Wednesday 25 January 2012

நல‌மோடு வாழ!!

இன்றைக்கு நாட்டில் பரவலாக எல்லோரையும் ஒரு வழி பண்ணிக்கொண்டிருப்பது சர்க்கரை நோய் தான். அதை அனுபவிப்பவர்களுக்குத்தான் இந்த நோய் எத்தனை கடுமையானது என்பது தெரியும். அதைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க மருந்துகள், முறையான உனவு முறைகள், உடற்பயிற்சி, நடைப்பழக்கம் என்று எத்தனை, எத்தனை வழிமுறைகள்! இத்தனை வழிமுறைகளை முறையாக கடைப்பிடித்தாலும்கூட, சில சமயம் சிலருக்கு சர்க்கரையின் அளவு அதிகமாகவே காட்டும். இன்னும் சிலருக்கோ வெறும் வயிற்றில் அதிகம் ஏறி சாப்பிட்டதும் குறையும். திருவள்ளுவரின் ‘ நா காக்க ’ இப்போது நினைவுக்கு வருகிறது. அவர் கூற்றுப்படி, கடுஞ்சொல் கூறாமல்கூட நா காக்க முடியும். ஆனால் சுவையான உணவு வகைகளை விலக்கி நா காப்பது எத்தனை கடினம்!! அது ஒரு தவம் மாதிரி! எல்லோருக்கும் இந்த தவம் கைவரப்பெறுவதில்லை.

இப்படியெல்லாம் தவமிருந்து கூட சர்க்கரை நோய்ப்பாதிப்பிலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. கண் அழுத்த நோயும் சர்க்கரை நோயும் ஒன்று. இரண்டையுமே சரியான அளவில்தான் வைத்துக்கொள்ள முடியுமே தவிர, முழுவதுமாக சரி செய்ய முடியாது. அப்படி சரியான அளவில் வைத்துக்கொள்ள ஒவ்வொருத்தரும் போராட வேண்டியிருக்கிறது.
சமீபத்தில் எங்கள் குடும்பத்திற்கு வேண்டிய இரு நபர்கள் இதற்கான சில வழிமுறைகளைச் சொன்னார்கள். இதனால் கடந்த ஆறு மாதங்களாகவே அவர்கள் சர்க்கரை நார்மலுக்கு திரும்பி விட்டதாகச் சொன்னார்கள். விபரங்களை முழுமையாக அறிந்த போதுதான் இதைப்பதிவாக எழுதி, அதனால் பலரும் பயனடைய வேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன்.


முதலாவது மருத்துவம்:

சட்டீஸ்கர் மாநிலத்திலிருக்கும் துர்க் என்னும் நகரத்திலுள்ள ஜும்மா மசூதியில் இதற்காக ஒரு மருந்து தருகிறார்கள். இங்கு சென்று முதல் நாளே ஒரு நபருக்கு 35 ரூபாய் என்று பணம் கட்டி முன்பதிவு செய்து டோக்கன் பெற்றுக்கொள்ள வேண்டும். இந்தத் தொகை ஒட்டகப்பாலுக்கு என்று கூறப்படுகிறது. மருந்து காலை 7.30 மணியிலிருந்து மதியம் 11 மணி வரை தருகிறார்கள்.
மறுநாள் காலை எழுந்து காலைக்கடன்களை முடித்து தண்ணீர்கூடக் குடிக்காமல் ஜும்மா மசூதி 7 மணியளவில் செல்ல வேண்டும். முன்பதிவு நம்பர்படி சுமார் 50 நபரக்ளை அழைத்து அமரச் செய்து, உள்ளங்கையில் சூரண மருந்தைக்கொட்டி அதனை ஒரு பெரிய டம்ளரில் கொட்டி அதில் ஒட்டகப்பாலை ஊற்றி சூரண மருந்து தீரும்வரை குடிக்கச் செய்கிறார்கள். குடித்த பிறகு ஒரு வாய்த் தண்ணீர் மட்டும் குடிக்க வைத்து உட்கார வைக்கிறார்கள்.
இந்த மருந்துக்கு கட்டணமாக ஒவ்வொருத்தரிடமிருந்தும் 120 ரூபாய் பெற்றுக்கொள்கிறார்கள்.

