Monday 31 March 2014

உரப்படை!!

சமையல் குறிப்பு எழுதி நிறைய நாட்களாயிற்று. இந்த தடவை ருசியாக நொறுக்குத்தீனிக்கு இணையாக ஒரு கார பலகாரத்தைப்போடலாமென்று நினைத்தேன். உரப்படை தான் நினைவுக்கு வந்தது. இந்த உரப்படையை பலர் பலவிதமாக செய்வார்கள். சிலர் துவரம்பருப்பில் செய்வார்கள். இது பொட்டுக்கடலை மாவை உபயோகித்து செய்வது. என் சினேகிதி வீட்டில் இதை அடிக்கடி செய்வார்கள். அங்கே நான் கற்றதை இங்கே உங்களுக்கு சமர்ப்பிக்கிறேன். இதற்கு சட்னியெல்லாம் தேவையில்லை. காரம் போதிய அளவு சேர்த்திருப்பதாலும் வெங்காயம் சேர்த்திருப்பதாலும் அப்படியே சுடச்சுட சாப்பிடலாம்!!
உரப்படை

தேவையான பொருள்கள்:

புழுங்கலரிசி- 1 1/2 கப்
சோம்பு- 1 ஸ்பூன்
மிளகாய் வற்றல் -6
பொட்டுக்கடலை -3 மேசைக்கரண்டி
தேவையான உப்பு
பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம்- 1 கப்
கறிவேப்பிலை
பொரிக்கத்தேவையான எண்ணெய்

செய்முறை:

புழுங்கலரிசியை நாலைந்து மணி நேரம் ஊற வைக்கவும்.
ஊறிய அரிசியை சோம்பு, மிள‌காய் வற்றல், , சிறிது தண்ணீர் சேர்த்து கெட்டியாக அரைக்கவும்.
பொட்டுக்கடலையை நன்கு மிருதுவான பெளடராக்கவும்.
அரைத்த கலவையுடன் போதுமான உப்பு, பொட்டுக்கடலை மாவு சேர்த்து கெட்டியாகப்பிசையவும்.
வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்துப் பிசைந்து எலுமிச்சம்பழம் அளவு உருண்டை ஒன்றை எடுத்து ஒரு துணியில் மெல்லியதாய் தட்டவும்.
எண்ணெயை மிதமான சூட்டில் சூடாக்கவும்.
தட்டி வைத்த உரப்படையை போட்டு இரு புறமும் பொன்னிறமாக வேக வைத்து எடுக்கவ்பும்.
இது போல மீதமுள்ள‌ மாவை உரப்படைகளாய் தட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக வேக வைத்து எடுக்கவும்.
சுவையான உரப்படை தயார்!!
 

Tuesday 25 March 2014

முத்துக்குவியல்-26!!

ரசித்த முத்து:

" இன்றைக்கு வீடுகளிலும் சமூகத்திலும் பெரிய பிரச்சினைகளாகப்பார்க்கப்படுவது முதியோர்களை கவனிக்காத இளைய தலைமுறை பற்றித்தான். எல்லா பெற்றோர்களுமே தங்கள் பிள்ளைகள் நன்றாக இருப்பதற்காகத்தான் உழைக்கிறார்கள். சம்பாதிக்கிறார்கள். கேட்டதையெல்லாம் நிறைவேற்றுகிறார்கள். ஆனாலும் அவர்கள் தளர்வுகிற நேரத்தில் அந்தப் பிள்ளைகள் ஏன் சுயநலமிகளாக மாறிப்போகிறார்கள்? ' உனக்காகத்தானேடா நான் கஷ்டப்பட்டேன்?' என்று புலம்புகிற தாயிடம் "பெத்தா இதையெல்லாம் செஞ்சுத்தான் ஆகணும். அதைப்போய் சொல்லிக் காட்டுறே?" என்று எரிந்து விழும் குணம் ஏன் வந்தது?
சின்ன வயது முதல் குடும்பத்தில் பெற்றோர்களும் மூத்த உறுப்பினர்களும் எவ்வளவு முக்கியம் என்பதை உண‌ர்த்தாமல் விட்டதன் விளைவு தான் இது. குழந்தைகள் முன்னிலையில் 'உறவுகள் பெரிது' என்ற எண்ணத்தை விளைக்காத எந்தப் பேச்சுகளும் விஷ வித்துக்களைத்தான் முளைவிக்கும். எத்தனை தான் காலம் மாறினாலும், உலகமே தலைகீழாக மாறினாலும் ஒரு நேசமான புன்னகையும் வாஞ்சையான வார்த்தையும் சட்டென்று நம்மை ஈர்த்து விடும்.
எப்பேப்பட்ட கல் மனதையும் திறக்கும் மந்திரச்சாவி எதையும் எதிர்பார்க்காத தூய்மையான அன்பு மட்டுமே. அதற்கான கள்ளச்சாவி இன்னும் இந்த உலகில் கண்டு பிடிக்கப்பட‌வேயில்லை."

