Thursday 31 March 2011

சேமியா பருப்பு உசிலி

சுவையான சமையல் பகுதிக்கு வந்து ரொம்ப நாட்களாகி விட்டதால் மறுபடியும் ஒரு ருசிகரமான சிற்றுண்டி செய்வதைப் பற்றி இங்கே எழுதலாம் என நினைத்தேன். வழக்கமான இட்லி, தோசை, உப்புமா, பொங்கல், அடை இவைகளைத் தவிர்த்து இங்கே நான் கொடுக்கப்போகும் புதிய குறிப்பு சேமியா பருப்பு உசிலி!


சேமியாவில் கிச்சடி, உப்புமா, பாயசம், இட்லி என்று பல வகை சமையல் செய்யலாம். இந்த சேமியா பருப்பு உசிலியில் பருப்புகள் அடங்கியிருப்பதால் ரொம்பவும் சத்தான உசிலி இது.தேவையானவை:

துவரம்பருப்பு- 1 கப்
கடலைப்பருப்பு- 1 கப்
மிளகாய் வற்றல்-6
பெருங்காயத்தூள்- அரை ஸ்பூன்
சேமியா- 1 கப்
தேவையான உப்பு
நெய்- 2 மேசைக்கரண்டி
எண்ணெய்- 2 மேசைக்கரண்டி
கடுகு- 1 ஸ்பூன்
உளுத்தம்பருப்பு- 2 ஸ்பூன்
மஞ்சள் தூள்- அரை ஸ்பூன்
பொடியாக அரிந்த கொத்தமல்லி- அரை கப்
கறிவேப்பிலை- 20 இலைகள்
மெல்லியதாக அரிந்த வெங்காயம்- 1 கப்
பொடியாக அரிந்த தக்காளி- 1 கப்
[தேவையானால்]தேங்காய்த்துருவல்- 1 கப்

செய்முறை

மிளகாய்களை விதைகள் நீக்கி, பருப்பு வகைகளுடன் போதுமான நீரில் ஒரு மணி நேரம் ஊறவைக்கவும்.

தண்ணீரை வடித்து போதுமான உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.

இத்துடன் சேமியா, சிறிது உப்பு, மஞ்சள் தூள் சேர்த்துக் கலந்து அரை மணி நேரம் ஊறவைக்கவும்.

இட்லித்தட்டில் ஊற்றி 10 நிமிடங்கள் ஆவியில் வேக வைக்கவும்.

வெளியே எடுத்து ஆறியதும் உதிர்த்துக்கொள்ளவும்.

வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெயையும் நெய்யையும் ஊற்றவும்.

கடுகைப்போட்டு அவை வெடித்ததும் உளுத்தம்பருப்பு, பெருங்காயம் போட்டு வதக்கவும்.

சிறிது சிவந்ததும் வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து, தக்காளி நன்கு குழையும் வரை வேக வைக்கவும்.

எண்ணெய் மேலே தெளிந்து வந்ததும் உதிர்த்திருப்பவற்றைச் சேர்த்து குறைந்த தீயில் சில நிமிடங்கள் அனைத்தும் சேரும்படி கிளறவும்.

அடுப்பை அணைத்து தேங்காய்த்துருவல் வேண்டுமானால் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

சுவையான சேமியா பருப்பு உசிலி தயார்!!Thursday 24 March 2011

நம் உயிர் நம் கையில்!

வீட்டிலுள்ள என் சிறிய நூலகத்தில் பழைய நாவல் ஒன்றைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது தற்செயலாக பழைய வார இதழ்த் தொகுப்பு ஒன்றில் இந்த செய்தியைப் படிக்க நேர்ந்தது. மருத்துவ உலகத்தில் எத்தனை எத்தனையோ புரட்சிகள், புதிய கன்டு பிடிப்புகள் என்று தினம் தினம் ஏற்பட்டுக்கொன்டே இருக்கின்றன. ஆனாலும் இந்த செய்தி எனக்கு மிகவும் புதிய செய்தியாக இருந்தது. கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு முன்பே நடைபெற்ற உண்மை சம்பவம் இது. இந்த சிகிச்சை இன்னும் நடைமுறையில் இருக்கிறதா, இந்த சிகிச்சையில் இன்னும் பல மாற்ற‌ங்கள் ஏற்பட்டிருக்கின்ற‌னவா என்று தெரியவில்லை. யாராவது ஒரு மருத்துவர் இதற்கு பதில் சொன்னால் நன்றாக இருக்கும். மயிர்க்கூச்செரியும் இந்த அனுபவத்தை நான் இங்கே என் அன்புத் தோழமைகளிடம் பகிர்ந்து கொள்கிறேன். எந்த வியாதியும் துன்பமும் வெறும் நிவாரணங்களினால் மட்டும் தீர்ந்து விடாது. அதற்கு மேல் மனதில் தைரியமும் தளராத நம்பிக்கையும் இருக்க வேன்டும். அப்போதுதான் துன்பங்களையும் வியாதியையும் எதிர்த்து ஒரு மனிதனால் போராட முடியும். அப்படி போராடிய மனிதன் கதை இது.

