Sunday 31 July 2011

நட்பு- தொடர் பதிவு!

சகோதரி அதிராவின் அழைப்பிற்கு அன்பு நன்றி!

நட்புக்கு இலக்கணம் திருக்குறளில் ஆரம்பித்து,  புதினங்கள், தமிழ்க்கவிதைகள், பாடல்கள், திரைப்படங்கள் என்று பலவற்றிலும் வந்து விட்டது. சின்னஞ்சிறு வயதில், உலகம் தெரியாத அந்தப் பருவத்தில், நட்பு என்ற சொல்லின் அர்த்தம் கூடப் புரியாத காலத்தில் சக பள்ளித்தோழிகள், அதே தெருவில் வசித்த மற்ற தோழிகள் என்று ஒன்றாய் கூடித் திரிந்ததுவும் நிலாவில் பாடியும் ஆடியும் களித்ததுவும் இப்போது நினைத்துப்பார்த்தால் கூட அடிக்கரும்பை சுவைப்பது போல மனசின் ஆழம் வரை இனிக்கிறது. அந்த நட்பிற்கு துரோகம் கிடையாது. பொறாமை கிடையாது. ‘ உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசுவது ’ கிடையாது.



‘ மயிலிறகு குட்டி போடுமா?’ என்ற கேள்வியில் பெரிய ஆராய்ச்சியெல்லாம் நடக்கும். பூவரசம்பூவில் மோதிரம் செய்ய போட்டிக்கு மேல் போட்டி இருக்கும். அப்புறம் கொஞ்சம் வயது அதிகமாக, பாவாடை தாவணியில் புதிய உலகம் தெரிந்ததில் சினேகிதிகளுடன் எதற்கெடுத்தாலும் சிரிப்பாயிருக்கும். படிப்பு அப்போது பிரதானமாக இருக்கும். தோளில் புத்தகப்பையும், கையில் சாப்பாட்டுப்பையுமாக, யார் வேகமாக நடப்பது என்பதில் பெரிய போட்டியே இருக்கும். அப்புறம் கல்லூரிப்பருவம். இளம் வயதின் ஆரம்பம். வீட்டின் பிரச்சினைகளைப் பகிர்ந்து கொள்வதிலும் காதலில் அமிழ்ந்து அந்தத் தவிப்பைப் பகிர்ந்து கொள்வதிலும் நட்பின் தீவிரம் இந்த வயதில்தான் அதிகரிக்கும். பாடல்களைக் கேட்டு மயங்குவதிலும் கவிதைகளைப் பற்றி ரசித்துப் பேசுவதிலும் நட்பின் அன்பு ஆழமாகும்.

இப்படி ஒவ்வொரு பருவத்திலும் ஒவ்வொரு விதமாய் வளரும் நட்பு, பல வருடங்களின் அனுபவங்களுக்குப்பிறகு, வாழ்க்கையின் நடுப்பகுதியில் உயிர்காக்கும் நட்பாகவும் அவதாரம் எடுக்கிறது. சில சமயங்களில் நட்பு முதுகில் குத்தும் எதிரியாகவும் மாறுகிறது. நட்பை சில சமயங்களில் பொருளாதாரம் தீர்மானிக்கிறது. சிலரது வாழ்க்கையில் நட்பு பொறாமையில் தீக்கனலாக மாறி தகிக்க வைக்கிறது. அந்த வயதில் ‘உயர்ந்த மனிதன் ’ திரைப்படத்தில் வரும்

“அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே
நண்பனே! நண்பனே! நண்பனே!

இந்த நாள் அன்று போல் இன்பமாய் இல்லையே
அது ஏன்? ஏன்? ஏன்? நண்பனே!

பாடம் படிப்பு ஆட்டம் பாட்டம்
இதைத் தவிர வேறெதைக் கண்டோம்

புத்தகம் பையிலே
புத்தியோ பாட்டிலே
பள்ளியைப் பார்த்ததும்
ஒதுங்குவோம் மழையிலே

நித்தமும் நாடகம்
நினைவெல்லாம் காவியம்
உயர்ந்தவன் தாழ்ந்தவன்
இல்லையே நம்மிடம்”

என்ற கவிஞர் வாலியின் பாடலை நினைக்காதவர் இருக்க முடியாது!!

உண்மையான நட்பு அந்தஸ்து பேதம் பார்ப்பதில்லை. அக்கறையும் கனிவும் அன்புமாய் நட்பை அமையப் பெற்றவர்கள் கொடுத்து வைத்தவர்கள்.

என் நட்புக்குரியவர்கள் என்று பார்த்தால், முக்கியமான சிலரைக் குறிப்பிட்டே ஆக வேண்டும்.

சில பிரச்சினைகளுக்காக சில மாதங்கள் அந்த நகரத்தில் நான் தங்கியிருந்த போது, குடும்ப நண்பரால் அறிமுகமான சினேகிதி இவர். குறுகிய நாட்களிலேயே மனம் ஒருமித்த சினேகிதிகளாகி விட்டோம். இவரைப்பற்றி முத்துச்சிதறலில் முன்னமேயே எழுதியிருக்கிறேன். கணவர் பெரிய செல்வந்தர். கையெடுத்து வணங்கக்கூடிய தோற்றம். ஆனால் வெளியில் தெரியாத மோசமான குடிப்பழக்கத்தால் வாழ்க்கையை நரகமாக்க, என் சினேகிதி அதுவும் 8 வயதிலும் 5 வயதிலும் 1 வயதிலும் பெண் குழந்தைகளைப் பெற்றவர் பல தடவைகள் தற்கொலைக்கு முயன்று கொண்டேயிருந்தார். நான் அங்கு இருந்தவரை அவரைப் பல தடவைகள் அந்த மோசமான முடிவிற்குச் செல்லாமல் தடுத்து நிறுத்தி கண்டித்திருக்கிறேன். நான் அங்கிருந்து இங்கு வந்த ஓரிரு மாதங்களிலேயே இறந்து போனார். இப்போது நினைக்கும்போது கூட மனதை கனமாக்கி விடும் சினேகிதி இவர்.

இன்னொரு சினேகிதி. மிகுந்த செல்வாக்குடன் வளர்ந்தவர். திருமணமானதும் அத்தனையும் மாறிப்போனது. சந்தேகப்படும் கணவனால் வாழ்க்கை ரணமாயிற்று. சம்பாதித்ததெல்லாம் கணவரின் பொருந்தாத வியாபாரத்தில் காற்றாய்ப் பறந்து போக வாழ்க்கை வறுமையின் கோரப்பிடியில் கழிய ஆரம்பித்தது. மலை போன்ற நம்பிக்கையை பையன் மீது வைத்திருந்தார். அவனும் விபத்தொன்றில் இறந்து போக, நிலை குலைந்து போனார் அவர். இப்போது பெண் வீட்டில் காலம் கழிக்கும் அவர் மனம் படும் பாட்டை எழுத்தில் வடிக்க முடியாது. அவ்வப்போது, 10 வருடங்களுக்கு முன்னால் இறந்த தன் மகனை நினைத்து அழும் அவரை என்னால் எப்போதுமே சமாதானம் செய்ய முடிந்ததில்லை.

சில சமயங்களில் நட்பு கூட நம்ப முடியாத அவதாரங்கள் எல்லாம் எடுக்கும். ‘அறுசுவை’ இணைய தள நிறுவனர் என்னை அவரது தளத்தில் சமையல் குறிப்புகள் எழுமாறு கேட்டுக்கொண்ட போது, அவர் ஒரு சக நண்பராகத்தான் இருந்தார். அப்புறம் நேரே சந்தித்த போதுதான் தெரிந்தது அவர் என் உறவினர் என்று! அதே போல் சக பதிவர் ‘ஹைஷ்’ நிறைய பேருக்கு நல்ல நண்பர். நல்ல அறிவுத்திறன் கொண்டவர். பலருடைய வலிகளை ‘ஹீலிங்’ என்ற முறையில் சரி செய்பவர். என் ஊரிலிருக்கும் அவரின் தங்கையைப்பார்க்கச் சென்ற போதுதான் தெரிந்தது அவரும் என் உறவினர் என்று! உலகம் எத்தனை சின்னது என்று அப்போது தான் புரிந்தது.

