Sunday, 25 July 2021

காற்றுக்குமிழ்கள்!!!

 


இது ஒரு மீள் பதிவு.

பதிவெழுத ஆரம்பித்த காலத்தில் 2010ல் எழுதிய பதிவு இது. இப்போதைய பதிவர்கள் அநேகம் பேர் அப்போது தொடர்ந்ததில்லை. அதனால் எல்லோருக்குமே இது புதிய பதிவு தான். இதை எழுதும்போது மனதில் இருந்த ரணம் பத்து வருடங்களுக்குப்பிறகாவது குறைந்துள்ளதா என்று நினைத்துப்பார்த்தால் இன்னும் உள்ளே அந்த ரணம் நீரு பூத்த நெருப்பாகவே இருக்கிறது. பதிவைப்படித்த பிறகு உங்களுக்கும் அது புரியும்.

25 வருடங்களுக்கு முன் நடந்த நிகழ்வு இது. 

நானும் என் சினேகிதியும் ஊட்டி வரை சென்று விட்டு தஞ்சைக்குத்திரும்பிய தினம் அது. என் சகோதரி வீட்டில் தான் என் அம்மாவும் இருந்தார்கள். அதனால் அங்கு வந்து தான் இறங்கினோம். அன்றிரவு என் அம்மாவுக்கு திடீரென்று மூச்சுத்திணறல் ஏற்பட்டது. என் சகோதரியும் சினேகிதியுமாகச் சேர்ந்து உடனே அவர்களை மருத்துவ சிகிச்சைக்கு அழைத்துச் சென்றார்கள். வீட்டிலிருந்த சகோதரி மகனை நான் கவனித்து மறு நாள் காலை வீட்டிலேயே தங்கி வேலை செய்யும் பெண், சகோதரி மகன் இருவரையும் உறவினர் இல்லம் ஒன்றில் விட்டு விட்டு அதன் பின் நான் மருத்துவமனை செல்வதாகப் பொறுப்பேற்றிருந்தேன்.

சகோதரி வீட்டில் தங்கி வேலை செய்த பெண்ணின் பெயர் கலா. அழகும் துறுதுறுப்புமான பெண். காலையிலேயே எழுந்து வீட்டில் உள்ள வேலைகளைப்பார்த்து சகோதரி மகனையும் கவனித்து விட்டு நேரே என்னிடம் வந்து ‘அம்மா, இந்த ட்ரெஸ் எனக்கு அழகாக இருக்கா’ என்று கேட்டாள். அப்போதுதான் கவனித்தேன், அந்த உடை நான் அவளுக்கு பரிசளித்தது என்பதை. அப்போதுதான் பூப்பெய்திய 13 வயதுப்பெண் அவள். ரொம்பவும் அழகாக இருக்கிறது என்று சொன்னேன். வீட்டை பூட்டு முன் என் கணவரிடமிருந்து தொலைபேசி அழைப்பு.[ மொபைல் இல்லாத காலம்] என் தாயாருக்கு மிகவும் உடல் நலமில்லாததைச் சொன்னதும் பேசி முடிக்கும்போது, ‘உடனேயே போய் விட வேண்டாம், தம்பி இப்போது அழைப்பார். அவரிடமும் விஷயத்தைச் சொல்லி விட்டுச் செல்’ என்று என் கணவர் சொல்லவே தொலைபேசி அழைப்பிற்காகக் காத்திருந்தேன்.

இதையெல்லாம் கவனித்துக்கொண்டிருந்த கலா, ‘அம்மா, நான் போய் தெருமுனைக்குச் சென்று ஆட்டோக்காரரை அழைத்து வருகிறேன்’ என்றாள். நான் உடனேயே மறுத்தேன். “ஒரு வேளை தொலைபேசி அழைப்பு வருவதற்குள் ஆட்டோ வந்துவிட்டால்- எனக்கு இங்கு ஆட்டோக்காரர்களையெல்லாம் பழக்கம் கிடையாது. ஒருவேளை காத்திருப்பது பிடிக்காமல் ஏதாவது சொல்லலாம். இரு. தொலைபேசி அழைப்பு வந்ததும் நீ போகலாம் ஆட்டோ அழைத்து வர” என்று மறுத்தேன். அவள் பிடிவாதமாக ‘அதெல்லாம் ஒன்றும் சொல்ல மாட்டாங்கம்மா, எங்களுக்குப் பழக்கமானவர்கள் இருக்கிறார்கள்” என்று கிளம்பிப்போனாள்.

அதன் பின் எனக்கு என் கொழுந்தனாரிடமிருந்து வந்த தொலைபேசி அழைப்பிற்கு பதிலளித்து விட்டு வீட்டைப்பூட்டிக் கொண்டு என் சகோதரி மகனுடன் வெளியே தயாராக அமர்ந்திருந்தேன். 10 நிமிடமாகியும் கலா வரவில்லை. ஆட்டோ கிடைக்கவில்லையோ என்று யோசனை செய்து கொண்டிருந்தேன்.