அவர்கள் கூறும் அறிவுரைகள்:

மருந்து சாப்பிட்டதிலிருந்து 4 மணி நேரம் வரை தண்ணீர், உணவு, புகை பிடிப்பது என்று எதையும் எடுத்துக்கொள்ளக்கூடாது.
2. 4 மணி நேரம் கழிந்த பின் நீங்கள் ஒதுக்கி வைத்திருக்கும் இனிப்பு, உனவு எல்லாவற்றையும் வயிறு நிறைய சாப்பிட வேண்டும்.
3. மருந்து குடித்த பின் ஊறும் உமிழ்நீரைத் துப்பக்கூடாது.
4. வீட்டுக்குச் சென்ற பின் சர்க்கரை அளவு அதிகமாகத் தெரிந்தால் இரண்டு நாட்களுக்கு மட்டும் அதுவரை பயன்படுத்தி வந்த மருந்துகளை சாப்பிட்டு அதன் பின் நிறுத்தி விட வேண்டும்.30 நாட்களுக்குப்பிறகு இரத்தப்பரிசோதனை செய்து பார்த்தால் சர்க்கரையின் அளவு நிச்சயமாகக் குறைந்து நார்மல் அளவிற்கு வந்திருக்கும்.
5. இன்சுலின் எடுப்பவர்கள் மட்டும் இந்த மருந்தை இரண்டு நாட்களுக்குத் தொடர்ந்து சாப்பிட வேண்டும்.

குறிப்பு:

சென்னை செண்ட்ரலிலிருந்து துர்க் நகரத்திற்கு கோர்பா எக்ஸ்பிரஸ் வாரம் இரு முறையும் விலாஸ்பூர் எக்ஸ்பிரஸ் வாரம் ஒரு முறையும் செல்கிறது.
இது சம்பந்தமான தகவல்களுக்கு:
Baba’s address: SHEIK ISMAIL, Jamia masjid Street, Jawahar Chouk, DURG
Call: 09826118991, 09424107655 between 6.00pm to 7.30 pm.


இரண்டாவது மருத்துவம்:


பிரபல கம்பெனியான AMWAY தயாரிக்கும் NUTRILITE FIBER சர்க்கரையின் அதிக அளவைக் குறைத்து நார்மல் நிலைக்கு கிட்டத்தட்ட இரண்டே மாதங்களில் கொண்டு வருகிறது. இதைத் தொடர்ந்து 6 மாதங்களுக்கு எடுத்து வந்தால் அப்புறம் சர்க்கரையின் அளவு உயராமல் நார்மல் நிலையிலேயே இருப்பதாக எங்கள் மேலாளர் சொன்னார். அவரின் வேலையில் நடைப்பழக்கத்திற்கோ, உடற்பயிற்சியோ தொடர்ந்து செய்ய முடியாத நிலையில் இது ஒரு வரப்பிரசாதமாக இருப்பதாகச் சொன்னார். இதில் உள்ள ஒரே குறைபாடு, இது விலை அதிகமானது என்பது தான். எல்லோராலும் தொடர்ந்து வாங்கி உபயோகிக்க முடியாது. ஒரு டப்பா விலை ரூ 900 க்கு மேலாக உள்ளது. இதை காலை, இரவு உணவிற்குப்பிறகு அதிலுள்ள ஒரு ஸ்பூனால் ஒன்று எடுத்து 200 மில்லி தண்ணீரில் கலந்து குடிக்க வேண்டும்.
சர்க்கரை நோயால் மிகுந்த அவதியுறுபவர்களுக்கு இந்த இரண்டு குறிப்புகளும் பலனளித்தால் மனதிற்கு நிச்சயம் நிறைவாயிருக்கும். இந்தப்பதிவின் நோக்கம் நிறைவேறி விடும்.

