Sunday 31 December 2017

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! !!!

அன்பு சகோதரர்கள், சகோதரிகள்   அனைவருக்கும் அன்பிற்கினிய            புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!  
வரவிருக்கும் 2018, அனைவருக்கும் அனைத்து      வளங்களையும் மகிழ்ச்சியையும் அள்ளித்தரட்டும்!
புத்தாண்டில் சிரிக்கவும் சிந்திக்கவும் இரு வாட்ஸ் அப் செய்திகள்! 

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


Johny johny..*
                    *"Yes papa!*
  *New GST..*
           *"      More Papa..!* 
*Purchase Price..*
                 *" High Papa..!*
*Petrol Price..*
         *""       Rocket Papa!*
*Subsidies are...*
                 *" Nil Papa..!*
*Monthly income..*
                      *Low Papa..*
*Family outing..*
                     *Fear Papa..*
*Lot of tension..*
                     * Yes papa!*
*Too much work..*
                      *Yes papa!*
*Bp-sugar..*
                     *High papa!*
*Yearly bonus..*
                    *Joke papa!*
*Pension Income..*
                      *No papa!*
*Total Life*

                *Ha Ha Ha*.    

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

கஷ்டம், கஷ்டம், கஷ்டத்துக்கு மேல் கஷ்டம், தாங்க முடியலே… 

எதுக்குத் தான்பா இந்த கஷ்டம்என்கிற கேள்வி மனதில் இல்லாதவர்கள் இல்லை. 

இந்தப் பதிவு அதற்கு விடையளிக்கக் கூடும். சமீபத்தில்  படித்த ஒரு அற்புதமான கதையை இங்கு உங்களிடம் பகிர்கிறோம்.

 அனைவருக்கும் தேவையான ஒரு நல்ல பாடம்

பாலுக்கு ஒரு பெரிய வருத்தம். 

பசுவின் வயிற்றில் நான் இருந்தேன். 

என்னை ஒருத்தி கறந்து பாத்திரத்தில் ஊற்றினாள். 

அடுப்பைப் பற்றவைத்து,அந்தப் பாத்திரத்தை அடுப்பில் வைத்து, சூடாக்கினாள். 

எனக்கு சூடு தாங்கவில்லை. துடித்துப் போனேன். 

பசுவின் வயிற்றில் பத்திரமாக இருந்த எனக்கு இப்படி ஏன் ஒரு சோதனை?”  என்று என்னை நானே நொந்து கொண்டேன். பொங்கிய நிலையில் என்னை அடுப்பிலிருந்து இறக்கிவைத்தாள். 

நேரமாக, நேரமாக நான் ஆறியதும், புளித்த மோரைக் கொண்டு வந்து என்னோடு சேர்த்தாள். இது என்னடா புது தண்டனை?” என்று வருத்தப்பட்டேன். 

அதன் பிறகு யாரும் என்னைப் பற்றிக் 
கவலைப்படவில்லை. 

திரவமாக இருந்த நான் திடமாக மாறிப்போனேன். எனக்குத் தயிர் என்று புதிதாக ஒரு பெயரை வைத்தார்கள்.

அத்துடன் நிறுத்தினார்களா? என்னை ஒரு பானையில் ஊற்றி
மத்து கொண்டு கடைய ஆரம்பித்தார்கள். 

நான் மறுபடி மோர் என்ற திரவமானேன்.

என்னுள்ளிருந்தே ஒரு திடப்பொருளை வரவழைத்து
அதற்கு வெண்ணெய் என்று பெயர் வைத்தார்கள். 
பட்டர்என்ற பெயரைக் கேட்டதும், அப்பாடா! இனியாவது என் வாழ்க்கை பெட்டர்ஆகுமா?” என்று ஏங்கினேன்.

அத்துடன் தீர்ந்ததா என் கஷ்டம்

அந்த வெண்ணெயை, மறுபடி அடுப்பில் வைத்து உருக்கினார்கள். 
எனக்கு நெய் என்று இன்னொரு புதுப் பெயரை வைத்தார்கள்.
 உருக்கிய நெய்யை ஒரு ஜாடியில் ஊற்றி
அந்த வீட்டில் ஜன்னலுக்குப் பக்கத்தில் வைத்தார்கள்.

பாலாக இருந்த நான், பட்ட கஷ்டங்களையும், இப்போதுள்ள நிலைமையையும் நினைத்தபடியே இருந்த நேரத்தில்ஜன்னலுக்கு வெளியில் இரண்டு பெண்கள் ஏதோ பேசிக்கொண்டே செல்வதை நான் கவனித்தேன். 
ஒருத்தி உங்க ஊர்ல பால் என்ன விலை?” என்று கேட்டாள். 

அதற்கு அடுத்தவள், அரை லிட்டர் 20 ரூபாஎன்றாள். 

உடனே முதல் பெண்மணி, ஆனா இந்த நெய் விற்கிற விலையைப் பார்த்தியா

அரை லிட்டர் கேட்டால் கடைக்காரன் 250 ரூபா விலை சொல்றான்என்றாள்.

ஜன்னல் பக்கத்திலே, ஜாடிக்குள்ளே இருந்த நான் அவர்கள் பேசிக்கொண்டதைக் கேட்டு ஆச்சர்யப்பட்டேன். 

பாலாக இருந்தபோது என் மதிப்பு வெறும் 20 ரூபாதான்

ஆனால், பல கஷ்டங்களை அனுபவித்து, நெய்யான பிறகு, என் மதிப்பு 250 ரூபாயாகக் கூடிவிட்டதே! 

இதை நினைக்கிறபோது
நான் பட்ட கஷ்டங்கள் எல்லாம் எனக்கு ஒரு பொருட்டாகவே தெரியவில்லை!என்று உணர்ந்நதது அந்த நெய்.

இந்தக் கதை மூலம் நமக்குக் கிடைக்கிற பாடம் என்ன?

நாம் வாழ்க்கையில் சந்திக்கும் சவால்களும், கஷ்டங்களும்தான் நம்முடைய வாழ்க்கையின் தரத்தை, மதிப்பை உயர்த்துகிற அம்சங்கள்

Thursday 28 December 2017

அசத்தும் முத்து!!!

சில மாதங்களுக்கு முன் ஒரு கனவுப்பள்ளியைப்பற்றி படிக்க நேர்ந்தது. படிக்கப்படிக்க மனம் பிரமித்துப்போனது. இது போன்ற பள்ளிகள் நம் தமிழ்நாடெங்கும் கிளைகள் பரப்பினால் எப்படியிருக்கும் என்ற கற்பனையே சுகமாக இருக்கிறது. அந்த விவரங்களைத்தான் இங்கே பகிர்கிறேன். படித்துப்பாருங்கள்!

சரங் பள்ளி

கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் ஒரு பகுதியாக உள்ள அட்டப்பாடி மலைப்பகுதியில் 800 மீட்டர் உயரத்தில் இயற்கை மற்றும் வாழ்வியல் கல்வியை அளிக்கிறது சரங் பள்ளி. இந்தப்பள்ளியின் நிறுவனர்களான கோபாலகிருஷ்ணனும் விஜயலக்ஷ்மியும் வருமானம் தரும் அரசு ஆசிரியர்கள் வேலையை விட்டு விட்டு ஒரு புதிய தலைமுறையை உருவாக்குவதற்காக இந்தப்பள்ளியைத் தொடங்கினார்கள்.
கடந்த 50 ஆண்டு கால கல்வி வளர்ச்சியில் நகர்மயமாதல், எந்திர மயமாதல் ஆகியவற்றால் நாம் இயற்கையை அழித்து தூள் தூளாக்கி விட்டோம். அவற்றை மீட்டெடுத்து இயற்கையையும் அதன் ஆற்றலையும் பற்றிய நிதர்சனத்தை இன்றைய இளைய தலைமுறை குழந்தைகளுக்கு கொண்டு செல்வதே சரங் பள்ளியின் நோக்கம்.

சிந்திக்கும் ஆற்றலில் மற்ற பள்ளிக்குழந்தைகளை விட இந்தப்பள்ளிக் குழந்தைகள் ஒரு படி மேல் உள்ளனர் என்பது தான் சுவாரசியமான விஷயம். முதலில் இந்தப்பள்ளி உருவான கதையே அசத்தும் விஷயமாக இருக்கிறது.

அட்டப்பாடியில் எவ்வளவு மழை பெய்தாலும் அத்தனையும் கடலுக்குள் சென்று வீணாகி விடும். காரணம் காடுகள் அழிக்கப்பட்டது தான். எனவே வனத்துறை, அரசால் தண்ணீர் இல்லாத, விவசாயத்துக்கு லாயக்கில்லாத இடம் என்று கை விடப்பட்ட காட்டு நிலத்தில் 12 ஏக்கர் இடத்தை இவர்கள் வாங்கினர். நிலத்தை சமனப்படுத்தி மக்கிப்போன மரங்களை குறைந்த மண் உள்ள இடத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி மக்கச்செய்தார்கள். வெறும் கட்டாந்தரையாக இருந்த இடத்தில் மண் வளம் சேரத்தொடங்கியது. இதற்காக சிறுவாணியிலிருந்து தண்ணீர் கொண்டு வந்து சில வருடங்கள் கஷ்டப்பட்டிருக்கிறார்கள்.
இப்படியே தூர்ந்து போன நீர்நிலைகளை சரி செய்து கற்கள், மூங்கில்கள் கொண்டு தடுப்பணைகளை உருவாக்கினார்கள். 1983ஆம் ஆண்டு முதல் சரங் பள்ளியை கற்றுக்கொள்ளும் இடமாக மாற்றத் தொடங்கினர். முதலாவது மாணவனாக இவர்கள் மகனே கற்களை அகற்றுவது, மரக்கன்றுகளை நடுவது என வேலைகளைச் செய்ய ஆரம்பித்தார். பிறகு நண்பர்கள், உறவினர்கள் என்று கைகோர்க்க சரங் வளரத்தொடங்கியது. சரங்’ பள்ளி பசுஞ்சோலையாக மாறத்தொடங்க பாடங்கள் மாணவர்களே கற்றுக்கொள்ளும் வகையில் பாடத்திட்டங்கள் வடிவமைக்கப்பட்டன.