திடீரென்று பக்கத்துத் தெருவில் இருக்கும் எங்கள் உறவினர் வந்தார். ‘என்னம்மா, இங்கே வீட்டைப் பூட்டி விட்டு உட்கார்ந்திருக்கிறாய்?’ என்று கேட்டதும் நான் விபரத்தைச் சொன்னேன்.

பேசாமல் ஒரு நிமிடம் அமர்ந்திருந்தவர் ‘கலா லாரி மோதி மூளை சிதறி செத்துப்போய் சாலையில் கிடக்கிறாள் அம்மா, இந்த வீட்டில் வேலை செய்யும் பெண் ஆயிற்றே, தகவல் சொல்லலாம் என்றுதான் வந்தேன்’ என்றார்.

அவர் அதற்கடுத்தாற்போல பேசியது எதுவுமே என் காதில் விழவேயில்லை. மரணங்களை எதிர்பாராத தருணங்களில் பல முறை சந்தித்திருக்கிறேன். சில வாழ்க்கையை அப்படியே புரட்டிப் போட்டிருக்கின்றன. ஆனால் இப்படி நிலை குலைய வைத்ததில்லை. எப்படி அழகாக, மஞ்சள் பூசிக்குளித்து, எனக்காகவும் வேலைகள் செய்து கொடுத்து [எனக்கு அன்று உடல் நலம் வேறு சரியில்லாமல் இருந்தது] புதிய ஆடை அணிந்து சந்தோஷமாகப்போனவள் இப்படி ஒரு நிமிடத்தில் காற்றுக்குமிழியாக மறைந்ததை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

என் உறவினர் ‘ அம்மா, இங்கேயே இருப்பது ஆபத்து. கலாவின் சொந்தங்கள் எல்லாம் குடிகாரர்கள். கூட்டமாக அங்கே அவள் உடல் அருகே நின்று கொண்டிருக்கிறார்கள். இங்கே விரைவில் வந்து நின்று தொல்லை கொடுப்பார்கள். நான் போய் உடனே ஆட்டோ பிடித்து வருகிறேன். நீ உடனே கிளம்பு “ என்று கூறி, ஆட்டோ பிடித்து வந்து என்னை அனுப்பி வைத்தார். அன்று முழுவதும் என் உறவினர்கள் என்னை சூழ்ந்து கொண்டு ஒருவர் மாற்றி ஒருவர் ஆறுதல் கூறியதெல்லாம் என் மனதில் பதியவேயில்லல.

ஒரு பக்கம் கலாவின் அப்பாவும் அம்மாவும் என் உறவினர் வீட்டுக்கு வந்து என் சகோதரி வீட்டில் வேலை செய்து கொண்டிருக்கும்போது அவள் இறந்ததால் இழப்பீடு தொகை அதிகமாக வேண்டுமென்று கேட்டுக்கொண்டிருந்தனர். காலையில் மூளை சிதறி இறந்த பெண்ணுக்கு அவர்கள் அன்று மாலையே பணம் கேட்டுக்கொண்டிருந்தனர். இந்தத் தொல்லை தாங்காமல் என் கொழுந்தனார் தன் நண்பரான போலீஸ் அதிகாரியை சந்தித்து அழைத்து வரப் புறப்பட்டிருந்தார். இன்னொரு பக்கம் உடல் நலம் தேறத்தொடங்கியிருந்த என் தாயாருக்கு உண்மை தெரியாது, பெரிய மனக்குறை நான் சரியாகவே பேசவில்லை என்று! இதையெல்லாம் தாண்டி மிகப் பெரிய மன வேதனையில் நான் தவித்துக்கொண்டிருந்தேன்.

அவள் நான் சொல்லச்சொல்ல பிடிவாதமாக கிளம்பினாளே, அப்போது நான் அதட்டி உட்காரவைத்திருந்தால் இப்படி அநியாயமாக இறந்திருக்க மாட்டாளோ, அந்த ஒரு சில நிமிடங்களில் அவளை நான் கோட்டை விட்டு விட்டேனே” என்ற மனதின் தவிப்பை என்னால் வெகு நாட்களுக்கு நிறுத்தவே முடியவில்லை. இன்று நினைத்தால்கூட மனதில் வேதனை எழுவதை தவிர்க்க முடியவில்லை. அந்த தொலைபேசி அழைப்பு கொஞ்சம் முன்னால் வந்திருந்தால்கூட அந்த மரணத்தின் அழைப்பிலிருந்து அவள் தப்பித்திருப்பாளே என்ற மனதின் தவிப்பை அடக்க முடியவில்லை. நான் அவளைப் போக வேண்டாம் என்று சொன்னதற்கும் அவள் பிடிவாதமாகப் போனதற்கும் இடையில் மரணம் அவளுக்காகக் கொடூரமாகக் காத்திருந்ததை அறியாமல் போய் விட்டேனே என்ற தாபம் இன்னும் மறையவில்லை. அப்போதுதான் பூத்த அந்தப் புது மலர் அடையாளம் தெரியாமல் வாடி உதிர்ந்து போய்விட்டது.


16 comments:

கோமதி அரசு said...

படித்தவுடன் மனம் கனத்து விட்டது.
புதுமலரின் மறைவு மனதை விட்டு அலகாது போலவே!

