Friday 21 February 2020

சர்க்கரை நோய்க்கான உணவு முறை- பகுதி-3


இதுவரை மதியம் உணவு வரை சர்க்கரை நோய்க்கான உணவு முறைகளை எழுதியிருந்தேன். இனி இரவில் என்னென்ன சாப்பிடலாம் என்று பார்க்கலாம்.

எனக்குத் தெரிந்த மருத்துவர் ஒருவர் வாரம் ஒரு முறை தயிர் வடை சாப்பிடலாம் [ இரண்டு வடைகளை தயிரில் மூழ்கடித்து ] சாப்பிடலாம் என்று சொன்னார். காராமணி, கருப்புக்கொண்டகடலை,முழுப்பயிறு இவைகளை ஊறவைத்து முளைகட்ட வைத்து உப்பு, தண்ணீர் தெளித்து ஆவியில் வேக வைத்து அல்லது குறைந்த நீரில் இலேசான வேக்காடு வைத்து நீரெல்லாம் சுண்டியதும் தேங்காய்த்துருவல் சேர்த்து கலந்து ஒரு கிண்ணம் சாப்பிடலாம். கூடவே ஒரு சிறிய ஆரஞ்சுப்பழம் அல்லது பாதி ஆப்பிள் பழம் சாப்பிடலாம். வயிறும் நிரம்புவதுடன் சத்தான ஆகாரமும்கூட! மாவுச்சத்து இல்லாததால் உடல் இலேசாக இருப்பதை உணர முடியும்.
கொள்ளு அல்லது பாசிப்பயிறு கால் கப், கோதுமை ரவா கால் கப் என்று சம அளவில் எடுத்து வெங்காயம் தக்காளி சீரகம் பூண்டுப்பற்கள் மல்லித்தழை சேர்த்து கஞ்சி செய்து தேங்காய்த்துருவல் அல்லது சிறிது தேங்காப்பால் சேர்த்து கஞ்சி குடிக்கலாம்.
முன்பு எழுதியிருந்த கீன்வா விதைகளை சாலட் அல்லது தக்காளி சாதம் போல செய்து சாப்பிடலாம். அதன் செய்முறைகளை கீழே எழுதுகிறேன்.
கீன்வா தக்காளி சாதம்:

அரை கப் கீன்வாவை 1 கப் நீர், ¼ ஸ்பூன் எண்ணெயில் சமைக்கவும். 1 மே.க எண்ணெயில் ஒரு கிராம்பு, ஒரு சிறு துண்டு பட்டை தாளித்து 1 மே.க நறுக்கிய பூண்டு, 1 வெங்காயம், 2 தக்காளி 1 பச்சை மிளகாய் வதக்கவும். 1/2 ஸ்பூன் சாம்பார் பொடி சேர்த்து நன்கு குழைய வதக்கி கீன்வாவை சேர்த்து மல்லி சேர்த்து கிளறவும். 
கீன்வா சாலட்:
இது கீன்வா சேர்க்காத கொண்டக்கடலை காய்கறி சாலட்
பொதுவாய் இந்த கீன்வாவை நான் முன்பே சொன்னபடி சமைத்து இலேசாக உப்பு எண்ணெய் சேர்த்து கெட்டியானதும் ஆற வைத்து ஃபிரிட்ஜில் ஒரு வாரம் வரை வைத்திருக்கலாம். இதில் எவ்வளவு வேண்டுமோ அதை எடுத்து காரட் வெள்ளரி வெங்காய்த்துண்டுகள் வேக வைத்த கொண்டக்கடலை சிறிது 1 ஸ்பூன் ஆலிவ் ஆயில் தேவையான உப்பு எலுமிச்சை சாறு 1 ஸ்பூன் கலந்து உண்ணலாம். தயிர் சாலட் செய்ய வேண்டுமென்றால் கீன்வா கால் கப் எடுத்து போதிய தயிரில் கலந்து அதில் சில மாதுளை முத்துக்களை சேர்க்கவும். சிறிது எண்ணெயில் உளுத்தம்பருப்பு வேர்க்கடலை பொட்டுக்கடலை தலா ஒரு ஸ்பூன் போட்டு பொன்னிறமாக வறுத்து ஒரு தக்காளியைப்பொடியாய் அரிந்து போட்டு  துருவிய இஞ்சி பச்சை மிளகாய் சேர்த்து அதையும் வதக்கிக்கொட்டவும். எல்லாம் நன்றாக கலக்கவும். இதுவும் ஒரு முழு உணவிற்கு சமமானது.
பயிறு ஓட்ஸ் கலந்து பணியாரம் செய்து சாப்பிடலாம். அரிசி அல்லது கோதுமை அதிகம் சேர்க்காமல் எண்ணற்ற சமையல் குறிப்புகள் கிடைக்கின்றன. நமக்கு வேண்டியதெல்லாம் ஆர்வம் மட்டும்தான்.
சகோதரர் தனபாலன் கால் மதமதப்பு பற்றி கேட்டிருந்தார். சர்க்கரை நோய் இருப்பவர்களுக்கு நாளடைவில் வரும் பிரச்சினை இது. சில சமயம் இது சர்க்கரை நோயால் தான் என்று நினைத்து அசட்டையாக விட்டிருப்போம். கால்களில் வரிகோஸ் என்ற நரம்பு பிரச்சினையினாலும் இந்த மதமதப்பு ஏற்படும். அதனால் முதலில் இந்த மதமதப்பு எதனால் வந்திருக்கிறது என்பதை ஒரு மருத்துவரிடம் சென்று தான் கண்டு பிடிக்க வேண்டும்.. ஒரு வஸ்குலர் சர்ஜன் நம் நரம்புகளில் வரிகோஸ் பாதிப்பு இருக்கிறதா என்று கண்டு பிடித்து அதற்கான தீர்வும் சொல்வார்.
சர்க்கரை என்றாலும் வரிகோஸ் என்றாலும் கால்களில் மதமதப்பு குறைய நல்ல மூலிகை எண்ணெய் தேய்ப்பதிலும் முறையான யோகப்பயிற்சி மருத்துவர்களிடம் அதற்கான பயிற்சிகளைக்கற்றுக்கொள்வதிலும் சில நல்ல ஹோமியோபதி மருத்துவத்திலும் அக்குபங்க்ச்சர் மருத்துவத்திலும் நிறைய வாய்ப்பிருக்கின்றன. முயற்சி செய்து பாருங்கள் சகோதரர் தனபாலன்.
இந்த பதிவுகள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு எந்த விதத்திலாவது உதவியாய் இருந்தால் அதுவே இந்தப்பதிவுகளை எழுதியதற்கான பலன் என்று நம்புகிறேன்.



Sunday 2 February 2020

சர்க்கரை நோய்க்கான உணவு முறைகள்-பகுதி 2 !!!


இதன் முதல் பகுதிக்கும் இப்போது எழுதப்போகும் இரண்டாம் பகுதிக்கும் இடையே புது வருடம், பொங்கல், உடல் நலமின்மை என்று பல விஷயங்கள் குறுக்கே வந்து விட்டன. தவிர்க்க முடியவில்லை. இப்போது இரண்டாம் பகுதியைத் தொடங்குகிறேன்.

சர்க்கரை குறைபாட்டை முதலில் நோய் என்று அழைத்தல் கூடாது என்கிறர்கள் மருத்துவர்கள். ஆனாலும் இந்த குறைபாட்டினால் அடுக்கடுக்காய் மற்ற நோய்கள் வந்து நம்மைத்தாக்கும்போது இதையும் ஒரு நோய் என்றே குறிப்பிட வேண்டுமென்றே தோன்றுகிறது. அதனால் இந்த குறைபாட்டை ஆராய்ந்து எந்த மாதிரி உணவு வகைகளை எடுத்துக்கொண்டால் உடலில் ஏறும் சர்க்கரையை ஏறவிடாமல் பாதுகாக்கலாம் என்ற முயற்சியில் தற்போது பல மருத்துவர்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார்கள். அதைப்பற்றித்தான் இந்த கட்டுரையின் முதல் பாகத்தில் விரிவாகக்குறிப்பிட்டிருந்தேன். மதுரை மருத்துவர் கண்ணன் பற்றியும் குறிப்பிட்டிருந்தேன். ஈரோடு மருத்துவர் திரு.அருண்குமாரும் இதே ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு மருத்துவர் கண்ணனை ஒட்டியே தன் கருத்துக்களை சொல்லியிருக்கிறார். அவரின் கருத்துக்களை கீழுள்ள லிங்க்கில் பார்க்கலாம்.