8 ஏக்கர் பரப்பளவில் காடுகள் உருவாகின. விவசாயம் செய்ய ஆரம்பித்து, மாணவர்களுக்கான காய்கறிகள் பயிரிடப்பட்டன. மண், புல், மூங்கில் கொண்டு வீட்டுகள் கைகளால் வடிவமைக்கப்பட்டன. இதில் அங்கே கற்க வருகிற சின்னஞ்சிறு குழந்தைகளும் அடக்கம். குழந்தைகள் பெளதிகத்தையும் இரசாயனத்தையும் உயிரியலையும் பார்ப்பதன் மூலம், உணர்வதன் மூலம், செயல்களில் ஈடுபடுவதன் மூலம் கற்று வருகிறார்கள்.
தொடர் விவசாயத்தால் அங்கே மண் வளம் மீண்டது. தூர்ந்து போன நீர்நிலைகளில் நீர் வளம் மிகுந்தது. பசுமை வளர்ந்ததும் வெளியேறிய முயல், மான், நரி போன்ற உயிரினங்கள் மெல்ல தங்’கள் இருப்பிடத்திற்கு திரும்பத்தொடங்கின. சரங்’ பள்ளி நிறுத்தத்தில் தனியார் பஸ்கள், அரசு பஸ்கள் வந்து நின்று செல்லத்தொடங்கின.சோலார், பானல்கள் மூலம் இங்கே மின்சாரம் உற்பத்தி செய்கிறார்கள். இந்தப்பள்ளியில் தங்குவதற்கான வசதிக்கான இடங்களை காட்டில் கிடைக்கும் மூங்கில்கள் கொண்டே வடிவமைத்திருக்கிறார்கள்.

இப்போது மூன்றாவது தலைமுறையைச் சார்ந்த குழந்தைகள் அங்கு கற்று வருகின்றார்கள்.

சரங் பள்ளி மாணவர்கள் மற்ற பள்ளி மாணவர்களுடன் எந்த வகையில் போட்டி போட்டாலும் வெற்றி பெற முடியும். இங்கு இயற்கையுடன் இணைந்து வாழும் குழந்தைகளின் மகிழ்ச்சியை நகர்ப்புறங்களில் வாழும் குழந்தைகளின் மகிழ்ச்சியுடன் ஒப்பிடுவது மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் போன்றது.
ஆனால் இந்தப்பள்ளியும் பிரச்சினைகளை சந்தித்தது. 1995 ம் ஆண்டு மீள முடியாத கடன் தொல்லையாலும் வேறு சில உள்பிரச்சினைகளாலும் இந்தப்பள்ளியை மூட வேண்டியதாகி விட்டது. அத்தனையும் இவர்களுடைய மக்களால் சரியாக்கப்பட்டு, 2013ல் மறுபடியும் திறக்கப்பட்டிருக்கிறது.

இங்கே படிக்கும் மாணவர்கள் இங்கே முழு நேரமாகவும் படிக்கலாம். மற்ற பள்ளிகளில் படித்துக்கொண்டும் இங்கே படிக்கலாம். மலையும் மழைச்சாரலும் உயிரினங்களும் இயற்கையும் தான் ஆசிரியர்கள். இதன் நிறுவனர்களான கோபாலகிருணனும் விஜயலக்ஷ்மியும் வழிகாட்டுனர்கள். மட்டுமே. பெற்றோர்கள் விரும்பினால் இங்கே வந்து தங்கி கல்வி கற்பிக்கும் முறைகளைப்பற்றி அறிந்து கொள்ளலாம்.

Wednesday 20 December 2017

திரை விமர்சனம்!!!

தீரன் அதிகாரம் ஒன்று. 

வெகு நாட்களுக்குப்பிறகு அநேகமாக எல்லா விமர்சனங்களிலும் நன்மதிப்பைப் பெற்ற திரைப்படம் என்பதால் இரண்டு நாட்களுக்கு முன் இந்தப்படத்தைப்பார்க்க நேர்ந்தது. பொதுவாய் த்ரில்லர் ரகப்படங்களை நான் விரும்பிப்பார்ப்பதில்லை. இது ஒரு உண்மைக்கதையை ஒட்டி எடுத்த திரைப்படம் என்பதை அறிய நேர்ந்ததால் தான் இப்படத்தைத் தேர்ந்தெடுத்தேன்.ஒரு உண்மையான, நேர்மையான காவல் அதிகாரியின் கதை. பதினைந்து வருடங்களுக்கு முன் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ‘பவாரியா’ என்ற கொள்ளைக் கும்பல் தமிழகத்தில் கைவரிசை காட்டியது. 2005ம் ஆண்டு கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம், பெரியபாளையத்தில் உள்ள அவரது வீட்டில் கொள்ளையர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். அவரது வீட்டிலிருந்த பணம் மற்றும் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இந்த வழக்கில் வெறும் காலணி, கைரேகை, ஒரு தோட்டா மட்டுமே போலிசாருக்கு கிடைத்தது. இதையடுத்து அப்போது வடக்கு மண்டல ஐஜியாக இருந்த எஸ்.ஆர்.ஜாங்கிட் தலைமையில் 2005-ல் ‘ஆபரேஷன் பவாரியா’ என்ற தனிப்படை அமைக்கப்பட்டது.

பவாரியா கொள்ளையர்கள் ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்திரபிரதேசத்தில் வசிக்கும் நாடோடிகள் இனத்தை சேர்ந்தவர்கள். ராஜ்புத் படை வீரர்களான இவர்கள் 1527ம் ஆண்டு முகலாயர்களிடம் தோல்வியடைந்து கனுவா என்னும் காட்டில் ஓடி ஒளிந்துகொண்டு உயிர்பிழைப்பதற்காக கொள்ளையடிக்க துவங்கியவர்கள் என்கிறார் ஜாங்கிட். பவாரியா கொள்ளையர்கள் பிரத்யேக லாரிகள் மூலம் பெரிய நிறுவனங்களுக்கு பொருட்களை இறக்குவதற்காக தமிழகத்திற்குள் வருவார்கள். அந்த பிரத்யேக லாரியில் ரகசிய அறைகள் அமைத்துக்கொண்டு அதில் மற்ற கொள்ளையர்கள் பதுங்கிக்கொண்டும், ஆயுதங்களை மறைத்து வைத்தும் தமிழகத்திற்கு வருவார்கள். பின்னர் நிறுவனங்களிடம் பொருட்களை சேர்த்த பிறகு நெடுஞ்சாலை அருகே உள்ள குடியிருப்புகளை நோட்டமிட்டு இரவு நேரங்களில் கொலை, கொள்ளை சம்பவத்தை நிகழ்த்திவிட்டு தப்பிவிடுவர் என்பது தெரியவந்ததாக கூறுகிறார் டிஜிபி ஜாங்கிட்.
ஒராண்டிற்கு மேல் நடைபெற்ற 'பவாரியா ஆப்ரேஷன்' ஏப்ரல் 2006ம் ஆண்டு முடிவுக்கு வந்தது. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 13 பேரில் 4 பேருக்கு ஆயுள் தண்டனையும், கொள்ளைக்கூட்டத்தின் முக்கிய தலைவன் ஒமன் உட்பட இருவருக்கு தூக்கு தண்டனையும் கிடைத்தது.

தீரன் அதிகாரம் படத்தை திரையரங்கில் பார்த்ததும், 10வருடத்திற்கு முன்பு நடந்த சம்பவங்கள் கண்முன் வந்தது போன்று உணர்ந்ததாகவும் 10 ஆண்டுகள் கழித்து தமிழக போலீசாரின் பணிக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கிறார் பவாரியா ஆப்ரேஷனின் தலைவர் எஸ்.ஆர்.ஜாங்கிட்.

இதை மையமாக வைத்து அசத்தலான திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குநர் ஹெச்.வினோத்.