Tuesday 17 January 2012

குழந்தையென்னும் பொக்கிஷம்!!

சமீப காலமாக, குழந்தையின்மை என்ற பிரச்சினை அதிகமாக இருக்கிறது. அது தொடர்பான பிரச்சினைகள், ஏசல்கள், கண்ணீர்கள், சிகிச்சைகள் என்று ஒவ்வொருத்தரின் கதைகளை கேட்கும்போது மலைப்பாக இருக்கிறது. எல்லோருக்கும் தாய்மை என்ற வரம் உடனேயே கிடைத்து விடுவதில்லை. அந்தக் காலத்தில் கதைகளில் ஏழு கடல் தாண்டி, ஏழு மலைகள் தாண்டி, பல இடர்கள் தாங்கி கதாநாயகன் பொக்கிஷத்தைக் கைப்பற்றுவது போல முடிவு வரும். அது போல ஒரு குழந்தை பெற ஒவ்வொரு பெண்ணும் பல சோதனைகளை இந்த காலத்தில் தாங்க வேண்டியிருக்கிறது.





அப்படி அற்புதமாய்க் கிடைத்த அந்தக் குழந்தையென்னும் பொக்கிஷம் இன்றைக்குக் கண்ணும் கருத்துமாய் பாதுகாக்கப்படுகிறதா? மலர் போன்ற குழந்தையின் மனசுக்கு பாதுகாப்பும் அன்பும் புரிகிற மாதிரி நம்பிக்கை ஊட்டப்படுகிறதா? ? அது தான் இந்தப் பதிவின் கேள்வி!!

நான் வசிக்கும் இந்த ஐக்கிய அரபுக் குடியரசில் பலதரப்பட்டவர்கள், பல நாட்டவர்கள் எல்லோருமே வசிக்கிறார்கள். இங்கே பெரும்பாலான கணவர்கள் அலுவலகத்தில் வேலை செய்ய, பொருளாதாரச் சிக்கல்களை முன்னிட்டோ, அல்லது தேவைகளை முன்னிட்டோ அவர்களின் மனைவிகள் வெளியில் வேலை செய்கிறார்கள். நம் ஊரைப்போலத்தான் இது என்றாலும் நம் ஊரைப்போல தனியே இருக்கும் குழந்தைகளை கவனித்துக்கொள்ள உற்ற உறவுகள் அருகிலிருப்பதில்லை. ஊரிலிருந்து பெற்றவர்களையோ, உற்றவர்களையோ வரவழைத்துக்கொள்ள எல்லோருக்கும் பொருளாதார வசதிகள் இங்கே இருப்பதில்லை. இந்த சூழ்நிலையில் முக்கியமாக பாதிக்கப்படுவது குழந்தைகள் தான்.  தனிமை பல மன மாறுதல்களை அவர்களிடம் ஏற்படுத்துகிறது. பல விபரீத எண்ணங்களையும் ஏற்படுத்துகிறது. வேலை செய்து வந்த அலுப்பில் கணவனும் மனைவியும் சோர்ந்து படுத்து விட, அப்போதும் குழந்தைக்குத் துணை தனிமை தான் அல்லது தொலைகாட்சி தான். தொலைக்காட்சியின் பாதிப்பு அவர்களை பல விதங்களில் மாற்றி ஆழ்மனத்தில் சிக்கல்களை உண்டாக்குகிறது.