1985ம் வருடம் நடந்த கதை இது. இவர் பெயர் காந்தி சாமுண்டீஸ்வரன். இளைஞர். ஒரு புத்தக நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். ஒரு நாள் ஆட்டோ விபத்தில் சிக்கி, தோள் சதை பிய்ந்து மருத்தவ மனையில் சேர்க்கப்பட்டார். மருத்துவர்கள் அனைத்து விதமான சிகிச்சைக்ள் செய்தும் காயங்கள் ஆறாமல் இருக்கவே, பல்வேறு சோதனைகளின் முடிவில் மருத்துவர்கள் அவருக்கு ' பிளாஸ்டிக் அனிமியா' இருப்பதைக் கண்டுபிடித்தார்கள். அதாவது, ரத்தத்தை உறைய வைக்கக்கூடிய 'பிளேட்லெட் ' ரத்த அணுக்கள் அவருக்கு மிகவும் குறைவாக இருந்தன. சராசரியாக ஒரு கனமில்லி மீட்டரில் இருக்க வேன்டிய 1.5 லட்சம் பிளேட்லெட்டுக்களுக்கு பதிலாக சுமார் 35000 தான் இருந்தன. ரத்த அணுக்களை உற்பத்தி செய்யும் எலும்பு மஜ்ஜையும் இறுகி விட்டது. பல வித சிகிச்சைகள் அளித்தும் சரியான பலன் அளிக்காமல் மீதமிருக்கிற ஒரே ஒரு வழியைத்தான் மருத்துவ நிர்வாகம் அவருக்குச் சொன்னது.

20 நாட்களுக்கு ஒரு முறை அவர் இரத்தம் ஏற்றிக்கொள்ள வேண்டும் என்பதுதான் அது. காந்திக்கு ரத்தம் ஏற்றிக்கொள்வது வழக்கமாகிப் போனது. உடலில் ரத்த அணுக்கள், பிளேட்லெட்டுகள் குறையும்போது,கண்கள் இருண்டு மயங்கி கீழே விழுவார்.பிறகு மருத்துவமனையில் கண் விழிப்பார். யாராவது ரத்தம் ஏற்றிக்கொன்டிருப்பார்கள். இதற்கு தீர்வும் முறையான சிகிச்சையும் கிடையவே கிடையாதா எனப் பார்க்காத மருத்துவமும் தேடாத மருத்துவரும் எதுவுமே இல்லாமல் போயின‌. கடைசியில் வேலூர் சி.எம்.சி மருத்துவ மனையின் குருதியல் துறை மருத்துவர், டாக்டர் மாமன் சான்டி, ஒரு மருந்து இருப்பதாகச் சொன்னார். 'இந்த மருந்துக்கு நோய் தீர்க்கும் உறுதி 50 சதவிகிதம்தான் என்பதையும் உயிருக்கு உத்தரவாதமில்லை என்பதையும் மருந்து வெளி நாட்டிலிருந்துதான் தருவிக்க வேண்டுமென்பதையும் சொன்னார்.

குதிரையின் சீரம்தான் அது!

காந்திக்கு வாழ்க்கையை வாழ்ந்தே தீர வேண்டுமென்ற விருப்பம் இருந்தது. மருந்து பற்றி விசாரித்தபோது, அது அன்றைய தேதியில் 1700 டாலர்கள் என்று சொல்லப்பட்டது. ஏற்கனவே கைக்கு மீறிய செலவுகளால் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தவர்க்கு நண்பர்கள், தந்தை, புத்தக வெளியீட்டார்கள் என்று பலரும் உதவினார்கள். மருந்தும் ஒரு விமானி மூலம் தில்லி வந்து சேர்ந்தது. ஆனால் அதை வெளியில் எடுத்து வர போராடினார்கள். சுங்க வரி 24% கட்ட வேண்டும் என்றார்கள். இங்கிலாந்து மருத்துவர்களும் இந்திய மருத்துவர்களும் அது உயிர் காக்கும் மருந்து என்று சான்று கூறினாலும் அரசின் உயிர் காப்பு மருந்துப்பட்டியலில் லிம்ப்போகுளோபின் என்ற இந்த மருந்து இல்லை. ஒரு மத்திய அமைச்சர் உதவியுடன், உத்தரவாதம் அளித்து படாத பாடுபட்டு மருந்தை வெளியில் கொன்டு வந்தார்கள்.

அந்த மருந்து இந்தியாவிற்கும் புதிது. மருத்துவர்களுடன் சேர்ந்து காந்தியும் அந்த மானுவல் புத்தகத்தைப் படித்தார்.
இந்த மருந்தில் ஒரு மில்லி மீட்டர் அளவு எடுத்து ஒரு பாட்டில் சலைனில் கலந்து முதலில் பரிசோதனைக்காக செலுத்த வேண்டும். செலுத்திய சிறிது நேரத்தில் தலைமுடி, உடலிலுள்ள‌ முடிகள் விறைக்கும்.பயங்கரமாக உடல் அரிப்பெடுக்க ஆரம்பிக்கும். நாடித்துடிப்பு குறைந்து கொண்டே வரும். கடுமையாகக் குளிரும். குதிரையின் சீரத்தை உடம்பு ஏற்றுக்கொண்டதும் மீண்டும் உடலில் வெப்பம் கூடி, நாடித்துடிப்பு சீரான நிலைமைக்கு வரும். அதன் பின் நாள்தோறும் 5 எம்.எல் மருந்து செலுத்த வேண்டும்.

காந்திக்கு இது எப்படியும் முடியலாம் என்று புரிந்தது. 'எனக்கொரு ஆசை. நான் என் இதயத்துடிப்பை கண்ணால் பார்த்துக்கொன்டே இருக்க வேன்டும்' என்றார். அவரது ஆசையை ஒத்துக்கொண்ட டாக்டர் மாமன் சாண்டி அவர் அருகில் ஒரு மானிட்டரை வைக்க ஏற்பாடு செய்தார். நர்ஸ் அதைப்பற்றி விளக்கிச் சென்றார்.

அவர் கூறியவை காந்தியின் மனதில் ரீங்காரமிட்டுக்கொண்டே இருந்தது.

