Monday 23 September 2013

மூன்றாவது உலகப்போர்!!!

இந்தியாவில் கடுமையான தண்ணீர்ப் பஞ்சம் வெகு விரைவில் வரலாம் என்று அமெரிக்காவின் நாசா  உள்பட கருத்துக்கணிப்புகளும் விமர்சனங்களும் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கின்றன. ஒரு பக்கம் பசுமைப்புரட்சிக்கு பல உள்ளங்கள் வித்திட்டுக்கொண்டிருக்க, மறுபுறம் வயல்களைத்தூர்த்தும் மரங்களை வெட்டியும் கட்டடங்கள் எழும்புவதும் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன. பல மாதங்கள் முன்பு, ஒரு மாத இதழில் உலகமுழுதுமுள்ள தண்ணீர்ப்பற்றாக்குறைகள் பற்றி விரிவாக சுட்டிக்காட்டி எழுதியிருந்த தகவல்களைப் பபடித்தபோது பகீரென்று இருந்தது. அந்தத் தகவல்களை கீழே சுருக்கி எழுதியிருக்கிறேன்.. .. ..

மூன்றாவது உலக யுத்தம் உண்டாகுமானால் அது பெரிய அரசியல் காரணங்களுக்காகவோ அல்லது நாட்டை விஸ்தரிக்கும் ஆசையிலோ ஏற்படப்போவதில்லை. தண்ணீருக்காக மட்டுமே அந்த யுத்தம் ஏற்படும் என்று ஐ.நா.சபையின் முன்னாள் பொதுச்செயலர் புர்டோஸ் கூறியுள்ளார்.
இந்த உலகம் முழுவதும் நீரால் சூழப்பட்டிருந்தாலும் அதில் தண்ணீர் அளவு மூன்று சதவிகிதம் மட்டுமே என்பது அதிர்ச்சியான விஷயம். மொத்த நீரின் அளவில் 97 சதவிகிதம் உப்பு நீராக உள்ளது.

இந்த சதவிகித நல்ல நீரைக்கொண்டு தான் இந்த உலகின் அனைத்து நாடுகளிலும் பயிர் உற்பத்தி, மனித வாழ்வு என அனைத்து தேவைகளும் பூர்த்தி செய்யப்படுகிறது. உலகின் மூன்று சதவிகித மொத்தத் தண்ணீரின் பயன்பாட்டில் 92 சதவிகிதம் விவசாயப்பயன்பாட்டிற்கும் ஐந்து சதவிகிதம் குடிநீர் மற்றும் வாழ்வியல் தேவைகளுக்கும் மூன்று சதவிகிதம் தொழிற்சாலைகளின் தேவைகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது. 

நமக்குக் கிடைக்கும் மூன்று சதவிகித நல்ல நீரையும் எவ்வித கட்டுப்பாடுமின்றி தண்ணீர் சேமிப்பு வழி முறைகள் ஏதுமின்றி மிக தாராளமாக செலவழிப்பதால் ஆண்டுக்கு ஆண்டு தண்ணீரின் அளவு குறைகிறது. இருக்கக்கூடிய மிகக்குறைந்த நீரிலும் அதிக அளவு தொழிற்சாலைகளின் கழிவுகள், மாசுக்கள் கலப்பதால் அவையும் ஆபத்தான நீராய் மாறி வருகின்றன.

இயற்கையின் கொடை நீர் பனிமலைகள் உருகுவதாலும் ஆறுகள், ஏரிகள் மூலமாகவும் நிலத்தடி நீராகவும் நமக்கு கிடைக்கிறது. இப்படி அரிதான வளங்களிலிருந்து உருவாகும் நீரின் அளவு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது என்ற அபாயம் தற்போது ஏற்பட்டிருக்கிறது. இயற்கையின் கொடையான காடுகள் அழிக்கப்படுவதால் உலகின் பல பகுதிகளில் மழைப்பொழிவு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.