சமீபத்தில் இங்கு வசிக்கும் என் சினேகிதியின் பெண் சொன்ன தகவல் மனதை அப்படியே உறைய வைத்தது. அவரின் மகனோடு படிக்கும் 11 வயது மாணவன் அந்தப் பையன். தாயார் பள்ளியில் ஆசிரியையாக பணி புரிவதால் தினமும் பள்ளியிலிருந்து மகன் வந்து 45 நிமிடங்கள் கழித்துத்தான் அம்மா தன் பள்ளியிலிருந்து வந்து சேருவார். அன்றைக்கும் அதே போல சீக்கிரமே வீட்டுக்கு வந்து விட்ட பையன் தன் கராத்தே பெல்டை எடுத்து அதன் ஒரு புறத்தை வாசல் கதவின் உள்புறத்திலுள்ள கொக்கியில் மாட்டி [ பொதுவாய் எல்லோரும் ஏதேனும் பைகளை மாட்ட உள் கதவில் கொக்கி பதித்திருப்பதுண்டு.] மறுபுறத்து கொக்கியை தன் கழுத்தில் மாட்டிக் கொண்டு ஒரு நாற்காலியில் ஏறி நின்று கொண்டு தான் அடிக்கடி தொலைக்காட்சியில் பார்த்து ரசிக்கும் ‘சூப்பர்மேன்’ போல தாவிக் குதிக்க, கழுத்தில் மாட்டியிருந்த கராத்தே பெல்ட்டின் கூர்மையான நுனி அவன் கழுத்தைத் தாக்கி, முக்கால் மணி நேரம் கழித்து அவனின் தாயாரும் மற்றவர்களும் கதவை உடைத்துக் கொண்டு வந்து பார்த்த போது அவன் நினைவிழந்து கிடந்தான். மருத்துவ மனைக்குச் செல்லும் வழியில் அவன் உயிர் பிரிந்து விட்டது. அவன் தாயாரின் இரத்தக்கண்ணீருக்கு பதிலேது?

இன்னொன்றும் அவர் நேரே பார்த்தது. இங்கேயெல்லாம் பிளாட்பாரங்களில் அங்கங்கே வண்டிகளையும் பெராம்புலேட்டர்களையும் தள்ளிச் செல்வதற்காக சற்று சரிவான வழிகள் உண்டு. சாலையில் இறங்க இது போல வசதி செய்து வைத்திருப்பார்கள். அந்த மாதிரி ஒரு ஸ்லோப் அருகே ஒரு பெராம்புலேட்டரில் ஒரு பச்சிளங்குழந்தை படுத்திருக்க, அதைச் சுற்றிலும் நிறைய பைகள் மாட்டியிருந்தனவாம். யாராவது போகிற போக்கில் இலேசாக இடித்தால் போதும் அந்த வண்டி கீழே சரிவில் இறங்கி சாலைக்கு வந்து விடும். பல கார்கள் வேகமாகப் போகும் அந்த சாலையில் அந்த வண்டி இறங்கினால்.. .. ..நினைத்துப்பார்க்கவே பயமாக இருக்கிறது. அந்தக் குழந்தையின் பெற்றோர் எங்கே என்று என் சினேகிதியின் பெண் தேடிப்பார்க்கையில் அவர்கள் சிறிது தூரத்தில் நிற்கும் டாக்ஸி ஒட்டுனரிடம் பேரம் பேசிக்கொண்டிருக்கிறார்கள்!! இந்தக் குழந்தையைப்பற்றிய கவலையோ பயமோ இல்லாமல்!! எத்தனை அஜாக்கிரதை! என் சினேகிதியின் பெண் “ எப்படி இருக்கிறார்கள் பாருங்கள்! குழந்தையென்பது வரமல்லவா? எல்லோருக்குமா நினைத்தவுடன் குழந்தை பிறக்கிறது? ஒவ்வொருத்தர் எத்தனை சோதனைகளை சந்தித்து குழந்தையைப் பெறுகிறார்கள்?  இப்படி அலட்சியமாக விடுவதற்கா? “ என்று குமுறியது இன்னும் ஒலித்துக் கொண்டிருக்கிறது.



