Friday 27 February 2015

சேவை அமைப்புகள்!!

மாற்றுத்திறனாளிகள், அவர்களுடைய பிரச்சினைகளுக்கென்றே சில தொன்டு நிறுவனங்கள் சேவை செய்து வருகின்றன. அவற்றைப்பற்றி நிறைய பேருக்கு வெளியே தெரிவதில்லை. நமக்கோ, நமக்கு நெருங்கியவர்களுக்கோ பிரச்சினைகள் வரும்போது தான் நம்மில் பெரும்பாலானோர் மேல் விபரங்களைத் தேட ஆரம்பிக்கிறோம். சமீபத்தில் ஒரு பெண்கள் இதழில் சில முக்கியமான சேவை அமைப்புகள் பற்றிய தகவல்கள் வெளி வந்தன. அவற்றைப்பற்றி கீழே எழுதியிருக்கிறேன். நிச்சயம் யாருக்கேனும் இவை பயன்படும். முக்கியமாய் பாஸிடிவ் செய்திகள் எழுதி வரும் ஸ்ரீராம்
அவர்களுக்கும் இத்தகவல்கள் பயன்படும்!

சேவை அமைப்புகள்:

1. முதுகுத்தண்டுவட பாதிப்பிற்காளானவர்களுக்கு தேவையான சக்கர நாற்காலி, உதவித்தொகை, வேலை வாய்ப்பு மற்றும் அவர்களின் மறுவாழ்வுக்குத்தேவையான உதவிகளைச் செய்கிறது இந்த அமைப்பு. தனிப்பட்ட முறையில் இந்த பாதிப்பை உண‌ர்ந்தவர் என்பதால் முதுகுத்தண்டுவட பாதிப்பிற்கு, குறிப்பாக பெண்களுக்கு நம்பிக்கையூட்டி வாழ வழி செய்கிறார் ப்ரீத்தி சீனிவாசன். மொபைல்:9952626756

2. ஆதவற்ற மாற்று திறனாளி குழந்தைகளுக்காக உணவு, உடை, தங்குமிடம், கல்வி, மருத்துவ உதவி என்று அனைத்து தேவைகளையும் அளிக்கிறது சென்னையிலுள்ள ஸ்ரீ அருணோதயம்!  அழைக்க: ஐயப்பன் சுப்ரமணியன், 9444915803/98843077815/044 26512880

3. தங்களைப்போன்றே 'மஸ்குலர் டிஸ்ட்ரோபி நோயால் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாத்து பராமரிக்க, வானவன்மாதேவி மற்றும் இயல் இசை வல்லபி சகோதரிகளால் உருவாக்கப்பட்ட அமைப்பு ஆதவ் ட்ரஸ்ட், சேலம். தசைச்சிதைவு நோயாளிகளுக்கான சக்கர நாற்காலி, பிஸியோதெரபி மற்றும் அக்குப்ரெஷர் பயிற்சிகளும் இங்கு அளிக்கப்படுகின்றன. அழைக்க: 9976399403/9976399409

4. மாற்றுத்திறனாளிகளின் மறுவாழ்வுக்கென காகிதப்பை தயாரிப்பு, நாப்கின் தயாரிப்பு, செயற்கை நகைகள் தயாரிப்பு போன்ற தொழில் பயிற்சிகள் தரப்படுகின்றன. மனநலம் குன்றிய மாணவர்களுக்கான சிறப்புப் பள்ளியும் நடக்கிறது. மாற்றுத்திறனாளிகளுக்குத் தேவையான அடையாள அட்டை, அரசின் நலத்திட்டங்கள், மருத்துவ முகாம், ப்ரத்யேக சுஅ உதவிக்குழு, வங்கிக் கடன், வேலை வாய்ப்பு குறித்த ஆலோசனைகளும் வழங்கப்படுகின்றன. அழைக்க: கலையரசி, கொளக்குடி, [லால்குடி அருகில் ], திருச்சி. 9443456521

5. திருநெல்வேலியிலுள்ள‌ அமர்சேவா சங்கம் போலியோ போன்ற பல காரணங்களால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு தினசரி அனைத்து வசதிகள், தங்கும் வசதி, பள்ளி, தொழில் க‌ல்வி, உடற்கருவிகள் வழங்குதல் என்று பெரிய அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கென மறுவாழ்வு மையமாகத்திகழ்கிறது. ராமகிருஷ்ணன், 04633249170