சிறப்பான முத்து:

சென்னை நந்தனத்திலுள்ள ஒய்.எம்.சி.ஏ கல்லூரி வளாகத்திலுள்ள சிறப்புப்பள்ளியில் சிறப்புக்குழந்தைகளுக்கு பயிற்சி கொடுக்கிறார்கள்.  மூளைத்திறன் பாதிப்பு, ஆடிஸம், மூளைத்திறன் குறைவு, கற்றலில் குறைபாடு, multipal disorders, என்று பல பிரச்சினைகள் உள்ள குழந்தைகள் பயிற்சி பெறுகிறார்கள். இதில் வளர்ந்தும் குழந்தையாக இருப்பவர்களும் அடக்கம். இயல்பான குழந்தைகள் போன்று விளையாடுவதற்கோ, சிறு நீர் கழிப்பதற்கோ, பசியை உண‌ர்த்துவதற்கோ இவர்களுக்கு தெரியாது. இப்படி அன்றாட வேலைகளைச் செய்வதற்கு, அவர்களுக்கு பயிற்சியளிக்கும் பணியைக் குறைந்த கட்டணத்தில் கடந்த எட்டு வருடங்களாகச் செய்து வருகிறது ஒய்.எம்.சி.ஏ சிறப்புப்பள்ளி. உளவியல் நிபுணர்களின் அறிவுறுத்தலின்படி இங்கே பயிற்சி முறைகளை திட்டமிட்டு செய்கிறார்கள். குழந்தைகளின் நுண்ணறிவிற்கேற்ப, Pre-primary, Primary, Secondary என்ற நிலைகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சியாளர்கள் சொல்வதைப்புரிந்து கொண்டு செயல்படும் குழந்தைகளுக்கு சோப் ஆயில், மெழுகுவர்த்தி தயாரித்தல் போன்ற தொழில் பயிற்சிகளையும் தருகிறார்கள். குழந்தைகளின் அன்றாட காரியங்களை அவர்களே பார்த்துக்கொள்ளும் அளவுக்கு ACTIVITY DAILY LEARNING SKILLஸ்ஐ வளர்ப்பதில் இவர்கள் முழு கவனம் செலுத்துகிறார்கள். இந்தப்பயிற்சிகளில் கவ்னம் ஈர்க்கும் குழந்தைகளை இந்த வளாகத்திலேயே செயல்படும் நடுநிலைப்பள்ளியில் சராசரி மாணவர்களுடன் சேர்ந்து படிக்கும் அளவிற்கு முன்னேற்றுகிறார்கள்.