என் உறவினர் சொன்ன மற்றுமொரு தகவல். குழந்தை தூங்கி விட்டதே என்று அப்படியே குழந்தையை காரில் படுக்க வைத்து ஏஸியையும் ஆன் பண்ணி விட்டு, பெற்றோர் சூப்பர்மார்க்கெட் உள்ளே ஷாப்பிங் செய்யச் சென்று விட்டார்கள். கார் பூட்டாது இருப்பதை கவனித்த ஒருவன் குழந்தையை கவனிக்காமல் வேகமாக வெளியே ஓட்டிச் சென்றிருக்கிறான். குழந்தை விழித்துக் கொண்டு சப்தமிட்டதும் அப்படியே காரை விட்டு விட்டு ஓடி விட, அப்புறம் போலீஸ் வந்து, பெற்றோருக்கு தகவல் சொல்லி அவர்கள் வருவதற்குள் அந்தக் குழந்தை எந்த அளவு படாத பாடு பட்டிருக்கும்?

அதேபோல இங்கே வேற்று நாட்டவர்கள் இருந்த ஒரு பிளாட்டில் நெஞ்சைக் கலங்க வைக்கும் ஒரு நிகழ்வு! குழந்தை திறந்திருந்த ஜன்னல் வழியே ஷுவைத் தூக்கி எறிந்திருக்கிறது. அந்த குழந்தையின் மூளையில்லாத தாயார், ஷுவை எடுப்பதற்காக, அப்படியே குழந்தையை விட்டு விட்டு 16ஆவது மாடியிலிருந்து இறங்கி ஷுவை எடுத்திருக்கிறார். எடுத்துக் கொண்டு நிமிரும்போது, திறந்திருந்த ஜன்னல் வழியே அந்த குழந்தை 16 ஆவது மாடியிலிருந்து கீழே விழுந்து ஒரு விநாடியில் அவர் கண்ணெதிரே இறந்து போனது.



குழந்தையென்னும் அற்புதமான பொக்கிஷத்தை எத்தனை பேர் தன் உயிருக்கும் மேலாக பாதுகாக்கிறார்கள்? எத்தனை பேர் கண்ணும் கருத்துமாய் அதன் ஒவ்வொரு பருவத்திலும் கவனித்து, நற்பண்புகளை சொல்லிக்கொடுத்து ஒரு முழுமையான மனிதனாக உருவாக்குகிறார்கள்? மனதை மிகவும் வேதனையுடன் யோசிக்க வைக்கிறது இந்த நிகழ்வுகள்!!

படங்கள் உதவி: கூகிள்

Tuesday 10 January 2012

பொங்கலோ பொங்கல்!!!

வழக்கம்போல பொங்கல் திருநாள் 15-1-2012 அன்று வரவிருக்கிறது. பொங்கல் என்றாலே கிராமங்களில் பல விதங்களில் சிறப்பாகக் கொண்டாடும் பழக்கங்களும் கொண்டாட்டங்களும்தான் என்றுமே நினைவில் எழும்.




தமிழ்நாட்டில் பல வித சமுதாயங்கள், சமூகத்தினர் பொங்கலை ஒவ்வொரு விதமாக கொண்டாடுகிறார்கள். அனைத்துமே சிறப்பான கொண்டாட்டங்கள்தான்!

