Thursday 31 December 2020

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!

 


2020ம் ஆண்டு இன்னும் சிறிது நேரத்தில் முடியப்போகிறது! துன்பங்களும் இழப்புகளும் போராட்டங்களுமாய் இந்த வருடம் கழிந்து சென்றது! கொரோனா என்னும் தொற்றால் கிடைத்த அனுபவங்கள், பாடங்கள் ஒருவேளை நமக்குக் கிடைத்த நன்மைகள் பட்டியலில் சேரலாம். இன்னொன்று, கொரோனாவால் பிரயாணங்கள், திருமணங்கள், துக்கங்களை முதலியவற்றைத்தவிர்த்ததினால் அதிக செலவுகள் செய்யாமல், இருப்பதை வைத்துக்கொண்டு பல மாதங்கள் ஓட்டியது அடுத்த நன்மை! இப்படிப்பட்ட சில நன்மைகள் தவிர, சுற்றிலும் நோக்கினால் உலகெங்கும் பொருளாதார இழப்பை சமாளிக்க முடியாமல் ஒவ்வொரு நாடும் திணறுகின்றன. விழுந்த அடிகளை சமாளித்து மீண்டு எழுவதற்கு பல திட்டங்களை வகுக்குகின்றன. உலகெங்கும் பல்லாயிரக்கணக்கானவர்கள் வேலையை விட்டு அனுப்பப்பட்டார்கள்! ஆயிரக்கணக்கான தொழில்கள் மூடப்பட்டன! 



இந்த 2021 ஆண்டாவது அனைத்து துன்பங்களும் நோய்களும் விலகி ஓடி, எல்லோர் வாழ்க்கையிலும் வசந்தமும் நன்மைகளும் வர வேண்டும்! வீட்டிலேயே ஆன்லைன் வகுப்புகளில் அடைந்து கிடைக்கும் குழந்தைகள் முன்போல் துள்ளிக்குத்து பள்ளிகளுக்கு செல்வதும் ஆசை தீர ஓடியாடி விளையாடுவதும் நடந்தேற வேண்டும்! 


அனைத்து அன்புள்ளங்களுக்கும் என் மனமார்ந்த இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!


Monday 28 December 2020

முகங்கள்-4!!!!


இது ஒரு உறவினர் ஒருவரின் வாழ்க்கையைப்பற்றியது. மனைவி 50 வயது முடிவதற்குள்ளேயே சர்க்கரை நோயால் இறந்து விட்டார். இரண்டு பிள்ளைகள், இரண்டு பெண்கள்., மூதத பிள்ளை தான் குடும்பத்தை தாங்கிய வேர். அந்தப்பிள்ளைக்கு சிறிய வயதிலேயே மார்க் 80 சதவிகிதம் எடுத்திருந்தாலும் ஏன் 90 சதவிகிதம் எடுக்கவில்லை என்று அடிமேல் அடி விழும். நோயுள்ள தாயின் வேலைகளை பள்ளிப்பருவத்திலேயே அந்தப்பிள்ளை செய்யும். மனதில் வலியோடு தான் வயதும் வளர்ந்தது. வியாபாரத்தில் நொடித்துப்போன அந்தப் பெரியவருக்கு உறவினர்கள் எல்லாம் உதவி செய்ய அந்தக் குழந்தைகள் எல்லாம் நல்லபடியாக படித்தார்கள். மூத்த மகன் வெளிநாடெல்லாம் சென்று பொருளீட்டி தன் அப்பா பெயரில் இடம் வாங்கி மிகப்பெரிய வீட்டையும் கட்டினார். மூத்த மகனின் திருமணத்தைப்பார்க்கக்கூட கொடுத்து வைக்காமல் அந்த தாயார் இறந்து போனார். மூத்த மகளின் திருமணமும் முடிந்தது.

அப்புறம் தான் பிரச்சினைகள், குடும்பத்தகராறுகள் எல்லாம் வரத்தொடங்கின. இத்தனைக்கும் மருமகளாக வந்த உறவுப்பெண் மிக நல்ல மாதிரி. அவரால் எந்தப்பிரச்சினையும் வரவில்லை. பிரச்சினையெல்லாம் அப்பாவுக்கும் மகனுக்கும் இடையில் தான்.  மூல காரணம் இளைய தங்கையின் தேவையற்ற பேச்சுக்கள் தான். அவ்வளவு பிரச்சினைகளும் முற்றிப்போய் ஒரு நள்ளிரவில் தன் தந்தையையும் திருமணமாகாத தன் தங்கையையும் வீட்டை விட்டு வெளியே அனுப்பினார் மகன். ஒடிந்து போனார் தந்தை. தங்கைக்கும் சரி, தம்பிக்கும் சரி, திருமணமோ அல்லது நல்ல வேலையில் அமர்த்துவதோ எதுவும் தன்னால் செய்ய முடியாது என்று மறுத்தும் விட்டார் அந்த மகன். இத்தனைக்கும் நல்ல வேலையில் சொந்த வீட்டுடன் மிக வசதியாக இருந்தார் அவர்.

