கடந்த 44 வருடங்களாக ஒரு விமானப்பிரயாணம் இத்தனை சிரமமாக இருந்ததில்லை. சென்ற மார்ச்சில் இந்தியாவில் கால் பதித்தபோது அவ்வளவாக கொரோனா எங்கும் பரவாத சமயம். இந்தியாவில் 2,3 பேருக்கு பாதிப்பு இருந்தது. அமெரிக்காவில் இரண்டு பேரும் ஜப்பானில் ஒருத்தரும் சைனாவில் மட்டும் சில மரணங்களும் நிகழ்ந்திருந்தன. ஊருக்கு வந்து சில முக்கிய வேலைகளை கவனித்து விட்டு 40 நாட்களில் திரும்பி விடலாம் என்ற எண்ணத்தில் தான் ஊருக்கு வந்தோம். அதன் பின் தான் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து மின்னல் வேகத்தில் உலக நாடுகளிலும் இந்தியாவிலும் கொரோனா பரவ ஆரம்பித்த பின் கடந்த ஆறு மாதங்களாக தஞ்சை வாசம் தான். எங்கள் விசாக்கள் காலாவதியாகி, என் கணவரின் டிரைவிங் லைசென்ஸும் காலாவதியானது. துபாயிலுள்ள எங்கள் உணவகம் என் கணவர் இல்லாமல் எங்கள் மேலாளர் மூலமே இயங்கி வந்தது. ஆறு மாதங்களாக உணவகத்தின் நிர்வாகம் அலைபேசி வழியான ஆலோசனைகள் மூலமே நடந்து வந்தது.
ஆறு மாதங்கள் கடந்த நிலையில் ஒரு வழியாக துபாய்க்குத் திரும்பி வரும் எங்கள் பிரயாணத்திற்கான ஏற்பாடுகளை ஆரம்பித்தோம். இந்திய அரசாங்கமும் ஐக்கிய அரபுக்குடியரசும் இணைந்து vandhe Bharath scheme என்ற திட்டத்தின் கீழ் வேலைகளை இழந்து தவித்து நிற்கும் /சொந்த ஊருக்கு இந்த சமயத்தில் வரத்துடிக்கும் மனிதர்களை அபுதாபி, துபாய், ஷார்ஜா போன்ற நகரங்களிலிருந்து இந்தியாவிற்கும் அதே போல ஐக்கிய அரபுக்குடியரசில் வேலை பார்ப்பவர்கள், வியாபாரம் செய்பவர்கள், கணவனைப்பிரிந்து இந்தியா வந்தவர்கள் திரும்பவும் துபாய்க்கு திரும்பவும் தினமும் இந்தியாவின் பல நகரங்களுக்கு விமான சேவையை ஏற்படுத்தி வைத்தன. அதில் துபாய்க்கு வருபவர்களுக்கு ICA APPROVAL தேவையென்றும் ஷார்ஜா, அபுதாபி முதலிய அமீரகங்களுக்கு அது தேவையில்லையென்றும் முன்னரேயே அறிவிப்பு வந்திருந்தது. நாங்கள் அப்ரூவல் வாங்கிருந்தாலும் ஷார்ஜாவுக்கு பகலிலேயே வசதியான நேரத்தில், அதுவும் திருச்சியிலிருந்தே கிளம்பியதால் ஷார்ஜாவுக்கே டிக்கட் வாங்கப்பட்டது. என் மகனுக்கு துபாயில் சுற்றுலா அலுவலகம் இருப்பதால் அதன் மூலம் தஞ்சையில் உள்ள ஒரு சுற்றுலா அலுவலகத்தில் செப்டம்பர் 10ந்தேதிக்கு எங்களுக்கு டிக்கெட்டுகள் வாங்கப்பட்டன. அதற்கு முன்னர் நாங்கள் துபாய்க்கு வரத்தகுதியானவர்களா என்பதை ICA மூலம் துபாயில் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். அதை உறுதிப்படுத்திய பின் அந்த அலுவலகம் எங்களுக்கு டிக்கட் வழங்கியது.