நிலத்தடி நீரோட்டங்களின் திசை மறுவதாலும் உலகில் அதிகரித்து வரும் வெப்ப நிலை உயர்வால் பனிமலைகள் வெகு விரைவாக உருகி வருவதாலும் விரைவில் மிகப்பெரிய தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே வருங்காலத்தில் பண பலமோ படை பலமோ ஆயுத பலமோ ஒரு நாட்டின் வெற்றியை தீர்மானிக்கப்போவதில்லை. ஒரு நாட்டில் நிறைந்துள்ள தண்ணீர் வளமே அதன் எதிர்காலத்தை தீர்மானிக்ககூடிய சக்தி வாய்ந்ததாக உள்ளது. இப்போதே தண்ணீருக்கான யுத்தம் தொடங்கி விட்டது எனலாம்.
வல்லரசு நாடுகளைத் தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் பன்னாட்டு நிறுவனங்கள் வளர்ந்து வரும் நாடுகள் அல்லது கீழை நாடுகளில் வர்த்தக நிறுவனங்களாக நுழைந்து உலக வர்த்தக நிறுவனங்களின் உதவியுடன் அந்த நாட்டின் நீர் ஆதாரங்களைக் கைப்பற்றி குடிநீரை பாட்டில்களில் அடைத்து விற்பனை செய்து வருவது இதற்கு சான்று.

பன்னாட்டு நிறுவனங்கள் நீர் ஆதாரங்களுக்கு அருகில் தங்கள் நிறுவனங்களை அமைத்து ராட்சத குழாய்கள் மூலம் இயற்கையின் கொடையை முற்றிலும் உறிஞ்சி வருவதால் பல நீரோடைகள் வரண்டு வருகின்றன. நாளடைவில் அனைத்து தேவைகளுக்கும் பன்னாட்டு நிறுவனங்களையே சார்ந்திருக்கும் நிலையை ஏற்படுத்தி வருகின்றன.
2015ம் ஆண்டில் இந்தியாவின் பல பகுதிகளிலும் வட ஆப்பிரிக்காவிலும் கடும் குடிநீர்ப்பஞ்சம் ஏற்படும் என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உலகின் மேற்கூரை என்று வர்ணிக்கப்படும் இமயமலையின் உச்சியில் பனிமுகடுகளிலிருந்து உருவாகி வரும் ஆசியாவின் மிக நீளமான நதி என்று பெயர் பெற்றிருக்கும் பிரம்மபுத்ரா நதியை சீனா தன் அதிகார பலத்தால் தனது பகுதிகளுக்கு திசை திருப்பி விடுகிறது. இதனால் இந்தியா, திபேத் நாடுகளின் பல பகுதிகளில் நீரோட்டம் தடுக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியா-சீனாவிற்கிடையே நதி மோதல் பல ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கி விட்டது. இது போல சீனாவின் துயரம் என்று வர்ணிக்கப்படும் மஞ்சள் நதியை திசை திருப்பியதிலும் சீனா-தாய்லாந்து நாடுகளிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. மத்தியக் கிழக்கில் ஜோர்டானின் நதி நீர் ஆதாரங்களை பயன்படுத்துவதில் இஸ்ரேல்-சிரியா நாடுகளிடையே கடும் மோதல் தொடங்கியுள்ளது. எகிப்தின் முக்கிய நீர் ஆதாரமான நைல் நதியின் குறுக்கே யாரேனும் அனை கட்டினால் ராணுவ பலம் கொண்டு அவர்களை அழிப்போம் என்று எகிப்து பகிரங்கமாக எச்சரித்துள்ளது. கிழக்கு ஆசிய நாடுகளான லாவோஸ்-மியான்மர் நாடுகளிடையேயும், தாய்லாந்து-கம்போடியாவிற்கிடையேயும் நீர் ஆதாரங்கள் பிரச்சினையால் மோதல் இருந்து வருகிறது.