போகிப்பொங்கல் அன்று பெரும்பாலும் பழைய துணிமணிகளைக் கொளுத்திப்போடுவதும் வீடுகளை சுத்தம் செய்து, காரை வீடுகளுக்கு சுண்ணாம்பு அடித்து மெருகேற்றுவதும் தான் நடக்கின்றது. அசுத்தங்களையும் குப்பைகளையும் ‘ போக்கி’ என்பதுவே காலப்போக்கில் ‘ போகி ’ என்று பெயர் பெற்றதாகக் கூறப்படுகிறது. போகி என்றால் இந்திரனுக்குப் பெயர் என்றும் கூறப்படுகிறது. பழங்காலத்தில் இந்திர விழா நடைபெற்ற போது பழைய குப்பைகளளக் கழித்து, வீட்டுக்கு வர்ணம் தீட்டி மெருகு ஏற்றினர் என்று சொல்லப்படுகிறது. கிராமங்கள் சிலவற்றில் இந்த நாள் ‘ காப்பு கட்டும்’ நாளாக கொண்டாடப்படுகிறது. மாவிலை, வேப்பிலை, நவதான்யங்கள் இவற்றால் காப்பு கட்டி, துணிகளில் முடிந்து தோரணம் போல வீட்டிலும் கோவிலிலும் கட்டி வைப்பது தான் ' காப்பு கட்டுதல்' என்று பெயர். இதனால் கெட்டவைகள் நெருங்காது என்பது ஐதீகம்.

பொங்கல் அன்று பொங்கல் பொங்குவதும்கூட பல வீடுகளிலும் பல ஊர்களிலும் மாவட்டங்களிலும் வேறுபடுகின்றன. சிலர் விடியற்காலையே, சூரியோதயம் வரும் நேரம் பொங்கலைப் பொங்குகிறார்கள். சிலர் அந்தி சாயும் நேரம் பொங்கல் பொங்குகிறார்கள். சிலர் நல்ல நேரம் பார்த்து, பெரும்பாலும் உச்சியில் கதிரவனின் கிரணங்கள் மின்னும்போது பொங்கல் பொங்குகிறார்கள்.



கிராமங்களில் மண் அடுப்பில் பொங்கல் பொங்குவது தான் தனிச்சிறப்பு. அதற்கான அடுப்பு தயாரிக்கும் பணி முதல் நாளே நடக்கும். செங்கற்களாலும் களி மண்ணாலும் அடுப்பை தயாரித்து, மெழுகி, அதன்மீது கோலம் போட்டு அழகாக்கி விடுவார்கள். சிலர் வீட்டு முகப்பில் இரண்டு பொங்கல் பானைகள் வைத்து சமைக்கும் அளவிற்கு மண்ணைத் தோண்டி, மேடை கட்டி பானைகள் பதிய கொண்டையும் வைத்து களிமண்ணால் பூசி விடுவார்கள்.

பொங்கலுக்கு ஏற்றது கிராமங்களில் தயாராகும் புதிய மண் பானைகள் தான். கழுவி, அதற்கு வெளியே கோலமிட்டு, இஞ்சிக் கொத்துக்கள், மஞ்சள் கொத்துக்கள் வைத்துக் கட்டி, பாலும் தண்ணீருமாய் ஊற்றி அது பொங்கி வந்ததும் ‘பொங்கலோ பொங்கல்’ என்று கூவி, புத்தரிசி கொட்டி புது வெல்லமும் புத்துருக்கு நெய்யும் சேர்த்து பொங்கல் செய்வார்கள். வெண் பொங்கல் பச்சரி சேர்த்து தேங்காய்த்துருவலும் உப்பும் சேர்த்து சமைப்பார்கள். ஏழெட்டு வகைகள் காய்கறிகள் சேர்த்து குழம்பு வைப்பார்கள். சிலர் இதைக் குழம்பாக செய்யாமல் பொரியலாக செய்து பக்க துணைக்கு சாம்பாரும் செய்வார்கள். சில சமூகத்தினர், அவர்கள் தோட்டத்தில் விளைந்த காய்கறிகள் மட்டும்தான் சேர்க்க வேண்டும் என்பது மரபு என்பார்கள்.