" பாருங்க, இந்த மானிட்டரில் உங்க இதயத்துடிப்பின் கிராஃபிக் தெரியும். எழுபது இருந்தா நார்மல். மருந்து சாம்பிள் டெஸ்டில் பல்ஸ் 40க்கு கீழே இறங்கும். அதுக்கும் கீழே போனால் மூச்சு திணறும். கீழே நேர்க்கோடாகி விட்டதுன்னா கொஞ்ச தூரம் அப்படியே போய் புள்ளியா நின்னுடும், அவ்வளவு தான்"

காந்திக்கு அந்த மருத்து மனை முழுவதும் ஒரு நண்பர் கூட்டமே இருந்தது. அவரது தந்தையின் பல்கலைக் கழகப்பணியால், வேளாண்மை மருத்து மாணவர்கள் நிறைய பேர் புதிதாய் ரத்தம் கொடுக்கக் காத்திருந்தார்கள். மருத்துவ சிகிச்சை தேவைப்படும் அளவிற்கு ரத்த அணுக்கள் உடலில் ஏற்றப்பட்டு தயார் நிலையில் அவர் வைக்கப்படார். மருத்துவ மனை முகப்பிலுள்ள தேவாலயத்தில் பிரார்த்தனைக் கூட்டம் நடந்தது. காந்தியுடன் அவரைப்போலவே நோய் கொண்ட 42 வயது, 25 வயது ஆண்கள், 12 வயது சிறுமி என்று மூன்று பேர் இந்த சாம்பிள் டெஸ்டிற்கு இணக்கம் தெரிவித்திருந்தார்கள். காந்திக்காக வரவழைக்கப்பட்ட மருந்தில் பரிசோதனைக்காக தயாரானார்கள்.

குதிரையின் சீரம் கலக்கப்பட்ட சலைன் காந்தியின் உடலில் செலுத்தப்பட்டது. என்னென்ன நடக்கும் என்று சொல்லப்பட்டிருந்ததோ, அத்தனையும் நடக்க வேண்டும்னெறு மனசு பிரார்த்தனை செய்தது. உடல் அணுக்களிலெல்லாம் இந்த மருந்தை ஏற்றுக்கொள் என்று மனசு கெஞ்சி அலைந்தது.

சிறிது நேரத்தில் முடி ஜிவ்வென்று விறைத்து குத்திட்டு நின்றது. காந்தி சந்தோஷம் தாங்காமல் விறைத்து நின்ற முடியைத் தடவினார்.

பக்கத்தில் படுத்திருந்த 12 வயது சிறுமிக்கு மருந்தின் எதிர் விளை
வால் கண், காதுகளில் உள்ள‌ சிறு சிறு நரம்புகள் உடைந்து ரத்தப் பெருக்கு அதிகமாக ஏற்பட, அவளை மருத்துவர்களால் காப்பாற்ற முடியவில்லை.

காந்திக்கு அரிப்பு ஏற்பட்டதும் கைகள் கட்டப்பட்டன. குளிர் எடுத்ததும் உடலில் போர்வைகள் போர்த்தப்பட்டன. 
இதயத்துடிப்பு குறைய ஆரம்பித்ததும் மூச்சுத் திணறல் ஆரம்பித்தது. மார்புக்குள்ளே ஒரு வெற்றிடம் அழுத்திப்பிடிக்க ஆரம்பித்ததும், காந்தியின் மனது ' எப்படியாவது உயிர் வாழ வேண்டும்' என்று தொடர்ந்து புலம்ப ஆரம்பித்தது.

சில விநாடிகளில் அவரின் மூச்சுத் திணறல் குறையத் தொடங்கி உடலின் வெப்ப‌ம் கூட ஆரம்பித்தது. அருகிலிருந்த 25 வயது வாலிபர் கண் திறக்காமலேயே இறந்து போனார். அவர் பக்கத்தில் படுத்திருந்த 45 வயது ஆண்மகன் இறந்து விட்டார் என்று உறுதி செய்யப்பட்டு, பிணவறைக்கு எடுத்துச் செல்லப்பட்ட பின் படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்தார். அங்கிருந்து நடந்தே தன் படுக்கைக்கு வந்ததும் அனைவரது மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. ஆனால் மூன்றாம் நாள் இறந்து போனார்.

காந்தியின் உயிராசை மட்டும் நிலைத்தது. அதன் பின் தொடர்ந்து ஒரு வாரம் 5 எம்.எல் மருந்து அவரது உடலில் செலுத்தப்பட்டது.