கடைசியாக பள்லிப்பருவத்திலிருந்து இன்று வரை தொடர்ந்து வரும் என் சினேகிதியைப் பற்றிச் சொல்ல வேண்டும். இவர் கோவையிலிருக்கிறார். எப்போது நான் ஊருக்குச் சென்றாலும் எனக்கு முன்னதாகவே என் வீட்டுக்கு வந்து பூட்டைத் திறந்து, எல்லாம் சுத்தமாக இருக்கிறதா என்று கவனித்து, ஒரு குட்டி சமையல் செய்து, நாங்கள் போய் இறங்கும்போது ஒரு ஃபில்டர் காப்பியுடன் வரவேற்பார். எத்தனை வேலைகள், பிரச்சினைகள் இருந்தாலும் நாங்கள் இருவரும் தினமும் இலக்கியம் பேச மறப்பதில்லை. பாடல்களைக் கேட்டு ரசிப்பதையும் கதைகள் பல பேசுவதையும் பிரச்சினைகளைப் பகிர்ந்து கொள்வதையும் பல வித சமையல் குறிப்புகளை செய்து பார்த்து ருசித்து சிரிப்பதையும் என்றுமே மறந்ததில்லை. அவர் என் சமையலை ருசித்து சாப்பிடுவதைப்பார்க்கும்போதெல்லாம் என் மனம் நிறைந்து விடும். நான் அவருக்காக பதிவு செய்து எடுத்துச் சென்ற பாடல்களைக் கேட்டு விழி நீர் கசிய பரவசப்படும்போது என் மனதும் புளகாங்கிதமடையும். வசந்த கால நட்பை விட இலையுதிர்க்காலத்து நட்பு ரொம்பவும் ஆழமானது!

நட்பிற்கும் எல்லை இருக்கிறது. அன்பும் பாசமும் எல்லை மீறினால் அந்த நட்பில் விரிசல்கள் விழுவதைத் தடுக்க இயலாது. சார்ந்திருக்கும் நட்பை விட கூடவே இருந்து பலப்படுத்தும் நட்பு மிகவும் சிறந்தது!

இந்த நட்பு தொடர்பதிவில் பங்கேற்க‌ ந‌ண்ப‌ர்க‌ள்

1. மதுரகவி ராம்வி

2. திரு. வெங்கட் நாகராஜ்


3. 'தீதும் நன்றும் பிறர்தர வரா' ரமணி அவர்கள்.


4. ஹுஸைன‌ம்மா

ஆகியோரை அன்புட‌ன் அழைக்கிறேன்.








Sunday 24 July 2011

தெய்வத்திருமகள்-விமர்சனம்

ரொம்ப நாட்களுக்குப்பின் தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு ஆரோக்கியமான திரைப்படம் வெளி வந்திருக்கிறது! மன வளர்ச்சி குன்றிய ஒருவனுக்கும் அவனது மகளுக்கும் இடையேயுள்ள பாசப்பிணைப்பு தான் கதையின் உட்கரு. மன வளர்ச்சி குன்றிய ஒருவனை விரும்பி மணம் புரிந்ததற்ககாக தன் பெண்ணைப் புறக்கணிக்கிறார் தந்தை. அவன் [ பெயர் கிருஷ்ணா] ஊட்டி அருகே ஒரு கிராமத்தில் சாக்லேட் ஃபாக்டரியில் வேலை செய்ய, அவள் அவனுக்கு ஒரு பெண் குழந்தையைப் பெற்றுக்கொடுத்து மறைகிறாள். குழந்தைக்கு ஐந்து வயதாகும்போது, அவளை இனம் கண்டு கொண்ட பாட்டனார், அவனையும் குழந்தையையும் தானே வைத்து காத்து வருவதாக சாக்கலேட் உரிமையாளரிடம் கூறி, போகும் வழியில் முன்பின் தெரியாத சென்னையில் காரிலிருந்து கிருஷ்ணாவை மனித நேயமேயில்லாமல் இரவு நேரத்தில் இறக்கி விட்டுப்போகும்போது கதை ஆரம்பிக்கிறது! ஒன்றும் பேசத் தெரியாது, தன் பெண்ணான ‘நிலா’வைத் தேடுவதாகச் சொல்லி கிருஷ்ணா வழியில் பார்ப்பவர்களையெல்லாம் கேட்க ஆரம்பிக்கும்போது நம் மனமும் நெகிழ ஆரம்பிக்கிறது.



கிருஷ்ணாவும் நிலாவும் பேசுகிற பேச்சுக்கள், சிரிப்பு, தவிப்பு, கோப தாபம் எல்லாமே நம்மையும் அப்படியே கதைக்குள் இழுத்துச் செல்லுகிறது! பிறந்ததிலிருந்து அவனிடமே வளரும் குழந்தை அவனிடம் தென்படும் வித்தியாசங்களைப் பொருட்படுத்தாமல் அவனை அப்படியே தந்தையாக சுவீகரிப்பது, சக மாணவன் ‘ அவள் அப்பா பைத்தியம்’ என்று சொல்லும்போது, ‘ என் அப்பா பைத்தியம் இல்லை’ என்று சின்னக் குரலில் மறுத்துப்பேசும் அழகு, இருவரும் படுத்தவாறே ‘ கிருஷ்ணா வந்தாச்சி, நிலா வந்தாச்சி’ என்று பேசியவாறே சிகப்பு மை பூசிய விரல்களை ஆட்டுவது, ‘ என்னைக் காணோமென்றால் அந்த நிலா கிட்டே சொல்லுங்க’ என்று முழு நிலவைக் காண்பித்து தன் மழலைக்குரலில் மகள் சொன்னதற்காக, பிரிவு ஏற்பட்ட பின் தனித்தனியே இருவரும் வெண்ணிலவிடம் பேசுவது, இறுதிக்காட்சியில் புற நிகழ்வுகளை மறந்து, சுற்றியுள்ள மனிதர்களை மறந்து தங்களின் சங்கேத மொழியில் அபினயிப்பது என்று தந்தைக்கும் மகளுக்குமான பாசப்பிணைப்பு நம்மை படம் முழுவதும் நெகிழ வைத்துக்கொண்டே இருக்கிறது!

விக்ரம் கதை நாயகனான கிருஷ்ணாவாகவே வாழ்ந்திருக்கிறார். அவர் நடிகர் விக்ரம் என்பது நமக்கு நினைவுக்கு வருவதேயில்லை. பொதுவாகவே மன வளர்ச்சி குன்றியவர்கள் பேச முயலும்போது, முதலில் வார்த்தைகள் வராமல் நாக்கு சிறிது நேரம் மேலண்ணத்தில் ஒட்டி, சுழன்று அதன் பிறகு தான் தனது மனதிலுள்ளதைப் பேச முயற்சி செய்வார்கள். என் சகோதரி குடும்பத்திலும் சினேகிதி குடும்பத்திலும் பல வருடங்கள் இவர்களைப் பார்த்துப் பழகிய அனுபவம் அதிகம். விக்ரம் ஒவ்வொரு தடவையும் பேசும்போதும் அதை அப்படியே பிரதிபலித்துக் காட்டியிருக்கிறார். தனக்கென ஒரு பொக்கிஷம் மகள் உருவில் கிடைத்தால் அவர்கள் எப்படியெல்லாம் அந்தப் பாசத்தில் அமிழ்ந்து போவார்கள் என்பதையும் இயக்குனர் விஜய் அருமையாக உருவகப்படுத்தியிருக்கிறார்.

அந்தக் குழந்தை நிலா தன் அழகாலும் பேச்சாலும் நம்மை அப்படியே வசீகரிக்கிறது. பிரமிக்கத்தக்க வீடோ, உணவோ, விளையாட்டுப்பொருள்களோ, எதாலுமே ஈர்க்கப்படாமல் தன் தந்தையையே நினைத்து, நிலவைப்பார்த்துப் பார்த்து உருகும் அந்தக் குழந்தை நம் மனசையும் உருக வைக்கிறது!