6. சென்னையில் 40 ஆண்டு காலமாக செயல்பட்டு வரும் இந்த அமைப்பு மாற்றுத்திறனாளிக்குழந்தைகளுக்கான உணவு, தங்குமிடம், கல்வி மற்றும் மருத்துவ உதவி என அனைத்துத்தேவைகளையும் அளிக்கிறது. இங்கு கணினி போன்ற தொழில் பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன. ஹோப் ரிஹாபிலேஷன் செண்டர், சென்னை. எல்டன் வீஸ்னர், டோரதி வீஸ்னர்: 044 26261748

 

Sunday 22 February 2015

தளம் ஒன்று, நிகழ்வுகள் மூன்று!

இங்கே தளம் என்பது மரணம்.

வாழ்க்கையில் நாம் அனைவருமே நமக்கு நெருங்கியவர்களுக்கோ, அல்லது நம் உறவினர்களுக்கோ எதிர்பாராத வகையில் மரணம் வந்து தாக்கியதை இதுவரையில் பலமுறை பார்த்திருப்போம்! சில அளவிடமுடியாத வலியையும் துக்கத்தையும் கொடுத்திருக்கும். சில நம்ப முடியாத அதிர்ச்சியைக் கொடுத்திருக்கும். சிலர் மரணத்தின் பிடியிலிருந்து கடைசி விநாடியில் மீண்டு வந்திருப்பார்கள். அந்த மாதிரியான நிகழ்வுகளை நானும் சமீபத்தில் சந்தித்தேன். அவற்றை உங்களுடன் இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

ஒரு ஆச்சரியமான நிகழ்வு 20 நாட்களுக்கு முன்னால் நடந்தது. அதற்கு முன் 25 வருடங்களுக்கு முன்னால் நடந்த ஒரு சம்பவத்தை உங்களுக்குச் சொல்ல வேண்டும். ஷார்ஜாவில் எங்கள் உணவகத்தில் தொடர்ந்து சாப்பிடுப‌வர் இவர். ஒரு நாள் அவருக்குப் புதிதாய்ப் பிறந்த குழந்தையின் புகைப்படங்கள் தபாலில் வந்திருக்கிறது. சந்தோஷத்துடன் அந்தப் புகைப்படங்களை எடுத்துக்கொண்டு துறைமுகத்தில் வேலை செய்யும் தன் சகோதரரிடம் காண்பிக்க பறந்தோடியிருக்கிறார். போன வேகத்தில் ஆர்வமாக படியேறும்போது மேலிருந்து கீழே வேகமாக வந்த கிரேனை கவனிக்கவில்லை. வேகமாக வந்த கிரேன் அவரின் தலையின் ஒருபகுதியை சீவி விட்டுத்தான் நின்றது. பீச்சியடித்த இரத்தத்தை சிலர் வாளியில் பிடித்தார்கள். ஒருவாறு தலையில் பெரிய கட்டு போட்டு, மயங்கியிருந்த அவரை தூக்கிக்கொண்டு மருத்துவ மனைக்கு ஓடினார்கள். உயிருக்கு ஆபத்தான நிலை என்பதுடன் சிக்கலான அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலையிலிருந்ததால் அவரை ஷார்ஜாவிலிருந்து 160 கிலோ மீட்டருக்கும் அதிகமான தூரத்திலிருக்கும் அமீரகத்தின் தலைநகரான அபுதாபிக்கருகிலுள்ள‌ ராணுவ மருத்துவ மனைக்கு கொண்டு சென்றார்கள்.  அவர் பிழைப்பது மிக சந்தேகமான நிலையில் அவருக்காக யார் யாரோ பிரார்த்தனை செய்தார்கள். முன் பின் அறியாத ஒருவருக்காக பல பேர் பிரார்த்தனை செய்ததை அப்போது தான் முதன் முதலாகப் பார்த்தேன். மனதளவில் நெகிழ்ந்து போயிருந்த‌ பலர் அத்தனை தூரம் சென்று மருத்துவ மனையில் அவரைப்போய் பார்த்தனர். அத்தனை பேரும் நம்ப முடியாத அளவில் அவர் உயிரோடு பிழைத்து எழுந்தார் ஒரு நாள்.
தலையில் அந்த அளவிற்கு அடிபட்டிருந்ததால் காலை மட்டும் அது பாதித்திருந்தது. சற்று விந்தி விந்தி நடந்தவாறே மருத்துவமனையிலிருந்து வெளியேறினார். சில நாட்களில் அவர் தமிழகத்திற்குச் சென்று விட்டதாகச் சொன்னார்கள்.