இதற்குப்பிறகு தான் க்ளைமாக்ஸே இருக்கிறது. அவரின் உடல் நிலையில் பல சோதனைகள் நடத்திய டாக்டர் மாமன் சாண்டி, காந்தியின் எலும்பு மஜ்ஜையில் ஒரு ஆண்டி பயாடிக் மருந்தின் பாதிப்பு இருப்பதைக் கண்டறிந்தார். கடந்த சில வருடங்களில் அவர் என்னென்ன மருந்துகள் சாப்பிட்டார் என்பது குறித்து காந்தியிடம் விசாரித்தார். எப்போதாவது சளி பிடிக்கும்போதெல்லாம் தானே மருந்துக்கடையில் ஏதேனும் ஆண்டி பயாடிக் மருந்து வாங்கி சாப்பிட்டதாக காந்தி சொன்னார். கடைசியாக எப்போது அது போல ஆண்டி பயாடிக் மருந்து சாப்பிட்டீர்கள் என்று நினைவு படுத்திப்பாருங்கள் என்று டாக்டர் தொடர்ந்து வற்புறுத்தவே, நினைவுகளைக் குடைந்ததில் கடைசியாக காந்திக்கு, தான் பெங்களூர் ரயில் நிலையத்திற்கு ஓடுகிற அவசரத்தில், ஒரு மருந்துக் கடையில் தான் கேட்ட மருந்து இல்லாததால் ஏதோ ஒரு ஆண்டி பயாடிக் மருந்து கொடுங்கள் என்று வாங்கி சாப்பிட்டது நினைவுக்கு வந்தது. பல்வேறு ஆண்டிபயாடிக் மருந்துகளைக் காட்டி இதுவா, அதுவா என்று டாக்டர் விசாரிக்க, கடைசியில் காந்தி சாப்பிட்ட மருந்தை கண்டு பிடித்தார் டாக்டர் மாமன் சாண்டி. அந்த மருந்தையும் எலும்பு மஜ்ஜையில் ஏற்பட்டிருந்த வீழ்படிவையும் பரிசோதித்துப்பார்த்ததில் காலம் முடிந்து போன அந்த மருந்தைச் சாப்பிட்டதுதான் காந்தியின் அத்தனை துயரங்களுக்கும் காரணம் என்பதை டாக்டர் கண்டறிந்தார். தகுந்த சான்றுகள் இலாததால் அவரால் நுகர்வோர் கோர்ட்டில் இது குறித்து வழக்கு போட முடியவில்லை.

அவர் மருத்துவ மனையை விட்டு வெளியேறும்போது, மருத்துவர்கள் அவர் திருமணம் செய்து கொள்வது நல்லதல்ல என்றும் குழந்தைகள் பிற‌‌ப்பது அதைவிட நல்லதல்ல என்றும் எச்சரித்தார்கள்.குழந்தை பிறந்தால் அது மூளை வளர்ச்சியற்றுத் தான் பிறக்கும் என்று அறிவுறுத்தினார்கள். ஆனால் அதற்கு முன்பே திருமணம் செய்திருந்த காந்திக்கு, குறைகள் ஏதுமற்ற‌ அழகான குழந்தையே பிற‌ந்தது.

கோவையில் புத்தக வெளியீட்டு நிறுவனம் நடத்திக்கொண்டிருக்கும் இவர் 18 வருடங்கள் முன் சொன்னது.

" இப்போது என் உடலில் 1.55 லட்சம் பிளேட்லெட்டுக்கள் உள்ளன. என்னுள் இருக்கும் குதிரையின் சீரம் ஒரு குதிரையைப்போலவே என்னைக் களைப்பிலாமல் உழைக்க வைக்கிற‌து"!

மிகவும் ஆபத்தான நிலையில் உயிர் வாழ்ந்த இவர், அதையும் விட பல மடங்கு ஆபத்தான சிகிச்சை முறையை எடுத்துக்கொண்டது இவரது மன உறுதியையும் தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் எடுத்துக்காட்டுகிறது.

இன்றைய நடைமுறை உலகில் அவசரத்திற்குக்கூட மருத்துவரிடம் செல்லப் பொறுமையில்லாமல் ஒரு மருந்துக்கடை சென்று கேட்டு மருந்து வாங்கி சாப்பிடுபவர்கள் ஏராளம். இப்படி சாப்பிடுவது எந்த அள‌வு தீவிரமாக உயிரைப் பாதிக்கும் என்று இதைப்படித்த பிறகாவது சிலராவது உணர வேண்டுமென்பதுதான் இந்தப் பதிவின் நோக்கம். எல்லோருக்கும் டாக்டர் மாமன் சாண்டி போன்ற அருமையான மருத்துவர் கிடைத்து விட மாட்டார்.

நம் உயிர் நம் கையில்தான் பெரும்பாலான நேரங்களில் இருக்கின்றது!


 

 

Monday 14 March 2011

ஆதலினால் அன்பு செய்வோம்!!!

சென்ற மார்ச் 16ந்தேதி தான் என் 'முத்துச்சிதறலை'த் துவங்கினேன். பல ஆண்டுகளாய் உள்ள‌த்திலேயே நீருபூத்த நெருப்பாக‌
கனன்று கொன்டிருந்த எண்ணங்களுக்கு வடிகால் என் நினைத்தே இதைத் தொடங்கினேன். எழுத ஆரம்பித்ததும்தான் இந்த வலையுலகம் என்னை பல விதங்களிலும் பிரமிக்க வைத்தது. எத்தனை கவிஞர்கள்! எத்தனை எழுத்தாளர்கள்! எத்தனை சமையல் வல்லுனர்கள்! எத்தனை கருத்தாழம் மிக்க பதிவுகள்! எத்தனை மனம் நெகிழ வைத்த, சிந்திக்க வைத்த பதிவுகள்! இந்த ஒரு வருடத்தில் இப்படிப்பட்ட திறமையாளர்கள் பலரின் அன்பும் நட்பும் அறிமுகமும் பின்னூட்டங்களும் கிடைத்திருப்பது மனதை நெகிழ வைக்கிறது! பெருமிதப்பட வைக்கிறது! 25723 பார்வையாளர்கள், 113 ஃபாலோவர்ஸ், 69 இடுகைகள்,  என்று என் ப‌யணம் வெற்றிகரமாகத் தொடர, அன்பான பின்னூட்டங்களும், இன்ட்லியில் ஓட்டுக்களும் அளித்து அளித்து என்னை பெரிதும் உற்சாகப்படுத்தும் அன்பு நெஞ்சங்களுக்கு

                              என் இதயங்கனிந்த நன்றிகள்!! 