சின்னச் சின்ன நிகழ்வுகள்- பணத்தைத் திருடியவன் கிருஷ்ணாவின் நிலையை அறிந்து, தான் கொஞ்சப்பணத்தை மட்டும் வைத்துக் கொண்டு கிருஷ்ணாவிடமே நிறைய பணத்தைத் திருப்பிக் கொடுத்து திருடுவதிலும் ஒரு நியாயத்தைக் காண்பிப்பது, தன்னை அடைத்து வைத்திருக்கும் நாசரின் வன்மம் புரியாமல் கிருஷ்ணா நாசருடைய குழந்தைக்காக ஓடிச்சென்று மருந்து வாங்கி வருவது, பைத்தியம் என்று சொல்லி கிருஷ்ணாவை மிரட்டும் அந்தப் பையன் மனம் மாறி கிருஷ்ணாவுக்கு முத்தம் கொடுப்பது என்று அழகழகாய்க் காட்சிகளைத் தொகுத்திருக்கிறார் இயக்குனர்.

அனுஷ்காவின் காதல் முதலில் கருணை, அப்புறம் அக்கறை என்று உருவாகி அப்புறம் காதலாக மாறுவதை இயக்குனர் ஒரே ஒரு பாடல் மூலம் காண்பிக்கிறார். அந்தப் பாடலில் அனுஷ்காவின் முக பாவங்கள் அற்புதம்! அந்தக் காதல் நிறைவேறுகிறதா இல்லையா என்பதற்கெல்லாம் இயக்குனர் கவலைப்பட்டுக்கொள்ளவில்லை. கதாநாயகனின் பல குண இயல்புகளால் ஈர்க்கப்பட்ட ஒரு பெண்ணின் மனதில் ஏற்படும் அழகான உணர்வுகள் என்ற வரையில் அதை அப்படியே விட்டு விடுகிறார்.


கடைசியில் தந்தையும் மகளும் இணையும்போது மனம் நிறைகிறது. இயக்குனர் அதை அப்படியே விட்டு விடாமல் மன உணர்வுகளைக்காட்டிலும் நியாயங்களே முக்கியம் என்பதைக் காட்டுகிறார். நாசர் கோர்ட்டில் வாதாடும்போது, ‘ உன்னால் இந்தக் குழந்தையை எப்படி டாக்டருக்குப் படிக்க வைக்க முடியும்?’ என்று கேட்டு நெஞ்சில் அறைவதைப்போல பல கேள்விகளை கிருஷ்ணாவிடம் கேட்கிறார். அந்தக் கேள்விகளிலுள்ள நியாங்களை அப்படியே உள்வாங்கிக்கொள்கிறது கிருஷ்னாவின் மனம். குழந்தை தூங்கியதும் அதை அப்படியே அள்ளிச் சென்று பாட்டனாரின் இன்னொரு மகளான அமலா பாலிடம் கொடுக்கிறார். இது தான் நியாயமென்று இயக்குனர் சொன்னாலும் யதார்த்தத்தை நம் மனம் ஏற்க மறுக்கிறது

இயக்குனர் விஜய் அங்கே தான் ஜெயிக்கிறார்.

ஏற்கனவே மிகச் சிறந்த ஓவியமாக ‘மதராசப்பட்டிணத்தைத் தீட்டியவர், மேலும் அழகான வண்ணக்கலவைகளைச் சேர்த்து இன்னுமொரு அழகான ஓவியத்தைக் கொடுத்துள்ளார். மன வளர்ச்சி குன்றியவர்களுக்கு மரியாதை செலுத்திய இயக்குனர் விஜய்க்கு ஒரு சல்யூட்!!

படங்களுக்கு நன்றி: கூகிள்

Sunday 17 July 2011

மனம் கவர்ந்த முன்னுரைகள்..

தினந்தோறும் வாழ்க்கையின் புறத்தேடல்களுக்காக மின்னலாய் தோன்றி மறையும் இயந்திர நிமிடங்களுக்கிடையே, அகத்தேடல்களுக்கும் அறிவுப்பசிக்கும் போதுமான நேரத்தை ஒதுக்க முடிவதில்லை. அதுவும் பெண்களுக்கு தார்மீகக்கட்டுப்பாடுகளும் சுயமாய் நிர்ணயித்துக்கொண்ட கடமைகளும் அதிகம்.

தினசரி வாழ்க்கையிலிருந்து மறந்து போன அல்லது ஒதுங்கிப்போன சில அருமையான விஷயங்களை மீண்டும் இதயம் தேடும்போது ஏற்படும் புத்துணர்ச்சிக்கு எல்லையேயில்லை. இந்தப் புத்துணர்ச்சிக்கு வழி வகுத்த சினேகிதி திருமதி.வித்யா சுப்ரமண்யத்திற்கு என் அன்பு நன்றி!

அறிவு ஜீவிகளின் எழுத்துத் தாக்கங்கள், கடினமான சொற்பிரயோகங்கள், நிதர்சனத்தை தோலுரித்துக்காட்டும் வார்த்தைச் சாடல்கள்- இவற்றையெல்லாம் தவிர்த்து, சிறு வயதில் என்னை பதப்படுத்திய, வழிகாட்டிய, அன்பென்பதையும் உண்மையென்பதையும் சத்தியமென்பதையும் தங்கள் எழுத்து மூலம் மனதில் வளர்த்த எழுத்தாளர்களில் சிலரையும், அதன் பிறகு என்னைப் பாதித்த எழுத்தாளர்களில் சிலரையும் சில முன்னுரைகள் மூலம் அடையாளம் காட்ட இங்கே ஆசைப்படுகிறேன்.



முதலில் நான் என்றுமே ரசிக்கும் கல்கியின் சிவகாமியின் சபதம்.


இதுவரை எத்தனை முறைகள் இந்த சரித்திர நாவலைப் படித்திருப்பேன் என்று எனக்கே தெரியாது. ஒவ்வொரு தடவை படிக்கும்போதும் புதியதாக, அதே ரசனையுடன் அதே ஆழத்துடன் ரசிக்கக்கூடியதாக இருப்பதுதான் சிறந்த நாவலுக்கான அடையாளமாக நான் கருதுகிறேன். பழந்தமிழர்களின் சிறந்த அடையாளங்களாய் நிறைந்து நின்ற வீரமும் கலையும் எப்படி காதலில் அமிழ்ந்து போயின, அதே காதல் எப்படி வீரத்திற்கும் கலைத்தாகத்திற்கும் ஏற்பட்ட செருக்கான மோதலில் அழிந்து போனது என்பதுதான் ஒரே வரியில் இந்தக் கதைக்கான களம்.



இந்தக் கதை உருவானது பற்றி தனது முன்னுரையில் கல்கி இப்படி கூறுகிறார்:

‘ நீல வானத்திலிருந்து பூரண சந்திரன் அமுத கிரணங்களை பொழிந்து கொண்டிருந்தான். பூவுலகம் மோகன நிலவினிலே மூழ்கி அமைதி கொண்டு விளங்கியது. எதிரே எல்லயின்றி பரந்து கிடந்த வளைகுடாக்கடலில் சந்திர கிரணங்கள் இந்திர ஜாலத்தை செய்து கொண்டிருந்தன.

கடலோரத்து வெண்மணலில் நானும் ரசிக மணி டி.கே.சியும் சில நண்பர்களும் அமர்ந்திருந்தோம். ரசிகமணி, கோபாலகிருஷ்ண பாரதியாரின்

‘ விதியின் எழுத்தை கிழிச்சாச்சு!-முன்பு
விட்டகுறை வந்து தொட்டாச்சு! ’

என்ற வரிகளை எடுத்துரைத்தபோது, அந்த வரிகள் ஒரு சக்தி வாய்ந்த மந்திரம் போல என்னை மதியிழக்கச் செய்தது. கடலில் ஆயிரமாயிரம் படகுகளும் கப்பல்களும் திடீரென்று காட்சி அளித்தன. சற்று தூரத்தில் மாட மாளிகைகளும் கூடகோபுரங்களும் எழுந்தன. அவற்றின் உச்சியில் ரிஷபக்கொடிகளும் சிங்கக்கொடிகளும் உல்லாசமாய்ப் பறந்தன. இனிமை ததும்பிய இசைக்கருவிகளினின்றும் எழுந்த சங்கீதம் நாற்புறமும் சூழ்ந்து போதையை உண்டாக்கியது. எங்கோ யாரோ காலில் கட்டிய சதங்கைகள் ஒலிக்க நடனமாடிக்கொண்டிருந்தார்கள்..’