டிக்கெட் வழங்கும்போதே பிரயாணத்தேதியிலிருந்து 96 மணி நேரங்களுக்குள் PCR test எனப்படும் கரோனா வைரஸ் உடலிலுள்ளதா என்ற டெஸ்ட் செய்து கொள்ள வேண்டும் என்பதை அறிவுறுத்தியது. அதன் படி 7ந்தேதியே திருச்சி சென்று மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட பரிசோதனை நிலையத்தில் நானும் என் கணவரும் அந்த டெஸ்ட் பண்ணிக்கொண்டோம். அதற்கப்புறம் பிரயாணத்திற்கான வேலைகளில் ஆழ்ந்திருந்தாலும் 9ந்தேதி எங்கள் இருவருக்கும் நெகடிவ் என்று ரிசல்ட் வரும்வரை நிம்மதியில்லை.
10ந்தேதி திருச்சி ஏர்ப்போர்ட்டில் நுழைந்ததுமே அங்கிருந்த கூட்டத்தைப்பார்த்ததும் அசந்து போனேன். எங்கள் பெட்டிகளை மருந்துகளால் ஸ்ப்ரே செய்தார்கள். வெளி வாயிலில் வழக்கம்போல் டிக்கட், விசா இவற்றை பரிசோதனை செய்யும் அதிகாரிகள் இந்த முறை தடுப்பிற்கு அப்பால் நின்றார்கள். நாம் இங்கிருந்தே பாஸ்போர்ட்டில் விசா உள்ள பக்கத்தை காண்பிக்க வேண்டும். அப்புறம் உள்ளே நுழைந்ததும் பெரிய க்யூ. ஐக்கிய அரபுக்குடியரசில் நுழைவதற்கான ஆதாரங்கள், கொரோனா நெகடிவ் என்ற சான்றிதழ் எல்லாவற்றையும் பல இடங்களில் பரிசோதனை செய்தார்கள். விமானத்திற்குள் நுழைவதற்காக காத்திருக்கக்கூட நேரமில்லை. அறிவிப்பு வந்ததும் விமானத்தினுள் நுழைந்தோம். அவரவர் இருக்கையில் ஒரு பாக்கெட் வைக்கப்பட்டிருந்தது. ஒரு குட்டி தண்ணீர் பாட்டில், ஒரு துண்டு கேக், ஒரு சிறிய சீஸ் சாண்ட்விச் அதனுள் அடக்கம். எதுவென்றாலும் அழைத்தால் மட்டுமே வந்து என்னவென்று கேட்போம் என்று ஏர்ஹோஸ்டஸ் அறிவித்து உள்ளேமறைந்தார். அதற்கப்புறம் விமானம் தரையிறங்கும்வரை அவர் வெளியே வரவில்லை. முன்புறம் இருக்கும் டாய்லட் உபயோகிக்க அனுமதிக்கப்படவில்லை. வால் பக்கம் இருக்கும் டாய்லட் மட்டுமே உபயோகிக்க வேண்டும் என்றும் அறிவித்து விட்டார்கள். விமான நிலையத்திலும் எங்கும் கடைகள், உணவகங்கள் கிடையாது. பயணிகள் வசதிக்காக ஒரே ஒரு உணவகம் திறந்து வைத்தார்கள்.
மற்றபடி பிரயாணம் சுமுகமாகவே இருந்தது. திருச்சி விமான நிலையத்திலேயே ஒவ்வொரு பயணிக்கும் பிளாஸ்டிக் மாஸ்க்கும் உடல் முழுவதும் மூடும் பிளாஸ்டிக் கவரும் கொடுத்தார்கள்.
ஒரு வழியாக விமானம் ஷார்ஜாவில் தரையிறங்கியது. இறங்கிய எல்லோரையும் ஒரு பெரிய ஹாலில் உட்கார வைத்தார்கள். எங்களுக்கு முன் பாகிஸ்தானிய விமானம் வந்திருந்ததால் அந்த பாகிஸ்தானிய பயணிகள் யாவரையும் டெஸ்ட் செய்து முடித்த பிறகு எங்களை அழைத்து எங்கள் பாஸ்போர்ட், ஐக்கிய அமீரக குடியரசியின் ஐடி கார்ட் இவற்றை வாங்கி பரிசோதித்து விட்டு, கொரோனா டெஸ்ட்டிற்கு அனுப்பினார்கள். அதை முடித்து விட்டு ஒரு வழியாக வெளியே வந்தோம்.
அன்று மாலையே, விமான நிலையத்தில் செய்த கொரோனா வைரஸ் டெஸ்ட் ‘ நெகடிவ் ‘ என்ற தகவலும் மொபைலுக்கு வந்தது.
ஆறு மாதங்களுக்குப்பிறகு என் பேரன், பேத்தி, மகன், மருமகளைப்பார்த்தபோது அத்தனை சிரமங்களும் மறைந்து போனது.