சேவை முத்து:

ஆட்டிஸம் பாதித்த குழந்தைகளுக்கு ஹோலிஸ்டிக் தெரப்பி மூலம் பல்வேறு மருத்துவ முறைகள் மூலம் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிக்கப்ப்டுகிறது. சென்னை, அண்ணா நகரில் இயங்கும் DOAST என்ற அமைப்பின் இயக்குனர் டாக்டர் கார்த்திகேயன் சிறந்த முறையில் இதத நிர்வகிக்கிறார்.
இயல்பிலிருந்து விலகிய நிலை தான் ஆட்டிஸம் என்பது. அமெரிக்காவின் கணக்குப்படி 125 குழந்தைகளில் ஒருத்தருக்கு ஆட்டிஸம் உள்ளது. இந்தியாவிலும் இதே நிலை தான் என்று சொல்கிறார் இந்த மருத்துவர். ஆனால் இங்கே விழிப்புனர்வு இல்லாததால் இந்தக் குழந்தைகள் அப்படியே விடப்படுகிறார்கள். அவர்கள் பெரியவர்கள் ஆன‌ பின் அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் ஏராளம். சைகைத் தொடர்ப்பு, விழிகளை நேராய்ப்பார்த்துப்பேசுதல், இவைகள் அற்று தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக்கொண்டு விலகியே இருப்பார்கள்.
இவர்களுக்கு இங்கே ஆயுர்வேதம், இயற்கை மருத்துவ முறைகளைப் பின்பற்றி சிகிச்சை அளிக்கப்ப்டுகிறது.

Monday 10 March 2014

இதற்கென்ன தீர்வு?

சமீபத்தில் குடும்ப நண்பரின் மனைவிக்கு சிறுநீரகத்தொற்று ஏற்பட்டது. அவருக்கு சர்க்கரை நோய் இருப்பதால் அதுவே அதற்கு காரணம் என்று கூறி அவரை வழக்கமாய் பரிசோதிக்கும் மருத்துவர் தொடர்ந்து மருந்துகள் தந்தார். இரண்டு மாதமாக அவற்றை எடுத்துக்கொண்டும் இந்த பிரச்சினை சரியாகவில்லை. ரொம்பவும் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தார். யதேச்சையாக இன்னொரு சினேகிதியிடம் பேசிக்கொன்டிருந்த போது, அவர் இவரிடம் ' எதற்கும் நீ வழக்கமாய் சர்க்கரை நோய்க்கென்றும் அதைத்தொடர்ந்து விட்டமின்கள் எடுக்க வேண்டியும் எடுத்துக்கொள்ளும் மாத்திரைகளை நிறுத்திப் பாரேன்' என்று சொல்ல, சினேகிதியும் அது போல செய்ய ஒரே நாளில் அந்த இரண்டு மாதப்பிரச்சினை நின்றதாம். பிறகு சினேகிதி வேறொரு மருத்துவர் தந்த பழைய மாத்திரையே சர்க்கரைக்காக சாப்பிட ஆரம்பித்தாராம். அதன் பிறகு பல நாட்களாகியும் அவருக்கு பழைய பிரச்சினைகள் ஏற்படவில்லை!

இதைப்பற்றி ஒரு உறவினரிடம் பேசிக்கொன்டிருந்த போது,  ' இதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை. நல்ல மருந்துகளுடன் போலி மருந்துகள் கலந்து விற்பனைக்கு வருவது சர்வ சாதாரணமாகி விட்டது.' என்று மேலும் அதிர்ச்சி அளித்தார். இப்போதைய ஊழல் நிறைந்த‌ உலகில் மருந்துகள் எடுக்கும் விஷயத்தில் self analysis, self monitoring  அவசியத்தேவைகளாகி விட்டன!

மருத்துவரும் சமூக ஆர்வலருமான புகழேந்தி மருத்துவர்களிடம் எப்படி அணுக வேன்டும் என்று கூறியிருந்த பல தகவல்களை ஒரு மாத இதழில் சமீபத்தில் படிக்க நேர்ந்தது.தனக்கு பரிந்துரைக்கப்படுகிற மருந்துகளில், சோதனைகளில் எதெல்லாம் தேவையானது, எதெல்லாம் அவசியமில்லாதது, விலை குறைவான மருந்துகள் இருக்கின்றனவா, மருந்துகளின் சாதக‌, பாதகங்கள் என்னென்ன என எல்லாவற்றையும் கேட்டுத்தெரிந்துகொள்ள‌ வேண்டியது நோயாளியின் உரிமை. சரியான பதில் கிடைக்கா விடில் போராட வேன்டும் என்று சொல்கிறார் இவர்.