உங்கள் அனைவரின் அன்பும் பின்னூட்டங்களும் என்றும் இனிதே தொடரும் என்ற நம்பிக்கையில் என் பயணத்தைத் தொடர்கிறேன்!

                                  ஆதலினால் அன்பு செய்வோம்!!!  
ஒரு வருடத்தை நிறைவு செய்யும் பதிவு ஒரு சிறந்த விஷயத்தை மூலக்கருவாகக் கொண்டிருக்க வேண்டுமென நினைத்தேன். உலகில் அன்பை விட சிற‌ந்தது எது?

பிரியம், பாசம், சினேகிதம், தாய்மை, காதல் என்று பல வடிவில் இருக்கும் இந்த 'அன்பு' என்ற மாபெரும் சக்தியைப்பற்றி எத்தனை எத்தனை திரைப்படங்கள், பாடல்கள், புத்தகங்கள் வெளி வந்திருக்கின்றன!!

முன்பெல்லாம் தமிழ் எழுத்தாளர்களின் நாவல்களில் இந்த அன்பு தான் பிரதானமாயிருக்கும். அதைச் சுற்றித்தான் கதை பின்னப்பட்டிருக்கும். இதை வெளிப்படுத்தி சொல்லலங்காரமாக எழுதுவதில் அகிலன், நா.பார்த்தசாரதி இவர்களெல்லாம் தேர்ந்தவர்கள். கல்கி மிக எளிமையான வார்த்தைகளால் கதாபாத்திரங்களின் அன்பை நமக்குப் புரிய வைத்திருப்பார்.

எழுத்தாளர் நா.பார்த்தசாரதி தன் 'பொன் விலங்கு' என்ற நாவலில் சில இடங்களில் அன்பைப்பற்றி மிக அருமையாக எழுதியிருப்பார்.

"பரிசுத்தமான அன்பு என்பது மனம் நெகிழ்ந்து உருகும் தூயவர்களின் கண்ணீரால் உலகில் நிரூபிக்கப்படுகிறது"

என்று ஓரிடத்தில் சொல்லுவார்.
மற்றொரு சமயம்

" மனதின் எல்லா நோய்களுக்கும் அன்பு தான் மருந்து. அதே அன்பு பொய்யாய் இருந்து விட்டாலோ அதை விட பெரிய நோய் எதுவுமில்லை" 

என்று உருகியிருப்பார். எழுத்தாளர் கல்கி தனது 'சிவகாமியின் சபதத்தில்' இறுதி அத்தியாயத்தில், தன் கதாநாயகி கடவுளுக்கு மட்டுமே அன்பு செய்யப் பிறந்தவள், அவனின் காதலியானவள், மானிடனுக்காகப்பிறந்தவள் இல்லை என்று இதயம் உருக முடித்திருப்பார்.

கவிஞர் பாரதியார் '
துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம் அன்பில் அழியுமடி‍! அன்பிற்கழிவில்லை காண்" என்று சொல்லி மறைந்தார்.

சங்கப் புலவர் நரிவெரூத்தலையார் அருளும் அன்பும் இல்லாதவரோடு சேர வேண்டாம் என அறிவுரைத்திருப்பார்.
  
வடலூர் வள்ளலாரும்
ஆருயிர்கட்கெல்லாம் நான் அன்பு செய்தல் வேண்டும்"
என உலகத்து உயிர்களுக்கு அன்பு காட்ட அருளுமாறு ஆண்டவனை வேண்டுகிறார்.

"மனதிலே அன்பு குறையும் போது வாழ்க்கை வறண்டு போகிறது.
அவிழ்தம் பலப்பலக் கண்டேன் அன்பின் நிகராய் கண்டிலேன்
தனுவில் ஒருதுளி புகுந்தது, தனுவெலாம் பொன்னொளி பாய்ந்தது" 

என்று கபீர்தாஸ் மெய்மறக்கிறார்.

அன்பின் சிறப்பை, மேன்மையை திருமூலர் இப்படி ஒரு பாடலில் குறிப்பிடுகிறார்.
"ஓதும் மயிர்க்கால் தொறும் அமுதூறிய
பேதம் அபேதம் பிறழாத ஆனந்த
மாதி சொரூபங்கள் மூன்று (அ)கன்றப்பாலை
வேதம் ஓதுஞ் சொரூபிதன் மேன்மையே - திருமந்திரம்"

காற்றில் காண இயலாதவாறு கலந்திருக்கும் நீர் மேகமாக திரண்டு மழை போல் பொழிவது போல் திருமூலர் உரைக்கும் ’மயிர்க்கால் தொறும் ஊறும் அன்பு’அளவில்லாமல் பெருகும் போது பிற உயிர்களிடம் பெருகி பாய்கிறது. அப்போது நல்லவன் தீயவன் பேதம் இல்லை. மழை யாவர்க்குமாம் என்பது போல் மேன்மக்கள் அன்பும் யாவர்க்குமாய் பயனளிக்கிறது."

இதையே ஸ்ரீ அரவிந்த அன்னை இப்படி சொல்கிறார்:
At first, one loves, when one is loved.
Next, one loves spontaneously, but one wants to be loved in return!
Then, one loves even if one is not loved, but one still wants one's love to be accepted!
And finally, one loves purely and simply, without any other need or enjoy than that of loving!


இப்படி அறிவிலும் அனுபவத்திலும் சிறந்தவர்கள் சொல்லியிருப்பது போல நாம் பிறரிடம் அன்பு செய்கிறோமா?
நாம் அன்பு செய்வதற்காகவே பிறந்திருக்கிறோம். அன்பை பார்வையற்ற‌வர்களும் பார்க்க முடியும், செவித்திறனற்ற‌வர்களும் கேட்க முடியும், பேசும் திறனற்றவர்களும் பேச முடியும் என்கிறபோது, ஐம்புலன்களும் நிறையப்பெற்றவர்களான நாம் அன்பினால் உலகையே வளைக்க முடியாதா?