தமிழ் சினிமாவில் இதற்கு முன் , எத்தனையோ போலீஸ் கதைகள்
வந்துள்ளன.அதில் பெரும்பாலானவை ., ஒரு ரவுடி, ஒரு தீவிரவாதி, அல்லது, தன் குடும்பத்தினரைக்கொன்றவனை பழி வாங்கத் துடிக்கும் போலீஸ் நாயகரைத் தடுக்கும் அரசியல்வாதி, இப்படி பல வில்லன்கள் ..இவர்களின் கடல் போன்ற சாம்ராஜ்யம், அவர்கள் பண்ணும் அட்டூழியங்’கள், இவர்களை ஒரு மாதிரி போராடி ஒரு வழியாக அழித்து பழி தீர்க்கும் போலீஸ் ஹீரோ எனும் கமர்ஷியல் சினிமாவுக்குரிய அம்சங்களுடன் கூடிய கதைகளாகத்தான் இருக்கும். ஆனால், அவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்டு முதல் முறையாக ஒரு போலீஸ் அதிகாரியின் விசாரணை வாழ்க்கை, குற்றவாளியைத்’த்’ஏடும் காவல் அதிகாரிகள் படும் அல்லல்கள், அவமானங்களிவை அனைத்தையும் இந்த 'தீரன்அதிகாரம் ஒன்று' படத்தில் யதார்த்தமாக கொடுத்திருக்கிறார்கள்.
உண்மை சம்பவத்தின் பாதையிலேயே திரைக்கதை பயணிக்கிறது. காவல் அதிகாரியின் மகனாய்ப்பிறந்து தந்தையின் வீரசாகசங்களை சொல்லி சொல்லியே வளர்க்கப்பட்ட காவல் அதிகாரியாய் அருமையாக நடித்திருக்கிறார் கார்த்தி. கதாநாயகியாக வரும் ரகுல் ப்ரீத் சிங்கிற்கு அதிக வேலையில்லை. இன்னும் சொல்லப்போனால் அவருக்கும் கார்த்திக்குமான காதல் காட்சிகள் ஜெட் வேகத்தில் பயணிக்கும் படத்திற்கு வேகத்தடையாகவே உள்ளன! ஓமாவாக நடிக்கும் அபிமன்யு சிங் தன் அபார நடிப்பால் பயமுறுத்துகிறார்! அவரின் கண்கள் நடிக்கின்றன! கழுத்து நரம்புகள் கூட நடிக்கின்றன! விறுவிறுப்பும், பரபரப்பும் நிறைந்த போலீஸ் கதைக்கு சத்யன் சூர்யனின் ஒளிப்பதிவு உயிரூட்டுகிறது. தேசிய நெடுஞ்சாலையோர அடர்ந்த காடு, பரந்த பாலைவனம், ஆரவல்லி மலைகள் என பகுதியின் தன்மை மாறாமல் அசலாக படம்பிடித்திருக்கிறார். கதாநாயகன் வில்லனைத்தேடி வேறு திசையில் பயணிக்க, வில்லனோ கதாநாகனின் மனைவியை விரட்ட, அப்போது பின்னணியில் படபடக்கும் இசையும் தடதடக்கிற நம் இதயமும்!!  காவல் அதிகாரிகளின் ஒவ்வொரு தாக்குதலும் நெடிய பாலைவன மணலிலும் நீலநிற இரவுப்பின்னணியிலும் ஓடும் ரயிலிலும் ஓநாய்த்தாக்குதலிலும் என்று நம்மை அசத்துகின்றன!!
திரைக்கதையின் வேகத்துக்கு போட்டியாய் அமைந்திருக்கிறது ஜிப்ரானின் பின்னணி இசை.

உயிரைப்பணயம் வைத்து தீரச்செயல்கள் புரிந்த நம் தமிழக காவல் அதிகாரிகளுக்காக, அவர்களுக்கு பாராட்டுக்கள் சொல்லும் விதமாக 
நிச்சயம் ஒரு முறை பார்க்கலாம்! மறுமுறை ரசித்துப்பார்க்கலாம்!


Thursday 7 December 2017

முத்துக்குவியல்-49!!

கடந்த 15 நாட்களாக என் வலைத்தளத்தை திறக்க முடியவில்லை. டைப் அடிக்க ஆரம்பித்ததும் cursor ஓடிக்கொண்டே இருந்தது. பல சிகிச்சைகளுக்குப்பிறகு இப்போது நிலைமை பரவாயில்லை. CURSOR ஓடுவதன் வேகம் மட்டுப்ப்ட்டிருக்கிறது. அதனால் தான் அது அசந்திருந்த நேரத்தில் என்னால் வலைத்தளத்தில் நுழைய முடிந்தது! இதை சரி செய்ய யாருக்காவது தீர்வுகள் தெரிந்தால் சொல்லுங்கள்! என் மகன் வெளி நாடு சென்றிருப்பதால் அவரின் உதவி கிட்டவில்லை.

அதிர்ச்சி முத்து:

சமீபத்தில்  ஜுனியர் விகடன் மூலம் அறிந்து கொண்ட செய்தி இது.

கொலை செய்யக்கூலிப்படைகள், போதை மற்றும் போலி மருந்துகள் மார்க்கெட்டிங், சூதாட்டம், திருட்டு மற்றும் கடத்தல் பொருள்கள் விற்பனை, ஆயுத‌ பிசினஸ், சிலைகள் மற்றும் அரிய விலங்குகளின் வியாபாரம், சட்ட விரோதப் பண மாற்றம் இப்படி எத்தனை குற்றங்கள் உண்டோ அவை அத்த்னைக்கும் ஒரு இருட்டு இணையம் இயங்கி வருகிறது. இன்டர்போல் மற்றும் பல நாட்டு காவல்துறைக்கும் தலைவலி தந்து கொண்டிருக்கும் விஷயம் இது.
இந்த மாதிரி இணைய தளங்களுக்கு GOOGLE CHROME , INTERNET EXPLORER வழியாக செல்ல முடியாது. இந்த மாதிரி இணையங்களுக்கு வருபவர்கள் எல்லோருமே அட்ரஸ் இல்லாதவர்கள். விற்பவர்களையோ வாங்குபவர்களையோ அடையாளம் காண முடியாதவர்கள்.

இங்கும் ஈ காமர்ஸ் போன்ற விற்பனைத்தளங்கள் இயங்குகின்றன.
சுமார் 21 நாடுகளைச் சேர்ந்த க்ரைம் போலீஸார் இணைந்து நடத்திய ரகசிய ரெய்டில் 600’க்கும் மேற்பட்ட  திருட்டு இணையங்கள் முடக்கப்பட்டு ஏராளமான போதை மருந்துகள், தங்கம் எல்லாம் பறிமுதல் செய்யப்பட்டன. எனினும் திருட்டு இணையங்கள் புதியதாய் வேறு வேறு பெயரில் கிளம்புவதை தடுக்க முடியவில்லை. 

கூலிப்படைகளின் சேவைகளுக்காகவே இணைய தளம் உண்டு. திருடப்பட்ட கிரெடிட் கார்டுகளுக்காகவும் அதன் விபரங்களுங்களுக்காகவுமே தனியாக இருட்டு இணைய தளம் உண்டு.

இன்டர்போல், அமெரிக்காவின் FBI, ஐரோப்பாவின் EUROPOLE போன்ற அமைப்புகள் எடுத்து வரும் நடவடிக்கைகளினால் ஓரளவுக்கு இருட்டு இணையங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. 

எனினும் நம் கற்பனைக்கு அப்பாற்பட்ட பயங்கர உலகமாக உலகெங்கும் இயங்கி வருகிறது இது.

அதிசய முத்து:

கன்னியாகுமரி மாவட்டம்திருவிதாங்கோட்டிற்கும் தக்கலைக்கும் இடையே கேரளபுரம் என்னும் சிற்றூரில் உள்ள விநாயகர் கோவில் பல அதிசயங்களும் அற்புதங்களும் நிரம்பப்பெற்றது. இந்தக் கோவிலில் குடி கொண்டிருக்கும் விநாயகர் வருடத்தில் ஆறு மாதம் ஆடி முதல் மார்கழி வரை கருப்பாகவும் மீதமுள்ள ஆறு மாதம் தை மாதத்திலிருந்து ஆனி வரை  வெள்ளையாகவும் நிறம் மாறுகிறார். 

விநாயகரின் நிறத்தைப்பொறுத்து விநாயகர் அமர்ந்துள்ள அரசமர'மும் நிறம் மாறுகிறது! இன்னுமொரு வியப்பான செய்தி. இப்போது ஒன்றரை அடி உயரமுள்ள' விநாயகர் தொடக்கத்தில் அரை அடி உயரம் மட்டுமே இருந்தவர். இவர் நிறம் மாறும் விநாயகர் என்று அழைத்தாலும் நிறம் மாறுவதால் பச்சோந்தி விநாயகர் என்றும் அழைக்கப்படுகிறார். 

இந்தச் சிலை உருவாக்கப்பட்ட கல் சந்திரகாந்தக்கல் என்னும் அபூர்வ வகைக்கல் என்று ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளார்கள். 

விநாயகர் கருப்பாக இருக்கையில் அக்கோவிலின் கிணற்று நீர் கலங்கலாக சுவை இழந்து மாறி விடும். விநாயகர் வெள்ளையாக இருக்கும்போது கிணற்று நீர் ஸ்படிகம் போல தெளிவாகவும் சுவையாகவும் மாறி விடுகிறது. 

அசத்தும் முத்து:

சென்னை ரெட்ஹில்ஸ் பகுதியை சேர்ந்தவர் வேணுகோபால். வட்டார போக்குவரத்து அலுவல கம் தொடர்பான ஆலோசகராக இருக்கிறார். இவரது மகன் சஞ்சய்குமார். பிளஸ் 1 வகுப்பில் அடியெடுத்து வைத்திருக்கும் இவன் இதுவரை 210 ஏழைகளின் உயிர்காக்க உதவி செய்திருக்கிறான். 11 ஆண்டாக தீபாவளி கொண்டாடுவது இல்லை.

அவனின் தந்தை சொல்கிறார்......

‘’’ சஞ்சய்க்கு அப்போ அஞ்சு வயசு இருக்கும். பேப்பர் படிச்சுட்டு இருந்தேன். அதுல, ஒரு சின்னப் பொண்ணுக்கு இதய அறுவை சிகிச்சைக்கு உதவி கேட்டு போட்டோவுடன் விளம்பரம் வெளியாகி இருந்துச்சு. அதை பார்த்த சஞ்சய், ‘பேப்பர்ல எதுக்குப்பா இந்த அக்கா படத்தைப் போட்டிருக்காங்க?’ன்னு கேட்டான். ‘இந்த அக்காவோட இதயத்துல கோளாறுப்பா. அறுவை சிகிச்சைக்கு உதவி கேக்குறாங்க’ன்னு சொன்னேன். ‘நாம ஏதாச்சும் உதவி பண்ணலாமே’ன்னான். ‘அதுக்கேத்த வருமானம் நமக்கு இல்லியே’ என்றேன். அவங்க அம்மாகிட்டப் போயி ஏதோ பேசிட்டு அஞ்சு நிமிஷம் கழிச்சு வந்தான்.