இவர் தன் அம்மாவை அறுவை சிகிச்சைக்காக ஒரு கண் மருத்துவ மனைக்கு கூட்டிசென்றிருக்கிறார். அறுவை சிகிச்சைக்கு முன் ஒரு ப‌டிவ்த்தில் அவரை கையெழுத்து போட‌ச் சொன்னார்கள். ' எதிர்பாராத வகையில் ஏதேனும் பிரச்சினை வந்தால் அதற்கு மருத்துவர்களோ, மருத்துவமனை நிர்வாகமோ பொறுப்பல்ல என்று எழுதப்பட்டிருந்தது. மருத்துவர் சொல்கிறார்..' மயக்க மருந்து கொடுக்கும்போது இரண்டு விதங்களில் பிரச்சினைகள் வரலாம். மயக்க மருந்தின் அளவை சரியான அளவில் கொடுத்து, நோயாளின் உட்ல் நிலை அதற்கு ஒத்துக்கொள்லாமல் போனால் அது மருத்துவ புறக்கணிப்பில் வராது. ஆனால் மயக்க மருந்தின் அளவைக் கூட்டிக்கொடுத்து, அதனால் பிரச்சினை வந்தால் அதற்கு யார் காரணம்? மருத்துவமனையின் கவனக்குறைவு தானே காரணம்? சரியான அளவுதான் மயக்க மருந்து கொடுக்கப்பட்டு இருக்கிற்து என்பதற்கு என்ன ஆதாரம்?

அந்த‌ வரிகளை அந்த படிவத்திலிருந்து நீக்குமாறு இவர் வாதாடியும் மருத்துவ மனை ஒத்துக்கொள்ள‌வில்லையாம்.

மறுபடியும் வேறொரு சமயம் இவர் தன் அம்மாவை வேறொரு மருத்துவ மனைக்குக்கூட்டி சென்றிருக்கிறார். சிறு நீரக செயல்பாட்டை கண்டுபிடிக்க யூரியா, இரத்தம் மற்றும் கிரியாட்டினின் என்ற சில பரிசோதனைகளைச் செய்யச் சொல்லியிருக்கிறார்கள். சிறுநீரக செயல்பாட்டை எல்லாவற்றையும் விட கிரியாட்டினின் தான் துல்லியமாகத் தெரிவிக்கும். எதற்கு மற்ற‌ பரிசோதனைகள் அனாவசியமாக என்று இவர் கேள்வி கேட்டிருக்கிறார். பதில் கிடைக்காமல் போகவே புகார் எழுதிப்போட்டிருக்கிறார்.
இவர் மேலும் சொல்கிறார்....

'போலியோ சொட்டு மருந்து கொடுத்தால் போலியோ வராது என்று விளம்பரபப்டுத்துகிறார்கள். போலியோ மருந்து கொடுத்தாலும் போலியோ வரும். அதற்குப்பெயர் ' வாக்ஸின் ட்ரைவ்டு போலியோ! இதைப்பற்றி யாரும் சொல்வதில்லை.
எல்லா தடுப்பூசி மருந்துகளிலும் 'தியோமெர்சல்' என்கிற ஒரு ப்ரிசர்வேட்டிவ் சேர்க்கப்படுகிறது. அதன் விளைவால் ஆட்டிஸம் வருவதாக அமெரிக்காவில் அதை தடை செய்து விட்டார்கள். இந்தியாவிலோ அப்படி எந்தத் தடையும் இல்லை. '