https://doctorarunkumar.com/



ஒரு இட்லியில் 16கிராம் அளவு மாவுச்சத்தும் 75 கலோரியும் இருக்கும் அதே சமயம் ஒரு முட்டையில் எந்த மாவுச்சத்தும் இல்லாததோடு கலோரி அதே அளவிலேயே உள்ளது. இப்படித்தான் அவர்கள் மாவுச்சத்தை தவிர்த்து நவதான்யங்களையும் கொழுப்பு சார்ந்த உணவையும் பரிந்துரைக்கிறார்கள்.

சென்ற வாரம் முழுவதும் கடுமையான ஜலதோஷம் இருந்தது. ஏற்கனவே இங்குள்ள மருத்துவர் உடல் நோய்வாய்ப்பட்டிருக்கும் காலங்களில் அது மிக்கச்சிறிய அளவே ஆனாலும் உடலிலுள்ள சர்க்கரை அந்த infection-ஆல் ஏறும் என்று சொல்லியிருக்கிறார்கள். ஆனால் நான் தொடர்ந்து இந்த உணவு முறையை 90 சதவிகிதம் கடைபிடிப்பதால் இந்த கடுமையான ஜலதோஷம், தொடர் இருமல், உள்சுரத்திலும்கூட என் சர்க்கரையின் அளவு உணவிற்கு முன் 100 லிருந்து 110 வரைதான் இருந்தது. இது எனக்கு மிகப்பெரிய சந்தோஷமாக இருந்தது.

இதற்கு முன் பகுதியில் காலை உணவுகள் பற்றியும் விடியற்காலை என்னென்ன குடிக்கலாம் என்பது பற்றியும் எழுதியிருந்தேன். முதலில் மதியம் உணவு உண்பதற்கு முன் காலை 11 மணி அளவில் என்ன குடிக்கலாம், சாப்பிடலாம் என்று பார்க்கலாம்.

காலை 11 மணி: 

பொதுவாய் மருத்துவர்கள் ' பொரி ' அல்லது 'பாப்கார்ன்' ஒரு கப் சாப்பிட பரிந்துரைக்கிறார்கள். அல்லது சில வகைகள் ஜுஸ் குடிக்கலாம். அல்லது அவித்த வேர்க்கடலை கொஞ்சம் சாப்பிடலாம். ஜுஸ் வகைகள் என்னும்போது ஒவ்வொரு நாளும் விதவிதமாக குடிக்கலாம்.
தக்காளி ஜுஸ் எடுத்து வடிகட்டி அரை ஸ்பூன் எலுமிச்சை சாறு, 1 சிட்டிகை உப்பு கலந்து குடிப்பது கால் நரம்புகளுக்கு மிகவும் நல்லது. சுரைக்காய் ஜுஸ் சிறுநீரகத்துக்கு மிகவும் நல்லது. எனக்குத்தெரிந்த ஒரு பெண்மணி தன் கிரியாட்டின் அளவைக்குறைக்க வேண்டி தினமும் சுரைக்கயை உப்பு சேர்க்காமல் பொரியலாகவோ அல்லது கூட்டாகவோ சாப்பிட்டு கிரியாட்டினைக்குறைத்தார்கள். அந்த அளவு சுரைக்காய்க்கு மிகுந்த மருத்துவ குணம் உண்டு. முடக்கத்தான் கீரை ஒரு கைப்பிடி எடுத்து சூப் வைத்து குடிக்கலாம். ஒரு கை வாழைப்பூவிலும் சூப் செய்யலாம். மாதுளை அல்லது காரட் ஒன்று பெரியதாக எடுத்துக்கொண்டு அதில் 3 தேங்காய் துண்டுகள் போட்டு அரைத்து வ‌டிகட்டி குடிக்கலாம். அல்லது பழங்கள் சாப்பிடலாம். 3 பேரீச்சை அல்லது 1 ஆரஞ்சு அல்லது 1 ஆப்பிள் சாப்பிடலாம்.