வளர்ந்த நாடுகள் நீர் ஆதாரங்களை முறைப்படுத்தியுள்ளதாலும் சேமிப்பு போன்ற வழிகளைப்பயன்படுத்தி வருவதாலும் அவை குடிநீர்ப்பஞ்சத்திலிருந்து ஓரளவு தப்பிக்கும் நிலை இருக்கிறது. ஆனால் உலகில் மக்கள் தொகை அதிகமாகவுள்ள நாடாக இரண்டாவது இடத்திலுள்ள இந்தியாவின் நீர் வளக்கொள்கை ஏட்டளவிலேயே உள்ளது. வட இந்தியாவில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் காலத்தில் தென் இந்தியாவில் வரட்சி தலை விரித்தாடும் அவல நிலையை இங்கு மட்டுமே காண முடியும். இந்தியாவின் தேசீய சொத்தாக நதிகள் அறிவிக்கப்பட்டிருந்தாலும் நீர் வளம் மிகுந்த மாநிலங்கள் அவற்றை தங்கள் சொத்தாகவே பாவித்து வருகின்றன. நதி நீர் இணைப்பு மிகச்சிறந்த வழியென்றாலும் அதில் யாரும் துரும்பை எடுத்துக்கூட கிள்ளிப்போடவில்லை. முன்னேறிய நாடுகள் எதிர்காலத்தில் ஏற்படப்போகும் தண்ணீர்ப்பஞ்சத்தை தீர்க்க தொலை நோக்குத் திட்டங்களைத் தீட்டி அமுல்படுத்தி வரும் நிலையில் இந்தியாவிலோ நதி நீர் பிரச்சினைகள் வாக்கு வங்கி அரசியலோடு பிணைக்கப்பட்டு இருப்பதால் உள்நாட்டிலேயே மோதல்கள் தான் ஏற்படுகின்றன.

2025ம் ஆண்டு ஆசிய, மத்தியக்கிழக்கு, ஆப்பிரிக்க நடுகளில் மிகக்கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்படும் என்று உலக நதி நீர் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே இப்போதாவது விழித்து எழுந்து நீர் ஆதாரங்களை முறைப்படுத்தவும் காக்கவும் போர்க்கால நடவடிக்கைகள் எடுத்தால் மட்டுமே மூன்றாம் உலக யுத்தத்தின் அழிவிலிருந்து நாம் தப்பிக்க முடியும்.

நாமும் நம் பங்கிற்கு மழை நீர் சேகரிப்பதை தீவிரமாக்குவதோடு, மரங்களை நடுவதையும் ஊக்குவிப்போம்!!

படங்களுக்கு ந‌ன்றி: கூகிள்

Sunday 15 September 2013

அழகு மலர்கள்!!


எங்கள் குடும்ப நண்பர் சில மாதங்களுக்கு முன்னர் சில புகைப்படங்களை அனுப்பியிருந்தார். அவற்றைப்பார்க்க ஆரம்பித்ததும் தான் தெரிந்தது, அவை மலர்களால், அதுவும் முக்கியமாக டாலியா என்ற பூக்களால்  உருவான உருவங்கள் என்று! அசந்து போகிற அளவிற்கு அழகான கலைச் சிற்பங்கள் அவை! சில ஒயர்கள், ஆணிகள், அட்டைகள், பல கோடி மலர்களால் ஆனவை இவை என்பதை உங்களால் நம்ப முடிகிறதா?
 
ஹாலந்து நாட்டின் ஒவ்வொரு நகரமும் கிராமமும் அதையொட்டிய பெல்ஜியம் நாடும் ஒவ்வொரு வசந்த காலத்திலும் ஏப்ரல் மாதம் முழுவதும் மலர்களால் ஆன இந்த அணிவகுப்பப நடத்துகின்றன. கிட்டத்தட்ட 30 கிலோமீட்டருக்கும் மேல் பயணிக்கும் இந்த அணிவகுப்பைப் பார்க்க ஒவ்வொரு வருடமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் உலகெங்கிலிருந்தும் வந்து கூடுகிறார்கள்! இந்த அணிவகுப்பு செப்டம்பர் மாதம் வரை நடக்கிறது. இந்த அணிவகுப்புகள் மக்கள் தங்கள் கலைத்திறமையை ஆர்வத்துடன் வெளிப்படுத்தும் போட்டிகளாகவே நடக்கின்றன. ஹாலந்து நாட்டின் தலைநகரான ஆம்ஸ்டர்டாமிலுள்ள கல்வாய்களில் மிதக்கும் படகுகளும் கூட மலர்களால் ஆன இந்த அணிவகுப்பை சிறப்பாக நடத்துகின்றன! ஆம்ஸ்டர்டாமின் ‘ ரோஜா அணிவகுப்பு’ உலகப் புகழ் பெற்றது!!
 