20 நாட்களுக்கு முன் எங்கள் நிலம் சம்பந்தமான விற்பனைக்காக பேசுவத‌ற்கு பக்கத்து ஊரிலிருந்து ஒருவர் வந்திருந்தார். அவர் கூடவே அவருடைய சொந்தக்காரர்கள். என் கணவரும் நானும் அப்போது தான் வெளியே போய் விட்டு வந்து இறங்கினோம். வீட்டுக்கு வெளியே காத்திருந்தவர்களை  வீட்டுக்குள் அழைத்ததும் அதிலிருந்த ஒருத்தர் ' ஸார், நீங்கள் ஷார்ஜா முதலாளியாயிற்றே!' என்றார்.  அப்புறம் தான் தெரிந்தது, அவர் தான் தலையில் அடிபட்டு பல நாட்கள் உயிருக்குப்போராடி பிழைத்தவர் என்பது! நாங்கள் இருவருமே அசந்து போய் விட்டோம்!   யாரை, எப்போது , எதற்காக, எங்கே சந்திக்கப்போகிறோம் என்பது தான் வாழ்க்கையின் புரியாத புதிர். 25 வருடங்களுக்குப்பின் அவரை எங்கள் வீட்டிலேயே சந்தித்தது மிகப்பெரிய ஆச்சரியமாக இருந்தது!!

அடுத்த நிகழ்வு 15 நாட்களுக்கு முன் நடந்தது. எங்கள் வீட்டிற்கு சில தெருக்கள் தள்ளி வசித்து வந்த மருத்துவர் ஒருவர் அருகிலுள்ள திருச்சி செல்லும்போதெல்லாம் காரில் செல்லாமல் பஸ்ஸில் போவதை வழக்கமாக வைத்திருந்தார். இரு வருடங்களுக்கு முன் ஒரு நாள்  திருச்சியிலிருந்து திரும்பி வரும்போது இவர் கடைசி இருக்கையில் அமர்ந்து வந்திருக்கிறார்.  ஒரு ஸ்பீட் ப்ரேக்கில் வண்டி ஏறி இறங்கியபோது இவர் அப்படியே படிகளில் விழுந்து உருண்டு கீழே விழுந்து விட்டார். அவரை உடனேயே மருத்துவ மனைக்கு எடுத்துச் சென்று சோதித்ததில் உட்காயங்கள் ஏதுமில்லை என்றும் காலில் மட்டுமே இலேசான எலும்பு முறிவு என்பதையும் கண்டு பிடித்தார்கள். மறுபடியும் 15 நாட்களுக்கு முன் அதே போல பஸ்ஸில் திரும்ப வரும்போது கடைசி இருக்கையில் அமர்ந்திருக்கிறார். மீண்டும் அதே ஸ்பீட் ப்ரேக்கிங்கில் ஏறி இற‌ங்கும்போது அதே போல விழுந்து உருண்டு கீழே விழுந்து விட்டார். ஆனால் இந்த முறை தலையில் பலமாக அடிபட்டு, மருத்துவமனியில் சேர்க்கும்போதே அவர் இறந்து விட்டதாக அறிவித்து விட்டார்கள். எத்தனை விசித்திரமான மரணம் இது! ஏன் அவருக்கு அப்படி நிகழ்ந்தது? இது தான் விதி என்பதா? புரியவில்லை!