‘ஏம்பா.. எனக்கு தீபாவளிக்குப் பட்டாசு, புதுத் துணி எடுக்க எவ்வளவு செலவு பண்ணுவே?’ன்னான். ‘2 ஆயிரம் ஆகும்’னு சொன்னேன். ‘அப்படின்னா.. இந்த வருஷம் எனக்கு பட்டாசும் வேண்டாம், புதுத் துணியும் வேண்டாம். அதுக்கு செலவு செய்யுற பணத்தை இந்த அக்காவுக்கு அனுப்பி வைச்சிருப்பா’ன்னு சொல்லிட்டு பதிலுக்குக்கூட காத்திருக்காம வெளிய ஓடிட்டான். அவன் சொன்ன மாதிரியே அந்தப் பொண்ணோட அறுவை சிகிச்சைக்கு 2 ஆயிரம் ரூபாய் அனுப்பி வைச்சோம்.

அந்த வருஷத்துலருந்து சஞ்சய் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கிறதில்லை. புதுத் துணி போடுறது இல்லை. அதுக்கு செலவாகும் பணத்தை கணக்குப் பண்ணி கேட்டு வாங்கி வச்சுக்குவான். அவங்க சித்தி பட்டாசு வாங்கித் தர்றேன்னு சொல்லுவாங்க. அவங்கட்டயும் ரூபாயைக் கேட்டு வாங்கிருவான். சஞ்சய் இந்த முடிவு எடுத்துட்டதால நாங்களும் பதினோரு வருஷமா தீபாவளியை ஏறக்கட்டி வைச்சிட்டோம்.

பிறந்த நாளுக்கு புது டிரெஸ் போடுறதோ, கேக் வெட்டிக் கொண்டாடுறதோ இவனுக்குப் பிடிக்காது. அதுக்குப் பதிலா, இவன் படிக்கிற வேலம்மாள் பள்ளியில ஒவ்வொரு வருஷமும் இவனோட வயதின் எண்ணிக்கைக்கு ஏற்ப மரக்கன்றுகள் நடுவான். இவனது சேவையைப் பாராட்டி இதுவரை 8 விருதுகள் கொடுத்திருக்கிறார்கள்.”

இவ்வாறு கூறினார் வேணுகோபால்.

அப்பாவின் தோளைப் பிடித்துத் தொங்கியபடி அருகில் நின்று கொண்டிருந்த சஞ்சய்குமார் நம்மிடம் சொன்னான்..

“யாருக்காச்சும் உயிர்காக்கும் சிகிச்சைக்கு உதவணும்னு பேப்பர்ல விளம்பரம் பார்த்தேன்னா அப்போதைக்கு என் சேமிப்புல எவ்வளவு பணம் இருக்கோ அதை எடுத்து அனுப்பி வைச்சிருவேன். ரூ.500 முதல் ரூ.2 ஆயிரம் வரை என இதுவரை 210 பேருக்கு ஏதோ என்னால் முடிஞ்ச சிறு உதவியைச் செஞ்சிருக்கிறேன். 
இப்பகூட 2 ஆயிரம் ரூபாய் சேமிச்சு வைச்சிருக்கேன். நாலாம் வகுப்புலருந்து மஞ்சுளா டீச்சர்கிட்ட டியூஷன் படிக்கிறேன். நான் இந்த மாதிரி உதவி செய்றேன்னு தெரிஞ்சு, ‘எனக்கு டீயூஷன் ஃபீஸ் வேண்டாம் சஞ்சய்.. அந்த பணத்தையும் உன் பணத்தோட சேர்த்து, கஷ்டப் படுறவங்க சிகிச்சைக்கு அனுப்பி வைச்சிரு’ன்னு சொல்லிட்டாங்க. அவங்களுக்கு நல்ல மனசு.

மருத்துவ உதவிக்காக நான் அனுப்பிய பணம் கிடைச்சதும், அவங்க எல்லாரும் மறக்காம எனக்கு நன்றி தெரிவிச்சு கடிதம் போடுவாங்க. அதையெல்லாம் பத்திரப்படுத்தி வச்சிருக்கேன். ‘எங்களைப் போன்ற ஏழைகளுக்கு உதவுவதற்காக இந்த தம்பி நல்லா படிச்சு டாக்டரா வரணும். அதுக்காக தினமும் கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறோம்’ என்றுகூட சிலர் எழுதி இருக் கிறார்கள்.

ஆனால், ஐ.ஏ.எஸ். படிச்சு கலெக்டராகி ஏழைகளுக்குச் சேவை செய்யணும்கிறதுதான் என் விருப்பம், கனவு, ஆசை, லட்சியம் எல்லாம்! “

உறுதிபடச் சொன்னான் சஞ்சய்குமார்.  Sunday 26 November 2017

சிதம்பர விலாஸ்!!!

கடந்த மாத இறுதியில் வந்த எங்களின் 43ஆவது திருமண நாளுக்கு, எங்காவது வெளி நாட்டிற்கோ அல்லது வெளிமாநிலத்திற்கோ சுற்றுலா செல்லும்படி என் மகனின் வற்புறுத்தல் தொடர்ந்து கொண்டிருந்தது. அவ்வளவு தொலை தூரம் செல்ல விருப்பமில்லாததால் தமிழ் நாட்டிலேயே தேனி அல்லது ஏற்காடு சென்று வரலாமா என்று யோசித்தோம். தஞ்சையிலிருந்து என்று பார்த்தால் அதுவும் தொலை தூரமே. மேலும் தொடர்ந்து ஊரெல்லாம் பரவிக்கொண்டிருந்த டெங்கு ஜுரம், அடர் மழை எல்லாம் மிகவும் யோசிக்க வைத்தது.யதேச்சையாக  காரைக்குடியில் தங்குவதற்கு சென்ற வருடம் ஹோட்டல்களையெல்லாம் அலசிக்கொண்டிருந்த போது கலை உணர்வும் அழகுமாய் தோற்றம் தந்த ' சிதம்பர விலாஸ்' என்ற மூன்று நட்சத்திர் ஹோட்டல் ஞாபகம் வந்தது. அங்கு சென்று தங்கி சுற்றியுள்ள சில இடங்களுக்கு சுற்றுலா சென்று வரலாம் என்று முடிவு செய்தோம்.

பழைமையான, அழகான இந்த ஹோட்டலில் தங்கியிருந்தது இனிமையான அனுபவமாக இருந்தது. சின்னஞ்சிறு கிராமத்தில் நடுவில் அமைந்திருப்பதால் பெரிய கடைகள் எதுவும் அருகில் கிடையாது. 7 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் ' கானாடு காத்தான்' என்ற சிறு நகரத்திற்குச் செல்ல வேண்டும்.முகப்புத்தோற்றம்
புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்திலிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் கடியாப்பட்டி எனும் மிகச்சிறிய கிராமத்தின், மிகப்பெரிய அடையாளம். ஆம், செட்டிநாட்டுக்கேயுரிய, அரண்மனையையொத்த வீடுகளில் ஒன்றுதான்... இந்த சிதம்பர விலாஸ்! ஒரு காலத்தில் ஒரு குடும்பம் வசித்து வந்த இந்த வீடு, இன்றைக்கு நீங்களும் வசிக்கும் ஒரு ஹோட்டலாக வடிவெடுத்து நிற்கிறது!

வேலைப்பாடுகள் நிறைந்த கதவு
1900 முதல் 1907 வரை மொத்தம் ஏழு ஆண்டுகள் எடுத்துக்கொண்டு, ஒரு ஏக்கர் வளாகத்தில் கட்டி முடிக்கப்பட்டிருக்கிறது இந்த வீடு. அப்போதே ஏழு லட்ச ரூபாய் செலவானதாம் இதைக் கட்டி முடிக்க! வீட்டில் இருக்கும் கதவு, ஜன்னல், நாற்காலி உள்ளிட்ட அனைத்து மரவேலைப்பாடுகளுக்கும் பர்மாவிலிருந்து மரங்களை வரவழைத்துச் செய்துள்ளனர். கண்ணாடிகள் பெல்ஜியத்திலிருந்தும், டைல்ஸ்கள் இத்தாலியிலிருந்தும் வரவழைக்கப்பட்டிருக்கின்றன. வீட்டில் ஓர் ஆணிகூட அடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


அறைக்கு வெளியே பழங்காலத்து இருக்கைகள்!!
நூறாண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த இந்த வீட்டின் தற்போதைய உரிமையாளர்... கிருஷ்ணப்ப செட்டியார். அதன் பழமை மாறாமல், அதேசமயம் நவீனவசதிகள் பலவற்றையும் தன்னுள் சேர்த்துக்கொண்டிருக்கும் இந்த வீடு, தற்போது 'ஹோட்டல் சங்கம்’ குழுமம் நடத்தி வரும் ஹோட்டல்களில் ஒன்றாக, சுற்றுலா பயணிகளை ஈர்த்துக்கொண்டிருக்கிறது. இப்படி ஹோட்டலாக வடிவெடுத்தாலும், ஒரு வீட்டுக்குரிய பாதுகாப்பு தரும் அம்சங்கள் அனைத்தும் மாறாமல்இருப்பது... ஆச்சர்யம். வீட்டில் ஒவ்வோர் இடத்துக்கும்... ஒவ்வோர் பெயர் வைத்துள்ளனர்.முகப்பு:

ஹோட்டலின் உள்ளே நுழைந்த உடன் வரும் இடம். கல்லாப் பெட்டியுடன் ஒருவர் அமர்ந்திருக்கிறார். அந்தக்கால செட்டியார்கள் கணக்கு பார்க்க பயன்படுத்திய டெஸ்க் வடிவ கல்லாப்பெட்டியை அப்படியே வைத்திருக்கிறார்கள்.