மதிய உணவு:

மதியம் அரிசி சாதமோ அல்லது கோதுமை உணவுகளான சப்பாத்தியோ எடுக்கவே கூடாது என்கிறார் மருத்துவர். வேண்டுமானால் ஒரு கை [ 2 மேசைக்கரண்டி ] அரிசி சாதம் அல்லது ஒரு சப்பாத்தி மட்டும் எடுக்கலாம். இதன் அடிப்படையில் ஒரு சப்பாத்தியுடன் நிறைய காய்கறிகள் கலந்த கூட்டு உண்ணலாம். 2 மேசைக்கரண்டி அரிசி சாதம் 3 அல்லது 4 கப் காய்கறிகள் என்ற விகிதத்தில் ஃபிரைட் ரைஸ் செய்யலாம். இது மிகவும் சுவையாக இருக்கும். கோதுமை ரவா ஃபைபர் அதிகமானது என்பதால் அதோடு பருப்பு வகைகள் கலந்து உணவு வகைகள் தயாரிக்கலாம். QUINOA [ கீன்வா என்றழைக்க வேண்டும் ] என்றொரு விதை இப்போது பரவலாக எல்லா இடத்திலும் கிடைக்கிறது. தென் அமெரிக்க உணவு இது. சர்க்கரை நோய்க்கும் பல வியாதிகளுக்கும் இந்த உணவு நல்லது என்று பல ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருப்பதால் சமீப காலங்களில் நிறைய பேர் இதை சாப்பிட ஆரம்பித்திருக்கிறார்கள். பார்ப்பதற்கு திணையரிசி மாதிரி இருக்கும். மற்ற தானியங்களைப்போலல்லாது இதை ஏழெட்டு தடவையாவது நன்கு கழுவி உபயோகிக்க வேண்டும். அப்படிக்கழுவுவதால் அதிலுள்ள இலேசான கசப்பு மறைந்து விடும். அதை வேக வைப்பதற்கும் சில நிமிடங்களே பிடிக்கும். இதில் சூப், சாலட், சாத வகைகள் பண்ணலாம். மிக சுவையாக இருக்கும். அதுவும் யு டியூப் போனாலே பல வித சமையல் குறிப்புகள் கிடைக்கும். சில மதிய உணவுக்குறிப்புகள் இங்கே எழுதுகிறேன்.

பருப்பு கோதுமை ரவா கிச்சடி

பயத்தம்பருப்பு துவரம்பருப்பு கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பு தலா கால் கப் எடுத்து ஊறவைத்து உப்பு 2 வற்றல் மிளகாய் 2 பச்சை மிளகாய் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து அதோடு ஒரு கப் கோதுமை ரவா, தகுந்த உப்பு சேர்த்து இட்லி மாவு பதத்தில் கரைத்து இட்லி சுட வேண்டும். சுட்டதை உதிர்த்துக்கொள்ள வேண்டும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, காயம், உளுத்தம்பருப்பு தாளிதம் செய்து வெங்காயம் தக்காளி வதக்கி, கறிவேப்பில்லை, மல்லியிலை சேர்த்து உதிர்த்ததைப்போட்டுக் கிளற வேண்டும். இறுதியில் தேங்காய்த்த்குருவல் சேர்க்கலாம்.

மிகவும் சுவையான உணவு இது. வயிற்றை சீக்கிரம் நிரப்பி விடும்.