அடுத்த நாள் கன்னிப்பொங்கல். திருமணமாகாத பெண்கள் பொங்கல் பொங்குவதால் இது கன்னிப்பொங்கல் என்றும் உறவினர்கள் ஒருத்தருக்கொருத்தர் கண்டு களிப்பது என்பதால் காணும் பொங்கல் என்று பெயர் பெற்றதாகவும் சிறு பிள்ளைகள் கூட்டாஞ்சோறு ஆக்கி கொண்டாடும் நாள் என்பதால் சிறு வீட்டுப்பொங்கல் என்றும் அழைக்கப்படுகிறது. பல வகைக் கட்டு சாதங்களை மாலையில் செய்து எடுத்துக்கொண்டு பெண்கள் எல்லோரும் ஆற்றங்கரைக்குச் செல்வார்கள். கோலாட்டம், கும்மி அடிப்பது என்று விளையாடி விட்டு சாத வகைகளைச் சாப்பிட்டு வருவார்கள். இது ‘கணுப்பிடி’ என்றும் கூட அழைக்கப்படுகிறது. கோவை பக்கத்தில் ‘பூப்பறிக்கும் திருவிழா’ என்பது இந்த காணும் பொங்கலன்று தான் நடைபெறுகிறது. மார்கழி மாதம் கோலங்களில் வைக்கும் சாணத்தை [ இதை சாணிப்பிள்ளையார் என்று கூறுவார்களாம்] அடுத்த நாள் வெய்யிலில் காய வைத்து, இது மாதிரி மாதம் முழுவதும் சேர்த்து வைத்திருக்கும் ‘சாணி பிள்ளையார்களை, எடுத்துச் சென்று ஆற்றில் கரைத்து விட்டு, கோவிலில் பொங்கல் படையல் போட்டு கொண்டாடுகிறார்கள். இன்னொரு சமூகத்தில் ‘கணுப்பிடி’ சகோதர, சகோதரிகளுக்காக கொண்டாடப்படுகிறது. முதல் நாளே, சிறிது சாதத்தில் மஞ்சள் கலந்து மஞ்சள் சாதம், அவற்றில் சுண்ணாம்பு கலந்து சிகப்பு சாதம், வெள்ளை சாதம், சர்க்கரைப் பொங்கல் என்று ஒவ்வொன்றிலும் உருண்டை பிடித்து வெளியிலிருக்கும் துளசி மாடத்திற்கருகே இஞ்சி இலைகள், மஞ்சள் இலைகள் பரப்பி அவற்றில் வைத்து, கரும்பு, பழங்கள் வைத்து பூஜை செய்து, வீட்டில் பெரியவர்கள் மற்றவர்களுக்கு ஆசி கூறி, மஞ்சளும் குங்குமமும் தந்து வீட்டினுள்ளே அனுப்புகிறார்கள். சில ஊர்களில் துளசி மாடத்திற்குப்பதிலாக ஆற்றங்கரைகளிலும் குளக்கரைகளிலும் இந்த ‘ கணுப்பிடி’ நடக்கும்.

நமது தமிழர்களின் சிறப்பு மிக்க இந்த பொங்கல் பண்டிகை இப்படி எத்தனையோ சிறப்புகளுடன் ஆனந்தத்துடன் தமிழகமெங்கும் கொண்டாடப்படுகிறது. சமுதாய மாறுதல்கள், கலாச்சார மாறுதல்கள் எத்தனையோ ஏற்பட்டுக்கொண்டேயிருந்தாலும் இந்த மாதிரியான நம் பண்பாட்டை பிரதிபலிக்கும் கலாச்சார பழக்க வழக்கங்களுக்கும் அவற்றின் சிறப்புக்களுக்கும் என்றுமே அழிவில்லை!!



பொங்கும் பால் போல் வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அனைத்துச் செல்வங்களும் அனைவருக்கும் நிறைந்து பொங்கி வழிய அன்பின் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!!

படங்கள் உதவி: கூகிள்

Wednesday 4 January 2012

சமையலறை மருத்துவம்!!