அன்பு நாம் எதிர்பார்க்குமிடத்திலிருந்து கிடைக்காவிட்டாலும்கூட, நாம் அன்பு செலுத்தினால், அது நதியின் பிரவாகம் போல போக வேண்டிய இடங்களுக்குச் சென்று இறுதியில் நம்மிடமே பல மடங்காய்த் திரும்பி வரும்.   
அன்பு செலுத்தியதால் துன்பங்கள் கிடைத்ததுதான் மிச்சம் என்று உலகில் சொல்பவ‌ர்கள் கிட்டத்தட்ட 100 சதவிகிதமே இருக்கிறார்கள். அன்பு செலுத்தும்போதே எதிர்பார்ப்புகளையும் மனதில் மூட்டைகளாக சேமித்து வைக்கிறோம். இதனால்தான் துன்பப்படவும் ஏமாற்ற‌ங்களைத் தாங்கவும் வேண்டியதாகிறது. எதிர்பார்ப்பு என்று ஆகும்போதே அங்கு அன்பு என்பது பற்றாகி விடுகிறது.

ஒரு பறவையைக் கூண்டிலடைத்துப் பார்ப்பது, அது தனக்கே சொந்தம் என்ற பற்றின் காரணமாகத்தான். கூண்டிலடைத்த பறவையை விடுதலை செய்து அதைப் பறக்க விட்டு ஆனந்திப்பவன்தான் அன்பு மயமானவன்! பாய்ந்து செல்கிற‌ நதி போகிற இடமெல்லாம் செடிகளையும் கொடிகளையும் வரண்டிருக்கும் நிலங்களையும் உயிர்ப்பித்து பசுமையாக்கிச்
 செல்வதைப்போல, அன்பு மயமானவனின் வாழ்க்கை பரந்து, விரிந்து உயர்ந்த சிந்தனைகளுடனேயே எப்போதும் செல்கிறது!

வாழ்க்கை அன்பு மயமானது! சிறுமைகளை புறந்தள்ளி, பற்றையும் சற்றே ஒதுக்கி வைத்து அனைவரிடமும் அன்பு செய்வோம்!! 

Monday 7 March 2011

சாப்பாட்டிற்கான தொடர்பதிவு இது!!

அன்பு சகோதரி ஜலீலா [சமையல் அட்டகாசங்கள் ]கடந்த மாதம் இந்தத் தொடர்பதிவிற்கு அழைத்திருந்தார். நேரமின்மையால் அதை இப்போதுதான் தொடர முடிந்தது. உணவு, உணவு முறைகள் பற்றியான பதிவு இது.

கேள்வி எண்:1

இயற்கை உணவை சாப்பாட்டில் சேர்த்துக்கொள்வதுண்டா?

இயற்கையுணவு என்பதன் அர்த்தம் அடுப்பில் வைத்து சமைக்கப்படாத, எப்படி அது இயற்கையாக நமக்குக் கிடைக்கிறதோ, அப்படியே அதை உண்ண வேண்டும் என்பது தான். பல இயற்கை வைத்திய சிகிச்சை நிலையங்களில் இதைப் பின்பற்றுகிறார்கள். எனினும் முழுவதுமாக எனக்குத் தெரிந்த வரையில் எல்லா வேளைகளிலும் பின்பற்றுவதில்லை. சாப்பாட்டில் சாலட் போலத் தருகிறார்கள்.

கோவையில் உள்ள ஒரு இயற்கை வைத்திய சிகிச்சை நிலையத்திற்கு ஓய்வு எடுத்துக்கொள்ளுவதற்காக நான் அடிக்கடி செல்லுவதுண்டு. அங்கே காலை 11 மணிக்கும், பின் மாலை 6 மணிக்கும் என்று இரு வேளைகள்தான் உணவு தருவார்கள். சமையலில் மிகக்குறைவான எண்ணெய் தான் சேர்ப்பார்கள். மிளகாய், புளி சேர்ப்பதில்லை. பாதி உப்பு தான். தேங்காயைப் பாலாக சேர்க்கும்போது தான் அது கொழுப்பாக உடலில் படிகிறது என்பதால் அவர்கள் தேங்காய்த்துருவலாக உணவில் நிறைய சேர்ப்பார்கள். சமைக்காத உண‌வாக காய்கறித்துருவல்கள், முளைகட்டிய தானியங்கள்,  சிறிதளவே உப்பும் நிறைய அளவு தேங்காய்த்துருவலும் சேர்த்து கொடுப்பார்கள்.

இப்படி இல்லாமல் அவலைக் கழுவி அத்துடன் தேங்காய்த் துருவல், வெல்லம் கலந்து முழு நேர உண‌வாக சாப்பிடலாம்.

நான் சாலட் வடிவில் அவ்வப்போது நிறைய காய்கறிகளை உண‌வில் சேர்த்துக்கொள்வதுண்டு. பச்சை ஆப்பிள், தக்காளி, வெங்காயம், காரட், முள்ள‌ங்கி, வெள்ளரிக்காய், இவை அனைத்தையும் வகைக்கொன்றாய் எடுத்து துருவிக்கொண்டு, சிறிது உப்பும் சிறிது எலுமிச்சை சாறும் கலந்து உண்டால் மிகவும் சுவையாக இருக்கும். இது எனக்கு ஒரு மருத்துவர் சொன்ன குறிப்பு. வேறு எதுவுமே உணவாக எடுத்துக்கொள்ளாமல் முழு உணவாக இதை எடுத்துக்கொள்வதுண்டு.    

