்கும் சிறுவன் கேட்கிறான்.

உங்களுக்குச் சுட்ட பழங்கள் வேண்டுமா? அல்லது சுடாத பழங்கள் வேண்டுமா?"

ஔவையார் திகைத்து நின்றார். தமிழ் மொழியில் மிகவும் கற்றுத் தேர்ந்த புலவரான அவர் பலவிதமான பழங்களைப் பற்றி அறிந்திருக்கின்றார். ஆனால், சுட்ட பழம், சுடாத பழம் என்று அவர் கேள்விப்பட்டதேயில்லை. ஆனால், பள்ளிக்கூடத்துக்கே போயறியாத இந்த மாடு மேய்க்கும் சிறுவன் புதிதாக சுட்ட பழம், சுடாத பழம் என்று பேசுகின்றானே என்று அவர் ஆச்சரியப்பட்டார்.

பின்னர், சிறிது நேரம் சிந்தித்துவிட்டு, எதுவும் தோன்றாமல், "சரி தம்பி, எனக்குச் சுட்ட பழங்களையே பறித்துப் போடு" என்று கேட்டார்.
சிறுவன் சிரித்தான். பின்னர், அந்த மரத்தின் கிளை ஒன்றைப் பிடித்துப் பலமாகக் குலுக்கினான்.
ஔவையார் தரையில் கிடந்த பழங்களில் நன்கு கனிந்திருந்த பழங்கள் சிலவற்றைக் கையில் எடுத்துக்கொண்டார்.அந்தப் பழங்களில் மணல் ஒட்டியிருந்த மணலை நீக்குவதற்காக வாயால் ஊதினார்.

மரத்தின் கிளையில் அமர்ந்திருந்த சிறுவன் வாய்விட்டுச் சிரித்தான். "என்ன பாட்டி, பழம் சுடுகிறதா?" என்று கேட்டான்.
அந்தக் கேள்வியைச் சற்றும் எதிர்பார்க்காத ஔவையார், திகைத்து நின்றார்.
கனிந்த பழங்களைச் சுட்ட பழம் என்றும், காய்களைச் சுடாத பழம் என்றும் சிறுவன் அறிவுடன் குறிப்பிட்டது அவருக்குப் புரிந்தது. இந்தச் சிறு விஷயம் தெரியாமல், ஒரு எருமை மேய்க்கும் சிறுவனிடம் நாம் தோற்றுப் போனோமே என்று வெட்கம் அடைந்த ஔவையார்,

" கருங்காலிக்கட்டைக்கு நாணாக் கோடாலி
இருங்கதலித்துத் தண்டுக்கு நாணும் பெருங்கானில்
காரெருமை மேய்க்கின்ற காளைக்குநான் தோற்றது
ஈரிரவு துஞ்சாது என்கண்!'

பொருள்:

கருங்காலி மரத்தை வெட்டும் கோடாலி, வெறும் வாழைத்தண்டை வெட்ட முடியாமல் தோற்கும். படிப்பறிவில்லாத எருமை மேய்க்கும் பையனிடம் நான் தோற்று விட்டேன். அவமானம். இரண்டு நாள் உறக்கமற்று என் கண்கள் விழித்திருக்கும்![காணொளியில் சுட்ட பழம், சுடாத பழம்...’]

ஒரு புலவர் தோல்வியை ஒப்புக்கொண்டு பாடுவது எத்தனை அரிதானது. எல்லாம் தெரியுமென்ற அகந்தை கூடாது. ஒருவருக்குத் தெரியாததொன்று இன்னொருத்தருக்குத் தெரியும். அது தான் யாருமே கண்டு பிடிக்க முடியாத அற்புதம்!