இவரின் மருத்துவ நண்பரிடம் உடல் முழுக்க தடிப்புகளால் அவதியுற்றிந்த ஒரு குழந்தையை கொன்டு வந்து காண்பித்தார்களாம். இவர் நண்பர் அந்தக் குழந்தை குனமாவத‌ற்கு நான்கு மாத்திரைகள், ஒரு ஊசி, ஒரு ஆயிண்மெண்ட், ஒரு சோப் என்று பரிந்துரைத்தாராம். மருத்துவர் சொல்கிறார், 'மருத்துவரான எனக்கு அந்தக்குழந்தையின் பிரச்சினைக்கு ஒரே ஒரு மாத்திரை மட்டும் போதும் என்று தெரியும். மாத்திரையால் தான் குணமானது என்று தெரியாமல் அந்த சோப்பும் ஆயின்மெண்டும் காரண‌ம் என்று நினைப்பார்கள், அது தான் வணிக தந்திரம்!'

இன்னொரு மருத்துவ நண்பர், அவருடைய பேஷண்டிடம் [ அவர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொன்டவர்] அவரின் உணவுக் குழாயில் எரிச்சல் என்ற பிரச்சினைக்கு டாக்டர் இஸிஜி செய்யச் சொன்னாராம். பொதுவாக‌ மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கு ஸ்டீராய்டு மருந்துகள் தருவார்களாம். அதன் விளவு தான் அந்த எரிச்சல். அதற்கு சாதாரண மருந்து போதும். நண்பரிடம் அது பற்றிக்கேட்ட போது அவர் சொன்னாராம், நான் தனியார் மருத்துவ மனையில் வேலை பார்க்கிறேன் அவர்கள் அதிக செலவு செய்து இஸிஜி மெஷின் எல்லாம் வாங்கிப்போட்டிருக்கிறார்கள். நான் இஸிஜிக்கு எழுதிக்கொடுக்க வில்லையென்றால் என்னை வேலையை விட்டு தூக்கி விடுவார்கள்!'

மக்கள் எவ்வளவு பாவம் பாருங்கள்!!

' வைரஸ் காய்ச்சலுக்கு ஆண்டி பயாடிக் மருந்து தரக்கூடாது. ஆனால் இங்கே எல்லா விதக்காய்ச்சலுக்கும் அது தான் தரப்படுகிறது. மலிவான, சாதாரண மருந்திலேயே குணமாகக்கூடிய நோய்களுக்கு அதிக விலையுள்ள‌ மருந்துகளும் அதிக செலவு உள்ள‌ சிகிச்சைகளும் தரப்படும் கொடுமையும் இந்தியாவில் தான் நடக்கிறது.' என்று குமுறும் இவர் ' மருத்துவருக்கும் நோயாளிக்குமான இடைவெளி நிரப்பப்பட வேன்டும். மருத்துவத்தில் வணிக நலன் தூக்கி எறியப்பட்டு மக்கள் நலன் முதன்மையாக்கப்பட வேன்டும்., கேள்வி கேட்கும் அறிவை மக்கள் வளர்த்துக்கொள்ள‌ வேன்டும், எல்லாவற்றுக்கும் மேலாக மருத்துவர்கள் மனசாட்சிக்கு பயந்து நடக்க வேன்டும், மருத்துவப்படிப்பும் சட்டமும் சொல்கிற ' மருத்துவம் உயிரைக்காக்கும் பணி' என்பதை எப்போதும் நினைவில் வைத்திருக்க வேண்டும்.' என்றெல்லம் ஆணித்தரமாகக்கூறுகிறார்.

Tuesday 4 March 2014

POSH- PAW!!

ஷார்ஜாவில் ஒரு சிறிய மிருகக்காட்சி சாலை இருக்கிறது. அதை முன்பேயே இங்கே பதிவிட்டிருக்கிறேன். மறுபடியும் மறுபடியும் மிருகக்காட்சி சாலை செல்லவேண்டுமென்று என் பேரன் அரிக்க ஆரம்பிக்க இரண்டு மூன்று தடவைகள் அழைத்துச்சென்ற என் மகனுக்கு மறுபடியும் அதே இடத்திற்குச் செல்ல போரடித்து விட்டது! வேறு எங்காவது மிருகக்காட்சி சாலை இருந்தால் அழைத்துச் செல்லலாம் என்றெண்ணம் தோன்ற அப்படி ஆராய்ந்து அழைத்துச் சென்றது தான் இந்த‌ POSH-PAW!