அந்த் சிறு மலருக்கு இறைவன் அவ்வளவுதான் வாழ்வு கொடுத்து இருக்கிறார் போலும். சில நினைவுகள் மனதை வருத்துவதை தவிர்க்க முடியாது போலும். காலங்கள் எத்தனை ஆனாலும் நீறு பூத்த நெருப்பாய் கனற்று கொண்டுதான் இருக்கும் என்று நினைக்கிறேன்.

மனோ சாமிநாதன் said...

ஆமாம் கோமதி! இத்தனை வருடங்கள் கடந்து போயும் மனதில் இன்னும் அந்த வேதனை இருக்கிறது!
கருத்துப்பகிர்வுக்கு அன்பு நன்றி!

Avargal Unmaigal said...

படித்தவுடன் மனதை பாதித்தது , படிக்க்கும் போதோ மனதை பாதிக்கிறது என்கிற போது அந்த நிகழ்வு சம்பந்தப்பட்ட உங்களுக்கும் நிச்சய்ம் மிக அதிகமாக மனம் பாதித்து இருக்கும்.... காலம் மாறினாலும் நிகழ்வு என்பது மனதின் அடியில் தங்கி இருக்காத்தான் செய்யும்

மனோ சாமிநாதன் said...

ஆமாம் மதுரைத்தமிழன், இத்தனை வருடங்களுக்குப்பின்னாலும் இன்னும் மனதில் அவளை நினைக்கையில் வலிக்கிறது. ' அவளை நான் அதட்டி உட்கார வைக்காமல் போனேனே' என்ற தவிப்பு, குற்ற உணர்ச்சியாய் மாறி அந்த அதிர்ச்சியிலிருந்து மீண்டு வர சில காலம் பிடித்தது.

கருத்துப்பகிர்வுக்கு அன்பு நன்றி!

ஸ்ரீராம். said...

அந்தச் சிறுபெண் ஆட்டோக்காரரோடு சேர்த்து ஏதாவது ஏமாற்றப் போகிறாளோ என்று எண்ணினால் சம்பவம் மனதை நிலைகுலைய வைத்து விட்டது.  நிச்சயம் மறக்க முடியாத சம்பவம்.   

Geetha Sambasivam said...

நான் நினைச்சதே வேறே! அந்தப் பெண் ஏதோ தகாத சகவாசத்தில் இருக்கிறாளோ என நினைத்து விட்டேன். ஆனால் நடந்திருக்கிறதே வேறே! மனசு வேதனையில் ஆழ்ந்து விட்டது. பாவம் அந்தப் பெண். அத்தனை அழகாகவும் உயிர்ப்புடனும் இருந்த பெண் இப்படித் திடீரென இறந்து விட்டாள் எனில்? என்ன நடந்திருக்கும் அப்படி ஒரு விபத்து நேரும்படி! காலை வேளையில் மனம் கனத்து விட்டது.

Geetha Sambasivam said...

உங்கள் இந்தப் பதிவை நான் படித்தது இல்லை. ஆனாலும் நான், ரேவதி, துளசி மூன்று பேருமே 2005 ஆம் ஆண்டில் இருந்து தொடர்ந்து இணையத்தில் இருக்கோம்.

திண்டுக்கல் தனபாலன் said...

நடந்த நிகழ்வு மனத்தை கலங்க வைக்கிறது...

வெங்கட் நாகராஜ் said...

மனம் பதைபதைத்தது. சில விஷயங்கள் நம் கையில் இல்லை என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம்.

நிலைகுலைய வைத்த சம்பவம் தான்.

கரந்தை ஜெயக்குமார் said...

மனம் கனத்துப் போய்விட்டது

மனோ சாமிநாதன் said...

கருத்துரைக்கு அன்பு நன்றி ஸ்ரீராம்!

மனோ சாமிநாதன் said...

வாருங்கள் கீதா!
அந்தப் பெண் கலா, ஆட்டோ எதுவும் ஸ்டாண்டில் இல்லாததால் ஓரமாக நின்றிருக்கிறாள். அப்போது வேகமாக வந்த லாரி திடீரென்று பிரேக் பிடிக்கவில்லையோ என்னவோ, ஓரமாக நின்று கொண்டிருந்த இவள் மீது நேராக வந்து மோதி விட்டது. இப்படித்தான் அவள் மறைந்தாள்.
அவளை அவள் வீட்டில் கூட நினைத்துக்கொண்டிருக்கிறார்களோ, இல்லையோ, நான் அவளை அடிக்கடி நினைத்துக்கொண்டிருக்கிறேன்.

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி தனபாலன்!

மனோ சாமிநாதன் said...

கருத்துரைக்கு அன்பு நன்றி வெங்கட்!

ராமலக்ஷ்மி said...

மனதைக் கலங்க வைக்கும் பகிர்வு.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

இன்றுதான் பதிவினைக் கண்டேன். மனம் நெகிழ்ந்துவிட்டது. இதுபோன்ற நிகழ்வுகள் மனதை விட்டு என்றுமே அகலாது.