அவற்றை நீங்களும் ரசிக்க இதோ சில புகைப்படங்கள்!! 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 
 
 
 
 
 

Sunday 8 September 2013

பாஸஞ்சர்!

ஒரு பாஸஞ்சர் ரயில் பயணத்தில் பயணிக்கும் பயணிகள் இடையே ஏற்படும் சந்திப்பில் நிகழும் அசாதாரணங்கள், மனித நேயம் பற்றிய திரைப்படம் இது. 2009லேயே வெளி வந்துள்ள இந்த மலையாளத் திரைப்படத்தை இப்போது தான் பார்க்க நேர்ந்தது. படம் முடிவடைந்த பின்னும் மனதில் ஏற்பட்டிருந்த நெகிழ்ச்சி அத்தனை சுலபத்தில் மறையவில்லை.


மம்தாவாக நடிகை மம்தா மோகன்தாஸ், நந்தனாக நடிகர் திலீப், சத்யாவாக நடிகர் சீனிவாசன்
வாழ்க்கையில் எத்தனையோ சுவாரசியமான பயணங்கள் நிகழ்கின்றன. ஆனால் பஸ் பிரயாணங்களோ, விமானப்பயணங்களோ ரயில் பயணம் போல அத்தனை சுவாரசியமாக இருந்ததில்லை. உறவுகள் பிறப்பதும் இறப்புக்கள் நிகழ்வதும் சாதாரண விசாரிப்புகள் தொடர்கதைகளாக பின் தொடர்வதும் என்று அனுபவங்கள்   அதில் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

இதில் இரண்டு கதாநாயகர்கள். முதலாமவர் சத்யா. தினமும் பாசஞ்சர் ரயிலில் தன் கிராமத்திலிருந்து கொச்சிக்கு வேலைக்குப்போகும் பல நூறு ஆட்களில் அவரும் ஒருவர். சமூக நல சிந்தனை கொண்டவர்.
அடுத்தவர் வழக்கறிஞராகப்பணி புரியும் நந்தன். உண்மையையும் அடுத்தவர் நலனையும் நேசிப்பவர். அவர் மனைவி மம்தா ரைட் தொலைக்காட்சி ரிப்போர்ட்டர். நாட்டு நலனுக்கு எதிராக நடக்கும் குற்றங்களையும் சீரழிவுகளையும் எதிர்த்து தைரியமாகப்போராடுபவர். அவற்றிற்குக் காரணமானவர்களை வெளிச்சத்துக்குக் கொண்டு வரத் துடிப்பவர்.
அப்போதும் அது போல ஒரு வாய்ப்பு அவருக்குக் கிடைக்கிறது. கிராமம் ஒன்றில் கனிமப்பொருள்களைத்தோண்டி எடுக்கும் உரிமையை தனக்கு வேன்டிய ஒருத்தருக்குக்கொடுக்கிறார் அமைச்சர். அது போதாதென்று அந்தக்கிராமப்பெண் ஒருத்தியை பலவந்தமாகத் தன்வயப்படுத்தவும் செய்கிறார். பாதிக்கப்பட்ட அந்தப் பெண் தைரியமாக நியாயம் கேட்கிறாள். இதைத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பி, அமைச்சரிடம் அந்தப்பெண் பற்றிய கேள்விகளை மம்தா கேட்பது நேரடி ஒளிபரப்பாகிறது. ஆத்திரமடைந்த அந்த அமைச்சர் அந்த கிராமத்தையே வெடிகுண்டு வைத்துத் தகர்க்கத் திட்டம் போட, அதை ரகசியமாக வீடியோவில் பதிவு செய்து விடுகிறாள் மம்தா! அமைச்சர் அதைக்கண்டு பிடிக்க, அவருடைய ஆட்கள் மம்தாவிற்கு வலை வீசுகிறார்கள். ஒளிந்து மறைந்து ஓடிக்கொன்டிருக்கும் அவளைப் பிடிக்க முடியாமல் அமைச்சர் தன் ஆட்களுக்கு நந்தனைப்பிடிக்க உத்தரவிடுகிறார்.
ஓடிக்கொண்டிருக்கும் மம்தா தன் கணவனைத் தொடர்பு கொள்ள முயற்சித்தும் முடியாமல் தவிக்கிறாள். இங்கிருந்து தான் கதை பரபரப்பாக ஆரம்பிக்கிறது.