நான்கு பாகங்களால் உருவான தனது ‘சிவகாமியின் சபதம்’ உருவாகக் காரணமாயிருந்த அந்த நொடிப்பொழுதை கனவு மயக்கத்துடன் வர்ணிக்கும் கல்கி,  இறுதியில்

‘இத்தனை பாரத்தையும் ஏறக்குறைய 12 வருடங்களாக என் உள்ளத்தில் தாங்கிக் கொண்டிருந்தேன். கடைசி பாகத்தின் கடைசி அத்தியாத்தின் கடைசி வரியை எழுதி ‘முற்றும்’ என்று முடித்தபோது தான் 12 ஆண்டுகளாக நான் சுமந்து கொண்டிருந்த பாரம் என் ‘ அகத்திலிருந்து’ நீங்கியது’ என்கிறார்.

இரண்டாவது எழுத்தாளர் ‘அகிலனின்’ எங்கே போகிறோம்?”



எழுத்தாளர் அகிலன் ‘வேங்கையின் மைந்தன்’, ‘வெற்றித்திருநகர்’, ‘கயல்விழி’ போன்ற சரித்திர நாவல்களையும் ஞானபீடப்பரிசு உள்பட ஏராளமான விருதுகள் பெற்ற நாவல்களை எழுதியவர். அவரது ‘வேங்கையின் மைந்தன்’ நாவலின் முடிவு வாசகர்களை பாதித்ததால் அவர்களது வேண்டுகோளுக்கிணங்கி அதைப் புத்தகமாய் வெளியிட்டபோது, முடிவை மாற்றி எழுதி வெளியிட்ட பெருமை இவருக்கு உண்டு.

‘எங்கே போகிறோம்’ 1973-ல் வெளி வந்த, ராஜா சர் அண்ணாமலை செட்டியார் இலக்கியப் பரிசு பெற்ற நாவல். தன் உடலை மூலதனமாக்கிப் பொருள் குவிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்ட ஒரு பெண்தான் இந்தக் கதைக்கு தலைவி.

அகிலன் தன் முன்னுரையில் இப்படி கூறுகிறார்:

“ இந்த நாவலின் இலக்கிய வடிவம் பற்றியோ, உத்தி, உட்கருத்து பற்றியோ அளக்க முன்வருவோர், தீர்ப்பு கூற வருவோர், அவரவர் அளவுகோல்களின் பலவீனத்தையே இதில் கண்டு கொள்ள முடியும். எச்சரிக்கையுடன் இதனை நெருங்குங்கள். எரிமலையிலிருந்து வெடித்து, இன்னும் தன் சத்திய ஆவேச வெப்பம் தணியாத நிலையில் இருக்கும் ஒரு அக்னிக் குஞ்சு இது. ‘ஆன்மாவின் வெளிப்பாடு தான் கலை; சத்தியத்தில் அழகைத் தேடிப்பார்; புறக்கண்களுக்கு சத்தியத்தின் உருவம் அழகில்லாதது போலத் தோன்றினாலும் அகக்கண்களால் அதன் அழகைத் தேடிச்செல்’ என்ற காந்தியடிகளின் இலக்கியக் கொள்கையை இந்த நாவலில் நான் பரிசோதித்துப் பார்க்க முயன்றிருக்கிறேன். சத்தியமும் அசத்தியமும் ஒன்றோடொன்று கலந்து, உண்மையும் பொய்மையும் ஒன்றோடொன்று சங்கமமாகி, காக்காய்ப்பொன் பத்தரை மாற்றுத் தங்கம் போலவும் பத்தரை மாற்று பசும்பொன் துருப்பிடித்த இரும்பு போலவும் காட்சியளிக்கும் இந்த நாளில் அவற்றை இனம் பிரித்துக் காட்டுவது என் கடமை என்று தோன்றியதால் இதை செய்துள்ளேன்.”

கிட்டத்தட்ட 40 வருடங்களுக்கு முன்பே, மாறிப்போன மனிதர்களைப்பற்றியும் நாட்டைப்பற்றியும் இத்தனை கவலைப்பட்டிருக்கிறார் அகிலன். இன்று உயிரோடிருந்தால் என்ன எழுதுவார்?

மூன்றாவதாய் எழுத்தாளர் ஜெயகாந்தனின் 'சக்கரம் நிற்பதில்லை'.

என் ஆதர்ச எழுத்தாளர்களிடமிருந்து சற்று விலகி, அதன் பின் புகழ்பெற்று விளங்கிய எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கு வருகிறேன். இவரின் ‘ யாருக்காக அழுதான்’, ‘ கருணையினால் அல்ல’ போன்ற நாவல்கள் மனதை மிகவும் பாதித்தவை. முரண்பாடுகளும் உண்மையை நெஞ்சை சுடுமாறு எழுதுவதும் இவரது தனி முத்திரைகள். அவரின் முன்னுரையில்கூட ‘ பாரதியின்’ திமிர்ந்த ஞானச் செருக்கு' புலப்படுகிறது! தன் சிறுகதைத் தொகுதிகளில் ஒன்றான ‘சக்கரம் நிற்பதில்லை’யில் அவர் இப்ப்டிக் கூறுகிறார்.

“ இலக்கியமும் எழுத்தும் இந்தப் பத்திரிகைகளை அண்டியில்லை. எழுத்தையும் இலக்கியத்தையும் நம்பி நமது பத்திரிகைகள் உயர வேண்டும் என்பதே என் விருப்பம். மேலும் அபிமானமுடைய எழுத்தாளர்களும் தேர்ந்த ரசனையுடைய வாசகர்களும் நமது தமிழ்ப் பத்திரிகைகளில் இலக்கியம் தேடுவதை இன்னும் விட்ட பாடில்லை. அவர்கள் என்னையேனும் கண்டு ஓரளவு ஆறுதலடையட்டும் என்ற இலக்கியப் பொறுப்பினால் செய்யப்படும் நிஷ்காம்ய கர்மமாகவே நான் இந்த அச்சு வாகனத்தின்மீது ஆரோகணித்திருக்கிறேன். ஆனால் தரிசனம் என்பது இந்த ஊர்கோலம் மட்டுமல்ல, அது விஸ்வரூபம்..!”

நான்காவதாய் கவிஞர் வைரமுத்துவின் ‘கல்வெட்டுக்கள்’ என்ற கட்டுரைத் தொகுப்பு.

தன் முன்னுரையில் தனது இளம் வயதில் பெய்த மழையில் மறுபடியும் நனையப்போவதாய் சொல்லி, அந்த அனுபவத்திற்கு நம்மையும் அழைக்கிறார். அந்த அனுபவத்தை பதிவு செய்யும் விதத்தை அத்தனை அழகாய்ச் சொல்லுகிறார்.. . ..

“ இந்த அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளுவதற்கும் பதிவு செய்வதற்கும் ஏற்ற வாகனம் எது என்று நான் யோசிக்கிறேன். நான் அபிநயம் படிக்க வேண்டுமென்றால் எனக்கு கவிதை வேண்டும். ஆனால் கைவீசி நடக்க வேண்டுமென்றால் எனக்கு கட்டுரை வேண்டும். தன்னில் இருப்பதை விட அதிகமாய்க் கற்பனை செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்வது கவிதை; தன்னில் இருப்பதைத் தவிர எதையும் கற்பனை செய்து கொள்ளக்கூடாது என்று கட்டளையிடுவது கட்டுரை. “

கட்டுரை இலக்கியம் அவ்வளவாகப் புகழடையவில்லை என்ற தன் ஆதங்கத்தை

“ வாழ்க்கையைப்பற்றிய அகப்பார்வைகளுக்கு கொடுக்கிற முக்கியத்துவத்தை வாழ்க்கையைப்பற்றிய புறப்பார்வைகளுக்கு நாம் தரவில்லை என்பதே கட்டுரை இலக்கியக் குழந்தை இன்னும் தொட்டிலை விட்டு வெளிவராத துயரத்திற்குக் காரணம். முத்தமிழின் முதற்றமிழாக இருக்கிற இயற்றமிழ் நான்காம் தமிழாக ஆகி நசிந்து விடக்கூடாது” என்று தெரிவிக்கிறார்.

ஐந்தாவதாய், இறுதியாய் எழுத்தாளர் வித்யா சும்ரமணியத்தின் ‘ உன்னிடம் மயங்குகிறேன்’ என்ற சமூக நாவல்.