வெளியேறி வந்த அந்த தந்தை யோசித்தார். 70 வயதைக்கடந்த நிலையில், தனக்கென்று எந்த சொத்தும் வாழ்வாதாரமும் இல்லாத நிலையில் என்ன செய்வது என்று தீவிரமாக யோசித்ததின் முடிவு எங்கள் எல்லோரையும் அதிர்ச்சியில் தள்ளியது. மகன் தன் பெயரில் கட்டிய வீட்டை மகனுக்குத் தெரியாமல் ரகசியமாக விற்றார். வந்த தொகையில் நான்கு மனைகள் வாங்கி ஒவ்வொருத்தருக்கும் ஒரு மனை என்று நான்கு பிள்ளைகளுக்கும் எழுதி வைத்தார். மீதியில் தனக்கென ஒரு பிளாட் வாங்கினார். பாக்கியை வங்கியில் போட்டு அதன் மூலம் வரும் வருமானத்தில் வாழ்க்கையை தொடர்வது என்று முடிவெடுத்தார். கடைசி பெண்ணுக்கும் பிள்ளைக்கும் சிக்கனமாக திருமணத்தையும் செய்து வைத்தார்.  ' நான் செய்தது உலகத்திற்கு இழிவாகத்தான் தெரியும். ஆனால் என்னைப்பொறுத்தவரை இது நியாயம்' என்று எழுதி வைத்தார் தந்தை.

வீட்டை விற்ற செய்தி கிடைத்ததுமே மூத்த மகன் பொங்கி எழுந்தார்.  தந்தைக்கும் மகனுக்குமிடையே நிறைய வாக்குவாதங்கள், கடிதங்கள் எல்லாம் நிகழ்ந்தன. அதன் பிறகும் சினம் தணியாத மகன் தந்தை மேல் வழக்கும் தொடர்ந்தார். எப்படியும் தந்தைக்கு தான் சாதகமாக வழக்கு முடியும் என்ற நிலையிலும் மகன் அதை ஒத்துக்கொள்ள மறுத்தார். இந்த வழக்கு சில வருடங்களாக இழுத்துக்கொண்டிருந்தது.

இடையே, நான் அந்த உறவினருடன் பேசிக்கொண்டிருந்த போது ' நீ வேண்டுமானால் அவனுடன் பேசிப்பார்க்கிறாயா? அவனுக்கு புரிகிற மாதிரி எல்லாவற்றையும் சொல்லி பேசிப்பார்க்கிறாயா?' என்று கேட்டார். இத்தனைக்கும் பிறகு அவருக்கு இன்னும் மகன் மீது பாசம் இருக்கிறது என்று புரிந்த போது, ஆச்சரியமாக இருந்தது. நானும் ஒத்துக்கொண்டேன். சென்னையில் இருந்த அவரின் மகனோடு தொலைபேசியில் பேசி, அவரின் தந்தையின் நிலைமையை புரிய வைக்க முயன்றேன். இறுதியில் ' நீ அவரிடம் தந்தையென்ற‌ பாசம் கூட காண்பிக்க வேண்டாம், அன்பு என்று கூட வேண்டாம். ஒரு வயதானவரிடம் காட்டக்கூடிய கருணையையாவது காண்பிக்கலாமே? அந்தக் க‌ருணையோடு அவருக்கு நீ சாப்பாடு போடலாமே? " என்று கேட்டேன். அதற்கு அவர் ‘ உங்களுக்குத் தெரியாது அவரைப்பற்றி. சாப்பிடுகிற சாப்பாட்டில் விஷம் வைக்கத் தயங்காதவர் அவர். அவர் தப்பு பண்ணியிருந்தால் கடவுள் அவரை தண்டிப்பார். நான் தப்பு பண்ணியிருந்தால் அதே கடவுள் என்னை தண்டிக்கட்டும்' என்றார். ' இதற்கு மேல் பேச முடியாது' என்று சொல்லி நான் பேசுவதை முறித்து விட்டேன். ஆனால் இந்த கடுமையான பேச்சுகளை நான் அந்தத் தந்தையிடம் சொல்லவில்லை. பூசி மழுப்பி விட்டேன்.

அதற்கப்புறம் ஓரிரு வருடங்களில் அவர் நோய்வாய்ப்பட்டு இறந்து போனார். தன் தந்தை மரணப்படுக்கையில் இருந்த போது கூட தனக்கு இழந்த சொத்தை இப்போதாவது அவர் திரும்பத்தருவாரா என்பதிலேயே தான் அந்த மகனின் நாட்டமிருந்தது.