அலுவலகத்திலிருந்து திரும்பும் சத்யா புகைவண்டியிலேயே உறங்கி விடுகிறார். கண் விழித்துப்பார்க்கும்போது தன்னையும் சக பிரயாணி ஒருத்தரையும் தவிர வேறு யாருமே இல்லையென்பதையும் தான் நெடுந்தூரம் உறங்கியே வந்து விட்டதையும் உணர்கிறார். சக பிரயாணியிடம் பேசும்போது அவர் ஒரு பிரபல வழக்கறிஞர் என்பதையும் அவர் மனைவி தான் பிரபல ரைட் டிவி ரிப்போர்ட்டர் என்பதையும் தெரிந்து கொள்கிறார். அந்த நகரத்தில் இருவரும் சேர்ந்து இறங்கும்போது, நந்தன் தன் மனைவிக்காகவும் தனக்குமாய் எடுத்திருக்கும் ஹோட்டல் அறையில் தற்போது தன் மனைவி வரவில்லையென்பதால் தன்னுடன் வந்து தங்குவதற்கு அழைக்க, சத்யா அதை மறுத்து தான் ரயில் நிலையத்திலேயே தங்கி விடியற்காலை ரயிலில் தன் இல்லம் திரும்புவதாகச் சொல்ல, இருவரும் விடைபெற்று தத்தம் வழியில் நடக்க ஆரம்பிக்கும்போது, அமைச்சரின் ஆட்கள் நந்தன் முன் தோன்றி அவரை அடித்து ஒரு காரில் தூக்கிப்போட்டு பறக்கிறார்கள். அதிர்ச்சியுடன் பார்த்துக்கொண்டிருந்த சத்யா ரயில் நிலையத்திற்குள் சென்று காவல் நிலையத்திற்கு ஃபோன் செய்கிறார். காரின் நம்பர் தெரியாததால் விரைந்து செயல்பட இயலாத நிலையை அவர்கள் தெரிவிக்க, சத்யாவால் அப்படியே அதை விட்டு விட்டு தன் வழியே போக முடியவில்லை.