இதற்கு எழுத்தாளர் பாலகுமாரன் முன்னுரை எழுதியிருக்கிறார்.  நானும் சில வரிகள் முன்னுரையாக எழுத விரும்புகிறேன். வித்யா தவறாக நினைக்க மாட்டாரென்று நம்புகிறேன். 15 வருடங்களுக்கு முன் என்று நினைக்கிறேன், இந்த நாவலைப்படித்து விட்டு, அவரை சந்தித்து நேரில் பாராட்டி வந்தேன்.

தன்னை வளர்த்த பெரியப்பாவை தெய்வமென்ற உயரிய நிலையில் வைத்து பூஜிக்கும் மகளும் தன் கடமையில் உறுதியாய் நிற்கும் பெரியப்பாவும்தான் இக்கதையின் நாயகன் -நாயகி. இரட்டைக்குதிரைகள் பூட்டிய அழகிய ரதம் ராஜபாட்டையில் அதிவேகமாய் செல்லுவது போல இவரது கதை ஆரம்பத்திலிருந்து இறுதி வரை பறந்து செல்கிறது. பார்வையை விட்டு அகன்று போனால்கூட சில மலர்களின் நறுமணம் பின்னாலேயே தங்கி நெஞ்சை நிரப்புவது போல, இவரின் கதாபாத்திரங்களின் அன்பும் பாசமும் அதனால் ஏற்படும் தர்க்க நியாயங்களும் இதயத்தில் அப்படியே தங்கி விடுகின்றன.

 ‘சுகம், துக்கம், இன்பம், துன்பம், நன்மை, தீமை எதைக்கண்டும் நிலை தடுமாறாது ஒரே மாதிரியான மனோபாவத்துடன் இருப்பவரையே கீதை ‘ஸ்திதபிரக்ஞன்’ என்று கூறுவதாய் இறுதியில் சொல்கிறார். எல்லாவற்றையும் கடந்த ஒரு நிலை தான் ஸ்திதபிரக்ஞன் ஆவது. ஆனால் வாசகர்களை இந்த நிலைக்கு அழைத்துச் செல்ல வித்யா முயற்சிக்கிறார். 90 சதவிகிதம் அவரது கதாநாயகி அவ்வாறிருக்க முயற்சிப்பதாகச் சொல்லும்போது, அதுவரை மனங்கனிந்து போயிருக்கும் வாசகனும் அந்த நிலைக்கு 50 சதவிகிதம் முயற்சித்தால்கூட, அதுவே அவருடைய எழுத்துக்கு வெற்றி தானே?

இக்கதையின் ஆச்சரியமே, கடைசி நாலைந்து பக்கங்களில்தான் இக்கதையின் இரண்டாவது நாயகி வருகிறார். தன் செய்கைகளினாலும் பேச்சினாலும் திடீரென்று முதல் கதாநாயகியாகவே ஆகி விடுகிறார். இவர் மூலம் வித்யா ஒரு மலையாளக்கவிதையின் தமிழாக்கத்தை கடைசியில் சொல்லி தன் மனசின் ஆதங்கத்தை ஒரு நேர்மையான எழுத்தாளராய்க் கூறுவது தான் இந்த நாவலின் சிறப்பு!.

“எத்தனை ஜென்மம் கூளத்தில் கழிந்தது!
எத்தனை ஜென்மம் ஜலத்தில் கழிந்தது!
எத்தனை ஜென்மம் மண்ணில் கழிந்தது!
எத்தனை ஜென்மம் மரங்களாய் நின்றது!
எத்தனை ஜென்மம் மிருகமாய் வாழ்ந்தது!
அத்தனையும் கழிந்து அன்னையின் கர்ப்ப வாசம்!'

கவிதையை எழுதியவர் மேலும் கூறுகிறார்;

'இந்த அரிய உயரிய மானிடப் பிறவி அவ்வளவு இலேசில் கிடைத்ததில்லை. இதற்கு முன்பு எத்தனை ஜென்மங்கள் எப்படியெல்லாம் இருந்திருக்கிறோமோ, குப்பை கூளத்தில் புழுவாய், ஜலத்தில் மீனாய், மண்ணுள் பூச்சியாய், மரங்களாய், மிருகங்களாய்..

தன்னைத்தானே அறியும் அரிய குணம் கொண்ட ஒரே ஒரு பிறவி இந்த உயர்ந்த மானிடப்பிறவி தான். அப்படிப்பட்ட உயர்ந்த பிறவி எடுத்த பின் பூர்வ ஜன்ம வாசனைகளை வர விடலாமோ?”

மனிதப்பிறவி எடுத்ததன் அர்த்தத்தை மிக அழகாய்ச் சொல்லும் இந்த நாவல் மிகச் சிறந்ததொன்று என்பதில் சந்தேகமேயில்லை!!!

இந்த தொடர்பதிவில் பங்கேற்குமாறு நான் அன்புடன் அழைக்கும் தோழமைகள்:

1. திரு.வை.கோபாலகிருஷ்ணன்[ வை.கோபால‌கிருஷ்ண‌ன்]


2. திரு.மோகன்ஜி [வான‌வில் ம‌னித‌ன்]


3. திரும‌தி. நிலாம‌க‌ள் [ப‌ற‌த்த‌ல் ப‌ற‌த்த‌ல் நிமித்த‌ம்]


4. திரும‌தி.சாக‌ம்ப‌ரி [ம‌கிழ‌ம்பூச்ச‌ர‌ம்]

Monday 11 July 2011

முத்துக்குவியல்-8

சென்ற 10 நாட்களில் அவசர வேலைகளாய் தஞ்சை சென்று திரும்பி வந்தேன். இந்த பத்து நாட்களில் யோசிக்க வைத்த, பயப்படுத்திய, மனதைக் கலங்க வைத்த சில நிகழ்வுகளை இங்கே முத்துக்குவியலாக உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

கலங்க வைத்த நிகழ்வு:


என் ஆடிட்டரைப்பார்க்கப் போயிருந்தேன். எனக்காக காத்திருந்த அவரை அவரது அலுவலகத்தில் பார்க்க நுழைந்த போது, அவர் தனது காரை வெளியே எடுத்துக்கொண்டிருந்தார். என்னை பார்த்ததும் ‘ கொஞ்சம் லேட் ஆனதும் கிளம்பி விட்டேன்.. சாரிம்மா’ என்றார். அவரது முகம் முழுக்க சோர்வு. ‘பேத்தி என்னை விட்டு நகருவதில்லை. தேடிக்கொண்டிருப்பாள் என்னை” என்றார். என் மனது அவரின் பெரும் சோகத்தை நினைத்து கனமாகிப்போனது. இரண்டு வருடத்திற்கு முன், அவரது மருமகன் காரில் தஞ்சை நோக்கி வந்து கொண்டிருந்தபோது, மதுரை அருகே விபத்தாகி மரணமடைந்தார். அதுவும் அவரது மகன் திருமணத்திற்கு முதல் நாள்! வாழ்த்தச் சென்ற என்னைப்போன்ற பலர் அனுதாபங்களைத் தெரிவிக்க வேண்டியதாகி விட்டது. கணவரை இழந்த அவரது மகள், இங்கேயோ திருமண வேலைகள், எப்படியிருந்திருக்கும் அந்தச் சூழ்நிலை! அதற்கப்புறம் நடந்தது தான் சகிக்க முடியாததாகி விட்டது. சென்ற வருடம் அதே நாளில், அதே இடத்தில் அவரது மகளும் மகனும் வந்து கொண்டிருந்த போது, ஓட்டுனரின் வேகம் போதவில்லை என்று அவரை பின்னுக்கு உட்கார வைத்து, அவரது மகள் மிக அதிக வேகத்தில் ஓட்ட, கார் மரத்தில் மோதி, விபத்துக்குள்ளானது. மகனுக்கு காயங்கள் எதுவுமில்லை. ஓட்டுனர் அந்த இடத்திலேயே மரணமடைய, இரத்த வெள்ளத்தில் இவரது மகளே காரை ஓட்டிக்கொண்டு  [ இவர் ஒரு மருத்துவர்]], மருத்துவமனைக்குச்சென்றிருக்கிறார். கால்களிலும் கைகளிலும் அறுவை சிகிச்சை உடனே செய்தும் உள்ளுக்குள்ளேயே குடல்கள் எல்லாம் நசுங்கியதால் விபரம் உணர்ந்து மறுபடியும் சிகிச்சை தருவதற்குள் மரணமடைந்து விட்டார். ஒரு பொறுப்புள்ள மருத்துவர், அதுவும் தன் கணவர் இறந்த விதத்தைக்கூட நினைத்துப்பார்க்காமல் அவசரமாக செயல்பட்ட விதம், அவருடைய உயிரை மட்டுமல்லாது தவறு எதுவுமே செய்யாத அவரது ஓட்டுனரையும் அல்லவா பலி கொண்டு விட்டது? அரசாங்கம் ஆங்காங்கே அதிக வேகம் அதிக ஆபத்து என்பதைப் பலவிதமாக எழுதி வைக்கத்தான் செய்கிறது. அப்படி இருந்தும் என்ன பயன்?