சென்ற வாரம் எங்கள் நெருங்கிய உறவினர் சிறுநீரக செயலிழப்புடன் முற்றிய மஞ்சள் காமாலையும் இருந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். டயாலிஸிஸ் செய்து கொண்டிருந்த நிலையிலும் மருத்துவர் நம்பிக்கை இழக்கும்படியாக எதுவும் சொல்லவில்லை. அவர் சிகிச்சை செய்து கொண்டிருந்த நிலையில் சொத்து சம்பந்தமாக பல வருடங்கள் பேச்சு வார்த்தை முறித்திருந்த அவரின் மூத்த மகன் நாங்கள் யாரும் அருகில் இல்லாத சமயத்தில் வந்து சொத்து சம்பந்தமாக பேசி கடுமையான வாத்தைகளை உபயோகித்திருக்கிறார். அதுவரை அவருக்கு இதயக்கோளாறு எதுவுமில்லை. அவர் எதுவும் அதிகம் பேச முடியாத நிலையில் மகனின் கடுமையான வார்த்தைகள் அவரை எப்படி பாதித்ததோ தெரியவில்லை, மறு நாளிலிருந்து அவர் பேசுவதை நிறுத்தி விட்டார். உணவு எதுவும் உள்ளே போகவில்லை. இரவு அவரின் நாடித்துடிப்பு குறைந்து மறு நாள் அவர் மறைந்து விட்டார். இந்த இறப்பு மனதை மிகவும் பாதித்து விட்டது. பல வருடங்கள் கழித்து முதல் குழந்தை பிறந்த போது அந்த மகனை எப்படியெல்லாம் சீராட்டி வளர்த்தோம் என்று அவர் எங்களிடம் கூறியிருக்கிறார். ஆசை ஆசையாக வளர்த்த பிள்ளை பெற்ற‌வர் நெஞ்சில் கல்லைப்போட்டு அவரை மனரீதியாகக் கொன்றதை இன்னும் என்னால் ஜீரணிக்க முடியவில்லை!

Monday 9 February 2015

கங்கைகொண்ட சோழபுரம்!!

அகிலன் அவர்கள் எழுதிய 'வேங்கையின் மைந்தன்' நாவல் அப்போதெல்லாம் [ நான் சொல்வது 40 வருடங்களுக்கு முன் ] இளைஞர்களின் ஆதர்ச நாவலாக இருந்தது.  கொடும்பாளூர் இள‌வரசன் இளங்கோ கதையின் நாயகனாக இருந்த போதிலும் உண்மையிலேயே கதையின் நாய‌கர் ராஜேந்திர சோழர் தான். அவரின் கம்பீரமும் ராஜதந்திரமும் கதை நெடுக நம்மை வ‌சீகரிக்கும். அந்த ராஜேந்திர சோழர் கட்டுவித்த கங்கை கொண்ட சோழீச்சரம் கோவிலுக்கு சமீபத்தில் நான் சென்றேன்.  சுற்றுச் சுவர்களின் சிற்பங்களின் பேரழகு பிரமிக்க வைத்தது. கோவில் பற்றியும் ஊரைப்பற்றியும் அறிந்த அத்தனையும் நினைவலைகளில் ஆர்ப்பரித்து எழுந்தன!


தமிழ்நாட்டிலுள்ள அரியலூர் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமம் கங்கைகொண்ட சோழபுரம். குடந்தைக்கு வடக்கே 30 கிலோமீட்டர் சென்றால் இந்த சிறு கிராமத்தை அடையலாம். பதினொன்றாம் நூற்றாண்டின் நடுவில் இதனை முதலாம் ராஜேந்திர சோழன் தனது தலைநகரமாக ஆக்கினார். இது பதிமூன்றாம் நூற்றாண்டு வரை சோழர்களின் தலைநகரமாக விளங்கியது. இவ்வூர் புலவர்களால் கங்காபுரி, கங்கைமாநகர், கங்காபுரம் என்றெல்லாம் புகழப்பட்டது. இது திருவிசைப்பா பாடல் பெற்ற தலம்.இவ்வூரை நிறுவ சுண்ணாம்பினைத் தயாரித்த இடம் சுண்ணாம்புகுழி என்றும், கோட்டை இருந்த பகுதி (உள்கோட்டை) உக்கோட்டை என்றும், ஆயுதச்சாலைகள் இருந்த இடம் ஆயிரக்கலம் என்றும் இன்றும் வழங்கப்படுகின்றன.


ஜெயங்கொண்டார், ஒட்டக்கூத்தர் முதலிய புலவர்கள் இங்கு வாழ்ந்திருந்தார்கள். கலிங்கத்துப்பரணி இங்கிருந்து பாடப்பட்டது. விக்ரமசோழன் உலா, இரண்டாம் குலோத்துங்கன் உலா முதலியனவும் பாடப்பட்டன. சேக்கிழார் பெரிய புராணம் பாடுவதற்குத் தூண்டுகோலாக இருந்த இடம் இது.