மம்தாவின் இல்லத்தை ஒரு டாக்ஸி ஓட்டுனர் உதவியால் கண்டு பிடிக்கிறார்.  அங்கே வீடே கன்னா பின்னாவென்று கலைந்து கிடக்க, அங்கே கிடக்கும் மொபைல் ஃபோன் உதவியால் மம்தாவைக் கண்டு பிடிக்கிறார். பகைவர்கள் துரத்தலுக்கு போக்கு காட்டியபடியே இவர்கள் அலைகிறார்கள். இடையே நந்தனை கொன்று விடுவதாக அச்சுறுத்திய  அமைச்சருக்கு பணிந்து மம்தா தன் வீடியோ தகவல்களை அவரின் ஆட்களிடம் கொடுக்கவும் சம்மதிக்கிறாள். ஆனால் நந்தன் தன் உயிருக்கு அஞ்சாமல் ரகசியமாக ஒரு மொபைல் ஃபோனைக் கண்டு பிடித்து மம்தாவிற்கு ஃபோன் செய்து, ‘ இதில் நம் உயிர் போனாலும் பரவாயில்லை, ஒன்றுமறியாத அந்த கிராமத்து மக்களைக் காப்பாற்ற வேண்டும்’ என்று உசுப்ப, மம்தா தன் தொலைக்காட்சிக்கு எப்படியவது சென்று அந்த வீடியோ தகவல்களைக் கொடுக்க முடிவு செய்கிறாள். அவள் செல்வது ஆபத்து என்று சத்யா அந்தப்பொறுப்பை ஏற்று பல இடர்களை சமாளித்து அந்தத் தகவலை அந்தத் தொலைக்காட்சியின் நிறுவனரிடம் சேர்ப்பிக்கிறாண். நாடெங்கும் அந்த வீடியோ ஒளிபரப்பாக்கிறது. அமைச்சர் மீது அரசாங்கம் நடவடிக்கை எடுக்கிறது.


இடையே மம்தாவின் அலைபேசியை சத்யா வைத்திருந்ததால் அதில் வந்த நந்தனின் குறுஞ்செய்தியைப் பார்க்கிறான். அதிலுள்ள சங்கேத வார்த்தைகளைப் புரிந்து கொண்டு நந்தனை அடைத்து வைத்திருந்த இடத்திற்குச் சென்று காப்பாற்றி அவனை மருத்துவமனையில் சேர்க்கிறான். ஒடோடி வந்து தன் கணவனின் நெஞ்சில் சாய்ந்து கண்ணீர் விடும் மம்தாவையும் தேறுதல் சொல்லி புன்னகைக்கும் நந்தனையும் புன்னகையுடன் பார்த்தவாறே அந்த இடத்தை விட்டு விலகுகிறான் சத்யா!


வீடு திரும்பியதும் நந்தனும் மம்தாவும் தொலைக்காட்சியில் பேட்டி கொடுத்துக்கொண்டிருப்பதைப்பார்க்கிறான் சத்யா. ஒவ்வொருத்தருக்கும் குறிப்பாக மனித நேயத்துடன் காசு வாங்க மறுத்த டாக்ஸி ஓட்டுனருக்கும் தன்னைக் கொல்லாது விட்டுச் சென்ற குண்டர்களுக்கும் கூட நன்றி தெரிவித்த நந்தன் சொல்கிறான்..

‘ எல்லாவற்றையும் விட ஆதி முதல் இறுதி வரை தெய்வத்தின் உருவில் வந்த ஒரு சாதரண மனுஷருக்கு நான் எப்படி என் நன்றியைத் தெரிவிப்பது? அவர் யாரென்று தெரியவில்லை. எங்கிருந்தோ வந்தார். எங்களின் நன்றியைக்கூட வாங்கிக் கொள்ளாமல் எங்கேயோ போய் விட்டார். நம்மில் பலர் எனக்கு நேர்ந்த மாதிரி ஆபத்துகளையோ அல்லது அழிவுகளையோ எதிர்நோக்கும்போது ஒளிந்து ஓடிப்போகவே செய்கிறோம். நமக்கு எதற்கு வம்பு என்று தயங்குறோம் நமக்கு ஏதேனும் ஆகி விட்டால் என்ன செய்வது என்று பயப்படுகிறோம். நல்லது செய்வதற்கு ஆள் பலம் தேவையில்லை, நல்ல மனம் மட்டும் இருந்தால் போதும் என்பதை அந்த மனிதர் உணர்த்தியிருக்கிறார். அவர் எங்கிருந்தாலும் அவருக்கு எங்களின் இதயத்தின் அடியிலிருந்து பீறிட்டுப்பொங்கும் நன்றியையும் சினேகத்தையும் சமர்ப்பிக்கிறோம்!

சத்யாவின் இதழோரம் ஒரு புன்னகையுடன் படம் நிறைவடைகிறது.. ..