கேள்வி எண்:2

இயற்கை உணவுப் பழக்கம் எந்த விதத்தில் உங்களுக்கு பயன் தருகிறது?

இந்த மாதிரி சாலட் முழு உணவாக சாப்பிட்டபின் வயிறு மிக இலேசாக இருக்கும். மற்ற‌ உணவுப்பொருள்கள் சாப்பிடும்போது ஏற்படும் கனம், அஜீரணக்கோளாறுகள் இருப்பதில்லை. மேற்சொன்ன இயற்கை வைத்திய சிகிச்சை நிலையத்தில் பழக்கம் ஏற்பட்ட பிறகு, உணவில் எண்ணெய், காரம் அதிகம் சேர்ப்பதில்லை.

கேள்வி எண்:3

அன்றாடம் சரியான நேரத்தில் சாப்பிடுவீர்களா? அல்லது பசிக்கும் நேரத்தில் உண்பீர்களா?

சரியான நேரத்தில் சாப்பிடுவதை வீட்டில் அனைவருமே கடைபிடிக்கிறோம். அதனால் பசியும் கண்ட நேரத்தில் வராது.

கேள்வி எண்:4

வலைப் பதிவில் சமையல் சம்பந்தமாக எழுதுவதற்கு யார் உங்களுக்கு தூண்டுகோலாக இருந்தார்கள்?

முதன் முதலாக சமையல் சம்பந்தமாக எழுதுவதற்கு  ஊக்கம் கொடுத்ததுடன் ஒரு பிரபல தளத்தின் சமையல் பகுதியில் எனக்கென ஒரு பிரிவையும் என் மகன்தான் ஆரம்பித்து வைத்தார். அது இன்றைக்கு 8 வருடங்களைக்கடந்து மூன்றாவது பகுதியாகப் போய்க்கொண்டிருப்பதுடன் 10 லட்சத்திற்கு மேற்பட்ட பார்வையாளர்களையும் நிறைய பாராட்டுக்களையும் பெற்றுத்தந்திருக்கிறது. அதன் லின்க் கீழே:

http://www.mayyam.com/talk/forumdisplay.php?25-Indian-Food

கேள்வி எண்:5

புதியதாக ஏதாவது உணவுவகை முயற்சி செய்து பார்த்திருக்கிறீர்களா? அது சரியாக வரவில்லை என்றால் என்ன செய்வீர்கள்?

அடிக்கடி புதிய உண‌வு வகைகளைத்தான் செய்து பார்ப்பேன். இரு சமையல் தளங்கள் வைத்திருப்பதாலும் இயற்கையாகவே சமையலில் மிகுந்த ஆர்வமென்பதாலும் இன்று வரை புதிய சமையல் பக்குவங்களை அடிக்கடி செய்து பர்த்துக்கொன்டேதான் இருக்கிறேன். சரியாக வரவில்லை என்பதெல்லாம் கிடையாது.

கேள்வி எண்: 6

உங்களது அன்றாட சமையலில் நீங்கள் கட்டாயம் தவிர்க்கும் சமையல் சம்பந்தமான பொருட்கள் ஏதாவது மூன்று?

தேங்காய் அரைத்துச் சேர்ப்பதை அதிகம் தவிர்ப்பேன். வர மிளகாய், பச்சை மிள‌காய் இவற்றை மிகவும் குறைவாகத்தான் சேர்ப்பேன். சேர்க்கும்போதும் உள்ளிருக்கும் விதைகளை முழுவதும் எடுத்து விட்டுத்தான் சேர்ப்பேன். எண்ணெயை கூடியவரை குறைத்தே சேர்ப்பேன்.

கேள்வி எண்: 7

தினப்படி சமையலில் நீங்கள் அடிக்கடி சேர்த்துக்கொள்ளும் சமையல் பொருட்கள் சில?

கொத்துமல்லி இலை, சிவந்த தக்காளி, பெருங்காயம் இவற்றை அதிகம் சேர்ப்பேன்.

கேள்வி எண்:8

குடும்ப உறுப்பினர்கள் ஒன்றாக சேர்ந்து அமர்ந்து சாப்பிடுவதால் என்ன நன்மைகள் உண்டாகிறது?

குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து உண்ணும்போது அந்நியோன்யம் பெருகுகிறது என்பது மறுக்க முடியாத உண்மை. ஒருத்தரை ஒருத்தர் கவனித்து பரிமாறும்போது அங்கே அக்கறையும் அன்பும் கூடுதலாகிறது.

கேள்வி எண்:9

உங்களுக்குப் பிடித்த உணவகத்தில் நீங்கள் விரும்பாத உணவு பரிமாறப்பட்டால் என்ன செய்வீர்கள்?

இதற்கு வாய்ப்பு கிடையாது என்றே சொல்லலாம். எனினும் சில சமயம் நாம் விரும்பிக்கேட்கும் உணவு கறுப்பாய் காந்தலாய் வருவதுன்டு. அந்த சமயம் அதை திருப்பி எடுத்துப்போகச் சொல்லி விடுவேன். அவர்களாகவே மறுபடியும் நல்லதாக கொன்டு வந்து தருவதும் நடந்திருக்கிறது.

இந்த தொடர்பதிவிற்கு அழைத்து என்னை அது பற்றி எழுத வைத்த சகோதரி ஜலீலாவிற்கு என் அன்பு நன்றி!!