எந்த ஒரு சிறு உடல் நலக் கோளாறையும் நம் சமையலறையில் இருக்கும் வெந்தயம், மிளகு, கிராம்பு, ஏலக்காய், சீரகம், சோம்பு முதலிய பொருள்களளக் கொண்டும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் சித்தரத்தை, திப்பிலி, வசம்பு, சுக்கு, அதிமதுரம், போன்ற மருந்துப்பொருள்களைக் கொண்டு சரியாக்கி விட முடியும். இதனால் நாம் டாக்டரிடம்
செல்ல வேண்டிய அவசியத்தையும் அதனால் ஏற்படும் செலவுகளையும் தவிர்க்க முடியும். சின்ன சின்னப் பிரச்சினைகளுக்கு டாக்டரிடம் ஓடுவதைக் குறைத்து நமக்கு நாமே கை வைத்தியம் செய்து கொள்ள சில குறிப்புக்கள் இங்கே!!




சீரகம்:

சீரகத்தைப் பொன்வறுவலாக வறுத்து தூள் செய்து கொதிநீரில் இட்டு காய்ச்சிக் குடித்தால் உண்ட உணவை சீரணமாக்கி பசியைத் தூண்டுவதுடன் உணவுப்பாதையையும் சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது. கேரளத்து மக்கள் எல்லோரது வீட்டிலும் இந்த சீரக வெள்ளம் இருக்கும்.


தொண்டைக்கட்டிற்கு:

அதிமதுரத்தை நாட்டு மருந்து கடையில் வாங்கி இடித்து சலிக்கவும். ஒரு வேலைக்கு அரை ஸ்பூன் எடுத்து தேன் கலந்து குழைத்து சாப்பிட்டு வந்தால் தொண்டைக்கட்டு சரியாகும்.
அஜீரணம்:


அரை ஸ்பூன் இஞ்சி சாறு, அரை ஸ்பூன் எலுமிச்சை சாறு, அரை ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டால் அஜீரனக் கோளாறுகள் மறையும்.

கால் ஆணிக்கு:


மருதாணி இலைகள், சிறிது வசம்பு, சிறிய மஞ்சள் துண்டு மூன்றையும் நன்கு அரைத்து ஒரு வெற்றிலையில் வைத்து கால் ஆணிடில் வைத்து ஒரு துணியால் கட்டி வந்தால் ஒரு வாரத்தில் குணமாகி விடும்.




தேமல் மறைய:


புடலங்காயை 6 அங்குலத்திற்கு வெட்டி, குடலை நீக்கி, சீயக்காயை அரைத்து அதனுள்ளே வைத்து, வெய்யிலில் ஒரு நாள் காய வைக்கவும். மறு நாள் அதை அரைத்து தேமல் உள்ள இடங்களில் தடவி இ மணி நேரம் ஊறவைத்து வெந்நீரில் குளிக்கவும். தொடர்ந்து இது போல செய்து வந்தால் சில தினங்களில் தேமல் மறைந்து விடும்.


தலைவலி:

ஒரு ஸ்பூன் கிராம்பையும் ஒரு சிட்டிகை கல் உப்பையும் அரைத்து பற்று போட்டால் தலைவலி சரியாகும்.

விக்கலுக்கு:


சீனியை வாயில் போட்டு மெதுவாக உறிஞ்சவும். விக்கல் நின்று விடும். 2 நிமிடம் கழித்து மறுபடியும் இது போல செய்யலாம். குழந்தைகளின் விக்கலுக்கு விரலை நீரில் நனைத்து சீனியில் தொட்டு வாயில் வைக்கவும்.


மலச்சிக்கல்:


வெங்காயத்தையும் முள்ளங்கியையும் அடிக்கடி சமையல் சேர்த்துக்கொள்ளவும். அதிமதுரம், ரோஜா மொக்கு, சோம்பு சம பங்கு எடுத்து பவுடர் செய்து ஒரு ஸ்பூன் எடுத்து தேனில் குழைத்து சாப்பிடவும்.



படங்கள் உதவி: கூகிள்