முற்றத்தை மூடியிருக்கும் கம்பிகளின் அழகு!
வளவு:

முகப்பை தாண்டி வந்தால் வருகிறது வளவு. நடுவில் முற்றம்... அதனை சுற்றி அறைகள் இருக்கின்றன.அவற்றில் எல்லாம் பாரம்பரிய உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இன்று, விசிட்டர்களின் ரூமாக இருக்கும் இந்த வளவு, அந்தக் காலத்தில் திருமணமான ஆண்கள் ஒவ்வொரு வருக்கும் தனித்தனி அறை என்று பிரித்துக் கொடுக்கப்பட்ட இடம்.

பொம்ம கொட்டகை:அந்தக் காலத்தில் விருந்தினர்கள் வந்தால் புழங்கும் இடமாகவும், மதிய உணவு உண்ணும் இடமாகவும், பூஜை வழிபாடு மற்றும் கொலு வைக்கும் இடமாகவும் பயன்படுத்தியிருக்கிறார்கள். இன்று, லன்ச் ஹாலில் ஒன்றாக இது மாறியிருக்கிறது. கலைப் படைப்புகளை ரசித்துக்கொண்டே உணவு உண்ணலாம்.

விசிறி ஹால்:அந்தக் காலத்தில் பெண்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட விஸ்தாரமான ஹாலாக இருந்த இந்த இடத்தில், சுவர்களில் அழகான சாண்ட்லியர் பொருத்தப்பட்டிருக்கிறது. அந்தத் தன்மையோடு தற்போது வாழை இலை போட்டு பரிமாறப்படும் டைனிங் ஹாலாகவும் இது உருமாற்றப்பட்டிருக்கிறது.

மதிய உணவு எங்கள் இருவருக்கும் 1500 ஆனது. வேறு வித்தியாசமான சாப்பாடென்றால் ' கானாடு காத்தான்' அல்லது புதுக்கோட்டைக்குத்தான் செல்ல வேண்டும்.டபுள் ரூம், ட்வின் ரூம், சூட் ரூம் என மூன்று ரகங்களில், இங்கு 25 ரூம்கள் உள்ளன. பாரம்பரிய உணவுகள், கூட்ட அரங்கு, நீச்சல்குளம், விளையாட்டு அரங்கு என அனைத்து வசதிகளும் இங்குண்டு. வெளிநாட்டினர் அதிகமாக இங்கே வருகின்றனர்.அவர்களுக்கெல்லாம்... பாரம்பரிய உணவு வகைகளை சமைக்கக் கற்றுக்கொடுக்கிறார்கள். கோலம் போடுவது, பூ கட்டுவது போன்றவற்றையும் கற்றுத்தருகிறார்கள். கூடவே... அருகில்இருக்கும் திருமயம் கோட்டை, சித்தன்னவாசல் குகைகள் என்றெல்லாம் அழைத்துச் சென்று காண்பிக்கிறார்கள்.
இந்த ஓட்டலில் அறைக் கட்டணங்கள் 7,000 ரூபாய் முதல் 12,000 ரூபாய் வரை .

Wednesday 15 November 2017

வாட்ஸ் அப் எச்சரிக்கைகள்!!!!!

சமீபத்தில் டெங்கு ஜுரத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட நகரமாக தஞ்சாவூர் இருந்தது. என் தங்கை வீட்டு மாடியில் குடியிருந்த 25 வயது இளம் பெண் படிப்பில் தங்க மெடல் கல்லூரியில் வாங்கியவர், முதுகலைப்பட்டங்கள் வாங்கியவர் ஜுரம் வந்த நாலே நாளில் இறந்து போனார். என் தங்கை அதிர்ச்சியில் உறக்கத்தைத் தொலைத்தார். தஞ்சையிலிருக்கும் பிரபல மருத்துவ‌ மனையில் நோயாளிகளுக்கான படுக்கை அறைகள் நிரம்பி வழிந்த நிலையில் வரவேற்பறையில் இருந்த நாற்காலிகளை அகற்றி  அங்கே நோயாளிகளைப் படுக்க வைக்க வேண்டிய கட்டாயம் நேர்ந்தது. டெங்கு காய்ச்சலிலிருந்து நம்மைப்பாதுகாக்க ' வாட்ஸ் அப்'பில் வந்த குறிப்புகள் இதோ!!
டாக்டர் பரூக் அப்துல்லா என்பவர் இந்த அவசியமான எச்சரிக்கைக் குறிப்புக‌ளைக் கொடுத்திருக்கிறார்.
இது தான் டெங்கி காய்ச்சலோட போக்கு 

முதல் மூணு நாள் நல்லா உடம்பு சுடும். 

அடுத்த மூணு நாள் ஜில்லுனு உடம்பு குளிர்ந்திடும். 

ஆனா அதுக்கப்பறம் தான் பிரச்சனை ஆரம்பிக்குது பாருங்க... 

ரத்தக்கசிவு நடக்க ஆரம்பிக்கறதே 4,5,6 நாட்கள்ல தாங்க.. 

காய்ச்சலோட போக்க பாருங்க. 

முதல் மூன்று நாள் 103-104 டிகிரி இருக்கும் காய்ச்சல் , 4வது நாள் சட்டுனு குறையுது , ரெண்டு நாள் குறையுற காய்ச்சல் திடீர்னு 6வது நாள் 100 டிகிரி அளவுக்கு ஏறுது.. 

ஆக, நாம் ஜாக்கிரதையா இருக்க வேண்டியது 4,5,6 நாட்கள் தான் 

முதல் மூன்று நாட்கள்ல , உடல் உஷ்ணத்தால உடம்புல இருக்குற நீர் சத்து குறையுது ... 

நா வரண்டு போறதும் , சிறுநீர் சரியா போகாம இருக்குறது , இதெல்லாம் முதல் மூன்று நாட்கள் இருக்கும். 

அடுத்த மூன்று நாட்கள் தான் நமக்கு போர் காலம் ... 

இதுல தான் ரத்த கசிவு நடக்க வாய்ப்பு இருக்கிறது. ரத்த கசிவு வெளியே பல்லில் ஈறுகளில் இருந்து வெளியேறலாம் .. மலம் கருப்பாக வெளியேறுவது இதெல்லாம் இந்த 4,5,6 நாட்களில் தான் நடக்கும் . 

ரத்த டெஸ்ட் களில் முதல் மூன்று நாட்கள் எந்த பாதிப்பும் வெளியே தெரியாது ஆனால் 4 ஆம் நாளின் தொடக்கத்தில் இருந்து தட்டணுக்கள் சரிவதை கண்டுபிடிக்கலாம் , 5 ஆம் நாளும் 6 ஆம் நாளும் அதனினும் குறைந்து பிறகு மீளும்.

ஆகவே டெங்குவை தெரிஞ்சுக்க ஈசியான மூணு ரூல்ஸ். 

ரூல் நம்பர் ஒண்ணு.

டெங்கி ஜுரம் அடிக்கிறது முதல் மூனு நாள். நாலாவது நாள் சட்டுனு குறைஞ்சுச்சுனா அலர்ட் ஆயிடணும்

ரூல் நம்பர் டூ 

நீர் சத்துதான் டெங்கிவோட டார்கெட் , அதனால் முடிஞ்ச அளவு தண்ணீர் ,  இளநீர், மோர்னு குடிச்சுட்டே இருக்கணும்.  

ரூல் நம்பர் 3 

இதுதான் முக்கியமான விசயம்.

காய்ச்சல் அடிச்சா இந்த முக்கியமான முதல் மூணு நாள கவுண்டர்ல மருந்து சாப்புட்டு வீணாக்கிட்டு, 4,5,6 ஆவது நாள் ரத்தக்கசிவு நடக்கும் போதும் கண்டுக்காம இருந்தா, எந்த ஆஸ்பத்திரில சேந்தாலும் காப்பாத்துறது சிரமம் . 

இந்த மூணு ரூல்ஸயும் தெரிஞ்சிருந்தா டெங்கி போட்ற ஸ்கெட்ச்ல சிக்காம ஈசியா தப்பிச்சுறலாம்.

   *******************************************************************

அடுத்த எச்சரிக்கை வரவிருக்கும் சுனாமி பற்றி! 

இதைப்பற்றி ' ஜுனியர் விகடனில்கூட' இதே விபரங்களைத்தாங்கி கட்டுரை வந்திருக்கிறது.

இப்போது ' வாட்ஸ் அப்'பில் வந்த விபரங்கள்....

கடும் எச்சரிக்கைகக்கான பதிவு இது.. 
🔴" மீண்டும் சுனாமி - 2017, டிசம்பர் 31க்குள் ". சரியான தேதி மட்டும் குறிப்பிடப்பட வில்லை... ஆனால் இந்தமுறை முன்பை விட "பலமடங்கு" அளவில் பெரியது என்பது தான் அதிகாரப் பூர்வமான தகவல் 🔴

🔴இது 11 நாடுகளை கடுமையாக பாதிக்கக் கூடியதாம், குறிப்பாக ❗தமிழ்நாடும், கேரளாவும்தான்❗ 
ஏனென்றால் இந்தமுறை சுனாமி ஆக்ரோஷமாக ஆரம்பிப்பதே நம் இந்தியப்பெருங்கடலில் இருந்து தானாம்...🔴

🔴இது தொலைவில் உள்ள வடகிழக்கில் தாய்லாந்து, இந்தோனேசியா மற்றும், வடமேற்கில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வரை இதன் வீச்சு பாதிக்கும் என்றால்... இந்தியப்பெருங்கடல் அருகிலேயே உள்ள நம் "தமிழ்நாடு"  மற்றும் கேரளாவின் நிலையை சற்றே நினைத்துப் பாருங்கள்...🔴

🔴இந்த தகவலைத் தெரிவித்தவர் Thiruvandrum Forest Wala, Tamilnadu Border, B.K.Research Association - Director Mr.BabuKalayil, என்பவர்... இவர்தான் 2004-லும் சுனாமி வருவதற்கு முன்பாகவே தகவல் தெரிவித்தவர்... அப்போது இந்தியாவே அறிந்திராத சுனாமி என்பதால் யாரும் கவனம் கொள்ளவில்லை... ஆனால் சுனாமிக்குப் பின்னரே இவர், முன் அறிவிப்பு கொடுத்தற்காக பாராட்டுப்பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது... 