அவரின் இரண்டு குழந்தைகளும் இப்போது தாத்தாவுடன்.. ;இன்னும் எத்தனை நாட்கள் இருப்பேன் என்று தெரியவில்லை’ என்று பேசும் அவரின் கண்களில் தெரிந்த வலி இப்போதும் என் மனதைக் கலங்கச் செய்கிறது.

பயமுறுத்திய நிகழ்வு:




இந்த தடவை பயணத்தின்போது, விமானம் திருச்சியில் தரையிறங்குவதை அறிவித்த அடுத்த விநாடி என் பேரக்குழந்தை துடித்து அழ ஆரம்பித்து விட்டது. என் மகன், என் மருமகள் கைகளுக்கோ, என் கைகளுக்கோ அடங்காமல் துடிக்க ஆரம்பித்து விட்டது. அப்புறம்தான் விமானப் பணியாளரின் மூலம் சிறு குழந்தைகளுக்கு விமானம் மேலே ஏறும்போதும் கீழே இறங்கும்போதும் ஏற்படும் காற்றழுத்தத்தால் காது அடைக்கும்போது தாங்க முடியாத வலி ஏற்படுமெனத் தெரிந்தது. அவர் கொடுத்த பஞ்சை காதில் அடைத்தால் குழந்தை அதை எடுத்து வீசி எறிந்து விட்டு அழுகிறது. சீட் பெல்ட் அணிந்த நிலையில் எழுந்திருக்க முடியாது, நாங்கள் அந்த 20 நிமிடங்கள் பட்ட அவஸ்தையும் அனுபவித்த பயமும் மறக்க முடியாதது. அந்த சமயத்தில் தாய்ப்பால் கொடுக்கப்பட்ட குழந்தையொன்று இறந்து விட்டதால், தாய்மார்கள் அப்போது தாய்ப்பால் கொடுக்கக்கூடாது என்றும் அறிவித்தார் அந்தப் பணியாளர். விமானத்தின் சக்கரங்கள் தரையைத் தொட்ட அடுத்த விநாடி குழந்தை அழுகையை நிறுத்தி விட்டது. கடந்த 35 வருடங்களாக தொடர்ந்து விமானப்பயணங்கள் செய்து வரும் நான் ஒரு போதும் இந்த மாதிரி பயத்தை அனுபவித்ததில்லை. திரும்ப வரும்போது, விமானத்தில் ஏறியதுமே, நான் விமானப்பணியாளரிடம் சென்று இதைப்பற்றி சொல்லி, இந்த மாதிரி நிலைமையில் இன்னும் என்னென்ன முன்னெச்சரிக்கைகள் எடுத்து குழந்தையின் வலியைத் தவிர்க்கலாம் என்று விசாரித்தேன். விமானம் கிளம்பும்போதும்கூட இந்த மாதிரி ஏற்படுவதுண்டு என்றும் அதற்கு முன்னாலேயே குழந்தைகளுக்கு ஏதேனும் தின்பதற்குக் கொடுத்தால், அதை மென்று கொண்டிருக்கும்போது, காதில் வலி ஏற்படாது என்றும் குழந்தை தூங்கும்போதே காதில் பஞ்சை வைத்து விட வேண்டுமென்றும் அந்தப் பணியாளர் சொன்னார்.

வெளியே வந்து இருக்கையில் அமர்ந்த சில விநாடிகளிலேயே விமானம் ஏர் பாக்கெட்ஸ் நடுவே போக இருப்பதால் சீட் பெல்ட்டை அணியச் சொல்லி அறிவிப்பு வந்தது. சில விநாடிகள் அல்லது சில நிமிடங்கள் இப்படியும் அப்படியுமாக விமானத்தில் ஆட்டமிருக்கும். உடனேயே ஒரு குழந்தை காதில் ஏற்பட்ட காற்றழுத்தத்தைத் தாங்க முடியாமல் கதறி அழ ஆரம்பித்து விட்டது. கிட்டத்தட்ட அரை மணி நேரம் கதறி அழ, எல்லோரும் அனுதாபத்துடன் பார்க்க, தனியாக வந்த அந்தப் பெண்மணி அந்தக் குழந்தையுடன் போராட்டமே நடத்தினார். விமானப்பணியாளர் சொன்னதை நானும் அவரிடம் சொன்னேன் என்றாலும், எதையுமே முன்னதாகச் செய்யாததால் குழந்தை எந்த உனவையும் ஏற்க மறுத்து விட்டதுடன் காதில் வைத்த பஞ்சையும் பிடுங்கி எறிந்து விட்டது. ஒரு வழியாக விமானம் சம நிலையில் பறக்க ஆரம்பித்ததும் குழந்தை அழுகையை நிறுத்தி உறங்க ஆரம்பிக்க, அந்தப் பெண்ணினால் கண்ணீரைக் கட்டுப்படுத்தவே இயலவில்லை.

இதை எழுதுவதன் நோக்கமே, விமானத்தில் பயணம் எதிர்காலத்தில் முதன் முதலாக செய்யவுள்ள பெற்றோருக்கு இது உதவும் என்பதால்தான். அதோடு, இவைகளைத் தவிர, வேறு ஏதேனும் வழி முறைகள் இருந்தாலும் இங்கே அன்புத் தோழமைகள் என்னுடன் பகிர்ந்து கொண்டால் அது மற்றவர்களுக்கும் பயனுள்ளதாக அமையும்.

யோசிக்க வைக்க நிகழ்வு:



சமீபத்தில் ஒரு மகளிர் இதழில் படித்த நிகழ்வு இது. உண்மை நிகழ்ச்சியும் கூட.

அம்மா தன் பெண் குழந்தையை பூஜை அறைக்கு அழைத்துச் சென்று, “தினமும் சாமியிடம் ‘ நான் இன்றைக்கு எந்த தப்பு செய்திருந்தாலும் மன்னிச்சுடு சாமி’ என்று சொல்லி கும்பிட்டுக்கொள். சாமி எந்த தப்பு செய்தாலும் உன்னை மன்னித்து விடுவார்” என்றாராம்.

அதற்கு அந்தக் குழந்தை, “நாம் தப்பு செய்து விட்டு மன்னிச்சுடு என்று கேட்டால் சாமி என்னம்மா செய்யும்? அதை விட, நான் தினமும் தப்பு செய்யாமல் காப்பாத்து சாமி’ என்று வேண்டிக்கலாமே?” என்று சொன்னதைக் கேட்டு அசந்து போனாராம் அம்மா. நானும் அசந்துதான் போனேன். குழந்தையும் தெய்வமும் ஒன்று என்பதற்கு இதை விட வேறு உதாரணம் தேவையில்லை என்று தோன்றியது.

குழந்தைகள் என்றுமே மிகத் தெளிவாகத்தான் இருக்கிறார்கள். நாம் தான் எப்போதுமே குழம்பியிருக்கிறோம்!

படங்களுக்கு நன்றி: கூகிள்

Monday 4 July 2011

தஞ்சை பெரிய கோவில்- இரண்டாம் பகுதி



தஞ்சை கோவில் இரு கோட்டை சுற்று சுவர்களும் இடையே அகழியும் சூழப்பெற்றது. இவை பிற்காலத்தில் செல்வப்ப நாயக்க மன்னனால் உருவாக்கப்பட்டன என்று ஒரு ஆராய்ச்சியாளரால் சொல்லப்பட்டாலும் ராஜராஜனின் தெய்வீகக் குருவான கருவூர் சித்தர் தனது காலத்திலேயே தன் திருவிசைப்பாவில் அகழியைப்பற்றியையும் அதிலிருந்த முதலைகளைப்பற்றியும் பாடியிருக்கிறார் என்று மற்றொரு ஆராய்ச்சியாளர் சொல்லுகிறார்.