கங்கை கொண்ட சோழபுரம் இராசேந்திர சோழர் கங்கையை வெற்றி கொண்டதைக் கொண்டாடுவதற்காகக் கட்டப்பட்டது. அந்த வெற்றியின் நினைவாக கங்கை கொண்ட சோழன் என்ற பட்டப்பெயரும் இராஜேந்திர சோழனுக்கு அமைந்தது. கங்கை வரை பெற்ற வெற்றியின் நினைவாக  இவ்வூர் அருகே சோழகங்கம் என்ற பேரேரி அமைக்கப்பட்டது.


தன் தந்தை தஞ்சாவூரில் கட்டிய பிரகதீஸ்வரர் கோயிலைப்போல், கங்கைகொண்ட சோழபுரத்தில் பெரிய கோயில் கட்டி, லிங்கத்தையும் நந்தியையும் பெரிதாக பிரதிஷ்டை செய்தான் ராஜேந்திர சோழன். தஞ்சாவூரைப்போலவே சிவனுக்கு பிரகதீஸ்வரர் என்றும், அம்மனுக்கு பெரியநாயகி என்றும் பெயர் சூட்டினான்.


கோயில் கும்பாபிஷேகத்திற்கு தன்னிடம் தோற்ற மன்னர்களை கங்கையிலிருந்து தண்ணீரை தலையில் சுமந்து கொண்டு வரச்செய்து அபிஷேகம் செய்தான். இதனால் இவ்வூர் "கங்கை கொண்ட சோழபுரம்' ஆனது. கோவிலை கட்டுவதற்கு ஒன்பது ஆண்டுகள் ஆனது.


கும்பாபிஷேக நீரை கோயிலுக்குள்ளேயே கிணறு தோண்டி அதில் வடியச்செய்து, அதன் மேல் சிங்கத்தின் சிலையை வடித்தான்.


பெரிய வாயிலுக்கு (கிழக்கு வாயில்) நேராகப் பெரிய நந்தியுள்ளது. படிகள் வழியே மேலேறி உட்சென்றால் பிரம்மாண்டபமான மூலமூர்த்தியைத் தரிசிக்கலாம். சுவாமி கிழக்கு நோக்கியுள்ளார். இருபுறமும் வாயிலில் கருங்கல்லாலான துவாபாலகர்கள் காட்சியளிக்கின்றனர்.


உள்ளே நுழைந்து செல்லும்போது வலப்பால் நவக்கிரக பீடமுள்ளது. இங்குள்ள நவக்கிரக அமைப்பு விந்தையானது. ஒன்பது கிரகங்களும் ஒரே கல்லில் வானசாஸ்திர முறைப்படி செதுக்கப்பட்டுள்ளன.
பீடம் தாமரை வடிவம். நடுவில் சூரியன். சுற்றிலும் ஏழு கிரகங்கள் இதழ்கள் போன்ற அமைப்பில் உள்ளன.


 இங்குள்ள நந்தி சுண்ணாம்பு கல்லில் செய்யப்பட்டு தரையில் அமர்ந்துள்ளது.


 தினமும் பகலில் இந்த நந்தியின் மீது சூரிய ஒளிபட்டு, அந்த ஒளி கருவறையில் உள்ள லிங்கத்தின் மீது பிரதிபலிப்பது மிகவும் சிறப்பு. கோபுர கலசத்தின் நிழல் கீழே விழுவது கிடையாது.


கருவறையில் உள்ள லிங்கத்தின் அடியில் சந்திரகாந்த கல் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இதன் சிறப்பு என்னவென்றால், வெயில் காலத்தில் வெப்பத்தை குறைத்து குளிர்ச்சியை கொடுக்கும். குளிர் காலத்தில் குளிர்ச்சியை குறைத்து இதமான வெப்பத்தை தரும். இங்கு சரஸ்வதி, லட்சுமி இருவரும் தியானக்கோலத்தில் இருப்பதால், இவர்கள் "ஞான சரஸ்வதி', "ஞான லட்சுமி' என அழைக்கப்படுகின்றனர்.


கோவிலைச்சுற்றிய பிரகாரத்தில் அமைதி நிலவுகிற‌து. சுவர்கள் முழுவதும் பிரமிகக் வைக்கும் அழகில் செதுக்கிய சிற்பங்கள் நம்மை மலைக்க வைக்கின்றன.  தஞ்சையைப்போன்ற கம்பீரமும்  பிரம்மாண்டமும் இங்கில்லை. ஆனால் அமைதியும் அழகுமாய் கங்கை கொண்ட சோழீச்சரம் நம்மை வசீகரிக்கின்றது!!