இவர்தான் தற்போது "வருமுன் காப்பதே சிறந்தது" என்பதற்காக இந்த தகவலைத் தெரிவித்ததுடன், அதை  Pரிமெ Ministerக்கும், தமிழ்நாடு Cஹிஎஃப் Ministerக்கும் கடந்த 20.09.2017 அன்றே அதிகாரப்பூர்வமாக தெரியப்படுத்தி உள்ளார்... 

இதை படிக்கும் நீங்களும் இச்செய்தியை உறுதிசெய்து கொள்ள விரும்புவோராயின், தொடர்புக்கான எண் (திரு.பாபுகளைல் - 
  +91 9400037848)... மேலும் Google-ல் Babu Kalayil என்று Search செய்தால், இதற்கான அத்தனை ஆதாரங்களையும் நீங்களே பார்த்துக் கொள்ளலாம்... 🔴

🔴இது எங்கோ! எப்போதோ? அல்ல... இன்னும் 1மாதத்தில் கடலோர மக்கள் மட்டுமின்றி, நாம்  அனைவரும் ஏதோ ஒரு விதத்தில் மிகவும் பாதிக்கப்படக்கூடிய இயற்கை பேரழிவு என்பதை கருத்தில் கொண்டு செயல்படுவோம்...🔴

🔴இயற்கை சீற்றத்தை மனிதனால் தடுக்க முடியாது... ஆனால் தகுந்த முன்னறிவிப்பு இருந்தால் நிச்சயம் தற்காத்துக் கொள்ள முடியும்...🔴

🔴இந்த இயற்கை சீற்றம் பற்றி தெரிந்து 41 நாட்கள் ஆகியும், இதுவரை எந்த ஒரு மீடியாவும் அழுத்தமாக பதிவு செய்யவில்லை... ஆனால் இந்த இயற்கை சீற்றம் நடந்த பின்னர் அத்தனை மீடியாக்களும், அதன் பாதிப்புகளையும், மக்களின் கண்ணீர்களையும், TV-ல் தொடர்ந்து காட்டிப்பணம் சம்பாதித்துக் கொள்வார்கள்🔴

🔴ஆகவே நம்மை நாம் தான் பாதுகாத்துக்கொள்ள (முடியும்)வேண்டும்...🔴

🔴இது நம்முடைய
ஆயிரக்கணக்கான மக்களின் உயிர்கள் சம்பந்தப்பட்டது என்பதால்... இதை யாரும் அலட்சியமாக பொருட்படுத்தாமல், தயவுசெய்து நம் மக்களை முடிந்தவரை பாதுகாப்பதற்காகவே பகிர்வோம்...🔴

🔴நம்முடைய இந்த பகிர்வு அரசாங்கத்தையும் அரசாங்க அதிகாரிகளையும் முடிக்கிவிடப்பட்டு, அத்தனை மீடியாக்களால் வற்புறுத்தி சொல்லப்பட்டு, கடைகோடி மனிதர்கள் வரை விழிப்புணர்வை ஏற்படுத்தி, அது நம் கடலோர மக்களைக் காக்கவேண்டி தகுந்த முன்னேற்ப்பாடுகள் செய்யப்படுத்தப்பட வேண்டும்...🔴

🔴தமிழ், தமிழன், தமிழ்நாடு என்று அரசியலுக்காக பேசும் அத்தனை "வாய்களும்" இக்கணம் முதல் விழிப்புணர்வுக்காக பேசி,  விலைமதிப்பில்லாத மனித உயிர்களுக்கு தகுந்த முன் ஏற்பாடுகளை செய்து தர வழி வகுக்கட்டும்...🔴

🔴ஒரு ஜல்லிக்கட்டில் இணைந்த நம்முடைய What's Up பலத்தால், நாம் நம் காளை மாடுகளின் உயிர்களைக் காப்பாற்றினோம்... அதை விடத் துரிதமாய் செயல்பட்டு அத்தனை சமூக வலைதளங்களிலும் பரப்பி, நம்முடைய கடலோர மக்களின் உயிர்களையும் காப்பாற்றுவோம்...🔴

பொதுநலன் கருதும் தமிழக இளைஞர்களில் ஒருவன்... நன்றி...
Tuesday 7 November 2017

மரவள்ளிக்கிழங்கு அடை!!

இந்த முறை நல்லதொரு சமையல்குறிப்பை பதிவிடலாம் என்ற யோசனை வந்தபோது வீட்டில் தயாராகிக்கொண்டிருக்கும் மரவள்ளிக்கிழங்கு அடையின் நினைவு வந்தது. மரவள்ளிக்கிழங்கில் வடை, பொரியல் எல்லாம் செய்வதுண்டு என்றாலும் இந்த அடை தான் எனக்கு மிகவும் பிடித்த உணவு. என் மாமியார்  தண்ணீரை  கொதிக்க வைத்து மரவள்ளிக்கிழங்குத்துண்டங்களைப்போட்டு வேக வைப்பார்கள். அதில் உப்பு, நசுக்கிய‌ பூண்டு பற்கள், மஞ்சள் தூள் சேர்த்து வேக வைப்பார்கள். அத்தனை சுவையாக இருக்கும் அப்படி வேக வைத்த மரவள்ளிக்கிழங்கு!! காலை நேரத்தில் இது தான் சில சமயம் உணவாக இருக்கும். ஆனால் சர்க்கரை நோய்க்காரர்கள் இந்த சுவையிலிருந்து கொஞ்சம் தள்ளித்தான் நிற்க வேண்டும். காரணம் 88 சதவிகிதம் இதில் மாவுச்சத்து இருப்பது தான்!!பிரேசிலில் பிறந்த மரவள்ளிக் கிழங்கு மெதுவாக பல நாடுகளில் பரவி இதன் சுவை காரணமாக தென் அமெரிக்கா, தமிழ்நாடு, கேரளா, இலங்கை என எல்லா இடங்களிலும் விரும்பி வளர்க்கப்படுகிறது. கப்பைக்கிழங்கு, குச்சிக்கிழங்கு, மரச்சீனி கிழங்கு என இதற்கு வேறு பெயர்களும் உண்டு. இதிலிருந்து தான் ஜவ்வரசி போன்ற உணவுப்பொருள்கள் தயாராகின்றன. பாஸ்பரஸ், கால்சியம் நார்ச்சத்து என சத்துக்கள் அடங்கிய மரவள்ளிக்கிழங்கு இரத்த ஓட்டத்தையும் சிகப்பு இரத்த அணுக்களையும் அதிகரிப்பதால் இதை குழந்தைகளுக்கு கஞ்சி மாவாக தயாரித்துக்கொடுப்பது வழக்கம். கேரளாவில் பச்சிளங்குழந்தைகளுக்கு கொடுப்பதை நான் பார்த்திருக்கிறேன். வேக வைத்து வெல்லப்பாகு கலந்து கொடுப்பார்கள். என் அனுபவத்தைப்பொருத்தவரை கேரளாவிலும் இலங்கையிலும் விளையும் கிழங்கிற்கு சுவை மிக அதிகம்!!

இப்போது மரவள்ளிக்கிழங்கு அடையைப்பார்க்கலாம்.மரவள்ளிக்கிழங்கு அடை:

தேவையான பொருள்கள்:

மரவள்ளிக்கிழங்குத் துருவல்- 4 கப்
பச்சரிசி                    -  2 கப்
துவரம்பருப்பு- 1 மேசைக்கரண்டி
கடலைப்பருப்பு- 1 மேசைக்கரண்டி
வற்றல் மிளகாய்- 8
சின்ன வெங்காய்ம் அல்லது பெரிய வெங்காயம் மெல்லியதாய் அரிந்தது- 1 கப்
பெருங்காயம்- அரை ஸ்பூன்
கறிவேப்பிலை -2 ஆர்க்
தேவையான உப்பு
சோம்பு-1 ஸ்பூன்

செய்முறை:

அரிசி, பருப்பு வகைகளை போதுமான நீரில் வற்றல் மிளகாயுடன் ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு நீரை வடித்து அரிசியை மிளகாய், பெருங்காயம், சோம்பு, போதுமான நீர் சேர்த்து நன்றாக அரைக்கவும். பிறகு மரவள்ளிக்கிழங்கு துருவல், உப்பு சேர்த்து சற்று கரகரப்பாக அரைத்தெடுக்கவும். வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து மெல்லிய அடைகளாய் வார்த்தெடுக்கவும்.

தக்காளி சட்னி, தேங்காய் சட்னி இதற்கு பொருத்தமான பக்கத்துணையாக இருக்கும்.

Friday 13 October 2017

முத்துக்குவியல்-48!!

தகவல் முத்துக்கள்:

1. தமிழகத்தில் எங்கேனும் குழந்தைகள் பிச்சை எடுத்து வாழ்க்கை நடத்துகிறார்கள் என்ற அவல நிலையைக் கண்டால்உடனே "RED Society" யின் 9940217816 என்ற எண்ணில் அழையுங்கள். அவர்கள் அக்குழந்தைகளின் கல்விக்கு வழி வகுப்பார்கள்.