கிழக்கு வாயிலும் அதிலுள்ள சுதை சிற்பங்களும் மராட்டிய மன்னர்களால் உருவாக்கப்பட்டது. இது தான் முதல் வாயில். தற்போது இதன் வழியே உள் நுழைந்ததும் அரசினால் பதிக்கப்பெற்ற தெளிவான தஞ்சை கோவிலின் வரவேற்பும் குறிப்புகளும் நம்மை வரவேற்கின்றன!


கோவிலின் நுழைவு வாயில் கேரளாந்தகன் திருவாயில். இது சற்று உயரம் குறைந்த அகலமான கோபுரம். கேரள மன்னன் ரவி பாஸ்கரனை வென்றதன் நினைவாக தனக்கு விருதாய் நிலைத்த கேரளாந்தகன் என்ற பெயரையே இந்த வாயிலுக்கு கேரளாந்தகன் வாயில் என்று ராஜ ராஜ சோழன் சூட்டினான்.



ஒரே கல்லினாலான இரு நிலைக்கால்கள் இந்த வாயிலில் நிலை நிறுத்தப்பட்டுள்ளன. ஐந்து அடுக்குகளாலான இந்த கோபுரத்தில் ராஜ ராஜன் காலத்து சிற்பங்கள் சிலவும் பிற்கால மன்னர்கள் காலத்தில் உருவாக்கப்பட்ட பல அழகான சுதைச் சிற்பங்களும் அழகுற காட்சியளிக்கின்றன.



அடுத்தது ராஜராஜன் திருவாயில். இது சற்று உயரம் குறைந்த முன் வாயிலை விடவும் அகலமான வாயில்.



அதில் நுழைந்து உள்ளே புகுந்தால் நந்தியும் நந்தி மண்டபமும் கோவிலும் அதைச்சுற்றி பெரிய பிரகாரமும் பிரகாரத்தை ஒட்டிய திருச்சுற்று மாளிகையும் கண்ணுக்குப் புலப்படுகின்றது. நந்தி மண்டபமும் நந்தியும் அம்மன் மண்டபமும் நாயக்க மன்னர்களின் கொடை.


ஒரே கல்லினால் செய்யப்பட்ட நந்திகளில் இதுவும் ஒன்று. தமிழகத்தின் மிகப்பெரிய நந்தி திருவாவடுதுறை கோமுக்தீஸ்வரர் கோவிலில் உள்ளது. பச்சைமலையிலிருந்து கொண்டு வரப்பட்ட கருங்கல்லினால் செய்யப்பட்ட இந்த நந்தி 20 டன் எடை உள்ளது. ராஜராஜன் நிர்மாணித்த நந்தி தற்போது நந்தி மண்டபத்துக்கு தெற்கே உள்ள திருச்சுற்று மாளிகையில் உள்ளது.



கோவிலின் தெற்குப்புறம் இருக்கும் வாயின் மேல் “விக்கிரம சோழன் திருவாசல்” என்ற பெயர் பொறிக்கப்பட்டிருக்கிறது. இந்த எழுத்துக்களை மறைத்துக் கொண்டு இப்போது ஒரு மின் விளக்கு அமைக்கப்பட்டிருக்கிறது.

வடக்குப்புறம் இருக்கும் வாயில் அரசனின் மாளிகைக்கு அருகே இருந்ததால் அணுக்கன் திருவாயில் என்று அழைக்கப்பட்டது.
அணுக்கண் வாயில் ராஜராஜன், தெய்வீகப் பணியாளர்கள், ஆடல் மகளிர் நுழைய ஏற்படுத்தப்பட்டது. செம்பு, பொன் தகடுகளால் போர்த்தப்பட்டிருந்த இவ்வாயிலின் முகப்புப் பகுதி பிற்கால கொள்ளைகளினாலும் படையெடுப்புகளினாலும் அழிந்து விட்டன.



கோவிலைச் சுற்றி 800 அடி நீளமும் 400 அடி அகலமுமான மதில் சுவரில் நந்தி உருவங்கள் அமைக்கப்பட்டன. பிரகார சுற்றுத்தளத்தில் கருங்கல், செங்கற்களினால் தளங்களை இரண்டாம் சரபோஜி 1803ல் அமைத்தார்.

ராஜராஜன் காலத்தில் கோவில் என்பது வழிபாட்டுக்கூடம் என்பது மட்டுமல்லாமல் மக்கள் கூடிக் கொண்டாடும் இடமாக அமைந்திருக்கிறது. நடனம், சிற்பம், இசை, ஓவியம், சிற்பம் இவற்றில் ஆற்றல் மிக்கவர்கள் தங்கள் திறமைகளை பொது முக்கள் முன்னிலையில் பறை சாற்ற ஒரு முக்கிய இடமாக திகழ்ந்தது கோவில்.






நந்தி மண்டபத்தைக் கடந்ததும் கோவிலின் முக மண்டபம் வரும். நடுவிலும், இரு புறமும் இருக்கும் படிகள் வழியே மேலே ஏறிச் சென்று மண்டபத்தை அடைய வேண்டும். சிற்பங்கள் செதுக்கப்பட்ட கல் தூண்களின் வரிசையைக் கடந்ததும் முன்மண்டபத்தை ஒட்டியபடி மகாமண்டபம் இருக்கிறது. வாயிலின் இரு புறமும் இரு மாபெரும் காவலர்கள் (துவாரபாலகர்கள்) நிற்பதைக் காணலாம். ராஜராஜன் பாணியில் அமைக்கப்பட்ட இந்த காவலர்களின் 18 உருவங்கள் கோவிலின் பிற்பகுதிகளிலும் நிறுத்தப்பட்டிருகின்றன.

மகாமண்டபத்திற்கும் கருவறைக்கும் இடையே இருப்பது அர்த்த மண்டபம். அர்த்த மண்டபத்தின் வடக்கு, தெற்குப் புறங்களில் இருக்கும் வாயில்கள் வழியாகவும் உள்ளே வரலாம். கோவிலின் தாங்குதளம் மிக உயரமாக இருப்பதால் அர்த்த மண்டபமும் கருவறையும் தரைமட்டத்திற்கு 20 அடி உயரத்தில் இருக்கின்றன. எனவே தெற்கு, வடக்கு வாயில்களைச் சென்றடைய இரு நிலைகளில் உள்ள படிகளில் ஏறிச்செல்ல வேண்டும். படிகளின் பிடிச்சுவர்களில் சிற்பங்கள் செதுக்கப்பட்டிருகின்றன. இரு வாயில்களிலும் காவலர் சிலைகள் காணப்படுகின்றன.

கருவறையில் மிகப்பெரிய சிவலிங்கம் உள்ளது. கருவறையில் உள்ள சிவலிங்கம் உலகிலேயே மிகப் பெரியதாகும். ஆறு அடி உயரமும் 54 அடி சுற்றளவும் கொண்ட ஆவுடையார், 13 அடி உயரமும் 23 அரை அடி சுற்றளவும் உள்ள லிங்கம் எனத் தனித்தனிக் கருங்கற்களினால் செதுக்கப் பட்டு இணைக்கப் பட்டுள்ளது.

கட்டுமானப்பணியின் போது கருவறையில் லிங்கப் பிரதிஷ்டையில், ஆவுடையாரில் லிங்கத்தை நிறுவி மருந்து சாத்தியபோது. மருந்து இளகியபடியே இருந்ததால் லிங்கம் இறுகவில்லை. ""கருவூரார் வந்தாலன்றி, மாமன்னர் வெற்றியடைய முடியாது,'' என்று அசரீரி வாக்கு கேட்டு, ராஜராஜ சோழரும் கருவூர்த்தேவரை ஒரு சித்தர் உதவியுடன் அழைத்து வந்து தனக்கு உதவுமாறுவேண்டினார். கருவூராரும் கைகளால் அழுத்திப் பிடிக்க மருந்து இறுகிப் பிடித்துக் கொண்டது. மன்னரும் அகமகிழ்ந்து, அவருக்கு நன்றி செலுத்தும் வகையில் கோவிலுக்கு மேற்குப்புறம் அவருக்கு ஒரு சந்நதியை ஏற்படுத்தினார்.