அதற்கு அடுத்த வருடமே அந்த மகனுக்கு கல்லீரல் செயலிழந்து போனது. 2,3 வருடங்களாக மிகவும் கஷ்டப்பட்டிருக்கிறார். கல்லீரல் மாற்று சிகிச்சையும்  அவருக்கு செய்தாலும் பலன் கிடைப்பது  சந்தேகத்திற்கிடம் தான் என்று மருத்துவர்களும் சொல்லி விட்டார்களாம்.  உடலெல்லாம் நீர் தேங்கி அதற்காக அறுவை சிகிச்சைகள் செய்த நிலையில் சில மாதங்களுக்கு முன் அவரும் இறந்து போனார். எல்லா சொந்த பந்தங்களையெல்லாம் விட்டு ஒதுங்கி இருந்ததால் அவரின் இறப்பிற்கு மிக நெருங்கிய உறவுகள் கூட போகவில்லை.  அந்த இறப்பு செய்தி கிடைத்த பிறகு ஒரு வாரம் வரை அதன் தாக்கம் எனக்கு இருந்து கொண்டே இருந்தது.  ஒரு மகன் என்ன தப்பு செய்தாலும் அவன் பெற்றோர்களால் அதை மன்னிக்க முடிகிறது. தன் பெற்றோர்கள் தப்பு செய்தால் மட்டும் ஏன் அந்த மகனால் மன்னிக்க முடியவில்லை?  

Monday 14 December 2020

முத்துக்குவியல்-59!!!

 பெருமித முத்து:

அமீரகத்தில் இந்து கோவில்:

கடந்த 2015ல் அமீரகத்திற்கு முதல்முறையாக பிரதமர் மோடி வந்த போது, அமீரகத்தில் வசிக்கும் இந்து மகக்ளுக்காக அவரின்  வேண்டுகோளுக்கு இணங்க ஐக்கிய அமீரகக் குடியரசின் தலநகர் அபுதாபியில் இந்து கோவில் கட்டுவதற்காக அமீரக அரசு சார்பில் அனுமதி அளிக்கப்பட்டது. அபுதாபியின் பட்டத்து இளவரசரின் உத்தரவுப்படி துபாய் அபுதாபி ஷேக் ஜாயத் சாலையில் அல் ரக்பா என்னும் இடத்தில் உள்ள அல் முரைக்கா என்ற இடத்தில் 25000 சதுர அடி இடம் கோவில் கட்டுவதற்காக ஒதுக்கப்பட்டது. அதன் பின் இக்கோவில் அடிக்கல் நாட்டு விழா 2018ல் பிரதமர் மோடி மீண்டும் வந்த போது நடைபெற்றது. இதைப்பற்றி முன்னரேயே எழுதியிருந்தேன்.


இந்தக் கோவில் கட்டும் பொறுப்பு குஜராத் மாநிலத்தில் பாப்ஸ் என்ற அமைப்பு ஏற்றுக்கொண்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் 27 ஏக்கர் பரப்பளவில் இந்தக் கோவிலின் கட்டுமானப்பணிகள் தொடங்கப்பட்டன. சாதாரண கம்பி கான்க்ரீட் என்றில்லாமல் கற்கள் அடுக்கி வைக்கப்பட்டு பாரம்பரிய முறையில் கட்டுமானப்பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தக்கோவிலுக்காக கல்தூண்கள், சிற்பப்பணிகள் இந்தியாவில் நடைபெற்று வருகின்றன. இதுவரை 707 கனமீட்டட் அளவுள்ள பாறைகள் குடையப்பட்டு சிற்பங்கள் செய்யப்பட்டு வருகின்றன. 


இந்து மததின் புராண இதிகாசங்களின் நிகழ்வுகள் சிற்பங்களாக உருவாகி வருகின்றன. இந்த சிற்பங்கள் செதுக்கும் பணியில் இதுவரை 2000 கலைஞர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இப்போது முடிவடையும் தருவாயில் உள்ள சிற்பங்கள் கப்பல்கள் மூலம் அபுதாபிக்கு எடுத்து வரப்பட்டு கோவிலில் பொருத்தப்படும். 


அடுத்த ஆண்டு 2021 மார்ச் இறுதிக்கும் இந்தக்கோவில் சிற்பங்கள் பொருத்தும் பணிகள் முடிவடைந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.