2.  குறிப்பிட்ட இரத்த வகையைத் தேடி அலைய முற்படும் போது இந்த இணைய முகவரி நமக்குத் தேவைப்படும் இரத்த வகையை, அதற்குரியவரை கண்டெடுக்க உதவும்.. விவரங்களுக்கு: http://www.bharatbloodbank.com/ 

3. வாகனம் ஓட்டும் உரிமை அட்டை, குடும்ப அட்டை, பாஸ்போர்ட், வங்கிக் கணக்குப் புத்தகம்... போன்ற முக்கிய ஆவணங்கள் ஏதேனும் கீழே கண்டெடுத்தால் அருகில் உள்ள அஞ்சற்பெட்டியில் இட்டுவிடுங்கள். அது தானாக உரியவரிடம் சேர்ந்து விடும். அதற்குரிய அஞ்சற்செலவுத் தொகையை சம்பந்தப் பட்ட நபரிடமிருந்து அஞ்சலகங்கள் பெற்றுக் கொள்ளும்.

மருத்துவ முத்து:

நம் உடலில் தசைகளின் சக்தி உற்பத்திக்கு கிரியாட்டின் என்ற வேதிப்பொருள் முக்கிய அங்கம் வகிக்கிறது. இதிலிருந்து தினந்தோறும் 2 சதவிகிதம் கிரியாட்டினைன் என்ற கழிவுப்பொருள் உடலெங்கும் ஓடும் இரத்ததில் கலந்து சிறுநீரகத்திற்குச் சென்று அங்கு வடிகட்டப்பட்டு சிறுநீர் மூலம் வெளியேறுகிற‌து. சிறுநீரகம் எதனாலோ பழுது படும்போதோ அல்லது நோய்வாய்ப்படும்போதோ சிறுநீரகத்தின் வடிகட்டும் சக்தி குறைகிறது அல்லது வடிகட்டியின் ஓட்டைகள் பெரிதாகின்றன. அதனால் கழிவுப்பொருள்கள் அதிகமாக வெளியேறுகின்றன. அல்லது இரத்தத்திலேயே கழிவுப்பொருள் தங்க ஆரம்பிக்கின்றன.

கிரியாட்டினைன் அதிகரிக்க காரணங்கள் அதிகம் உள்ளன. சர்க்கரை வியாதி, உயர் இரத்த அழுத்தம் உள்ள‌வர்களுக்கு இந்த வாய்ப்பு அதிகம். இவை தவிர, சில மருந்துகளின் தாக்கத்தினாலும் கிரியாட்டினைன் அதிகரிப்பதுண்டு. URINARY TRACT INFECTION AND OBSTRUCTION பிரச்சினையினாலும், சில சமயம் அதிக அளவு மாமிசம் உண்பதனாலும்கூட இது அதிகரிக்கிறது.

பொதுவாக இரத்தத்தில் கிரியாட்டினைன் அதிகரிக்கும்போது, இலேசான அதிகரித்தலுக்கெல்லாம் மருந்து கொடுப்பதில்லை. பொதுவாய் இரத்தத்தில் கிரியாட்டினைனின் அளவு 0.5 1.3 க்குள் இருக்க வேண்டும். இதில் ஒன்றிரண்டு புள்ளிகள் ஏறினால் அது ஒரு பெரிய பிரச்சினையாகக் கருதப்படுவதில்லை. நாமும் நிம்மதியாக இருந்தோமானால் அது மெல்ல மெல்ல அதிகரித்து விடும் அபாயம் இருக்கிறது. எதனால் இது அதிகரித்திருக்கிறது என்பதை நாம் மருத்துவரின் உதவியுடன் கண்டறிதல் அவசியம்.

சமீபத்தில் ஒரு அக்குபிரஷர் மருத்துவர் ஒரு எளிய வைத்திய முறையைச் சொன்னார். அதை எனக்கு நெருங்கிய சினேகிதியிடம் சொன்னதில் அதை அவர் உபயோகித்து அவரின் கிரியாட்டினைனின் அளவு குறைந்து நார்மலுக்கு வந்து விட்டது.

அந்த வைத்தியம்:

ஒரு தம்ளர் தண்ணீரைக் கொதிக்க வைக்க வேண்டும். அது கொதிக்கும்போது ஒரு ஸ்பூன் டீத்தூள் [ எந்த பிராண்டாக இருந்தாலும் பரவாயில்லை, ரெட் ரோஸ் அல்லது தாஜ்மஹால் எதுவாக இருந்தாலும் ] போட்டு அந்த டீ டிக்காஷன் பாதியானதும் வடிகட்ட வேண்டும்.


உடனேயே சாதாரண தண்ணீர் பாதி டம்ளர் எடுத்து டீ டிக்காஷனுடன் கலந்து விடவும்.இப்போது அது ஒரு தம்ளராகி விடும். சீனி எதுவும் கலந்து விடாமல் அப்படியே குடிக்க வேண்டும். காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் இதைக்குடிக்க வேண்டும். இவ்வாறே 12 நாட்கள் குடித்து 13ம் நாள் கிரியாட்டினைன் அளவை பரிசோதித்துப்பார்த்தால் அது குறைந்திருக்கும். இன்னும் குறைய வேண்டுமென்றால் இரண்டு மூன்று நாட்கள் இடைவெளி விட்டு மறுபடியும் 12 நாட்கள் குடிக்க வேண்டும்.

அசத்தும் முத்து:

உத்திரப்பிரதேசம் லக்னோவைச்சேர்ந்த டாக்டர் சரோஜினி அகர்வால் ஒரு சாதனைப்பெண்மணி! தற்போது 80 வயதிற்கு மேலிருக்கும் இவர் கடந்த 30 வருடங்களாக பெண் குழந்தைகளுக்கான ஆசிரமத்தை நடத்தி வருகிறார். 800க்கும் அதிகமான பெண் குழந்தைகளை வளர்த்து, படிக்க வைத்து அவர்களை சமூகத்தில் நல்ல நிலைக்கு கொண்டு வந்திருக்கிறார். மேல் படிப்பு படிக்க வைக்கவும் இவரின் ஆசிரமம் உதவுகிறது.பல பெண்கள் முதுகலைப்பட்டம் பெற்று பிரகாசிக்கிறார்கள். இத்தனையும் செய்து வரும் இவர் 30 வருடங்களுக்கு முன் தன் மகளை ஒரு விபத்தில் இழந்தவர். அந்த மரணமே அனாதைகளாக வீசியெறியும் பெண் குழந்தைகளைக்காக்கும் உத்வேகத்தை இவருக்குக் கொடுத்திருக்கிறது. ஆரம்பத்தில் தன் வீட்டிலேயே மூன்று அறைகளில் தன் காப்பகத்தை நடத்தி வந்தவர் இத்தனை வருடங்களில் ஒரு மூன்றடுக்கு வீட்டைக்கட்டி வாசலில் ஒரு தொட்டிலையும் நிறுவியிருக்கிறார். வேண்டாத குழந்தைகள் அங்கே வந்து விழ விழ இவர் அத்தனை குழந்தைகளையும் தன் இல்லத்தில் வைத்து, காத்து வருகிறார். கண்ணினி மையம், நூலகம், கைத்தொழில் களங்கள், தையலகங்கள், தோட்டம், டெலிவிஷன் அறை என்று பல வசதிகளை தன் ஆசிரமத்து பெண் குழந்தைகளுக்காக இவர் உருவாக்கியிருக்கிறார். குழந்தைகள் நலத்திற்கான தேசீய விருதும் பல விருதுகளும் பெற்றுள்ள இவருக்கு நாமும் சல்யூட் செய்வோம்!!

இவரைத்தொடர்பு கொள்ள: தொலைபேசி: 094511 23170
விலாசம்: 2/179, மனிஷா மந்திர் மார்க்,
           விரம் காந்த்- 2, கோம்தி நகர்,
           லக்னோ, உத்திரப்பிரதேசம்- 226010 

ரசித்த முத்து:

இலேசான வெய்யில் கீற்றோடே பூந்தூறலாய் மழை பெய்யும்போது அதைப்பார்க்க கண்கள் கோடி வேன்டும்போல இருக்கும் எப்போதும்! அதுவும் சுற்றிலும் பசுமையும் கரிய மேகங்களும் பச்சைப்பசேலென்று மலைகளுமாய் இயற்கையின் பேரழகை நம் விழிகள் அள்ளிப்பருகும்போது மனதின் உற்சாகத்திற்கு கேட்கவா வேண்டும்? இத்தனை அழகிற்கிடையே ஒரு இனிமையான பாட்டு! கேட்டு, பார்த்து ரசியுங்கள்!!

Wednesday 27 September 2017

அச்சுறுத்தும் பிளாஸ்டிக்!!

சில நாட்களுக்கு முன் பிளாஸ்டிக் உபகரணங்கள் நம் வாழ்க்கையில் எந்தெந்த விதங்களில் விளையாடுகின்றன என்பதை ஒரு புத்தகத்தில் விரிவாகப்படித்த போது மனம் அதிர்ந்து போயிற்று. ஓரளவு இந்த பிளாஸ்டிக் உபகரணங்கள் எந்த அளவு ஆபத்தை விளைவிக்கின்றன என்பது தெரியுமென்றாலும் அதை விரிவாகப்படித்தபோது அவற்றை எல்லோரும் அறிய இங்கே விரிவாகக் கொடுக்க வேண்டுமென்ற எண்ணமே இந்த பதிவு!! 

