இந்த முகம் ஒரு 21 வயது இளம் பெண்ணுக்கு சொந்தமானது. தமிழ்நாட்டில், தஞ்சாவூர் பக்கம் உள்ளடங்கிய பின் தங்கிய ஒரு சிறு கிராமத்தில் பிறந்தவள். சுறிலும் வயல்கள் சூழ்ந்திருக்கும் ஒரு சிறு வீட்டில் பிறந்து வளர்ந்தவள். அம்மாவின் அரவணைப்பிலும் அப்பாவின் பாசத்திலும் அண்ணனின் தோழமையிலும் கவலை என்றால் என்னவென்றே தெரியாத சின்னஞ்சிறு இளம் பருவம். தென்னை மரத்தில் சரசரவென்று ஆண்களைப்போல ஏறி தேங்காய் பறிப்பாள். மாமரத்தில் ஏறுவதில் அத்தனை ஆசை. ஆடுகளை மேய்ப்பதும் மாடுகளை பராமரிப்பதும் அவளின் அன்றாட வேலைகள் மட்டுமல்ல, பொழுது போக்கும்கூட! ஆற்றில் தண்ணீர் விட்டதும் அது வயல்களில் நுழைந்து வடியும்போது பெரிய பெரிய மீன்களும் அப்படியே வந்து கிடக்குமாம். அவற்றை எடுத்துச்சென்று சுத்தம் செய்து சமைத்து வறுத்து கிராமத்துக்குழந்தைகளுக்குக்கொடுத்து சந்தோஷப்படுவதும் அவள் வழக்கம். வீடு தாண்டி, ஊரைத்தாண்டி எங்கும் வெளியில் சென்றதில்லை. அந்த கிராமத்தில் சிட்டுக்குருவி போல பறந்து வளர்ந்திருக்கிறாள்.
அவளின் அப்பா அந்த சிறு கிராமத்தின் நாட்டாமையாக இருந்திருக்கிறார். அவருடைய அண்ணனும் அந்த ஊரில் இருந்து வாழ்ந்திருக்கிறார். அண்ணன் திடீரென்று இறக்க, அந்தக்குடும்பத்தையும் தன் தோள்களில் சுமந்திருக்கிறார். அண்ணனின் மகன் வளர்ந்து வாலிபனானதும் ஒரு பெண்ணைப்பார்த்து திருமணமும் செய்வித்திருக்கிறார். சாப்பாடாக இருந்தாலும் சரி, பொருள்களாக இருந்தாலும் சரி, எப்போதும் தன் அண்ணன் வீட்டுக்கும் கொடுத்தனுப்பும் மனமும் அவரிடம் இருந்திருக்கிறார்.
தந்தை இறந்த பிறகு அந்தக்குடும்பம் வலிகளையும் கஷ்டத்தையும் அனுபவிக்க
ஆரம்பித்திருந்தது.
என் அம்மாவிற்கு தற்போது அவரின் 103 வயதில் சிறிது உடல்நலக்குறைவு
ஏற்பட்டதும் என் தங்கை அவரை கவனித்துக்கொள்வதற்காக ஒரு HOME CARE நிறுவனத்தின்
மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு காலையிலிருந்து மாலை வரை கவனித்துக்கொள்ள
நியமிக்கப்பட்ட பெண் தான் இவள்!
இப்போது ஊரிலிருந்த போது அம்மாவை தங்கையின் வீட்டிலிருந்து அழைத்து
வந்து சில நாட்கள் என்னுடன் வைத்திருந்த போது அம்மா கூடவே வந்தவள் ஒரு நாள்
என்னிடம் தன் கதையைச் சொன்னாள்.
மாலை நேரம் அவளை விடுவிக்க இன்னொரு பெண் ஆறரைக்கு வருவாள். அதற்குப்பின்
இந்தப்பெண் தஞ்சை பழைய பேருந்து நிலையம் சென்று காத்திருந்து இரவு ஏழரைக்கு அவள் ஊர்
இருக்கும் திசைக்குச் செல்லும் பேருந்தில் சென்று ஒரு முச்சந்தியில் இறங்கி அங்கே
அவளுக்காக காத்திருக்கும் அண்ணனின் சைக்கிளில் ஏறி பத்தி கிலோ மீட்டர் கடந்து அவள்
கிராமத்தில் நுழையும்போது இரவு பத்தாகி விடும். அம்மா கையால் சாப்பிட்டு உறங்க ஆரம்பித்தால்
மறு நாள் காலை ஏழரை மணி பேருந்தைப்பிடிக்க மறுபடியும் ஓட்டம்.
அண்ணன் மின்சார பழுதுகளை சரி பார்க்கும் வேலையில் இருக்க, அம்மா தான் வயல்களையும் மரங்களையும் ஆடுகளையும் மாடுகளையும் பார்த்துக்கொள்கிறார்.
வீட்டுத்தலைவனின் மரணம் அந்தக்குடும்பத்தை எப்படியெல்லாம் சிதறியடித்து விட்டது!
சமீபத்தில் என் தங்கை அவளின் அப்பாவைக்கொன்றவனுக்கு பத்து ஆண்டுகள் கடுங்காவல்
தண்டனை கொடுத்து நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பதாகவும் நாளிதழ்களில் அந்த செய்தி வந்துள்ளதாகவும்
தெரிவித்தபோது, எனக்கே அத்தனை சந்தோஷமாக இருந்தது. மறுபடியும் தங்கை வீடு சென்ற போது அவளிடம்
வாழ்த்துக்களையும் சந்தோஷத்தையும் தெரிவித்தேன்.
‘ என் அப்பான்னா எனக்கு உசிரும்மா’
அவள் கண்களில் கண்ணீர் வழிந்தது!