அதற்குள்ளாகவே சர்வதேச அளவிலான 2020ம் ஆண்டுக்கான ‘ வர்த்தக ரீதியிலான சிறந்த வடிவமைப்பு விருது’ இக்கோவிலைக் கட்டி வரும் பாப்ஸ் அமைப்பிற்கு கிடைத்துள்ளது. ஏற்கனவே இந்து கோவிலின் கட்டுமானத்தில் சிறந்த எந்திர வடிவமைப்பிற்காக இந்த அமைப்பு விருதினைப்பெற்றுள்ளது. இப்போது 2-வதாக இந்த விருது கிடைத்துள்ளது.

சாதனை முத்து:

தஞ்சாவூருக்கும் புதுக்கோட்டைக்கும் இடையேயுள்ள ஆதனக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயலக்ஷ்மி. அங்குள்ள அரசுப்பள்ளியில் ப்ளஸ் டூ படிக்கிறார். சென்ற வருடம் தனியார் நிறுவனம் ஒன்று நடத்திய விண் அறிவியல் போட்டியில் வெற்றி பெற்று, அமெரிக்காவின் 'நாசா'வுக்குச் செல்ல நாடு முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட 4000 மாணவர்களில் இவரும் ஒருவர். மிகவும் ஏழ்மையில் இருக்கும் இவருக்காக, இவர் நாசா செல்வதற்காக‌ மாவட்ட நிர்வாகம், தொண்டு நிறுவனங்கள் அனைவரும் உதவ முன் வந்தார்கள். அது போல ' கிராமாலயா' என்ற தொண்டு நிறுவனம் இவருக்கு உதவ முன் வந்த போது, ஏற்கனவே அமெரிக்கா போவதற்கான உதவிகள் அனைத்தும் கிடைத்த நிலையில் வேறுமாதிரியான உதவி ஒன்றை இவர் கேட்டார். 



முந்திரிக்காடுகள் நிறைந்த இவர் கிராமத்தில் முந்திரிக்கொட்டைகளை வறுத்தெடுத்து அதிலிருந்து பருப்பை பிரித்தெடுத்து சாலையோரமாய் விற்பது தான் இந்த கிராமத்து மக்களின் தொழில். மிகவும் பின் தங்கிய இந்த கிராமத்தில் இருக்கும் ஓட்டு வீடுகளில் கழிப்பறை கிடையாது. காட்டுப்பக்கம் தான் அதற்கு ஒதுங்க வேண்டும். அதுவும் பெண்களுக்கு இது மிகப்பெரிய அவஸ்தை. ' எங்கள் வீடுகளுக்கு கழிப்பறைகள் கட்டித்தர முடியுமா' என்று இவர் கேட்டார். அத‌ற்கு அந்த ' கிராமாலயா' நிறுவனம் ஒத்துக்கொண்டு 125 கழிப்பறைகளை கட்டிக்கொடுத்திற்கிறது!! இந்த மிகப்பெரிய சாதனையை செய்த இந்த ஏழைச்சிறுமியை பாராட்டுவதா அல்லது திறந்த மனதுடன் இந்த மாபெரும் உதவியைச் செய்த 'கிராமலாயாவைப் பாராட்டுவதா என்று தெரியவில்லை.

இந்த வருடம் மே மாதம் நாசா செல்ல வேண்டியவர் கொரோனாவால் செல்ல முடியவில்லை. அதனால் அடுத்த வருடம் நாசா செல்லவிருக்கிறார் ஜெயலக்ஷ்மி!

தகவல் முத்து:

கண் தானம்:

தானமாகப்பெறக்கூடிய கண்களிலிருந்து கருவிழியை மட்டும் முறையாக அகற்றி, கருவிழி நோயினால் பாதிக்கப்பட்டு பார்வையிழந்தவரின் கருவிழியை மாற்றி அறுவை சிகிச்சை செய்வதே கண் தானத்தின் மூலம் நடைபெறுகிறது. கருவிழி நோயினால் பாதிக்கப்பட்டு பார்வையிழந்தவர்களுக்கு மட்டுமே கண் தானத்தின் மூலம் கருவிழி மாற்று அறுவை சிகிச்சை செய்து பார்வை வழங்க முடியும். மற்ற பார்வையிழப்புகளுக்கு கண் தானம் மூலம் பெறக்கூடிய கண்களின் மூலம் தீர்வளிக்க முடியாது. 

ரத்த அழுத்தம் உள்ள நோயாளிகள், இருதய நோயாளிகள், வயோதிகம், பக்கவாதம், நீரிழிவு மற்றும் ஆஸ்துமா போன்ற நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் கண் தானம் செய்யலாம். கண் புரை அறுவை சிகிச்சை செய்தவர்களும் கண் தானம் செய்யலாம். 

அரவிந்த் கண் வங்கி,மதுரை: 0452-4356100

அரவிந்த் கண் வங்கி,கும்பகோணம்: 98428 20007