வான்கோழியின் அழகு நடை!
முதலில் அதைப்பற்றி அதிகம் தெரியாமல் தான் இந்த இடம் சென்றோம். ஆரம்பமே சுவாரஸ்யம். எல்லா மிருககாட்சிசாலைகள் போல இல்லாமல் இதன் கதவு இறுக சாத்தியிருந்தது. கதவை நாமே திறந்து கொண்டு நுழைந்தால் ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. கோழிகளும் வான்கோழிகளும் ஆடுகளும் சர்வ சுதந்திரமாக அங்கே சுற்றிப்பார்க்க வந்திருந்தவர்களோடு உலாவிக்கொன்டிருந்தன. [ அவை தானாக வெளியே சென்று விடக்கூடாது என்று தான் கதவை மூடவில்லை!!]

புன்னகையுடன் ரசிக்கும் மகனும் மருமகளும் பேரனும்!
ஒரு பக்கம் அவை சாப்பிடும் உலர்ந்த புல் வகைகள் அடுக்கப்பட்டிருந்தன. இன்னொரு பக்கம் கையோடு கொண்டு வந்திருந்த காரட், தழைகள், சோளக்கதிர்கள் என்று ஆட்டுக்குட்டிகளுக்கு ஊட்டிக்கொண்டிருந்தார்கள் சிலர்! நம் ஊரில் வைக்கோல் போர்கள் அருகே, வாய்க்கால் ஓரங்கள் என்று நாம் பார்த்த வளர்ப்புப்பிராணிகள் எல்லாம் இங்கிருந்தன. செயற்கைக்குளங்கள், மரங்கள் என்று சுற்றிலும் வித்தியாசமாய் இருந்தது!!

இளம் குதிரை மேல் ஆரோகணித்து வரும் இள‌ம் குருத்து!!
இவை எல்லாம் உறங்க குளிர்சாதன வசதிகளுடன் கூடிய அறைகள் இருந்தன. வளர்ப்புப்பிராணிகளை தங்கள் வீட்டில் வளர்ப்பவர்கள் எங்காவது ஊருக்கு செல்லும்போது இங்கே கொண்டு வந்து விட்டு விட்டுச் செல்லலாம். அதற்கு இந்த நிர்வாகம் வாடகை வசூலிக்கிறது. அதே போல இங்கிருக்கும் வளர்ப்புப்பிராணிகளை தன் வீட்டிற்கு எடுத்துச்சென்று சில தினங்கள் வைத்துக்கொண்டிருந்து விட்டு திரும்ப கொண்டு வந்து விடலாம். அதற்கு குறைந்த பட்சம் நம் பணத்திற்கு ஒரு இரவிற்கு 1000 ரூபாய் வரை வசூலிக்கிறார்கள்.


முகப்பில் நம் ஊர் கட்டை வண்டி அல‌ங்காரம்!
உலகெங்கும் இவர்கள் இது போல வளர்ப்புப்பிராணிகளை வளர்த்து வருகிறார்கள். உலகம் முழுவதும் எந்த வீட்டிற்கும் எந்த பிராணியையும் பத்திரமாக பாதுகாப்பாக அனுப்பி வைக்கிறார்கள்.

நம்ம ஊர்க்கோழி!
பஞ்சவர்ணக்கிளி!

போந்தாக்கோழி!!
செம்மறியாட்டுக்கு உணவூட்டும் ஐரோப்பிய பெண்மணி!!
இந்த வித்தியாசமான ஐடியா நம் ஊர்க்காரர்கள் யாருக்கும் இது வரை வந்திருக்கிறதா என்று தெரியவில்லை!!