இன்றைக்கும் வியாழன் தோறும் கருவூர்த்தேவருக்கு அங்கே சிறப்புப்பூஜைகளும் அன்னதானங்களும் செய்யப்படுகின்றன.

கருவறையைச் சுற்றி 11 அடி அகல சுற்றுச் சுவரும் 19 அடி அகல சுற்றுச் சுவரும் உள்ளன. இந்த சுவர்களின் இடைவெளியில் 13 சித்திரக்கூடங்கள் அமமக்கப்பட்டு. இதில்தான் ராஜராஜன் காலத்து மகத்தான ஓவியங்களும் நாயக்கர்கால ஓவியங்களும் நம்மை பிரமிக்க வைக்கும் அழகுடன் திகழ்கின்றன. உண்மையில் சோழர் காலத்து ஓவியங்கள் மீது பிற்காலத்தில் வந்த நாயக்கர்களால் ஓவியங்கள் தீட்டப்பட்டு முன்னையது மறைக்கப்பட்டிருக்கிறது. நாயக்கர் கால ஓவியங்கள் சில இடங்களில் உதிர்ந்து போக பழைய மூல ஓவியங்கள் காட்சி தந்திருக்கின்றன. இந்த மூல ஓவியங்களைக் கண்டுபிடித்தவர் திரு ச.க. கோவிந்தசாமிப்பிள்ளை என்பவர். மேலறையில் நடராசரின் நடன சிற்பங்களையும் இடம் பெறச்செய்திருக்கிறார் ராஜராஜன். 108 கரணச் சிற்பங்களில் 81 நடன சிற்பங்களே பூர்த்தியாகி இருக்கின்றன.

கோபுரத்தின் உச்சியில் இருக்கும் தளம் 25 அடி சதுரமானது. சிகரம் கூம்பு வடிவில் செதுக்கபட்டு நுனியில் 12 1/2 அடி உயரமான கலசத்தைத் தாங்குகிறது. ராஜராஜனின் 25 ம் ஆட்சி ஆண்டின் 275ம் நாள் கோவிலுக்கு அளிக்கப்பட்ட இக்கலசம் அக்காலத்தில் தங்கத்தால் கவசமிடப்பட்டிருந்தது. இப்போது இல்லை. இதன் பிரமரந்திரத்தளக்கல் ஒரே பாறையால் ஆனது என்றும், 80 டன் எடையுள்ளது என்றும் எல்லாரும் பேசியும் எழுதியும் வருகிறார்கள். ஆனால் திருச்சிராப்பள்ளி நகரிலிருக்கும் டாக்டர் மா. இராசமாணிக்கணார் வரலாற்று ஆய்வு மையத்தின் இயக்குநர், வரலாற்று ஆய்வு மேதை டாக்டர் இரா. கலைக்கோவன் அவர்கள் தமது ஆய்வர்களோடும் இந்தியத் தொல்லியல் அளவீட்டுத்துறையின் அலுவலர்களின் துணையுடனும் விமானத்தின் உச்சிவரை ஏறி இது ஒரே பாறையால் ஆனது அல்ல, பல கற்களை இணைத்து ஒரே பாறை போன்று தோற்றும் வண்ணம் மிக நேர்த்தியாக இணைக்கப்பட்டிருக்கிறது என்றும் கண்டறிந்திருக்கிறார்.

இவ்வாலயத்தின் தென்மேற்கு மூலையிலுள்ள விநாயகர் கோவில் சரபோஜி மன்னரால் கட்டப்பட்டது.


வட மேற்கு மூலையில் பிரமிக்க வைக்கும் அழகுடன் காணப்படும் முருகன் கோவில் செல்வப்ப நாயக்க மன்னர் காலத்தில் கட்டப்பட்டது.

அதன் பிறகு வரும் சண்டீஸ்வரர் கோவில் ராஜராஜனால் கட்டப்பெற்றது. உலகிலேயே மிகப்பெரிய சண்டீஸ்வரர் ஆலயம் இது. நந்தி மண்டபத்திற்கு வடக்கே காணப்படும் அம்மன் கோவில் பாண்டிய மன்னன் ஒருவனால் எழுப்பப்பட்டது. அதன் முகப்பு மண்டபம் விஜய நகர அரசர்களால் கட்டப்பட்டது. இப்படி ராஜராஜ சோழனுக்குப்பிறகு ஆண்ட பல மன்னர்கள் தங்களின் கலைத்தாகத்தை அங்கங்கே தீர்த்துக்கொண்டிருந்தாலும் ராஜ ராஜ சோழத்தேவனால் மட்டுமே நிர்மாணிக்கப்பட்ட பெருவுடையார் பெரிய கோவில் இன்றளவும் கம்பீர அழகுடன் தனித்து பெருமிதமாய் நிற்கிறது.

இக்கோவிலின் சமகாலத்திலும் அதன் பிறகும் எத்தனையோ கோவில்கள் எழுந்தன. ஆயினும் எந்தக் கோவிலையும் தஞ்சை ராஜராஜீஸ்வரம் கோவிலோடு ஒப்பீடு செய்ய இயலாத அளவுக்கு இத்திருக்கோவில் எழுந்து நிற்கிறது. இக்கோவில் போன்று உலகின் வேறு எந்தக் கோவிலோ, வரலாற்றுச் சின்னமோ தன்னுடைய வரலாறு பற்றிய விளக்கமான சாசனங்களைத் தன்னகத்தே கொண்டிருக்கவில்லை. இந்தக் கோவிலின் தாங்குதளக்கற்களிலும், குமுதவரிகளிலும், வேறு பகுதிகளிலும் இருக்கும் கல்வெட்டுகள் இக்கோவில் நிர்மாணிக்கப்பட்ட கதையையும் அது நிறுவப்பட்டபோது இருந்த மகோன்னத நாட்களின் சமுதாய அமைப்புகள் பற்றிய விரிவான விளக்கங்களையும் சொல்கின்றன. மேலும் கோவிலுக்கு அளிக்கப்பட்ட அறக்கட்டளைகளின் பட்டியல்கள், வழிபாடு செவ்வனே நடைபெற செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகள், கோவிலுக்கு அளிக்கப்பட்ட உலோகத்தாலான சிலைகள், சிலைகளுக்கு உரிய தங்கம் வெள்ளியிலானா அணிகலன்கள், கோவிலின் அதிகாரிகள், அலுவலர்கள், ஏனைய பணியில் இருப்போரின் பெயர்கள், முகவரிகள், சம்பளங்கள் (400 தளிப்பெண்டிர் உட்பட) முழுவதுமே சிறிய சிறிய விவரங்களைக்கூட விட்டுவிடாமல் துல்லியமாக எழுதப்பட்டிருக்கிறது.

ஆனாலும் கடந்த ஆயிரம் ஆண்டுகளில் பெரிய கோயில் பலவிதத் தாக்குதல்களுக்கு ஆளாகியிருக்கிறது. கோவிலின் திருச்சுற்று மாளிகை, தெய்வத்திருவுருவங்கள், மகா மண்டபம் சிதைந்துள்ளன. ஆனாலும் அதன் அழகு கொஞ்சமும் குறையவில்லை. ராஜராஜன் என்ற ஒப்பில்லா மறத்தமிழனின் புகழ் ராஜராஜீஸ்வரம் என்ற அவர் கல்லில் எழுதிய காவியம் இருக்கும்வரை நிலைத்திருக்கும். உலகமும் அவரைக் கைகூப்பித் தொழும்.

மாலை மயங்கும் நேரத்தில் நாதஸ்வர இசை, தவழ்ந்து வரும் தென்றல், பாலொளிக்கீற்றுக்களுடம் மெல்ல எழும்பி வரும் நிலவு, கருவூர் சன்னதியில் மங்கலகரமாக ஒலிக்கும் அமர்க்களமான பாடல்கள்-இவற்றையெல்லாம் ரசிக்க நீங்களும் ஒரு முறை தஞ்சை வாருங்களேன்!!