இந்தத் தொடர்பதிவிற்கு அன்புச் சகோதரர்கள் வை.கோபாலகிருஷ்ண‌ன், ஆரண்ய நிவாஸ் ராமமூர்த்தி‍, சகோதரிகள் லக்ஷ்மி, ராஜி இவர்களை 

அன்புடன் அழைக்கிறேன்.   

Tuesday 1 March 2011

சமையலறை மருத்துவம்

மறுபடியும் சில மருத்துவக் குறிப்புகள்!
வீட்டின் சமையலறையிலுள்ள‌‌ அஞ்சறைப்பெட்டியில் நம் உடல் காக்கும் மருத்துவப் பொருள்கள் வெந்தயம், சீரகம், மிளகு, லவங்கம் போன்றவற்றில் ஏராளமாய் இருக்கின்றன. அதே போல் வீட்டைச் சுற்றி நாம் வளர்க்கும் துளசி, செம்பருத்தி,தூதுவளை போன்ற செடிகளில் நிறைய மருத்துவப்பயன்கள் இருக்கின்றன. அவற்றுள் சில உங்களின் பார்வைக்கும் தேவைகளுக்கும்!!
1. வயிற்றின் இடப்பக்கமோ, வலப்பக்கமோ இழுத்துப்பிடித்துக்கொண்டால் சிறிது சீரகத்தை வாணலியில் போட்டி சிறு தீயில் கறுக்க வறுத்து ஆறியதும் வாயில் போட்டு தண்ணீர் குடித்தால் வலி உடனே வலியும் வாயுப்பிடிப்பும் சரியாகி  விடும்.

2. கால்களின் பித்த வெடிப்புகளுக்கு வேப்பெண்ணெயைத் தொடர்ந்து தடவி வந்தால் பித்த வெடிப்பு குணமாகி விடும்.

3. வயிற்றுப்பொருமல், வாயுப்பிடிப்புக்கு, சீரகம், சுக்கு, மிளகு, ஓமம், காயம் இவற்றை பொன்னிறமாக வறுத்துப்பொடித்து சூடான சாதத்தில் சிறிது நெய் விட்டு அல்லது நல்லெண்ணெய் விட்டுப் பிசைந்து சாப்பிட்டால் சரியாகி விடும். பொதுவாகவே இந்தப்பொடியை தயார் செய்து முதலில் இந்த சாதத்தை ஒரு பிடி சாப்பிட்டு, மற்ற‌ உணவுப்பொருள்களை சாப்பிடுவது மிகவும் நல்லது
.

4. சோற்றுக்கற்றாழையை ஒடித்தால் வரும் பிசினை வெட்டுக்காயங்களுக்குத் தடவினால் அவை சீக்கிரம் ஆறும்.

5. பாக்கை தண்ணீர் விட்டு அரைத்து ஒரு எலுமிச்சை அளவிற்கு 100 கிராம் தேங்காய் எண்ணெய் கலந்து ஒரு நாள் முழுவதும் வெய்யிலில் வைக்கவும். மறு நாள் சிறு தீயில் அடுப்பில் வைத்து காய்ச்சினால் நீர் வற்றி மெழுகு போன்ற கலவை அடியில் தங்கும். இதை ஆறியதும் ஒரு பாட்டிலில் சேமித்து வைத்துக்கொள்ள‌வும். சுட்ட புண்கள், சூடான எண்ணெய் தெறித்து கொப்புளங்களான புண்கள் இவற்றுக்கு இந்த மருந்தை தடவினால் உடனே காயங்கள் ஆறும்.

6.காலில் கண்னாடி குத்தி விட்டால், ஓமத்தை வெல்லத்துடன் அரைத்து அடுப்பில் வைத்துக்கிளறி, பொறுக்கும் சூட்டில் கடிவாயில் வைத்துக் கட்டுங்கள். எவ்வளவு சிறிய கண்ணாடித் துண்டானாலும் வெளியே வந்து விடும்.

7.சிறிது நொச்சி இலைகளை கொதிக்கும் வெந்நீரில் போட்டு ஆவி பிடித்தால் சுவாசிப்பதில் சிரமம் இருப்பவர்களுக்கு இரவில் அவஸ்தையின்றி தூக்கம் வரும்.

8..முளை கட்டிய பச்சைப்பயிறை வெறும் வயிற்றில் 3 ஸ்பூன்கள் தினமும் சாப்பிட்டு வந்தால் குழந்தையிலாத பெண்களுக்கு மூன்றே மாதத்தில் கருத்தரிக்கும். இதை சாப்பிடும்போது காப்பி குடிப்பதை அறவே நிறுத்த வேண்டும்.

9. அரச மரத்தின் பழுப்பு இலைகளை ஒரு சட்டியில் போட்டு மற்றொரு சட்டியால் மூடி அடுப்பில் வைத்தால் பத்து நிமிடங்களில் அவை சாம்பலாகி விடும். அந்த சாம்பலை தேங்காயெண்ணெயுடன் கலந்து வைத்துக்கொண்டு தீப்புண்கள், கொப்புளங்களில் தடவி வந்தால் புண்கள் விரைவில் ஆறும்.

10. நாள்பட்ட தலைவலி, ஒற்றை தலைவலிக்கு:

அடுக்கு செம்பருத்திகளை வாணலியில் போட்டு அவை மூழ்கும் அளவு நல்லெண்ணெயை ஊற்றி காய்ச்சவும். பின் வடிகட்டி வைத்துக்கொண்டு வாரம் ஒரு முறை தலை குளித்து வந்தால் தலைவலி சரியாகும்.

படங்களுக்கான நன்றி: கூகிள் வலைத்தளம்