நாம் காலை எழுந்து பல் துவக்குவதிலிருந்து இரவு பால் குடிப்பது வரை எங்கும் எதிலும் பிளாஸ்டிக் தான். நாம் உபயோகிக்கும் அனைத்துமே தற்போது பிளாஸ்டிக் மயமாகி விட்டது. நம் வாழ்க்கையில் அது நிரந்தரமாகக் கலந்து பின்னிப்பிணைந்து இருக்கும்போது அதைப்பற்றிய விழிப்புணர்வு நமக்கு இருந்தால் மட்டுமே நம் உடலிலும் வாழ்க்கையிலும் பிளாஸ்டிக்கால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ள‌முடியும்!

பிளாஸ்டிக் பொருள்களில் சூடான உணவை வைக்கும்போது பிளாஸ்டிக்கில் உள்ள‌ ரசாயனம் நம் உடலில் கலந்து விடுகிறது. இப்படி ஒவ்வொரு நாளும் தெரிந்தோ தெரியாமலோ ரசாயங்கள் நம் உடல் உறுப்புகளை தாக்கி பலவித நோய்களுக்கும் குறைபாடுகளுக்கும் நம்மை ஆளாக்குகின்றன.

தாலேட்ஸ் என்னும் பொருளைப்பயன்படுத்தி பிளாஸ்டிக் உருவாக்கப்படுகிறது. இது தான் பிளாஸ்டிக் பொருள்களை வளைக்கவும் மென்மையாக்கவும் செய்கிறது. இதில் ஏழு வகை தாலேட்ஸ் அபாயகரமானவை. தாலேட்ஸ் உள்ள பிளாஸ்டிக் பொருள்களைப்பயன்படுத்துவதால் ஆண்களுக்கு ஆண்மைக்குறைவு, குழந்தைகளுக்கு மார்பக வளர்ச்சி, கருச்சிதைவு, குறைப்பிரசவம், ஆஸ்துமா போன்ற பிரச்சினைகள் வருகின்றன.

நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு பிளாஸ்டிக் பொருள்களிலும் அதன் கீழ்ப்புறம் முக்கோண வடிவத்துள் ஒரு எண்ணைப்பொறித்திருப்பார்கள். அந்த எண்னை அடிப்படையாகக்கொண்டு அந்த பிளாஸ்டிக் பொருள் எந்த மூலக்கூற்றை அடிப்படையாகக் கொன்டு தயாரிக்கப்பட்டுள்ளது, அதை எத்தனை நாட்களுக்குப்பயன்படுத்தலாம் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.நீங்கள் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பாட்டில் அல்லது பிளாஸ்டில் டப்பாவின் கீழ்ப்புறம் எண் 1 என்று அச்சிடப்பட்டிருந்தால் அது ' பெட்' என்று சொல்லப்படும் ' பாலிஎத்தின் டெரிபதலேட்' என்ற மூலக்கூறால் செய்யப்பட்டவை. பொதுவாய் தண்ணீர், ஜூஸ் போன்றவை இந்த பாட்டிலில்தான் அடைக்கப்பட்டு வருகிறது. இந்த பாட்டில்களை ஒரு முறை தான் பயன்படுத்த வேண்டும். நாள்பட பயன்படுத்துவது ஆபத்தை விளைவிக்கும். இந்த வகை பிளாஸ்டிக் தானாகவே சிதையும் தன்மை கொண்டது. அதனால் இந்த வகை பாட்டில்களில் ‘ crush the bottle after use ‘ என்று ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டிருக்கும்.முக்கோண வடிவின் உட்புறம் 2 என்ற எண் இருந்தால் இந்த வகை பிளாஸ்டிக் ' ஹை டென்சிட்டி பாலிஎத்திலீன்' என்ற மூலக்கூறால் செய்யப்பட்டவை என்று அர்த்தம். ஷாம்பூ பாட்டில்கள், பெளடர் டப்பாக்கள் இந்த வகையைச் சேர்ந்தவை.

முக்கோணத்தினுள் 3 என்ற எண் 'பாலிவினை குளோரைடால்' உருவாக்கப்பட்டவை. மேஜை விரிப்புகள், விளையாட்டுப்பொருள்கள் இதனால் உருவாக்கப்பட்டவை.

முக்கோணத்தினுள் 4 என்ற எண் இருந்தால் அவை லோ டென்சிட்டி பாலிஎத்திலீனால் உருவாக்கப்பட்டவை. இதை எப்போது வேண்டுமானாலும் அழித்து மீண்டும் உருவாக்கலாம். பிளாஸ்டிக் கப், நியூஸ் பேப்பர், கடைகளில் கொடுக்கப்படும் கவர்கள் போன்றவை இவற்றால் உருவாக்கப்பட்டவை.

எண் 5 குறிக்கப்பட்ட பொருள்கள் பாலி புரோபைலீனால் உருவாக்கப்பட்டவை. இது எல்லாவற்றையும் விட சிறந்தது. ஐஸ்க்ரீம் கப், ஸ்ட்ரா போன்ற பொருள்கள் இந்த வகை மூலக்கூறால் உருவாக்கப்பட்டவை.

எண் 6 கொண்டு குறிக்கப்பட்ட பொருள்கள் பாலிஸ்ட்ரீன் என்ற மூலக்கூறால் ஆனவை. இந்த பிளாஸ்டிக் பொருள்கள் மிகவும் ஆபத்தானவை. பிளாஸ்டிக் ஸ்பூன், கப், போர்க் முதலியவை இந்த வகையைச் சார்ந்தவை.

என் 7 குறிக்கப்பவை பாலிகார்போனைட் பைஸ்பினால் என்ற மூலக்கூறால் செய்யப்பட்டவை. இந்த பிளாஸ்டிக் பொருள்களை நீண்ட நாட்கள் பயன்படுத்தினால் கான்ஸர், இதய நோய் வரலாம். இப்போது பிரபலமாக இருக்கும் டிபன் பாக்ஸ்கள் இந்த மூலக்கூறால் ஆனவையே. அதனால் அதை அடிக்கடி மாற்றுவது நல்லது.பிளாஸ்டிக் டப்பாக்களின் அடியில் 1, 2, 5 என்று குறியீடுள்ளவை உணவுப்பொருள்கள் வைப்பதற்காக தரமாகத் தயாரிக்கப்பட்டவைகளே. அவற்றை தாராளமாக பயன்படுத்தலாம். இந்த ரக பிளாஸ்டிக் உருகாது. வண்ணம் கரையாது. மற்ற எண்கள் கொண்ட பிளாஸ்டிக்கில் காரீயம் கலந்திருப்பார்கள். இது மனித உடலுக்கு மிகவும் ஆபத்தை உண்டாக்கும். இதில் உணவுப்பொருள்கள் வைத்தால் அவற்றில் விஷம் ஏறி ஆபத்தை விளைவிக்கும். எண் குறியீடு இல்லாத பிளாஸ்டிக் பொருள்களை வாங்கவே வாங்காதீர்கள்.

நல்ல பிளாஸ்டிக் என்கிற ஒன்று கிடையவே கிடையாது. பிளாஸ்டிக்கை மோசமானது, மிக மோசமானது என்றே வகைப்படுத்த முடியும். ஒரு லட்சம் சிந்தெடிக் கெமிக்கல்கள் பிளாஸ்டிக்கில் உள்ளன. அதில் ஆறாயிரத்தை மட்டுமே இதுவரை ஆய்வு செய்துள்ளார்கள். மீதம் உள்ளவை என்ன தீமைகளை ஏற்படுத்தும் என்பதை இதுவரை கண்டு பிடிக்கவில்லை.

பொருளாதாரத்தில் வமாக உள்ள, சத்தான உணவு உண்பவர்களின் இரத்தத்தை ஆய்வு செய்தபோது, அதில் 275 வகையான ரசாயங்கள் இருந்திருக்கின்றன. அவர்களுக்கே இந்த நிலை என்றால் சாதாரண மக்களின் நிலை என்ன?

எந்த  பிளாஸ்டிக் பொருளாக இருந்தாலும் அதில், 1,000 பி.பி.எம் வரைதான் தாலேட்ஸ் கலந்திருக்க அனுமதி உள்ளது. ‘பாக்பேக்’ எனும் பைகளில் குழந்தைகளுக்குப் பிடித்த கார்ட்டூன்களை அச்சிட்டு, அதன் முன் வடிவத்தில் தாலேட்ஸ் பிளாஸ்டிக் பொருத்தப்படுகிறது. பச்சிளம் குழந்தைகள் இந்தப் பொம்மையைப் பயன்படுத்தும்போது, வாயில்வைக்க வாய்ப்பு உள்ளது.  எனவே தாலேட்ஸ் பிளாஸ்டிக் பொருத்தப்பட்ட பைகளைத் தவிர்ப்பது நல்லது.

குழந்தைகள் குளிக்கும் வாட்டர் டப்பில் ரப்பர் வாத்துகளை நீந்தவிடுவது உண்டு. குழந்தைகளைக் குளிக்கவைக்க பெற்றோர் செய்யும் யுக்தி இது. இந்த வாத்து பொம்மையில் 1,400 பி.பி.எம் தாலேட்ஸ் கலக்கப்படுகிறது.


குழந்தைகளுக்கான பொருள்களை வாங்கும்போது  [BPA FREE], [ PHTHALATES FREE], [ P.V.C FREE] என்று குறிப்பிட்டுள்ளதா என்று கவனிக்க வேண்டும். அவெனில் சமைக்க எவ்வளவு  பெரிய பிராண்டாக இருந்தாலும் பிளாஸ்டிக்கைப்பயன்படுத்தக்கூடாது. கண்ணாடி பாத்திரங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். வீட்டிற்கு வாங்கும் தண்ணீர் பாட்டிலின்  எண் 2, 4 , 5 என்று அச்சிடப்பட்டிருக்க வேண்டும்.