 காய்கறி ஃபிரைட் ரைஸ்

தேவை:

அரிந்த பெரிய துண்டங்களான காலிஃபிளவர்‍- 1 கப்
பனீர் துண்டங்கள்- 1 கப்
காரட் துருவியது -2 மேசைக்கரண்டி
பட்டாணி -கால் கப்
மஷ்ரூம் துண்டுகள் -1 கப்
பேபிகார்ன் துண்டுகள் -1 கப்
நீளமாக அரிந்த வெங்காயம் -1 கப்
சாதம் -2 மேசைக்கரண்டி
சில்லி சாஸ்-1 ஸ்பூன், சோயா சாஸ்- அரை ஸ்பூன், மிளகு தூள்- கால் ஸ்பூன், மஞ்சள் தூள் -அரை ஸ்பூன்
தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய்- 1 மேசைக்கரண்டி
இஞ்சி பூண்டு அரைத்த விழுது- 1 ஸ்பூன், தேவையான உப்பு



செய்முறை:

வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயத்தைப்போட்டு வதக்கவும். பாதி வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பின் பனீர் தவிர மற்ற காய்கறிகளை சேர்த்து வதக்கவும். மஞ்சள் தூள் உப்பு சேர்த்து தண்ணீர் தெளித்து வேகும் வரை வதக்கவும். காய்கறிகள் வெந்ததும் குறைந்த தீயில் பனீர் துண்டுகள் சேர்த்து வதக்கவும். உப்பை சரிபார்க்கவும். சாஸ் வகைகள் மிளகுத்தூள் சேர்த்து ஒரு நிமிடம் கிளறவும். இறுதியாக சாதம் சேர்த்து சில நிமிடங்கள் கிளறி எடுக்கவும். மிகவும் சுவையான ஃபிரைட்ரைஸ் இது.

கீன்வா கொண்டக்கடலை கஞ்சி அல்லது சூப்:



தேவை:

கீன்வா அரை கப்[ 10 நிமிடங்கள் ஊறவைத்து ஏழெட்டு தடவை கழுவி 1 கப் நீரில் சேர்த்து அடுப்பில் வைத்து வேக வைக்கவும்]

முதல் நாளே ஊற வைத்து பின் மறு நாள் உப்புடன் வேக வைத்த கொண்ட கடலை கால் கப்

செய்முறை:

வாணலியில் 1 மேசைக்கரண்டி எண்ணெய் விட்டு பொடியாக அரிந்த ஒரு வெங்காயம் வதக்கவும். ஏழெட்டு சிறிய பூண்டு பற்களை சேர்த்து வதக்கவும். பின் 2 தக்காளி , மஞ்சள் தூள் அரை ஸ்பூன் சேர்த்து குழைவாக வதக்கவும். சில புதினா இலைகள், கொத்தமல்லி இலை 2 மேசைக்கரண்டி சேர்த்து வதக்கவும். வெந்த கொண்டக்கடலை, மிளகாய்த்தூள் அரை ஸ்பூன், உப்பு, 1 கப் நீர் சேர்த்து கொதிக்க விடவும். சில நிமிடங்கள் கழித்து வெந்த கீன்வா, தேங்காய்த்துருவல் கால் கப் சேர்த்து சில நிமிடங்கள் எல்லாம் சேர்ந்து வரும்வரை கொதிக்க விடவும். இதை கஞ்சி போல திக்காகவோ அல்லது சூப் போலவோ சாப்பிடலாம். எல்லா சத்துக்களும் சேர்ந்த சுவையான உணவு இது.

மாவு சத்து இல்லாமல் சர்க்கரை சத்து இல்லாமல் சமையல் குறிப்புகள் இணையங்கள் யு டியூப் ல் நிறைய கிடைக்கின்றன. விதவிதமாக சமைத்து சாப்பிடலாம். சர்க்கரையை அடியோடு நீக்கலாம். ஆர்வமும் உற்சாகமும் பழகிப்போன நாவின் ருசியை மறந்து அந்த நாவை நமக்கு அடிமையாக்க‌ வேண்டுமென்ற பிடிவாதமும் இருந்தால் சர்க்கரை நோய் என்ற ஒன்றை மறந்து விடலாம்.

இரவு உணவை அடுத்த பகுதியில் எழுதுகிறேன்.